
சலனம்-19
நான் எனக்குள் யோசித்துக் கொண்டு நிற்கையில், ஏதோ சத்தம் கேட்டது.
யாரோ வாக்குவாதம் செய்வதைப் போன்ற சத்தம். சமுத்ரா குழந்தையோடு உள்ளே சென்றுவிட்டாள்.
நான் தனியாக நிற்கிறேன். இங்கே யார் சத்தம் கேட்கிறது? எங்கிருந்து கேட்கிறது? என யோசித்தபடியே, தேடினேன். நுழைவாயிலிலிருந்து சத்தம் வருவது புரிந்தது. செக்யூரிட்டிக்கு அழைத்து விபரம் கேட்டேன்.
“சார்! உங்களைத் தெரியும்ன்னு சொல்லி, உள்ளே விடச் சொல்லி பிரச்சனை பண்ணுறாங்க சார்!” என செக்யூரிட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சிசிடிவி கேமிரா மூலமாக, வந்திருப்பது யாரெனத் தெரிந்துக் கொள்ள முயன்றேன்.
“பேர் என்ன சொன்னாங்க?”
“ஆனந்தின்னு சொல்றாங்க சார்! மதுரையிலிருந்து வந்துருக்காங்களாம்!” என என் செவிக்குள் கேட்ட அதே நேரம், என் அன்னை நுழைவாயிலில் நின்றுக் கொண்டிருக்கும் காட்சி, கணிணித் திரையில் விரிந்தது. அதைக் கண்டு, தூக்கிவாரிப் போட நிமிர்ந்தேன் நான்.
இனி என்னென்ன நடக்கப் போகுதோ? அம்மாவை யார் இங்கே வரச் சொன்னது? அப்போது, நான் அலைபேசியில் அழைத்த போது, சித்தார்த் ஏதோ சொல்ல வந்தானே? எனத் தாமதமாகத்தான் எனக்குப் புரிந்தது.
இனி தாமதிக்க நேரமில்லை எனப் புரிந்து, வாயில் காப்பாளனிடம், அவர்களை உள்ளே அனுப்பச் சொல்லிவிட்டு, அவசரமாய் சமுத்ராவை நோக்கி ஓடினேன்.
“சமுத்ரா!” மெல்லிய குரலில் விளித்தபடி கதவைத் தட்டினேன்.
“இப்போ எதுக்கு கதவைத் தட்டினே.? குழந்தை தூங்கிட்டு இருக்கா!” என பதில் சொல்லிவிட்டு, அவள் என்னைப் பார்க்க, நொடி நேர தயக்கத்தின் பின்,
“அம்மா வந்திருக்காங்க!” எனச் சொல்லிவிட்டு நிறுத்தினேன்.
“அதுக்கு நான் என்ன பண்ணணும்?” சாதாரணமாய்க் கேட்டாள் அவள். அவள் கேட்பதும் சரிதான். அவளால் என்ன செய்ய முடியும்? ஆனால் சம்யூ போலவே இருக்கும், சமுத்ராவைப் பார்த்தால், என் தாய் என்ன சொல்வார், என எனக்கு பயமாக இருந்தது.
“அது.. ம்ப்ச்! அம்மா எதாவது பேசினாங்கன்னா பதிலுக்கு எதுவும் பேசிடாதே ப்ளீஸ்..!” இதற்குமேல் என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை.
“அது அவங்க பேசுறதைப் பொருத்தது. அவங்க பேச்சு என்னைப் பத்தினதா இருந்தால், நான் கண்டிப்பா பதில் சொல்லத்தான் செய்வேன். அது யாராக இருந்தாலும், எனக்கு கவலை இல்லை!” சொல்லிவிட்டு கதவை அடைத்துவிட்டாள். இனி என்ன நடக்குமோ? என யோசித்தபடி நான் நின்றிருக்க,
“என்னடா! எங்களை உள்ளே விடக் கூடாதுன்னு அந்த வாட்ச்மேன் கிட்டே சொல்லி வச்சிருக்கிறியாக்கும்.?!” என உள்ளே வந்தும், வராததுமாக என் தாய் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, என் தந்தை பின்னால் வர, ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனேன் நான்.
“இங்கே எதுக்கு வந்தீங்க?” நான் கேட்கக் கூடாதென நினைத்தும், அந்தக் கேள்வியை என்னை அறியாமல் கேட்டுவிட்டேன்.
“இதென்னடா கேள்வி? புள்ளையை வச்சுட்டு ஒத்தையில் கஷ்டப்படுறன்னு உங்க ஆத்தா புலம்பிட்டே கிடக்குறா! நீ என்னடான்னா ஏன் வந்தோம்ன்னு கேட்கிற? நீ செஞ்ச காரியத்துக்கு, இம்புட்டு தூரம் இறங்கி வந்தோமேன்னு சந்தோஷப்பட்டுக்க!” எனச் சொன்னார் என் தந்தை தாமோதரன்.
நானோ, என்ன சொல்வதெனத் தெரியாமல், விழித்துக் கொண்டு நின்றேன். இப்போது, இவர் சமுத்ராவைப் பார்த்தால் என்னவாகும்? என யோசித்தபடியே விழித்துக் கொண்டு நிற்க,
“என்னடா இப்படி மசமசன்னு நிற்கிறே? புள்ளையை எங்கே டா? நாங்கதேன் கோபத்தில் இருக்கோம்ன்னா, நீயும் அப்படியே விட்டுருவ. பொண்டாட்டி புள்ளைகளைக் கூட்டியாந்து காட்டணும்ங்கிற எண்ணம் கூட உனக்கு இல்லையா? இப்படியே ஒதுங்கிடலாம்ன்னு நினைச்சுட்டியாக்கும்? அவளும், எனக்கென்னன்னு புள்ளையை விட்டுட்டு போய்ச் சேர்ந்துட்டா. நாங்க பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தால், இதெல்லாம் நடந்திருக்குமா? இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகலை! நம்ம ஊருக்குள்ளே உனக்கு பொண்ணு கொடுக்க தயாராத்தேன் இருக்காக! புள்ளையை நாங்க வளர்த்துக்கிறோம். நீ கல்யாணம் பண்ணிப்புட்டு நிம்மதியாய் இரு. நம்ம கவி பக்கம் கூட, ஒரு பொண்ணு இருக்குதாம். பேசச் சொல்லுவோமா?” என என் தாய் கேட்க,
“ம்மா! இதுக்குத்தான் இங்கே வந்தியா? ஒரு கல்யாணம் பண்ணியே, நான் பட்டதெல்லாம் போதும். நீங்க முதலில் கிளம்புங்க! என் குழந்தையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.!”
கொஞ்சம் எரிச்சலாகத்தான் சொன்னேன். இருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கி விடுவார்களோ? என்ற பயம் எனக்குள் இருந்தது.
இப்படியெல்லாம் யார் வாழ்விலாவது நடக்குமா? எனத் தெரியவில்லை. மனைவி இறந்து போவதும், அவளைப் போலவே இன்னொருத்தி வந்து நிற்பதும், என் குழந்தை அவளை அம்மா என்பதும், யோசித்துப் பார்த்தால்., என் வாழ்க்கையே ஏதோ கற்பனைக் கதையைப் போலத்தான் இருந்தது. நானே என்ன நடக்கிறது? என அவதானிக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்க, என் பெற்றோர் வந்து நின்றதெல்லாம் எனக்கு பேரிடி தான். ஆனால் இதை சமாளித்து தான் தீர வேண்டும். அவந்தியின் அப்பாவாய், இப்போது உறுதியாய் நின்றால் மட்டுமே, என் நிலையைப் புரிய வைக்க முடியும் என்பது எனக்குப் புரிந்தது.
“பார்த்தீங்களா? எப்படி பேசுறான்னு? விட்டால் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவான் போல.. இவனுக்குப் போய் நல்லது செய்யணும்ன்னு வந்தோம் பார்த்தீங்களா? நம்மளைச் சொல்லணும்!” என என் தாய் சடைத்துக் கொள்ள,
“என்னடா நினைச்சுட்டு இருக்குறே? பச்சைப் புள்ளையை வச்சுட்டு எப்படி தனி ஆளாய் சமாளிக்க முடியும்? இதுக்குத்தேன் பெரியவங்க சொல்றதைக் கேட்கணும். நம்ம ஊரு புள்ளைகளா கட்டியிருந்தால் இதெல்லாம் தேவையா? இப்போ பாரு நீதேன் ஒத்தையில கஷ்டப்படுற!” என என் தந்தையும் சொல்ல, எனக்குக் கோபம் தான் வந்தது.
இவர்களின் விருப்பத்தை என் மீது திணிக்க முற்படுகிறார்கள் என்பது புரிந்தது. நான் இப்போது மட்டும் பேசாமல் விட்டால், ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் பேசவே முடியாது. முன்பு போல் தலையை ஆட்டிவிட்டு, என் வாழ்க்கையின் சாவியை அவர்கள் கையில் தர எனக்கு விருப்பமில்லை.
“ப்பா! எனக்குப் பிடிச்ச பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளைத் தவிர, எனக்கு வேறு யாரையும் பிடிக்குமான்னு தெரியலை. இதை நீங்க கால் பண்ணி கேட்டிருந்தாலே நான் சொல்லியிருப்பேன். இங்கே ஏன் தேவையில்லாமல் வந்தீங்க?”
“டேய்! அவரு உங்க அப்பா டா!”
“நான் இல்லைன்னு சொல்லலியேம்மா! அப்பாவாக இருந்தாலும், என் மனசில் இருக்கிறதை நான் சொல்லித்தானே ஆகணும். இத்தனை நாளும், எனக்கு பிடிச்ச விஷயத்திற்காக, நீங்க பேசியிருக்கீங்க! இனிமே நானே பேசிக்கிறேன். அப்பா அம்மா கிட்டே வெளிப்படையாய் இல்லாத பிள்ளை, வேறு யாரிடமும் வெளிப்படையாய் இருக்க முடியாது. இப்படியே பழகி, யார்கிட்டேயுமே என் மனசை வெளிப்படையாய் சொல்ல முடியாமல், என்னோட விருப்பங்களை, ஆசைகளை, கோபத்தை, எல்லாத்தையும் அவள் மேலே திணிச்சு. அவளை இல்லாமல் பண்ணிட்டேன். இனிமே நான் யாரையும் இழக்க விரும்பலைப்பா! எனக்கு என் பொண்ணு வேணும். அவளுக்காவது நல்ல அப்பாவா நான் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். இதுக்கு மேல், எதுவும் பேச வேண்டாம் ப்பா!” என நான் பேசியதைக் கேட்டு, என்னைப் பெற்றவரே ஒருநொடி அசந்து நின்றுவிட்டார். அவர் கடைசியாய் என்னைப் பார்த்தப் பார்வையில் என் மனம் அவருக்குப் புரிந்துவிட்டது என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன்.
“ஆனந்தி! நாம கிளம்புவோம் வா! மத்ததெல்லாம் விக்ரம் பார்த்துப்பான்.!” என அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குள் புது நம்பிக்கையைப் படரவிட்டது. இதே போல், சம்யூவிடமும் வெளிப்படையாய் பேசியிருக்கலாம். காலம் கடந்த ஞானோதயம் வந்து தொலைத்தது.
“என்னங்க! அவன்தான் சொல்றான்னா, நீங்களும் சரின்னு கிளம்ப சொல்றீங்க?”
“அவன் பார்த்துப்பான்னு சொல்றேன்ல்ல.. கிளம்பு! எந்த முடிவாய் இருந்தாலும், நாம அவன் மேலே திணிச்சதாக இருக்க வேண்டாம். என்ன ஏதுன்னு ஆழ்ந்து அனுபவிச்சு, தீர்ந்து, தெளிந்து அவன் வரட்டும்!” என என் தந்தை தாமோதரன் சொல்ல,
“ப்பா!” என ஆதூரமாய் அணைத்துக் கொண்டேன் நான். நெடுநாளைக்குப் பின் என் மனம் நெகிழ்ந்திருந்தது. எனக்கும், என் தந்தைக்கும் நடுவே இருந்த அந்தக் கண்ணுக்குத் தெரியாத சுவர் கரைவதை என்னால் உணரமுடிந்தது. இனிமே எனக்கும் என் தந்தைக்கும் இடையே இடைத்தரகராய், என் தாய் தேவையில்லை. எதுவாக இருந்தாலும், என்னால் நேரடியாகப் பேச முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. இதுவே நான் பழைய விக்ரமாக நான் இருந்திருந்தால், நிச்சயமாய், என் மனதைச் சொல்லாமல் மறைத்திருப்பேன். அவர்கள் பார்த்தப் பெண்ணைத் திருமணம் செய்ய சம்மதித்தது போல, அப்போதைக்கு சமாளிக்க சரியென்று சொன்னாலும் சொல்லியிருப்பேன். ஆனால், நான் ஒரு தகப்பனாய் நின்று யோசிக்கையில் தான் என் தந்தையை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“எதுவா இருந்தாலும், ஃபோன் போடு விக்ரம்! நாங்க இருக்கோம்!” என என்னை விலக்கி, விடைபெற முற்பட,
“ப்பா! ஒரு நிமிஷம்!” தேக்கி நிறுத்தினேன். அவர் கேள்வியாய் என்னைப் பார்த்தபடி நிற்க,
“சமுத்ரா!” கதவைத் தட்டி அவளை வெளியே அழைத்தேன். இப்போது, சமுத்ராவை அறிமுகப்படுத்துவதில், எனக்கு துளி தயக்கம் இல்லை. கதவைத் திறந்து, தலையை வெளியே நீட்டிப் பார்த்துவிட்டு, குழந்தையோடு வெளியே வந்தாள் சமுத்ரா. என் தாய் தந்தையின் கண்களில் தொக்கி நின்ற கேள்வியை என்னால் உணர முடிந்தது.
“ப்பா! இவங்க சமுத்ரா! என் மனைவி சம்யூவோடு கூடப் பிறந்தவங்க! இப்போதைக்கு, என் பொண்ணு அம்மாவா நினைச்சுட்டு இருக்கிறது இவங்களைத் தான். இவங்களுக்கும், எனக்கும் என்ன உறவுன்னு கேட்டு கொச்சைப் படுத்திடாதீங்கப்பா! இது என்ன உறவு முறை? இதை எப்படி சொல்லன்னு கூட எனக்குத் தெரியலை. இது மாறுமா? இல்லை இப்படியே இருக்குமா? எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் என் பொண்ணுக்கு அம்மாவா இருக்கணும்ங்கிற ஒரே காரணத்திற்காக, அவங்க என் மனைவியாய் இருக்கணும்ன்னு நான் நினைக்கலை. ஏன்னா என் மனைவி என் சம்யூ மட்டும் தான். உருவம் ஒண்ணா இருக்கலாம்.. மனசு வேற வேற தானே?” என் பெற்றோரிடம் விளக்கம் சொல்வதைப் போல், சமுத்ராவிற்கு தான் விளக்கம் சொன்னேன்.
நான் சொன்னதைக் கேட்டு, அவள் பார்வை ஒருநொடி என் மீது அதிகமாக நிலைத்துப் படர்வதைக் கூட, என்னால் உணர முடிந்தது.
“விக்ரம்! இதையெல்லாம் எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியலை. நீ சொல்ற மாதிரி விஷயங்களை, கல்யாணத்திற்கு முன்னாடி ஒரே வீட்டில் ஒண்ணா இருக்கிறது.. என்ன உறவுன்னே தெரியாமல், ஒரே வீட்டில் இருக்கிறதையெல்லாம் ஏத்துக்கிற விசாலமான மனநிலை எங்கக் கிட்டே இல்லை. ஆனால், உன் வாழ்க்கை சந்தோஷமா மாறினால் எங்களுக்கு சந்தோஷம் தான். நீ உன் மனசை இவ்வளவு வெளிப்படையா என்கிட்டே சொன்னதே போதும்.!” எனச் சொல்லிவிட்டு, என் தாயைக் கூட்டிக் கொண்டு கிளம்பியிருந்தார் என் தந்தை. அவர்கள் கிளம்பி முழுதாய் சில நிமிடங்கள் கடந்தப் பின்பும், என்னைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் சமுத்ரா.ஆழ்கடலை தனக்குள் சிறை செய்து வைத்திருக்கும், அவளின் நீல நிறக் கண்களில் மிருதுவான மென்மை குடியேறியிருந்தது.
“இரு என்று ஏங்கி
அழ ஆளில்லாமல்
போகும் நிமிஷத்திலிருந்து தான்,
ஒருவனுக்கு..
ஆயுள் ரேகை அழியத் துவங்குகிறது
உடம்பால் சாவது அல்ல
சாவு..!”
(நேசமித்ரன்)

