
சிற்பமே 3
“வித்யா! ஜானவி உன் அப்பா அம்மாவை உரிமையா பாசமா கூப்பிடுறாள். எதுக்கு இப்போ பாப்பாவை மிரட்டுற” என்று பொங்கினான் பாலாஜி.
“ஆமா வித்யா! பாரு பப்புமாவுடைய முகம் வாடிடுச்சு! ஓ மை காட்” என்று வருந்தினார் காஞ்சனா.
காஞ்சனா பாட்டி அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவது வழக்கம்.பாட்டியின் வழக்கம் பழக்கம் அப்படியே பேத்தியிடமும் ஒட்டிக் கொண்டது.
வித்யாவின் முகம் இவர்களால் வாடியதை உணர்ந்த குசேலன் மட்டுமே இக்குடும்பத்தில் ஒரு எதார்த்தவாதி. ஆனால் வீட்டில் பாட்டியின் கையோங்கி இருப்பதால்! மனைவி சொல்லே மந்திரம் என்று தன் கருத்துகளை வெளியிடவே மாட்டார்.
“பாப்பா! வித்யா என்ன சொல்ல வரான்னா” என்று அவர் ஆரம்பிக்க,
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் குசேலன்” என்று வேகமாக தடுத்த காஞ்சனா,
“பப்புமா பிறந்து இந்த இருபது வருஷத்துல அவளுடைய முகம் இப்படி சுருங்குனதே இல்லை வித்யா! உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை” என்று சலித்துக்கொண்டார் பாட்டி.
இந்த கலவரத்தில் வந்தவர்களை யாரும் அமரச் சொல்லக்கூடவில்லை. பணம் இருந்தால் போதுமா? இங்கிதம் இன்றி பணம் இருந்து என்ன பயன்!
‘என்ன குடும்பம் இது!’ என்று மனதில் நினைத்த வித்யாவிற்கு மலைப்பாக இருந்தது.
இங்கு மாணிக்கம் மற்றும் சரஸ்வதியோ, சூடு, சுரணை, வெக்கம், மானம் இப்படி எல்லாவற்றையும் பால்பாண்டி ஆட்டோவிலேயே கழட்டி வைத்துவிட்டு வந்தது போல், “பாப்பா! எங்களை ஆசையாக கூப்பிடுது. நாங்கள் எல்லாம் அவ்வளவு நெருக்கம்” என்று சரஸ்வதி பல்லைக் காட்ட,
‘இவங்க மரியாதைக்காக நான் பேசினால் இவங்க பல் இளிச்சிட்டு இருக்காங்க’ என்று வித்யாவால் கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை வெளியே தன் கடுப்பைக் காட்டவும் முடியவில்லை.
“சரி, சரஸ் வா நம்ம சாப்பிடலாம். பாலைய்யா சாப்பாடு வாங்கி பரிமாறு” என்று மாணிக்கம் மற்றும் சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் ஜானவி.
தன் அறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த வித்யாவிற்கு பியூட்டி பார்லரில் இருந்து ஃபேசியல் பண்ண வந்திருந்தனர்.
வித்யா ஆடம்பரம் விரும்புவதில்லை. பாலாஜியின் பண பலத்தைப் பார்த்து காதலிக்கவில்லை. கல்யாணத்திற்கு பின் பாலாஜி தன் மனைவியிடம் ஆடம்பரத்தை திணித்தான். முதலில் ஆர்வம் காட்டாது இருந்த வித்யாவிற்கு நாளடைவில் ஆர்வம் வந்துவிட்டது.
‘பாலாஜி! எனக்கு எல்லா வசதியும் பண்ணி கொடுக்குறாரு. வீட்டுல ஒரு வேலையும் இல்லை. ராணி மாதிரி இருக்கேன். ஆனால் மனசுல வெறுமை சூழ்ந்த ராணியா இருக்கேன். ஏன் இப்படி ஒரு வெறுமை? குழந்தை இல்லாததுனாலயா? அதுவும் ஒரு காரணம் தான் ஆனாலும்… ஜானவி… அவளால் தான் எல்லாமே! அவளை இங்கே யாரும் எதுக்கும் கண்டிக்க மாட்டிங்குறாங்க. அதனால இஷ்டத்துக்கு ஆடுறாள். பாலாஜியும் ஜானவின்னு வந்தால் என்கிட்ட முகத்தை காட்டிடுறாரு. திட்டுறாரு! கத்துறாரு! ச்ச’ என்று கடுப்பாக நினைத்த வித்யாவின் மொத்த வெறுப்பும் ஜானவியின் மேல் மட்டுமே திரும்பியது.
“வித்யா” என்று அழைத்தபடி உள்ளே வந்த பெற்றோர்களை ஆதங்கமாக பார்த்தவள், அங்கிருந்த மேக்கப் பெண்களை வெளியே செல்லுமாறு பணித்துவிட்டு கத்தினாள் பெற்றோர்களிடம்.
“ஏன் பா! ஏன் மா! ஜானவி உங்களை பெயர் சொல்லி மரியாதை இல்லாமல் கூப்பிடுறாள். நீங்களும் சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க.”
“பின்ன என்ன பண்ண சொல்ற வித்யா! பொண்ணைக் கொடுத்த இடத்துல முகத்தை தூக்க சொல்றியா? அதுவும் இல்லாமல் பாப்பா கிட்ட சூது, கள்ளம், கபடம்னு இப்படி எதுவும் இல்லை வெள்ளந்தியா தான் பண்ணுது.அதனால இதைப் போட்டு குழப்பிக்காதமா” என்று தந்தை கூறிவிட அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.
****
கல்லூரியில் தோழி கூறிய விஷயத்தைக் கேட்டு அசைவற்ற ஜானவி, “வாட் ஆர் யூ டெல்லிங்! சோ நீ கல்யாணம் பண்ணிட்டு என்னை விட்டுட்டு வால்பாறை போயிடுவியா!” என்று சோகமாக முகத்தை வைத்து கேட்டாள்.
“அடியேய்! கல்யாணம்ன்னா அப்படி தான்.சின்ன வயசுல இருந்து மாமாக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு பேசி வெச்சது தானே! இப்போ மாமாவுக்கு வால்ப்பாறை போஸ்ட் ஆபிஸ்ல வேலை கிடைச்சிருக்கு. இன்னும் ஒரு மாசத்துல நமக்கு ஃபைனல் ஹியர் செமஸ்டர் முடிஞ்சிடும். அடுத்த மாசக் கடைசியில கல்யாணம். அப்புறம் நான் கொதிக்குற சென்னைவாசி இல்லை குளு குளு வால்பாறை வாசியாக்கும்” என்று சந்தோஷத்துடன் கூறினாள் தர்ஷினி.
“ம்ம்.. சரி, கல்யாணத்துக்கு அப்புறம் அதுக்கெல்லாம் ரெடியா நீ” என்று தோழியிடம் ஒரு மார்க்கமாக ரகசியமாய் கேட்டாள் ஜானவி.
“அடியேய் பப்புமா! உன் பாட்டி அப்படி தானே உன்னைக் கொஞ்சுறாங்க” என்று இழுத்தபடியே தர்ஷினி, “உன் அண்ணன் என்னனா பாப்பா பாப்பான்னு உன்னை இடுப்புல மட்டும் தான் தூக்கி வைச்சிக்கலை… நீ என்னன்னா கஜமுஜா பத்தியெல்லாம் அசால்ட்டா கேட்டிட்டு இருக்க… பப்புமா நீ சரியான தப்புமா!” என்று ரைமீங்குடன் புலம்பினாள் தர்ஷினி.
“ஏய் இங்கப் பாரு! நான் பப்புமா தான் ஆனால் இந்த விஷயமெல்லாம் எனக்கு ஸ்கூல் படிக்கும் போதே என் பிரண்ட் சொல்லிட்டாளே! இது ஒன்னும் தப்பில்லை டி. நீயும் நானும் அப்படி தானே பிறந்தோம்.”
“எங்க ஆயா சொல்லும் டி… கட்டையனை நம்புனாலும் குட்டையனை நம்பக் கூடாதுன்னு அது சரி தான்…ஆளு தான் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி, அப்பாவியா மூஞ்சை வச்சிருக்க… சரி, இதுவும் நல்லது தான் எனக்கு கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு அதை கிளியர் பண்ணு” என்று ஜானவியின் காதில் அந்தரங்க பாடத்திலுள்ள சில டவுட்டுகளை தயக்கத்துடன் கேட்க,
அவளோ, வகுப்பில் விடை தெரிந்த ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் வேகமாக பதிலளிப்பது போல் டான் டான்னென்று தோழியின் டவுட்டுகளை கிளியர் செய்தாள்.
“அடிப்பாவி! உனக்கு எல்லாமே தெரியுதே… உன் புருஷனுக்கே நீ பாடம் எடுப்ப போல..” என்று வியந்தாள் தர்ஷினி.
ஆனால் உண்மையாக ஜானவிக்கே ஒருத்தன் வாழ்க்கை பாடம் எடுக்க கணவனாக வரப்போகிறான் என்று தர்ஷினி நினைத்தாள்.
****
அன்று இரவு வீட்டு தோட்டத்தில் பாட்டு கேட்டுக் கொண்டே உலா வந்தாள் ஜானவி.
எப்போதும் போல் தங்கள் வீட்டிற்கு செல்ல ரெடியாகியிருந்த மாணிக்கம் தம்பதியினர் மகனுக்கு கால் செய்தனர்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சரியாக ரிஷியின் வண்டி அடையாரில் திடீரென்று நின்று விட, பக்கத்தில் உள்ள வொர்க் ஷாப்பிற்கு வண்டியை தள்ளியபடி வந்தவன் அதைச் சரி செய்ய காத்துக்கொண்டிருந்தான்.
அப்போது தான் பெற்றோர்கள் மகனுக்கு கால் செய்து தாங்கள் ரெடியென பால்பாண்டியை வரச் சொல்லவும் என்று ஃபோனை வைத்தார்கள்.
ரிஷியும் பால்பாண்டிக்கு கால் செய்து பெற்றோர்களை அழைத்துக் கொண்டு வருமாறு கூறிவிட்டு வைத்துவிட்டான்.
“சாரு.. உன் வண்டி நாளைக்கு தான்…இன்னும் ஒரு வண்டி உனக்கு முன்னாடி வந்தது இருக்கு. பத்து நிமிஷத்துல கடையை சாத்திடுவோம்! இப்படிக்கா விட்டுட்டு போ நாளைக்கு காலையில பதினொரு மணிக்கு வா” என்று ஒரு வண்டியை சரிப்பார்த்துக் கொண்டே பேசினான் மெக்கானிக்.
கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்த ரிஷி, ‘மணி ஒன்பது ஆகுது… இவனும் மனுஷன் தானே… அதுவும் நம்மளை மாதிரி உழைக்குற வர்க்கம்… இந்த அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் சீக்கிரம் தான் கிளம்புனா என்ன! இப்போ வீட்டுக்கு வேற போகணும்… அதான் பால்பாண்டி வரானே, அம்மா அப்பாவை கூட்டிக்கிட்டு அப்படியே என்னையும் கூப்பிட சொல்லிடலாம்’ என்று நினைத்தவன், மெக்கானிக்கிடம் ஒப்புக் கொண்டான்.
பால்பாண்டியின் உபயம் தினமும் இருப்பதால் வித்யா வீட்டு வாட்ச்மேன் இலகுவாக அவனுக்கு கேட் திறந்து விட்டு விட்டான்.
“இது வீடா இல்லை மைசூர் மஹாராஜா பேலஸ்ஸா” என்று எப்போதும் போல் இரவில், வண்ண விளக்கிகளின் ஒளியில் பிரம்மித்தபடியே ஆட்டோ ஓட்டியபடி உள்ளே வந்த பால்பாண்டியோ,
தன் ஃபோனை எடுத்து ரிஷிக்கு கால் செய்ய, அவனுடைய ஃபோனோ ஸ்விட்ச்ட் ஆஃப் ஆகி இருந்தது.
அப்போது “ஹாய் மில்க்” என்று கையசைத்தபடி வந்தாள் ஜானவி. தினமும் ஜானவி தோட்டத்தில் ரசித்தபடி பாட்டு கேட்பது வழக்கம். அப்போது வித்யாவின் பெற்றோர்களை அழைக்க வரும் பால்பாண்டியிடம் பேசி ஃபிரண்டாகி விட்டாள்.
“ஹாய் ஜானவிம்மா” என்று கூறியவனின் முகம் சற்று டென்ஷனாக இருந்ததைக் கண்ட ஜானவி,
“என்ன மில்க் டென்ஷனா இருக்க போல… எனி பிராப்ளம்… ஐ மீன் ஏதாவது பிரச்சனையா?” என்று அவனின் புறம் வந்த ஜானவியை பாசத்துடன் பார்த்தான் பால்பாண்டி.
ஏனோ ஜானவியிடம் ஒரு தங்கை உணர்வு! அதையும் விட பண வேறுபாடு பார்க்காது தன்னிடம் அடிக்கடி வந்து ஏதாவது பேசுவது அவளின் மீது மதிப்பைக் கொடுத்தது.
“அது வந்து ஒன் வூட்டுக்கு வந்த பெரியவங்களை கூப்பிட அவங்க புள்ளைக்கு கால் பண்ண ஃபோன் எடுத்தா… ஸ்விட்ச் ஆஃப் ஆகி பேஜார் பண்ணுது மா”
“அவ்வளவு தானே! இரு நான் போய் அவங்களை கூட்டிட்டு வரேன்”
“இல்லைமா! அது வந்து” என்று திணறியவன், “அவங்க புள்ள கொஞ்சம் அப்படி இப்படி” அவன் சொல்லலாமா வேண்டாமா என்று திணற,
‘அப்படி இப்படின்னா அப்படியா! அதுவும் இவன் கிட்டயா என்று வேறு விதமான சிந்தனைக்கு சென்ற ஜானவி, ஆறடி உடலுடன் கட்டுக்கோப்பான ஆளான ரிஷியை அந்த மாதிரி கற்பனை பண்ணி பார்க்கவே கூச்சமாக இருந்தது.
“இன்னமா! தனியா சிரிச்சிட்டு இருக்க”
“ஐய்யோ! நான் அது வந்து அதை விடு… சரி அப்படி இப்படின்னா என்னன்னு முதல்ல விஷயத்தைச் சொல்லு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று போன முறை பேசாமலேயே பேசியதின் தாக்கத்தை விட அதிகமாய் தரக்கூடிய முறைப்பில் தன்னை மனதில் கடுப்பேற்றிய ரிஷியின் காலை வாற முடியுமாவென யோசித்துக் கேட்டாள் ஜானவி.
“அவர் சரியான முசடு! மீட்டருக்கு மேல பத்து ரூபாய் அதிகம் போட மாட்டாரு… அவர் அப்பா அம்மா அப்படி இல்லம்மா. அவரே நல்லவர் தான் ஆனாலும் சரியான இம்சை! அவர் அப்பாக்கிட்டயே ஃபோன் இருக்கு. ஆனால் அண்ணாத்தக்கு தான் கால் பண்ணனும்னு ரொம்ப ஸ்கிரிப்ட்டா சொல்லிட்டாரு” என்று புலம்ப,
“அது ஸ்கிரிப்ட் இல்லை மில்க் ஸ்ரிக்ட்டு.அது சரி அதான் அந்த முசடை உனக்கு பிடிக்கலையே. அப்போ ஏன் மேன் அவனுக்காக ஓட்டிட்டு இருக்க?”
“அவர் முசடு தான்ம்மா.ஆனால் சுத்தமான மனுஷன்” என்று பால்பாண்டி கூறிக்கொண்டிருக்கும் போதே,
“ஹலோ! எல்லாரும் தான் டெய்லி குளிக்குறோம்… சுத்தமா இருக்குறோம்”
“ஐய்யோ! நான் மனசு சுத்தத்தை சொல்றேன் மா… சொன்ன காசுக்கு மேல கொடுக்க மாட்டாரு. ஆனால் ஆட்டோ போய் அவர் வூட்ல நின்னவுடனே துட்டை அடுத்த நிமிஷமே கொடுத்திடுவாரு… நிறைய சாவுக்கிராக்கிங்க என்கிட்ட கொடுக்க வேண்டிய துட்டைத் தராமல் சுத்தல்ல விடுதுங்க.அதனால அண்ணாத்த அதுபேரென்ன பெரிய ஆளுங்களுக்கு ஒன்னு சொல்லுவாங்களே!” என்று யோசிக்க,
“விஐபி கஸ்டமரா?” என்று இடுப்பில் கைவைத்தபடி ஜானவி கேட்க,
“ஆ…ஆங்…அதான்… விஐபி கஸ்டமர்.”
“ஒரு தப்பா ரோட்டுல ஒரு வயசனாவர் பிச்சை எடுத்துட்டிருந்தாரு. அப்போ அடிச்சு ஊத்துற மழை! நடுங்கிட்டாரு பெரியவரு. எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு இருந்தோம். ஆனால் ஆப்பிஸ் முடிச்சிட்டு வந்தவரு அந்தப் பெரியவரை அவர் ஊட்டுக்கே கூட்டிட்டு போய் சாப்பாட்டு போட்டு, சட்டை கொடுத்து அவரை ஒரு ஆதரவற்ற இல்லத்துல சேர்த்துட்டு வந்திருக்காரு அவங்க அம்மா பெருமாயா சொல்லுச்சு… யாருக்கு வரும் மா இந்த மனசு!” என்று உணர்ச்சி வசப்பட்டான் பால்பாண்டி.

