
வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, புருவங்கள் சுருங்க மூடிய கதவுகளைப் பார்த்தான் இளநந்தன்.
இரண்டு வாரங்களாக அவன் அவனது தாய் தந்தை வாழ்ந்த வீட்டில்தான் இருக்கின்றான். கோபத்தில் ஜனனி ஏதேதோ வார்த்தைகளை விட, அவளது நிம்மதியையும் சந்தோஷத்தையும் உடன் இருந்தே அழித்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, அவனும் அவளை விட்டு விலகி இரு வாரங்களாகப் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே தலைமறைவாகத் தங்கி இருக்கிறான்.
தேவையானவற்றை வெளியே சென்று வாங்கிக்கொள்ளாமல் இணைய வழியே வாங்கிக்கொள்வான். இரவில்தான் வெளியே வந்து காற்று வாங்குவான். பகல் முழுவதும் உள்ளே அடைந்து கிடப்பான்.
அவனுக்கும் மனிதர்களுடன் கலந்து பேசி, சிரித்து மகிழ்ந்து வேலை செய்ய வேண்டும்; வீட்டில் பெரியப்பா, பெரியம்மாவிடம் மணிக்கணக்காகப் பேச வேண்டும்; சச்சினுடன் விளையாட வேண்டும்; ஜனனியுடன் வம்பிழுத்துக் கோபம் கொள்ளச் செய்ய வேண்டும் – அதுவே இங்கு வந்த கொஞ்ச நாட்களிலும் அவனது வழக்கமாகிப் போனது. அவனது நாட்கள் அழகாகத்தான் இருந்தன.
ஆனால், ஜனனி விட்ட வார்த்தைகள்தான் அவனது மனத்தைப் புண்ணாக்கியது. தன்னால் அவள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும், அதுதானே சிறந்த காதலனுக்கும் கணவனுக்கும் பெருமை! ஆனால், அதுவே அவனால் பறிபோகிறது என்றால், விலகுதலைத் தவிரச் சிறந்த முடிவு வேறெதுவும் இல்லை என்று எண்ணி அவளை விட்டு இதோ இரண்டு வாரங்கள் பிரிந்துவிட்டான்.
இதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் பெரியம்மா, பெரியப்பா வேறு “எப்போது வருவாய்?” எனக் கேட்டுக் கொண்டே இருக்க, என்ன செய்வதென்று யோசனையில் இருந்தான். அவன் இங்கு வந்த முதல் நாளே விஷயத்தை விபுவிடம் கூறினான்.
“இருபத்தொன்பது வயசானாலும் இன்னமும் அவளுக்குச் சுயமா யோசிச்சு முடிவெடுக்கத் தெரியலை பாரேன். அவளைத் தவிர மத்த எல்லாரையும் பத்தி நினைக்கிறா! அதுதான்டா கடுப்பாகுது! விடு, நீ எடுத்த முடிவு சரி! கண்டிப்பா இந்தப் பிரிவு அவளுக்குள்ள மாற்றத்தை ஏற்படுத்தி, உன்னைத் தேடி ‘காதல்’னு ஓடி வருவா பார்றேன்,” என விபு சொல்ல,
“அதெல்லாம் அவ வரமாட்டா! அவ என்னைத் தேடி வரணும்னு இந்த முடிவை எடுக்கல. என்னால அவ நிம்மதி கெட வேணாம்… நான் பாதில வந்தவன், பாதிலயே போயிடுறேன்… என்னைத் தேடி அவ வர வேணாம். நான் வேற முடிவெடுக்கணும் விபு…” என இவன் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.
“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே, இரண்டு வாரம் அங்கே இரு! உன்னைத் தேடி அவ வரலைன்னா, உன் முடிவு சரின்னு வச்சுக்கலாம். அவ வந்தான்னா, அப்புறம் நான் சொல்லணும்னு இல்ல, நீ அவ இழுத்த இழுப்புக்குப் போய்த்தான் ஆகணும் சகலை! பார்ப்போம் என்ன நடக்குது,” என்ற விபு, நந்தனின் முடிவை ஏற்று அவனுக்கு ஆறுதல் சொன்னாலும், அவன் சார்பாக அதில் ஒரு நம்பிக்கையையும் வைத்தான்.
விபு சொல்வது போல நடக்க வேண்டும் என்று ஒரு மனம் ஆசைப்பட்டாலும், ஜனனி பேசின வார்த்தைகளை வைத்து, உள்ளுக்குள் அவள் வரமாட்டாள் என்றது மற்றொரு மனம். இப்படியாக அவனது நாட்கள் அவளை எதிர்பார்த்து ஏமாந்து ஒரு வாரத்தைக் கடந்து, அவனை மறுவாரத்திற்குத் தள்ளிவிட்டது.
இனியும் அவள் வரமாட்டாள் என்ற முடிவுடன் “என்ன செய்யலாம்?” என்று யோசிக்கும்போதுதான் அவனது வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. ‘ஆர்டர் எதுவும் போடலையே! ஒருவேளை விபுவா இருக்குமா? இந்த நேரம் ஸ்கூல்ல இருப்பான்! யாரா இருக்கும்!’ என யோசித்தபடி கதவைத் திறந்தவன் கண்ணிற்கு விருந்தாக, ருத்ர காளியாக நிற்கும் ஜனனியே தெரிந்தாள். தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை.
அப்படியே அசையாமல் சிலை போல நின்றவனை, தனது கைப்பையால் அடித்து நினைவிற்குக் கொண்டு வந்தாள். “வழியை மறைச்சுட்டு நிக்காம தள்ளு!” என்று அவனை இடித்துத் தள்ளிவிட்டு, தனது வலது பாதத்தை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.
அவளை இரண்டு வாரங்கள் கழித்துக் கண்டதும், அன்னையைப் பிரிந்த குழந்தை பரவசம் கொண்டு தாவிக் கொள்வது போல, அவளைக் கண்டதும் எல்லாம் மறந்து அவளை அணைக்கத் துடித்தன கைகள்… ஆனால் மறுநொடியே அனைத்தும் நினைவிற்கு வர, கற்பாறையாக நின்றான்.
அவள் திரும்பி அவனைத்தான் பார்த்தாள். விறைப்பாக நிற்பவனைக் கண்டு, இவளுக்குத்தான் உள்ளுக்குள் நெருஞ்சி முள் குத்துவது போலச் சுருக்கென்று குத்தியது. தன்னைச் சரி செய்துகொண்டு அவனிடம், “எவ்வளவு நேரம் அங்கே நிக்கப் போற? உள்ளே வா,” என்றாள்.
“உங்க நிம்மதி, சந்தோஷத்தைப் பறிக்க வந்தவன் வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க?” எனக் கோபமாகக் கேட்டான்.
“பறிச்சுட்டுப் போன நிம்மதி, சந்தோஷத்தை வாங்க வந்திருக்கேன்.”
“அதெல்லாம் தான் என்கிட்ட இல்லையே… யார்கிட்ட உங்களுக்குக் கிடைக்குமோ அவங்ககிட்ட கேட்டுக்கோங்க.”
“ஓ… அப்படியா சரி சரி! வீட்டுக்கு வந்த என்னைக் ‘வா’ன்னு கேட்கல… அட்லீஸ்ட் காபி வேணுமா, டீ வேணுமான்னு கூடக் கேட்கிறது இல்லையா?” என்று அவனை வம்பிழுக்க,
“என்ன வேணும் உங்களுக்கு?” என்றான் அவளைப் பாராமல்.
“எனக்கு என்ன வேணும்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல, அவனை முறைத்துவிட்டு உள்ளே சமையலறைக்குள் சென்றான்.
இவளோ அங்கே போடப்பட்டிருந்த ஊஞ்சல் மீது அமர்ந்தாள். அவள் அவன் வீட்டிற்கு ஒரே ஒரு நாள்தான் வந்திருப்பாள். அவள் வந்த அன்றே “இங்கே ஒரு ஊஞ்சல் இருந்தா நல்லா இருக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனாள். ஆனால் இன்று அதே இடத்தில் ஊஞ்சல் இருப்பதைக்கண்டு விழிகள் விரிய ஆச்சரியமாகப் பார்த்தாள்.
கையில் காபியுடன் வந்தவன் ஒரு கணம் திகைத்துவிட்டு அவளிடம் காப்பியை நீட்டினான். அவளும் விழிகளால் ஊஞ்சலைக் காட்டி அமரச் சொன்னாள். அவனும் இடைவெளி விட்டு அமர்ந்தான்.
“நான் வந்தப்ப இந்த ஊஞ்சல் இல்லையே, எப்போ மாட்டுனீங்க?”
“நீ வந்து போன மறுநாளே! அப்பா மாட்டுனார். அதுவும் நீ சொன்னதுக்காக,” என்றான் பழைய நினைவுகளைச் சுமந்து.
“அப்போ நீ என்னைக் காதலிச்ச விஷயம் அவங்களுக்குத் தெரியுமா?”
“ம்ம்.. உன்னை அவங்க மருமகளாவே நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க! அம்மா இருந்திருந்தால் நிச்சயம் உன்னைப் பெண் கேட்டிருப்பாங்க! அதுக்குள்ள…” என்று நிறுத்தியவன் பெருமூச்சை விட்டான்.
“இப்பவும் அவங்க என்னை மருமகளாத்தானே நினைச்சுட்டு இருப்பாங்க,” என்று மேலே பார்த்துச் சொன்னாள்.
விரக்தியில் சிரித்த நந்து, “ம்ம்.. ஆனா பாவம் அவங்களுக்குத் தெரியாது, நீ எப்பவும் மருமகளாக முடியாதுன்னு,” என்று குரல் தழுதழுக்கச் சொன்னான். இருவருக்கும் இடையே பெரும் அமைதி.
“நந்து, ரியலி சாரிடா! கோபத்துல வார்த்தைகளை விட்டுட்டேன்… தப்புதான். அதுக்கு நீ கொடுத்த தண்டனை அதிகம்டா… என்னை மன்னிச்சுடு. ப்ளீஸ் வீட்டுக்கு வா,” என்றாள்.
“கோபத்துல சொன்னாலும் உண்மையத்தானே சொல்லிருக்கீங்க ஜனனி மேடம். நான் உங்களுக்குச் சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்க வந்தவன்னு நினைச்சேன். அதைப்பறிக்க வந்தவன்னு இப்போதான் புரிஞ்சது. இனி நான் உங்க சந்தோஷத்தையோ நிம்மதியையோ பறிக்க மாட்டேன். விலகிப் போயிடறதுதான் நல்லது. அதனால விலகி வந்தேன்.. இப்படி கொஞ்சம் கொஞ்சமாப் பிரிஞ்சா நமக்குள்ள எந்தப் பாதிப்பும் இருக்காதுல்ல?”
“நந்து ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு,” என்றவளுக்கு முதுகு காட்டி நின்றவன், “நீ எதுவும் சொல்ல வேணாம் ஜனனி! ப்ளீஸ் இங்கிருந்து போயிடு! ப்ளீஸ் போயிடு,” என்றான்.
“நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேட்டுட்டுப் பேசேன்டா.”
“இல்ல ஜனனி! நீ எதுவும் பேச வேணாம். ஏற்கனவே நீ பேசின வார்த்தைகள் எனக்குள்ள காயமா இருக்கு. மேலும் பேசி வலியை உண்டாக்கிடாதே! ஆறுதலுக்குத் தோள் சாயக்கூட எனக்கு யாரும் இல்லை… ப்ளீஸ்,” எனக் கண்ணீர் மல்கச் சொன்னான்.
“நந்து…”
“ப்ளீஸ்! இங்கிருந்து போயிடு! போயிடு ஜனி! போயிடு!” என கிட்டத்தட்டக் கத்தியிருந்தான்.
அவளும் “ஓகே! நான் போறேன்,” என்றவள் அவன் திரும்பி நிற்கும் வேளையில் வெளியே செல்லாமல், அருகே இருந்த அறைக்குள் சென்று கதவைப் பட்டென்று சாத்தினாள். கதவை இழுத்துச் சாத்தும் சத்தம் கேட்டதும் பட்டெனத் திரும்பினான். அவள் அங்கு இல்லை.
பதறியவன் வேகமாகத் திறந்திருந்த கதவு வழியாகப் படிகளில் இறங்கினான். ஈரம் படிந்த விழிகளோடு அவளைத் தேடினான். “ஜனா!”, “அன்னம்மா!” எனப் பைத்தியக்காரனைப் போலக் கத்தினான். அவள் இல்லாததைக் கண்டு, மூச்சு வாங்கச் சுற்றும் முற்றும் பார்த்தான். அவள் சென்றுவிட்டாள் என்றுதான் தோன்றியது.
நிற்காமல் வழிந்த கண்ணீரோடு வீட்டுக்குள் நுழைந்தான். அவன் முன்னே கைகட்டி, புருவமுயர்த்தி நின்றாள் ஜனனி. அவளைக் கண்டதும் பாய்ந்து அவளை மொத்தமாகக் கைக்குள் சிறையெடுத்து, கழுத்தில் முகம் புதைத்து அழுதான். அவளும் அவனது முதுகை வருடிக்கொடுத்தாள்.
“நந்து!! ஐ லவ் யூடா,” என அவனது காதுகளில் இதழ்கள் முத்தமிடச் சொன்னாள். சட்டென அவளிடமிருந்து பிரிந்தான்.
“இ… இ.. இப்போ நீ என்ன சொன்ன?” எனத் தன் காதில் விழுந்ததை நம்பாமல் மீண்டும் கேட்டான். அவளோ வெட்கத்தில் தலை குனிந்தாள்.
“ஹேய் ஜனா! சொல்லுடி, இப்ப நீ என்ன சொன்ன?” என அவளது தாடையை நிமிர்த்திக் கேட்டான். அவள் இதழ்கள் நடுங்க, விழிகள் அலைபாயப் பதில் சொல்லாது முகம் சிவப்பேற நின்றாள்.
“என்னடி சொன்ன?”
“உனக்குக் கேட்டுச்சு!”
“ப்ளீஸ் என்ன சொன்னன்னு சொல்லுடி?” என்றான் கெஞ்சலாக.
“என்னோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் பறிச்சுட்டு, என்னை எந்நேரமும் உன்னைப்பத்தி மட்டுமே நினைக்க வச்சவன் நீ! சச்சின், அத்தை, மாமா மட்டும் என் குடும்பம்னு இருந்தேன்… நீ நட்பா உள்ளே வந்த, நட்பா உன்னை நினைச்ச வரைக்கும் என்னோடதான் இருந்தது என் நிம்மதியும் சந்தோஷமும். அது உன் மேல காதலா மாறும்போது ரெண்டும் என்னை விட்டுத் தூரமாப் போயிடுச்சு! என்னை மறந்து சதா உன் நினைவுல இருக்கிறதால வந்த கோபம்தான் உன்கிட்ட வார்த்தைகளா கொட்டிட்டேன்.”
“அன்னைக்கு நீ உன்னோட கற்பனையைச் சொல்லிட்டுப் போன பிறகு, உன்னோட ஒண்ணா வாழ்றது போல ஒரு கனவு! அந்தக்கனவு எனக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்துச்சு! ஆனா அது கொஞ்ச நேரம்தான் நீடிச்சது. அதுவும் அத்தை உனக்குப் பொண்ணு பார்க்கச் சொல்லும்போது மொத்தமாப் போயிடுச்சு! அவங்களுக்குத் தோணல, உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறாங்க, தனியா நிக்கிற என்னைப் பத்தி அவங்க யோசிக்கல! உனக்குப் பொண்ணு பார்க்கணும்னு என்கிட்ட சொல்றாங்க…”
“நான் இங்க கணவன் இல்லாம தனியா நிக்கிறேன்னு அவங்க நினைக்கல! ஒருவேளை என் எண்ணம் தவறானதோ, நான் தப்பா யோசிக்கிறேனோ? என்னை இவங்க எப்படி நினைக்கிறாங்க? அவங்களுக்கு மாறா என்னோட எண்ணம் இருக்கோ! உண்மை தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க? என் மேல மரியாதை வச்சிருக்காங்க, அதெல்லாம் என்னவாகும்? – இப்படிப் பலதும் யோசிச்சு யோசிச்சு வெறுத்துப்போன நேரம்தான் நீயும் அவங்ககிட்ட என் காதலைச் சொல்லிட்டேன்னு சொன்னதும், எல்லாம் சேர்ந்து எனக்குக் கோபமா மாறி உன்னைக் காயப்படுத்துறது போல வார்த்தைகளை விட்டுட்டேன். அதுக்காக நீ என்னை விட்டுப் போவேன்னு நினைக்கல! உன்னை ரொம்பத் தேடினேன். சாரி சொல்லணும்னு துடிச்சேன். நீ வரவே இல்ல… ரொம்ப அழுதேன். நீ போன பிறகுதான் உன்னைப்பத்தின எண்ணம் எனக்கு அதிகமாச்சு! சச்சினைக்கூட ஒழுங்கா கவனிக்கல! என்னை மன்னிச்சுடு நந்து.”
“என் வாழ்க்கைதான் முக்கியம்னு சுயநலமா யோசிக்க முடியல! விபுவை விட்டுப் பிரிஞ்சப்போ கூடச் சச்சின் அழல, நான் மட்டுமே போதும்னு இருந்தவன், இப்போ உன்னைக் கேட்டு அழறான்… அப்போதான் புரிஞ்சுக்கிட்டேன், எனக்கு மட்டுமில்ல சச்சினுக்கும் நீ தேவை! இதுக்கு மேல யாருக்காக என் காதலை மறைக்கணும்? இதுக்கு மேல உன்னைக் கஷ்டப்படுத்தினா கஷ்டப்படப் போறது நானும் தான். இப்பக்கூட விபுவும் சச்சினும் எனக்குப் புரிய வைக்கலைன்னா, ஓரமா உட்கார்ந்து உன்னை நினைச்சுத்தான் அழுதிட்டு இருப்பேன். எனக்குச் சட்டுன்னு எப்பவும் முடிவெடுக்கத் தெரியாது நந்து. அதுதான் இவ்வளவு கால தாமதம். என்னை மன்னிச்சு என்னை ஏத்துப்பியாடா?” எனக் கேட்டவளைச் சுவரில் சாய்த்து அவளது இதழைச் சிறை செய்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
+1

