
கீதை 1
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அந்த உயர் ரக வாகனம் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்து, சாரதியாய் அமர்ந்து அதை இயக்கி கொண்டிருந்தவனின் விழிகள் மது அருந்திய கிறக்கத்தில் சிவந்து போயிருந்தது.எதிரே வரும் வாகனத்தைப் பொருட்படுத்தாது தாறுமாறாய் அந்த வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவனின், மனதில் சொல்ல முடியாத ரணங்கள் குடிகொண்டிருந்தது.தனக்கு நேர்ந்த துரோகத்தை நினைத்து அவன் ஆக்ஸிலேட்டரில் மேலும் அழுத்தம் கொடுத்தான்.மேலும் சீறி பாய்ந்த இந்த உயர் ரக வாகனம் பாண்டிச்சேரியை நெருங்கிகொண்டிருந்து.
அலை அலையான கேசமும் கூர்நாசியும் கொண்டிருந்த அவனின் சிவந்த இதழ்கள் மதுவை மேலும் ருசிக்க ஆரம்பித்தது. ஜிம் சென்ற உபயத்தில் மெருகேறிய உடற்கட்டுன் இருப்பவனை, கன்னி பெண்கள் கண்டால் நின்று அவனழகை ரசித்துத் தான் செல்வார்கள், அந்தக் கோகுல கண்ணணின் அழகை கோபியர்கள் ரசித்தது போல், கலியுக கோபியர்கள் இந்தக் கலியுக கிருஷ்ணனை பார்வையிலே விழுங்கிவிடுவது போல் பார்த்துச் செல்வார்கள். அந்த அளவிற்கு அழகில் செழுமையான ஆதித் கிருஷ்ணாவுக்கு ஆடம்பரத்திற்கு ஒன்றும் எந்தக் குறையும் இல்லை, அதற்குச் சாட்சி தான் அவன் இயக்கி கொண்டிருக்கும் லம்போர்கினி கார். கோடியில் புரள்பவன் என்பதை விட,அந்த கோடியை எப்படி மில்லியன் ,பில்லியனாக்குவது என்ற நுட்பமும் அறிந்தவன் இந்த ஆதித் கிருஷ்ணன்.
“க்ரிஷ்.! காதலுக்கு எல்லையே இல்லை,பரந்து விரிந்து இருக்குற கடலை பாரேன், உன் கண்ணுக்கு எல்லை தெரியுதா.? அப்படித் தான் நம்ம காதலும் அதுக்கு எல்லைன்னு ஒண்ணு இல்லைவே இல்லை, இந்தக் கடலைப்போல நம்ம காதலும் ஆழமானது அந்த ஆழம் யாரோட கண்ணுக்கும் புலப்படாது” எனப் பேசியவளின் குரல் ஏனோ அவன் அருகில் கேட்பது போல் உணர்ந்தான்.
“ஆரா..!” என்று காரை ஓட்டியபடி அலறியவனின் குரல் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை, அவ்வளவு வேகத்தில் அந்தக் கார் சீறி பாய்ந்து கொண்டிருந்தது.
பாண்டிச்சேரியை அடைந்தவனின் கார் இவ்வளவு நேரம் சீறிபாய்ந்த அசதியில் ஓய்ந்து ஓரிடத்தில் நின்றது, காரிலிருந்து வெளியே வந்தவன் பாண்டிச்சேரியின் கடற்கரை ஓரத்தில் ஒரு கையில் மதுபாட்டிலும் மறுக்கையில் சிகாரும் வைத்து புகைத்தபடி நடக்க ஆரம்பித்தான், அவனின் மனதில் ரணமாய் வலித்தது அவன் மனதிற்கினியவளின் நினைவுகள், இரவென்பதால் அந்தக் கடற்கரையில் ஆட்கள் யாருமில்லை இவன் மட்டும் கடலை வெறித்தபடி அமர்ந்தான்.
நிலவின் பிம்பம் அந்தக் கடலில் தெரிய ஆடி அசைந்துக்கொண்டிருந்த கடலில் நிலாவில் ஏற்பட்ட சலனம் போலத் தான், அவன் மனமும் சலனம் நிறைந்திருந்தது. அவன் மனம் ஆழ்கடலில் கிடைக்கும் அமைதியை தேடித்தான் இங்கு வந்தது. ஆனால், இந்தக் கடலும் அவளைத் தான் நினைவூட்டியது.
“க்ரிஷ்.! என்ன விட்டு போயிடமாட்டியே, நீயில்லாமல் என்னால ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது” என மீண்டும் அவனின் ஆரா குரல் அவன் செவிதனை தீண்டியது.
“ஆரா..! போயிடு ப்ளீஸ் போயிருடி” என அவன் எதிரே நின்றுக்கொண்டிருந்த ஆராவை பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான், ஆராவோ அவனைப் பார்த்து மென்மையாய் சிரித்தாள்.
“சிரிக்காதேடி, எங்க போனாலும் என் பின்னாடியே வந்துடுவியா.? போ ஆரா போ” உரக்க கத்தினான் கிருஷ்ணா.
“நீ சொன்னால் நான் போயிரேன் க்ரிஷ், சொல்லு போயிடவா.?” எனப் பேசியவளை நோக்கி முன்னேறியவன்.
“ஆரா ப்ளீஸ் என்னை விட்டு போயிடாதேடி” எனப் பாய்ந்து அவளைக் கட்டிக்கொள்ளப் போனவன் பொத்தெனக் கடற்கரை மணலில் விழுந்திருந்தான், மணலில் விழுந்த சிகார் அணைந்து போயிருந்தது, மதுபாட்டிலோ அவன் கைகளைப் பதம் பார்த்திருந்தது. அவனது ஆரா அங்குக் காணாமல் போயிருந்தாள்.
“ஆரா நீ எங்கேடி போன.?” என அலறியவனுக்கு நிதர்சனம் தான் கசந்தது, அவள் எங்கே, இங்கே வரப்போகிறாள் அவள் போய்விட்டாளே,காதலில் திக்கு முக்காட செய்தவள் இவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் விட்டாளே.
அவன் கையில் வெளிப்பட்ட குருதியில் கடற்கரை மணல் ஒட்டியிருந்து எரிச்சல் படுத்தியது. அதைப்பொருட்படுத்தாது கைகளை உதறி எழுந்தவன், மீண்டும் தன் காரை நோக்கி நடக்கலானான். காரில் அமர்ந்தன் தன்னவள் குரல் கேட்க ஏங்கினான், அவளின் குரல்பதிவுகள் அடங்கியிருந்த கோப்பை தொடுதிரை பேசியில் ஒலிக்க விட்டான் அவன்.
“க்ரிஷ்.! ஒரு ஹாப்பி நீயுஸ்டா, நீ எனக்கு வாங்கிக் கொடுத்தியே ரோஸ் பிளான்ட் அது பூத்திருச்சுடா, அதுவும் டபுள் கலர்ல அழகா இருக்குடா, ரொம்பத் தேங்க்ஸ்டா ஏரியாவே இப்போ எங்க வீட்ல தான் எதோ அதிசயம் இருக்கிற மாதிரி வந்து பார்த்திட்டு போயிட்டு இருக்காங்க, ரொம்பத் தேங்க்ஸ்டா க்ரிஷ் எனக்கு உன்னோட ஃபர்ஸ்ட் கிஃப்ட் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்ற குரல் பதிவு முடிந்தவுடன் அடுத்தக் குரல் பதிவு தானாய் ஒலிக்க ஆரம்பித்தது.
“க்ரிஷ்.! உன்னோட ஷர்ட் சைஸ் என்னன்னு மெசேஜ் போடேன், ஃப்ரெண்ட்ஸோட ஷாப்பிங் வந்தேன், ஒரு ஷர்ட் பார்த்திருக்கேன் உன் சைஸ் தானான்னு தெரியலை, நீ சொன்னால் உடனே வாங்கிடுவேன்” அந்தக் குரல்பதிவு முடிய, அடுத்தக் குரல் பதிவு தொடர்ந்தது.
“க்ரிஷ்.! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்னன்னு சொல்லு பார்ப்போம், சரி நானே சொல்லிடுறேன், ஒரு குட்டி டாக் வாங்கிருக்கேன்டா, ஹே..! ஸ்கூபி க்ரிஷ்க்கு ஹாய் சொல்லு, லொள் லொள்..! ஏ க்ரிஷ் ஸ்கூபி உனக்கு அழகா ஹாய் சொல்லுதுல, வொய்ட்டா புஷ் புஷ்ன்னு இருக்கு நான் அவனைப் போட்டோ எடுத்து அனுப்புறேன்”
இது போன்ற ஆயிரக்கணக்கான ஆராவின் குரல் பதிவுகள் அவன் அலைபேசியில் நிறைந்திருக்கிறது, அவளுடைய புகைப்படங்களும் அவனுடைய செல்போனில் நிறைந்து தான் இருக்கிறது, அவள் அவனை விட்டு சென்ற பின்னும் அதை அழிக்க மணமில்லாமல் இருக்கிறான். அவளின் ஒவ்வொரு குரல் பதிவும் அவனுக்குள் சிறிய புன்னகையை விதைத்துச் செல்லும்.
ஆனால் இன்று அவனுக்குள் பெரும் துயரை ஏற்படுத்தியது, அவளின் குரலை கேட்டதினாலோ என்னவோ அவனுடைய கார் இயல்பாய் இலக்கின்றி எங்கேயோ பயணமாகிக்கொண்டிருந்தது. மிதமான வேகத்தில் பயணம் செய்யத் துவங்கினான் அவன், அவனின் போதையும் அவன் கடற்கரையில் விழுந்ததிலே கொஞ்சம் மட்டுபட்டிருந்தது. சீறி பாய்ந்தபடி அங்கிருந்து வந்த கார் இப்போது ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
போதை இறங்கியபின் அடிவயிறு கத்தி பசி என்று ஒன்றிருப்பதை அவனுக்கு நினைவூட்ட, அவனுக்கு எப்போதும் பழக்கபட்ட ரெஸார்ட்க்குள் அலுங்காமல் குலுங்காமல் கார் நுழைந்தது.ஆதித் கிருஷ்ணாவின் லம்போர்கினியை கண்டவுடன் அங்கிருந்த ஊழியர்கள் பரபரப்பாகினார்கள்.
பீச் வீயூ ரெஸார்ட் என்ற பெயர் பலகையில் பச்சை நிறத்தில் மின்னியது எழுத்துக்கள்.
“ஹே ஆதித் சார் வந்திட்டு இருக்காரு, ரூமை ரெடி பண்ணுங்க” என்ற மேனேஜரின் அதட்டலில் விரைத்து நின்றாள் வரவேற்பரையில் நின்றிருந்த பெண்.
“ஏய் என்ன ஷாக்காகி நின்னுட்ட, ரூம் நம்பர் த்ரீ நாட் த்ரீக்கு ஹவுஸ் கீப்பிங் டீமை அனுப்பிச் சுத்தம் பண்ண சொல்லு” என உத்தரவாய் ஒலித்தது விக்னேஷின் குரல்.
விக்னேஷ், ஆதித் கிருஷ்ணாவின் நண்பன் மற்றும் பிஏ, டூயல் ரோலை ஒரே நேரத்தில் செய்யும் அப்பாவி. கடற்கரைக்குச் சென்றுவிட்டு இங்குத் தான் ஆதித் கிருஷ்ணா வருவான் எனக் காத்திருந்தான் விக்னேஷ், அவன் நினைத்தது போல் அந்த ரெசார்ட்டுக்கு தான் வந்து சேர்ந்திருந்தான்.
அரை மணி நேரத்தில் அவன் எப்போதும் தங்கும் த்ரீ நாட் த்ரீ அறை சுத்தம் செய்யப்பட்டுத் தயார் நிலையில் இருந்தது.
வரவேற்பறையில் நுழைந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் மின்தூக்கியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
லிஃப்டினுள் நின்றிருந்த பணிப்பெண்ணோ,
“வெல்கம் சார், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ.?” ஆங்கிலத்தில் கேட்டிருந்தாள்., அந்தக் குரல் அவனுக்கு மீண்டும் எதையோ நினைவூட்ட,
“கெட் லாஸ்ட் ஃபரம் மை சைட்” எனக் ஆதித் கிருஷ்ணா கத்திய கத்தில் லிஃப்ட்டை விட்டு அரண்ட படி வெளியே வந்தாள், ஆதித் கிருஷ்ணவோ மூன்று என்ற பொத்தானை அழுத்தியபினெ லிஃப்ட் மேல்நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.
“என்ன பாப்பா புதுசா.? ஆதித் சார் பத்தி தெரியாது, இங்கே இருக்க யாரு பேசினாலும் அவர் அப்படித் தான் ரியாக்ட் பண்ணுவாரு, போ போய்க் கண்ணைத் தொடைச்சிட்டு வேலையைப் பாரு” என அறிவுறித்தி நகர்ந்த விக்னேஷ் கால் மணி நேரத்தில், கையில் இரவு உணவுடன் கால்கள் கிடுகிடுத்தபடி முன்னூற்று மூன்று அறையின் முன் நின்றிருந்தவன் அழைப்பு மணியை ஒலிக்க விட்டிருந்தான்.
“யா கம் இன்” ஆதித் கிருஷ்ணாவின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.
“பாஸ் நான் தான் விக்னேஷ்” வெளியே நின்றபடி அவன் குரல் கொடுத்தான்.
“என் ரூமுக்கு என்ன அழகான பொண்ணா வரப்போறா, நீ தான் வருவன்னு எனக்குத் தெரியாதா.?” எரிச்சலாய் ஒலித்த கிருஷ்ணாவின் குரலில்.
“பாஸ் கோபமா இருக்கிறார் போல, சரி போவோம் என்ன பண்ணிடப் போறாரு, ரெண்டு அடி அடிப்பாரு வாங்கிக்குவோம், ரெண்டு அடிக்கு பயந்தால் புவாக்கு எங்கே போறது” எனத் தனக்குள் புலம்பிய படி இரவு உணவுகளைப் பெட்டின் அருகில் இருந்த டீபாயில் வைக்க, குளித்துத் துவாலை இடுப்பில் கட்டி நின்றிருந்த ஆதித் கிருஷ்ணாவின் சிக்ஸ் பேக் விக்னேஷூக்குக் காட்சி தந்தது.
“அய்யோ பாஸ் வெட்கமா இருக்குச் சீக்கிரம் ட்ரெஸை போடுங்க” என முகத்தை மூடிக்கொண்டான் விக்னேஷ்.
“ஏய் விக்கி, பேசாமல் போயிடு” அவன் கோபமாய்ப் எரிந்து விழுந்தான்.
“சாரி பாஸூ, உங்களைச் சிரிக்க வைக்கணும்னு நினைச்சேன் அவ்வளவு தான்” எனச் சொன்னவனுக்குத் தான் தெரியும் ஆதித் கிருஷ்ணாவின் நிலை என்னவென்று, ஆரா அவனை விட்டு விலகி சென்றாளோ அன்றில் இருந்து மருந்துக்குக் கூடச் சிரிக்காத தன் நண்பனாகிய முதலாளியின் முகத்தில் இருக்கும் வாட்டம் அவனைப் பெரிதும் பாதித்தது.
தொழில் ரீதியாய் பல தோல்விகளைச் சந்தித்தவன் ஆதித் கிருஷ்ணா, ஒரு நாள் கூட அதெற்கெல்லாம் துவண்டதே கிடையாது, மறுநாள் அதற்கான புது யுக்தியை கண்டுகொண்டு அதைத் தொழிலில் பொருத்தி வெற்றியும் கண்டுவிடுவான், தொழிலாளர்கள் பிரச்சனையில் இருந்து, டெக்னிக்கல் பிரச்சனை வரை எளிதாகக் கையாள்பவன் இன்று உடைந்து போய் நிற்கிறான் எல்லாம் அவளால் வந்தது என்று விக்னேஷூக்கு கோபமாய் வந்தது.
“பாஸ் விடுங்க, இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் ஆசைகாட்டி மோசம் பண்ணுவாளுக, அவளாவே வந்தாள் அவளாவே போயிட்டாள், நான் என்னோட பழைய பாஸை பார்க்கணும் அவ்வளவு தான் எனக்கு வேணும், முதல்ல இந்தப் பாண்டிச்சேரியை மறந்திடுங்க பாஸ் வாங்க நம்ம சென்னைக்குப் போகலாம்” எனப் பேசியவனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது, அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.
“ஆராவை நீ எப்படிக் கூப்பிடுவ விக்கி”
“பாஸ் தங்கச்சின்னு கூப்பிடுவேன்”
“உன் தங்கச்சி செஞ்சதுக்கு நீ தானே பொறுப்பை ஏத்துக்கணும்.?” எனப் பேசியவன் உணவை உண்டுக் கொண்டிருந்தான்.
“பாஸ் அந்தப் பொண்ணே உங்களால தான் எனக்குத் தெரியும்” எனப் பதறினான் விக்னேஷ்.
“சரி அதெல்லாம் விடு, லிஃப்டுக்குள்ள வரும் போது ஒரு பொண்ணு பேசினாளே அவளை ரூமுக்கு வரச் சொல்லு”
“பாஸ் இது மட்டும் தான் பண்ணாமல் இருந்தீங்க வேண்டாம் பாஸ்”
“இங்கே நீ பாஸா.? இல்லை நான் பாஸா.?” எனப் பேசியவனின் விழிகள் சிவந்தது. உண்டு முடித்துக் கையைக் கழுவியவன் துவாலை அவிழ்த்து ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.
“நீங்க தான் பாஸ்”
“அப்போ நான் சொல்றதை செய், அந்தப் பொண்ணைச் சும்மா அனுப்பாதே” எனச் சொன்னவன் மதுவை கொண்டு வரும் படி சைகையில் சொன்னான்.
“அய்யோ இன்றைக்கி என்ன நடக்கப் போகுதோ.? சொன்னாலும் கேட்க மாட்டேன்றாரே” எனப் புலம்பியபடி தரைதளம் நோக்கி நடந்து வந்தான்.
“ஏம்மா அந்த லிஃப்ட்டுல நின்னுட்டு இருந்தாளே, அந்தப் பொண்ணை சார் ரூமூக்கு வரச் சொன்னாரு, அந்தப் பொண்ணுகிட்ட அவர் எப்போதும் குடிப்பாரே அதில் ஒரு பாட்டில் அனுப்பி விடு” என அதிகாரமாய்ச் சொன்ன விவேக்கை முறைத்தாள் வரவேற்பறையில் நின்றிருந்த சுதா
“என்ன முறைக்குற.? மேனேஜர்கிட்ட பேசிக்கவா.?”
“பணத் திமிரு” என ஹீனமான குரலில் சொல்லியபடி சுதா முறைக்க,
“ஆமாம் பணத் திமிருன்னே வச்சுக்கோ, சொன்னதைச் செய்” என அவளுக்குச் சற்றும் அசராமல் அவனும் பேசினான்.
“நீங்க மேனேஜர்கிட்டயே பேசிக்கோங்க, இதென்ன பொண்ணுங்க சப்ளை பண்ணுற இடம்ன்னு நினைச்சிகிட்டிங்களா.?” மேலும் அவனை முறைத்தாள் சுதா. அதன்பின் மேனஜரிடம் பேசி அந்தப் பெண் ஆதித் கிருஷ்ணாவின் அறைக்குள் அனுப்பி வைக்கபட்டாள்.
*****************
ஆதித் கிருஷ்ணாவின் வரவிற்காக வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் விக்னேஷ்.
“இந்தப் பொழப்புக்கு தூ..!” என்று காரி உமிழ்ந்தாள் சுதா.
சுதா விக்னேஷின் காதலி ஆதித் கிருஷ்ணாவிற்க்காக அந்த ரெசார்ட்க்கு வந்து பழக்கபட்டவன், சுதாவுடனும் கொஞ்சம் பழகிக்கொண்டான், அது இறுதியில் காதலில் வந்து நின்றது. காதல் இருப்பதால் தான் உரிமையோடு அவனைக் கடலைப்போல வறுத்துக் கொண்டிருக்கிறாள் சுதா.
“எக்ஸ்க்யூஸ்மீ வாட்டர் ப்ளீஸ்” எனச் சுதாவிடம் போய் நின்றான் விக்னேஷ்.
“விக்கின்னு பேரு வச்சவங்களுக்கெல்லாம் தண்ணி கொடுக்க முடியாது” அதிகாரமாய்ச் சொன்னாள் சுதா.
“ஏய் சுதா என்ன ரொம்ப துள்ளுற.?”
“நீ பண்ணுற வேலையைப் பார்க்கும் போது வெட்டி போடணும் போலக் கோபம் வருது போயிரு மூஞ்சி முன்னாடி நிற்காதே” அவள் மேலும் கோபமாய்ப் பேசினாள், ஆதித் கிருஷ்ணாவின் நடவடிக்கையில் கோபம் கொண்டவள், அதை அவனிடம் காட்ட இயலாமல் தன்னவனிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.
“உன் ஃப்ரெண்டுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா.? பாக்கிற பொண்ணெல்லாம் அவன் ரூமுக்குக் கூப்பிட்டிகிறான், இவனுக்கு மட்டும் தான் காதல் தோல்வி ஆன மாதிரி பண்ணுறான்” ஆதித் கிருஷ்ணாவை அவன் இவன் என்று பேசியது பொறுக்காமல்.
“ஏய் அவனைப் பத்தி உனக்கென்ன தெரியும்.? நானே பாஸ்ன்ற வார்த்தைக்கு மறுவார்த்தை பேசினதில்லை” என அவன் எதோ சொல்ல வரும் போது கோபத்தைக் கட்டுபடுத்த முடியாதவளாய்,
“தண்ணி தானே கேட்ட, இந்தா” எனத் தன்னுடயை வாட்டர் பாட்டிலை அவனிடம் நீட்டி அங்கிருந்து நகர்ந்தவளை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சுதாவின் விக்கி.
சில மணி நேரங்களுக்குப் பிறகு
ஆதித் கிருஷ்ணா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான், அவன் முகம் சற்றுப் பளபளத்தது. இயல்புக்கு சற்று மீண்டு புன்னகையுடன் வந்த நண்பனின் முகம் கண்டு சந்தோசம் கொண்டான் விக்னேஷ்.
“மச்சான் விக்கி சென்னை கிளம்பலாமா.?” அவன் மச்சான் என்று அழைத்தவுடன் விக்னேஷ் முகத்தில் வந்ததே ஒரு சந்தோசம் ஓடிச் சென்று அவனைக் கட்டிக்கொண்டான். நடப்பதை தூர நின்று பார்த்துக்கொண்டிருந்த சுதா இகழ்ச்சியாய் இதழ் வளைத்தாள்.
“போலாம் மச்சான் வாடா, நீ எங்கே கூப்பிடுறீயோ அங்கே நாய் மாதிரி உன் பின்னாடியே வர்றேன்டா” எனக் குதுகலமாய்ச் சொல்ல,
அவன் வந்த லம்போர்கினியை ரிசார்ட்டிலேயே விட்டுவிட்டு, விக்னேஷ் ஓட்டி வந்திருந்த காரில் ஏறிக்கொண்டான் ஆதித் கிருஷ்ணா.
“மச்சான் லம்போர்கனிடா.?”
“ஆள் அனுப்பி எடுத்திகலாம் வாடா, உன்னோட கார்ல போகலாம்” எனச் சொன்னதும் மேலும் துள்ளலுடன் ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தான். ஆராவை பற்றி எதுவும் வாய்திறந்து பேசிவிடக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டு தான் விக்னேஷ் இருக்கையில் அமர்ந்தான்.
“மச்சான் ஆதித், எந்த ரூட்டுடா.? செங்கல்பட்டு போயி போகலாமா.? இல்லை ஈசிஆர்லையே போகலாமா.?” பாஸ் பறந்து போயிருக்க,மச்சான் ஆதித்தாக மாறியிருந்தது, அவர்களின் ஆழ்ந்த நட்பை காட்டியது.
“ஈசிஆர் ரூட்ல போடா மச்சான்” எனச் சிரித்தபடி சொன்னவனைக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது. அவன் வேறு பெண்ணுடன் இருக்கிறான் என்பதெல்லாம் அவனுக்குத் தேவையில்லாத ஒன்று, தன் நண்பன் எப்போதும் போல் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும், அதற்காக மலையைச் சாய்க்க சொன்னால் கூடத் தயாராகத் தான் இருப்பான் விக்னேஷ்.
மௌனமான அந்தப் பயணத்தில் காரின் ஏசி ஜில் உணர்வை கொடுக்க, அதில் லயித்துப் போனவனின் கரங்கள் தானாய் ரேடியோவை ஆன் செய்ய இரவு கானம் இசைத்துக்கொண்டிருந்தது.,
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை.!
காற்றில் எங்கும் உன் வாசம்.!
வெறும் வாசம் வாழ்க்கையில்லை.!
உயிரை வேறொடு கிள்ளி.!
என்னைச் செந்தீயில் தள்ளி.!
எங்கே சென்றாயோ கள்ளி.!
ஓயும் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..!
பூங்காற்றிலே… என மீண்டும் துவங்கும் முன் பட்டெனப் பாடலை அணைத்திருந்தான் ஆதித் கிருஷ்ணா.. அவளின் நினைவுகளை மீண்டும் அவனிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தது அந்தப் பாடல்
“ஆரா…!” அவன் பெருங்குரலேடுத்துக் கத்திய போது, சடன் பரேக் போட்டு வாகனத்தை நிறுத்தியிருந்தான் விக்கி.
பாதிக் கடலில் துடுப்பை இழந்த படகை போல் தள்ளாடிய அவன் மனமோ எங்கோ தறிகெட்டு ஓட ஆரம்பித்தது, அவளுடன் ஆன நினைவுகள் மொத்தமாய் வடிய மறுத்தது. அவளின் குரல்கள் அவன் மூளை நரம்புகளை உசுப்பேற்றி, அவனின் செவியருகில் அவளின் குரலை ஒலிக்கச் செய்தது. பசியில் அழும் குழந்தை போல் அவன் காதல் அவளைத் தேடியது,
“கிருஷ் நீயே என்னை விட்டு விலகினாலும், நான் உன்னை விட்டு விலகமாட்டேன். உன் கூடவே தான் இருப்பேன்” மீண்டும் அவள் குரல் கேட்டு அவன் மூளையை மழுங்க செய்தது.
“ஆரா என்கிட்ட வந்திருடி” எனப் புலம்பியவனைப் பார்த்துக் கண்ணீர் வடித்தான் விக்னேஷ்,
“மச்சான் ஆதித்..! விடுடா” அவனைத் தேற்ற முயன்று தோற்றுப் போனான் விக்னேஷ்,
அதேநேரம் குழலுதும் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை ஆதித் கிருஷ்ணாவின் அலைப்பேசியில் இசைந்து யாரோ அழைக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்ல, அதை எடுத்து பார்த்தவனின் கண்கள் அகல விரிந்தது “வொய்ஃப் காலிங்” என்ற எழுத்துகளைப் பார்த்து அவன் விழிகள் இடுங்கியது.
அந்தக் குழலிசையும் அவனுடைய ஆராவை தான் நினைவூட்டியது, மனதில் கலந்தவளை மறக்கலாம், அவள் அவனுடைய உயிரில் கலந்துவிட்டாளே அவளை எவ்வாறு அவனால் மறக்க இயலும்.
கிருஷ்ணனின் குழலோசையும்
தோற்று போகும்..!
என்னவளின் இனிய
குரலோசையில்..!

