Loading

சலனம்-10

மகிழுந்தின் கண்ணாடியில் பட்டுத் தெறித்த நகரத்து விளக்குகள், சம்யுக்தாவின் முகத்தில் நிழலாடி மறைந்தன.

 

அவள் வண்டியைச் செலுத்திய விதம் ஒரு கவிதை போல நேர்த்தியாக இருந்தது. ஆனால், அந்த வண்டியின் உள்ளே நிறைந்திருந்த இசை, எங்கள் இருவருக்கும் இடையே வளர்ந்து நின்ற மௌனப் பள்ளத்தாக்கை நிரப்ப முடியாமல் தத்தளித்தது.

 

நேர்த்தியாய் வாகனத்தை அவள் செலுத்திக் கொண்டிருக்க, மகிழுந்தினுள் நிறைந்து வழிந்த இசையை இரசித்தபடி, அவளையும் சேர்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். அழகான இதமான மனநிலை. திருமணத்தின் பின், இப்படியொரு பயணம் அமையவே இல்லை.

 

திருமணத்திற்கு முன் நிறைய சுற்றியிருக்கிறோம். அப்போதெல்லாம் வீட்டிற்குள் இருந்த நாட்கள் மிக மிகக் குறைவு. சென்னைக்கு வந்த பின் வெறுமையாய் நகர்ந்துக் கொண்டிருந்த என் வாழ்க்கையை அழகாக்கியவள் சம்யுக்தா மட்டுமே.

 

திருமணம் செய்தது தான் தவறோ? முன்னிருந்த நெருக்கம், பிடித்தம், ஈர்ப்பு எல்லாமே திருமணத்தின் பின் குறைந்துவிட்டதாகத் தோன்றியது எனக்கு.

 

“ஏன் விக்ரம், ஒருவேளை, நான் பேசாமலே இருந்திருந்தால், அப்படியே விட்டுருப்பியா?” சாலையில் கண்களைப் பதித்தபடி அவள் கேட்டாலும், கேள்வி எனக்குத்தான். அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, அவள் கரம் நீண்டு, ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் ஒலியளவைக் குறைத்தது.

 

நான்கு மாத கால மௌனம். ஒரு கூரையின் கீழ் இருந்தும் இரு துருவங்களாய் வாழ்ந்த நாட்கள். என் பேச்சைக் கேட்க மறுத்து, சம்யுக்தா அந்த மகாதேவின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது என எனக்குப் பிடிக்காதவை நிறைய நிகழ்ந்திருந்தன. எனது பிடிவாதம் அமைதிப் படையாக உருவெடுக்க, அவளோ தன் கனவுகளுக்காகப் போராடிப் பார்த்தாள். இறுதியில், அவளே இறங்கி வந்து இந்தப் பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறாள் எனப் புரிந்தாலும் என்னால் பதில் பேச முடியவில்லை..

 

“உனக்கு என்ன குறை வைத்தேன்? ஏன் மற்றவர்கள் முன்னால் நீ நடிக்க வேண்டும்?” என்ற என் கேள்விகளுக்குப் பின்னால் இருந்த சுயநலத்தை நான் பாதுகாப்பு என்று பெயரிட்டு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

 

“சொல்லு விக்ரம்! உன்னைத்தான் கேட்கிறேன்!” அவள் கேள்வி என்னை நிகழ் மீட்டது.

 

“ம்ப்ச்! சம்யூ! இப்போதான் நாம சமாதானம் ஆகிட்டோமே? இப்போ ஏன் இதைப் பேசி, நல்ல மனநிலையை ஸ்பாயில் பண்ணுற?” என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் எதிர்கேள்வி கேட்டேன்.

 

இதுதான் என் வழக்கமான ஆயுதம். ஒரு பிரச்சனை எழும்போதெல்லாம் அதை எதிர்கொள்ளத் திராணியின்றி, “ஏன் பழையதைப் பேசுகிறாய்?” என்ற போர்வையில் ஒளிந்து கொள்வேன்.

 

​அவள் காரை ஓரமாய் நிறுத்தினாள். இன்ஜின் அணைக்கப்பட்ட அந்த நொடி, என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது. அவள் திரும்பி அவன் கண்களைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் கோபத்தை விட ஏமாற்றமே மேலோங்கி இருந்தது.

 

“அப்போ நமக்குள்ளே இனிமே சண்டையே வராதுன்னு சொல்றியா விக்ரம்?”

 

“நான் எங்கே அப்படிச் சொன்னேன்?”

 

“அப்போ பதில் சொல்லு விக்ரம்.? ஒருநாள், ரெண்டு நாள் இல்லை. முழுசா நாலு மாசம், என்கிட்டே பேசாமல் உன்னால் இருக்க முடியுதுன்னா, நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியும்ன்னு தானே அர்த்தம்? என்னை உன் மனசு தேடவே இல்லையா டா?!” வாகனத்தை ஓரமாய் நிறுத்துவிட்டு, திரும்பி என் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

 

“இப்போவும், நீயாக வந்து ஒண்ணும் பேசலை சம்யூ! நான் தான் கங்ராஜூலேஷன்ஸ்ன்னு சொன்னேன். நீ எனக்குப் பிடிக்காத வேலையெல்லாம் செஞ்சுட்டு, என்கிட்டேயே சண்டை போடுற! அந்தப் படம் வேணாம், வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா? புருஷன்னு மரியாதை உனக்கு இருந்தால் தானே? எனக்கு எது பிடிக்காதோ, அதைத்தான் நீ வேணும்ன்னே செய்றே! முதலில் வண்டியை எடு! இப்படி நடுவில் நிறுத்திவச்சு சண்டைப் போடத்தான் கூட்டிட்டு வந்தியா?” எனக் கோபமாய் பேசிய எனக்கு என் பக்க நியாயம் மட்டுமே தெரிந்தது. அவள் பக்கமும் நான் யோசிக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட என்னிடம் இல்லை.

 

“பெட்டர் ஹாஃப் என்றால், சரி பாதின்னு தானே அர்த்தம்? உனக்கு மரியாதைக் கொடுத்து நடக்க, நீ ஒண்ணும் மகாத்மா இல்லை.!”,எனச் சொன்னவள் அதன் பிறகு, எதுவுமே பேசவில்லை. அமைதியாய் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு, அவள் ஏற்கனவே பதிவு செய்திருந்த உணவகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தினாள்.

 

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தக் காரணத்தால், யார் கண்ணிலும் விழாமல், முகத்தை மறைத்தபடி, உள்ளே சென்று, அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே அமர்ந்தேன். இரசிகர்கள் யார் கண்ணிலாவது விழுந்து, கன்டென்ட் ஆவதை நானும் அவளும் பெரும்பாலும் விரும்பியதில்லை.

 

 

என் கண்கள் சுற்றிலும் வட்டமிட்டது. செயற்கை அருவி கண்ணாடிக்கு அந்தப்பக்கம் வழிந்துக் கொண்டிருக்க, மஞ்சள் நிற விளக்குகள், இரவு நேரச் சூரியனாய் பளிச்சிட, மெல்லிய இசையின் பின்ணணியில் அந்த இடமே இரம்மியமாய் இருந்தது. ஆனால் எதையுமே இரசிக்காமல், வெறுமையாய் அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.

 

அவள் எதையோ சொல்ல வந்து, என் கடுகடுப்பில் சொல்லாமல் தவிப்பது எனக்குப் புரிந்தது. ஆனால் நான் என்னவென்று கேட்க முயலவில்லை. ‘நான் எதையாவது கேட்டால், அவள் வேறு எதையோ சொல்வாள்.’ என யோசித்து அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

 

“என்ன ஆச்சு சம்யூ? ஏன் முகத்தை ஒருமாதிரி வச்சிருக்கே?”

 

“ஒண்ணுமில்லை! உனக்கு தேவையானதை நீ சொல்லிக்கோ! எனக்கு நான் சொல்லிப்பேன்!” ஒட்டுதல் இல்லாமல் பேசினாள். இருவரும் தனித்தனியே அவரவருக்கு வேண்டியதைச் சொல்லிக் கொண்டோம். உணவை உண்டு முடித்துவிட்டு, அவள் உண்டதற்கான பணத்தை மட்டும் செலுத்திவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

 

அவள் சென்றபின் அவள் முன்னாலிருந்த உணவு வகைகளைப் பார்த்தேன். முக்கால்வாசி உண்ணாமல் அப்படியே வைத்துவிட்டுச் சென்றிருந்தாள். கைகழுவி விட்டு வந்து உணவிற்கான பணத்தை பைசா குறையாமல் எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

“நான் கொடுக்குறேன் சம்யூ!”

 

“தேவையில்லை!” ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது. நான் எதுவும் புரியாமல், நான் உண்டதற்கான தொகையைச் செலுத்துவிட்டு, வெளியே வந்த போது, சம்யுக்தா மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

 

“சம்யூ! வெய்ட்! நானும் வரேன்..!” அவள் எதையுமே காதில் வாங்கவே இல்லை.

 

“ம்ப்ச்! இவள் ஏன் இப்படி செய்றா? இவளே தான் கூட்டிட்டு வந்தாள். இவளே சண்டை போட்டுட்டு கிளம்பி போய்ட்டா!” எரிச்சலோடு நான் முனகியபடி, நான் சித்தார்த்திற்கு அழைப்பெடுத்த

 

அதே நேரம்,

 

“யூ ஃபர்காட் திஸ் சார்!” என்றபடியே, அந்த உணவு விடுதியின் பணிப்பெண் ஒருவர், என் கரத்தில், ஆழ்ந்த சிவப்பு நிறத்திலிருந்த சிறிய கையடக்கப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்.

 

இருக்கிற இம்சையில், இது வேற..” எனச் சலித்தபடி,

 

“இது என்னுடையது இல்லை.!” எனச் சொல்லிவிட்டு, நான்! கரத்தில் வாங்காமல், விழித்துக் கொண்டு நிற்க,

 

 

“உங்க கூட வந்தவங்க வச்சிட்டுப் போய்ட்டாங்க சார்!” என தமிழில் உரைத்த பின்னர் தான் எனக்குப் புரிந்தது.

 

‘ஒருவேளை சம்யூ எனக்காக கொண்டு வந்திருப்பாளோ?’ என்ற எண்ணம் மேலோங்க, அவசரமாய் மேலிருந்த அலங்கார தாளைக் கிழித்தெறிந்துவிட்டு, அவசரமாய், அந்தப் பெட்டியைத் திறந்துப் பார்த்த நான் அதிர்ந்து போயிருந்தேன்.

 

 

கண்களைக் கசக்கிக் கொண்டு மீணடும் பார்த்தேன். நிஜமாக நான் இப்படியொன்றை எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத திருப்பங்களில் தானே, வாழ்வின் சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கின்றன. என் கரத்திலிருந்த பரிசுப்பொருளைப் பார்த்துவிட்டு,

 

“கங்ராஜூலேஷன்ஸ் சார்!” என அந்தப் பணிப்பெண் வாழ்த்திவிட்டுப் போக, மெல்லிய தயக்கத்துடன் நன்றியுரைத்தேன் நான்.

 

 

என் கரத்தினில் நான் பொதிந்து வைத்திருந்த அந்த கர்ப்பப் பரிசோதனை அட்டையில், இரண்டு பிங்க் நிறக் கோடுகள் தெளிவாகத் தெரிந்தது. என் வாழ்வின் ஆகச் சிறந்தப் பரிசுப் பொருளைக் கொண்டு வந்தவளைப் புரிந்துக்கொள்ளாமல் அனுப்பிவிட்டேனோ? என்றக் கேள்வி எனக்குள் எழுந்தது. இதைச் சொல்வதற்காகத்தான் முன்பே முன்பதிவு செய்து வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. உற்சாக மிகுதியில், அவளைப் பார்க்கத் துடித்த என் மனதை அடக்கி, சித்தார்த்திற்கு அழைத்து வீடு செல்வதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்துவிட்டு நிமிர்ந்த எனக்கு, இப்போது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

 

அதிர்ச்சி, மகிழ்ச்சி, குற்ற உணர்வு என அனைத்தும் ஒன்றாக எனுக்குள் மோதின. இந்தச் செய்தியைச் சொல்வதற்காகத்தான் அவள் நான்கு மாதப் பிணக்கை மறந்து, நானாகப் பேசாதபோதும் அவளே முன்வந்து அவனை அழைத்து வந்திருக்கிறாள்.

 

ஆனால் நான்? தன் அதிகாரத்தைக் காட்டுவதிலும், அவளைக் காயப்படுத்துவதிலும் மட்டுமே குறியாக இருந்திருக்கிறேன்.
ஒரேயொரு நிமிடம் அவளைப் பார்க்க வேண்டும், அவளிடம் மண்டியிட்டு மன்னிப்பு யாசிக்க வேண்டும் என்று தோன்றியது.

 

 

ஆனால் மறுநொடியே , என் ஆணாதிக்க மனம் ஒரு குரூரமான நிம்மதியை அடைந்தது.
வீடு திரும்பும் வழியில் என் சிந்தனைகள் சம்யுக்தாவைச் சுற்றியே இருந்தது. அவள் அழகை நான் ரசிக்கிறேன்., ஆனால் அந்த அழகு எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவளுடைய திறமை உலகுக்குத் தெரிவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

 

‘குழந்தை வந்து விட்டால், கனவு, இலட்சியம், என நடிப்பின் பக்கம் போக மாட்டாள்.’ என்ற உணர்வே என்னைக் கொஞ்சம் நிம்மதியாய் மூச்சுவிட வைத்தது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையேயான உறவும் மெல்லிய நூலிழை போலத்தான். இழுத்துப் பிடித்தால், அறுந்து போய்விடும், என்பதை நான் உணர எனக்குப் போதுமான பொறுமை இருக்கவில்லை.

 

 

சித்தார்த் என்னைத் திரும்பிப் பார்த்தபடியே வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். எந்தக் கேள்வியும் அவன் என்னைக் கேட்க முற்படவில்லை. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது என் மனம் யோசனையிலிருந்தது. சம்யூவும் நானும் முகம் பார்த்து பேசியே நான்கு மாதங்கள் கடந்திருந்தது.

 

தற்போது அவள் கருவுற்றிருக்கிறாள் என்றால், அவள் என்னிடம் உண்மையை மறைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்துக்கொள்ள பெரிய மூளையொன்றும் எனக்குத் தேவைப்படவில்லை. 

 

சம்யுக்தாவை நான் நேசிக்கிறேன். ஆனால், அந்த நேசம் அவளை ஒரு தனிமனிதராக மதிக்கத் தவறிவிட்டது. ஒரு குழந்தையைச் சுமக்கும் தாயாக அவளைக் கொண்டாட நினைக்கும் என் மனம், அதே சமயம் அவளது கனவுகளைக் கருவிலேயே கலைக்க நினைக்கும் குரூரத்தைச் செய்கிறது.

 

​வீட்டு வாசலில் வண்டி நின்றது. உள்ளே சம்யுக்தா இருப்பாள். அவள் கண்களில் இப்போது என்ன இருக்கும்? என் மீதான காதலா அல்லது நான் இழைத்த அநீதிக்கான மௌனமா? என் மனதிற்குள் கேள்விகள் வரிசைக்கட்டி நின்றன.
​முடிச்சுகள் அவிழப் போகின்றனவா அல்லது இன்னும் இறுக்கமாகப் போகின்றனவா என்பது, நான் அவளிடம் கேட்கப்போகும் முதல் கேள்வியில் தான் அடங்கியிருக்கிறது.

 

“அனைவர் கண்களும்
உன்னையே பார்ப்பதாய்..
உன்னழகில் லயிப்பதாய்..
உன்னையே கவர முற்படுவதாய்..
மனம் சஞ்சலமாகுதடி..!
என்ன செய்வது கண்மணி..
நிறைய ஆண்கள் கொண்ட இவ்வுலகில்..
நீ மட்டும் தான்..
காதலிக்கத் தகுந்த
ஒரேயோர் பெண்ணாகத் தெரிகிறாய்..”

(யாத்திரியின் வரிகளிலிருந்து)

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்