
கணக்கு பிள்ளை துணையுடன் அன்னபூரணியே எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டு விடுகிறாள்.அவருக்கு முழு நேரமும் அரசியல்…அரசியல்… அரசியல்! அதுவே தொழில் என்றாகிவிட்டது.
எப்படியாவது, மாவட்ட செயலாளர் ஆகிவிடவேண்டும் கட்சி அளவில், அதே போல் எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிடும் வேகம் அவருக்குள்.குருபரனோ அந்த நேரம் பேச முடியாமல் தவித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
வெளியில் அவன் சீட்டாட்டம் சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி இருந்த கடன் தொகை பெரிது. தோற்றும் விட்டான்.அதை ஈடுகட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்பாவிடம் சொல்வது,இதற்குப்பிறகு சீட்டாட்டத்தில் நுழைவதில்லை என்று முடிவு செய்திருந்தவனுக்கு தனது அப்பாவின் பாராமுகம் ஆழமாய் கத்தி போன்று கீறியது. அம்மாவிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு அவன் வயது இடம் தரவில்லை. பெத்த மகனுக்கே என்னென்னன்னு கேட்டு செய்ய தெரியலையாம், துப்பு இல்லையாம்.இந்த அழகுல இவரு சமூக சேவை செய்கிறாராம் சமூக சேவை.
இந்தாளுளேல்லாம் என்னத்த கிழிச்சு…****என்று மனதிற்குள் அப்பாவை திட்டிக்கொண்டே, ஜாடிக்கேத்த மூடி என்று கச்சிதமாய் தன் கணவருடன் பொருந்தியிருக்கும்,தன் மகனை பற்றி அதிகம் யோசிக்காமல் இருக்கும் அம்மா மீதும் அவனது மதிப்பு குறையலாயிற்று.’ அவர்கள் செய்த பெரிய தவறு மகன் வளர்ந்து விட்டால் நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். இனி அவனே தன் வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப் படுத்திக் கொள்வான் என்று யோசித்து தான். அவன் பன்னிரண்டாம் வகுப்பு சறுக்கியது அருணாசலத்திற்கு ஒருவிதத்தில் அவமானமாக இருந்தாலும், அவனை மேற்கொண்டு படிப்பதற்கு ஓரிருமுறை வற்புறுத்தி பார்த்தவர் பிறகு விட்டுவிட்டார்.
அவனுக்கு பூர்வீக சொத்துக்களை கையாள்வதில் பரிச்சயம் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரின் யோசனை. அதைப்போல் சிவன் மூலம் அவன் கடன் வாங்கி இருந்தது பற்றியும் சீட்டு ஆட்டத்தில் தோற்றது பற்றியும் தெரிந்து கொண்டவர், மகன் இதை பற்றி தன்னிடம் நேரில் பேச வேண்டும்.
ஆனால் மெனக்கெட வேண்டும். அவனுக்கு நிலைமையின் விபரீதம் தெரிய வேணும்.பிறகு தான் அவனிடம் பேசுதல் என்று யோசனை பண்ணி வைத்திருந்தார். இருவருக்குள்ளும் மனதிற்குள் ஓடும் விஷயங்கள் மனதளவில் அவர்களிடையே ஒரு பிரிவை உண்டாக்கி விட்டது. இந்தப் பிரிவு பெரும் மதில்சுவர் ஆகும் நாள் அதிக தொலைவில் இல்லை.
தன்னிடம் இருந்த நகைகளை விற்று, சீட்டாட்டக் கடன் தொகைகளை அடைத்தவன், பிறகு எதற்காகவும் அப்பா அம்மாவிடம் போய் நிற்க வில்லை. சிவனிடம் சொல்லி, அருணாச்சலம் தன் மகனிடம் ஒரு சில பொறுப்புகளை கொடுக்க, அவற்றை செவ்வனே செய்தவன், வருமானத்திலிருந்து ஒரு தொகையை தனக்கென்று ஒதுக்கி எடுத்து வைத்துக்கொள்ள தொடங்கினான். இதுபற்றி அருணாச்சலம் அறிந்திருந்தும், அவனுக்கும் பணத்தேவை இருக்குமென்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பும் வரும். பணம் கையாளும் பொழுது அவற்றின் மதிப்பு என்ன என்று புரியும் என நம்பினார்.
ஆனால் நடந்தது வேறுவரும் பணத்தில், அவனது தீய பழக்கங்களும் பெருகிக் கொண்டுதான் வந்தது. யாரையும் எதிர்பார்க்காமல் அதிகமாய் சேரும் பணம் அவனது கெட்ட சகவாசம் மற்றும் கெட்ட பழக்கங்களையும் கூட சேர்த்து விட்டது. இளம் வயதில் சேரும் அதிக பணம் அதிக ஆபத்து… மது, மாது, சீட்டாட்டம்.இப்பொழுது போதை மருந்தும் கூட சேர்ந்து விட்டது அவனது லிஸ்டில்.
அருணாச்சலம் நினைத்தபடியே வேகமான முன்னேற்றம் அவர் அரசியல் வாழ்வில்.அடுத்தடுத்த பதவிகள் எல்லாம் அவரை தேடி வர அவர் யோசித்தபடி மாவட்ட செயலாளரும் ஆகிவிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் நிற்பதற்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். வருடங்கள் நான்கு கடக்க அவரது வாழ்வில் ஏற்றம்… அவர் மகனது வாழ்வில் இறக்கம்.
அரசல்புரசலாக மகனின் நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்திருந்தது அன்னபூரணிக்கு.
திரும்பவும், தோப்பு வீட்டில் பெண்களுடன் அவன் கூத்து அடிக்கும் சமயம், எதிர்பாராதவிதமாக அன்னபூரணி குத்தகை விடுவதற்க்கு ஆளை வரச் சொல்லி தோப்புக்கு செல்ல,தனது செல்ல மகனின் எந்த கோலத்தை பார்க்கக்கூடாதோ அதை முழுதாக பார்த்து தன்னுள் நொருங்கினார் அன்னபூரணி. அவர் செல்லும் சமயம் வீரனும் அங்கு இல்லை. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தான்.
தான் கண்டது நிஜமல்ல பிரமைதான் என்று அவர் மனம் மீண்டும் மீண்டும் வாதிட்டது. தனது தாய் கண்டவற்றை மகனும் பார்த்துவிட அவனுக்குள் முதலில் சின்னதாக ஒரு குற்ற உணர்ச்சி. பிறகு அதையும் துடைத்துவிட்டான். அவனுக்கும் பார்த்த பார்க்கட்டுமே, என்றாகிலும் தெரியத்தானே போகிறது. இன்றே எனில் நல்லதே,என்ற அலட்சியம் தலை தூக்கியிருந்தது.
அதிர்ச்சியில் உறைந்த அன்னபூரணி, டிரைவரிடம் சொல்லி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.அருவருப்பில் உடல் குறுக தன்னிலை மறந்து விட்டத்தை வெறித்தவாறே கூடத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அந்த தாய்.ஆடிட்டர் அலுவலகம் சென்றுவிட்டு வந்த சிவம், அன்னபூரணியின் நிலைகண்டு தடுமாறிப் போனார். அன்னபூரணி ‘தான் எதை பார்த்தோம்’ என்று சிவனிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் தோப்புக்கு சென்று வந்ததை சிவம் அறிவார். அங்கு என்ன நடந்தது என்று தெரியாவிடினும், அங்கு நடந்தவை ஏதோ சரியாக இல்லை எனும் ஊகம் அவருக்குள் உண்டு.
இப்போதெல்லாம் அருணாச்சலம் பெரும்பாலும் சென்னையில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு, அன்னபூரணி எவ்வாறு இருக்கிறாள் என்று சொல்லி விட்டார் சிவன்.
மெல்ல தனது தாடையை நீவி கொண்டவாரே ‘நான் வந்து எல்லாத்தையும் பார்த்துக்குறேன் சிவம். என்ன நடந்ததுன்னு தெரியல,நீங்க நிலைமையைக் கட்டுக்குள் வைக்க பாருங்க’என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டார் அருணாச்சலம்.
பண்பாடு பற்றி மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்து அன்னபூரணி பிள்ளைக்காக யோசித்து கொண்டிருந்தவளுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்க, சிவன் மற்றும் இன்னும் இரண்டு வேலைக்காரர்கள் துணையுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
குருபரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் வரும் நிலையில் இல்லை.முழு போதையில் முழ்கி இருந்தான் . அவனை சுற்றியும் பெண்கள் கூட்டம். தாய் எனும் பெண் படும் துன்பத்தை விட, அவனுக்கு காம இன்பத்தை கொடுக்கும் பெண்கள் பெரியதாக பட்டதால் அவன் வரவில்லை.
அதிர்ந்துபோன அருணாசலம் அன்று இரவே கிளம்பி மறுநாள் விடிகாலையில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
ஒருவழியாக, உடல் தேறி அன்னபூரணி வீடு வந்து சேர, அவள் மனதிற்குள், மகனுக்கு எப்படியேனும் திருமணம் செய்து விட்டால் அவன் சரியாகி விடுவான் என்ற எண்ணம் உதிக்க, அவனுக்கு பெண் பார்ப்பது என்று முடிவு செய்து விட்டார். ஆனால் அவனது நடவடிக்கைகள் தெரிந்த யார் அவனுக்கு பெண் கொடுக்க முன்வருவார்?
பெண்ணைப் பெற்றவர்கள் பையனுக்கு சொத்து எவ்வளவு,படிப்பு இருக்கிறதா,என்பதுடன் சேர்த்து ஒழுக்கத்தையும் தானே பார்ப்பார்கள்?
அன்னபூரணிக்கு கண்ணை கட்டி விட்டது போலிருந்தது. அருணாச்சலம் இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது என்று எவ்வளவு சொல்லியும் ஏற்றுக்கொள்ள தாய் மனது தயாராக இல்லை.
பக்கத்து ஊர்களில் இருக்கும் பெண்களையெல்லாம் பணம் அந்தஸ்து இவற்றை ஒதுக்கி பார்த்தாயிற்று. இவனது வரமன் என்றாலே பெண்ணைப் பெற்றவர்கள் தலைதெறிக்க ஓட, கடைசியில் ‘அன்னபூரணி சிவனிடம் அண்ணே, உங்க மூத்த பொண்ணை என்னுடைய பையனுக்கு கட்டி வைக்கிறீங்களா அண்ணே ‘ என்று கேட்க, உடைந்து போனார் சிவன். பணம் அந்தஸ்து இவற்றை மீறி, குருவை போன்ற ஒருவனுக்கு தனது செல்ல மகளை எவ்வாறு திருமணம் செய்து வைக்க முடியும் என்ற பதட்டம் மிக, அன்னபூரணி- அருணாச்சலம் முகத்தை பார்த்தவருக்கு எவ்வாறு மறுப்பது என்ற குழப்பம் மேலோங்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அருணாசலம்,” இவ்வளவு வருஷமா என்கிட்ட விசுவாசமா இருந்திருக்க சிவம்.
என் பையனுக்கு சேரவேண்டிய சொத்துல பாதி சொத்தை உன் பொண்ணு மேல எழுதி வைக்கறோம். எங்க பொண்ணாவே பாத்துக்குறோம். நீ நம்பி உன்னோட பொண்ண எம்பையனுக்கு கட்டி கொடு சிவம்’ ‘என்க, மீதி வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுக்கும் கூட நல்ல இடங்களில் சீர்செய்து திருமணம் செய்து வைப்பதாய் அருணாச்சலம் வாக்கு கொடுத்ததை நம்பி, தனது மூத்த மகளை திருமணம் குருவுக்கு செய்து வைக்க ஒப்புக்கொண்டார் சிவன்.
சிவனுக்கு இப்போது உள்ளூர உதறல் தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று. வீட்டில் மனைவி மகளை சம்மதிக்க செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு வேறு உள்ளதே!
எனக்கும் கூட அதே குழப்பம் தான். சில சமயங்களில் திருமணம் செய்து வைத்தால் எப்பேர்பட்டவர்களும் திருந்தி விடுவது வழக்கம் தான். அது போன்ற ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடக்கபோகும் விஷயங்கள்தான் சரி தவறு பற்றி முடிவெடுக்க முடியும்.
*****************************
தில்லியில் இரண்டு வருடங்களாக விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் வராமல் மனதிற்குள் புழுங்கினாள் சாதுர்யா.
அவளது நடன பயிற்சி அரங்கேற்றம் வரை வந்துவிட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தமிழ்நாட்டில் ஆரம்பம் ஆகி விட்ட நிலையில் ரங்கன் தில்லி வருவது சாத்தியமில்லை என்ற விட்டான். ரேணுகா மட்டும் வந்து சென்றாள். இப்போதெல்லாம் ரங்கன் தன்னைவிட்டு தொலைதூரம் சென்று விட்டது போல ஒரு எண்ணம் சாதுர்யா மனதில்.
‘’நீ கொஞ்சம் அவளோட நட்பை குறைச்சாதான் அவ ஸ்ரீரங்கத்தை தவிர வேறு விஷயங்களில் ஈடுபடுவா ரங்கா…’’ என்று சாதுர்யாவின் அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரங்கன் இவ்வாறு விலகி நிற்கிறான். அவன் தோழியோ, இவனிடம் வெளிப்படும் ஒதுக்கத்தை எண்ணி தவிக்கிறாள்.
தோழமை என்பது மிகப்பெரிய வரம். எல்லோருக்கும் சரியான நண்பர் குழாம் அமைவதில்லை.”
அந்த விதத்தில் ரங்கனும் சாதுர்யாவும் குடுத்து வைத்தவர்கள். இன்னொரு புறம், குரு. ஒற்றை பிள்ளையாய் பெற்றவர்களின் கூட்டுக்குள் வளர்ந்தவனுக்கு, சந்தர்ப்ப சூழ்நிலை, மற்றும் அவனது வயது,அவன் பெற்றோரின் ‘அவனுக்கு சுயமாய் உலகம் பழக வேணும் எனும் எண்ணம்,’ அவனது பக்குவ குறைவு எல்லாமும் சேர்ந்து தேடிக்கொடுத்து இருக்கும் நண்பர் குழு, வெறும் ‘பணம்’ திண்ணிக் கழுகுகள்.அந்த கழுகு கூட்டத்தில் தன்னை இழந்து, நிஜம் இதுவென கானல் நீரை நம்பி சிக்கி கொண்டிருக்கிறான் குரு.
நல்லவற்றுக்கு தோள் கொடுப்பவன் தான் நல்ல நண்பனாக இருக்க முடியும். நல்லவனை தீயவன் ஆக்கும் நட்பு எத்தகையது?
குருவுக்கு இவையெல்லாம் புரியாததுதான் அவன் வாழ்வில் செய்ய போகும் மொத்த தவறுகளுக்கும் காரணம். இந்த கூடா நட்புகள் அவனை எங்கு கொண்டு போய் நிறுத்த போகிறதோ?
யாரெல்லாம் இவன் தவறுகளுக்கு பலியாக போகிறார்களோ?
விடை தெரியாத பல கேள்விகளுடன் நானும் கூட காத்திருக்கிறேன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1

