Loading

முத்தச் சிறையிலிருந்து அவளிதழ்களை விடுவிக்காமல் நிமிடங்களை நீட்டித்துக் கொண்டே போனான் அந்தக் கள்ளன்.

அவன் தரும் இந்த இன்பத் தண்டனையை முதலில் எதிர்பாராதவள், விழிகளை விரித்து அதிர்ந்து பின் கண்களை மெல்ல மூடினாள். தாமாகவே அவளது ஒரு கை அவனது முதுகிலும், மற்றொரு கை சிகையிலும் நுழைந்து அளந்தது.

நீண்ட நேர முத்தத்திற்குப் பின் இதழை விடுவிக்க, இருவரும் நெற்றி முட்டி மூச்சு வாங்கினர்.

“லவ் யூ அன்னம்மா! லவ் யூ சோ மச்!” என்றவன் மீண்டும் இதழ்களில் முத்தம் வைத்துத்தான் விட்டான்.

செல்லமாக அவன் நெஞ்சில் குத்தினாள். அவளது கையைச் சிறைப்பிடித்தவன், “ஏண்டி பிடிக்கலையா?” என்றான்.

“கல்யாணத்துக்கு அப்புறம்…” என அவனது விழிப் பார்வையில் சொல்ல வந்ததை உள்ளுக்குள் விழுங்கிப் போனாள்.

இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியவன், “என்னடி?” என்றான் மேலும் நெருங்கி.

“இப்படி இம்சை செஞ்சா எ…ப்படி பே…ச்சு வ…ரும்?” எனத் திணறினாள். அவன் ஒற்றை விரலை வைத்து நெற்றியிலிருந்து கன்னம் வரை கோலம் போட்டான்.

“நந்து…” எனச் சிணுங்கினாள்.

“என்னால இன்னமும் நம்ப முடியல அன்னம்மா! நீ என் பக்கத்துல நான் விரும்பின ஜனாவா நிப்பனு…” என்று அவள் விழிகளைப் பார்த்துச் சொல்ல, அவளோ அவனது இடையில் கிள்ள, துள்ளி நகர்ந்தான்.

“இப்போ நம்பறியா?”

“இல்லையே… உன்னைக் கிள்ளிப் பார்த்துட்டுச் சொல்றேன்” என்று அவளது இடையைக் கிள்ளக் குதித்தவள், அவனை அடிக்கத் துரத்திட, அவனும் அவளது கைகளில் சிக்காமல் ஓடினான்.

பின் அவள் மூச்சு வாங்கி நிற்க, அவனே இறங்கி அவள் அருகே சென்றான். அவன் கையைப் பற்றிக்கொண்டு அவனது தாய் தந்தையின் படத்திற்கு முன் நின்று விளக்கேற்றி வழிபடச் சொன்னாள்.

இருவரும் கண்களை மூடிக்கொண்டு அவர்களை வணங்கினர்.

“அம்மா! அப்பா! எப்பவும் என்னோட சந்தோஷம் நீடிச்சதே இல்லை. ஆனா இப்ப இந்த நிமிஷம் கிடைச்ச சந்தோஷம் என் வாழ்நாள் முழுக்கக் கிடைக்கணும்… பேராசைதான், ஆனா உங்க மகனோட இந்த ஆசையையாவது நிறைவேத்தி வைங்க!” என்று வேண்டிக்கொண்டான்.

அவளோ, “இனி உங்க புள்ளை என் பொறுப்பு. நிச்சயம் உங்க அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்குப் பார்த்துப்பேன்… எங்களோட இந்த புதிய வாழ்க்கை நீடிக்க நீங்க எங்களை ஆசீர்வதிக்கணும்” என்று வேண்டிக்கொண்டாள்.

இருவரும் இமை திறந்து ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்தனர்.

“வீட்டுக்குப் போவோமா?”

“கொஞ்ச நேரம்டி உன்னோட இருக்கணும்” என்று கையைப் பிடித்து ஊஞ்சலில் அமர்த்தி, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.

“ரொம்ப நாள் ஆசை, கல்யாணம் வரை எல்லாம் காத்துட்டு இருக்க முடியாது” என்றான்.

அவளோ தலை கோதிக்கொண்டே அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள்.

“சச்சின்கிட்ட உன் அம்மா எனக்கு அம்மாவா வேணும்னு கேட்டியா?”

“ம்… கேட்டேன். அதுக்கு ஜானுகிட்ட உனக்கும் அம்மாவா இருக்கச் சொல்லிப் பேசுறேன்னு சொன்னான். உடனே அவனை இறுக்க அணைச்சுக்கிட்டேன்… அவன் என் மேலே இவ்வளவு அன்பு காட்டுவான்னு எதிர்பார்க்கலடி!” எனக் கண்கள் கலங்கச் சொன்னான்.

“என்னோட இந்த மாற்றத்துக்கும் அவன் தான் காரணம்” என்று அவளும் நடந்ததைச் சொல்ல, படக்கென்று அவளிடமிருந்து எழுந்தவன், “நிஜமாவா?” என்றான்.

“ம்ம்… உன் புள்ள உனக்காகக் காத்துட்டு இருக்கான்” என்று அவன் கன்னத்தில் உள்ளங்கையை வைத்தாள்.

“அப்ப வா உடனே போலாம்…” என்று எழுந்தான். அவனது உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

நீலகண்டனின் வீட்டில் சுதா, ஜோவி, கௌரி, நல்லசிவம் என அனைவரும் அவர்களுக்காகக் காத்திருந்தனர்.

இதோ இருவரும் உள்ளே நுழைய, ஓடி வந்த சச்சினைத் தூக்கிக்கொண்டான். பாசமாக முகமெங்கும் முத்தம் வைத்தான். நந்து அதை ஒரு பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

“என்னை மிஸ் பண்ணியா?”

“ரொம்ப! எதுக்கு என்னை விட்டுட்டுப் போன? உனக்கும் ஜானுக்கும் தானே சண்டை! என்னை ஏன் விட்டுட்டுப் போன?” என உதட்டைப் பிதுக்கி அழ, அவனை இறுக்க அணைத்துக்கொண்டவன், “இனிமே உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன், சாரி சின்னு!” என ஒரு காதைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.

“உன்கிட்ட ஜானு சாரி கேட்டாளா?”

“ம்… கேட்டாங்க.”

“உனக்கு அம்மாவா இருக்கேன்னு சொன்னாளா?”

“ம்ம்…” என்றவன் சிரிக்க, “ஜானு! நீ நந்து கூடச் சண்டை போட மாட்டேல்ல?”

“மாட்டேன்.”

“அம்மாவா இருப்பேல்ல!”

“ம்ம்… இருப்பேன்.”

“ரெண்டு பேரும் சண்டை போட மாட்டீங்களா?”

சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருவரும் இல்லை என்று தலையாட்டினர்.

“எப்பவும் சேர்ந்துதானே இருப்பீங்க?” என்று கேட்கவும், அதேபோலத் தலையை ஆமென்று ஆட்டினர்.

மழலை மொழியில் மிரட்டும் அழகைக் கண்டு அவனது இரு கன்னத்திலும் மாறி மாறி ஆசை தீர முத்தம் வைத்தான்.

“நந்து” என நீலகண்டன் அழைக்க, சச்சினைத் தூக்கிக்கொண்டு அவர் அருகே சென்றான்.

“படவா ராஸ்கல்! இங்க இருந்துட்டு எங்ககிட்ட பொய் சொல்லி இருக்கேல்ல நீ!” என முதுகில் ஒன்று போட்டார்.

“எங்களை மறுபடியும் அநாதை ஆக்கணும்னு முடிவு பண்ணிட்டுத்தானே போயிருக்க! எங்களைப் பத்தி நினைக்கவே இல்லையே நீ” என வள்ளி கண்ணீர் சிந்த, சச்சினை இறக்கிவிட்டவன், “ஐயோ பெரியம்மா! நிச்சயமாக இல்லை… நான் எப்படி உங்களை விட்டுப் போவேன்? ஜனாவுக்கு நிம்மதியும் சந்தோஷமும் இல்லைன்னு சொல்லும்போது, மறுபடியும் மறுபடியும் அவ முன்னாடி போய் நின்னு அவளுக்கும் எனக்கும் வேதனை கொடுக்கக் கூடாதுன்னு விலகிப் போயிடலாம்னு நினைச்சுப் போயிட்டேன் பெரியம்மா!” என்றான்.

“இப்போ அவ வந்து கூப்பிடலன்னா நீ வந்திருக்க மாட்ட தான?”

“அப்படி இல்லை பெரியம்மா! ஜனா கல்யாணத்துக்குச் சம்மதிக்கலன்னா உங்களையும் பெரியப்பாவையும் என்னோடவே கூட்டிட்டுப் போயிருப்பேன். உங்களை நிச்சயமாக நான் விட்டுப் போயிருக்க மாட்டேன் பெரியம்மா” என்று சமாதானம் செய்தான்.

“நீ அவளைத்தான் காதலிக்கிறன்னு அன்னைக்கே சொல்லியிருந்தால் நாங்க அவகிட்ட பேசி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டிருப்போமேடா!”

“இல்லை பெரியம்மா! அவளாகத்தான் இறங்கி வந்து என் காதலைச் சொல்லணும்னு எதிர்பார்த்தேன்… இன்னொருத்தர் சொல்லி என் காதலை ஏத்துக்கக் கூடாது. நானும் அதை விரும்பல. எப்பவும் எல்லாரோட முடிவையும் தான் அவகிட்ட திணிச்சுருக்கீங்க! இந்த முறை அவளே முடிவெடுக்கட்டுமே! அவ முழு விருப்பத்தோட இந்தக் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன். எனக்கு அதுவே போதும் பெரியம்மா!” என்று ஜனனியைப் பார்த்தபடிச் சொல்ல, அவளுக்குக் கண்கள் கலங்கிப்போனது.

“இதுவரைக்கும் என் பொண்ணோட வாழ்க்கையில அவளோட முடிவுகள்னு எதுவுமே இல்லை தம்பி. எல்லாமே நான் தான் எடுத்திருக்கேன். என் பொண்ணு வாழ்க்கையில நான் ஒரு சர்வாதிகாரியாகத்தான் இருந்திருக்கேன்.

என்னோட முடிவுகளால என் பொண்ணு பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை… என்னோட கௌரவம், என் குடும்பக் கௌரவம்னு சொல்லிச் சொல்லி என் பொண்ணை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்.

ஆனா இப்போ சுயமா அவளே முடிவெடுக்க ஆரம்பிச்சுட்டா! அவளோட வெற்றிகளைப் பார்க்கக் கர்வமா இருந்தாலும், உள்ளுக்குள்ள குற்றவுணர்வு சேர்ந்து கொன்னுட்டு இருக்கு…! அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு எண்ணம் இருக்கு. ஆனா அதைப் பத்திப் பேசி என் பொண்ணு என்னை வெறுத்திடுவாளோன்ற பயம். அதனால என்னால பேச முடியல!

ஆனா என்னையும் மன்னிச்சு என் வேண்டுதலைக் கடவுள் நிறைவேத்திட்டார். விபு, நந்துவைப் பத்தியும் அவன் என் பொண்ணை விரும்புறதையும் சொன்னான். ரொம்பச் சந்தோஷமா இருந்தது. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டுச் சந்தோஷமா இருக்கணும்” எனச் சதாசிவம் மனதிலுள்ளதைக் கொட்டிவிட்டார்.

அவளும் கலங்கிய விழிகளோடு தந்தையின் கையைப் பற்றினாள்.

“என்னையும் மன்னிச்சுடுடி! அப்பான்னு சொல்லி உன்னோட எல்லா ஆசைகளையும் உன்னோடவே புதைக்க வச்சுட்டேன். நீயும் ஒரு குடும்பமா புள்ளை குட்டியோட இருக்கணும்னு நினைச்சேனே தவிர, நீ சந்தோஷமா இருக்கியா? நிம்மதியா இருக்கியான்னு நான் கேட்டதே இல்லை… ஊருக்காக வாழ்ந்தோமே தவிர உனக்காக ஒரு நாளும் நாங்க வாழ்ந்தது இல்லை… அந்த குற்றவுணர்வு இன்னைக்கும் எங்களைக் கொன்னுட்டு இருக்கு. உன் இஷ்டப்படி நந்துவைக் கல்யாணம் பண்ணிட்டுச் சந்தோஷமா இருடி” என்று இருவரும் மகளின் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டனர். அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

“ஜானுமா” என்று வள்ளி அழைக்க, அவர் அருகே சென்றாள்.

“எங்களை நீ தப்பா நினைக்கக் கூடாது. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நாங்க ஆசைப்பட்டோம். முதல் தடவை எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லும்போது எங்களால் உன்னை வற்புறுத்த முடியாது. அதனால்தான் நந்துவுக்கு நான் வெளிய பொண்ணு தேடினேன்.

நீ அதுல புண்பட்டிருந்தேன்னா என்னை மன்னிச்சுடுமா! நீயும் நந்துவும் சேர்ந்தா எங்களுக்குத்தான் இரட்டிப்பு சந்தோஷம்… நீயும் அவனும் எங்களோடவே இருப்பீங்கதானே! முக்கியமா பேரன் எங்களோடவே இருப்பான்… எனக்கு இது போதும். எனக்கு இது போதும்” என்று நெற்றியில் முத்தம் வைத்தார்.

“எனக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன நினைப்பீங்கன்ற பயத்துல தான் நான் என் காதலை மறைச்சுட்டேன் அத்தை. என்னை நீங்க தப்பா நினைப்பீங்கன்ற எண்ணம் தான் கோபமா மாறி நந்து மேலே காட்டிட்டேன்… என்னை மன்னிச்சுடுங்க அத்தை. நீங்களும் மாமா.”

“விடுமா… மனசு விட்டுப் பேசினாலே எல்லாம் சரியாகி இருக்கும்… சம்மந்தி, ஒரு நல்ல நாள் பாருங்க, ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்.”

“சரிங்க சம்மந்தி, இதோ பார்த்திடுறேன்” என்றார் நல்லசிவம்.

“ஹேய் ஜானு அக்கா, கன்கிராட்ஸ்!” எனத் துள்ளிக் குதித்து அவளைக் கட்டிக்கொண்டாள் ஜோவி.

“அடியே! பார்த்துடி! என்னமோ நீ மட்டும் இருக்க மாதிரி துள்ளிக் குதிக்கிற! கவனம்டி” என விபு ஜோவியைக் கடிந்திட, எல்லாரும் ஆச்சரியத்தோடு அவர்களைப் பார்த்தனர்.

“ஏய் விபு! சொல்லவே இல்லை, வாழ்த்துக்கள் டா” என நந்து அவனைக் கட்டி அணைக்க, அவனும் “நன்றி டா” என்றான்.

“சொல்லவே இல்லை! வாழ்த்துக்கள் ஜோவி! வாழ்த்துக்கள் விபு!”

“தேங்க்ஸ் ஜானு! இன்னைக்குத்தான் கன்பார்ம் பண்ணினோம்” என்றான் வெட்கத்துடன்.

“இந்த இரட்டிப்பு சந்தோஷத்தைச் செலிப்ரேட் பண்ண நந்து அவன் கையால ஸ்வீட் செஞ்சு தரப்போறான் நமக்கு” என விபு சொல்ல, அன்று மாலை நந்துவின் கைவண்ணத்தில் உருவான அல்வாவை ருசித்துவிட்டு, மனநிறைவோடு அவரவர் இல்லம் சென்றனர்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்