Loading

 

​மரம் தேடும் மழைத்துளி – 24

​ரவி கோபத்தோடு தெருமுனையை நெருங்கும் வேளையில், கிருஷ்ணனோடு சரவணனும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள்.

​சரவணன், “ரவி நில்லுடா…” என்றான்.

​ரவி சரவணனைப் பார்த்து, “இனிமேல் நீ என் மூஞ்சியிலே முழிக்காதே!” என்று சொன்னவன், விடுவிடுவென்று நடந்து சென்றுவிட்டான்.

​கிருஷ்ணன், “எதுக்குடா கத்திட்டுப் போறான்?” என்று கேட்க,

​சரவணன், “அதான்பா எனக்கும் தெரியல” என்றான்.

​கிருஷ்ணன், “உன்னைத் தேடித்தான் வந்துட்டுப் போறான்னு நினைக்கிறேன். வாசல்ல அம்மாவும் சுந்தரியும் நிற்கிறாங்க. ஏதும் தகராறு பண்ணிட்டுப் போயிட்டானா?” என்றார்.

​சரவணன், “நானும் உங்ககூடத்தானே வரேன். எனக்கு என்ன தெரியும்? வாங்க, வீட்டுக்குப் போய் கேட்கலாம்” என்றபடி இருவரும் நடந்தார்கள்.

​வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த லட்சுமியைப் பார்த்து கிருஷ்ணன், “என்ன அம்மாவும் பொண்ணும் சண்டைக்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிற மாதிரி நிற்கிறீங்க?” என்றார்.

​“போற பாதையிலேயே போட்டுக் கொடுத்துட்டுப் போயிட்டானா அந்தப் பொசகெட்ட பய?” என்றார் லட்சுமி.

​“ஏய், என்ன நடந்துச்சு? அப்போ ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டுத்தான் நிற்கிறீங்களா?” என்றார் கிருஷ்ணன்.

​“நானும் அவனும் சண்டை போட்டது நிசம்தான். என்ன சண்டைன்னு உன்கிட்ட சொல்லாமலா போனான்?”

​“ஏய், முதல்ல உள்ள போங்க. தெருவுல நின்னுகிட்டு நாய் கத்துற மாதிரி கத்துறது என்ன பழக்கம்?” என்று மனைவியையும் மகளையும் உள்ளே அழைத்துக்கொண்டு சென்ற கிருஷ்ணன், “இன்னமும் புரியாத மாதிரியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா… நான் மனுசனா இருக்க மாட்டேன். தெளிவா சொல்லுங்க, எதுக்கு அவன் இங்க வந்து வம்பு இழுத்துட்டுப் போறான்?” என்றார்.

​சரவணனுக்கு ரவி மீது பெருத்த கோபம் வந்தது. தன் வீட்டுக்கு வந்து, தனியாக இருக்கும் பெண்களிடம் சண்டை பிடித்துவிட்டுச் செல்லும் ரவியின் கைகால்களை உடைக்க வேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது.

​சரவணன், “அவன் என்ன சொன்னான்னு முதல்ல சொல்லுங்கம்மா…” என்றான்.

​லட்சுமியும் சுந்தரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, எப்படிச் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.

​கிருஷ்ணன், “என்னம்மா சொன்னான்?” என்று சுந்தரியைப் பார்த்து கேட்க,

​சுந்தரி கம்மிய குரலில், “ருக்கு வீட்டுக்கு பக்கத்து வீட்டு கனக அக்கா… முந்தாநாள் அம்மாவைப் பார்த்து, அண்ணன் அடிக்கடி ருக்மணியைப் பார்க்க அங்கே போறதா சொல்லிட்டுப் போச்சு…” என்று நிறுத்திக்கொண்டாள்.

​அதைத் தொடர்ந்து லட்சுமி, “நான், உன் தங்கச்சியைக் கண்டிச்சா என்னன்னு ஒத்த வார்த்தைதாங்க கேட்டேன். அவன் என்னமோ யோக்கியமான குடும்பத்துல இருந்து வந்தவன் மாதிரி, ‘அசிங்கமா பேசுறீங்க’ன்னு என்னைப் பார்த்துக் கேட்டுட்டுப் போறான். நம்ம சுந்தரியை அடிக்கக் கை ஓங்குறான்” என்று பொரிந்து தள்ளினார்.

​சரவணனுக்குக் காற்றுப் போன பலூன் போல் சுருங்கிவிட்டது. “இது ஒரு கேள்வின்னு அவன்கிட்ட போய்க் கேட்டிருக்கே! அந்தப் பொம்பளை வந்து உன்கிட்ட சொன்னதும், நீ முதல்ல என்கிட்டதானே கேட்டிருக்கணும்? நான் அங்கே போறது உனக்குத் தப்பா தெரிஞ்சா, என்னைத்தானே முதல்ல கண்டிச்சிருக்கணும்? சும்மா வந்தவனை நீயாத்தான் வம்புக்கு இழுத்திருக்கேன்னு இப்பத்தானே தெரியுது!” என்றான்.

​கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், ஆறுதலாகவும் இருந்தது. ருக்மணி அவள் வீட்டுக்குச் சென்று ஒரு வருட காலம் ஆகப்போகிறது; பிறந்த குழந்தையைக் கூடப் பார்க்கப் போகவில்லை. தன்னுடைய மகனாவது சென்று பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்கிறானே என்ற நிம்மதியே அந்த ஆறுதலுக்குக் காரணம். சரவணனைப் பற்றி கிருஷ்ணனுக்கு நன்றாகத் தெரியும், தவறான எண்ணத்தில் அங்கே சென்றிருக்க மாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. லட்சுமிக்கும் உண்மை என்ன என்று தெரிந்திருந்தாலும், இன்னொருவர் வந்து குறை சொல்லும் அளவுக்கு நடந்துவிட்டதே என்பதற்காக வேண்டாத வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டார்.

​கிருஷ்ணன், “நீ பெத்த புள்ளையைப் பற்றி உனக்குத் தெரியாதா? எவளோ வந்து ஏதோ சொன்னான்றதுக்காக பெத்த புள்ளையை ஊரைக் கூட்டி கேவலப்படுத்தியிருக்கே! அந்தப் புள்ள செவனேன்னு கிடக்கு, அதை எதுக்காக வம்புக்கு இழுத்தே?” என்று கேட்க, லட்சுமி மௌனமாய் நின்றார்.

​சரவணன் லட்சுமியை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறிச் சென்றதும்,

​கிருஷ்ணனிடம் லட்சுமி, “அவன் போகட்டும்னு அமைதியா இருந்தேன். இவன் அங்கே போறதை நான் தப்பா நினைக்கல, அவன் மனசுலயும் தப்பான எண்ணம் இருக்காது. ஆனா, அந்தப் பாழாய்ப்போன குடும்பத்துல இருக்கிற கழுதைகள், வழிய வந்தவனை வளைச்சுப் போடணும்னு ஏதாவது செஞ்சு மயக்கி கைக்குள்ள போட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு. இவனைப் போகக்கூடாதுன்னு சொன்னால் வீம்புக்குப் போவான்னுதான், அவன்கிட்ட (ரவி) கொடுத்த கொடையில இவனைப் படிவாசல் ஏத்தாம விரட்டி அடிப்பான்னு நினைச்சு அப்படி செஞ்சுட்டேன்” என்றார்.

​கிருஷ்ணன், “இந்தப் பேச்சை இதோடு விட்டுடு. இனிமே யாரும் இதைப் பத்தி பேசக்கூடாது” என்ற கண்டிப்போடு முகம், கை, கால் கழுவச் சென்றார்.

​வெளியேறிச் சென்ற சரவணன், எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் நடந்து சென்றான். அவனது சிந்தனையும் இலக்கற்றுச் சுற்றித்திரிந்தது.

​“என்னைப் பெத்தவளுக்கு என் மேல எம்புட்டு நம்பிக்கை இருந்திருக்கு பாரேன்! நான் நிஜமாவே தப்பானவனா இருந்திருந்தாலும், ‘என் பிள்ளை அப்படிப்பட்டவன் இல்லை’ன்னு சொல்ற தாயைத் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்க அம்மா இப்படி விட்டுக்கொடுத்துட்டாளே… இத்தனை நாளும் கபடம் இல்லாமல் பழகுகுறேன்னு நினைச்சிருப்பாளே… இந்தத் பிரச்சனையால நான் ஏதோ உள்நோக்கத்தோட அவளைத் தேடிப் போனதா யோசிப்பாளே… இந்தத் பிரச்சனையால எங்க பெரியாத்தா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? ‘அண்ணன் பொண்டாட்டிக்கு அலையுறான்’னு தப்பா நினைப்பாங்களே… அவங்க மூஞ்சியில எப்படி முழிப்பேன்? எங்க அண்ணன் மகன் பிறந்ததுக்கு அப்புறம், எப்படியாவது மாமியாரையும் மருமகளையும் ஒண்ணு சேர்த்து வச்சுடலாம்னு நினைச்சேன். அவங்க ரெண்டு பேரும் நிரந்தரமா பிரியிறதுக்கு நான் தான் காரணமாய் இருப்பேன் போல இருக்கே… நான் குடியிருக்கிற தெருவுக்குள்ளேயே என்னைப் பார்க்கிற ஆளுங்க என்ன நினைப்பாங்கன்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்க மறந்துட்டாளே எங்க அம்மா! எனக்குப் பொண்ணு கொடுக்கப்போற மாமனார், மாமியார் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க? நான் கட்டிக்கப்போற பொண்ணு என்னைப் பற்றி என்ன நினைப்பா? இதையெல்லாம் எங்க அம்மா ஏன் யோசிக்காம நடந்துகிட்டா? அப்போ நான் அவளுக்கு முக்கியம் இல்லையா?” என்று அவன் தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க,

​இன்னொரு புறம் ரவி, தன்னுடைய வீட்டுக்கு வேகமாகச் சென்றவன், தன் அம்மா சுப்புவிடம் காட்டமான குரலில், “அந்தப் பொம்பளை எப்படி எல்லாம் கேவலமாகப் பேசுறான்னு தெரியுமா?” என்றான்.

​சுப்பு, “எந்தப் பொம்பளை? எதுக்காகப் பேசுறா?” என்றார்.

​ரவி, “நம்ம ருக்குவோட சின்ன மாமியார், அவளோட மகனையும் ருக்குவையும் சேர்த்து வச்சுப் பேசுறாம்மா” என்றான்.

​சுப்பு, “அவங்க பேசுனது உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க,

​ரவி, “அந்தப் பொம்பளை என்கிட்டதானே தப்பா பேசுறா… ‘உன் தங்கச்சியைக் கண்டிக்கிறதுக்குத் துப்பு இல்லை, இன்னொரு கல்யாணத்துக்கு அலையிறா’ன்னு ரொம்ப அசிங்கப்படுத்திட்டா” என்றான்.

​“அவ மகன் கூடப் பழகக் கூடாதுன்னு சொன்னால் அது நியாயம். அவனோட பழக்கவழக்கம் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போறோம். இன்னொரு கல்யாணம் பண்றதும் பண்ணாம இருக்கிறதும் நம்மளோட விருப்பம், அதைக் குறை சொல்றதுக்கு அவ யாரு?” என்றார் சுப்பு.

​“அப்போ, அந்தப் பொம்பளை சொன்ன மாதிரி இவள் இன்னொரு கல்யாணத்துக்கு அலையிறாளா?” என்று ரவி கேட்க,

​“விளக்குமாத்தை எடுத்தேன்னா… சும்மா பலுவாரி விட்டுடப் போறேன்! அவ கல்யாணத்துக்கு அலையிறான்னு உன்கிட்ட சொன்னேனாடா? அவளுக்கு என்ன வயசாச்சு? பார்க்கக் கூடாத சந்தோஷத்தையெல்லாம் பார்த்து களிச்சுட்டாளா? அப்படியே கல்யாணம் முடிச்சாலும் என்ன தப்பு? இன்னொருத்தன் விரும்பி கேட்டு வந்தால், கட்டிக் கொடுக்க வேண்டியதுதான்கிற அர்த்தத்துல சொன்னேன். அவ புருஷன் வரம் கேட்டுத் தவம் இருக்கல” என்றார் சுப்பு.

​ரவியின் ஆவேசம் சற்று குறைந்தது. ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் சூழலை நோக்கினான். இதுவரை லட்சுமியை ‘அந்தப் பொம்பளை, இந்தப் பொம்பளை’ என்று ஒருமையில் சொல்லிக்கொண்டிருந்தவன், தற்போது… “சரவணன் அம்மா சொல்றது ஒருவேளை நிஜமா இருந்தாலும் தப்பு இல்லைன்னு சொல்றியா அம்மா?” என்றான்.

​சுப்பு, “அவ சொல்றதை நான் நேர்ல கேட்கல. ஆனா தாலி அறுத்த பொம்பளைங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்றது தப்புன்னு சொல்றேன்” என்றார்.

​ரவி அமைதியாய் சில நொடிகள் நின்றவன், “சரவணன் வாழ்க்கை கொடுத்தால் ருக்குவோட வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும். அவனை மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறதுக்கு நம்ம எல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும். நானும் இந்த விவரம் எல்லாம் புரியாமல் தான் அவ்வளவு ஆத்திரப்பட்டுட்டேன். சரவணன் மனசுல உண்மையிலேயே ருக்கு மேல பிரியம் இருந்தால், எப்படியாவது ஒண்ணு சேர்த்து வச்சுடணும்மா…” என்றான்.

​“அந்தப் பையன் மனசுல அப்படி ஆசை இருக்காது. உன் தங்கச்சி மனசுலயும் அப்படி ஒரு எண்ணம் இருக்காது. இது அந்தத் தெருக்காரச் சிறுக்கிகள் செஞ்ச சின்ன வேலையா இருக்கும். இதைக் கேட்ட அந்தப் பொம்பளைக்குப் பேய் பிடிச்சு ஆடி இருப்பாள்” என்றார் சுப்பு.

​சாப்பாடு வைக்கச் சொல்லி அமர்ந்த கிருஷ்ணனுக்கு, சாப்பிடும்போது சாப்பாட்டில் எண்ணம் இல்லை. அவரது எண்ணம் முழுவதும் ருக்மணியைச் சுற்றிக்கொண்டிருந்தது. ‘பாவம் அந்தப் பிள்ளை. இந்த வீட்டுக்கு வந்து நல்லா ஒரு நாள் இருந்திருக்க மாட்டா. வந்த நாளில் இருந்தே அந்தப் பாவி கூடப் போராடி, அவனைத் திருத்தி நல்லா இருந்திருவோம்னு நினைக்கிற நேரத்துல அவனையும் பறிகொடுத்துட்டா. லட்சுமி சொன்ன மாதிரி, சரவணனே அந்தப் பிள்ளையைக் கட்டிக்கிட்டால் இனிமேலாவது நல்லா இருப்பா. தாய்க்கும் பிள்ளைக்கும் வாழ்க்கை கொடுக்கிறதுக்கு அடுத்தவங்களுக்கு மனசு வராது. ஆனா சரவணன் நினைச்சா ரெண்டு பேருக்கும் வாழ்க்கை கொடுக்கலாம்’ என எண்ணினார்.

​லட்சுமி, “இன்னும் கொஞ்சம் சோறு வைக்கவா? தட்டைப் பார்த்துச் சாப்பிடுங்க. திங்கிற சோத்துக்கு மரியாதை கொடுங்க” என்றார்.

​கிருஷ்ணன், “ஏன் லட்சுமி, நீ சொன்ன மாதிரி சரவணன் மனசுல அந்தப் பிள்ளை நினைப்பு இருந்துச்சுன்னா… ‘நான் அவளைத்தான் கட்டுவேன்’னு ஒற்றைக் கால்ல நிற்பானே!” என்றார்.

​லட்சுமிக்குத் திக்கென்று இருந்தது. ‘அடக் கடவுளே! சும்மா கிடந்த சங்கினை நானே ஊதிக் கெடுத்துட்டேனே… எந்த நினைப்பும் இல்லாமல் இருந்தவன் மனசுல நானே விதையைத் தூவி விட்டுட்டேனே!’ என்று எண்ணியவர், பிரமை பிடித்தவர் போல் அமர்ந்துவிட்டார்.

​சுந்தரி, கிருஷ்ணன் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் அடுப்பங்கரையில் வைத்துவிட்டு, “அண்ணன் பொண்டாட்டி அம்மாவுக்குச் சமம்னு சொல்லுவாங்க. எந்தக் கேடுகெட்டவனாவது அம்மாவுக்குத் தாலி கட்ட நினைப்பானா?” என்று அவளுக்குத் தோன்றியதைச் சொன்னாள்.

​கிருஷ்ணன், “நீ சொல்றதெல்லாம் சரிதாம்மா. ஆனா, ருக்கு உங்க அண்ணனை விட வயசு கூடுதல் கிடையாது. அவன் குழந்தையாக இருக்கும்போது தூக்கி வளர்த்தவளும் கிடையாது. அப்படி இருக்கிறவள் எப்படி ஆத்தாளுக்குச் சமமாவா?” என்றார்.

​சுந்தரி, “இப்ப நல்லா புரியுதுப்பா… அவன் மனசுல ஆசை இருக்குதோ இல்லையோ, உங்களுக்கு அந்த ஆசை இருக்குன்னு இப்ப நல்லாவே புரியுது” என்றாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்