Loading

அகம் 17

பாட்டி என்றவுடன் வயது முதிர்ந்து எழுந்து நடக்க முடியாது, படுக்கையில் இருப்பார் என்ற நினைப்பில் வந்த அவந்திகைக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அதற்கு மாறாகக் கொஞ்சம் இளமையாகவும், வீட்டின் வரவேற்பரையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வயதனவர் போலவே இல்லை, திடமாகவும் அவருடைய வேலைகளை அவரே செய்தபடி இருந்தார் அந்தப் பாட்டி.

“நீங்க ரெண்டு பேரும் யாரு.? எந்த ஊர்ல இருந்து வர்றிய.?”எனக் கேட்டவரின் குரலில் அவ்வளவு ஒரு கம்பீரம்.

“பாட்டி நாங்க விக்கிரமசிங்கபுரத்துல இருந்து வந்திருக்கோம், நான் முத்துவேலோட மக, இவிய எங்க வீட்டுகாராவிய, செந்தில் நாதன் மாமனோட மகன்” என அறிமுகப் படுத்திக்கொள்ள.

“நீங்க என்னைத் தேடி வந்திருக்கியனா.? என்ன விசயமா இருக்கும்” எனப் பாட்டி யோசனையில் மூழ்க,

“பாட்டி உங்க பேரு என்ன.? அதைத் தெரிஞ்சுக்கத் தான் வந்திருக்கோம்” என அகன் பதில் கொடுத்தான்.

“என் பேரை தெரிஞ்சுக்கவா இவ்வளவு தூரம் வந்திய.?” கேள்விகள் தாங்கிய விழிகளுடன் பார்த்தார் பாட்டி.

“விக்கிரமசிங்கபுரம் ஊர் எல்லையில இருக்கச் சாமிக்குக் கோவில் கட்டியிருக்கோம், எல்லாரும் அவளைக் காவக்காரின்னு சொல்லிதான் பழக்கமாம்” எனச் சொல்லிக்கொண்டிருந்த அவந்திகை இடைநிறுத்தினாள்.

“காவக்காரியை பத்தி தெரிஞ்சிகிட வந்தியளா.?” என அவர் சிரிக்க,

“என்ன பாட்டி சிரிக்குறீங்க.?”அகன் புரியாமல் விழித்தான்.

“வாங்க சாப்பிட்டுட்டு பேசுவோம்” என்றவர் இருவருக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருக்க, இளநீருடன் வந்தார் இசக்கி. நால்வரும் சேர்ந்து உணவருந்திவிட்டு, இளநீரை பருகினர்.

“இங்க பாரு ஆத்தா.! காவக்காரின்னு சொல்லியதுக்குப் பதில் அவளைக் கோவக்காரினே சொல்லாம் பார்த்துக்க” அவந்திகையின் முகம் பார்த்து பாட்டி சொன்னார்.

“ஏன் பாட்டி அப்படிச் சொல்லுறிங்க.? தப்பு எங்க மேலதான், அதுக்குத் தான் கோவிலை கட்ட வச்சா காவக்காரி” என அவந்திகை விவரித்தாள்.

“அவ நினைச்சத சாதிச்சிடாளே” என அவர் சிரிக்க அவந்திகையும் அகனும் ஒருவரை பார்த்துக்கொண்டு புரியாது விழித்தனர்.

“அவ அந்த நாலு முக்கு ரோட்டுல தான் இருப்பா, அந்த இடத்துல, பெரிய குளம் உண்டு தெரியுமா.?”

“குளமா.? என்ன பாட்டி சொல்லுதிய அங்க குளமெல்லாம் இல்லை பாட்டி”

“குளக்கரையில தான அவ குடியிருந்தா.?” பாட்டி சொல்ல,

“என்ன பாட்டி சொல்லுதிய அங்க குளமெல்லாம் இல்லை பாட்டி” என அவந்திகை யோசிக்க.

“அவ்வளவும் காடாகிருக்கும், மழை தண்ணி வந்தா அதுல தான் தேங்கி நிக்கும்” எனப் பாட்டி விவரிக்க, அவளுக்குப் புரிந்தது.

“அந்தக் குளக்கரைக்கும் காவக்காரிக்கும் என்ன சம்மந்தம் இருக்கு பாட்டி.?” அவந்திகை நேராய் விசயத்துக்கு வந்தாள்.

“சொல்லுதேன் கேளு, அப்போ எனக்கு எட்டு வயசு இருக்கும், எங்க அம்மையும் அய்யனும் காடு கரைக்குப் போயிடுவாவ, எங்க அண்ணன் வயசு பண்ணிரெண்டு, கேட்டியா.?”

“ம்ம் சொல்லுங்க பாட்டி” என்றாள் அவந்திகை.

“விக்கிரமசிங்கபுரத்துல இருக்கக் குளத்துல எல்லாப் பிள்ளைகளும் மீன் பிடிக்கப் போவும், நானும் என் அண்ணேன்ட்டா சொல்லிட்டு குளத்துக்குப் போனேன் பார்த்துக்க, என் கூட்டுகார பிள்ளலைலுவ இரண்டு பேர் வந்திருந்தாளுவ, அவியளுக்கூடச் சேர்ந்து குளக்கரைக்குப் போனோம்” என அவர் இடைநிறுத்த,

“அப்பறம் என்னாச்சு பாட்டி.?”

“குளக்கரை முழுக்க எகபட்ட சனக் கூட்டம், எங்களுக்கு ஒன்னும் விளங்கலை, பிறவு பார்த்தா குளத்துகுள்ள ஒரு சின்னப் பிள்ளை விழுந்திருக்கு அதைக் காப்பாத்தி கொடுத்தது யாருங்கற.?”

“காவக்காரியா பாட்டி.?”

“காவக்காரியா..? வீரபத்ரகாளி..!” என அவர் சிரிக்க, உடல் முழுவதும் சிலிர்த்து போனாள் அவந்திகை. அந்தச் சிரிப்பும் அவள் கேட்ட காவல்காரியின் சிரிப்பும் சரியாய் ஒத்துபோனதை கண்டு அதிர்ந்தே போனாள் அவந்திகை.

“உங்க பேரு வீரபத்ரகாளியா பாட்டி.? உங்களுக்கு ஏன் இந்தப் பேரை யாரு பாட்டி வச்சது.? சாமிய ஊர்ல இருக்க எல்லாரும் கண்ணால பார்த்தங்களா பாட்டி.?” அகன் வரிசையாய் கேள்விகளை அடுக்கினான்.

“ஆமா என் பேரு வீரபத்ரகாளி,எனக்கு இந்தப் பேரை என் அய்யன்(அப்பா) தான் வச்சாராம், அங்க இருந்த பாரிஜாதமரத்தை வச்சு தான் சாமி கும்பிடுவாவளாம், குழந்தைய காப்பத்தினதுக்கு அப்பறம் அவளோட பேரு வன வீரபத்ரிகாளின்னு அவளே குரலா வந்து சொல்லிருக்கா” எனப் பாட்டி சொன்னதைப் பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். இத்தனை காலம் காவல்க்காரி, என நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு வன வீரபத்ரகாளி என அறிந்துக்கொண்டது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

“பாட்டி வன வீரபத்ரகாளிக்குக் கொடை கொடுக்குதோம், நீங்க கண்டிப்பா வரணும் என அவந்திகை மரியாதையுடன் அழைப்பு கொடுக்க மறுக்காமல், அழைப்பை ஏற்றுக்கொண்டவர், இருவருடன் காரிலே விக்கிரமசிங்கபுரம் நோக்கி பயணம் செய்தார் வீரபத்ரகாளி.

***************

சாமியின் பெயரை கண்டுபிடித்த சந்தோசம், குடும்பத்தில் அனைவருக்கும் அப்படியொரு மனநிறைவு, அருள்மிகு வன வீரபத்திரகாளி என்ற பெயர் பலகை அடித்து, கோவிலே பிரம்மாண்டமாய் இருந்தது. அருகில் இருந்த குளம் தான், இருந்த இடமே தெரியாம் காணாமல் போயிருந்தது, அங்கே காடு போல் வளர்ந்து இருந்த சீமை கருவேலமரங்களை வேறோடு பிடிங்கி ஏறிய ஏற்பாடு செய்தார்கள் மன்னராசாவும், அகனும். குளம் இருந்த சுவடே தெரியாமல் போனதன் முக்கியக் காரணமே இந்தச் சீமை கருவேலமரங்கள் தான்.

சீமை கருவேலம் வறண்ட நிலங்களில் எந்த வித கவனிப்பும் இல்லாமல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மண் பக்குவம், பருவநிலை போன்ற எதைப் பற்றியும் கவலையில்லாமல் எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய தாவரம்.

பொதுவாக நாம் மரங்களை எளிதில் வெட்டி சரிக்க மாட்டோம்., சீமை கருவேலமரங்கள் நம்மூரைச் சேர்ந்ததல்ல, அது நம் ஆரோக்கியத்தைக் கெடுப்பதைக் காட்டிலும், நம் மண்ணை மலடாக்கும் சக்தியை கொண்டது, நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சிவிடும், மழை நீர் இல்லவிட்டால் கூட, நிலத்தடி நீரை முழுவதுமாய் உறிஞ்சிவிடும், இந்த நச்சுத் தன்மை கொண்ட மரம், இந்த மரத்தின் அடியில் கால்நடைகளைத் தொடர்ந்து கட்டி வைப்பதால் மலட்டுத் தன்மை ஏற்படுத்துகிறதாம். அதனால் அந்த ஊரில் உள்ள அனைத்துச் சீமை கருவேல மரங்களையும் வேறோடு பிடிங்க ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் செய்வதைப் பார்த்து நரசிங்கபுரத்திலும் சீமை கருவேல மரங்களை வெட்ட ஆரம்பித்திருந்தனர்.

***************

வன வீரபத்ரகாளி நினைத்தது போல் வாழைமரங்கள் கட்டி, பந்தலிட்டு, இரண்டு ஊரையும் இணைக்கும் படி அலங்காரம் செய்து, புதுச் சிலையைப் பிரதிஷ்ட்டை செய்து, மாலை ஆபரணங்கள் சூடி அழகாய் மிளிர்ந்தாள் வன வீரபத்ரகாளி, பூஜைக்காகப் பாரிஜாதபூக்களும் வைக்கபட்டிருந்தது.

இவர்கள் கொடுத்த கொடையை ஏற்றுக் கொள்வதாய் ஒரு பெண்ணின் மீது இறங்கி வாக்கு கொடுத்தாள் வன வீரபத்ரகாளி. அனைவரும் மனநிறைவுடன் தரிசனமும் பெற்றுக்கொண்டனர், அதன்பின் கோவிலில் அமைக்கபட்டிருந்த சிறிய மண்டபத்தில், அன்னதானமும் வழங்கப்பட, ஊரே விழாக்கோலம் பூண்டது.

சில நேரங்களில் நமக்குள்ளேயே விடையை வைத்துக்கொண்டு விடைக்காகத் தேடி அலைகிறோம், அப்படித் தான் வன வீரபத்ரகாளியும், இப்படி மறக்கப்பட்ட தெய்வங்கள் நம் ஊரில் ஏராளம், எங்கோங்க சிறு தெய்வங்களாய், காட்டிற்குள்ளும், சாலையின் ஓரத்திலும் குடியிருக்கும் சிறு தெய்வங்களுக்கும் சில கதைகள் உண்டு, அதை நாம் அலட்சியமாய்க் கடந்து சென்று விடுகிறோம்., ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கதையை யாரும் கேட்டறிய முனைவதில்லை, அகனும், அவந்திகையும், அதைக் கேட்டறிந்ததோடு, அவளுக்குக் கோவிலும் கட்டி அழகு பார்த்து விட்டனர்.

************

அகத்தினியன், வீட்டின் பிரம்மாண்டமான வரவேற்பரையில் சோபாவில் அமர்ந்திருந்தனர். வீரபத்ரகாளி பாட்டி வந்ததற்காக, ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு, புடவை, அனைத்தும் வைத்து , அவர்களுக்குக் கொடுத்து மரியாதை செய்தனர்.

“எனக்கெதுக்கு இதெல்லாம்” என வீரபத்ரகாளி கேட்டார்.

“பாட்டி அப்படிலாம் நினைக்காதீங்க, நீங்க இல்லைனா திருவிழாவே நடந்திருக்காது, நீங்க மட்டும் பேரை சொல்லலைன்னா என்ன செஞ்சிருப்போம்னு எங்களுக்கே தெரிஞ்சிருக்காது” அகன் சொல்ல, புன்னகையுடன் தாம்பூலத் தட்டை பெற்றுக்கொண்டார்.

“ஒருத்தருக்கும் இந்த அத்தை பேரு தெரிலையோ.?” என முத்துவேலை பார்த்து கேட்டார் வீரபத்ரகாளி.

“இல்ல அத்தே.! எல்லாரும் கூடங்குளத்து அத்தைன்னு சொல்லுவாவ, அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்” தலையைச் சொறிந்தபடி சொன்னார் முத்துவேல்.

“சரியா போச்சு.! நீங்களே இப்படி இருந்தா, இனி வரதுங்களுக்கு , என்னத்த சொல்லிக்கொடுத்து தரப்போறியளோ.” என அவர் கவலையுடன் பேசிக்கொண்டிருந்த போதே அவரின் மகன் இசக்கி வந்துவிட, அவருடன் கிளம்பி சென்றுவிட்டார் வீரபத்ரகாளி.

*****

அன்றிரவு:

அகனின் அறைக்குள் பால் டம்ளருடன் நுழைந்தாள் அவந்திகை. சிவப்பு நிற இதமான காட்டன் புடவையை அணிந்திருந்தாள்.

“அகன் இந்தாங்க இந்தப் பாலை குடிங்க” என அவனிடம் நீட்டினாள்.அதை வாங்கிப் பருகிவிட்டு, டம்ளரை ஓரமாய் வைத்தவன்.

“என்ன அவந்தி டையர்டா இருக்கியா.?”

“இல்லையே அகன். ஏன் கேக்குறிங்க.?”

“டையர்ட் ஆக்க தான்” எனக் கண்சிமிட்டி சிரித்தவனை, இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள் அவந்திகை.

“போங்க அகன், இன்னைக்கி தான் நிம்மதியா தூங்கணும்”

“ஏன் இவ்வளவு நாள் நிம்மதியா தூங்கலையா.? அவந்தி”

“ஒரு பக்கம் லேகா பிரச்சனை, இன்னொரு பக்கம் சாமிக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறவு மன்னராசா, சிவசக்தி விசயம், எல்லாமே ஒரு முடிவுக்கு வந்ததுல அவ்வளவு நிம்மதியா இருக்கு அகன், ஆனா நீங்க இல்லைனா எதுவுமே செஞ்சிருக்க முடியாதுல்ல” அவள் சொல்லி முடிக்க.

“சரி எனக்கு ஒரு உண்மைய சொல்லு அவந்தி”

“என்னது அகன்.?” கேட்டபடி அவனருகே வந்து படுத்துக்கொண்டவள், அகனின் தோள் சாய்ந்தாள்.

“உன் தங்கச்சிகாகத் தான என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்ன” பட்டென அகன் கேட்டு விட,

“அப்படியும் சொல்லலாம்” என அவள் வார்த்தைகளை உள் இழுக்க.,

“ ஓ அப்போ அது தான் உண்மை” அவன் வார்த்தைகளை அழுத்தி கேட்டான்.

“ஓ நீங்க அப்படி வர்றியளா.? நீங்க உங்க அப்பாக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்துகாகத் தான, இந்த ஊருக்கே வந்திய, ஆ..! இப்ப பதில் சொல்லுங்க அகன்” என்றவள் அவன் கன்னத்தைக் கிள்ளி வைத்தாள்.

“அப்படியும் சொல்லலாம்” என அகனும் வார்த்தைகளை உள் இழுக்க,

“இரண்டுத்துக்கும் சரியா போச்சு” என அவந்திகை சமாளித்தாள்.

“அப்போ இந்த லவ்வு, காதல்லாம் நம்ம லைஃப்ல இல்லவே இல்லைல அவந்தி”

“ஆமா இல்லவே இல்லை அகன்”

“இப்பயும் இல்லையா அவந்தி?” ஏக்கத்துடன் கேட்டான்

“இல்லாமா தான், உங்க பிள்ளைய என் வயித்துல சமந்துகிட்டு இருக்குதேன்” என அவள் சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ஓ அப்படியா.?” எனச் சொன்னவனின் புத்தியில் உரைக்கவே நேரம் எடுத்தது.

“ஏய் அவந்தி திரும்பு இப்போ என்ன சொன்ன.?” அவள் முதுகை தொட்டு இழுத்தான்.

“என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லலையே” எனச் சொன்னவள், அவன் முகத்தைப் பார்க்க மறுத்து, முகத்தை மூடிக்கொண்டாள்.

“யூ மீன் பேபி.?”

“யஸ்ஸூ.!” எனச் சொல்லி அவன் நெஞ்சாங்ககூட்டில் முகம் புதைத்துக்கொண்டாள் அவந்திகை.

“ஏய் அவந்தி.! நிஜமாதான் சொல்றியா.?”

“உங்க கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு வந்தா, நிஜமா பொய்யா கேக்குதியா” முறைத்தாள் அவந்திகை.

“அய்யோ அவந்தி இப்படிலாம் பண்ணாத”

“எப்படிங்க நான் என்ன பண்ணினேன்” அவள் பதட்டதுடன் கேட்க,

“நீ இப்படிலாம் கோபபடாத” அகன் சொன்னான்.

“ஏன் அகன்.?” புரியாது விழித்தாள்.

“இல்லை அது வயித்துகுள்ள இருக்கப் பேபிக்கு தெரிஞ்சா, எங்க அப்பாவ எதுக்குத் திட்டுறன்னு உன்ன நிக்க வச்சுக் கேள்வி கேட்கும்” என அகன் சிரிக்க, அவந்திகையும் சேர்ந்துக்கொண்டு கலகலவெனச் சிரித்தாள்

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
5
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்