
இதயம்-19
தன் இருசக்கர வாகனத்தில், ஆளரவமற்ற சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாஹினிக்கு, கேண்டி க்ரஷை நெருங்க நெருங்க மனம் ஏதோ செய்தது. மனம் முழுதும் இனம் புரியாத உணர்வுகள் ஆக்கிரமித்து, மனம் முழுதும் கனப்பதைப் போல் இருந்தது.
“எதுக்காக ஷியாம் பொய் சொல்றான்? சொல்லாமல் மறைக்கிற அளவிற்கு அப்படி என்ன பெரிய விஷயம்? ஆன்ட்டிக்கு எதுவும் உடம்பு சரியில்லையோ? எதையும் சொல்லித் தொலையாமல், என்னை இப்படி புலம்ப வச்சிட்டான் எருமை மாடு! உன்னை வந்து கவனிச்சுக்கிறேன் டா!” என வாய்விட்டுப் புலம்பியபடியே வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள்.
அவள் நினைப்பது போல் விஷயம் சிறியதல்ல! மிக மிகப் பெரிது. ஆனால் அதை வாஹினி எப்படி எதிர்கொள்ளப் போகிறாளோ தெரியவில்லை. நல்லதும் கெட்டதும் வாழ்வில் சகஜம் தானே! வெறும் நல்லது மட்டுமே நடந்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக மாறிவிடுமே..
இரண்டு மணிநேரத்தில் முடிந்து விடும் திரைப்படத்தை சுவாரஸ்யமாக்க வில்லன்கள் தேவைப்படும் போது, நம் வாழ்க்கையில் வில்லன்கள் இருக்கத்தானே செய்வார்கள். எல்லாவற்றையும்விட, சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளப் பழகி விட்டோமேயானால், தோல்விகள் வலியைத் தராது.
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மட்டும் நமக்குள் இருந்தால், தோல்வியும் கூட வெற்றிக்கு நிகரானது தான்.
நிஜமாகவே இங்கே வெற்றி என்பது, பணமோ, பதவியோ, புகழோ இல்லை! நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தான் உண்மையான வெற்றி. அப்படி பக்குவத்தோடு இருக்கும் மனிதன், தோல்வியில் உழன்று போகவோ, வெற்றியில் கொக்கரிக்கவோ மாட்டான். தோல்வியைக் கடந்து அடுத்த முயற்சியில் தோல்வியை வெற்றியாய் மாற்றும் பக்குவம் அவனிடம் வந்திருக்கும். ஆனால், இங்கே வாஹினிக்கு அந்தப் பக்குவம் இருக்குமா? என்பது சந்தேகம் தான்.
கேண்டி க்ரஷை நெருங்கியதும், அங்கே கூட்டம் கூடியிருப்பதும், பெரிய பெரிய வாகனங்கள் சூழ்ந்திருப்பதையும் பார்த்த வாஹினிக்கு உள்ளுக்குள் ஏதோவொன்று உடைந்தது. நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் என்னவென அவளுக்குப் புரிந்தது.
வாகனத்தைக் கூடச் சரியாய் நிறுத்தாமல் அப்படியே கீழே போட்டுவிட்டு, அதிர்வு தாங்கிய முகத்துடன், கண்களில் நீர் கோர்க்க அண்ணாந்து பார்த்தாள் அவள். கண்ணீர் கன்னங்களில் கோடாய் வழிந்தது. மனம் முழுதும் வலி, தாங்கவே முடியாத வலி.
பிறர் முன் அழுவதை அசிங்கமாய் கருதுபவளின் கண்களில் கண்ணீர். அந்த அர்த்த ராத்திரியில் அவள் கனவு ஒட்டுமொத்தமாய் கரைந்து கானல் நீராய் ஓடிக் கொண்டிருந்தது.
தனக்காய் அவள் கட்டமைத்த சாம்ராஜ்ஜியம்.. தான் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காய், பார்த்துப் பார்த்து செதுக்கிய அவளின் கேண்டி க்ரஷ் அக்னியின் அகோரப் பசிக்கு விருந்தாகிக் கொழுந்து விட்டெரிந்துக் கொண்டிருந்தது.
அக்னியின் செந்நிற நாக்குகள் அவள் கடையின் இனிப்பை ருசி பார்த்துக் கொண்டிருந்தன.
சுற்றிலும் தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரைப் பீச்சியடிக்க, தீயணைப்பு வீரர்களோ தீயை அணைக்க முயன்றுக் கொண்டிருந்தனர்.
தீயணைப்பு வாகனம் மழையாய் நீரைப் பொழிய, இங்கே வாஹினியின் கண்களிலோ கண்ணீர் மழை! கண்கள் முழுதும் நெருப்பில் எரிந்து கொஞ்சம் கொஞ்சமாய் சாம்பலாகிக் கொண்டிருக்கும் கேண்டி க்ரஷின் மீதே நிலைத்திருந்தது.
அவளின் கனவு, ஆசை எல்லாமே ஒற்றைத் தீக்குச்சிக்கு பலியாகிப் போனதே!
இராவணின் கண் முன்னே எரிந்துக் கொண்டிருந்த இலங்கை மாநகரம் போல, வாஹினியின் கண் முன்னே, கருகிக் கொண்டிருந்தது அவளின் கனவு ராஜ்ஜியம்! ஆம் இராஜ்ஜியம் தான். கேண்டி க்ரக்ஷின் இளவரசியே அவளாக இருக்கையில் அவளுக்கு அது இராஜ்ஜியம் தானே? அவள் அப்படித்தானே நினைத்திருந்தாள். ஆனால் எல்லாம் நொடியில், ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதே!
தேக்கு மரக்காடு எத்தனை பெரிதாக இருந்தாலும் கூட, ஒற்றைத் தீப்பொறி போதுமே ஒட்டு மொத்தக் காட்டையும் பஸ்பமாக்க. இங்கேயும் அதே போல் தான் ஆதன் எனும் தேக்கு மரக் காட்டைக் கொளுத்த முயன்ற தீக்குச்சி, வாஹினியின் கனவை எரித்து விட்டது. ஒட்டுமொத்தமாய் எரித்து சாம்பலாய் காற்றில் கரைத்துவிட்டது.
ஒட்டுமொத்தமாய் உலுக்கிப் போட்ட அதிர்விலிருந்து, மீண்டு வர இயலாது, வெறித்த பார்வையோடு நின்றிருந்தவளின் முகத்தில் வெப்பம் வந்து மோத, அதைக் கூட உணராது, பித்துப் பிடித்தாற் போல் அசையாமல் நின்றிருந்தவள் ஷியாமின் பார்வையில் விழுந்தாள். எரித்துக் கொண்டிருந்த அக்னியின் ஜுவாலை அவளைத் தொட வரும் முன், அவள் கைப்பிடித்து இழுத்து தன்னருகே நிறுத்தியிருந்தான் ஷியாம்.
“நீ ஏன் வாஹினி இங்கே வந்தே? உன்னை வராதேன்னு சொன்னேனா இல்லையா? ஒருநாள் கூடச் சொல்றதைச் செய்ய மாட்டியா?” ஷியாமின் குரலில் அக்கறையோடு கலந்த கோபம் எட்டிப் பார்த்தது.
” ஏன்டா, எனக்கு எதுவுமே தெரியக் கூடாதுன்னு நினைச்சியா? எல்லாமே போச்சுடா! நம்ம கனவு, ஆசை எல்லாமே போச்சு!” கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது.
“ஏய்! அழாதே வாஹினி! எல்லாம் சரி பண்ணிடலாம்! இந்த உலகத்தில் மாற்ற முடியாதது எதுவுமே இல்லை. நாம மனசு வச்சால் போதும் எதை வேணும்னாலும் மாத்தலாம்.!” உரிமையாய் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னான் ஷியாம்.
“நம்மளோட மொத்த சேமிப்பு, மொத்த உழைப்பு எல்லாமே போச்சே! எனக்கு என் கேண்டி க்ரஷ் வேணும் ஷியாம்! நாளைக்கு ஆடர்ஸ் எல்லாம் எப்படி டெலிவரி பண்ணுவோம்? இப்போ தானே டா டபுள் டெக் ஓவன் எல்லாம் அப்கிரேட் பண்ணினோம்? நிறைய ஆர்டஸ் வந்ததே! எப்படிடா எப்படி நெருப்பு பிடிச்சது? என் கனவு, லட்சியம் எல்லாமே கண் முன்னே கருகிப் போச்சே டா!” கதறலைத் தாண்டி புலம்பலாய் மாறத் தொடங்கியிருந்தது வாஹினியின் குரல்.
“வாஹினி! அழாதே! எல்லாரும் நம்மைத் தான் பார்க்கறாங்க! வா வீட்டுக்குப் போகலாம்!”
“நான் எங்கேயும் வரலை! என் கண்ணு முன்னாடியே எல்லாம் எரியுதே! எல்லாத்துக்கும் காரணம் நீ தான். கடையில் தீ பிடிக்கிற வரை, நீ என்ன பண்ணிட்டு இருந்தே.? நீ பொறுப்பில்லாமல் இருந்ததால் தான் இதெல்லாமே நடந்திருக்கு. உனக்கென்ன இதை விட்டால், உனக்கு தான் உன் ஆஃபீஸ் ஜாப் இருக்கே! உனக்கு இது பார்ட் டைம் தானே? ஆனால் எனக்கு என் வாழ்க்கை இது மட்டும் தான்டா! எல்லாம் போச்சுடா!” அழுது அழுது தொண்டைக் கட்டிப்போனக் குரலில் அவள் சொல்ல, அவள் மீது கோபம் வராது இரக்கம் தான் சுரந்தது அவனுக்கு.
“ம்ப்ச்! எல்லாம் என்னால் தான் விடு! நான் எல்லாத்தையும் சரி பண்ணுறேன்! அதுக்காக நீ அழாதே வாஹினி! கஷ்டமா இருக்கு.” என கைத்தாங்கலாக அவளை தன் வீட்டிற்கு அழைத்துப் போனான் ஷியாம்.
இத்தனை நாட்களாய், தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தாது, மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தவளின், கோபம், ஆற்றாமை என அனைத்து உணர்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாய் வெளிவரத் துவங்கியிருந்தன.
அழுதழுது விம்மல் அதிகரித்து, மூச்சு விடவே சிரமப்பட்டு, திக்கித் திணறத் துவங்கியிருந்தாள். இன்னும் இன்னும் அழுகை அதிகமாகி திணறல் அதிகமாகவே இருக்கவும், எத்தனையோ பொறுமையாய் அவளை இயல்புக்குக் கொண்டு வர முயன்று தோற்றுப் போனான் ஷியாம்!
“வாஹினி! ப்ளீஸ், அமைதியாய் இரு! நீ எவ்வளவு தைரியமானப் பொண்ணு. நீ இப்படி உடைஞ்சு போகலாமா? எல்லாத்தையும் சமாளிக்கலாம் வாஹினி!”
“வாஹினி மா! உன்னோட மன தைரியத்திற்கு முன்னால் இது எதுவுமே இல்லை டா! உன்னால் எல்லாத்தையும் பழையபடி மாற்ற முடியும்! நம்பிக்கை வை!” ஷியாமும் அவன் அன்னை சாவித்ரியும் மாறி மாறி சொல்லிப் பார்த்தும் கூட, அவள் காதுகளில் எதுவுமே விழவே இல்லை.
அவர்கள் சொன்னது எதுவுமே எந்த மாற்றத்தையும் அவளிடம் ஏற்படுத்தவே இல்லை. இப்படியே விட்டால் உடம்பிற்கு ஏதாவது இழுத்துக் கொள்வபயத்திலும், அவள் மீதான அக்கறையிலும் ஆதனுக்கு அழைத்திருந்தான் ஷியாம்.
*********
சில வருடங்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கம். தொழில் போட்டி, தந்தையின் சதிகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் அவன் நிம்மதியாய் உறங்கியே சில வருடங்கள் கடந்திருந்தது. தனக்கென்று உறவாய், தனக்கு மட்டுமே சொந்தமாய் ஒருத்தி இருக்கிறாள் என்ற உணர்வோ, அவள் தன் பக்கத்தில் வந்து சேர்ந்துவிட்ட நிம்மதியோ ஏதோவொன்று, அவனுக்கு நிம்மதியான உறக்கத்தைப் பரிசளித்திருந்தது.
நிம்மதியான உறக்கத்தின் நடுவே இடையூறாய் அலைபேசி அலறவும், முதலில் ஆதனுக்கு எரிச்சல் தான் வந்தது. இரண்டு முன்று முறைகள் விடாமல் அலைபேசி அலறிக் கொண்டே இருக்கவும், தூக்கம் கலைந்துப் போன எரிச்சலுடன் அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தான் ஆதன்.
ஆனால் அந்தப் பக்கம் ஷியாம் சொன்ன செய்தியில் ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து,
‘சிமி! என் சிமிக்கு என்ன ஆச்சு? அவள் எப்படி இதைத் தாங்குவாள்? எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆளு தான். உங்கப் பாவக் கணக்கை ஏத்திக்கிட்டே போறீங்க சதாசிவம்! எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிக்கப் போறீங்க!’ என தனக்குள் பேசியவன், அதிவேகமாய்க் கிளம்பி ஷியாமின் வீட்டை அடைந்திருந்தான்.
முற்றிலும் கருமை படிந்து, எரிந்து போய் மிச்ச சொச்சமாய், தன் வனப்பை ஒட்டு மொத்தமாய் இழந்து, கவலைக்கிடமாய்க் காட்சியளித்த கேண்டி க்ரஷை கடந்து செல்லுகையில் அவனுக்கு இதயம் வலித்தது.
வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, அங்கே பணியிலிருந்த காவலரிடம், சேதாரம் என்ன ஏதென்று விபரமும் கேட்டறிந்துக் கொண்டான். இவ்வளவு தூரம் அத்தனை பொருட்களும் எரிந்து நாசமாகியிருக்கிறதென்றால், இது தற்செயலாய் நடந்திருக்க வாய்ப்பே இல்லையென அவன் உள்மனம் அடித்துச் சொன்னது.
யோசனையோடே வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு ஷியாமின் வீட்டிற்குச் சென்றவன் கண்டது, முகமெல்லாம் வீங்கி சிவந்து போய் அழுது கரைந்துக் கொண்டிருந்த வாஹினியைத் தான்.
“சிமி!” அவன் விளித்தது தன் செவிமடலைத் தொட்ட மாத்திரத்தில், அதீத கோபத்தோடும், ஆங்காரத்தோடும் அவனை முறைத்தவள், அதே ஆவேசத்தோடு அவன் அருகில் வந்தாள்.
“சிமி! ஏன் இவ்வளவு கோபம்? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்! கொஞ்சம் ரிலாக்ஸா இரு!” அவன் சொன்னதை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.
“நீ ஏன்டா என் வாழ்க்கையில் வந்தே? உன்னால் தான்டா! இது எல்லாமே உன்னால் தான். நான் கேட்டேனா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு உன்னைக் கேட்டேனா? ஏன்டா என் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் நாசமாக்கின? உன் பணத்தால் எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடியும்ன்னு நினைச்சுட்டே இல்லை? இப்போ எல்லாம் போச்சு.!”
“இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சிமி! எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் சிமி!”
“உனக்கு பெரிய விஷயம் இல்லை தான். எல்லாமே உனக்கு ஈஸி தான். ஆனால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன்னு உனக்குத் தெரியுமா? பீஸ்ஸா டெலிவரியில் இருந்து, பெயிண்ட் அடிக்கிற வேலை வரை எல்லாமே பார்த்திருக்கிறேன். பார்ட் டைம், ஃபுல் டைம்ன்னு எல்லா வேலையும் பார்த்திருக்கிறேன். உன்னால் ஈஸியாய் சரி பண்ண முடியும் தான். ஆனால், என் கஷ்டத்தை உன்னால் புரிஞ்சுக்க முடியாது.! நான் உருவாக்கினதை அப்படியே உன்னால் திருப்பிக் கொடுக்கவும் முடியாது. என் வாழ்க்கையில் நீ வராமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது ஆதன். ஏன் என் வாழ்க்கையில் வந்தே? எதுக்காக வந்தே ஆதன்!” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கத் துவங்கியிருந்தாள் வாஹினி.
“ஏய்! வாஹினி, அவரை விடு! நம்ம இழப்பு பெருசு தான். அதுக்காக ஒட்டு மொத்தமாய் அவரை மட்டுமே குத்தம் சொல்றது தப்பு வாஹினி!” இடையில் புகுந்து தடுக்க முயன்றான் ஷியாம்.
“நீ சும்மா இருடா! உனக்கு ஒண்ணும் தெரியாது!” என ஷியாமை அடக்கியவள்,
“பிஸ்னஸ் டை- அப்ன்னு சொல்லி ஆரம்பிச்சே, என் அனுமதி இல்லாமலே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே! என் கழுத்தில் தாலி கட்டி என் வாழ்க்கையை அழிச்சப்போ கூட எனக்கு வலிக்கலை ஆதன்! ஆனால் இது.. இது என் அடையாளம். என் அடையாளத்தை ஒட்டுமொத்தமாய் உருத்தெரியாமல் அழிச்சுட்டியே? நான் எனக்கே எனக்குன்னு உருவாக்கி வச்ச அடையாளம். இந்த சிம்மவாஹினியோட அடையாளம்! எனக்கான அடையாளம் எதுவுமே இல்லை ஆதன்! என்னைப் பெத்தவங்க இவங்கதான்னு, அவங்கப் பேரைச் சொல்லி அடையாளப் படுத்திக்க எனக்குன்னு யாரும் இல்லை. அடையாளப் படுத்திக்கவும் நான் விரும்பலை. என்னையும் ஒரு மனுஷியா, இந்த சமூகத்தில் மரியாதையா என்னை அங்கீரிச்சு அடையாளப் படுத்தினது என் கேண்டி க்ரஷ் தான். இப்போ அது இல்லை! என் கனவு! என் இலட்சியம்! என் அடையாளம் எல்லாம் போச்சு. அநாதையா நிக்கிறேன் ஆதன். யாருமில்லா அநாதையா நாதியத்து நிக்கிறேன்! இதைப் பார்க்க தானே ஆசைப்பட்டே? உனக்கு இப்போ சந்தோஷமா? நீ நினைச்சதெல்லாம் நடந்துடுச்சு தானே?” என அவன் மீதே சாய்ந்து கதறியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஆதன்.
“அழாதே கேண்டி க்ரஷ்! நீ அநாதை இல்லை! உனக்கு சொந்தமா நான் இருக்கேன். நீ இந்த ஆதனோட மனைவி! உறவின் மூலமா உனக்கு அடையாளத்தைக் கொடுத்துட்டேன். உன் கேண்டி க்ரஷை மீட்டு உன் அடையாளத்தை நீ உயிரா நினைக்கிற உன் கடையை நான் உனக்கு திருப்பித் தருவேன் சிமி!”
“நான் இதுக்குத்தான் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்! கல்யாணம் என் அடையாளத்தை அழிச்சுடும்ன்னு பயந்தேன். நான் பயந்தபடியே நடந்துடுச்சு. என் கடை சீட்டுக்கட்டு மாளிகையா சரிஞ்சு போச்சு.!” தன்னையறியாமல் அவன் மார்பில் சாய்ந்து புலம்பிக் கொண்டிருந்தவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் ஆதன். அவனின் கண்களில் சதாசிவத்தின் மீதான கோபம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.
அந்த ஆதிசிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட அக்னி பிழம்பு மன்மதனை எரித்துப் பஸ்பமாக்கியதைப் போல, ஆதனின் மனதிற்குள், சிறு பொறியாய் விழுந்து ஜூவாலையாய் பரவிக் கொண்டிருக்கும் நெருப்பானது அந்த சதாசிவத்தை எரித்துச் சாம்பலாக்க நேரம் பார்த்துக் காத்திருந்தது.
இசைக்கும்..💛
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கேண்டி போனால் என்ன செய்துடுலாம். ஆதன் சிமி அழகை கடை இரண்டுக்கும் சேர்த்து வைப்பான் ஆப்பு.
நிச்சயமாக.. மிக்க நன்றி கலை மா ❤