
மரம் தேடும் மழைத்துளி 26
சரவணன், ரவியின் இழுவைக்கு ஈடு கொடுத்து நடந்து கொண்டிருக்கிறானே தவிர, சுயமாய் பெயர்ந்து செல்லவில்லை.
தன்னுடைய தகப்பனின் சொல்லுக்காக மட்டும் சரவணன், ருக்மணிக்கு தாலி கட்டவில்லை. தன்னுடைய அண்ணன் மகன், தகப்பனை இழந்து விட்டானென்ற பரிவால், பார்க்க போன சித்தப்பனால்… தர்மசங்கடம் வந்தது என்ற அவச்சொல் வந்து விடக்கூடாது. அதேபோல எதிர்காலத்தில் ருக்ணிக்கு யாராவது வாழ்க்கை கொடுக்க முன் வந்தால் தன்னுடைய அண்ணன் மகனின் மனநிலை முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும் என்ற பயமும். அப்பொழுது தான், அடைக்கலம் கொடுத்தாலும், அவனுடைய தாய் மீதான தவறான சிந்தனையை யாராலும் மாற்ற முடியாதே என்ற வருத்தமும் அவனை இப்படி செய்ய வைத்து விட்டது. அதேபோல தனக்கும் திருமண நடந்து விட்டால், தன்னுடைய மனைவியும், தனது குழந்தை பாசத்தை இயல்பாக எடுத்துக் கொள்வாள் என்று உறுதியாக சொல்ல முடியாது. ருக்மணியோடு தன்னை இணைத்து பார்த்து குதர்க்கமான யோசனை தோன்றி விட்டால் அது பேராபத்து. என்ற ஒட்டுமொத்த விளைவுகளையும் யோசித்துப் பார்த்தவன் யாரோ ஒருவன் வாழ்க்கை கொடுக்கட்டும் என்று காத்திருக்காமல், தானே கொடுக்க துணிந்து விட்டான். ஆனால் அதற்குப் பிறகு தன்னுடைய நிலையை யோசிக்க மறந்து விட்டான். (ருக்மணி இவனை முழுமையாக ஏற்றுக் கொள்வாளா? இப்பொழுதும் தினேஷுக்கு இவன் தகப்பன் இல்லையே).
சரவணன், “தாலியை சுலபமா கட்டிட்டேன். ஆனா இவள் என்னை குடும்பத்துக்குள்ள சேர்த்துக்க மாட்டான்னு சிந்திக்க மறந்துட்டேனே” என்று யோசித்திருந்த வேளையில் ருக்மணியின் வீடு வந்து விட்டது.
சுப்புலட்சுமி, “மாரி… பிள்ளைகளை ஒண்ணா நிப்பாட்டு. ஆரத்தி எடுத்துடுவோம்.” என்றதும்
கூனிக்குறுகி நின்று கொண்டிருந்த ருக்மணி படார் என்று நிமிர்ந்து பார்த்து, சுப்புவை முறைத்தாள்.
ரவி ருக்மணியை, “என்ன அப்படி பாக்குற? சும்மா கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டாதான் தப்பு. இப்போ ஆரத்தி எடுத்தால்தான் மாப்பிள உனக்கு தாலி கட்டி இருக்க விஷயம் நாலு பேருக்கு தெரியும். அதுக்காகத்தான் அம்மா ஆரத்தி எடுக்கனும்னு சொல்லுது.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அண்டை வீட்டார்கள் ஓர் இருவராக வந்தார்கள். அதனால் எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் தலைகவிழ்ந்து கொண்டாள்.
நடந்த அத்தனைக்கும் முழுமுதற் காரணமான கனகம், முன்னே வந்து மாரியம்மாளிடம் “என்ன க்கா… எல்லாரும் ஒன்னா வந்து இருக்கீங்க?”
சுப்பு முந்திக்கொண்டு, வாங்க தாய்களா… எங்க ருக்குவுக்கும் இந்த பையனுக்கும் கல்யாணம் நடந்துச்சு. ஆரத்தி எடுக்கனும்னு நிப்பாட்டி வச்சிருக்கோம். நானும் என் தங்கச்சியும் அதுக்கு தகுதி இல்லாதவங்களாய் போய்ட்டோம். நீங்க யாராவது ஒருத்தர் ஆரத்தி கரைச்சு சுத்தி போடுங்கம்மா.” என்று கனகத்திடமே பொறுப்பை கொடுத்தார்.
கனகம் அதிர்ச்சியாய் ருக்குவை பார்க்க, கழுத்தில் புதிதாய் கட்டியிருந்த தாலி தொங்கிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு “ரொம்ப சந்தோஷமா இருக்கு க்கா… இந்த வயசுல, இப்படி நடக்க கூடாதது நடந்துடுச்சேன்னு நாங்க எல்லாம் ரொம்ப வருத்தப்பட்டோம். இப்பதான் நிம்மதியா இருக்கு. தம்பி நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்.”
பக்கத்து வீட்டு முத்துலட்சுமி, “நானும் இது எப்படியும் கல்யாணத்துல முடியும்னு எதிர்பார்த்தேன். அது மாதிரியே நடந்துருச்சு.” என்று குத்தலாகவும் அதே நேரத்தில் நல்ல உள்ளத்தோடு செல்வதைப் போலவும் சொன்னார்.
பக்கத்து வீட்டு தங்கம், “அண்ணன் எப்படா சாவான். திண்ணை எப்படா காலியாகும்னு காத்திருந்த பையன். எப்படி தாலி கட்டிருப்பான்னு தெரியலையே?” என்ற யோசனையோடு… “மாரியக்கா தம்பி வீட்ல இருக்குற எல்லாரும் சம்மதிச்சு கல்யாணம் நடந்துச்சா?”
அதற்கு ரவி வேகமாக, “மாப்ள வீட்ல இருக்குற எல்லாருக்கும் முன்னாடி வச்சு கல்யாணம் நடந்துச்சு. ஆனா வீட்டுக்குள்ள சேர்த்துக்கல. அதனால நாங்க அழைச்சிட்டு வந்துட்டோம்”.
முத்து அசட்டு சிரிப்போடு, “அதுவும் சரிதான். ஒரு புள்ள குட்டி ஆச்சுன்னா எல்லாம் சரியா போகும்.”
சுப்பு, “என்ன தாயி… ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போயிட்டு. மத்ததை பேசுவோம்னு பேசாமல். வாசலிலேயே நிப்பாட்டி வச்சு, 1008 கேள்வி கேக்குறீங்க.?”
கனகம், “இந்தா ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வாரேன் க்கா… என்று அவரது வீட்டுக்குள் சென்று, மஞ்சளும் குங்குமமும் ஒன்றாய் கலந்த நீரில் ஒற்றை வெற்றிலையும் அதன் மேல் சூடம் வைத்து கொண்டு வந்தார்.
ரவி, சரவணனை இழுத்து ருக்மணியின் அருகில் நிறுத்தினான்.
ருக்மணி நெருப்பாய் ரவியை பார்த்தாள். சுப்பு, தன் கையில் வைத்திருந்த குழந்தை தினேசை ருக்மணியின் கையில் கொடுத்தாள். மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
கனகம் சூடத்தை கொளுத்தி, ருக்மணி சமேதர் சரவணனுக்கு ஆரத்தி சுற்றினார்.
குதர்க்கம் பிடித்த முத்து, “விரும்பி கட்டிக்கிட்ட இரண்டு பேரும், எதுக்கு வீராப்பு காட்டிக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கமா மூஞ்ச தூக்கி வச்சிருக்கீங்க? சிரிச்ச முகமா இருங்க.” என்றார்
ருக்மணிக்கு கூடி நின்று பேசும், ஒவ்வொருவருடைய வார்த்தையும் கூரிய முள்ளாய் தைத்தது.
அதே வீதியில், சில நல்லவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான தங்கலட்சுமி டீச்சர், கூட்டத்தைப் பார்த்து ருக்மணியின் வாசலுக்கு வந்தார்.
தங்கலட்சுமி, “எதுக்காக முத்து… கூட்டமா நிக்கிறாங்க?” என்றபடி கூட்டத்திற்குள் வந்தார்.
முத்து, “நம்ம ருக்குக்கு கல்யாணம் ஆயிடுச்சு டீச்சர்…”
“நல்ல விஷயம் ஆச்சே… மாப்பிள்ளை யாரு?” என்று கேட்டுக்கொண்டே ஆரத்தி சுற்றுபவர் அருகில் வந்து பார்த்தார்.
சரவணனுக்கு பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த தமிழ் ஆசிரியை தங்கலட்சுமி, சரவணன் முகத்தைப் பார்த்தவுடன் சந்தோஷமானார்.
சரவணன், மரியாதை நிமித்தமாக “டீச்சர்….” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான்.
தங்கலட்சுமி, “வாழ்த்துக்கள் சரவணா… இந்த சின்ன வயசுலயே எவ்வளவு மெச்சூர்டா ஒரு டிசிஷனை எடுத்திருக்கிறே. உன்னோட நல்ல மனசுக்கு நீ ரொம்பவே நல்லா இருப்ப ப்பா…”
சரவணன், வராத புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “நன்றி டீச்சர்…”
தங்கலட்சுமி, ருக்மணியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, “சரவணனை கட்டிக்கிறதுக்கு பூ எடுத்து போட்டு புண்ணியம் செய்திருக்கணும். அப்படி ஒரு புண்ணிய பயன்தான்… இன்னைக்கு உனக்கு கிடைச்ச வாழ்க்கை. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்க ரெண்டு பேருமே என்கிட்ட படிச்சவங்க. அந்த வகையில ரெண்டு பேருமே நல்ல குணம் உள்ளவங்க. இன்னைக்கு வாழ்க்கையில ரெண்டு பேருமே ஒண்ணா சேர்ந்து இருக்கீங்க. நீங்க நல்லா இருப்பீங்க.” என்று மனதார வாழ்த்தினார்.
தங்க லட்சுமியின் ஆறுதலான வார்த்தை ருக்மணிக்கு அழுகையை வரவழைத்து விட்டது.
தங்க லட்சுமி “அழாதேடாம்மா… அழுகாதே. உன்னோட மனநிலை என்னன்னு எனக்கு தெரியும். இந்த வாழ்க்கை உனக்கு ரொம்ப அவசியம். அதைவிட உன்னை சரவணன் நல்லா பார்த்துப்பான். அந்த சந்தோஷத்துல இன்னைக்கு வேண்டாதவனா உன் பக்கத்துல நிக்கிற சரவணனை, நீயே யாருக்கும் விட்டுக் கொடுத்திட கூடாதுன்னு நினைப்பே. அன்னைக்கு கண்டிப்பா நான் சொன்ன இந்த வார்த்தை உன்னோட நினைவுக்கு வரும். நீ வேணா பாரேன். நீ ரொம்ப நல்லா இருப்படா.” என்று அவர் வாழ்த்து கூற. சுற்றி நின்று கொண்டிருந்த பெண்கள், இழப்பமாக முகபாவனை காட்டிக் கொண்டு, சிறுநகை புரிந்து கொண்டிருந்தார்கள்.
“டீச்சர் உள்ள கூட்டிட்டு போங்க. பொண்ணு மாப்பிள்ளைக்கு பால் பழம் கொடுக்கணும்.” என்று இடையில் புகுந்து எடக்கு செய்தார் கனகம்.
தங்கலட்சுமி, “ஆமாம்மா… கனகம் சொன்னால் கரெக்ட்டா இருக்கும். பால்பழம் கொடுக்கணும். பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணனும். இன்னும் எவ்வளவு வேலை கிடக்கு. எதுக்கு கூட்டம் போட்டு வழி மறிச்சு பேசிக்கிட்டு இருக்கனும். வாங்க எல்லாரும் கிளம்புவோம்.” என்று முதல் ஆளாய் ஒதுங்கிக் கொண்டார்.
மற்றவர்களும் டீச்சரோடு சேர்ந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டார்கள். ருக்மணி அனைவரையும் முந்திக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.
மாரியம்மாளுக்கு சரவணன் மீது எப்போதும் தனிமரியாதை உண்டு. இப்பொழுது மகளுக்கு வாழ்க்கை கொடுத்த மகான் என்ற உயர்ந்த நிலையில் மனதில் வைத்துக் கொண்டாடினார். தேக்கத்தோடு நின்று கொண்டிருந்த சரவணனை, “வாங்கய்யா… உள்ள வாங்க.” என்று மகிழ்வோடு வரவேற்றார்.
ரவி, இப்போதும் சரவணன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்.
சுப்பு, “காலேயிலே திதி கொடுக்க போறோமேன்னு சோறு வடிக்காமல் வந்துவிட்டேன். நீயும் காய்ச்சி இருக்க மாட்டேல்ல மாரி. எங்களுக்கும் சேர்த்து சோத்தை பொங்கு. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடுவோம்.” என்றதும்
மாரியம்மாள், “ஆமா க்கா… வா… யாரும் இன்னும் சாப்பிடலேல.”என்று சமைக்க தொடங்கினார்கள்.
ருக்மணி, குழந்தையை அருகில் படுக்க வைத்து விட்டு. “இங்கே என் கொலை (வயிறு). கொதிச்சு கிட்டு இருக்கு. உங்களுக்கு ஒலையை (உலை) கூட்டி சோறு வடிச்சு, ஊருக்கெல்லாம் பந்தி வைக்கணுமாக்கும்? எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு, என்ன செய்வேன்னு தெரியாது. மரியாதையா ரெண்டு பேரும் ஓடிப்போயிருங்க.” என்று தன் தாய்மார்கள் இருவரையும் விரட்டினாள்.
மாரியம்மாள், “என்னடி ரொம்பத்தான் பேசுறே. என்ன அப்படி நாட்டுல நடக்க கூடாத ஒன்னு நம்ம வீட்டுல நடந்துருச்சுன்னு இந்த குதி குதிக்கிறே? ஊருக்குள்ள ஒவ்வொரு கதையை கேட்டு பாரு. புருஷன் உசுரோட இருக்கும்போதே இன்னொருத்தனை கூட்டிட்டு ஓடி போயிருவாளுங்க. அதை அந்த நிமிஷம் பேசிட்டு அடுத்த நிமிஷம் மறந்து போயிருவாளுக. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதை எல்லாரும் நினைச்சுக்கிட்டே இருக்காங்களா? பூனை கண்ணை மூடிக்கிட்டால் உலகமே இருண்டதா அர்த்தமில்லை. உனக்கு மட்டும்தான் கோபம் வருமா? எனக்கும் கோபம் வரும்டி? நீ, நான் சமைச்சதை சாப்பிடாதே எங்களுக்கெல்லாம் பசிக்குது நாங்க சாப்பிடுறோம் வேடிக்கை பாரு.” என்று சொல்லும் போது குழந்தை தினேஷ் அழுதான். “புள்ள அழுகுது. போய் பாலை கொடுத்து படுக்கவை. வந்துட்டா நாட்டாமைத்தனம் பண்ண.” என்று திட்டி விட்டு சமையலில் கவனம் செலுத்தினார்.
சிறிது நேரத்தில் வீட்டு வாசலில் லட்சுமியும் சுந்தரியும் வந்து நின்றார்கள்.
லட்சுமி, “வீட்ல எவடி இருக்கா? வெளிய வாங்கடி?” என்றார்
மாரியம்மாள் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார். “வாங்க மதினி. வாதாயி சுந்தரி.”
சுந்தரி, “நாங்க உங்க வீட்ல வந்து விருந்து சாப்பிட வரல. எங்க அண்ணனை கூட்டிட்டு போக வந்து இருக்கோம். அவனை வெளியே அனுப்புங்க.”
மாரியம்மாள், “வீட்டுக்கு உள்ள வந்து பேசுங்க மதினி.”
லட்சுமி, “ஏய் நிறுத்துடி. வார்த்தைக்கு வார்த்தை மதினினு கூப்பிடாதே. எரிச்சலா இருக்கு. அந்த மானங்கெட்ட பையன் உன் மகளுக்கு தாலி கட்டிட்டால், உறவு சொல்லி கூப்பிடுவயோ? கூப்பிடுடி அந்த பொசகெட்ட பயலே.”
வெளியில் லட்சுமியின் சத்தத்தை கேட்டு, வீட்டுக்குள் இருந்த ரவி, மற்றும் சரவணன், சுப்புவும் விழுந்து அடித்து ஓடி வந்தார்கள்.
அதேபோல தெருவில் இருந்த சிலரும் வேடிக்கை பார்க்க ஓடி வந்தார்கள்.

