Loading

இரண்டு வாரங்களாயினும் நந்து இன்னும் வீட்டிற்கு வரவில்லை. பெரியவர்கள் தங்களுக்குள் ஏதேதோ சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவனில்லாமல் அவர்களாலும் இருக்க முடியவில்லை. அவர்களது மனம் அவனையே தேடியது.

பெரியவர்கள் மட்டுமன்றி ஜனனி, சச்சின் கூட நந்துவின் நினைப்பிலேயே இருந்தார்கள். நந்து வாரங்கள் கடந்தும் வீட்டிற்கு வராமல் இருப்பதற்குத் தான் தான் முழு காரணம் என்று ஜனனி குற்றவுணர்வில் தவிக்க, அவளை மேலும் வருந்தச் செய்யும் வகையில் சச்சினும் அவள் மீது கோபமாக இருந்தான்.

நந்து வீட்டை விட்டுச் சென்றதற்குத் தன் தாய் தான் காரணம் என்றும், அவள் சண்டை போட்டதால்தான் அவன் சென்றுவிட்டான் என்றும் அந்தப் பிஞ்சு உள்ளம் எண்ணிக் கொண்டிருந்தது. இவ்வாறு நால்வரும் நந்துவை எண்ணி ஏங்கி, உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தனர்.

ஒரு வாரத்தில் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த வாரமும் அவன் வராதது அவர்களை மேலும் தவிக்க வைத்தது. அலைபேசியில் அழைத்தால் கூட, “வந்துடுவேன் பெரியப்பா, பெரியம்மா” என்றதோடு நிறுத்திக் கொண்டானே தவிர, எப்போது என்று சொல்ல மறுத்துவிட்டான். இது அவர்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், வெளியே சொல்லாமல் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டனர்.

ஆனால் பாவம் சச்சின்! அவனால் மட்டும் அமைதியாக இருக்க முடியவில்லை. விபுவிடம் கூட அவனுக்கு இவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை. நீலகண்டன் வீட்டிற்கு வந்த பிறகு கூட அவன் விபுவைத் தேடி அழுததில்லை. ஆனால் நந்து அவனுள் ஏற்படுத்திய பாதிப்பு அளவிட முடியாதது.

அவனைப் பற்றி நீலகண்டனிடமும் வள்ளியிடமும் தினமும் கேட்பான். அலைபேசி ஒலித்தாலே, “நந்துவா?!” என்று ஓடிச் சென்று பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்புவான். தாத்தாவுடன் பள்ளிக்குச் செல்லும் போது, மற்ற குழந்தைகள் தங்கள் தந்தையுடன் வருவதைக் கண்டு ஏங்கிப் போவான். உடனே தாத்தாவிடம், “நந்து எப்போ வருவான்?” என்று கேட்பான். அவரோ அவன் மனதிலுள்ள ஏக்கத்தை அறியாமல், சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லிச் சமாளிப்பார்.

வகுப்பறையில் மற்ற மாணவர்கள் தங்கள் தந்தை வாங்கித் தந்த பொருட்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ள, தனக்கு மட்டும் ஏன் தந்தை இல்லை என்ற கேள்வி அவனுள் எழுந்தது. நந்து இருந்தால் கேட்டதை விட அதிகமாக வாங்கித் தருவானே என்று அவன் மனம் ஏங்கியது. “நந்து எங்கே? எப்போது வருவான்?” என்ற கேள்விகளுக்குத் தாத்தா பாட்டி சொல்லும் மழுப்பலான பதில்கள் அவனுக்குக் கோபத்தையே தந்தன.

இந்நிலையில், தன் தந்தை வாங்கித் தந்த அழகான பென்சிலை ஒரு மாணவன் காட்ட, கோபத்தில் சச்சின் அதை உடைத்துவிட, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. ஆசிரியர் விசாரித்தபோது, சச்சின் “நந்து வேண்டும்” என்று அழத் தொடங்கிவிட்டான்.

அவனை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. ஆசிரியர் அன்பாகச் சொல்லியும், அதட்டியும், அடித்தும் பார்த்தார். ஆனால் அவன் நந்துவைக் கேட்டே அழுது கொண்டிருந்தான். பொறுமை இழந்த ஆசிரியர் விபுவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவனும் விரைந்து வந்தான். ஆசிரியர் நடந்ததைக் கூற, விபு அதிர்ந்து போனான்.

“என்ன சச்சின் இதெல்லாம்? புதுசா என்ன நந்து வேணுங்கற? அவன் தான் இங்க இல்லையே! எப்படி வருவான்?”

“இல்ல… அவன் வேணும்! அவனைப் பாக்கணும்!” என்று அழுதுகொண்டே அடம் பிடித்தான் சச்சின்.

“திடீர்னு என்னடா நந்து மேல இவ்வளவு பாசம்?”

“அப்பாவோட இடத்தை அவன் தான் ‘பில்’ (Fill) பண்ணினான்” என்று சச்சின் சொல்ல, விபுவுக்கு நெஞ்சு வலியே வராத குறைதான்.

“சச்சு! என்ன பேசுற நீ? அவனை உன் அப்பாவா நினைச்சுட்டு இருக்கியா?” என்று கேட்டதற்கு ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினான்.

“அப்போ நந்து உனக்கு அப்பாவா வேணும், அப்படித்தானே?”

“ஆமா…” என்றான் கண்ணைத் துடைத்துக் கொண்டே.

“உங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா உன்னைத் திட்டுவாளே! என்ன செய்றது?”

“எனக்கு நந்து வேணும், அடம் பிடிப்பேன்! ஜனனியால தான் நந்து வீட்டை விட்டுப் போனான். ஜனனி சண்டை போடலைன்னா நந்து என் கூடத்தான் இருந்திருப்பான். எனக்கு ஜனனி மேல கோபமா இருக்கு!”

“ஓஹோ! உனக்கும் உண்மை தெரிஞ்சுடுச்சா? சரி, இப்போ நந்து வீட்டுக்கு வரணும்னா நீ ஜனனி கூடச் சண்டை போடணும்… போடுவியா?”

“ம்… போடுறேன்!”

“சரி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களைச் சேர்த்து வைக்கலாமா?” என்று விபு தன் முஷ்டியை நீட்ட, சச்சினும் தன் குட்டி முஷ்டியால் மோதி ஒப்பந்தம் செய்துகொண்டான்.

விபு ஆசிரியரிடம் அனுமதி பெற்று சச்சினை வீட்டிற்கு அழைத்து வந்தான். அழுது கொண்டே வந்த சச்சினைப் பார்த்த பெரியவர்களிடம், மீண்டும் நந்துவை அழைக்குமாறு அடம் பிடித்தான். விபு நடந்ததைச் சொல்ல, அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சச்சின் ஏதோ விவரம் தெரியாமல் கேட்கிறான் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ தரை கவிழ்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.

விபுவுக்குச் சச்சினின் நடிப்பைப் பார்த்துச் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு பெரியவர்களுக்கு உதவுவது போல் நடித்தான். நந்துவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஜனனிக்குத் தகவல் சொல்லப்பட, அவள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

விபுவிடம் விபரத்தைக் கேட்டவள், அவன் நக்கலாகச் சிரிப்பதைப் பார்த்து அவனை முறைத்துவிட்டுச் சச்சினிடம் சென்றாள். அவனை அடக்க முயன்றும் பலனில்லை. சட்டென்று அவன் முதுகில் ஒன்று வைக்க, துள்ளிக்குதித்தவன் அழுகையை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

“ஜனனி!” என்று மூவரும் பதறினர்.

“யாரும் பேசாதீங்க!” என்றவள், சச்சினிடம் “என்னாச்சு உனக்கு? எதுக்கு நந்து வேணும்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ற?” என்று அதட்டினாள்.

“எனக்கு நந்து வேணும்!” என்று கோபமாகச் சொன்னான் சிறுவன்.

“என்ன இது புதுசா அடம்? உனக்கு நான் இருக்கேன், தாத்தா பாட்டி இருக்காங்க, போதாதா?”

“அப்பா இல்லையே! எனக்கு அப்பா வேணும். நந்து தான் அப்பாவா வேணும்!” – அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து நின்றது.

மீண்டும் அவனை அடிக்கக் கையை உயர்த்திய ஜனனியின் கைகளைப் பிடித்துக் கொண்டான் விபு.

“அவனை ஏன் அடிக்கிற? அவன் சரியாத்தானே கேட்கிறான். உனக்கு புருஷன் வேணாங்கறதுக்காக அவன் அப்பா இல்லாம இருக்கணுமா?”

“இவ்வளவு நாள் அப்பா இல்லாமத்தானே இருந்தான்? இப்போ மட்டும் ஏன் அப்பாவைக் கேட்கிறான்?”

“கேட்காம என்ன செய்வான்? பள்ளிக்கூடத்தில் மற்ற பிள்ளைகளை அவங்க அப்பாக்கள் வந்து கூட்டிட்டுப் போகும் போதும், அவங்க வாங்கித் தந்த பொருளைப் பத்திப் பேசும் போதும் இவனுக்கு அந்த ஏக்கம் வராதா? அதன் வெளிப்பாடு தான் இது! இதுக்கு நீ என்ன பதில் சொல்லப் போற?”

ஜனனி சற்று தடுமாறினாலும், “நான்தான் அப்பா இடத்தில் இருந்து எல்லாம் செய்யறேனே, அது போதாதா?” என்றாள்.

“போதாது! அவனுக்கு அப்பா வேணும்!”

“சரி, இவனுக்கு அப்பா வேணும்… ஆனா அப்பாவா இருக்க யார் வருவா?”

“நந்து வருவான்!”

“விபு!” என்று அவளை அதட்டியவள், சங்கடமாக மாமனார் மாமியாரைப் பார்த்தாள். விபுவின் கடைசி வாக்கியத்தில் அவர்களுக்கு ஏதோ புரியத் தொடங்கியது.

“விபு, இனி நீ ஒரு வார்த்தை பேசாதே! இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன், நீ கிளம்பு.”

“நான் போயிட்டா பிரச்சனை முடிஞ்சுடுமா? சச்சினுக்குப் பதில் சொல்லு, நான் போறேன்” என்று தோளைக் குலுக்கினான் விபு.

அவனை முறைத்துவிட்டுச் சச்சினிடம் திரும்பிய ஜனனி, “உனக்கு அப்பா அம்மாவா நான் இருக்கேன். உன்னைப் பத்திக் கவலைப்படாம உன்னை விட்டுப் போனவனை வேணும்னு கேட்கிற அறிவு இல்லையா உனக்கு?”

“அவன் என்னை விட்டுப் போகக் காரணமே நீ தான்! நீ சண்டை போடாம இருந்திருந்தா அவன் என் கூடத்தான் இருந்திருப்பான்!” என்று சச்சின் உண்மையை உடைக்க, பெரியவர்கள் பதறினர்.

“அவன் நண்பன் வீட்டுக்கு போகலையா? வீட்டை விட்டுப் போயிட்டானா? என்னங்க இது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் வள்ளி.

“நந்து, ஜனனிகிட்ட ‘எனக்கும் அம்மாவா இருப்பியா’ன்னு கேட்டான். அதுக்கு ஜனனி சண்டை போட, நந்து போயிட்டான்!” என்று சச்சின் அனைத்தையும் ஒப்பிவிக்க, ஜனனி தலைகுனிந்து நின்றாள்.

“என்னம்மா இதெல்லாம்? இங்கே என்ன நடக்குது?” என்று நீலகண்டன் கேட்க, “சித்தி, நான் சொல்றேன்” என்று விபு முழு கதையையும் விவரித்தான். அதைக் கேட்டவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி.

“ஜனனிம்மா, விபு சொல்றது உண்மையா?” என்று நீலகண்டன் கேட்க, அவள் கண்ணீருடன் “ஆமாம்” என்றாள்.

“சமூகம் என்ன பேசும்னு நினைச்சுட்டே அவளோட காதலை மறைச்சுட்டு நடிக்கிறா! ஆனா அவளை விட நந்துவை யாராலயும் காதலிக்க முடியாது சித்தி,” என்றான் விபு.

வள்ளி அவளருகே சென்று, “நீ நந்துவை விரும்புறியா?” என்று கேட்க, ஜனனி வெடித்து அழுதுகொண்டு அவரைத் தழுவிக் கொண்டாள்.

“அப்போ நந்து உன்னைச் சின்ன வயசுல இருந்தே விரும்புறானா?” என்று வள்ளி கேட்க, ஜனனி ‘ஆம்’ எனத் தலையாட்டினாள்.

வள்ளி நீலகண்டனைப் பார்க்க, அவர் மனதாரச் சம்மதிப்பது போல் தலையசைத்தார். “அவன் இப்போ எங்கே இருக்கான்? செங்கல்பட்டிலா?”

“இல்ல சித்தப்பா, அவன் அவங்க அப்பா அம்மா வீட்ல இருக்கான்.”

“அந்த ராஸ்கலை வரச் சொல்லு! என் பேரனையும் எங்களையும் தவிக்க விட்டான்ல, அவனுக்கு இருக்கு! என் பேரன் ஆசைப்படி அவனை என் பேரனுக்கு அப்பாவா கொடுக்கப் போறேன்… என்ன சச்சுக் கண்ணா?” என்று கேட்க, அவனோ பெருமிதத்துடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்