Loading

21

 

“புரியல.. வேற யாராவதுனா?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

“எனக்கென்னமோ, பிரதாப்புக்கு எதிரான, அல்லது அவனோட செயலுக்கு எதிரான யாரோதான் இதையெல்லாம் செய்றாங்களோனு தோன்றுது. நல்லா யோசிச்சுப் பாரு. நீயும் நானும் இரவு பகல் பாராம அந்தக் காட்டுக்குள்ள சுத்தியிருக்கோம். நமக்கு இதுவரை ஒரு கீறல்கூட வரலை. அந்தப் பொண்ணு விஷ்ணு, ரெண்டு முறை அந்தக் காட்டுல மாட்டித் தப்பிச்சிருக்கா. இன்னும் சொல்லப்போனா, முதன்முறை அவ புதைகுழி பக்கத்தில் கிடந்து காப்பாத்திட்டு வந்தேனே, அப்பவே எனக்கு முன்ன யாரோ அவளைக் குழிக்குள்ளருந்து தூக்கி வெளிய போட்டுட்டுப் போயிருந்திருக்காங்க. அப்ப இந்த கொலைகளைப் பண்றவனோட டார்கெட் ஏன் காட்டைக் காப்பதா இருக்கக்கூடாது? ஒருவேளை அந்த மலைவாழ் மக்களில் யாரும்கூட இதுபற்றித் தெரிஞ்சு, அங்கப் பேயுங்குற புரளிக்குப் பின்னாடி மறைந்திருக்கலாம் இல்லையா?” என்று கருப்பசாமி கூறினான்.

 

யோசிக்க வேண்டிய விஷயம் என்றுதான் ராஜசிம்மனுக்கும் தோன்றியது.

 

“ஆனா ராஜ்..” என்று துவங்கிய கருப்பசாமியின் முகத்தில் ஒருவித இனம் புரியா சலனம்…

 

ராஜசிம்மன் அவன் முகத்தைக் கூர்ந்து நோக்க,

 

“என்னமோ தெரியல.. அந்தக் காட்டுக்குள்ளப் போகும்போதெல்லாம் எனக்கு ஒரு மாதிரி ஃபீலாகும்டா. அதை எனக்கு சொல்லத் தெரியலை. அத்தனைப் பிணங்களை என் கண்ணால பாத்து நானே அள்ளிப் போட்டிருக்கேன்.. ஆனா என்னமோ அங்க பயம் வந்ததே இல்லை.. சம்திங்.. சம்திங்..” என்று தடுமாறினான்.

 

“சம்திங் ரிலேட்டட் டூ யூ” என்று அவன் தடுமாறியதை ராஜசிம்மன் முடித்து வைக்க,

 

கருப்பசாமி திடுக்கிட்டுப்போய் அவனை நிமிர்ந்து பார்த்தான்.

 

அங்கு காட்டிற்குள் குகைக்குள்ளிருந்து வேண்டிய பொருட்களையெல்லாம் மட்டும் பையில் அடைத்துக் கொண்ட அபூர்வன், “உன்னால நடக்க முடியுமா?” என்று அவளிடம் கேட்க,

 

‘ஹப்பா.. அதிசயமா கேள்வியெல்லாம் கேட்குறான். இல்லைனா துரை வேகமா கையில தூக்கிட்டு போயிருப்பாரே?’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

அவள் மௌனத்தில், பொதிகளை முதுகில் கட்டிக் கொண்டவன், தன்னை முற்றும் மறைத்திடும் விதமாய் உடைகளை உடுத்திக் கொண்டு, அவளை கைகளில் ஏந்தியிருந்தான்.

 

“வேணாம். கீழ விடு. நானே வரேன்” என்று அவள் கூற,

 

“பரவாயில்லை” என்றவன், அவளைத் தூக்கிக் கொண்டு, காட்டின் கரடுமுரடானப் பாதையைக் கடந்து நடக்க ஆரம்பித்தான்.

 

“எங்கப்பா போறோம்?” என்று அவள் கேட்க,

 

அவளிடம் தெரிந்த உரிமையில் அவன் இதழ் புன்னகை பூத்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாத வகையில் அல்லவா அவன் முகம் மறைத்திருந்தான்.

 

“என்ன எதுமே பேச மாட்ற?” என்று அவள் கேட்க,

 

“நான் பின்னாடி கட்டியிருக்க மூட்டை, கையில் ஏந்தியிருக்க மூட்டை, என்னோட கனம்னு அத்தனையையும் சுமக்குறேன். பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ண முடியாது” என்று கூறினான்.

 

“ஹல்லோ.. என்னை மூட்டைங்குறியா நீ?” என்று அவள் கோபமாய்க் கேட்க,

 

அவளைத் தூக்கிப் பிடித்தவன், “ஹப்பா.. கொஞ்சம் கனமான மூட்டைதான்” என்று கூறினான்.

 

முசுமுசுவென்று கோபம் தலைக்கேற, “நீ கீழ விடு. அப்படியொன்னும் கஷ்டப்பட்டு என்னைத் தூக்க வேண்டாம். விடு” என்று அவள் கூற,

 

“கத்தாத” என்று கூறினான்.

 

“என்ன கத்தாத? என்னடா கத்தாத? கீழ விடு என்னை. ரொம்பதான் பண்ற” என்று அவள் கூற,

 

“பூண்டு பட்டாசு.. கம்முனு இருடி” என்று சிரித்தபடி கூறினான்.

 

முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள்.

 

காட்டில் பலரும் அறியாத பாதைகளுக்கு அதிபதியானவன், அதில் லாவகமாய் அவளையும் ஏந்திக் கொண்டு சென்று, வேறு ஒரு குகையை அடைந்தான்.

 

“இந்தக் காட்ல எத்தன குகைதான் இருக்கு? எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கியா” என்று விஷ்ணுப்ரியா கேட்க,

 

அவளுக்கு சால்வை ஒன்றை எடுத்து போர்த்தியபடி, “ஷ்ஷ்.. எதுவும் பேசாம கம்முனு வா. உனக்கு இன்னிக்கு எல்லாமே தெளிவா சொல்றேன்” என்று கூறினான்.

 

அவன் ‘ஷ்ஷ்’இல் வழமை போல் அமைதியானவள், அவன் கொடுத்த சால்வையைக் குளிருக்கு அணைவாகப் போர்த்திக் கொள்ள, சென்று குகையை சுத்தம் செய்தான்.

 

அழகாய் அன்னநடை போட்டு அவள் ஒரு கல்லில் அமர,

 

“நல்லாதான நடக்குற? அப்புறம் ஏன் என்னைத் தூக்கிட்டு வர வச்ச?” என்று கேட்டான்.

 

“என்னால நடக்க முடியாதுன்னு நான் சொல்லவே இல்லை. என் கால் எப்பவோ சரியா போச்சு. நீதான் பதிலுக்கு முன்னவே தூக்கிட்ட. நானும் இந்தக் காட்டுல கால் நோக நடக்க வேணாமேனு விட்டுட்டேன்” என்று தோள்களை அவள் குலுக்கிக் கொள்ள,

 

“சரியான வாயாடி நீ” என்று கூறினான்.

 

“ஆமா.. நான் கொஞ்சம் அப்படித்தான். நிறைய பேசுவேன். பேசலைனா எனக்கு தலையே வெடிச்சுடும். என் தலையெழுத்து இந்தக் காட்டுக்குள்ள பேச்சுக்குக்கூட ஆளில்லாம தவிக்குறேன்” என்று அவள் கூற,

 

“ஏன் என்னைப் பார்த்தா மனுஷனா தெரியலையா?” என்றான்.

 

“சத்தியமா தெரில.. சிலநேரம் பேய் மாதிரி ஃபீல் தர்ற, சிலநேரம் கொலைகாரன் போல் ஃபீல் தர்ற. திடீர்னு வர்ற திடீர்னு காணாம போயிடுற. சத்தியமா முதல் இரண்டு நாள் நீ பேய்தான்னு நான் முடிவுக்கே வந்துட்டேன்” என்று அவள் கூற,

 

அவனிடம் லேசான சிரிப்பு.

 

“ஆனா உன்னை எங்கேயோ பார்த்த ஃபீல் குடுக்குது. எங்க? எப்ப? எப்படி? எதுவும் தெரியல. யோசிச்சாலும் நினைவு வரலை. கேட்டா நீ சொல்லவும் மாட்ட. உன்னோட எரிச்சல்தான்” என்று கடுப்பாக அவள் கூற,

 

அவன் வாய்விட்டு சிரித்தான்.

 

“தெரில.. எப்பவாவது நீ என்னைப் பார்த்திருக்கலாம்.. ஏதும் சம்பவம் நடந்து உன் பார்வையோட கடைசி நினைவாகூட நான் இருந்திருக்கலாம்” என்று அவன் குதர்க்கமாய்க் கூற,

 

அவனைக் குறுகுறுவென்றுப் பார்த்தவள், “இப்படிப் பேசித்தான் கடுப்பைக் கிளப்புற” என்றாள்.

 

அனைத்தையும் சுத்தம் செய்து அவளை உள்ளே அமர்த்தியவன், தீவிரமானக் குரலில் “இங்க பாரு.. நீ நினைக்கிற போல இங்க எதுவும் விளையாட்டில்ல” என்க,

 

“முன் பின் தெரியாத ஒருத்தனை நம்பி வந்து விளையாடுற அளவு பக்குவமில்லாதவளும் நான் இல்ல” என சுள்ளென்று கூறினாள்.

 

“அப்படித்தானே வந்திருக்க என்கூட?” என்று அவன் கேட்க,

 

அவளிடம் மெல்லிய தடுமாற்றம். “இ..இல்ல.. நான் லைஃப்ல ஒருமுறையாவது உன்னைப் பார்த்திருப்பேன்.. எ..எனக்கு அது ஃபீலாச்சு” என்று கூறினாள்.

 

“ஓ.. அப்படியா?” என்று அவன் சிரித்தபடி கேட்க,

 

“உன்னோட ‘ஷ்ஷ்’, உன்னோட கண்.. உன் தீண்(டல்)..” எனக் கூற வந்து நிறுத்திக் கொண்டவள், “எங்கேயோ பார்த்த கேட்ட ஃபீல்” என்றாள்.

 

அவள் சொல்லியது, சொல்லாமல் விட்டது என்று அனைத்தும் அவன் கவனத்தை ஈர்த்தது.

 

“சரி இருக்கட்டும்.. உன்னை சேவ் பண்ணத்தான் நான் இதெல்லாம் பண்ணேன். உன் உயிருக்கு ஆபத்திருக்கு. நீ திரும்ப உன் வீட்டாளுங்களுக்குக் கிடைச்சாலும், உனக்குப் பாதுகாப்பில்லை. அதனாலதான் உன்னை என்கூடவே வச்சிருந்தேன். அந்த குகை நமக்கு சேஃபில்ல. என்னை நம்பு.. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எல்லா பிரச்சினையும் முடிஞ்சுடும்.. உன்னை பத்திரமா உங்க வீட்ல சேர்த்துடுவேன்” என்று அவள் கரம் பற்றி அழுத்தம் கொடுத்து அவன் கூற,

 

“அப்ப நீ?” என்று கேட்டாள்.

 

அவன் உயிரே உருகியது, அந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையில்… எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனது? அவனுக்காக ஒரு உயிர் யோசித்து? அந்த நொடி, தனக்கென்ற உயிர்களும் இன்னும் இவ்வுலகில் உள்ளதென்று மனமார உணர்ந்து நெகிழ்ந்தான்..

 

“ந..நான்..” என்று அவன் தடுமாற,

 

“எங்க அண்ணா சைன்டிஸ்ட்தான்.. உன் பிரச்சினை என்னனு சொல்லு.. அவங்க கண்டிப்பா உனக்குத் தீர்வு கொடுப்பாங்க. உன்னையும் க்யூர் பண்ணிடலாம். இல்லைனாலும் பரவாயில்ல.. நீயும் எங்களோடவே இரு.. பிரம்மா, சுபி, ப்ரீத்தி, சுடரண்ணா.. நம்ம குடும்பமே பெருசுப்பா.. நீ தனியாள் இல்ல” என்று அவன் கரத்தின் மேல் தன் கரம் வைத்து அழுத்தம் கொடுத்துக் கூறினாள்.

 

அவள் வார்த்தைகளில் காதலில்லை. ஆனால் அவன்மீதான அக்கறை மலையளவு பொங்கி வழிந்தது…

 

“ப்ளீஸ்..” என்று அவள் கேட்க,

 

“பார்ப்போம்” என்றபடி எழுந்து வெளியேறினான்.

 

அங்கு, தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்த பிரதாப், “ச்சை.. எவன்டா அவன்? யாரந்த பர**சி. நான் அனுப்புற ஆளுங்க எல்லாரையும் கொன்னதும் இல்லாம, மொத்தமா அவங்க எல்லாரோட பிணத்தையும் தூக்கி வீசி, மொத்த சந்தேகத்தையும் என் பக்கம் திருப்பி விட்டு வச்சிருக்கான்.. ச்சை” என்று கடுப்போட கத்த,

 

அவனது காரியத்தரசியான தருண், பயம் கூடிய மரியாதையோடு அவன் முன் நின்றிருந்தான்.

 

“அந்த ஊர் மக்களைத் துறத்திவிட நான் போட்ட பேய் வேஷத்தை வச்சு, எவனோ ஒருத்தன் எனக்கே செக் வைக்கப் பார்க்குறானாமா? எவன்டா அவன்? தைரியம் இருந்தா எம்முன்ன வந்து நிக்கச் சொல்லு அந்தப் பர**சிய. பயந்தாரிப்பய” என்று பிரதாப் கத்த,

 

“அங்க இப்ப எந்த காட்டுவாசிகளும் இல்லையாம் சார். அவங்க எல்லாருமே பேயுக்குப் பயந்துதான் போனதா தகவல் வந்தது. ஒருவேளை நிஜமாவே அங்க..” என்று தருண் இழுத்தான்.

 

“ஃபூல்.. அவங்களைத் துறத்த நான் தான் அந்தக் காட்டுல பேய் இருக்குனு கிளப்பிவிட்டேன். ரெக்கார்டர்ஸ் எல்லாம் பிக்ஸ் பண்ணி பேயிருக்குற போல செட் பண்ணதே நான் தான். அர்த்த ராத்திரில நானே அங்க போயிருக்கேன். அப்போவெல்லாம் இல்லாதப் பேய் இப்ப வந்துடுச்சா? இதெல்லாமா நம்புற நீ? ஸ்டுப்பிட்” என்று பிரதாப் கத்த,

 

பயத்துடன் தருண் தலை கவிழ்ந்தான்.

 

மேஜையில் கரங்கள் ஊன்றி குனிந்து நின்ற பிரதாப், “கண்டுபிடிக்கிறேன்.. அது எவன் எனக்கே பேயோட்டப் பார்க்குறான்னு நானும் கண்டுபிடிக்குறேன்..” என்று தீவிரமானக் குரலில் கூற,

 

தன்னைப் பல திசைகளிலிருந்து ஆட்கள் தேடுவதை உணர்ந்தும், படு அசட்டையாக அமர்ந்து விஷ்ணுவுடன் கதை பேசிக் கொண்டிருந்தான், அபூர்வன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்