
அத்தியாயம்: 5
தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே.!
மஹதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த இரவில் அவன் விழிகள் உறக்கத்தைத் துறந்தது. அங்கும் இங்குமாய்த் தன் அறையில் நடைபயின்று கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
இது தான் வாழ்க்கையோ விரும்பியது எப்போதும் தன் கரம் சேராதோ.? விருப்பமில்லா ஒன்றை கையில் கொடுத்துவிட்டு கைக்கொட்டி சிரிக்கிறதே இந்த விதி.
மஹதியின் மீது கோபம் கிளர்ந்தெழுந்தது. ஆரா அவனை விட்டு பிரிந்து ஒரு வாரம் கூட முழுதாய் முடியவில்லை அதற்குள் இவளுடன் நிச்சயதார்த்தம்.
“ஆதித்.! உன்னோட ஆராவுக்குத் துரோகம் பண்ணிட்ட டா”அவனுடைய மனசாட்சியே அவனைக் குடைந்தெடுத்தது.
மஹதி மீது ஈர்ப்போ.? காதலோ வந்ததில்லை. அவளைத் தோழியாகப் பாவித்து வந்த அவனின் மனதில் குடியேற கடந்த இரண்டு மாதங்களாக முயற்சி செய்து வந்தவளிடம் , ஆராவுடனான காதலை தெளிவாக எடுத்துக்கூறிய பிறகும்.ஆதித் தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் நின்றாள் மஹதி.
இப்போது ஆதித் கிருஷ்ணாவின் மனைவியாகும் தகுதியில் பாதிக் கிணற்றைத் தாண்டி விட்டாள் மஹதி. இதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மஹதிக்கு அவன் மேல் இவ்வளவு காதலா.? என்ற குழப்பமும் அவனுள் ஏற்படத் தான் செய்தது.
அவனின் படுக்கையறையில் அமைந்திருந்த பால்கனியில் நின்று அந்த வானத்தை வெறித்துப் பார்த்தான். முழுப் பௌர்ணமி நிலவு ஆகாயத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். நிலவைக் கண்டு அவள் நினைவில் கரையத் தொடங்கினான்.
அவனுடைய அலைப்பேசி எடுத்து அவளின் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளைத் திறந்தான். அவன் இறுதியாய் அனுப்பிய குரல்பதிவோ அவளைச் சென்றடையாமல் சிங்கிள் டிக்கை காட்டி பல் இளித்தது. அவளிடம் போய்ச் சேர்ந்திருந்தாள் நீல நிற இரட்டை டிக் வந்திருக்கும். இவன் இறுதியாய் அனுப்பியிருந்த குரல் பதிவு அவளிடம் சேரவில்லை என்ற கோபம் எழுந்தது.
“ஆரா.! எங்கே தான்டி போன.? என்னை ஃபேஸ் பண்ண பயந்து போனை ஆஃப் பண்ணி வச்சிருக்கியா.? அவ்வளவு கோழையா நீ.?” என தனக்குள் புலம்பியவன்,
” நீ அருகில் இருந்த போது ஆகாயத்தை என் வசமாக்கி பறந்தவன், நீ தொலைவில் பிரிந்த போது சிறகொடிந்த பறவையாய்ச் சிதைகிறேன்” என்ற குரல் பதிவை அவளுக்குத் தட்டி விட்டான்.
அவளின் நினைவை மறக்க முயன்றவன் அவனுக்காக அவனறையில் அழகாய் பராமரிக்கப்பட்டு வரும் தன் ப்ரைவேட் நூலலகத்தினுள் நுழைந்தான். புத்தகம் படிப்பதில் விருப்பம் இல்லாதவன் தான். ஆனால் ஆராவுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருப்பதால் அவள் இந்த வீட்டிற்கு வரும் போது சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என நினைத்து உருவாக்கிய குட்டி நூலகம் அது. சர்வமும் அவளின் ஆராவுக்காக தான்.
“க்ரிஷ் நான் உனக்கு ஒரு கிஃப்ட் அனுப்பினேன் வந்துச்சா.?”ஆராவின் குரல் அவன் செவியில் நிறைந்தது. அன்று அவர்கள் பேசியதும் அவனுக்கு நினைவு வந்தது.
“ஹே ஸ்மைலி.! வந்திச்சு” ஆதித் கிருஷ்ணாவின் பதில்.
“பிடிச்சிருக்கா க்ரிஷ்.?”
“மை டியர் ஸ்மைலி.! எனக்கு எங்கே புக் படிக்கலாம் நேரம் இருக்கு.?”
“ஆமா! ஆமா! க்ரிஷ் காதல் பண்ணவே நேரம் இல்லாதவங்களுக்குப் புக்கை கிஃப்ட்டா அனுப்பினது என்னோட முட்டாள் தனம் தான்”
அவனுடைய ஸ்மைலி அன்று பேசியதை நினைத்து இன்று புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவள் பரிசாய் கொடுத்த புத்தகத்தைக் கையில் வைத்திருந்தவன்.
அதை மெல்ல திறந்தான்.
புத்தகத்தைப் படித்தாவது காதலிக்க நேரம் ஒதுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என் மாயக் கண்ணனே.! காதலிக்கக் காத்திருக்கும் அன்பு காதலி உங்கள் ஸ்மைலி (எ) ஆரா.
ஸ்மைலி என அவள் எழுதி அருகில் சிரித்தபடி இருந்த ஸ்மைலி பொம்மையை வரைந்திருந்தவள் ஆரா என்ற பெயர் அருகே மயிலிறகை அழகாய் வரைந்திருந்தாள். அவளின் கையெழுத்தை மெல்ல வருடினான். குண்டு குண்டாய் இருந்த எழுத்துகள், அவளின் கொழு கொழு கன்னங்களை அவனுக்கு நினைவூட்டியது.
அதைப்பார்த்துவிட்டு புத்தகத்தின் தலைப்பை பார்த்து மென்நகைத்தான். அந்த புத்தகத்தின் தலைப்பு அவனை ரசனையாய் வருட செய்த்தது, மயிலறகில் வருடுவது போல், அந்த புத்தகத்தின் தலைப்பை மெல்ல வருடினான்.
பின் எதோ நினைவு வந்ததைப் போல் விரைந்து படுக்கை அறைக்கு வந்தவன்.நைட் லாம்ப் வெளிச்சத்தில் தன்னுடைய ட்ராவை திறந்து அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
“ஹாய் க்ரிஷ்.!” என்று ஆரம்பிக்கப் பட்டிருந்தத கடிதம் முழுக்க ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தது. இறுதியாய் “ஃபர்கெட் மீ அண்ட் மூவ் ஆன். குட் பை, ஆரத்யா” என்ற வார்த்தையில் முற்றுப் பெற்றிருந்த கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்தான்.
அறையின் விளக்குகளை ஒளிர விட்டுக் கடிதத்தைப் பல மணி நேரம் நேரம் உற்று நோக்கினான். எதையோ கண்டறிந்தவன் போல் அறையிலிருந்து வெளியேறி அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான்.
உறுதியான முடிவுடன் மஹதி ஒரு மாத காலமாய்த் தங்கியிருக்கும் கெஸ்ட் ரூமின் கதவை தட்டினான். அவன் அறைக் கதவை தட்டியவுடன் கதவை திறந்தவள் பாதிக் களைக்கபட்ட அலங்காரத்துடனும் அவள் அணிந்திந்த லெகங்காவின் தாவணியை ஒற்றைப் பக்கமாய் வேண்டுமென்ற நழுவ விட்டாள். அவள் அழகை அவனிடம் காட்சிபடுத்த முனைந்தாள். அவளின் அழகில் இவன் மயங்கி விடுவான் என நம்பத் துவங்கினாள்.
“என்ன ஆதித் இந்த நேரத்தில் வந்திருக்க.? அதான் நிச்சயம் ஆகிடுச்சே ஒரு பயமும் இல்லை, உள்ளே வா” என அவனின் பஞ்சணையைக் காட்டினாள்.
“ஷிட்!! உன் அழகில் மயங்கி ஒன்னும் உன்னை தேடி நான் வரலை மஹதி! என்னோட ஆராவை எங்க வச்சிருக்கச் சொல்லு மஹதி.?” கோபமும் நிதானமும் கலந்து தான் பேசினான்.
“வாட்” என அதிர்ந்தவள் தன் தாவணியைச் சரியாக உடுத்தினாள். அவன் கேட்ட கேள்வியில் பயந்தவளுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. அவளின் பதற்றதை அவனுடைய ஆழ்ந்த பார்வையில் குறிப்பெடுத்துக் கொண்டான்.
“ஆதித் நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணணும். மத்ததெல்லாம் காலையில் பேசிக்கலாம்” எனப் பயத்தை மறைத்து பேசினாலும். ஆராவிற்கு என்ன ஆகியிருக்கும் என்ற யோசனை ஆதித் கிருஷ்ணாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
“ரொம்ப ஸ்மார்ட்டா நடிக்காதே மஹதி.!” எனக் கோபமாய்ப் பேசியவன் கடிதத்தை அவள் முகத்தில் தூக்கி எரிந்தான்.
“ஆதித்!! என்ன விளையாடிட்டு இருக்கீயா??”
“இந்த லெட்டர் ரெடி பண்ணினது நீ தானே உண்மையைச் சொல்லு, இல்லைனா, ஐ வில் ஷோ யூ தி ஹெல் மஹதி” எனக் கத்தினான் ஆதித் கிருஷ்ணா.
“இந்த லெட்டரை ரெடி பண்ணினது நான் தான்” எனச் சம்மதித்தவள் தலைக்கவிழ்ந்து நின்றாள்.
“சொல்லு என்ன நடந்திச்சு.? ஆரா எங்கே.?” அதுவே அவன் கேள்வியாய் இருந்தது பதிலாக ஆரா கிடைத்துவிட மாட்டாளா.? என்ற எதிர்பார்ப்பு. அவனை அவனுக்கே அடையாளம் காட்டிவளை தொலைத்துவிட்டு நிற்கிறான் இந்தக் காதலன்.
“நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல ஆதித்” திணறினாள்.
“முதலில் விசயத்தைச் சொல்” அவள் அவனின் நேரத்தை விரயம் செய்வது போல் தோன்றியது. அவனுடைய ஆராவின் விழிகளை அவன் இப்போதே பார்த்தே தீர வேண்டும். அவளின் துடுக்குத் தனம் நிறைந்த பேச்சை இக் கணமே கேட்டாக வேண்டும் இந்த இரண்டு நாட்களில் தன்னை விட்டு பிரிந்து சென்றவள் என்ற நினைப்பில் இருந்தவன் இப்போது தன் காதலியை காண ஏங்கினான்.
“நீ எப்படிக் கண்டுபிடிச்ச ஆதித்.?”
“என்னோட ஆராவுக்குத் தமிழ் நல்லாவே எழுத தெரியும். அவளுக்குக் கம்ப்யூட்டரில் டைப் செய்யத் தெரியாது அதுவும் இங்கிலீஷ்ல அவ டைப் பண்ண மாட்டாள், முக்கியமான விசயம் அவள் எழுதிய கடிதத்தில் எப்படி ஹோம் மினிஸ்டரின் கையெழுத்து அச்சாகப் பதியும்.? லெட்டரை பார்த்து தடுமாறி நான் பாண்டிச்சேரி வரை போனது உண்மை தான். ஆனால் என் ஆரா மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை” என அவளை அழுத்தமாய்ப் பிடித்தவன் அவளை முறைத்து நின்றான்.
“புல் ஷிட் , இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்” எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.
“விசயத்தைச் சொல்றீயா.? இல்லை நான் போலீசுக்கும் மீடியாவுக்கும் போகவா.?”
“ஆதித் ப்ளீஸ் அப்படிப் பண்ணிடாதே. ஏன்னா அப்பாவுக்கு இந்த விசயம் தெரியாது” என அவள் நடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய் ஷட் அப் மஹதி. உங்க அப்பா தலையீடு இல்லாம உன் லைஃப்ல
எந்தக் காரியமும் நடக்காது. இந்த ஃபேக் லெட்டர்க்கு பின்னாடி யாரெல்லாம் இருக்காங்க உண்மையைச் சொல்லு லாவண்யா இருக்கிறாளா.?” மிரட்ட ஆரம்பித்தான்.
“லாவண்யா தவிர மத்த எல்லாருக்கும் தெரியும். ஐடியா அப்பா தான் கொடுத்தாங்க”
“உண்மையைச் சொல்லு மஹதி என்னோட அம்மாவுக்குத் தெரியுமா.?” என்று அவன் கேட்ட நொடியில் தாயின் பாசமே பொய்த்துப் போனது போல் உணர்ந்தான். இந்தக் கடிதம் பொய் என்றால் ஆரா தன்னை விட்டுச் சென்றாள் என்பதும் பொய். அப்படியானால் ஆரா இப்போது எங்கே இருக்கிறாள்.? அவளுக்கு எதுவும் நேரவில்லை என்றால் இந்நேரம் தனக்கு அழைப்பு விடுத்திருப்பாளே.? அவள் அவனைத் தொடர்பு கொள்ளவில்லையே அவளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்குமோ மனம் படபடக்க மஹதியை ஏறிட்டான் ஆதித் கிருஷ்ணா.
“ஆரா எங்கே சொல் மஹதி.?”
“இந்த லெட்டர் மட்டும் தான் நாங்க ரெடி பண்ணிணோம். அவ எங்கே போனாள்னு எங்களுக்குத் தெரியாது. அந்த லெட்டர் வைத்துச் சண்டை போட்டு பிரிஞ்சிடுவீங்கன்னு நினைச்சோம் அவ்வளவு தான் எங்களோட ப்ளான்” அவள் சொன்ன போது உலகமே தலைகீழாய் சுற்றுவது போல் உணர்ந்தவன். அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அவனுடைய கருஞ்சிறுத்தையை நோக்கி ஓடியவன் காரை இயக்கினான். ஏ.கே பேலஸிலிருந்து சூறாவளியைப் போல் கிளம்பியது அவனின் ஜாக்குவார் (கருஞ்சிறுத்தை).
கார் ஓட்டியபடி விக்கிக்கு அழைப்பு விடுத்தான்.அந்த இரவு நேரத்தில் ஆதித் கிருஷ்ணாவிடம் இருந்து வரும் அழைப்பு முக்கியமானதாக இருக்கும் என நினைத்தபடி அழைப்பு ஏற்றான் விக்னேஷ்.
“விக்கி ஐ யெம் ஆன் தி வே” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தபோது விக்னேஷின் வீட்டு வாசலில் உறுமியபடி நின்றிருந்த கருஞ்சிறுத்தையைப் பார்த்து மிரண்ட விக்கி காரினுள் ஏறினான்.
“ஆரா இஸ் மிஸ்ஸிங் விக்கி” எப்போதும் ஆராவை பற்றிச் சொல்லும் போது கவலையுடனும் கோபத்துடனும் சொல்லும் நண்பன் இன்று பதற்றத்தில் கூறினான்.
“இப்போ என்ன பாண்டிச்சேரி போகணும் உங்க மீட்டிங் ஸ்பாட்டைப் பார்க்கணும் அப்படியே ரிசார்ட்டுக்கு போகணும் அவ்வளவு தானே”
“நோ விக்கி ஆராவை தேடி கண்டுபிடிக்கணும்”
“உன்னை விட்டுட்டு போனவளை எப்படித் தேடி கண்டுபிடிக்கப் போற ஆதித்”
“என்னோட ஆரா என்னை விட்டுட்டு போகலை டா விக்கி, நமக்குக் கிடைத்த லெட்டர் டோட்டல்லி ஃபேக்” எனப் பேசியவனுக்குக் குரல் நடுங்க ஆரம்பித்தது. தன்னவளை தொலைத்து விட்டோமோ.? கவலை அதிகமானது.
“க்ரிஷ் நீ என்னைக் கண்டுக்கவே மாட்டேன்றல்ல, ஒரு நாள் பாரு நீ எங்கே தேடினாலும் நான் கிடைக்காத தூரத்துக்குப் போகப் போறேன், அப்போ நீ என் காதலுக்காக ஏங்கி போவல்ல, என்னை மாதிரியே உன்னோட காதலுக்கு ஏங்கும் இந்த ஆரா மாதிரி. வேண்டாம் எனக்கு வந்த கஸ்டம் உனக்கு வேண்டாமே, நீ கண்டுகலைன்னா என்ன நான் உன்னைக் காதலிச்சுட்டே இருப்பேன் என்னோட மாயக் கண்ணனை” என அவன் செவிக்குள் கேட்ட ஆராவின் குரலில் காதலுக்கான ஏக்கத்துடன் சில துளி கண்ணீர்களும் நிறைந்திருக்க,
அதை நினைத்து பார்த்தவனின் மனதில் அவள் ஏய்த வார்த்தை அம்பின் அர்த்தம் புரிந்து போனது.
“லெட்டர் ஃபேக்காக இருந்தால் ஆரா இங்கே தானேடா இருந்தாகணும்.?”
“உலகில் உள்ள யாவும் ஒன்றை சார்ந்தே இயங்குகிறது, நானோ என் ஆராவின் பேச்சில் இயங்கிக்கொண்டிருந்தவன், என் இயக்கத்தை நிறுத்திவிட்டு எங்கோ சென்று விட்டாள் என்னுடைய ஆரா, அவளுக்கு நான் செய்ததைத் திருப்பிச் செய்கிறாளோ.? இல்லை அவளின் இயக்கம் நான் தானே.? அப்படி இருக்கையில் அவள் நான் இல்லாமல் தவித்துத் தானே போயிருப்பாள். ஒரு வாரம் வரை எல்லாம் அவள் பேசாமால் இருந்ததே இல்லைடா விக்கி”
“சரி தேடுவோம் டா தொலைத்த இடத்தில் தானே தேட முடியும் வா பாண்டிச்சேரி போவோம்”
நண்பன் சொன்ன வழி சரியாகத் தான் தோன்றியது ஆதித் கிருஷ்ணாவுக்கு, அவளை அங்குத் தானே தொலைத்தான்.அவர்களின் கடைசிச் சந்திப்புக் கூடப் பாண்டிச்சேரியில் தானே நடந்தது.
“சரி விக்கி நீ சொல்றதும் சரி தான்” என விக்கி சொன்னதை ஒப்புக்கொண்டவன் இதுவரை தன் கவலைகளைக் கரைக்கும் அருமருந்தை தேடித்தான் பாண்டிச்சேரிக்கு பயணிப்பான். தொலைந்து போன அவனின் காதலை தேடிய பயணம். அச்சமயம் அவனின் அலைப்பேசி ஒளிர்ந்தது அப்பா காலிங் என்று வந்தது. அழைப்பை ஏற்றவன்.
“ம்மம் சொல்லுங்கப்பா” என்றான் ஆதித் கிருஷ்ணா.
“ஆதித்.! மஹதி ஏதே எதோ சொல்லுறாள் உண்மை தானா.?” கோதண்டம் கேட்க,
“ப்பபா நீங்க லாவண்யாகிட்ட போனை கொடுங்க அவக்கிட்ட நான் பேசணும்”
“ஏன் எதுக்காக நீ லாவண்யாகிட்ட பேசணும்.? எதுவாக இருந்தாலும் என்கிட்ட பேசு ஆதித்” எனக் கடுமையாகப் பேசியவரிடம் பொறுமையாய்ச் சொன்னான் அவன்.
“லாவண்யா மட்டும் தான் என்கிட்ட உண்மையாக நடந்துக்கிறாள், அவகிட்ட குடும்பமே சேர்ந்து செஞ்ச பித்தலாட்டத்தைச் சொன்னீங்களா.? உண்மையை மட்டும் சொல்லுங்க அப்பா. ஆராவை நீங்க எதாவது பண்ணிட்டீங்களா.?” எனக் அவன் கேட்டவுடன் அழைப்பை வேகமாகத் துண்டித்தார் கோதண்டம்.
அவர் உடனே அழைப்பை துண்டித்தது ஆதித் கிருஷ்ணாவினுள் சந்தேகத்தைக் கிளப்பியது, உடனே லாவண்யாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்து அனைத்தையும் சொன்ன பிறகு லாவண்யா அழுது கரைந்தாள். இத்தனை நாள் சிறிய பெண் என நினைத்துச் சொல்லாமல் இருந்தனோ அவை அனைத்தையும் தன் தங்கையிடம் ஒப்பித்தான். ஏன்னென்றால் அவள் மட்டுமே இப்போது அவனின் நம்பிக்கைக்கு உரியவள்,
தன் தாய் யசோதா கூட அது போலியான கடிதம் என்பதைச் சொல்லவில்லையே. இத்தனையும் யாருக்காகச் செய்திருக்கிறார்கள் ஜெகன்நாதனுக்கும் அவரின் பொண்ணுக்கும் தானே.? அப்போது நான் யார் அவர்களுக்கு, என் சந்தோசம் அவர்களுக்கு முதன்மையாய்த் தெரியாமல் போனதற்குத் தான் காரணம் என்ன.?
ஆராவை தேடிக் கண்டுபிடிப்பதை விட இந்தத் துரோகத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அருகில் இருந்தே குழி பறித்திருக்கிறார்களே ஒரு பொய்யின் ஆழமே, சிலரின் மீதிருந்த நம்பிக்கையைத் துடைத்தெறிய காரணமாகிறது. அப்படித் தான் இப்போது தன் தாய் தந்தை மீதிருந்த அதீத நம்பிக்கை துடைத்தெறியபட்டிருந்தது.
“அண்ணா நீ ஒண்ணும் கவலைப்படாதே. நீ ஆரா அண்ணியைத் தேடு நான் இங்கே இருந்து பார்த்துகிறேன், மஹதிகிட்ட இருந்து நான் விசயத்தை வாங்கி உனக்குச் சொல்லறேன் அண்ணா” என
லாவண்யா தன் அண்ணனுக்குத் தைரியமூட்டினாள்.
மஹதி தன்னையும் ஏமாற்றியிருக்கிறாள் என்பதில் லாவண்யாவுக்கும் கோபம் தான். தன்னையே தன் அண்ணனுக்கு எதிராகப் பயன்படுத்த நினைத்திருக்கிறாள் என்று நினைக்கும் போதே மஹதியை வெறுத்து போனாள் லாவண்யா.
“தேங்க்ஸ் லாவண்யா” ஆதித் சொல்ல,
“அண்ணா சாரி, நான் தான் உன்னை நிறையக் காயப்படுத்திட்டேன்” என மனம் உருகி மன்னிப்பை வேண்டினாள் லாவண்யா.
“ஏய் லாவ் குட்டி சாரி கேட்கிற அளவுக்குப் பெரிய பொண்ணாகிட்டியா.?” எனப் புன்னகைத்தான்.
“எப்போதும் இப்படியே சிரிச்சிட்டு இரு அண்ணா” எனச் சொன்னவள் அழைப்பை துண்டித்தாள்.
அவர்கள் அங்கு வந்து சேர்ந்த போது அதிகாலை ஆகியிருந்தது ஆனால் இன்னும் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளும் அவனுடைய ஆராவை தான் நினைவு படுத்தியது. அவள் தங்கியிருந்த பிஜியை தேடி அலைய ஆரம்பித்தான் ஆதித் கிருஷ்ணா.
அவளைக் காதலித்தானே தவிர அவள் இருக்கும் இடத்தைப் பற்றி அவனுக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. அவன் தான் அவளுடன் நேரம் செலவிட்டதே இல்லையே பின் எப்படி இவன் அறிந்திருப்பான்.
“விக்கி சுதாக்கிட்ட கேட்டு பாரேன்” ஆதித் கிருஷ்ணா சொன்னான்.
“இதில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்டா நேரில் போய்ப் பேசிவிடலாம்” எனச் சொன்ன விக்கி கால் மணி நேரத்தில் பீச் வீயூ ரிசார்ட்டினுள் நுழைந்தது. சுதாவிற்கு அழைப்பு விடுத்தான் விக்கி.
“ஹலோ.!”
“சுதா.! விக்கி பேசுறேன்”
“தெரியுது என்ன விசயம் சொல்லுங்க”
“ரிசார்ட்டுக்கு வெளியே தான் நிக்கிறேன் கொஞ்சம் வா பேசணும்”
“இரு சொல்லிட்டு வர்ரேன்” எனக் கோபமாக மொழிந்தவள் அழைப்பை துண்டித்தாள்.
சில நொடிகளில் வெளியே வந்தவள் ஆதித் கிருஷ்ணாவை பார்த்து கடுகாய் பொரிந்து தள்ளினாள்.
“இவர் கூடப் பேசுறதாக இருந்தால் என்னோட ரீலேசன் ஷிப்பை கட் பண்ணிக்கோன்னு சொன்னேன்ல” கோபமாய்ச் சாடியவள் அதே நேரம் ஆதித் கிருஷ்ணாவை முறைத்தாள்.
“அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம், ஒரு முக்கியமான விசயம் கேட்கணும்”
“என்ன சொல்லு”
“ஆரத்யா பத்தி தான் உன்கிட்ட பேசணும்.?”
“நீ என்ன லூசா?? ஆராவை பத்தி இந்நேரத்தில் வந்து கேட்டுட்டு இருக்க?”
“அந்தப் பொண்ணு மிஸ்ஸிங் தெரியுமா.?”
“என்னது மிஸ்ஸிங்கா.?”
“இல்லையே அவ ஜாப் விட்டு நிக்கப் போறேன்னு பேப்பர் போட்டு தானே ஜாபை விட்டுட்டா, அவ முழுசா ஒன் மன்த் கூட இங்கே வொர்க் பண்ணலையே, சென்னையில் ஜாப் ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்ல சொன்னா” அவள் விவரித்த போது இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“என்ன சொல்ற சுதா.? ஆரா உன்கிட்ட அப்படிச் சொன்னாளா.?” அதிர்ந்து போய் ஆதித் கிருஷ்ணா கேட்க
“அவளோட திங்க்ஸ் கூட என்கிட்ட தான் இருக்கு”ஆதித் கிருஷ்ணாவை பார்த்து முகம் சுழித்துச் சொன்னாள் சுதா.
“ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்லலை சுதா” கோபம் கொண்டான் விக்கி.
“ஏய் விக்கி புரிஞ்சு தான் பேசுறியா.? உன் குடிகார ஃப்ரெண்டை கூட்டிட்டு வருவ, அவருக்குப் பொண்ணு அரெஞ்ச் பண்ணிக்கொடுப்ப, அவருக்குச் சேவகம் பண்ணிட்டு இருந்திட்டு இப்போ வந்து ஏன் சொல்லைன்னு கேட்கிறே.?”
“சுதா சிஸ்டர், ஆரா என்னோட காதலி அவ தொலைஞ்சு போயிட்டா அதுக்காக உங்க கிட்ட ஹெல்ப் கேட்க வந்திருக்கோம், என் ரூம்க்கு வந்த பொண்ணு உங்க ரிசார்ட்ல தானே வொர்க் பண்ணுறாங்க அவங்க கிட்ட கூட நான் ஆராவை பத்தி தான் விசாரிச்சேன், அந்தப் பொண்ணோட நேம் பேஜ் பக்கத்துல ஸ்மைலி இருந்திச்சு, ஆராவும் அப்படித் தான் போட்டிருப்பாள்.அதை பத்தி விசாரிக்கத் தான் என்னோட ரூம்க்கு வர சொன்னேன், மத்த படி வேற எதுவும் நடக்கலை” என அவன் தன்னிலை விளக்கிய பின் சாந்தமானாள் சுதா.
“சாரி ப்ரோ.! வாங்க ஆராவோட திங்க்ஸ் என்கிட்ட இருக்கு அதை வாங்கிப் பாருங்க எதாவது டீடெயில்ஸ் தெரியும்” எனச் சொன்னவள் ஆராவின் பொருட்கள் அடங்கிய சிவப்பு நிற பெட்டியை ஒப்படைத்தாள் சுதா.
அதில் காத்திருக்கும் பூகம்பம் பற்றி எதுவும் தெரியாமல் அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டான் ஆதித் கிருஷ்ணா.
தேடித் தொலைகிறேன்
அழகே.!
உன்னைத் தேடி
அலைகிறேன் உயிரே.!
தேடலின் முடிவில்
என் ஜீவன் சேர்வாயோ.?
காதல் கொண்டு
காலம் மறப்போம்
வா என் ஆரா.!
மீண்டும் வந்துவிடு
மீண்டு வந்துவிடு.

