Loading

இதயம்-20

ஆதனின் மார்பில் சாய்ந்து கதறிக் கொண்ருந்த வாஹினியை சமாதானப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் ஆதன். தன் தொழிலின் மீது, அவளாய் உருவாக்கிக் கொண்ட அடையாளத்தின் மீது, எத்தனை பற்று வைத்திருக்கிறாள்? அவளின் ஒட்டுமொத்த பிடிமானமாய் இருந்ததே அவள் தன் உழைப்பும், தொழிலும் தான்.

அப்படி இருக்கையில் அவளுக்கு வலிக்கத்தானே செய்யும். அதுவும் நேர்மையாய் உழைத்து, தன் நிறுவனத்தின் பெயரை சென்னை முழுமைக்கும் தெரியும்படி செய்திருப்பதே பெரிய சாதனை தானே?

இந்தக் காலத்தில் நேர்மையாய் இருப்பவர்களை விட, நேரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து நடிப்பவர்களைத் தானே இந்த உலகம் நம்புகிறது. அதிலும் தனக்கென்று கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, தற்பெருமை பேசிக் கொண்டு திரிபவர்களின் மத்தியில், தன்னைப் போலவே தனித்து நின்று சாதித்துக் காட்டிய வாஹினியை அவனுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாய் பிடித்தது.
அவனின் வன்மையான கரம், அவளை மார்போடு இன்னும் கொஞ்சம் அதிகமாய் சேர்த்து இறுக்கியது. அவன் உதடுகள் இவள் உச்சந்தலையில் அழுத்தமாய் முத்தம் வைத்தது.

“அழுது கரைஞ்சது போதும் சிமி! என் சிமி, எந்த சூழ்நிலையிலும், அழாமல் தைரியமாய் துணிஞ்சு நிக்கணும்! எனக்கு அது தான் வேணும்.!”

“என் அடையாளமே அழிஞ்சு போச்சு. எனக்கு அடையாளமாய் இருந்த என் கேண்டி க்ரஷ் போச்சு! இனி நான் துணிஞ்சு நின்னு என்ன பண்ணப் போறேன். எல்லாத்துக்கும் காரணம் நீ தான் ஆதன். நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் இதுக்கெல்லாமே காரணம். பேசாமல் நீ அந்த நிஷாவையே கல்யாணம் பண்ணியிருக்கலாமே. ஆமா! அது தான் சரி! போ! நீ போய் நிஷாவைக் கல்யாணம் பண்ணிக்கோ! என்னை விடு! எனக்கு நீ வேணாம்! இன்னொரு இழப்பை தாங்க என் மனசுக்கோ, உடம்புக்கோ சுத்தமா சக்தியில்லை! நீ போய்டு ஆதன். நிரந்தரமாய் என்னை விட்டுப் போய்டு!” தன் போக்கில் உழற்றிக் கொண்டிருந்தவளின், முதுகை வருடி ஆசுவாசப் படுத்த முயன்றுக் கொண்டிருந்தான் ஆதன்.

“அவள் அந்தக் கடையோட ரொம்ப எமோஷ்னலா கனெக்ட் ஆகிட்டா! கேண்டி க்ரஷ் அவள் வாழ்க்கையில் ஓர் உறுப்பினர் மாதிரி. அதைத் தான் தன்னோட சொந்தமா அவள் நினைக்கிறாள். அது இல்லைங்கிறதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியலை. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!”

“என்னால் அவளைப் புரிஞ்சுக்க முடியும் ஷியாம்.! கிட்டத்தட்ட நானும் சிமியும் ஒண்ணு தான். எங்க ரெண்டு பேருக்கும் எங்க தொழில் தான் எல்லாமே..! அவள் வலியை என்னால் புரிஞ்சுக்க முடியுது! நீ கவலைப் படாதே ஷியாம். எந்தச் சூழ்நிலையிலும் நான் அவளைத் தப்பா நினைக்க மாட்டேன்.!” எனச் சொன்னவன்,

“இப்படியே அழுதுட்டே இருந்தால், சிமிக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு ஷியாம்.! இப்போ இவளைத் தூங்க வைக்கணும். தூங்கி எழுந்து கொஞ்சம் நிதானத்திற்கு வந்துட்டால் எல்லாம் சரி ஆகிடும்!” அவள் அழுகையைக் காண சகியாது தடுமாற்றத்தோடு பேசினான் ஆதன்.

“தம்பி! ரொம்ப சோர்ந்து தெரியறா! ஒரு டம்ளர் பால் தர்ரேன்! கொடுத்து அவளைத் தூங்க வைக்கிறீங்களா?” சாவித்ரி கேட்டதும், சம்மதமாய் தலையசைத்தான் அவன்.
அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு பொறுமையாய் பாலைப் புகட்டினான், இத்தனை நேர அழுகையின் காரணமாய், தொண்டை வறண்டு போயிருந்தவள் மடமடவென அவன் தந்த பாலை வாங்கிப் பருகிவிட்டு அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டாள் சிமி.

“வாஹினி ரூம் மேலே இருக்கு!” ஷியாம் மாடியை நோக்கிக் கை காட்ட, தான்னவளை கரத்தில் ஏந்திக் கொண்டு மாடியை நோக்கிப் போனான் ஆதன். அந்தச் சின்ன அறையின் படுக்கையில் அவளைக் கிடத்த முயல, அவனின் மார்புச் சட்டையைப் பிடித்துக் கொண்டு இறங்க மறுத்தாள் வாஹினி. தலை இட வலமாய் பலமாய் ஆடியது.
கட்டிலில் அமர்ந்து தன் மடிமீது அவளை அமர்த்திக் கொண்டவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு, கண்ணீர் உகுத்தாள் அவனின் கேண்டி க்ரஷ்!

“ஏய்! அழாதே சிமி! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் தான் உன் கண்ணீருக்கு காரணம்ன்னு குற்றவுணர்வா இருக்கு. எல்லாத்தையும் சரி செய்து உன் கையில் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு சிமி! என்னை நம்பறியா இல்லையா?” அவளின் முகம் நிமிர்த்தி கண்களுக்குள் ஊடுருவிக் கேட்டான் ஆதன்.
அவன் கண்களை அழமாய்ப் பார்த்தவளின், கண்களில் கரையுடைத்த கண்ணீர் கடகடவெனக் கன்னங்களில் வழிந்தது. அவளின் முகம் பற்றி தன் இரு பெருவிரல் கொண்டு அவள் கண்ணீர் துடைத்தவன்,

“ம்ப்ச்! அழாதே கேண்டி க்ரஷ்! உன் இழப்பு பெருசு தான். ஆனால், அதுக்காக அழுதுட்டே இருந்தால் எல்லாம் சரி ஆகிடாது. எல்லாத்தையும் நாம தான் சரி பண்ணணும் புரிஞ்சுக்கோ!” வார்த்தைக்கும் நோகுமோ என மெல்லியக் குரலில் சொன்னான் அவன்.

“எல்லாத்தையும் உன்னால் சரி பண்ண முடியுமா ஆதன்?” தொண்டை அடைக்கக் கேட்டாள் அவள். இத்தனை நேர அழுத்தமான மனநிலையும் சேர்ந்து கொஞ்சம் கோபத்தையும் அவளிடம் கூட்டியிருந்தது. அவளின் அடையாளத்தை அழித்து விட்டு, கொழுந்து விட்டெரிந்த நெருப்பானது, அவளுக்கு வேறொன்றை நினைவுபடுத்தவும் செய்தது.

“கண்டிப்பா உனக்காக நான் எல்லாத்தையும் சரி பண்ணுவேன் சிமி! என்னால் பண்ண முடியும்.!”

“எண்ட வாழ்க்கையை சரி பண்ணு ஆதன். நான் தொலைத்துக் கொண்டு வந்த எண்ட அம்மாவை, எண்ட அப்பாவை, உன்னால் திருப்பி தந்து விட முடியுமோ? நாங்கள் கடந்து வந்த பாதையை, நாங்கள் தொலைத்துவிட்ட எங்கள் அடையாளத்தை உன்னால் தந்துவிட இயலுமோ? ஒண்டும் இயலாதங்கில் இந்தக் கேள்வியே அவசியமற்றது ஆதன்!” அவள் பேசுவதின் சாராம்சமும், தமிழின் சாயலும் புரியாமல் நொடி நேரம் தடுமாறத்தான் செய்தான் அவன்.

அவள் கண்களில் தகித்துக் கொண்டிருந்த கனலுக்கான காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் ஆதன்.

“நீ என்ன பேசுறே சிமி? எனக்குப் புரியலை!”

“புரிந்து கொண்டு இருந்தீர்களனால், இப்படி கதைத்திருக்க மாட்டீர்கள் தானே? தமிழராய் பிறந்த காரணத்திற்காக மட்டுமே கருவறுக்கப்பட்ட சனங்கள் நாங்கள். பிறந்த மண்ணிலும், புகுந்த மண்ணிலும் அடையாளத்தைத் தொலைத்து விட்டு அநாதையாய் அலையும் அகதிகள் எண்டு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“சிமி!” அதிர்வின் ரேகைகள் அவன் முகத்தில் கிளை பரப்பத் துவங்க, முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்ப ஆரம்பித்தது ஆதனுக்கு.

“விசர் (பைத்தியம்) பிடித்து இவள் பிணாத்துக்கிறாள் எண்டு நினைக்கியேள் தானே? இத்தனை திகதிகளாய் நல்ல தமிழில் கதைச்சவள், ஏதோ பேசுகிறாள் எண்டு தோணுகிறது தானே?” தூக்க மாத்திரை உண்டதில் அரைகுறை தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள் வாஹினி.

“சிமி! அப்போ நீ இலங்கையைச் சேர்ந்தவளா?”

“ஓம் எண்டு சொன்னால் என்ன செய்யப் போகிறாய்? நான் இலங்கையைச் சேர்ந்தவள் எண்டு தெரிந்திருந்தால் கல்யாணம் கட்டியிருக்க மாட்டாய் தானே? நான் வேண்டாம் எண்டு சொன்னதன் காரணம் உனக்கு விளங்கிட்டா?”

“சிமி! நான் உன் கிட்டே அதைக் கேட்கல. உங்க அம்மா அப்பாவெல்லாம் எங்கே இருக்காங்க? நீ எப்படி இங்கே வந்தே?”

“2008, மே-17 என்னால் மறக்க முடியாத தினமாய் விடியுமெண்டு நான் நினைக்கயில்லை. எனக்கு அப்போ பனிரெண்டு வயசு. அன்றைய தினம், எண்ட அப்பாவை, ஆமிக்காரரர்கள் (இராணுவ வீரரர்கள்) தேடுவதாய் செய்தி கேட்டு, உடனே நாட்டை விட்டு போக வேண்டுமெண்டு அம்மாவும் அப்பாவும் கதைத்துக் கொண்டு இருந்தனன்.”

” பனிரெண்டு வயசு பெடியளாக (சிறுமி) இருந்தாலும், எனக்கு எங்கள் மண்ணை விட்டு போக வேண்டும் எண்டு மட்டும் விளங்கினன். நான் வர மறுக்கையில், இங்கே இருந்தால் அப்பாவை வெடி வச்சு கொண்டு (கொன்று) போடுவாங்கோ எண்டு அம்மா சொல்லிக் கொண்டு கதறினாங்கோ!”

“கள்ளத் தோணியிலே கரைகடந்து போக வேண்டும் எண்டு மட்டும் விளங்கிட்டு. நான் எண்ட அம்மாவிடம் இந்த மண்ணை விட்டு ஏன் போக வேண்டும் எண்டு கேட்டன். அம்மாவோ நான் கேட்டதுக்கு பதில் சொல்ல இயலாமல் என்னைக் கட்டிக் கொண்டு கரைந்தனன். எனக்கு ஒண்டும் விளங்கயில்லை! நாங்கள் எந்த பிழையும் செய்யயில்லை! எங்கள் வீட்டை விட்டு நாங்கள் ஏன் வெளிக்கிடணும்? இது எங்கள் மண் எண்டு நான் நினைத்துக் கொண்டு இருந்தது பிழையோ? எண்டு அம்மாவிடம் கேட்டனன். அம்மா கரைந்துக் கொண்டே கிடந்தார்கள்.!”

“எண்ட அம்மாவைப் பார்த்து எனக்கும் அழுகை வந்துட்டு. எண்ட அப்பா எண்ட தலையைக் கோதி, கரையாதே சிமி! நாங்கள் இல்லாவிட்டாலும் நீ உனக்கெண்டு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேணும்.! நம்மட சனங்களுக்கு சமாதானம் பிறக்குமெண்டு எனக்கு தோணயில்லை. ஒதுங்க ஒருபிடி இடமில்லாமல் அலையணுமெண்டு நம்ம தலையில் எழுதியிருக்கு. எண்டு சொல்லி மாரில் அடித்துக் கொண்டு அழுதனன்.”

“அன்று இரவே முல்லைத் தீவு ஓரமாய் கடற்கரையில் கள்ளத்தோணியில் போக கெதியாய்க் (அவசரமாய்) கிளம்பிக் கொண்டு இருந்தனன். தோணிக்காரனோ எழுவத்தி ஐயாயிரம் கொடுங்கோ! இல்லையேய் கடலில் குதித்து சாவுங்கோ எண்டு சொல்லிப் போடவும், எண்ட அம்மாவின் கழுத்து நகைகள் அத்தனையும் ஈடாய் கொடுத்து புறப்பட நிண்டு கொண்டு இருக்க, முதுகுப்புறம் சப்பாத்துகளின் (காலணி)சத்தம் கேட்டது. எண்ட அப்பா என்னை தோணிக்குள் தூக்கிப் போட்டது மட்டும் தான் எண்ட நினைவில் இருக்கினம்..!”

எனச் சொன்னவளின் உடல் வெடவெடத்து நடுங்கத் துவங்கியது. ஏசியின் குளிரிலும் கூட, உடலில் வியர்வை ஆறாய்ப் பெருக, கண்களைத் திறக்கவே விரும்பாதவள் போலே இறுக மூடிக் கொண்டு, அவன் சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டு தேம்பத் துவங்கியிருந்தாள் வாஹினி. அழுகையோடு விம்மலும், விசும்பலும் சேர்ந்து அவளை இன்னும் கொஞ்சம் களைப்படையச் செய்திருந்தது.

“எண்ட அப்பாவும், அம்மாவும் எந்த பிழையும் செய்யயில்லை! விட்டுடுங்கோ! அவங்களை விட்டுடுங்கோ! வெடி வச்சு கொன்னுப் போடாதீங்கோ! ஐயோ..! ஐயோ..! எண்ட அம்மா! எண்ட அப்பா!” அந்த அறை முழுதும் அவளின் கதறல் எதிரொலிக்க, தன் இதயத்திற்கு அருகிலேயே அவளை இறுக்கி அணைத்துப் பதுக்கிக் கொண்டான் ஆதன் ரித்விக். அவளை விட்டுவிடக் கூடாதென்ற தீர்க்கம் அவனது விழிகளுக்குள் தெரிந்தது.

“இன்னொரு இழப்பினை தாங்கும் சக்தி எண்ட மனசுக்கு இல்லை ஆதன். எண்ட மனசும் உடம்பும் மரத்து போய்ட்டு! உன்னை என்னால் இழக்க இயலாது ஆதன். எண்ட அம்மா, அப்பாவைப் போல், உன்னை இழந்துடுவேனோ எண்டு மனசு துடித்துக் கொண்டு இருக்கினம். எண்ட வாழ்க்கையில் ஆரும் வேண்டாம்! நான் தனியே இருந்து கொள்ளுவன். நான் உன்னைக் காதலிக்கிறன் ஆதன்! எண்ட மனசு முழுக்க நீ மட்டும் தான் நிறைஞ்சு கிடக்கிறாய். ஆனால், கேண்டி க்ரஷ் மட்டும் தான் எண்ட அடையாளம், அதைப் போல் உன்னையும் தொலைத்துப் போட்டன் எண்டால் தேட இயலாது ஆதன். நான் கடைசி வரை அநாதையாய் இருந்துப் போட்டு போறன்.!” தன்னை மீறிய அழுத்ததிலும், கடந்தகால நினைவுகளின் தாக்கத்திலும், இத்தனை நாட்களாய் மனதின் அடியாழத்தில் அமிழ்ந்து கிடந்த அத்தனையும் அவளை அறியாமலே, வெளிவந்திருக்க, அவள் தன் மீது வைத்திருக்கும் காதலின் ஆழம் தெரிந்ததும், அதுவும் அவள் வாயால் கேட்ட பின் பிரம்மிப்பு விலகாமலே அவளை இன்னும் கொஞ்சம் அதிகமாய் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் ஆதன்.

“சிமி! உனக்கு நான் இருக்கேன் சிமி! நீ அழாதே! உன்னோட அம்மாவா, அப்பாவா எல்லாமுமா நான் இருப்பேன் சிமி! இனி உன் கண்ணில் கண்ணீர் சிந்த விடமாட்டேன் சிமி!” கண்களில் கண்ணீர் தேங்க அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன், ஆதரவாய் அவள் தலைக் கோத அமைதியாய் உறங்கிப் போனாள் அவனின் சிமி.

**********

நெற்றிச் சுருங்க வேதனைத் தாங்கிய முகத்துடன் ஷியாமின் முன்னால் அமர்ந்திருந்தான் ஆதன். தன்னவளின் நிலையை நினைத்து கண்கள் கலங்கிப் போயிருந்தது அவனுக்கு. முகம் ஒட்டுமொத்தமாய் உணர்ச்சிகளைத் தொலைத்திருந்தது.

‘எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பாள். கண் முன்னே காணக் கூடியக் காட்சியா அது? பெற்ற தாய் தகப்பனை இழந்து விட்டு அநாதையாய் நிற்க வேண்டிய வயதா அது? தாய் என்ற சொந்தம் இல்லாவிட்டாலும் கூட, எனக்கு உறவாட தந்தை என்ற சொந்தம் இருந்தது. எனக்கென்று இருப்பிடமென்று ஒன்று இருந்தது. ஆனால் அவளுக்கு எதுவும் இல்லையே? அதுவும் பனிரெண்டு வயதில், ச்சே! கடவுள் இத்தனை கல் நெஞ்சக்காரராய் இருந்திருக்கக் கூடாது? ஒருத்தியின் நிலையே மனதை உலுக்கி விட்டதே! ஒன்றரை லட்சம் உயிர்களின் குருதியைக் குடித்துவிட்டு மௌனசாட்சியாய் நிற்கிறதே முள்ளிவாய்க்கால்.’ என நினைத்த மாத்திரத்தில் நெஞ்சம் வேதனையில் விம்ம, கண்களில் கண்ணீர் தேங்கியது.

“ஆதன் என்னாச்சு? வாஹினி தூங்கிட்டாளா?” நீண்ட நேரமாய் அந்த அறையை ஆக்கிரமித்திருந்த கனத்த மௌனத்தைக் கலைத்தான் ஷியாம்.

“தூங்கிட்டா! உடம்பு ஓய்வுக்குப் போய்டுச்சு. ஆனால் மனசு, கொந்தளிச்சு கொதிச்சுக்கிட்டு தான் இருக்கு. என்னால் முடியலை ஷியாம்! என்னால் அவளை அந்த நிலையில் பார்க்க முடியலை.!” அவனின் குரலில் வேதனை தெரிந்தது. ஆதனின் முகத்தை வைத்தே உள்ளே என்ன நடந்திருக்கும் என அனுமானித்துக் கொண்டான் ஷியாம்.

“வாஹினி இதையெல்லாம் காட்டிக்கணும்ன்னு நினைக்க மாட்டாள். எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே புதைச்சுப்பாள். ஆனால் அவளை அறியாமலே உங்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறாள். கண் முன்னே துப்பாக்கி குண்டுகள் துளைக்க, உடல் ஓட்டை சல்லடையாகி மண்ணில் சரிஞ்ச அவங்க அப்பாவையும், மானபங்கப்படுத்தப்பட்ட அவங்க அம்மாவையும் ஒண்ணா நெருப்பு வச்சு கொளுத்தும் வரை பார்த்திருக்கிறாள். நெருப்பிலிட்டு பொசுக்கும் வரை அவஙௌக உயிரோடு இருந்திந்திருக்கிறாங்க! அதன் பின்னாடி தான் மயங்கி சரிஞ்சிருக்கிறாள். தன்னையும் கொன்னுடுவாங்களோன்னு பயத்தில் தோணிக்குள்ளே அமைதியாய் மறைஞ்சுக்கிட்டதால் தப்பிச்சிருக்கா! இல்லைன்னா உங்க வாஹினியும் அந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கலாம்..!” குரல் கமற ஷியாம் சொல்லவும்,

“ப்ளீஸ் ஷியாம்! அப்படி சொல்லாதே! உயிர் வரை வலிக்குது. என் சிமியை அப்படியொரு நிலையில் நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை.!” வலி நிறைந்த குரலில் சொன்னான் ஆதன்.

“உண்மைகள் வலியையும் வேதனையையும் தான் கொடுக்கும் ஆதன். புனை கதைகளை விட உண்மை ரொம்பவே கொடுமையானது ஆதன். தோணிக்காரன் வாங்கின காசுக்காக வாஹினியை ஏதோ கடற்கரையில் விட்டுட்டுப் போய்ட்டான். மூணு மணிநேரம் ஒத்தையடிப் பாதையில் வெறும் காலோட நடந்து வந்து, மீனவ கிராமத்தை அடைஞ்சிருக்கா! அங்கிருந்தவங்க அவளுக்கு சாப்பாடு தண்ணியெல்லாம் கொடுத்து பக்கத்திலிருந்த காப்பகத்தில் விட்டுட்டாங்க!”

“உங்கக் கிட்டே எப்படி வந்தாள்?” இன்னும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பாளோ? பதைபதைப்பு தெரிந்தது அவன் குரலில்.

“வாஹினியோட பதினைந்து வயசு வரை, அவள் காப்பகத்தில் தான் இருந்தாள். அவள் தங்கியிருந்த காப்பகத்திற்கு நானும் அம்மாவும் மாதமொருமுறை, நன்கொடை கொடுக்கவும், சுத்தம் செய்யறது, மரம் நடறது போன்ற வேலைகளுக்காகப் போவோம். அப்போ தான் அவளைப் பார்த்தோம். ரொம்பவே இறுகிப் போய் அழுத்தமாய் இருந்தாள். இலங்கையிலிருந்து வந்த பொண்ணுன்னு தெரிஞ்சதும், நாங்க அவளைத் தத்து எடுத்துக்கிட்டோம்.! இப்போ இருக்கிற துறு துறு வாஹினியை, தைரியசாலி வாஹினியைக் கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம்.! முகம் கொடுத்துக் கூடப் பேச மாட்டேன்னு இருந்தவளை மாற்றி சகஜமாக்க, மனநல ஆலோசனை எல்லாம் கொடுத்து தான் இயல்புக்குக் கொண்டு வந்தோம். ஆனாலும் என்னை நம்பி என்கிட்டே வாஹினி பேசினதே அவளோட பள்ளிப் படிப்பு முடிஞ்ச பிறகு தான். என்னதான் ஃப்ரெண்ட்ன்னு அவள் சொல்லிக்கிட்டாலும், அவள் என் உடன் பிறவா தங்கை!” நெகிழ்வுடன் ஷியாம் சொல்லி முடிக்க,

“அது ஏன் வாஹினியை மட்டும் தத்து எடுத்தீங்க? விவரமே தெரியாத எத்தனையோ கைக் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பாங்க தானே?” காரணம் அறிந்துக் கொள்வதற்காய் கேட்டான் ஆதன்.

“ஏன்னா, எங்க அப்பா இலங்கை போரில் இறந்தவர் தான். முப்பது வருஷப் போராட்டத்தில் வெற்றி கிட்டாவிட்டாலும், லட்சக்கணக்கான தமிழர்கள் புதைக்கப்பட்டாலும், தமிழ் விதைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். ஓர் இனத்தை அழிச்சு தான் இன்னோர் இனம் வாழணும்ன்னு நினைக்கிறதுக்கு நாம மிருகங்கள் இல்லை. மனிதர்கள்! மனிதர்கள் மனிதத்தோடு இருந்தால் மட்டும் போதும், போர் பகை இதுக்கெல்லாம் அவசியமே இருக்காது.

“சுதந்திரம் என்பது..
ஆளும் மக்களுக்கும்..
வாழும் மக்களுக்கும்..
உரிமை சரிசமமாக இருப்பது மட்டுமே..!
ஒன்றை அழித்து ஒன்று மட்டும் வாழுமேயானால்..
அது சுதாந்திரம் அல்ல..! காட்டுமிராண்டித்தனம்..!”

இசைக்கும்…❤

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
12
+1
4
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சிமி மனதில் உள்ளதை எல்லாம் சொல்லிட்டாள். பாவம் இலங்கை தமிழர்.

    1. Author

      உண்மை தான் கலை மா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤