
கீதை 2
“ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது” – கீதையில் சொல்லப்பட்டது.
ஒரு முறை கேட்ட மெல்லிய குழலிசை நின்றுபோய், மீண்டும் அவன் அலைபேசி குழலிசைக்க, வெறுப்புடன் அலைபேசியை ஏறிட்டவனின் விழிகளின் நடுவில் சிக்கியது அவளின் பிம்பம். ‘வொய்ஃப் காலிங்’ (Wife Calling) என்று மீண்டும் வந்ததோடு, புகைப்படத்தில் புன்னகைத்து நின்ற மஹதியின் முகம் அவனுள் சூடு பறக்கக் கோபத்தைக் கிளப்பியது.
கோபத்துடன் விக்னேஷை ஏறிட்டான் ஆதித் கிருஷ்ணா. அந்தக் கழுகுப் பார்வையைக் கண்டு விக்கியின் முதுகெலும்பு பயத்தில் சில்லிட்டது.
“பாஸ், மேடம் தான் கூப்பிடுறாங்க எடுத்துப் பேசுங்க” என ஹஸ்கி குரலில் சொன்னவனை மேலும் கோபத்துடன் ஏறிட்டான். அழைப்பு தடைப்பட்டு நிற்க, விக்கிக்கோ மேலும் பிபி (B.P) எகிறியது.
“பாஸ், கால் கட் ஆகிருச்சு. அடுத்து ஜெகன் சார் கூப்பிடுறதுக்குள்ள நீங்களே மேடம் கிட்ட பேசிடுங்க” என அவன் சொன்ன போது ரௌத்திரமாய் அமர்ந்திருந்தான் ஆதித். விக்னேஷ் சொன்னது போல், ஜெகன் அழைப்பது அவன் அலைபேசியில் சிணுங்க ஆரம்பித்தது.
எப்போதும் அவன் கேட்கும் இனிமையான கிருஷ்ணனின் குழலிசை, தன்னவளுக்குப் பிடித்ததென்று அவனுக்கு அனுப்பிய குழலிசையைக் கேட்டு அவன் மனம் இப்போது கோபமடைந்தது.
“ஹே க்ரிஷ்! உனக்கு ஒரு ரிங்டோன் அனுப்பி இருக்கேன் பாரேன். அந்தக் கிருஷ்ணனே வந்து குழலிசைக்கிற மாதிரி இருக்கு. நானும் இதைத்தான் ரிங்டோனா வச்சிருக்கேன், நீயும் வச்சுக்கோ. இதைக் கேட்கும் போதெல்லாம் நீயே என் பக்கத்துல இருக்குற மாதிரி இருக்கு. மிஸ் யூ கிருஷ், சீக்கிரம் மீட் பண்ணலாம்” – நினைவடுக்கில் இருந்த ஆராவின் குரலை அவன் மூளை அவன் காதருகில் ஒலிக்கச் செய்தது. அவளின் எண்ணங்களைப் பட்டென ஒதுக்கியவன் ஜெகனின் அழைப்பை ஏற்றான்.
“ஆதித் ஸ்பீக்கிங்” (Aadhith speaking) அவனுடைய குரல் சற்று அழுத்தமாய் ஒலித்தது.
“மாப்பிள்ளை, ஜெகன் பேசுறேன். மஹதி போன் பண்ணியிருக்காள், நீங்க எடுக்கலைன்னு என்கிட்ட வருத்தப்பட்டாள், அதான்…” என இழுத்தவர் தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெகன்நாதன். யாரிடமும் அவர் இவ்வளவு பணிந்து பேசியதில்லை, தன் மகளுக்காக ஆதித் கிருஷ்ணாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
“போனை எடுக்கலைன்னா நான் பிஸியா இருப்பேன்னு தெரியாதா? சொல்லுங்க உங்க பொண்ணுகிட்ட” எனச் சொன்னவன், பதிலை எதிர்பாராது அழைப்பை பட்டெனத் துண்டித்திருந்தான். மீண்டும் மஹதியிடம் இருந்து அழைப்பு வந்து ‘வொய்ஃப் காலிங்’ என வர, அந்த விலை உயர்ந்த போனைத் தூக்கி எறியத்தான் தோன்றியது.
ஆனால், அந்த அலைபேசியில்தான் ஆரா அவனுக்கு அனுப்பியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரல்பதிவுகளும், வாட்ஸ்அப் (WhatsApp) குறுஞ்செய்திகளும் நிறைந்திருந்தன. அந்த அலைபேசியை அவனால் மலையளவு கோபத்திலும் கூடத் தூக்கி எறிய முடியவில்லை. தன்னை விட்டுச் சென்றவள் மீது இவ்வளவு காதலா? என்றால் ஆம், காதல் தான். ஆரா அவனுடைய வாழ்வில் வர்ணம் சேர்த்தவள். ஆனால் அவனை விட்டுச் செல்லும் போது, அவனின் புன்னகையைக் கூட மிச்சம் வைக்காமல் ஒட்டுமொத்தமாய்ச் சுருட்டிச் சென்ற கொள்ளைக்காரி அவள். ஆராவின் நினைவுகளுடன் மஹதியின் அழைப்பை ஏற்றான்.
“ஆதித்! ஆதித்!” இருமுறை மஹதி அழைத்தும் அவன் பதில் தரவில்லை.
“ஆதித்! ஆர் யூ தேர்?” (Aadhith! Are you there?) பொறுமையிழந்து அவள் கத்தியிருந்தாள்.
“இருக்கேன், உயிரோட தான் இருக்கேன் சொல்லு” அவன் குரல் வெறுமையாய் ஒலித்தது.
“ஆதித் ப்ளீஸ் சென்னை வாங்க, பாண்டிச்சேரிக்கு எதுக்குப் போனீங்க?”
“லுக் மஹதி! டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்ஸ் (Don’t cross your limits). நீ உன்னோட லிமிட்ஸ்ல இருக்கக் கத்துக்கோ. நான் எங்கே போறேன் வர்றேன்றதை வேவு பார்க்கிறது தான் உன்னுடைய வேலையா? லீவ் மீ அலோன் (Leave me alone)” என அவன் அழுத்தமாய்ச் சொல்வதிலேயே அவனுடைய மனநிலை அவளுக்குப் புரிந்து போனது.
“ஆதித்! நான் உங்க மேல அக்கறைப்படுறது உங்களுக்கு வேவு பார்க்கிற மாதிரி தெரியுதா? நான் உங்களோட…” அவள் ஏதோ சொல்ல வரும் முன்,
“ஸ்டாப் இட் மஹதி! மறுபடியும் அந்த வார்த்தையைச் சொல்லி என்னை உன் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கலாம்ன்னு நினைக்காதே. மறுபடியும் கால் பண்ணாதே, அப்படி நீ பண்ணினால் சென்னை வர்றதை பத்தி நான் யோசிக்க வேண்டியதாய் இருக்கும்” என அதட்டலாய் சொன்னவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“விக்னேஷ்! ஸ்டார்ட் தி கார்” என்றான்.
“பாஸ், சென்னைக்குத் தானே?”
“நோ!” என மறுப்பாய் தலையசைத்தவனைக் கண்டு அதிர்ந்து போனான் விக்னேஷ்.
“பாஸ், நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நம்ம இப்போ சென்னை கிளம்புறதுதான் நல்லது” தொழிலைப் பற்றிப் பேசியவுடன் அவன் மனம் சற்று மாறியது.
“ஓகே! சென்னைக்குப் போ” என உத்தரவாய் சொன்னவன், அவனுடைய அலைபேசியைக் காரில் இருந்த டிஜிட்டல் ரேடியோவில் இணைத்து ஆராவின் குரலை ஒலிக்க விட்டான்.
“க்ரிஷ்! க்ரிஷ் உனக்காக நான் ஒரு பாட்டு பாடப்போறேன் கேளு!” எனச் சொன்னவள் பாடத் துவங்கியிருந்தாள்.
கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாயக் கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விடக் காதல்
ராதை அலைந்தாள்
அவனைத் தேடி அவள்
கண்ணைத் தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா
கண்ணீரில் உயிர்
துடிக்கக் கண்ணா வா
உயிர் கொடுக்க!
“என்ன கிருஷ், பாட்டு எப்படி இருக்கு? உனக்காக ரெண்டு நாளா பிராக்டிஸ் செஞ்சு பாடிருக்கேன், கேட்டுட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லணும் ஓகேவா!” என அவள் பேசிய குரல்பதிவு ஓய்ந்து போக, ஆராவின் கிருஷ்ணனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். கனவிலும் தன் ஆராவின் நினைவுகளைத்தான் துரத்திக்கொண்டிருப்பான். நண்பன் உறங்குவதை உறுதி செய்த விக்னேஷ் அவளின் குரல் பதிவை அணைத்துவிட்டான். உறங்கும் பொழுதாவது அவன் நிம்மதியாய் உறங்கட்டும் என்று நினைத்திருந்தான்.
’பிருந்தாவனம் பேலஸ்’ (Brindavanam Palace)-க்குள் மெல்ல காரை இயக்கி வந்தான் விக்னேஷ். செயற்கை நீருற்று மத்தியில் மயில்பீலி சூடியிருந்த கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது போன்ற சிற்பத்தைத் தாண்டி, கார் உள்ளே சென்று போர்ட்டிகோவில் நின்றது.
“பாஸ், வீட்டுக்கு வந்துட்டோம்” ஆதித் கிருஷ்ணாவை எழுப்பினான் விக்னேஷ்.
“ம்ம் ஓகே!” என்றவன் வாயிலில் வந்திறங்கிய போது அதிகாலை ஐந்து மணி. பேலஸில் இருந்த அனைவரும் அவசரமாய் வேலை செய்து கொண்டிருக்க, ஆதித் கிருஷ்ணா முதல் தளத்தில் இருக்கும் தன் அறைக்குச் சென்று, வெண்பஞ்சு மேகத்திற்குள் புதைவது போன்ற உணர்வோடு தன் பஞ்சு மெத்தையில் பொத்தென விழுந்து உறக்கம் தழுவியிருந்தான்.
அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் பட்டுப்புடவை கட்டி இறங்கி வந்த அந்தப் பெண்மணிக்கு நடிகை சரோஜா தேவியின் சாயல். அந்தக் காலத்தில் சரோஜா தேவி அளவுக்கு நடிப்பில் புகழ் பெறவில்லை என்றாலும், பக்திப் பாடல்கள் மூலம் பிரபலமானவர் தான் யசோதா – ஆதித் கிருஷ்ணாவின் தாய். தூங்கி விழித்தவுடன் குளித்துவிட்டுப் பூஜையறையில் இருக்கும் கிருஷ்ணனைப் பார்த்து அவர் பாடவில்லை என்றால், அவருக்கு அந்த நாள் ஏதோ அபசகுணம் நடக்கப் போவதாக எண்ணுவார். பட்டுப்புடவைகள் அவருக்குப் பிரியமான ஒன்று. பட்டுப்புடவை இன்றி அவரைக் காண முடியாது; தினம் ஒரு பட்டுப் புடவை கட்டும் பழக்கம் கொண்டவர் யசோதா. காஞ்சிபுரத்திற்கே சென்று நம்பிக்கையான நெசவாளரிடம் இருந்து நேரடியாக வாங்கி வருவார். வாரத்திற்கு ஒரு முறை காஞ்சிபுரம் சென்று வருவதும் இவரின் வழக்கம்.
“ஏய் கற்பகம்! பூஜைக்கு எல்லாம் ரெடியா?” குரல் கொடுத்தார் யசோதா.
“அம்மா, எல்லாம் தயார் பண்ணிட்டேன்மா. பூஜை எல்லாப் பொருளையும் அறையில் வச்சிருக்கேன்” எனக் கற்பகம் சொல்ல,
“சரி சரி, ஆதித் வந்தானா?”
“சின்னவர் வந்த உடனே வழக்கம் போல மாடிக்கு போயிட்டார்மா.”
“அப்புறம் உங்க முதலாளி எங்கே?”
“அம்மா, அவர் காலையிலேயே எழுந்து வாக்கிங் போயிட்டார்மா.”
“அவர் வாக்கிங் போனதை நீ பார்த்தியா கற்பகம்?”
“பார்த்தேன்மா, வர்றதுக்குள்ள அருகம்புல் ஜூஸ் போட்டு வைக்கச் சொல்லியிருக்காருமா” எனப் பதில் கொடுத்தாள் கற்பகம். அந்த வீட்டின் மூத்த சமையலம்மா; கற்பகத்தின் கைபக்குவத்தால் இருபத்தைந்து வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கிறார். அவரை அந்தக் குடும்பத்தின் உறுப்பினராகத்தான் அனைவரும் நினைப்பார்கள்.
“சரி சரி, அவருக்கு அருகம்புல் ஜூஸைப் போட்டுத் தயாராக வை” எனச் சொன்ன யசோதா பூஜையறையினுள் நுழைந்து, வெள்ளியாலான கிருஷ்ணர் சிலைக்குப் பூஜை செய்து பாட ஆரம்பித்தார்.
குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா…
யசோதா பூஜையறையினுள் நுழைந்த ஐந்து நிமிடத்தில், சாம்பிராணியின் புகையும் அவரின் பாட்டும் இனிதான சூழலை வீட்டில் நிறைத்திருந்தது. பூஜை முடித்து வெளியே வந்த தாயை ஆதுரமாய்க் கட்டிக்கொண்டாள் அந்த வீட்டின் கடைக்குட்டி லாவண்யா.
“அம்மா, உன் குரல் அவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி (Positive energy) கொடுக்குதுமா” எனக் குதூகலித்தாள் ஆதித் கிருஷ்ணாவின் ஒரே தங்கை லாவண்யா. லாவண்யாவின் பேச்சை மீறவே மாட்டான் ஆதித் கிருஷ்ணா. கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும் இவள் வீட்டிற்கே செல்ல மகாராணி.
“குட் மார்னிங் மகளே!” என வாக்கிங் போய்விட்டு வந்திருந்தார் கோதண்டம். ஷார்ட்ஸும் அவர் போட்டிருந்த ஷூவும் ஐம்பது வயது மதிக்கத்தக்க அவரைப் பத்து வயது குறைத்தே காட்டியது. அவர் அணிந்திருந்த கோல்டு பிரேம் (Gold frame) கண் கண்ணாடி பளபளத்தது.
“வெரி குட் மார்னிங் டாடி, அண்ணாவை பார்த்தீங்களா? எங்கே போனான்?” ஆர்வமாய்க் கேட்டாள் சின்னவள்.
“அவனை ஏன்டி உங்க அப்பாகிட்ட கேட்கிற, உன் அருமை அண்ணிகிட்ட கேளேன்” என்று சொன்ன யசோதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“அம்மா, உனக்கு அண்ணியைத் திட்டுறதே வேலையா போச்சு. அவங்க எவ்வளவு க்யூட் தெரியுமா? அண்ணாவோட லைஃபை மாத்துறதுக்காக வந்திருக்காங்க, அவங்களைத் திட்டாதீங்க.”
“அவ சரியாக இருந்திருந்தால் உங்க அண்ணன் எதுக்கு ராத்திரியும் பகலும் ஊரையே சுத்திட்டு வந்திட்டு இருக்கான்? அவ நிக்க வச்சுக் கேள்வி கேட்டிருந்தால் இப்படியெல்லாம் பண்ணுவானா?” என மிகவும் வருந்தினார் யசோதா.
“மருமகளை ஏன்டி குறை சொல்லுற? அவ சரியாக இருக்குறதால தான் இப்போ வீட்டுப் பக்கம் எட்டியாவது பார்க்கிறான் ஆதித். இல்லைன்னா அதுவும் இருக்காது” எனப் பேசிக்கொண்டிருந்தவரின் கரங்களில் அருகம்புல் ஜூஸைக் கொடுத்துச் சென்றாள் கற்பகம்.
“எல்லாரும் என்னையும் ஆதித்தையும் பத்தித்தான் பேசிட்டு இருக்கீங்க போல” என்றபடி மாடிப்படிகளில் அன்ன நடையிட்டு இறங்கி வந்தாள் மஹதி.
ஆகாய நீல நிறப் புடவையில் இறங்கி வந்தவளின் கூந்தல் இடையைத் தாண்டி அசைந்தாட, கார்குழலோடு சேர்ந்து அவள் சூடியிருந்த மல்லிச்சரமும் அழகாய் ஆடியது. மஹதி உள்துறை அமைச்சர் ஜெகன்நாதனின் மகள். ஆதித் கிருஷ்ணா மீது அவள் வைத்திருந்த ஒருதலைக் காதலால் இப்போது அவள் இங்கே இருக்கிறாள். ஆம், ஒருதலைக் காதல் தான். ஆதித் கிருஷ்ணாவுக்குத் தான் அவனின் ஆரா இருக்கிறாளே! அவனின் ஆதி முதல் அந்தமாய் இருந்தவள் அவனை விட்டுச் சென்ற பிறகு, மஹதி இவன் வாழ்க்கைக்குள் வந்ததென்னவோ அவனுக்குப் பிடிக்கவில்லைதான். யசோதா – கோதண்டத்தின் பிடிவாதத்தால் தான் இவளைச் சகதித்துக் கொண்டிருக்கிறான் என்பதை விட, அவளை அணு அணுவாய்ச் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறான் ‘தி கிரேட் ஆதித் கிருஷ்ணா’.
“குட் மார்னிங் மருமகளே” அருகம்புல் ஜூஸைப் பருகியபடி கையசைத்தார் கோதண்டம்.
“குட் மார்னிங் யங் மேன்” அவளும் பதிலுக்குச் சொல்ல,
“அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என யசோதாவின் கால்களில் விழுந்து வணங்கினாள் மஹதி.
“ம்ம் நல்லா இரும்மா, அவன் மனசுல நீ சீக்கிரமே இடம் பிடிக்கணும்ன்னு நான் வேண்டாத தெய்வமில்லை” எனப் புலம்ப ஆரம்பித்தார் யசோதா.
“அதெல்லாம் அண்ணி இடம் பிடிச்சிருவாங்கம்மா” எனப் புன்னகைத்தவள் மஹதியின் கைபற்றி அழைத்துக்கொண்டு ஓடினாள் லாவண்யா.
“அண்ணி! இப்படிப் பதினாறு முழப் புடவையைச் சுத்திக்கிட்டு இருந்தால் அண்ணாவுக்குப் பிடிக்காது” எனத் தன் அண்ணனைப் பற்றிய ரகசியம் சொன்னாள் லாவண்யா.
“லாவா! எனக்குப் புடவை கட்டியே பழகிருச்சே.”
“அப்போ எங்க அண்ணனை மறக்கத் தயாராகியிருங்கள்” என எச்சரித்தாள் லாவண்யா.
“நல்ல நாள் அதுவுமா அபசகுணமா பேசாதே லாவா” என அண்ணியாய்க் கண்டித்தாள் மஹதி.
“நல்ல நாளா? இன்னைக்கு என்ன நல்ல நாள் அண்ணி?” என ஆர்வமாய் லாவண்யா கேட்ட போது,
“மஹதி! இதைப் போய் ஆதித்கிட்ட கொடுத்து எழுப்பி விடு” எனக் காபிக் கோப்பையை அவள் கையில் கொடுத்திருந்தார் யசோதா.
“அய்யோ! அத்தை நான் போகலை, கற்பகம் அக்காவை கொடுக்கச் சொல்லுங்க. ஆதித்க்கு என்னைப் பார்த்தாலே கோபம் வந்திடுது, நான் போகமாட்டேன்” எனப் பதறினாள் மஹதி.
“இதெல்லாம் நீங்கதான் அண்ணி பண்ணணும். என் வயசுக்கு மீறின பேச்சுதான் இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோங்க” எனச் சொல்லிவிட்டுப் பூஜை அறைக்குள் நுழைந்தாள் லாவண்யா.
“அந்த ஆராவை மறந்துட்டு மஹதி! மஹதி! -ன்னு எங்க அண்ணி பேரை ஜெபிக்கணும்” என வேண்டியவள், விபூதியை எடுத்து வந்து மஹதி நெற்றியில் கீற்றாய் வைத்துவிட்டாள் லாவண்யா.
எத்தனையோ சமாதானங்களுக்குப் பிறகு பயந்தபடி ஆதித் கிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தாள் மஹதி.
அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏசியால் (AC) குட்டி காஷ்மீரைப் போல் ஜில் உணர்வைக் கொடுக்க, மெல்ல முன்னேறினாள் மஹதி. முட்டி வரை இருந்த ஷார்ட்ஸும், வெற்றுடலுமாய்க் குப்புற விழுந்து கிடந்தவனின் கரத்தில் அலைபேசியும் காதில் இயர்பட்டும் (Earbud) இருந்தது.
காபியை மேசை மீது வைத்தவள், ஆளுயரச் சாளரத்தின் அருகே சென்று திரைச்சீலையை விலக்கிவிட்டாள். அந்த கணத்தில் வெய்யோனின் கதிர்கள் ஆதித் கிருஷ்ணாவின் முகத்தில் விழ, அவனின் மெத்தையில் வந்து அமர்ந்தவள் இமைக்காது அவனையே பார்த்து ரசித்தாள்.
மெல்ல அவன் அவளை “ஆரா!” என அழைக்க, அவளின் கரம் பிடித்திழுத்துத் தன்னோடு அணைக்க, மஹதியும் அவனோடு ஒன்றினாள். அவளின் இதயம் படபடவெனத் துடிக்க, அவன் கன்னத்தில் இதழ் பதித்தவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்துச் சொன்னான் –
“குட் மார்னிங் ஆரா!”
கிசுகிசுப்பான அவனின் குரல் அவளை ஏதோ செய்தாலும், அவள் மனதில் இருந்து நீங்காத ஆராவின் பெயரைக் கேட்டு ரணமாகிப் போனவள் அவனை விட்டு விலக நினைத்த போது, மேலும் அவளுக்குள் புதைய ஆரம்பித்தான் ஆதித் கிருஷ்ணா!
உயிரே போகும் அளவிற்கு
வலியை கொடுத்து
சென்றவளை,
உயிராய் நினைக்கிறேன்!
நிஜத்தில் சுமந்தவள்
நினைவுகளைக் கொடுத்து
சென்றாளே!

