
இதயம்-21
விடிய விடிய ஆதனின் கண்களில் பொட்டு தூக்கமில்லை. கலங்கிய முகத்துடன் உறங்கும் மனைவியைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் வலித்தது. தாங்கவே முடியாத வலி.
அவளின் நிலையைக் கேட்டதற்கே அவனுக்கு இப்படி வலிக்கிறதே, அனுபவித்தவளுக்கு எப்படியெல்லாம் வலித்திருக்கும்.
தன் பெற்றவர்களின் இழப்பை கண்ணால் காணும் கொடூரம் எதிரிக்கும் வரக் கூடாது.
‘எதுவாக இருந்தாலும் கடந்து போகக் கற்றுக் கொள், காயங்களுக்கு நியாயம் தேடிக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. வந்து விடு சிமி, இதையெல்லாம் கண்மூடி கடந்து வந்து விடு!’
என்று அவளிடம் சொல்லிவிட, அவனுக்கும் ஆசை தான். ஆனால் அவள் பட்ட காயங்கள் கடந்து வரக் கூடியவை அல்லவே..!
‘அவள் சொன்னதை இப்போது நினைத்தாலும் கூட நெஞ்சம் பதைபதைக்கிறதே? எந்த மகளும் காணக் கூடாத ஒன்றைக் கண்டிருக்கிறாளே! பெற்ற தாயை, அவள் கண் முன்னில் காணக் கூடாத காணவே முடியாத கோலத்தில் கண்டிருக்கிறாள். பனிரெண்டு வயதில் அந்தப் பிஞ்சு மனம் என்னவெல்லாம் பாடுபட்டிருக்கும்?’ நினைத்துப் பார்க்கும் போதே கனம் தாங்காது நெஞ்சம் வலித்தது அவனுக்கு.
கண்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மனையாளைத் தொட்டு உரசியது. இத்தனை வேதனைப் பட்டு, வலிகளைச் சுமந்துக் கொண்டு தான் புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருக்கிறாள் என அறியாது, அவள் விருப்பமில்லாது அவள் கழுத்தில் தாலி கட்டிய செயலை நினைக்கையில், தன்னை நினைத்தே அவனுக்கு வெட்கமாக இருந்தது. வெட்கித் தலை குனியக் கூடிய செயலாகத் தோன்றியது.
தனக்கு ஆதரவாக, தனக்கு இன்னொரு தாயாக நினைத்து தான் அவளை அவன் தன்னுடன் திருமண பந்தத்தில் இணைத்தது. ஆனால், அவளே ஆதரவில்லாமல் இருந்திருக்கிறாள் என்பது அவனுக்கு உயிர் போகும் வலியைக் கொடுத்தது.
‘ஆமையும், நத்தையும் எப்படி வாழ்நாள் முழுதும், தன் முதுகில் சுமையை சுமந்துக் கொண்டே அலைகிறதோ, அதே போல், மனம் முழுதும் வேதனையைச் சுமந்துக் கொண்டு அலைந்திருக்கிறாள். இன்னும் சுமந்துக் கொண்டு தான் இருக்கிறாள். இனி அவள் வாழ்வில் துன்பம் என்ற சொல்லுக்கே இடம் இருக்கக் கூடாது. எந்தத் துன்பமோ, கஷ்டமோ என்னைத் தாண்டியே அவளை நெருங்க முடியும்!’ தனக்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டான் ஆதன்.
தன் உயிரைக் கொடுத்தாவது, தான் பெற்ற மகவைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட வாஹினியின் பெற்றோர்களை நினைத்து அவனுக்கு சிலிர்த்துப் போனது. உலக நியதியும் அது தானே, தன் உயிரைத் தந்தாவது தன் சந்ததியை இந்த உலகில் நிலைக்கச் செய்வது. ஆனால், அதற்கு விதிவிலக்காய் பெற்ற மகனையே எதிரியாய் பார்க்கும் தன் தந்தையை நினைத்துப் பார்க்கையிலேயே அக்னிக் குழம்பாய் அவன் மனம் கொந்தளித்தது.
அதுவும், தன்னவளின் அடையாளத்தை அழித்திருக்கிறார் என்பதிலேயே அவன் கோபம் எல்லையைக் கடந்திருந்தது. ஆனாலும், எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்யக் கூடாது. நிதானமாய் யோசித்து, பொறுமையாய் முடிவு செய்ய வேண்டும். இனி விழப்போகும் அடியிலிருந்து அந்த சதாசிவம் மீண்டு வந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தான் ஆதன்.
அவர் திருந்துவதற்கு எத்தனையோ வாய்ப்புகளை வழங்கி விட்டான் ஆதன். செய்த தவறுக்கு வருந்துவதாகக் கூடத் தெரியவில்லை. அவரை மகான் போல் வாழச் சொல்லவில்லை, மனசாட்சிபடி வாழலாம் இல்லையா?
மனம் என்று ஒன்று இருந்தால் தானே மனசாட்சி இருப்பதற்கு.
அரசியல் கட்சியின் அடிப்படை உறுப்பினராய் மாத்திரம் இருந்தவர், தன் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டதே தன் மனைவி கற்பகத்தின் பிணத்தின் மேலே தான். அனுதாப ஓட்டுக்கள் பெற்று அமைச்சராய் நிமிர்ந்தவருக்கு, ஆளில்லாமல் தவிக்கும் தான் பெற்ற மகனின் ஆள்மனம் புரிந்திருக்கவா போகிறது?
அன்னையுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு, அலமாரிக்குள் ஒளிந்திருந்தவன், கதவிடுக்கின் வழியே தன்னைப் பெற்றவளின் உயிர் போவதைக் கண்ணால் கண்டுவிட்டானே! கண்ணெதிரே செய்யப்பட்ட கொலை, எதிர்க்கட்சிகளின் சதியாகிப் போனது.
அரசியல் ஆதாயத்திற்காக, தன் கௌரவத்திற்காக, ஆணவக் கொலை செய்துவிட்டு, துளி உறுத்தலில்லாமல், தும்பை நிற வேட்டி சட்டையில், திரியும் தகப்பனைப் பார்த்து, சிறுவயதில் பயமிருந்தாலும், பயமே கோபமாய் வைராக்கியமாய் உருப்பெற்று உயரத்தில் அவனைக் கொண்டு நிறுத்தியிருந்தது.
வைராக்கியம் என்பது என்ன? இங்கு வைராக்கியம் என்பது அவனது வெறி, பிடிவாதம். சாதிக்க வேண்டுமென்ற பிடிவாதம்.
தந்தைக்கு எதிரே வந்து நிற்க வேண்டுமென்ற தீர்க்கம். வயிற்றுப் பசிக்கு வேலை செய்பவன் உழைப்பான், அதுவே வைராக்கியத்திற்கு வேலை செய்பவன் கடினமாய் உழைப்பான். அதைத்தான் ஆதனுமே செய்தான். நேரம் காலம் பார்க்காது கடினமாய் உழைத்தான். வைராக்கியம் என்பது வைரத்தை விட, உயர்வானது. வாழ்வின் விளிம்பில் நின்றாலும் கூட, வைராக்கியத்தோடு நிற்க வேண்டுமென்ற கொள்கை தான் அவனை உயரம் தொட வைத்தது.
இப்போது அவன் முடிவு செய்துவிட்டான் தீர்க்கமாய் முடிவெடுத்துவிட்டான், தேவைக்கும் மட்டும் தேடும் நபர்களைத் தெரிந்தே தொலைப்பதில் தவறில்லையே!
இத்தனை நாட்களாய், பேருக்காய் ஒட்டியிருந்த தந்தை என்ற உறவைத் தொலைக்க முடிவு செய்துவிட்டான். இப்படியொரு முடிவு அவன் எடுத்ததற்கான காரணம், அவனது சிமியின் கண்ணீர்.
அவனின் மார்புச் சட்டை ருசித்த அவளின், வெதுவெதுப்பான கண்ணீர், அவளின் வேதனைகளை இவனின் இதயத்திற்குள் இறக்கியிருந்தது.
தனக்கு என்ன செய்தாலும், தந்தை என்ற காரணத்திற்காய் பொறுமையாய் இருந்தவன், தன்னவளின் கண்ணீருக்குக் காரணமே தன் தந்தை எனத் தெரிந்ததும், அந்த உறவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
அதே நேரம், அவன் சிமியிடம் தெரிந்த அசைவு, அவனை அவள் முன் கொண்டு நிறுத்தியிருந்தது.
கடினப்பட்டு கல்லெனக் கனத்த விழிகளைத் திறந்தவள், எதிரே, கவலை படிந்த முகத்துடன் நின்றிருந்த ஆதனைப் பார்த்தாள்.
அழுது அழுது கண்கள் வீங்கி சிவந்திருந்தது. கலைந்த தலையும், கவலை படிந்த முகமும் இவனுக்குள் வலியைக் கொடுத்தது.
“சிமி! இப்போ பெட்டரா இருக்கியா? எல்லாம் ஒகே தானே?”
“என்ன ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிறியா? நீ நினைச்சபடியே எல்லாத்தையும் நடத்திட்டே, உனக்கு சந்தோஷம் தானே? ஆனால், அதுக்காக நான் உன் காலில் வந்து விழுவேன்னு கனவில் கூட நினைக்காதே!” கோபமாய் சொன்னபடியே, தோகையெனப் படர்ந்திருந்த கூந்தலை அவள் அள்ளி முடிந்த தோரணை அந்த பாஞ்சாலத்து திரௌபதியை ஒத்திருந்தது.
“ஐ லவ் யூ சிமி!” அவள் சொன்னதற்கு பதிலாய் இவன் சொன்னதில் புரியாமல் குழம்பி நின்றாள் பெண்!
“ஹான், நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்றே லூசு?”
“ஐ லவ் யூன்னு சொன்னேன்! ஏன் சொல்லக் கூடாதா? நீ சொல்லக் கூடாதுன்னு சொன்னாலும் நான் சொல்லுவேன். ஏன்னா நீ என் பொண்டாட்டி!” தன் தோள் வளைவிற்குள் இழுத்தபடியே சொன்னான் அவன்.
“போதும்! நிறுத்து! உன் நாடகத்தைப் பார்த்து நான் ஏமாறத் தயாராய் இல்லை. இப்போ இவளுக்குன்னு தொழில் ஒண்ணும் இல்லை! இனிமே நம்ம பேச்சைக் கேட்டு தானே நடக்கணும்ன்னு நினைச்சு தானே இதையெல்லாம் பேசறே? நீ நினைக்கிறதெல்லாம் நடக்காது.
இந்த சிம்மவாஹினி ஒண்ணும் சிட்டுக்குருவி இல்லை, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை! போகப் போக நீயே புரிஞ்சுப்ப!”
என அவனிடமிருந்து விலகி குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள் அவள்.
மூலையில் முடங்கிப் போய்விடாது, தன் அடையாளத்தை இழந்தப் பின்னும் கூட, தோல்வியில் துவளாமல், விழுந்ததை விட, வேகமாய் எழுந்து நிற்கும் அவளைப் பார்த்து அவனுக்கு பிரம்மிப்பாய் இருந்தது. நாளுக்கு நாள் அவள் மீதான காதலும், பிடித்தமும் அளக்க முடியாத எல்லையைத் தாண்டி வளர்ந்துக் கொண்டே இருந்தது.
நேற்று அழுத அழுகையின் சுவடு தெரியாமல், தைரியமாய் துணிந்து நிற்பது அவளின் தன்னம்பிக்கையைக் காட்டியது.
“குத்தும் ஊசியிடமெல்லாம் வாதாடிக் கொண்டிருந்தால்,
ஆடை தன் அழகை இழந்துவிடும்.
வெட்டும் கத்திரிக்கோலோடு வாதாடிக் கொண்டிருந்தால்,
ஆடை தன் வடிவமைப்பை இழந்துவிடும்,
சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும் எனத் தெரிந்தால்,
புன்னகையோடு ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்..
ஆடை போலவே..!”
வாஹினியும் கூட, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆடையைப் போலத்தான். வலிகளைத் தாண்டி வடிவம் பெறும் ஆடையைப் போலவே வலிகளைத் தாண்டி, தடைகளைத் தாண்டி தன் அடையாளத்தை மீட்டெடுப்பாள் என்பதில் அவனுக்கு துளி சந்தேகமில்லை.
*********
குளித்து முடித்து கிளம்பி அவள் வெளியே வந்த போது, ஆதன் அந்த அறையில் இல்லை. அலட்சிய தோள் குலுக்கலோடு, படிகளில் வேகமாக இறங்கியவள்,
“ஷியாம்! எங்கே இருக்கே?” அவசர விளிப்புடனே இறங்கி வந்தாள்.
“வாஹினி! ஆர் யூ ஓகே? நல்லா இருக்கே தானே?” அக்கறையான விசாரிப்பு அவள் மனதிற்கு கொஞ்சம் இதமாகவே இருந்தது.
“கிளம்பி ரெடியா தானே இருக்கே? வா போகலாம்!” அவசரமாய் அழைத்தாள் அவள்.
“எங்கே? ஆமா, ஆதன் எங்கே?”
“ஆதன் எங்கே போனான்னு எனக்குத் தெரியாது. அதைப் பார்க்க எனக்கு நேரமும் இல்லை! இப்படியே சும்மா உட்கார்ந்துட்டு இருக்க முடியாது. கேண்டி க்ரஷ் திரும்ப வரணும். நாம தான் மீட்டெடுக்கணும். கேண்டி க்ரஷ் மேலே இன்ஷூரன்ஸ் போட்டிருக்கோம் தானே? அது என்னன்னு பார்த்துட்டு வரலாம். அப்படியே ஷ்டேஷனிலும் விசாரிச்சுட்டு வரலாம்.!”
“மார்னிங் தான் ஸ்டேஷனிலிருந்து கால் பண்ணினாங்க வாஹினி! மின் கசிவின் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டிருக்கலாம்ன்னு சொன்னாங்க! ஒருவேளை நம்மளோட கவனக் குறைவுன்னு சொல்லிட்டாங்கன்னா இன்ஷுரன்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் வாஹினி!”
“அதுக்கு இப்படியே உட்கார்ந்துட்டு பேசிட்டே இருந்தால் எல்லாம் சரியாகிடுமா? ஏதாவது செய்ய முடியுமான்னு நாம தான் போய் பார்க்கணும். நீ கிளம்பு, நாம போய் பார்த்துட்டு வந்துடுவோம்!”
“ஓகே! கோபப்படாதே! வர்ர்ரேன்!”
“ஏன் ஷியாம்! நம்ம கடைக்கு எதிரில், இருக்கிற லாட்ஜில் சிசிடிவி இருக்கு தானே? அங்கே செக் பண்ணினால் என்ன? யாரு என்னன்னு காரணம் தெரியுமே..!”
“நாம கேட்டால் கொடுக்க மாட்டாங்க வாஹினி! போலிஸோட போய் கேட்டால் தான், கொடுப்பாங்க! நாம கேட்டதும் சும்மா தூக்கி கொடுத்துட மாட்டாங்க! ப்ரொஸீஜர் அது இதுன்னு ஆயிரம் காரணம் சொல்லுவாங்க!”
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்! முதலில் நல்ல லாயரா பார்க்கணும்! எவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் முடிக்க முடியுமோ, முடிச்சு, மறுபடியும் கேண்டி க்ரஷை ஓபன் பண்ணணும்.!”
“வாஹினி! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே, ஆதன் கிட்டே ஹெல்ப் கேட்டால் என்ன?!”
“வேணாம்!” அழுத்தத்தோடு கோபமும் பதிலோடு சேர்த்தே வந்தது.
“ஏன் வாஹினி! அவர் உன் கணவர். சாதாரண கம்ப்ளைண்ட், அதுக்கே நமக்கு அவர் உதவி தேவைப்பட்டது. அப்படியிருக்கையில், இது ரொம்ப பெரிய விஷயம். இதில் அவர் உதவி இருந்தால் பெட்டரா இருக்கும்ன்னு தோணுது.!”
“என்னைக் கோபப்படுத்தாதே ஷியாம்! இப்போ நாம எல்லாத்தையும் இழந்து நிக்கிறதுக்கு காரணமே அவன் தான். ஒரு பொண்ணு தனியா நின்னால், அவளைத் தலைக்குப்பற விழ வைக்கணும்ன்னு நினைக்கிற ஆம்பிள்ளை புத்தி. அதைத்தான் ஆதனும் செய்திருக்கிறான். நான் சுயமா தொழில் பண்ணறது அவனுக்குப் பிடிக்கலை. கல்யாணம் பண்ணி என்னைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்ன்னு பார்த்தான் முடியலை, அதனால் என் அடையாளத்தையே அழிச்சுட்டான் பாவி! ஆனால், நான் அவனைச் சும்மா விட மாட்டேன்.!” கோபத்தோடு, ஆத்திரமும் சேர்ந்தே அவள் முகத்தில் பிரதிபலித்தது.
“ஷட் அப் வாஹினி! நீ அவரைப் புரிஞ்சுக்காமல் பேசறே! அவர் அப்படிப்பட்டவர் இல்லை! ரொம்ப நல்லவர். நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கே! நேத்து உன் நிலையைப் பார்த்து எவ்வளவு வேதனைப்பட்டார் தெரியுமா? நேத்தெல்லாம் அவர் நெஞ்சில் விழுந்து அழுதே! அவர் கிட்டே மட்டும் தான் சமாதானம் ஆகினே! இப்போ ஏன் இப்படியெல்லாம் பேசறே? நீ அவர் மேல் வச்சிருக்கிற காதல் எனக்கு தெரிஞ்சுடும்ன்னு தானே, இப்படியெல்லாம் பண்ணுறே?” நேராய் கண்களைப் பார்த்து அவன் கேட்டதில் சட்டென மௌனமாகிப் போனாள் சிம்மவாஹினி.
“என்னை நேராய்ப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து பேசு வாஹினி! ஆதன் மேலே உனக்கு காதல் இல்லைன்னு என் கண்ணைப் பார்த்துச் சொல்லு!” மீண்டும் ஷியாம் கேட்ட போதும் கூட, அவளிடம் பதில் இல்லை.
“இங்கே பாரு வாஹினி! உன்னை நீயே ஏமாத்திக்காதே! அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். இந்த உறவு வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டு திரும்ப வேணும்ன்னு தோணுதேன்னு குழப்பமா இருக்கா.? ஏன் இப்படி செய்யறே? எதையாவது வாயைத் திறந்து சொல்லேன்.!” கோபம் ஷியாமிடம் இடம் மாறியிருந்தது.
“பயமா இருக்கு டா! மறுபடியும் இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு! நான் நேசமும் நெருக்கமும் காட்டினால் என்னை விட்டுப் போய்டுவாங்களோன்னு பயமா இருக்கு. நான் உன்னையுமே, சகோதரன்ங்கிற எல்லைக்குள் வரவிடாமல், நண்பனா தள்ளி நிறுத்தறதுக்கான காரணமும் அது தான். என்னால் இன்னும் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியலை ஷியாம்! இன்னொரு இழப்பை என்னால் தாங்க முடியாது.” தொண்டை அடைத்தது அவளுக்கு.
“ம்ப்ச்! அதெல்லாம் ஒண்ணும் நடக்காது வாஹினி! லூசு மாதிரி யோசிக்காதே! பாஸிட்டிவா திங்க் பண்ணு. பயம் கோழையின் ஆயுதம்ன்னு நீ தானே சொல்லுவே? இப்போ நீயே பயமா இருக்குன்னு சொல்றே?”
“எனக்கு என்ன நடந்தாலும், எனக்கு பயம் இல்லைடா! ஆதனுக்கு ஏதாவதுன்னா, என்னால் தாங்க முடியாது ஷியாம்! நிஷா, ஆகாஷ், அவங்க அப்பா பரமேஷ்வர், ஆதனோட அப்பா சதாசிவம்ன்னு ஏகப்பட்ட பேர், ஆதனுக்கு எதிரா இருக்காங்க! அவங்க எதிரியானதற்கு காரணம் என்ன தெரியுமா? ஆதன் என் கழுத்தில் தாலி கட்டினது தான். நான் ஆதனின் மனைவிங்கிற உறவே அவன் உயிரைப் பறிச்சுடக் கூடாது. கேண்டி க்ரஷ் விஷயத்தில் ஆதன் எந்தத் தப்பும் பண்ணலைன்னு எனக்கு தெரியும். ஏன்னா ஆதன் யாரையும் முதுகில் குத்த மாட்டான். அவனுக்கு அது பழக்கமும் இல்லை! ஆனால், எல்லாத்துக்கும் காரணம் ஆதன் தான்னு சொல்லி நான் அவனை விட்டு விலகிடப் போறேன்.!” என அவள் சொன்னதும், ஷியாமின் முகம் அதிர்ச்சியைப் பிரதிபலித்தது.
எல்லாம் சரியாகிவிடும் என நினைத்துக் கொண்டிருந்தவனின் நினைப்பில் மண் விழுந்தது.
‘இவளை எப்படித்தான் வழிக்குக் கொண்டு வருவது? முட்டாள் தனமாய் பேசிகிறாளே?’ என நினைத்துக் கோபம் கூட வந்தது. ஆனால், அவள் அனுபவித்த வலியும் வேதனையும், இன்னும் ஆறாத ரணமாய் இருக்க, தன்னை ஓர் உறவுக்குள் பிணைத்துக் கொள்வதில், அவளை அறியாமலே அவளுக்குள் பயம் முளைத்திருந்தது. சிறு வயதிலிருந்த, அவள் கண்டு வளர்ந்த காட்சிகளும், போராட்டமும், துப்பாக்கி சத்தமும், வன்முறைகளும் என்ன தான் தன்னை அவள் தைரியமாய்க் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஒருவித அச்சத்தை விதைத்திருந்தது.
அதே நேரம்,
“சூப்பர்! வெர்ரி குட்! செம ப்ளான் கேண்டி க்ரஷ்! ஆனால், நீ என்ன செய்தாலும், உன்னை விட்டுப் பிரியறதா எனக்கு எந்த ஐடியாவும் இல்லை!” ரொம்பவே அமர்த்தலான குரலில் சொன்னபடி சம்யுத்தாவோடு வந்து நின்றான் ஆதன்.
“வாஹினி! உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே? நான் ரொம்பவும் பயந்துட்டேன்!” என்றபடி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
“இல்லை! ஐ அம் ஓகே! நான் நல்லா இருக்கேன்.!”
“ஏன் வாஹினி! ஆதுவை விட்டுப் பிரியணும்ன்னு நினைக்கிறீங்க? நீங்க எப்படி வலிகளோட இத்தனை தூரம் கடந்து வந்திருக்கீங்களோ, அதே போல் தான் ஆதுவும். யோசிச்சு பாருங்க, பத்து வயசுப் பையன் முன்னாடி அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறது எப்படி இருந்திருக்கும்? எந்த பாதுகாப்பு உணர்வும், பிடிமானமும் இல்லாமல், அந்த வயசிலேயே அப்பாவை வெறுத்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கிட்டாவன் என் அண்ணன்.ரெண்டு பேருமே வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டீங்க! இனிமேலாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். இதைப் பேசுறதுக்கு எனக்கு வயசு போதாது தான். ஆனால், நீங்க நல்லா இருக்கணும்ன்னு நான் மனசார நினைக்கிறேன். ஏன்னா, ஆது கஷ்டப்பட்டதுக்கு நானும் ஒரு காரணம் தான். ப்ளீஸ் பிரியணும்னு மட்டும் முடிவு எடுத்துடாதீங்க!” நீர் துளிர்க்கப் பேசிய சம்யுக்தாவின் மீது ஷியாமின் பார்வை துளி ஆர்வத்தோடு விழுந்தது.
“நீ தாராளமா எல்லா வீடியோஸும் ஃபார்வேர்ட் பண்ணிக்கோ! ஆனால் ஒண்ணு, உன்னைப் பெத்தவகிட்டே என்ன இருக்கோ அது தான் என் கிட்டேயும் இருக்கு!” என அன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ஆகாஷிடம் பேசியது அவன் விழிகளுக்குள் வந்து போனது.
இத்தனை நேரம் வெறும் சுவாரஸ்யமாய் மட்டுமே அவளைத் தொட்டுக் கொண்டிருந்த அவன் விழிகளில், பார்வையில் சிறிய மாற்றம் வந்திருந்தது.
அதே நேரம், “சம்யூ! உன் அண்ணி என்ன சொன்னாலும் நான் அவளைப் பிரியறதா இல்லை! இனி வரப்போற எல்லா பிரச்சனைகளையும் நாங்க சேர்ந்தே தான் சமாளிக்கப் போறோம்! அதனால் நீ கவலைப் படாதே!” எனச் சொன்னவன்,
“ரொம்ப பயப்படாதே கேண்டி க்ரஷ்! உனக்கு நான் இருக்கேன்! உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன். எனக்கு எதுவும் ஆகாது! நீ என் மேல் வைத்திருக்கிற காதல், எனக்கு எதுவும் ஆக விடாது. நம்பிக்கை தான் வெற்றியை நம்மக்கிட்டே கொண்டு வந்து சேர்க்கும்! முதலில் என்னை நம்பு சிமி! அந்த எமனே வந்து எதிரில் நின்னாலும், என்கிட்டே இருந்து உன்னை பிரிக்க முடியாது. இதுவரை தனியா நின்னு நீ பட்டதெல்லாம் போதும்! இனி நீ எந்தக் கஷ்டமும் படக் கூடாது. படவும் விட மாட்டேன்.!” எனச் சொன்னவன் அவளைத் தன் மார்போடு புதைத்துக் கொள்ள, கண்களில் தேங்கிய நீரோடு, அவன் மார்பில் புதைந்தவளுக்கு, தனக்கென்று ஒரு உறவு இருக்கிறதென்ற நிம்மதி வந்திருந்தது.
வாஹினியையும், ஆதனையும், கண்களில் வாஞ்சையோடு பார்த்திருந்த சம்யூவின் இதழில் விரிந்தப் புன்னகை, ஷியாமின் உதடுகளிலும் புன்னகையை ஒட்ட வைத்தது. கண்கள் சம்யூவில் நிலைத்திருக்க, உதடுகள் ரசனையோடு புன்னகைத்துக் கொண்டிருந்தது.
பெண்களுக்காய் வகுத்து வைத்த இலக்கணத்தின்று அவள் பிறழ்ந்திருக்கலாம், அவனைப் பொருத்தவரை அவள் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட கவிதையே..!
இசைக்கும்…❤
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


❤️💛
மிக்க நன்றி டியர் ❤
சிமி நல்ல நட்பு காதல் கிடைத்துவிட்டது.
உண்மை தான் கலை மா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤