
மரம் தேடும் மழைத்துளி 25
முருகன் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குப் பார்வதியின் வீட்டுக்கு ருக்மணி வரவழைக்கப்பட்டிருந்தாள். அவளோடு அவளது தாயார் மாரியம்மாள், பெரியம்மா சுப்பு, சுப்புவின் மகன் ரவியும் உடன் வந்திருந்தார்கள்.
முதலாம் ஆண்டு திதி கொடுக்கும் நிகழ்வுக்கு வெளியில் இருந்து எந்தச் சொந்தங்களையும் அழைக்கவில்லை. சுந்தரியின் வீட்டில் சொன்னதற்காகச் சுந்தரியும், சுந்தரியின் மாமியாரும் வந்திருந்தார்கள். அதேபோல கோமதியின் வீட்டில் சொன்னதற்காகக் கோமதியும், அவளது கணவனும் வந்திருந்தார்கள். பங்காளி கிருஷ்ணன் வீட்டில் இருந்து அனைவரும் வந்து கலந்து கொண்டார்கள். திதி காரியம் செய்து வைக்கப் பக்கத்துத் தெருவில் இருந்து பிராமணர் வரவழைக்கப்பட்டிருந்தார்.
முருகனுக்குக் கொள்ளி வைத்த கிருஷ்ணனே, திதி கொடுக்கப் பிராமணர் முன் அமர்ந்திருந்தார். கணபதி பூஜையோடு சிரார்த்த பூஜை ஆரம்பமானது.
பார்வதி தன்னுடைய பேரனை முதல் முறையாகக் கையில் வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார். அவரோடு சேர்ந்து ருக்மணியும், மாரியம்மாளும், சுப்புவும் அமர்ந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு எதிர் திசையில் லட்சுமி, சுந்தரி, கோமதி, சுந்தரியின் மாமியார் ஆகிய நான்கு பெண்களும் அமர்ந்திருந்தார்கள். ரவி வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தான். கோமதியின் கணவன் சங்கர் அவனோடு சேர்ந்து அமர்ந்திருந்தான். சரவணன் முகமெல்லாம் வேர்க்க வாசலில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான்.
லட்சுமியின் மனநிலையில் ஏதோ ஒரு புரியாத தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.
ருக்மணிக்கு, “தான் திருமணம் செய்து வந்திருந்த வீடு… தற்போது தனக்கு அந்நியமாய்த் தெரிந்தது. வந்திருக்கும் விருந்தினர்களைப் போல தானும் அங்கே அமர்ந்திருப்பது வருத்தமாய் இருந்தது. இதே பார்வதியை வெளியில் தள்ளி கதவடைத்தும், தனக்குக் கட்டுப்பட்டு வாய்பேசாமல் இருந்தவர், தன்னைத் துரத்தி விட்டுத் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். இப்போதும் மற்றவர்களுக்காகக் குழந்தையைக் கையில் வாங்கி வைத்திருக்கிறாரோ அல்லது நிஜமான அன்போடு வைத்திருக்கிறாரோ… அதுவும் அந்த கடவுளுக்கே வெளிச்சம். எல்லாப் பெண்களைப் போலவும் தன்னுடைய வீடு, தன்னுடைய குடும்பம் என்று தனக்கான உரிமையை ஒரு நாளும் கொண்டாடியது இல்லை. இந்தக் குழந்தையைத் தவிர தனக்கென்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஒரு முழம் மஞ்சள் கயிறு, அது இல்லாததால் எத்தனை எத்தனை இழப்புகள்? எதிர்வரும் காலத்தில் தன் குழந்தையாவது இந்த வீட்டின் வாரிசாக வலம் வருமா? அல்லது ருக்மணியின் தனிப்பட்ட வாரிசாக இருந்து விடுமா?” என்ற பல்வேறு கேள்விகளோடு கண்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தாள் ருக்மணி.
கலங்கிக் கொண்டிருந்த ருக்மணி சுதாரிக்கும் முன்பே, அவளது பின்புறத்தில் இருந்தபடி சரவணன் ருக்மணிக்குத் தாலி கட்டி விட்டான்.
சரவணன், ருக்மணியின் அருகில் வரும் வரை குழந்தையை வாங்கச் செல்கிறான் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த அனைவரும். யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை, இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் தாலி கட்டுவான் என்று.
ஓரமாய் அமர்ந்திருந்த லட்சுமி எழுந்து அவன் அருகில் ஓடி வந்தார். சுய சிந்தனையில்லாமல் இருந்த ருக்மணி, கழுத்தில் கிடக்கும் தாலியைப் பார்த்துச் சுயம் பெற்றவளாய் எழுந்து திரும்பினாள்.
லட்சுமியும், ருக்மணியும் ஒருசேர, “என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்கே?” என்று ஒரே வசனத்தை ஒன்றாய்ச் சொன்னார்கள்.
திதி காரியம் நிறைவுறும் நேரத்தில் சரவணன் தாலி கட்டியதால், அமைதியாய் இருந்த வீட்டில் பிரளயத்தை உண்டாக்கி விட்டான்.
காரியம் செய்ய வந்த பிராமணர், “இப்படி ஒரு காரியம் நடக்கையில, இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செஞ்சுட்டாங்களே! நான் புறப்படுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
ருக்மணி, கனன்று கொண்டிருந்த நெஞ்சத்தோடு, கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் தாலியைக் கழற்றி அவன் மூஞ்சியில் எறிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கழற்ற முற்பட்டாள்.
மாரியம்மாளும் சுப்புவும் அவளது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, “அந்தப் பாவத்தைச் செய்யக் கூடாது தாயி” என்று பதறினார்கள்.
ஆவேசத்தோடு வந்த லட்சுமி, சரவணன் கன்னத்தில் இரண்டு கைகளால் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். “என் வயித்துல ஏன் பிறந்தயோ? என்னை கேவலப்படுத்தப் பிறந்துட்டியே! வந்து என் தலைல மண்ணள்ளிப் போட்டுட்டியே” என்று சொல்லிக் கொண்டே அடித்தார்.
திதி கொடுக்க அமர்ந்திருந்த கிருஷ்ணன் எழுந்து வந்து லட்சுமியைத் தாங்கிப் பிடித்து, “அமைதியாக இரு லச்சு. அமைதியா இருடி” என்று அமைதிப்படுத்த முயற்சித்தார்.
லட்சுமி, “இந்தப் பாவியை நல்லாத்தானே வளர்த்தேன். எப்பல இருந்து இவனுக்கு இப்படி ஒரு கேவலமான புத்தி வந்துச்சு?” என்று கிருஷ்ணனிடம் சொல்லி அழுதார்.
ருக்மணி சரவணனைப் பார்த்து, “உனக்கு என்னடா பாவம் பண்ணுனேன்? என்னிய கேவலப்படுத்தணும்னு எத்தனை நாளா கங்கணம் கட்டி காத்திருந்தடா?” என்று சொன்னவள், தன்னுடைய அம்மா, பெரியம்மாவை நோக்கி, “கைய விடுங்க. இந்த அவமானத்தைக் கழுத்துல சுமந்துகிட்டு இருக்கறதுக்கு, கயிறைப் போட்டு தொங்கிடலாம்” என்று கதறியவள், தன் தாலியை அறுத்து எறிவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையை வைத்திருந்த பார்வதி ஓடிச்சென்று ரவியின் கைகளில் கொடுத்துவிட்டு, ருக்மணியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். “என்னடி தலைக்கொழுப்பு புடிச்சுப் பேசுற? அவனை (முருகனை) சங்காரம் பண்ணிட்டு போவேன்னு சபதம் பண்ணியே… கொன்னு தூக்கி அனுப்பிட்டே. இப்ப தாலியை அறுத்து இவனையும் (சரவணனையும்) முடமாக்க நினைக்கிறாயா? அப்படி என்ன பொட்ட கழுதைக்கு ஆவேசம் வருது? அது (தாலி) பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ, தெரியாம கட்டுனானோ, ஊரைக்கூட்டி கட்டுனானோ, கழுத்துல ஏறிட்டா கட்டையில போகுற வரைக்கும் கழட்டக் கூடாது. அதுதானடி இந்த மண்ணுல பொறந்த ஒவ்வொருத்தரும் செய்ற பழக்கம். நீ பெரிய புரட்சி பண்ண வந்துட்டியாக்கும்!” என்று கோபம் கொப்பளிக்கச் சொன்னார். அதைக் கேட்ட லட்சுமி திகிலடைந்து போனார்.
லட்சுமி பார்வதியிடம், “அப்ப எல்லாரும் ஒண்ணுகூடி பேசி முடிவு எடுத்து, அவனைத் தாலி கட்ட வச்சிருக்கீங்களா?” என்றார்.
பார்வதி, “நான் அப்படிச் சொல்லலத்தா லட்சுமி. நான் எந்தத் திட்டமும் தீட்டல. நான் தப்பாச் சொன்னா என்னை மன்னிச்சிரு. என்னோட புருஷன் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியல. ஆனாலும் நான் இந்தத் தாலியை விளையாட்டுச் சாமான் மாதிரி கழட்டக் கூடாதுனு சொல்ல வந்தேனே தவிர, எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை லட்சுமி” என்று லட்சுமியிடம் கையெடுத்துக் கும்பிட்டுத் தன் நிலையை விவரித்தார்.
அதே நேரத்தில் ருக்மணி அங்கு இருந்தால் விபரீதம் இன்னும் அதிகமாகிப் போகும் என்று எண்ணிய பார்வதி, “இந்தப் பாவி மகளை முதல்ல இங்கிருந்து கூட்டிட்டுப் போயிருங்க” என்று மாரியம்மாள், சுப்புவிடம் கத்தினார்.
பார்வதி சொல்ல வந்த வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் யாருக்குப் புரிந்ததோ இல்லையோ, கிருஷ்ணனுக்கு நன்றாகப் புரிந்தது. அந்தச் கணத்தில் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, “நெஞ்சு வலிக்குது” என்று தரையில் சரிந்து விழுந்தார்.
சரவணனைச் சுற்றி இருந்த கூட்டம் மொத்தமும் தற்போது கிருஷ்ணனைப் பார்க்கச் சூழ்ந்தது.
சரவணன், “அப்பா உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா…” என்று அழுதபடி அவரைத் தொடச் சென்றான்.
கோமதியும் சுந்தரியும் ஒன்றாக, “எங்க அப்பாவை அவன் தொடக் கூடாது. மரியாதையா வெளியில போடா…” என்று கத்திக் கூச்சலிட்டார்கள்.
கோமதியின் கணவன், “கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க, காத்து வரட்டும்” என்று கூட்டத்தை விலக்கி விட்டு, “நான் இப்ப வந்துடுறேன்” என்று ஓடிச்சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடித்து வரச் சென்றான். சென்ற சிறிது நேரத்தில் ஆட்டோவோடு வந்தான்.
சங்கர், கிருஷ்ணனை அந்த ஆட்டோவில் ஏற்றி அமர்த்தினான். லட்சுமி, சுந்தரி, கோமதி என்று அனைவரும் உள்ளே இடுக்கிப் பிடித்து அமர்ந்து கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றார்கள். சங்கர் தனது பைக்கில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
பார்வதி, மாரியம்மாள், சுப்புவைப் பார்த்து, “இனிமே இவள் இந்தத் திசைப்பக்கம் வந்துரக் கூடாது. கூட்டிட்டுப் போயிருங்க” என்று விரட்டி அடிப்பது போல் ருக்மணியை அனுப்பி வைத்தார்.
மாரியம்மாளும் சுப்புவும் ருக்மணியை அழைத்துக் கொண்டு நடந்து செல்ல, தான் இருப்பதா இல்லை ருக்மணியோடு சேர்ந்து செல்வதா என்று புரியாமல் நின்று கொண்டிருந்த சரவணனை, ரவி கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ருக்மணியின் பின்னால் நடந்தான்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்கள். அவருக்கு வாயுப் பிடிப்புக்கான ஊசி போடும்படி அவரே கேட்டுக் கொண்டார். அதன்படி ஊசி செலுத்தப்பட்டது. கிருஷ்ணன் இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் போகலாம் என்று தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு அதே ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில்…
கோபமாகச் சென்ற சரவணனைச் சமாதானம் செய்து அழைத்து வருவதாகப் புறப்பட்டுச் சென்ற கிருஷ்ணன், சரவணனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டு இருந்த உரையாடல்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்க, கண்களை மூடிச் சாய்ந்திருந்தார்.
சரவணன், “அப்பா நீங்களும் என்னை தப்பா நினைக்கிறீர்களா?”
“நான் உன்னை தப்பா நினைச்சேன்னா, என்னை நானே தப்பா நினைச்சதுக்குச் சமம். நீ உனக்கு பிடிக்காதவங்களா இருந்தாலும் அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற உயர்ந்த குணம் உள்ளவன். உங்க அம்மாவுக்கு வயசு கூடிடுச்சே தவிர அதற்கான பக்குவம் கொஞ்சமும் வரல. நான் அதுக்காக உன்னைத் தனியா கூப்பிட்டு வரல. உங்க அம்மா சொன்னது ஒரு வகையில நல்ல விஷயம்னு எனக்குத் தோணுச்சு. அதனால உன்னை கூட்டிட்டு வந்தேன்.”
“அப்பா எனக்கு புரியல.”
“ஆமா சரவணா… பேசாம நீ ருக்குவையே கல்யாணம் பண்ணிக்கோயேன்.”
அதிர்ந்த சரவணன், “அப்பா என்ன சொல்றீங்க?”
“நல்லா யோசிச்சுதான் சொல்றேன் சரவணா. அந்தப் பிள்ளைக்கு இந்தச் சின்ன வயசிலேயே எல்லாம் முடிஞ்சு போச்சா? பாவம் இல்லையா? நம்ம குடும்பத்துக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ வந்துருச்சு. அதை கடைசி வரைக்கும் நம்ம நல்லபடியா கொண்டு செலுத்தணும் இல்லையா?”
“மத்தவங்க தப்பா பேசுவாங்களே…”
“உனக்கு மனசு இருந்தா சம்மதம் சொல்லு. மனசு இல்லாட்டி வேண்டாம். மத்தவங்களைக் காரணம் சொல்லாதப்பா……”
“சுபத்ரா வீட்ல என்ன சொல்லுவீங்க?”
“சுபத்ராவுக்குச் சரவணன் இல்லாட்டினாலும் வேற ஒரு மாப்பிள்ளை கிடைச்சிடுவான். ஆனா ருக்மணிக்கு அப்படி கிடைக்க மாட்டான். கிடைச்சாலும் அவன் நல்லா வச்சிக்குவான்னு எந்த உத்தரவாதமும் இல்லை. உன் மனசுல சுபத்ராதான் இருக்காளான்னு சொல்லு. அவளை மறக்க முடியும், முடியாதுன்னு அதையும் தெளிவாக சொல்லிடு.”
சரவணன் சற்று நேரம் அமைதியாய் நின்று இருந்தான். இறுதியில், “நீங்க சொல்றபடியே கேட்கிறேன்ப்பா. நான் என்ன செய்யணும்? எப்படி செய்யணும்?” என்று கேட்க, கிருஷ்ணன் போட்டுக் கொடுத்த திட்டத்தைத்தான் தற்போது நிறைவேற்றி விட்டான் சரவணன்.

