

முருகன் கோவிலுக்குச் சென்று வந்த பிறகு இரவுணவை உண்டுவிட்டுப் படுத்த உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள் நிவாசினி.
“ஹனி இந்த மருந்தை நீ சாப்பிட்டா குழந்தை உன் வயித்துக்குள்ள ஆரோக்கியமா வளருமாம்” என்றவாறு நிவாசினியிடம் மருந்து குடுவை ஒன்றைக் கொடுத்தான் நித்திலன்.
அன்றிரவு உறங்கப் போகும் போது, “அந்த மருந்தைக் குடிச்சியா ஹனிமா” எனக் கேட்டு அவனே அந்த மருந்தை அவளுக்கு எடுத்துக் குடிக்கக் கொடுத்தான்.
கனவில் இக்காட்சியைக் கண்டவளாய் உறங்கியிருந்தாள் நிவாசினி.
அடுத்து வந்த காட்சியில் மறுநாள் காலை விடியலில் அவள் வயிற்று வலியுடன் அவதியுறுவதும் அவளை அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதையும் கண்டாள்.
அங்கு மருத்துவர், “சாரி டூ சே திஸ். உங்களுக்கு அபார்ட் ஆகிடுச்சு மா. நேத்து நீங்க சாப்பிட்ட மருந்துனால தான் இப்படி ஆகிருக்கு. எந்த டாக்டர் உங்களுக்கு அந்த மருந்தை ரெஃபர் செஞ்சாங்க” என்று உரைத்ததைக் கேட்டு பதறியடித்து எழுந்தமர்ந்தாள் நிவாசினி.
“என் குழந்தை.. என் குழந்தை” உதடுகள் அரற்ற அவளின் கரம் வயிற்றைத் தடவி பார்த்தது.
வியர்வைப் பூத்த முகத்துடன் உள்ளமும் உடலும் நடுங்க அமர்ந்திருந்தாள் நிவாசினி.

“யப்பா எவ்ளோ மோசமான கனவு” அருகிலிருந்த நீரை எடுத்து மடமடவென அருந்தியவள் நேரத்தைப் பார்த்தாள்.
நேரம் காலை நான்கு மணி எனக் காண்பிக்கவும் அப்படியே மீண்டுமாய்ப் படுத்துக் கொண்டாள்.
‘எதனால எனக்கு இப்படிக் கனவு வந்துச்சு? அதுவும் நித்திப்பா கொடுத்த மருந்துனால அபார்ட் ஆகிடுச்சுனு ஏன் சொல்றாங்க’ என்று சிந்தித்தவாறு படுத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
காலை கண் விழித்துப் பார்த்த போது அவளின் அருகே சிரித்த முகமாய் அமர்ந்திருந்தான் நித்திலன்.
இன்ப அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவளாய் எழுந்து அமர்ந்தவள், “நித்திப்பா” அத்தனை அன்பை குரலில் தேக்கி அழைத்தவள், “நீங்க எங்கே இங்கே? மணி என்ன ஆச்சு?” எனக் கடிகாரத்தைப் பார்த்தவாறே கேட்டாள்.
நேரம் காலை ஏழு மணி என்று காண்பிக்கவும், ஆசுவாசமானவளாய் மெல்ல எழுந்து மெத்தையில் சாய்ந்து அமர்ந்தாள்.
“நீங்க எப்ப வந்தீங்க?” கண்கள் காதலில் கனிந்து கிடக்க அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“இப்ப தான் வந்தேன் ஹனி” அவளருகே மெத்தையில் அமர்த்தவனாய் அவளின் தலை முடியைக் கோதிச் சீராக்கியவாறு உரைத்தவன், “மார்னிங் சிக்னஸ் எதுவும் இருக்கா? ரொம்ப டயர்ட் டா தெரியுறியே” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா காலைல பிரஷ்ஷை வாய்ல வைக்கும் போதே ஆரம்பிச்சிடும்” முகத்தைச் சுருக்கியவாறே உரைத்தவள் அவனின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
அவளின் முதுகை வருடியவனாய், “என் கூட வந்துடுடா. எதுக்கு இப்படி நீ தனியா இருந்து கஷ்டப்படுற?” எனக் கேட்டான்.
அவனின் இடையை இறுக்கி அணைத்தவாறு அவன் வயிற்றில் முகத்தைப் புதைத்தவளாய், “இன்னும் நாலு நாள்ப்பா” என்றாள்.
“அண்ணா அண்ணி அம்மா அப்பாலாம் இந்தக் குட் நியூஸ்ஸை கேட்டதும் நீ எப்ப நம்ம வீட்டுக்கு வருவனு தான் கேட்டாங்க. அங்கே எல்லாரும் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க” என்றான்.
சட்டென முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், “அதுக்குள்ள எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டீங்களா? மூனு மாசம் கழிச்சி சொல்லலாம்னு நினைச்சேன்” என்றாள்.
அவளின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவனாய், “நல்ல விஷயத்தை எதுக்குத் தள்ளிப் போடனும்னு நினைச்சேன்” என்றவன், “ஹனிமா டூ மினிட்ஸ் ப்ளீஸ்” என்றான்.
இவள் புரியாது அவனைப் பார்க்க அவளை மெத்தையில் படுக்கக் கூறியவன் அவளருகில் படுத்தவனாய் அவளின் வயிற்றில் முகத்தைப் புதைத்து அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.
அவனின் மூச்சுக் காற்று அவளின் வயிற்றில் வெம்மையை உண்டாக்க அவள் உடல் கூசி சிலிர்த்தது.
அவன் தலை முடியைக் கோதியவளாய் சங்கோஜத்துடன், “நித்தப்பா” என்றாள்.
“ஹ்ம்ம்ம்” என்றான் அவன்.
“கூசுதுப்பா! மேலே வாங்க” அவள் கூறவும் சட்டென மேலே நகர்ந்து அவளின் மார்பில் முகத்தைப் புதைத்தவனாய் அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.
அவளும் அவனை அணைத்தவளாய், “என்னப்பா காலைலயே அடவாடித்தனம் பண்றீங்க?” எனச் சிரிப்புடன் கேட்டாள்.
“இதுவே அடவாடித்தனமா தெரியுதா உனக்கு. வயித்துல பாப்பா இருக்கனால இதோட விட்டு வச்சிருக்கேன்” என்று அவன் கண் சிமிட்ட, வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவன் முதுகில் அடித்தாள்.
சில நிமிடங்கள் இருவருமே அமைதியாக அப்படியே படுத்திருந்தனர். அவனின் சீரான மூச்சின் வேகத்தில் தான் அவன் உறங்கியதை உணர்ந்தாள்.
அவனை எழுப்ப மனமில்லாது அப்படியே படுத்துக் கிடந்தாள்.
‘இவர் பக்கத்துல இருந்தாலே என் மனசு ஏன் இவ்வளோ சந்தோஷமா உற்சாகமா ஃபீல் ஆகுது’ என்று சிந்தித்தவாறே படுத்திருந்தவள் மணி எட்டாகவும் அவனை எழுப்பினாள்.
அதன் பிறகு அவள் பல் துலக்கத் தொடங்கிக் குளித்து முடித்து வரும் வரையில் அவளுக்கு உண்டான மார்னிங் சிக்னஸ் வாந்தி மயக்கம் அனைத்திற்கும் உடனிருந்து கவனித்துக் கொண்டான்.
அவள் அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பி நின்ற சமயம், அந்த அறையின் கதவைத் தட்டியவளாய் வந்து நின்றாள் பவானி.
இருவருக்குமான காலை உணவினை இரண்டு தட்டில் எடுத்து வந்தவளாய் அவர்களின் கையில் கொடுத்தவள், “நீங்க பக்கத்துல இருந்தா தான் உங்க பொண்டாட்டி மூஞ்சுல பல்ப் எரியுதுண்ணா” என்று சிரித்தாள்.
அவளின் முகத்தைப் பார்த்து நித்திலன் சிரிக்க, நிவாசினி வெட்கச் சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள்.
“சரி சாப்பிட்டுட்டு வாடி! வெளில வெயிட் பண்றேன்” என்றவாறு வெளியே சென்றாள் பவானி.
பவானி வெளியே சென்றதும் தனது தட்டில் இருந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான் நித்திலன்.
அவன் கொடுத்ததை மகிழ்வுடன் வாயில் வாங்கியவள் மறுநொடி விறுவிறுவெனக் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுக்க, இவனும் அவளின் பின்னேயே சென்று அவளருகில் நின்று தலையைத் தாங்கிப் பிடித்து முதுகைத் தடவி விட்டான்.
அவள் வாந்தி எடுத்து முடித்ததும் அவளின் வாயைத் துடைத்து விட்டு முகத்தைத் துடைத்தவன் அவளைக் கைத் தாங்கலாய் கூட்டி வந்து படுக்கையில் அமர வைத்தான்.
“இப்படி நிலைமைல நீ ஆபிஸூக்கு போகனுமா?” எனக் கேட்டான்.
“இதெல்லாம் பார்த்தா நான் தினமுமே ஆபிஸூக்கு போக முடியாதுப்பா” என்றவளாய் சிரித்தவள், “நீங்க சாப்பிடுங்க. நான் ஆபிஸூக்கு போய் ஜூஸ் குடிச்சிக்கிறேன்” என்று அவனை வற்புறுத்தி உண்ண வைத்தாள்.
இருவருமாக அந்த அறையிலிருந்து வெளியே வந்த போது இவர்களுக்காக முகப்பறையில் காத்திருந்தாள் பவானி. அபிநந்தன் காலை உணவை உண்டுவிட்டு அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.
“கிளம்பலாமாடி! ஆபிஸூக்கு டைம் ஆகிடுச்சு” என்று கேட்ட பவானி அவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே சென்றதும் அவசர அவசரமாய் வீட்டைப் பூட்டி விட்டு அவர்களுடன் வாசலுக்குச் சென்றாள்.
வீட்டு வாயிலில் நிறுத்தியிருந்த தனது ஈருருளியில் ஏறி அமர்ந்த நித்திலன், “பார்த்துப் பத்திரமா போய்ட்டு வா ஹனி. உடம்பைப் பார்த்துக்கோ” என்றவன், “அவளைக் கொஞ்சம் கவனிச்சிக்கோமா” என்று பவானியிடம் உரைத்தான்.
“என்னை எங்கண்ணா கவனிக்க விட்டீங்க. அதான் நீங்களே அப்பப்ப வந்து கவனிச்சிக்கிறீங்களே” என்றவள் கேலியாய் உரைக்கவும் சிரித்தவன் நினைவு வந்தவனாய்,
“இந்த மருந்து கொடுக்கத் தான் இன்னிக்கு நான் வந்தேன். மறந்தே போய்ட்டேன் பாரு” என்றவாறு தனது வண்டியில் இருந்த பையில் இருந்து மருந்து குடுவை ஒன்றை எடுத்து நிவாசினியிடம் கொடுத்தான்.
அதைக் கையில் வாங்கியவள் முன்னும் பின்னுமாய்த் திருப்பிப் பார்த்தாள்.
அன்று காலை அவள் கனவில் கண்ட காட்சியை அவளின் மூளை நினைவுப்படுத்தவும், ‘இன்னிக்கு காலைல கனவுலயும் ஒரு மருந்து பாட்டிலை தானே இவரு கொடுத்தாரு. ஒரு வேளை கனவுல பார்த்தா மாதிரி இவரு எதுவும் பிளான் செஞ்சி இந்த மருந்தைக் கொடுக்குறாரா’ என்று அச்சம் மேலோங்க அதிர்ந்து போனவளாய் அவனைப் பார்க்க, “பை ஹனி, டே கேர்” என்றவனாய் வண்டியைக் கிளப்பி இருந்தான் அவன்.
“என்னடி பேய் அறைஞ்ச மாதிரி பார்த்துட்டு நிக்கிற! வா ஆபிஸூக்கு டைம் ஆகிடுச்சு. போகலாம்” அவளின் கைப்பற்றி அலுவலகப் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றாள் பவானி.

அன்றைய நாள் முழுவதும் பேயறைந்தது போன்று தான் இருந்தாள் நிவாசினி.
‘கனவுல இவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு தானே அபார்ட் ஆச்சுனு டாக்டர் சொன்னாரு. அதே மாதிரி மருந்து இல்லனாலும் இவரும் ஒரு மருந்தை வாங்கிக் கொடுத்திருக்காருனா என்ன அர்த்தம்?’ என்று சிந்தித்துக் குழம்பிப் போனாள்.
‘நிஜமாவே இவரு கெட்டவர் தானா? குழந்தையை அழிக்க நினைக்கிற அளவுக்குக் கெட்டவரா இவரு? ஏன் எனக்கு இப்படிக் கனவு வந்துச்சு?’ என்று குழம்பிப் போனவள் மாலை மருத்துவரிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டுமென எண்ணியவாறே அன்றைய நாளை கடத்தினாள்.
மாலை ஆறு மணியளவில் மருத்துவரை சந்திக்கச் சென்றனர் நிவாசினியும் பவானியும்.
பவானி அவளின் அருகில் அமர்ந்திருக்கும் போதே இன்று காலை தான் கண்ட கனவினையும் காலை நித்திலன் மருந்து கொடுத்ததையும் மருத்துவரிடம் உரைத்தாள் நிவாசினி.
நிவாசினி கூறியதைக் கேட்டு பவானியும் மருத்துவரும் மிரண்டு போய் விட்டனர்.
“அடியேய் என்னடி சொல்ற?” என்று நிவாசினி வாய் விட்டே கேட்டுவிட,
“அந்த மருந்து பாட்டிலை கொடுங்க” என்று வாங்கிப் பார்த்தார் மருத்துவர்.
அந்த மருந்தை கையில் வாங்கிப் பார்த்த அவரின் கண்கள் முதலில் அதிர்ந்து பின்பு குழம்பிப் போனது.
“எதுக்கு நீங்க உங்களுக்குக் குழந்தை பிறக்கிற வரைக்கும் நித்திலனை விட்டு ஒதுங்கி இருக்க நிவாசினி” தீவிர முகப் பாவனையுடன் உரைத்தார்.
“ஏன் டாக்டர் அப்படிச் சொல்றீங்க? அப்ப இந்த மருந்து நான் கனவுத் பார்த்தா மாதிரியே…” அதற்கு மேல் கேட்க முடியாமல் அரண்டு போனவளாய் நடுங்கிய மனத்துடன் மருத்துவரை அவள் பார்த்திருக்க,
“இல்லமா. இந்த மருந்து அப்படியான மருந்து இல்லை. ஆனாலும் இந்த மருந்துனால அப்படியும் ஆகலாம். ஒரு சிலரின் உடலுக்கு அப்படியாகவும் வாய்ப்பு இருக்கு” என்றார்.
“என்ன டாக்டர் குழப்புறீங்க?” பவானி பயமும் பதட்டமுமாய்க் கடுப்புடன் கேட்கவும்,
“இந்த மருந்தை விடுங்க. துஷ்டரைக் கண்டால் தூர விலகுனு பெரியவங்க சொல்ற மாதிரி நீங்க நித்தலனை விட்டு விலகி இருக்கிறது உங்க குழந்தைக்கு நல்லதுன்னு எனக்குத் தோணுது” என்றார் மருத்துவர் கிருஷ்ணன்.
அவர் அவ்வாறு கூறியதைக் கேட்டு வெகுண்டவளாய், “நீங்க எப்படி என் நித்தப்பாவை துஷ்டர்னு சொல்லலாம். அவர் ஒன்னும் அப்படிச் செய்ற அளவுக்கு மோசனமானவர் கிடையாது. எனக்கு ஒன்னுன்னா அவர் துடிச்சி போய்டுவாரு தெரியுமா? அவரைப் பத்தி எதுவும் தெரியாம சும்மா பழியைப் போட்டு பேசாதீங்க டாக்டர்” என்று பொங்கிக் கொண்டு இவள் பேசவும்,
கடுப்பான மருத்துவர், “நேத்து ஹிப்னாடிக் சிகிச்சைல நீ தான்மா இதைச் சொன்ன?” என்று போட்டு உடைத்து விட்டார்.
“என்னது?” பவானி அதிர்ந்து போய்க் கேட்க, நிவாசினி கண்கள் விரிய இமைக்க மறந்து அவரைப் பார்த்தாள்.
“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்றவள் கேட்க, முந்தைய நாள் சிகிச்சையில் அவள் கூறியவற்றை அனைத்தையும் கூறியிருந்தார் மருத்துவர்.
“இதைப் பத்தி பேச தான் நான் நித்திலனை நேர்ல பார்க்கனும்னு சொன்னேன். இப்ப நிலைமை நம்ம கையை மீறி போற மாதிரி தோணுது எனக்கு” என்றார் மருத்துவர் கிருஷ்ணன்.
“அப்படினா இவளுக்கும் நித்திலனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருக்கு. அப்ப இவளுக்கு அபார்ட் ஆகுற மருந்தை நித்திலனே கொடுத்திருக்காரு. இது தெரிஞ்சி இவளோட தாத்தா இவளைப் பிரிச்சி கூட்டிட்டு வந்துட்டாரா டாக்டர்” நம்ப முடியாத பாவனையில் பவானி கேட்க, “ஆமாம் மா. அதான் நடந்திருக்கு” என்றார் மருத்துவர்.
தனது வயிற்றில் கையை வைத்தவளாய், “இல்ல இந்தத் தடவை என் குழந்தைக்கு அப்படி எதுவும் ஆக விட மாட்டேன். என் குழந்தையைக் காப்பாத்தியே தீருவேன்” என்று இடைவிடாது அரற்றிய நிவாசினி அதிர்ச்சியினால் உண்டான மன உளைச்சலிலும் உடலின் ஹார்மோன் மாற்றங்களினாலும் மயங்கிச் சரிந்தாள்.

