Loading

சலனம்-4

மருத்துவமனையின் நாசி நிரடிய மருந்து வாடைக்கு நடுவே, கட்டிலில் அமர்ந்து,கண்மூடி பின்னுக்கு சாய்ந்திருந்தேன் நான். பெரிதாய் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை தான்.

 

 

ஆனாலும், நெற்றியின் ஓரம் சுருக் சுருக்கென வலித்துக் கொண்டே இருந்தது.

 

 

வலக்கையைக் கட்டி தொட்டில் போல் தொங்கவிட்டிருந்தார்கள். டேங்கர் லாரியில் மோதுவதாய் உளறிவிட்டு, சாலையோர மின்கம்பத்தில் மோதியிருக்கிறேன்.

 

 

என் தலைக்குமேல், என் தாயின் அனத்தல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, என் எதிரே இருந்த நாற்காலியில் என்னை முறைத்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் என் நண்பன் சித்தார்த். அவன் சொல்ல சொல்ல கேட்காமல், வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு சென்றதால் கோபமாக இருக்கிறான் எனப் புரிந்தது எனக்கு.

 

 

“சம்யூ கால் பண்ணினாளா டா?” மெதுவாய் கிசுகிசுப்பான குரலில் சித்தார்த்தைப் பார்த்துக் கேட்டேன். அவனோ, என் கேள்விக்குப் பதில் சொல்லாமல், என் தலைமாட்டில் நின்றிருந்த என் தாயையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

“என்னடா? உன்கிட்டே தானே கேட்கிறேன்.!” என் குரல் உயர்ந்தது.

 

“யாரை டா கேட்கிறே?” என் தாயின் குரல் இடையிட்டு என் தலையைத் திரும்ப வைத்தது.

 

 

“ம்ப்ச்! உனக்குத் தெரியாதும்மா! டேய் சொல்லேன்டா! உன்னைத் தானே கேட்கிறேன்.!” என எரிச்சல் மிகுந்து கத்தினேன். என் தாயின் வருகையை வைத்தே அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

 

 

என்னை சென்னை மாநகரத்திலிருந்து, மதுரைக்குக் கொண்டு சேர்க்கும் வரை என்னைப் பெற்ற என் தாய் ஆனந்தியின் கண்களில் துளி தூக்கம் வராது என எனக்குத் தெரிந்து போனது.

 

“என்னடா நினைச்சுட்டு இருக்கே? இங்கே கண்டவளோடேயும் சுத்திக்கிட்டுத்தான் கல்யாணத்திற்கு வராமல் ஆட்டம் காட்டிட்டு இருக்கியா? இந்த சினிமாக்காரியெல்லாம் கல்யாணம் பண்ணுறது, நம்ம குடும்பத்திற்கு சரி வராது சொல்லிட்டேன். நீ என்னடான்னா, கையை உடைச்சுக்கிட்டு இங்கே உட்கார்ந்துகிட்டே! உங்க அப்பன் மதுரையிலிருந்து குதியாய் குதிக்கிறாரு. நடுவில் நான் என்ன சோழியா? நீங்க உருட்டி விட்டு விளையாட? சொல்றதை நல்லா கேட்டுக்க விக்ரம், பத்திரிக்கை அடிச்சு ஒட்டுமொத்த ஊருக்கும் கொடுத்தாச்சு. ஒழுங்கு மரியாதையா ஊருக்கு கிளம்புற வழியைப் பாரு!” ஆனந்தி என்ற பேருக்கு நேர் எதிராய், என் அன்னையின் முகத்தில் கோபக்கனல் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

 

 

மருத்துவமனையின் அறை, கொஞ்சம் கொஞ்சமாய் சந்தைக்கடையாக உருமாற்றம், பெற்றுக் கொண்டிருக்க,

 

 

“அப்போ எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு பார்க்கிறதுக்கு நீ வரலை! நான் ஒரு நடிகையைக் கல்யாணம் பண்ணிடுவேனோன்னு பயந்து ஓடி வந்தியா?” நேரடியாய் என் அன்னையைப் பார்த்துக் கேட்டேன் நான்.

 

 

“நீ கல்யாணத்திற்கு முதல் நாள் வருவன்னு, கன்னத்தில் கை வச்சிட்டு உட்கார்ந்திருக்க சொல்றியா? இங்கே வந்து பார்த்தால் தானே தெரியுது உன் லட்சணம்!” என் தாய் பேசப் பேச, சம்யூவைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்கிற என் எண்ணம் எனக்குள் வலுப்பெறத் துவங்கியதை என்னால் உணர முடிந்தது.

 

 

“நீ சொல்றதையெல்லாம் என்னால் செய்ய முடியாதும்மா! எனக்குப் பிடிச்சதைத் தான் நான் செய்வேன். எனக்கு இந்தக் கல்யாணமெல்லாம் வேணாம். நீ ஊருக்குக் கிளம்பு. நான் பார்த்துப்பேன்!” என்னைப் பெற்றவளின் முகம் கூட நோக்காமல் சொன்னேன் நான்.

 

 

காதல் என்னை ஏதேதோ மாயங்களைச் செய்ய வைக்கிறது. சம்யுவின் மீது நான் கொண்ட பேரன்பே, எல்லா சூழலிலும் எனக்கு ஆதரவாய் நின்ற என்னைப் பெற்ற தாயையே எதிர்த்துப் பேச வைத்தது. அவள் மீதான பேரன்பு காதல் தான் என எனக்குள் தோன்றத் துவங்கியிருந்தது.

 

 

“உனக்குப் பிடிச்சதைத்தான் பண்ணுவேன்னு சொன்னால், என்னத்துக்கு கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன டா? ஊரெல்லாம் பத்திரிக்கை வச்சு அழைச்சாச்சு. இப்போ போய் கல்யாணம் நின்னுடுச்சுன்னு சொல்ல சொல்றியா? பத்தாக்குறைக்கு இப்படி விழுந்து வாரி, அடிபட்டுட்டு வந்து நிற்கிறே? இப்படி குடிச்சுட்டு தெருவில் திரியத்தான் உன்னைப் பெத்து வளர்த்து விட்டேனா? இதெல்லாம் சரியில்லை விக்ரம்!” என என் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எனக்கு மிக நெருக்கமான, நிரம்பவும் பரிட்சயமான ஓர் வாசனையை என் நாசி உணர்ந்தது.

 

 

ஏதோ சொர்க்கலோகத்தில் இருப்பது போன்ற அந்த உணர்வில், என் கண்கள் அனிச்சை செயலாய், அறை வாசலைத் திரும்பிப் பார்த்தது.

 

 

சித்தார்த் ஏதோ விசித்திர ஜந்துவைப் பார்ப்பதைப் போல் என்னைப் பார்க்க, என் அன்னையோ,

 

 

“நான் உன்கிட்டே தான் பேசுறேன் விக்ரம். எனக்கு பதில் சொல்லாமல் எங்கேயோ பார்த்துட்டு இருந்தால் என்னடா அர்த்தம்?” என கேள்வி கேட்க, அந்த நொடி என் சிந்தையில் எதுவுமே பதியவே இல்லை. என் கவனம் முழுதும், என் ஆழ்மனதில் சலனம் ஏற்படுத்திய அந்த வாசனையின் மீதே இருந்தது.

 

 

“சம்யூ!” என் வறண்ட உதடுகள் உற்சாகமாய் அவள் பெயரை உச்சரித்தது. என் ஊன், உடல், உயிர் என அத்தனையிலும், அவள் மட்டுமே நிரம்பியிருப்பாள் என நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததே இல்லை. அவள் வாசனையிலேயே அவளை அடையாளம் காணும் அளவிற்கு அவளுக்கு நான் அடிமையாய் மாறிப் போயிருப்பேன் என நான் யோசித்ததுக் கூட இல்லை.

 

 

“யெஸ்! அம் அடிக்டட்!” எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நான் அருந்தும் மது போதையை விட, இவள் மீதான போதை என்னை தலை கால் தெரியாமல் திணற வைத்தது. அவள் வந்துவிட்டாளா? எங்கே இருக்கிறாள்? என என் மனம் ஆர்வத்துடன் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

 

என் நண்பனும், என் தாயும், என்னைப் பைத்தியக்காரனைப் போல் பார்ப்பதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் இருவருக்கும் என் மனநிலை புரியப் போவதும் இல்லை. அவர்களிடம் பேசிப் புரிய வைக்க எனக்கு பொறுமையும் இல்லை.

 

 

எனக்குள் யோசித்தபடி நான் வாசலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடி, ஒரு குட்டிப் புயலாய், அவளின் கபில நிறக் கேசம் அவள் நடைக்கேற்ப அசைந்தாட உள்ளே நுழைந்தாள் சம்யுக்தா. என் மனதைக் கொள்ளைக் கொண்ட இந்த ப்ரித்விராஜனின் சம்யுக்தா. நான் கற்பனை செய்திருந்ததைப் போல் அவள் அழுது முகம் சிவந்து போய் வரவில்லை.

 

 

 

கண்களில் தெளிவும், தீட்சண்யமும் தேங்கியிருக்க, என் மீது மட்டுமே பார்வையைப் பதித்தபடி மெழுகு பொம்மையாய் என்னை நோக்கி வந்தாள். அப்படியே அவளை அள்ளி அணைத்துக்கொள்ள என் உடலும் மனமும் பரபரத்தது.

 

 

“சம்யூ!” கண்களில் காதலைத் தேக்கி, அதீத ஆர்வத்தில் நான் அவளை விளித்த அந்த நொடி, என் செவிகளுக்குள் கொய்ய்ய்ங் என்ற சத்தம் கேட்க, கண்களில் பூச்சி பறக்க ஆரம்பித்திருந்தது.

 

 

‘எனக்கு என்ன நடந்தது? சம்யூ என்று அழைக்கத்தானே செய்தேன். அவள் பெயரை விளிப்பது கூட பெருங்குற்றமா என்ன.?’ என எனக்குள் யோசித்தபடி நான் அவளைப் பார்க்க, சில நொடிகளின் பிறகுதான் அவள் என்னை அடித்திருக்கிறாள் என்பதையே உணர்ந்தேன் நான்.

 

 

“என்னடா சித்தார்த்! இந்த பொண்ணு அதுபாட்டுக்கு உள்ளே வந்து, நம்ம விக்ரமை கைநீட்டி அடிக்குது?” என்ற என் அன்னையின் மெல்லிய குரலும்,

 

 

“இவங்க தான் சம்யுக்தா!” என்ற சித்தார்த்தின் குரலும் என் செவிகளில் நுழைந்தது.

 

 

“ஹலோ! இங்கே பாரும்மா!” என் தாய் அவளிடம் ஏதோ பேச வர, ஒற்றைக் கரம் நீட்டி அவரின் பேச்சை இடைநிறுத்தியவள்,

 

“பைத்தியமா டா நீ? கல்யாணத்தில் இருந்து தப்பிக்கிறதுக்கு இப்படியொரு முடிவு எடுத்தியா? இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லக் கூட உனக்கு தைரியம் இல்லையா? அந்தளவிற்கு கோழையா நீ? உன் வீரமெல்லாம் உன் ஸ்க்ரிப்ட் பேப்பரில் மட்டும் தானா.? உயிரோட வேல்யூ தெரியுமா டா உனக்கு. இடியட்! புத்தி இருக்கிற எந்த மனுஷனும் இப்படிச் செய்ய மாட்டான்.!”

 

 

என்னதான் அவள் என்னை வசைபாடினாலும், எனக்கென்னவோ, அவள் மீது கோபம் வரவே இல்லை. எனக்கு ஏதாவது ஒன்றென்றால், அவள் நிச்சயம் வருவாள் என்பது எனக்குத் தெரியும். அவளுக்கு என்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காய் நான் செய்ததை, திருமணத்தை நிறுத்துவதற்காய் செய்வதாய் நினைத்துக் கொண்டாள் என்பது புரிந்தது.

 

 

“சம்யூ!” மிக மென்மையாய், காற்றுக்கும் நோகாது அழைத்தேன் நான். எனக்குத் தெரிந்து என் குரல் இத்தனை மென்மையாய் மாறியதே இல்லை.

 

 

“என்னடா?” அதீத உஷ்ணமாய் அவள் குரல்.

 

“ம்ப்ச்! நான் சொல்றதைக் கேளு டி!”

 

“கேட்க முடியாது போடா! வாழ தைரியமில்லாத கோழை நீ..!” அவள் குரலில் கோபத்தின் சாயல் கொஞ்சமும் குறையவே இல்லை.

 

“ஐ லவ் யூ டி! சும்மா வாய் வார்த்தைக்கெல்லாம் இல்லை. என்னோட அடி மனசிலிருந்து சொல்றேன். ஐ லவ் யூ!” என நான் சொன்ன நொடியில் அவளின் அகல விழிகள் இன்னும் கொஞ்சம் பெரிதாய் விரிந்தது. இத்தனை நேரம் அவள் முகத்தில் முகாமிட்டிருந்த கோபம் மொத்தமும், துளி மிச்சமில்லாமல் காணாமல் போயிருந்தது.

 

“இ.. இது விளையாட்டில்லை விக்ரம்!” முதன் முறையாய் அவள் குரல் கோடிட்ட இடங்களைப் போல் பாதிக்கு பாதி காணாமல் போயிருந்தது.

 

 

ஆனால் அவள் இடைவெளி விட்ட இடங்களின் பதில் எனக்கு மனப்பாடமாய் தெரிந்தது. பரிட்சை எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல் அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்திருந்தேன்.

 

 

கை நீட்டி தூக்குவதாய் பாவனை செய்துவிட்டு, கையைப் பின்னால் இழுத்து விளையாட்டு காட்டும் தாயைப் போல், பதில் சொல்லாமல் என்னையே பார்த்திருந்தாள் சம்யுக்தா.

 

 

அவளின் கருவிழி விரிந்து பெரிதானதைத் தவிர, பெரிதாய் அவளிடம் மாற்றமில்லை. இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள்? என் காதலை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுப்பாளா? திரிசங்கு சொர்க்கத்தில் திசை தெரியாது அல்லாடிக் கொண்டிருந்தேன் நான். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தவிப்பதைப் போல் ஓருணர்வு எனக்குள் வியாபித்திருந்தது.

 

 

“நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறியா சம்யூ?” அவள் மௌனத்தின் கனம் தாங்காமல் நானே வார்த்தைகளைத் தொடுத்தேன். ஆயிரம் வார்த்தைகளில் இல்லாத அழுத்தம், அவளின் இந்த அடர்த்தியான மௌனத்தில் இருந்தது.

 

 

கோபமாய்ப் பேசும் வார்த்தைகளின் கனத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். இந்த மௌனம்.. அதுவும் காதலைச் சொன்ன பிறகான காதலியின் மௌனம் நிரம்பவும் கொடுமையானது. பெயர் தெரியாத உறவென்று சொல்லிக் கொண்டு, திடீரென காதலெனப் பிதற்றும் எனக்கே இப்படியென்றால், காதலைச் சொல்லிவிட்டு, காலம் கடந்து காத்திருக்கும் காதலர்களின் நிலை மிகவும் பரிதாபம் தான்.

 

 

“சம்யூ உன்னைத் தான் கேட்கிறேன்!” தீர்ந்துப் போன பொறுமையுடன் கேட்டேன்.

 

 

“இது விளையாட்டும் இல்லை.! இது சினிமாவும் இல்லை விக்ரம்!” என்ற அவளின் பதிலில் என் கோபம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கத் துவங்கியது. அப்படியென்றால், என்ன சொல்ல வருகிறாள்? நான் நடிக்கிறேன் எனச் சொல்கிறாளா?” என் மனம் எனக்குள் குமைந்தது.

 

 

“நானும் உன்கிட்டே விளையாடலை சம்யூ!” அழுத்தமாய் தெளிவாய் பதில் சொன்னேன்.

 

 

“உனக்கு உங்க பேரண்ட்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கிற கல்யாணத்தில் இருந்து தப்பிக்க என்னை யூஸ் பண்ணிக்கிறியா விக்ரம்.? நிஜமாவே என் மேல் இருக்கிறது காதல் தானா? இல்லை வெறும் மோகம் மட்டுமா? கல்யாணத்திற்கு பின்னால் நம்ம உறவு தொடர வேணாம்ன்னு சொன்னதால் இப்படியொரு முடிவா?!”
வரிசையாய் கேள்விகள் சரம் தொடுத்தன அவளிடமிருந்து.

 

 

கேள்விகளை வார்த்தையால் தொடுப்பதற்கு பதில், ஊசிகளால் கோர்த்திருந்தாள். ஒன்று எண்ணி எண்ணி பேசுகிறாள்.. இல்லையென்றால் எண்ண முடியாத அளவிற்கு பேசிக் கொண்டே போகிறாள். நீறு பூத்த நெருப்பாய் உறங்கிக் கொண்டிருந்த என் கோபத்தை ஊதி எரிய விட்டுவிடுவாளோ? என்ற பயம் எனக்குள் முகிழ்த்தது.

 

 

 

எனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அகம்பாவம் விழித்துக் கொள்ளுமோ? என்ற அச்சம் என்னுள் மேலோங்கியது.

 

 

“பதில் சொல்லு விக்ரம்? எனக்கு தெளிவான பதில் வேணும்! இத்தனை நாள் வராத தைரியம் இப்போ மட்டும் உனக்கு எப்படி வந்தது.? இப்போ லவ் யூ சொல்லிட்டு, மறுபடியும் இரகசிய வாழ்க்கை நடத்தலாம்ன்னு சொல்றியா விக்ரம்?” மீண்டும் குத்தலாய் கேள்விகள். எனக்குள் கனன்றுக் கொண்டிருந்த கோபம், கொஞ்சம் கொஞ்சமாய் புகைய ஆரம்பித்தது.

 

 

“எனக்கு தைரியமே வரக் கூடாதா சம்யூ? என்னை ஒருநாளும் நம்பவே மாட்டியா?!”

 

 

“வீரம் இருக்கிறவன் சாகத் துணிய மாட்டான் விக்ரம்! என்கிட்டே இந்தத் தனியறையில் காதலைச் சொன்னதுக்குப் பெயர் தான் தைரியமா? என்னை உன் குடும்பத்து முன்னால் கூட்டிட்டுப் போய் இவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அறிமுகப் படுத்த முடியுமா? உன் குடும்பத்தில் என் மீதான பார்வை எப்படி இருக்கும்? இவள் ஒரு நடிகை.. பணத்திற்காக என்ன வேணும்னாலும் செய்வாள்ன்னு தானே இருக்கும். அதை மாற்ற உனக்கு தைரியம் இருக்கா விக்ரம்? நீயே என்னை உன் தேவைக்கு யூஸ் பண்ணிக்கிட்டே தானே விக்ரம்? நான் எப்படி உன்னை நம்பறது? நாளைக்கே நீ நடிக்கிறன்னு என்னைப் பார்த்து சொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம்? ஒரேயொரு வார்த்தை! ஒருவார்த்தை தப்பா போனாலும், ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகமாகிடும்! இது வேண்டாம்!” நிமிர்ந்து நின்று என் கண்பார்த்துச் சொன்னாள் சம்யூ.

 

 

‘இப்போது நான் என்ன சொல்வது?’ புரியாமல் சில நிமிடங்களுக்கு என் மனமும் உடலும் ஸ்தம்பித்தது. இத்தனை நேரமாய் சம்யூ பேசியதையெல்லாம் பார்த்து என் தாயும், சித்தார்த்தும், என்னைப் போலவே அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.

 

 

இந்தப் பெண்கள் ஏன் பதில் சொல்ல முடியாத கேள்விகளையே கேட்கிறார்கள்? அணு ஆராய்ச்சியை விட, இவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது வெகு சிரமமாய் இருக்கிறது. இவள் கேட்ட இத்தனை கேள்விகளில், எத்தனை என் மூளைக்குள் பதிந்ததென்று எனக்கே தெரியவில்லை.

 

 

 

இதற்கு எப்படி பதில் சொல்லப் போகிறேன் எனப் புரியாமல் விழித்துக்கொண்டு இழுத்துப் பிடித்தக் கோபத்தோடு, நான் கட்டிலில் அமர்ந்திருக்க, என் மௌனம் கண்டு புருவம் சுருக்கியவள், அந்த அறையிலிருந்து வெளியேற திரும்பிய அந்த நொடி, புகையத் துவங்கிய என் கோபம், நீர் தெளித்த நெருப்பாய் அணைந்துப் போயிருந்தது.

 

 

என்னை விட்டுப் போய் விடுவாளோ? என்ற பதற்றமும், அவளில்லாத தனிமை மீதான பயமும் மேலோங்க,

 

 

“சம்யூ!”

 

என்ற என் குரல் அவளைத் தேக்கி நிறுத்தியது. பதில் ஏதும் பேசாமல் அவள், திரும்பினாலும், அவள் கண்களிலிருந்த ஆர்வம் எனக்குப் புரிந்தது.

 

 

“எனக்கு நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி உன் அளவுக்கு தெளிவு இல்லை தான். ஆனால் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது சம்யூ! அதற்குப் பேர் காதல்ன்னு நீ சொன்னால், என் மனசுக்குள் இருக்கிற அந்த உணர்வுக்குப் பேரு காதல் தான். இப்போ என்ன நான் உன்னை எங்க வீட்டுக்கு அறிமுகப்படுத்தனும் அவ்வளவு தானே?” எனக் கேட்டபடியே மெதுவாய் கட்டிலிலிருந்து இறங்கி அவள் பக்கத்தில் வந்தேன்.

 

‘இவன் என்ன செய்யப் போகிறான்?’ என்ற கேள்வி தாங்கிய விழிகளுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“ம்மா! இவள் சம்யுக்தா! இவளைத் தவிர என் வாழ்க்கையில் யார் வந்தாலும், நான் சந்தோஷமா இருப்பேனான்னு தெரியாது. ஆனால், நான் என் வாழ்க்கையை வாழுறதுக்கே இவள் எனக்கு வேணும். இத்தனை வருஷமா நானும் இவளும் ஒரே வீட்டில் தான் இருக்கோம். உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்.!”

 

 

சம்யுக்தாவை என் தோள் வளைவிற்குள் நிறுத்தியபடியே என் தாயிடம் நான் சொல்லிக் கொண்டிருக்க, என் புறமாய் தலையைத் திருப்பி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

 

 

என் தாய் ஆனந்தி, அதிர்ந்து விழித்து என்னையே பார்த்துக் கொண்டிருக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாது, என் இடக்கை வளைவிலிருந்து மெல்லமாய் அவளை விலக்கி, என் அலைபேசியை எடுத்து என் தந்தைக்கு அழைத்தேன்.

 

 

ஒற்றைக் கையில் அலைபேசியைப் பிடித்து அழைப்பதற்கு வெகு சிரமமாய் இருக்க, என் தந்தைக்கு காணொளி அழைப்பை விடுத்து, சம்யூவின் கரத்தினில் அலைபேசியை ஒப்படைத்துவிட்டு, அவளை மீண்டும் என் தோள் வளைவிற்குள் நிறுத்திக் கொண்டேன்.

 

 

என் தந்தை அழைப்பை ஏற்றதும்,

 

“அப்பா!” என அழைத்தபடியே என் தாயிடம் சொன்னதை அப்படியே என் தந்தையிடமும் சொன்னேன். இதுவரை நான் எனக்காக என் தந்தையிடம் நானாக எதுவுமே கேட்டதில்லை.

 

 

நோட்டுப் புத்தகம், மிதிவண்டி, இருசக்கர வாகனம் துவங்கி, இயக்குநராகும் என் விருப்பம் வரை, எனக்கும் என் தந்தைக்கும் இடையே தூது போனது எல்லாமே என் அம்மா தான். இன்று முதன்முறையாய் எனக்காக நானே என் தந்தையிடம் கேட்ட முதல் விஷயம் என் சம்யூ!

 

 

“என்ன நினைச்சுட்டு இருக்கிற நீ? உன் இஷ்டத்திற்கு தான் எல்லாம் செய்வியா? இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு ஒத்து வருமா? உனக்குப் பார்த்த பொண்ணு கல்யாணம் வேணாம்ன்னு நிறுத்திடுச்சு. இப்போ உனக்கு வேணும்ங்கிறதை சாதிச்சுக்கலாம்ன்னு பார்க்கிறியா? நீ தலைகீழாய் நின்னு தண்ணீர் குடிச்சாலும், இந்த சினிமாக்காரியை கட்ட நான் சம்மதிக்க மாட்டேன்.!” என என் தந்தை வசைபாடியது கூட, என் செவிகளில் ஆசீர்வாதமாய் விழுந்தது.

 

 

 

இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே நிம்மதி, எனக்குப் பார்த்திருந்த பெண் அவளாகவே திருமணத்தை நிறுத்தியது தான். அலைபேசியின் இணைப்பை துண்டித்துவிட்டு, என் தோள் வளைவில் நின்றிருந்த சம்யூவை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டேன்.

 

 

“போதுமா?” என மெல்லியக் குரலில் அவள் காதோரம் வினவினேன்.

 

 

“இது கனவு இல்லையே விக்ரம்?” நடந்துக் கொண்டிருப்பவற்றை நம்ப மறுத்து என்னிடமே கேள்வி கேட்டாள் அவள்.

 

 

“நிஜம் டி! வேணும்னா கிஸ் பண்ணவா? உண்மையா? பொய்யான்னு புரிஞ்சுடும்!” என நான் சொன்ன தொனியில்,

 

 

“கிறுக்கன் டா நீ!” செல்லமாய் கொஞ்சினாள். அவள் கண்களில் காதல் நிறைந்து வழிந்தது.

 

 

இன்னுமும் அவள் வார்த்தைகளால் தன் காதலை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் எனக்குப் புரிந்தது. நான் அவளால் காதலிக்கப்படுகிறேன் என்ற உணர்வே படு கிளர்ச்சியாய் இருந்தது.

 

 

“கிறுக்கன் தான். காதல் கிறுக்கன்.!” சிலாகித்து நான் சொல்ல,

 

 

“அம்மா இருக்காங்க டா!” என தயக்கமாய் விலகி தள்ளி நின்றாள்.

 

 

“நீ செய்றது எதுவுமே எங்களுக்குப் பிடிக்கலை விக்ரம்! நீ இப்போ மயக்கத்தில் இருக்கிறே! மயக்கம் தெளிஞ்சதும், தன்னால் வந்து சேருவ! இதெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான்.!” பிடித்தமின்மையை வெளிப்படுத்திய என் அன்னைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இது தெளியாத மயக்கமென்று..

 

 

“கல்யாணம் நின்னுப் போச்சுன்னு சொல்றதுக்குத்தான் இங்கே வந்தியாம்மா?” என் தந்தை சொன்ன ஒற்றை வார்த்தையிலிருந்தே யூகித்துக் கேட்டேன் நான்.

 

 

“உனக்கு ஒரு விருப்பம் இருக்கிற மாதிரி, அந்தப் பொண்ணுக்கும் விருப்பம் இருக்கும் தானே? இனி முடிஞ்சதைப் பேசிப் பயனில்லை. எப்படியோ நல்லா இருந்தால் சரிதான். எது செஞ்சாலும் எங்களைக் கூப்பிடாதே விக்ரம். ஒருவேளை மனசு சமாதானமாச்சுன்னா நாங்களே வருவோம். உன் விருப்பத்தை நீ தெளிவா சொன்ன பிறகு, உன்னை இழுத்துப் பிடிச்சு இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க நாங்க விரும்பல. வரேன்..!” வேண்டாவெறுப்பாய் சொல்லிவிட்டு என் தாய் வெளியேறியிருக்க,

 

 

“வாழ்த்துக்கள் டா!” எனப் புன்னகையோடு சொன்னபடி எங்களுக்கு தனிமைக் கொடுத்து வெளியேறியிருந்தான் சித்தார்த். அடுத்த நொடி, என் இடக்கையால் என்னவளை இறுக அணைத்திருந்தேன்.

 

 

எங்கெங்கோ அலைந்து திரிந்து, வீடு வந்து சேர்ந்த நிம்மதி எனக்குள் நிறைந்திருந்தது. ஆனால் அந்த நிம்மதிக்கு அற்ப ஆயுள் என்பதை நான் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லைதான்.

 

“காதலிக்கிறேம் என்பதல்ல..
காதலிக்கப் படுகிறோம் என்பது
தான் கிளர்ச்சி..!”

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்