Loading

இதயம்-23

ஓடி வந்து மென்கரங்களால், தன் அன்னையைத் தாங்கி, பிடிமானத்திற்காய் சுவற்றில் சாய்ந்து நின்ற சம்யுக்தாவிற்கு உலகமே தலைகீழாய் சுழன்றது.

தன் அன்னையைப் பார்த்து சில நாட்களாகிவிட்ட காரணத்தால், எதேச்சையாய் பார்க்க வந்தவளுக்கு, தன் தந்தை சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுமே, இதயத்தை கோடாரி கொண்டு வெட்டியதைப் போலத்தான் வலித்தது.

அவளையறியாமலே கண்களில் நீர் தேங்கியது.
இத்தனை நாட்களும், அவள் நினைத்து வைத்திருந்த அத்தனையும் அவர் வார்த்தைகளில் தூள் தூளாய் நொறுங்கிச் சிதறியது.

ஆதனின் அன்னை இறந்து போன காரணத்தினால், தன் அன்னையை மணந்ததாகவும், தன் அன்னையை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆதன் விலகியதாகவும் தான் அவள் நினைத்திருந்தாள். சில முறைகள் ஆதன் அவள் முன்னிலையிலேயே இதைப்பற்றி, தன் தாயின் இறப்பபைப் பற்றி பேசியிருந்த போதும் கூட, ஏதோவொரு ஓரத்தில் சின்னஞ்சிறிய நம்பிக்கை ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.

ஆனால் சற்று முன் அவர் வாயாலேயே அவள் கேட்ட வார்த்தைகள், அவளின் துளி நம்பிக்கையையும், கொஞ்சம் நஞ்சமிருந்த மரியாதையையும் கூட, காற்றில் தீட்டிய ஓவியமாய் காணாமல் போகச் செய்திருந்தது.

“ஏன்? ஏன் இப்படி பண்ணீங்க? உங்களுக்கு எல்லாமே பணம் தானா? யாருக்குமே உண்மையாய் இருக்க மாட்டீங்களா? உங்க சுயநலம் மட்டும் தான் முக்கியம். நீங்க பிரபலமாய் இருக்கிறதுக்காக யாரை வேணும்னாலும் என்ன வேணும்ன்னாலும் பண்ணுவீங்க தானே?”

“ஏய்! ச்சீ, வாயை மூடு! எனக்கு பணம் முக்கியமில்லை! பதவி, என்னோட பதவி மட்டும் தான் முக்கியம். பொண்டாட்டி, மண்ணாங்கட்டின்னு பார்த்துட்டு இருந்தால் வாக்கையில் எப்படி முன்னேறுவது?” ஏகப்பட்ட நக்கல் குடியிருந்தது அவர் குரலில்.

“உண்மையாய் உழைச்சு, நேர்மையாய் முன்னேறணும்! உங்களை மாதிரி குறுக்கு வழியில் இல்லை!”

“நான் குறுக்கு வழியில் தான் முன்னேறினேன். கற்பகத்தோட சாவை வைத்து, அனுதாப ஓட்டுக்களை வச்சு தான் ஜெய்ச்சேன். இப்போ அதுக்கு என்னங்கிறே? நான் குறுக்கு வழியில் சம்பாதிச்ச காசில் தான், நீ இப்படி வளர்ந்து நிக்கிறே! நினைச்ச படிப்பு, ஆடம்பரமான ட்ரெஸ், நகை அதெல்லாம் எங்கிருந்து வந்துச்சு? என் பணம் தான். அவ்வளவு ஏன், பப், க்ளப், பார்ட்டின்னு என்ஜாய் பண்ணினே, அதுவும் நான் குறுக்குவழியில் சம்பாதிச்ச காசு தான். நான் சம்பாதிச்ச பணத்தோட பலனை அனுபவிக்கும் போது, நல்லா இருந்துச்சு, இப்போ எல்லாம் கையை விட்டுப் போனதும், இந்த அப்பா பணம் கையைக் கடிக்குதா சம்யூ? இப்போவும் இப்படி மயங்கி விழுந்துக் கிடக்கிற உன் அம்மாவை காப்பாத்தனும்னா அதுக்கும் என் பணம் தான் வேணும்! இல்லைன்னா செத்துடுவா! என் பணம் வேணாம்னா அவ சாகட்டும் விடு! நஷ்டம் எனக்கில்லை உனக்கு மட்டும் தான்.!”

“இப்படி பாவப்பட்ட பணத்தில் நான் வளர்ந்தேன்னு நினைச்சால் எனக்கு அசிங்கமா இருக்கு. கட்டின பொண்டாட்டி இப்படி கிடக்கும் போது கூட, பதறாத நீங்களெல்லாம் மனுஷனே இல்லை. சுயநலவாதி! நம்ப வச்சு கழுத்தறுக்கிற சுயநலவாதி.!”

“ஆமா! நான் சுயநலவாதி தான் சம்யூ! எனக்கு என் பதவி தான் முக்கியம். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமா திரிஞ்சுட்டு, சட்டுன்னு பதவி இல்லாமல் இருக்க முடியாது. அதைவிட முக்கியமா, இவ விழுந்துக் கிடக்கிறாள்ன்னு நான் ஏன் பதறணும்? இனிமே எனக்கு இவள் தேவையில்லை! அமைச்சர் பொண்டாட்டின்னு பெருமைக்காகத் தானே, பத்து வயசு பையன் இருக்குன்னு தெரிஞ்சும் உங்க அம்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவள் சுயநலவாதி இல்லை, நான் சுயநலவாதியா? ” ஏளனப் புன்னகையுடன், அவர் சொன்னதும் அதிர்வுடன் பார்த்தாள் சம்யுக்தா.

இப்போதெல்லாம் நல்லவர்களா? கெட்டவர்களா? எனப் பார்த்தெல்லாம் நட்போ, உறவோ, துவங்குவதில்லை. மாறாக, அவன் நமக்கு எந்த வகையில் பயன்படுவான்? அவனால் என்ன இலாபம் என்பது தான் நட்பையோ, உறவையோ தீர்மானிக்கிறது. அவர்கள் காரியம் முந்ததும், அந்த உறவும் தேவையற்றதாய் மாறிவிடுகிறது. இங்கே சதாசிவம் அப்படித்தான் நினைத்தார்.

அவரின் பற்று, மனைவி மக்களின் மீது அல்லாமல், பதவி மீதும், பணத்தின் மீது மட்டுமே இருந்தது.

“எல்லாப் பெருக்கமும் வாழ்வு
எல்லாச் சுருக்கமும் சாவு
அன்பு என்பது பெருக்கம்.
சுயநலம் என்பது சுருக்கம்.
எனவே, அன்புடையவனே
வாழ்பவன்.
சுயநலமுடையவன்,
செத்துக் கெண்டிருக்கிறான்..!” என்ற விவேகானந்தரின் மொழிக்கேற்ப, சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருந்தார் சதாசிவம்.

தன் நிலை மறந்து, பிறர்நிலை கண்டு, விமர்சித்துப் புன்னகைக்கும் அற்ப உயிரினம் மனிதன் மட்டும் தான்.

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதனுக்குத்தான் புன்னகைக்கத் தெரியும். ஆனால், அந்தப் புன்னகையையே, ஏளனமாய், நக்கலாய், சுயநலமாய், கேலியாய், ஆங்காரமாய், எத்தனை விதமாய், மற்றவனைப் பார்த்துச் சிரிக்கிறான் மனிதன்? தன்னைப் பார்த்துச் சிரிக்க இன்னொருவன் தன் முதுக்குக்குப் பின்னால் இருப்பான் என்பதை மறந்துவிட்டு, விலங்குகளோடு ஒப்பிட முடியாத அத்தனையும் செய்கிறான் மனிதன்.

எல்லாவற்றிற்கும் காரணம் சுயநலம் மட்டும். தான் மட்டும் என்கிற சுயநலம். அந்தச் சுயநலம் தான், அடுத்தவனை தன் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தூக்கி விசச் சொல்கிறது.

“இனிமே நாங்க யாரும் உங்களுக்குத் தேவை இல்லை தான். பணத்தையும், புகழையும் மட்டுமே குறிக்கோளா வச்சு, உறவுகளைப் பகடையாக்கி விளையாடுற உங்களுக்கு நாங்க தேவையில்லை தான்.” எனக் கோபமாய் சொன்னவள், தன் அன்னையைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வெளியேறினாள்.

கொஞ்சம் பருமனான உடல்வாகோடு இருந்த காயத்ரியை, தோளில் சாய்த்து தூக்கி வருவதென்பது, அத்தனை எளிதாக இல்லை. இரண்டடி எடுத்து வைப்பதற்கே, நிறைய பிரயாத்தனப்பட வேண்டியிருந்தது. நகர்ந்து, நகர்ந்து வாசல் வரை வந்துவிட்டாள் தான். ஆனால், அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டியது.

சதாசிவம் பேசியதில், கோபமும் அவமானமும் மிக, தன் கைப்பை, அலைபேசி, அத்தனையும் சதாசிவம் வீட்டிலிருந்த மேஜையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள். எல்லாம் அவர் பணம் தானே? அதை எடுத்து தன் தாய்க்கு செலவு செய்வதற்கு அவமானமாய் இருந்தது.

ஆட்டோவிற்குக் கூடப் பணமில்லாமல், கண்களில் கண்ணீர் வழிய, எங்கோ வெறித்தபடி நின்றிருந்த சம்யுக்தாவிற்கு, இப்போது தான் வாழ்க்கை என்பது என்ன என்றே கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது. ஆட்டோவிற்குக் கூடப் பணமில்லாமல் தாயைத் தோளில் தாங்கியபடியே நின்றிருந்தவளின் முன்னே விருட்டென வந்து உறுமலுடன் நின்றது அந்த இருசக்கர வாகனம்.

பயம் மேலோங்க, சட்டென நிதானித்து ஓரடி பின்வாங்குவதற்கே, அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

“நீங்க இங்கே என்ன பண்ணுறீங்க சம்யூ?” பரிட்சயமான குரல் செவிதனில் விழவும், நிமிர்ந்து எதிரில் நின்றவனைப் பார்த்தாள் அவள்.

“என்ன ஆச்சுங்க? ஏன் இப்படி நிக்கிறீங்க? ஆன்டிக்கு என்ன ஆச்சு?” பதற்றமான அவன் குரல், இவள் செவிதனை மோதியது.

“தெரியலை ஷியாம்! அம்மா.. மயங்கி விழுந்துட்டாங்க!” தொண்டை அடைக்க அவள் சொன்னதும், சட்டென எதிரில் வந்த ஆட்டோவை மடக்கி நிறுத்தியவன்,

“உள்ளே ஏறுங்க! ஆன்ட்டியை நான் பிடிச்சுக்கிறேன்!” காயத்ரியை தன் தோளில் தாங்கியபடியே சொன்னான் ஷியாம்.

“இல்லை..! அது.. வந்து காசு இல்லை ஷியாம்!” என அவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாது அவள் சொல்ல, கண்ணீர் கரையுடைத்து அவளின் கன்னத்தை ஸ்பரிசிக்கத் துவங்கியிருந்தது. பணம் இல்லையென மூன்றாம் நபர் முன் நிற்பதே அவளுக்கு அவமானமாய் இருந்தது.

“பணமெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் சம்யூ! முதலில் உங்க அம்மாவைத்தான் பார்க்கணும். நீங்க உள்ளே உட்காருங்க!” வலுக்கட்டாயமாய் அவளை அமர வைத்துவிட்டு, சம்யூவின் மடியில் காயத்ரியை படுக்க வைத்தவன், ஆட்டோவை முன்னே அனுப்பிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தான்.

*********

ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த சம்யூவின் கண்ணீர், அவள் மடியில் மயங்கிக் கிடந்த ,காயத்ரியின் கன்னத்தில் விழுந்தது.

முதன்முதலாய் ஓர் அவமானம் வாழ்க்கையென்றால் என்னவென்று அவளுக்கு உணர்த்தியிருக்கிறது. இத்தனை நாளாய் தந்தையையோ அல்லது தமயனையோ நம்பி இருந்தவளுக்கு தன்னை நம்பியும் நாலு காசு வேண்டுமென்று முதன்முறை தோன்றியது.
சில நேரங்களில், சில அவமானங்கள் தான் வாழ்க்கைப் பாதையை மாற்றி வடிவமைக்கின்றன. நம்மைப் பற்றிய புரிதலை நமக்கே ஏற்படுத்துகின்றன.

வாழ்க்கையில் சில அவமானங்கள் அவசியமானது தான். காயங்கள் தந்துவிட்டுப் போகும் அழியாத வடுக்களைப் போலவே, சில அவமானங்கள் வாழ்க்கைப் பாடங்களைத் தந்துவிட்டுப் போகும்.

பிறரால் காயப்பட்டவர்களை விட, பிடித்தவர்களால், காயப்பட்டவர்கள் தானே அதிகம். சம்யூவிற்கும் தன் தந்தையை ரொம்பவே பிடிக்கும். அவள் கேட்ட எதையுமே அவர் இதுவரை மறுத்ததே இல்லை. ஆகாஷ் விஷயத்திலும் கூட, அவளுக்குப் பிடித்திருப்பதால் அவர் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதாகத்தான் அவள் நினைத்திருந்தாள்.

ஆனால், ஆகாஷின் உண்மை முகம் தெரிந்த பின் தான், இது முழுக்க முழுக்க திட்டமிடல் என்பது அவளுக்குப் புரிந்தது. அதுவும், அவனோடு அவளிருந்த இரகசிய தருணங்களின் காணொலிக் காட்சியாய் பதிந்து வைத்துக் கொண்டு அவன் மிரட்டிய போதும் கூட, அவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்திய அன்று தான், தந்தையின் மீது முதன்முதலாய் வெறுப்பின் விதை அவள் இதய இடுக்குகளில் விழுந்தது.

ஆனால், இன்று அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையுமே, உளி கொண்டு உடைத்ததைப் போன்று வலிக்கச் செய்தது. அவர் மீதான வெறுப்போ, கிளைபரப்பி உள்ளம் முழுதும் நிறைந்துக் கிடந்தது.

இந்த நாள் வரையிலுமே, பணத்தைப் பற்றியோ, எதிர்கால வாழ்வைப் பற்றியோ, எதையும் சிந்திக்காது, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு இருந்தவளுக்கு வாழ்க்கையின் மறுபக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் துவங்கியது. தனக்கே இவ்வளவு வலிக்கிறதென்றால், இத்தனை வருடமாய் அவரை நம்பி வாழ்ந்த தன் னஅன்னைக்கு எப்படி வலித்திருக்கும்? இனியும் இந்த நிலை கூடாது. தனக்கென்று ஓர் பணியைத் தேடிக் கொண்டு, தன் தாயை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் முளைத்திருந்தது.

‘நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்ம்மா! எனக்காக எழுந்து வந்துடு!’ மனதோடு பேசிக்கொண்டாள். மனதில் புதிதாய் நம்பிக்கை முளைத்திருந்தது.

இதெல்லாம் யாரோ சொன்ன அறிவுரையாலோ, எடுத்துரைத்தலிலோ நிச்சயமாய் வந்திருக்காது. இப்படிப்பட்ட தெளிவும் நம்பிக்கையும், அவளிடம் குறுகிய காலத்தில் வந்ததற்கு காரணம், அவள் பட்ட அவமானமும், அனுபவமும் தான்.

அதற்குள் மருத்துவமனையும் வந்திருக்க, அவசரமாய் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மருத்துவமனை ஊழியர்களை அழைத்துவந்து, காயத்ரியை உள்ளே அழைத்துப் போக உதவினான் ஷியாம்.

காயத்ரி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் சம்யுக்தா. கண்களில் கண்ணீர் குளம் கட்டி இருந்தது. அழக் கூடாதென்று நினைத்தாலும், தன்னால் அழுகை வரும்போல் இருந்தது.

“சம்யூ! ஏன் அழறீங்க.? ஆன்ட்டிக்கு ஒண்ணும் ஆகாது. ப்ளீஸ் அமைதியாய் இருங்க!”

“எனக்கு பயமா இருக்கு ஷியாம்! ஹார்ட் அட்டாக் அது இதுன்னு என்னென்னவோ சொல்றாங்க! அம்மாவுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா..!” சொல்லும் போதே தொண்டை அடைத்து வார்த்தைகள் வர மறுத்தது அவளுக்கு.

“ஒண்ணும் ஆகாது! ஆன்ட்டிக்கு மைல்ட் அட்டாக் தான். கொஞ்சம் கேர் ஃபுல்லா பார்த்துக்கிட்டால் போதும். பயப்படாதீங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆன்ட்டி எழுந்து உட்கார்ந்து உங்களைத் திட்டப் போறாங்க பாருங்க!” புன்னகையோடே சொன்னான் ஷியாம்.

“நிஜமா அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது தானே?”

“நிஜமா, ஒண்ணும் ஆகாது.!”

“ரொம்ப தேங்க்ஸ் ஷியாம்! நீங்க மட்டும் இல்லைன்னா நான் என்ன பண்ணிருப்ன்னு தெரியலை. நீங்க இதுவரை செலவு பண்ணின எல்லாத்தையும் கணக்கு வச்சிக்கோங்க, நான் ஒருநாள் திருப்பி கொடுத்துடுறேன்.!”

“அதெல்லாம் பொறுமையாய் பார்த்துக்கலாம் சம்யூ! என்னை இப்படி மூணாவது மனுஷன் மாதிரி தள்ளி நிறுத்தாதீங்க! ஒருவேளை, வாஹினி உதவி பண்ணியிருந்தாலும், இப்படித்தான் சொல்லியிருப்பீங்களா?” அவனின் மனதிற்குள் ஆல விதையாய் விழுந்திருந்தவளின் விலகல் அவனை ஏதோ செய்தது.

ஏனோ, இந்தச் சிறு பெண்ணை பார்க்கும் போதெல்லாம் இனம் புரியாத ஏதோவொரு உணர்வு அவனை ஆட்டிப் படைத்தது. இதுவரை யாரிடமும் தோன்றாத உணர்வு. சொல்லவும் முடியாமல், மெல்லவும் , தடுமாற்றத்தோடு அவளை அவன் பார்க்க,

“என்ன ஆச்சு ஷியாம்.? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? ஆர் யூ ஆல்ரைட்?” எனக் கேட்டாள் சம்யுக்தா.

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை, சொல்லலாமான்னு கூடத் தெரியலை. ஏதோ மேஜிக் மாதிரி ஃபீல் ஆகுது. உன் கிட்டே சொல்லவும் பயமா இருக்கு சொல்லாமல் இருக்கவும் என்னால் முடியலை!” என அவன் முகம் பார்த்து இடைவெளி விட்டவன்,

“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு சம்யுக்தா! இது காதலா என்னன்னு எனக்குத் தெரியலை. ஆனால் சத்தியமாய் ஈர்ப்பு இல்லைன்னு மட்டும் எனக்குத் தெரியும். நாம ரெண்டு பேரும் சேர்ந்தால் நம்ம வாழ்க்கை அழகா மாறும்ன்னு தோணுது.!” என ஷியாம் சொல்லி முடித்ததும், அதிர்வு தாங்கிய முகத்துடன் ஷியாமைப் பார்த்தவள்,

“இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுக்குறீங்களா ஷியாம்? எனக்கு உங்க இரக்கமோ, பரிதாபமோ தேவை இல்லை. நான் நானாகவே இருக்க விரும்பறேன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்..!” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென நடக்கத் துவங்கியிருந்தாள் சம்யுக்தா.

“சம்யூ! ஒன் மினிட்! இது சத்தியமாய் உன்மேல் இரக்கப்பட்டு நான் இதைச் சொல்லலை. அதோட, உன்மேல் நான் இரக்கப்படறதுக்கு என்ன அவசியம் இருக்கு? நீ நல்லா தானே இருக்கே?” அவன் கேட்ட கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சம்யுக்தா. கை, கால்களோடு நன்றாகத்தானே இருக்கிறாய்? முடமாய், செவிடாய், ஊமையாய் போய்விட்டாயா? உன்னைப் பார்த்து இரக்கப்பட என்ன இருக்கிறதென அவன் கேட்கிறான் எனப் புரியத்தான் செய்தது அவளுக்கு.

“இந்த வீர வசனமெல்லாம் கல்யாணத்திற்கு முன்னால் நல்லாத்தான் இருக்கும். கல்யாணத்திற்குப் பின்னால், நீங்க சொல்ற ஏதோ ஒருவார்த்தை என்னை சுருக்குன்னு குத்திடுச்சுன்னா, வாழ்க்கை மொத்தமும் நரகமாகிடும். வேணாம், எனக்காக உங்க வாழ்க்கையை நீங்க கெடுத்துக்க வேணாம்.!”

“பிடிச்சிருக்கு அதை சொல்றேன். இதில் என் வாழ்க்கை உன் வாழ்க்கைன்னு ஏன் சொல்றே? நம்ம வாழ்க்கை! நம்ம வாழ்க்கை கெட்டுப் போறதுக்கு என்ன இருக்கு?” மீண்டும் அவன் கேட்ட கேள்வியில் சம்யூவின் பொறுமை காற்றில் பறந்தது.

“இங்கே பாருங்க ஷியாம், எனக்கு இதில் விருப்பமில்லை, அவ்வளவு தான். திரும்ப திரும்ப கேட்டு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க! நான் எதாவது வேலைக்கு போய் என் அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும். அது மட்டும் தான் என் மனசில் இருக்கு. ஒருமுறை காதல்ன்னு சொல்லி நான் பட்டதெல்லாம் போதும். இன்னொரு முறை நம்பி ஏமாந்து போக என் கிட்டே சக்தி இல்லை.!” அவள் சொன்னதும், ஆழ்ந்து அவள் விழிகளைப் பார்த்தவன்,

“விருப்பமில்லைன்னா அதற்கான காரணம் எனக்கு தெரிஞ்சாகணும். காரணம் சொல்லு நான் போய்டுறேன்.!” அப்போதும் ஷியாம் அவளை விடுவதாய் இல்லை.

“காரணம், காரணம் தெரிஞ்சால் விட்டுடுவே தானே? சொல்றேன் நல்லா கேட்டுக்கோ..” எனச் சொன்னவள், சிறு இடைவெளிக்குப் பின்,

“உங்க ஆண் இனம் உருவாக்கி வச்ச, கோட்பாட்டுக்குள் நான் அடங்க மாட்டேன். ஒரு பொண்ணுக்கு உயிரை விட மேலானதுன்னு சொல்லி, சொல்லி வரையறுத்து வச்சிருக்கிற கற்பு என்கிட்டே இல்லை. இது தெரிஞ்சும் கூட, இப்போவும் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறீங்களா ஷியாம்?” நறுக்கு தெறித்தாற், போல், அவள் கேட்ட கேள்வியில், அசந்து போய் அசையாமல் நின்றிருந்தான் ஷியாம்.

இசைக்கும் ❤

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்