
.
மரம் தேடும் மழைத்துளி — 23
கணவன் இறந்த துயரத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் ருக்மணி.
அவளது நிலையைப் பார்த்த மாரியம்மாள், துயரத்தில் இருந்து அவளை மீட்டு வெளியே கொண்டுவர என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கட்டிடத் தொழிலாளர் நலச் சங்கக் கமிட்டி நண்பர்கள் நான்கு பேர் ருக்மணியைச் சந்திக்க வந்தார்கள். கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்த முருகனுக்கான பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை ருக்மணியின் கையில் கொடுத்துவிட்டு, “இப்படியே முடங்கி இருந்துவிடக் கூடாது. உன்னுடைய குழந்தையைப் பாதுகாக்க நீ திடமாக, தைரியமாக நடைபோட வேண்டும்” என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
கணவனை இழந்த கைம்பெண்கள் முப்பது நாட்கள் வெளியில் தலைகாட்டக் கூடாது என்ற சம்பிரதாயத்தைத் தள்ளிவைத்துவிட்டு, பதினைந்தாவது நாளிலிருந்தே தான் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்குத் தொடர்ந்து செல்லக் கிளம்பிவிட்டாள் ருக்மணி.
அதேபோல பார்வதியும் தனியாக வீட்டில் கிடந்து மனம் புழுங்கிக் கொண்டிருந்தார். அவரது மகள் கோமதி, “இப்படியே எத்தனை நாளைக்கு இருக்கப்போறே? தினம் தினம் அழுது புலம்பினாலும் செத்தவன் எந்திருச்சு வந்துருவானா? நீ உன்னோட புள்ள போன இடத்துக்குப் போகணும்னு நினைக்கிறதை நான் தப்பு சொல்லல. ஆனா, உனக்கு அவன் மட்டும் பிள்ளை இல்லையே; நானும் இருக்கிறேன். நீ போன பிறகு நான் இந்த பூமியில அனாதையா ஆயிடுவேன். அப்படி என்னைத் தவிக்க விடணும்னு முடிவு பண்ணிட்டியா? நீ உனக்காக உயிர் வாழ வேண்டாம், ஆனா எனக்காக நீ வாழ்ந்தே ஆகணும். என் பிள்ளைகளை நீ வளர்த்து ஆளாக்கணும். எனக்கு நீ வேணும்மா” என்று அழுது, அவரது மனதை மடைமாற்றினாள்.
பார்வதியும் கோமதிக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, தான் பார்த்துக்கொண்டிருந்த பழைய வேலைக்கு மீண்டும் சென்றார். மாமியாரும் மருமகளும் ஒரே இடத்தில் வேலை செய்தாலும், பார்த்துக்கொள்வதோ பேசிக்கொள்வதோ இல்லை. என்றாலும், ஒருவரை ஒருவர் மனதால் ஏற்றுக்கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.
சுபத்ரா – சரவணன் திருமணத்தைப் பற்றிப் பேசிய நாளில் இருந்தே, சரவணன் ஒருமுறை கூட சுபத்ராவிடம் பேச வேண்டும் என்று ஆர்வம் காட்டியதே இல்லை. “சுபத்ராவைப் பிடித்திருக்கிறது; விரைவில் திருமணம் நடக்கப்போகிறது” என்று இருந்தவன், இப்போது திருமணம் நடக்க ஒரு வருட காலம் ஆகும் என்றதும், இப்போதும் அவளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று விருப்பம் கொள்ளவில்லை.
ஆனால் சுபத்ராவோ, சரவணன் எப்போது தன்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவளது ஆசை ஈடேறும்படியாக, சரவணன் தனது நண்பன் ரவியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வந்திருந்தான். அங்கே சுபத்ரா சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்ததும், அவன் ஆர்வமாய்ப் பேச வருவான் என்று காத்திருந்தாள்.
ரவி, சுபத்ராவைக் கண்டுகொண்டான். சரவணனிடம், “மாப்ள, உனக்கு பேசி முடிச்சிருக்கிற பொண்ணு நிக்குது, போய் பேசிட்டு வாடா” என்று சொல்ல, “இல்ல மாப்ள, கல்யாணத்துக்கு முன்னாடி கண்ட கண்ட இடத்துல பேசுறது தப்பு” என்று சொல்லிவிட்டு, கோயிலுக்கு வந்த காரணத்தையே மறந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சரவணன்.
சுபத்ராவின் முகம் சுண்டிப்போனது. “ஏன் இவன் இப்படி நடந்துகொள்கிறான்?” என்று அவனிடம் நேரடியாகவே கேட்டுவிட வேண்டும் என்று அவளும் கோயிலுக்கு வெளியே வந்தாள். சாமி கும்பிடச் சென்ற ரவி வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்த சரவணனிடம் வந்த சுபத்ரா, “என்னைத் பார்த்ததும் ஏன் ஓடுறீங்க?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
சரவணன், அவள் இப்படி எதிரில் வந்து நின்று கேள்வி கேட்பாள் என்று எண்ணவில்லை. அதனால் அதற்குத் தகுந்த மாதிரி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தான். “நான் உங்களைப் பார்த்து ஓடல… நான்…” என்று யோசித்து, தயங்கி, ஒருவழியாக, “எங்க அண்ணன் இறந்து ஒரு வருஷம் கழிச்சுதான் கோயிலுக்கு வரணும். அது எனக்கு ஞாபகம் வந்ததும் வெளியே வந்துட்டேன்” என்று சொல்லி முடித்தான்.
சுபத்ரா, “சரி சரி, நானும் கோயிலுக்கு வெளியே வந்துட்டேனே, இப்பவாவது ஏதாவது பேசுங்க” என்றாள்.
“நான் இதுக்கு முன்னாடி எந்தப் பொண்ணுங்ககிட்டயும் பேசினது இல்ல. எனக்குப் பேசுறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. யாராவது பார்த்துட்டு வீட்டுல சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு. ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.”
சுபத்ராவுக்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது. ‘ஏதாவது பேசு’ என்றால், அவன் பேசாததற்கான காரணத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு. “உங்க மொபைல் நம்பராவது கொடுங்களேன். யாருக்கும் தெரியாம நான் எங்க வீட்டு போன்ல இருந்து கூப்பிடுறேன்” என்றாள்.
“அடிப்பாவி! நீ விடமாட்ட போல இருக்கே…” என்று மனதிற்குள் எண்ணியவன், “எனக்கு மொபைல் நம்பர் தெரியாது. நான் இதுவரைக்கும் பத்து முறை சிம்மை மாத்திட்டேன். அடுத்த ஆஃபர் எந்த சிம்முக்கு இருக்குமோ அதை போடுவேன். அதனால எனக்கு நம்பர் சொல்லத் தெரியாது” என்று சொல்லி முடிக்கவும், ரவியும் அங்கு வந்துவிட்டான். “சரிங்க, என்னோட பிரண்டு வந்துட்டான். நான் இன்னொரு முறை உங்ககிட்ட பேசுறேன்” என்று நழுவிச் சென்றான் சரவணன்.
“இவனுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா? ஏன் இப்படி நடந்துக்கிறான்?” என்ற சிந்தனையோடு சுபத்ராவும் தன் வழியைப் பார்த்து நடந்தாள்.
ரவி சரவணனிடம், “ஏன் மாப்பிள்ளை, உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குனுதானே கல்யாணம் பேசி இருக்காங்க? அப்புறம் எதுக்காக அந்தப் பிள்ளை கூடப் பேச மாட்டேன்னு ஓட்டம் காட்டுறே?” என்று கேட்டான்.
“நீ கேட்கிற கேள்விக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியல. ஆனா அந்தப் பிள்ளையைப் பிடிக்கும். பேசுறதுக்கு ஒரு மாதிரி இருக்கு, அவ்வளவுதான்… வா” என்று இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள்.
ருக்மணி ஒன்பதாவது மாதம் வரை மில்லுக்கு வேலைக்கு வந்தாள். அதன் பிறகு பேறுகாலத்திற்காக இரண்டு மாதம் விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்தாள். மில்லில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வதியும் சரவணனும், ருக்மணி ஏன் வரவில்லை என்று தெரியாமல் தவித்தார்கள்.
ருக்மணியின் அண்ணனும், சரவணனின் நண்பனுமான ரவியை அழைத்த பார்வதி, “உங்க தங்கச்சி எதுக்காக வேலைக்கு வரல? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.
ரவி, “இல்லத்தே… அவ பேறுகால லீவு எடுத்திருக்கா. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சுதான் மில்லுக்கு வருவா” என்றான்.
“சரி சரி” என்ற பார்வதி, தனது வேலையைக் கவனிக்கத் தொடங்கினார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகே சரவணனுக்கு ருக்மணி விடுமுறை எடுத்திருக்கும் விஷயம் தெரியவந்தது. ரவியிடம் ஒவ்வொரு நாளும் ருக்மணியின் நிலையைப் பற்றி விசாரித்துக்கொண்டான்.
திடீரென ஒருநாள் ரவி, சரவணனைத் தொடர்புகொண்டு, “ருக்மணிக்கு அரசு மருத்துவமனையில குழந்தை பிறந்திருக்கு” என்ற தகவலைத் தெரிவித்ததும் சரவணன் உற்சாகமானான். தன்னுடைய அண்ணனுக்குக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவித்தான். ஆனால், யாரும் அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மற்றவர்களைவிட, பெரியம்மா பார்வதியின் உணர்வுகளுக்கே அந்த வீட்டில் உள்ளவர்கள் மதிப்பு கொடுத்தார்கள்.
அதனை அறிந்துகொண்ட சரவணன் எதுவும் பேசாமல், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு, கைச்செலவிற்குச் சிறிது பணமும் கொடுத்துவிட்டு வந்தான். அதன் பிறகு, சரவணன் குழந்தையை ஒருநாள் விட்டு ஒருநாள் சென்று பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மாரியம்மாளின் பக்கத்து வீட்டில் உள்ள சில வம்பளப்பவர்கள், சரவணனின் வருகையைப் பற்றித் தவறாகப் பேசத் தொடங்கியிருந்தார்கள். குழந்தைக்கு முப்பதாவது நாளில் ‘தினேஷ்’ என்ற பெயரை சரவணன் முன்னின்று வைத்தான்.
சரவணன் அடிக்கடி ருக்மணி வீட்டுக்கு வந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் தவறாகப் பேச ஆரம்பித்து, அந்த வதந்தி சிறிது சிறிதாகச் சரவணன் வீடு வரை பரவியது.
எதார்த்தமாக ரவி ஒருநாள் சரவணனைப் பார்க்க அவனது வீட்டிற்குச் சென்றிருந்தான். வீட்டில் லட்சுமியும் சுந்தரியும் இருந்தார்கள்.
ரவி வாசலில் இருந்தபடியே, “சரவணா…” என்று அழைக்க, சுந்தரி, “சரவணன் இல்ல” என்று உள்ளிருந்தபடியே பதில் கூறினாள்.
லட்சுமி, ரவியின் குரலைக் கேட்டு சுந்தரியிடம், “இவன் முருகன் பொண்டாட்டியோட பெரியாத்தா மகன்தானே?” என்று கேட்டதும், சுந்தரி “ஆமாம்” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
வேகமாக விரைந்து வெளியே வந்த லட்சுமி, வாசலில் நின்ற ரவியைப் பார்த்து, “ஏப்பா… கொஞ்சம் நில்லு. நீ யாரைத் தேடி வந்தே?” என்றார்.
ரவிக்கு ஒன்றும் புரியாமல், “சரவணனைத் தேடி வந்தேன்த்தே…” என்றான்.
“யாரு யாருக்கு அத்தை? உன் தங்கச்சிக்காரி, அப்பன் கூடப் பிறந்த அத்தையையே விரட்டி அடிச்சிட்டா! நான் உனக்கு எந்த வகையில அத்தைன்னு உறவுமுறை சொல்லி கூப்பிடுறே?”
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியல அத்தை. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.”
“உனக்கு எப்படிப் புரியும்? நீ இப்ப யாரைத் தேடி வந்தே?”
“சரவணனை.”
“அவனை எதுக்கு நீ தேடுறே?”
ஒன்றும் விளங்காமல், “சும்மாதான்…” என்று நெற்றியைச் சுருக்கியபடி லட்சுமியைப் பார்த்தான் ரவி.
“சும்மாவா? இத்தனை நாளா நீ அவனைத் தேடி வந்தியா? உன் தங்கச்சிக்கு ஒரு புருஷன் போதாதுன்னு, இன்னொருத்தனைச் சேர்த்து வைக்கிறதுக்குத் தேடி வந்தியா? அவளுக்குத்தான் வெட்கம் இல்லை, உனக்குமா இல்லை? அவளுக்குத்தான் அறிவு வேண்டாம்… அண்ணனுக்குத் தாலி கட்டிட்டு, தம்பியோட… ச்சீ!” என்றதும் ரவிக்குச் சுருக்கென்றது.
“அத்தே! வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. நீங்க பேசுறது ரொம்ப அசிங்கமா இருக்கு.”
சுந்தரி வேகமாக இடைமறித்து, “எங்க அம்மா பேசுறதே உனக்கு அசிங்கமா இருக்கா? உன் தங்கச்சி செய்யுறது அழகாவா இருக்கு? அவளையெல்லாம் ஒரு நாளாவது நீ கண்டிச்சிருப்பியா?” என்றாள்.
“அவளைப் பத்திப் பேச நீ யாருடி?” என்ற ரவி, கையை ஓங்கிக்கொண்டு சுந்தரியை அடிக்கச் சென்றான்.
நடுவில் வந்து நின்ற லட்சுமி, “இந்த வீரத்தை உன் தங்கச்சிகிட்ட போய் காட்டுடா! அவளை அடிச்சு ஒடுக்கித் தடுத்து வைக்கத் துப்பில்லை… என் புள்ளை மேல கையை ஓங்கிக்கிட்டு வாரே? விளக்கமாறு பிஞ்சிடும் நாயே! கண்ட நாய் எல்லாம் வந்து கை நீட்டுற அளவுக்கு அனாதைப் பிள்ளையா பெத்துப்போட்டு இருக்கேன்னு நினைச்சியா? செருப்பு பிஞ்சிடும்!” என்று ரவியைக் கண்டபடி திட்டினார்.
ரவிக்கு முகமெல்லாம் வேர்த்து, ஆத்திரம் எல்லை கடந்து சென்றது. தெருவில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் சிலர், “நீ போப்பா… நீ போப்பா…” என்று ரவியை வழி அனுப்பி வைத்தார்கள்.
சிலர் லட்சுமிக்கு ஆதரவாக, “நல்ல கேள்வியா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டீங்க. நீங்க செஞ்சதுதான் சரி” என்று பேசினார்கள்.

