
கல்லறை 5
பிணம் தான்.
எழுந்தமர்ந்திருந்தது.
இரத்தம் சுண்டி வேகுகையில் அப்படியே நிமிர்ந்து அமர்ந்து கொண்டு அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. உடனே அருகில் இருந்த கம்பினை எடுத்து அதனை ஓங்கி அடித்து படுக்க வைத்தாள்.
இதையெல்லாம் அவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அது அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் அவள் எப்படி பயமில்லாது இந்த வேலையை செய்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஆச்சர்யம் கலந்த பயம் அவனுக்குள் தோன்றியது…
அங்கிருந்து அவன் அவளை நோக்கி வர செல்வியும் பார்த்துவிட்டாள். இவனென்ன பிரச்சனையை தூக்கிட்டு வரப்போறானோ என்று நினைத்தவள் என்ன என்பது போல் பார்க்க அவனோ வேகமாய் “செல்வி செல்விதானே உன்னோட பேர். நான் உன்கூட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“பேசுங்க”
“எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு”
“மன்னிக்கனும் எனக்கு இந்த வேலைதான் பிடிச்சுருக்கு. அதைத்தாண்டி எனக்கு வேறெதுவும் இல்லை”
“நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு செல்வி. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தது வேறு விசயம்.
“அதென்ன.. இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட கூசாம வந்து பேசுறீங்க. அதுவும் ஒருத்தியோட புருசனா இருந்துட்டு. இவரோட சொந்தக்காரன் தானே நீ. இவரளவுக்கு இல்லைன்னாலும் கொஞ்சம் நீயும் மனுசத்தன்மையுடன் நடந்துக்க முயற்சி பண்ணு. நீ நினைக்குற மாதிரியான ஆள் நான் கிடையாது. ஒழுங்கா போய்டு… இல்லைன்னா..?” என்றவள் மீண்டும் நிமிர்ந்த அந்தப் பிணத்தினை தட்டிவிட்டு அந்த கம்பினை அவளருகே வைத்துக் கொண்டு நிமிர்ந்தவனை ஒரு பார்வை பார்த்தாள்..
சுடலை காக்கும் காளி போன்ற தோற்றத்திலே பயந்தவன் அப்படியே ஓடிவிட்டான். அவனின் ஓட்டத்தினைப் பார்த்தவள் இனி அவன் திரும்பி வரமாட்டான் என்ற நம்பிக்கையுடன் சிதறிவிழுந்த விறகு கட்டையினை அதன் மேல் போட்டுவிட்டு அமைதியாக அமர்ந்தாள்.
கை அனிச்சையாக மொபைலை திருப்பிப் பார்க்க மணி மதியம் 1.30 என்று காட்டியது. இப்போ வர்ற நேரம்தானே. கிளம்பிடுவோமா என நினைத்தவளுக்கு எதிரே இருந்த அந்த சிதையே தடையாக இருந்தது. இந்த சிதை எரிந்த முடிந்த பின் தான் நாம் செல்ல முடியும் என்று தளர்ந்து அவ்விடத்தில் அமர்ந்தவள் வாசலையேப் பார்த்தபடி இருந்தாள்.
சற்று நேரத்தில் அந்த சிதையும் எரிந்து முடித்திருக்க வெளிவாசல் இரும்பு கதவு அசையும் சத்தத்தில் திரும்பி பார்த்தவள் எதை எதிர்பார்த்து இங்கே வரவேண்டாமென நினைத்தாளோ அதுவே வந்துக் கொண்டிருப்பதினை அறிந்து உள்ளே பரவிய திடுக்கிடலுடன் சட்டென்று வேறுபக்கம் பார்த்தபடி அசையாது நின்றுவிட்டாள். அவள் கைகள் அனிச்சையாக தனது வயிற்றைத் தடவிக் கொண்டது…
வெகுநேரமாய் அவள் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம் நடந்து முடிந்த நிகழ்வுகள் தான். இதென்ன இந்த முறை நான் நினைத்ததிற்கு நேர்மாறாய் நடந்து முடிந்திருக்கிறது. அப்படியெனில் என்ன நடக்க காத்திருக்கிறதோ என்று அவளுக்கு மிகுந்த கலக்கமாக இருந்தது.
மனம் அன்று நடந்த அந்த கோரமான நிகழ்வினையும் இன்று நடந்த நிகழ்வினையும் நோக்கி அவள் இழுத்துப் பிடித்ததையும் மீறி சென்றே விட்டது.
அன்று….
மரண ஓலம் என்று சொல்லுவார்களே அது சட்டென்று அவள் செவியில் விழுந்து உயிரையே சட்டென்று உலுக்கிப் போட வேகமாய் திரும்பினாள்.
அவள் தேகம் இந்தளவுக்கு எப்போதும் நடுங்கியதே இல்லை. எதிரே இருந்த அந்த பெண்ணின் தலைவிரி கோலத்தினைக் கண்டவள் வேகமாய் சற்று பின்வாங்கினாள்.
பொதுவாக இந்த காட்சிகள் எல்லாம் அவள் அடிக்கடி பார்ப்பதுதான். ஆனால் அந்த பெண்மணியின் முகம் அவளை ஒரு நொடி பயங்கரமாக தாக்கி அவளது மூளையை வேலை நிறுத்தம் செய்ய வைத்துவிட்டது.
சற்று நேரத்தில் அந்த ஓலத்திற்கான காரணம் என்னவென்று அவளுக்குப் புரிந்தது. இந்த நிலையில் யாராக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதை அவள் அறிவாள். இருந்தும் அவள் தனக்கு இட்ட வேலையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதையும் மீறி கேட்டுக் கொண்டிருந்த அந்த ஓலம் அவளது நெஞ்சத்தை கீறியது. தன் தாய் நெருப்பு வைத்துக் கொண்டபோது இதேபோல் ஒரு அலறலைத்தான் அவள் கேட்டாள்.
ஆனால் அந்த பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்க்கையில் தான் அவளது கண்களும் கலங்கியது.
பார்வையில் நிதமும் படும்
மரணத்தினை மதிக்காது
மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் செல்விக்கு இந்த தருணம் உச்சபட்ச வேதனையை அளித்திருந்தது. நிலையாமை தத்துவம் அறிந்தவள் தான்.. ஈசனைப் பற்றி தெரிந்தவள் தான்.. இருந்தும் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது தவித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு எதிரில் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் வலி,வேதனை தெளிவாகவே புரிந்தது.
புத்தி பிசகி பைத்தியக்காரி போல் அழுது அழுது ஓய்ந்து இருந்த பெண்மணியின் முகம் அந்த குழந்தையின் முகத்தினையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.
ஜனனம் என்பது எவ்வாறு இயல்பான ஒன்றோ அதே மாதிரி மரணம் என்பதையும் நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும். செல்வி இது நீ உட்கார்ந்து அழுது கரைந்து கொண்டிருக்க வேண்டிய நேரம் அல்ல. அந்த குழந்தையின் அடுத்த சடங்கினை பார்க்க வேண்டிய நேரம். சடலத்தை அப்புறப்படுத்தும் உனக்கு பந்த பாசம் அன்பு இத்தகைய உணர்வுகள் எதுவும் வரக்கூடாது. அப்படியிருந்தால் உன்னால் நிம்மதியாக உனது வேலையை பார்க்க இயலாது என்று உள்ளுக்குள் கேட்ட குரல் ஒன்றில் அவள் தன் மனதினை மீண்டும் இரும்பாக்கி கொண்டு அக்குழந்தையின் சடலத்தினை வாங்க கையை நீட்டினாள்.
அவ்வளவுதான் அவளின் கன்னத்தில் பட்டென்று அறைந்திருந்தாள் அந்தப் பெண்.
கூடவே “என் குழந்தையை என்ன செய்யப் போற. அவ என் பாப்பா. அவளை என்கிட்ட குடு… அவளை வாங்கிட்டு நீ போய் ஏதாவது பண்ணிடுவ… எனக்குத் தெரியும். விடு என் குழந்தையை” என்று அவள் மீண்டும் மீண்டும் அடிக்க செல்வி அமைதியாய் அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அமைதியாய் நின்றாள்.
ஒரு தாய் படும் வேதனையை உணர தாயாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமொன்றும் இல்லையே. தாய்மை உணர்வு நிரம்பிய அத்தனை பேரும் அதனை புரிந்துக் கொள்ளலாம். செல்வி அதனாலயே தன் தேகத்தினை அந்த பெண் ஆறுதல் படுத்திக் கொள்வதற்கான கருவியாய் விட்டுவிட்டாள்.
அவளை அடித்து அடித்தே ஓய்ந்தவள் மயங்கி அங்கயே செல்வியின் பாதத்தின் அடியிலே விழுந்துவிட்டாள்.
“அவங்களை இங்க இருந்து கூட்டிட்டு ஓரமா உக்கார வைங்க” என்று சொன்ன செல்வி குழந்தையின் சடலத்தினை வாங்கி குழிக்குள் வைத்தாள்.
வைத்து நிமிர அவளது விழியில் இருத்து வழிந்த கண்ணீர் அந்த குழந்தையின் முகத்தில் பட்டு தெறித்தது. கண்ணைத் துடைத்தவள் வேகமாய் வெளியேறி வந்து குழந்தையின் தகப்பன் கையில் மண்ணையள்ளி போடச் சொல்ல பொங்கிய துக்கத்தினை தொண்டைக்குள் அமிழ்த்திக் கொண்டே அவன் அதை செய்தான்.
வேதனை விரவிய கண்களோடு திரும்பி தன் இணையாளை அவன் பார்க்க அவளோ மொத்தமாய் உயிரிழந்த தேகத்தோடு அந்த சுடுகாட்டின் ஓரத்தில் விழுந்திருந்தாள். இதை இனி அவள் எப்படித் தாங்குவாள் என்ற எண்ணம் குழந்தை இறந்த துக்கத்தினை விட அதிகமாக இருந்தது.
திரும்பிப் பார்க்காது விரைந்தவன் அவளை தூக்கிக் கொண்டு தளர்ந்த நடையில் சென்றுவிட்டான். அந்த நிகழ்வுகள் அவள் நினைவில் இன்றுவரை நீங்காது நிற்க காரணம் அடுத்த வருடம் வந்த போதும் அந்த பெண் செல்வியை குரோதம் வழியும் விழியோடு பயங்கரமாக தாக்கியதே…
“நீதான என்னோட குழந்தையை தூக்கிட்டு போன… குடு அவளை.. எனக்கு பாப்பாவைப் பார்க்கணும். எனக்கு அவ வேணும். அவளுக்கு பசிக்கும்… நான் பால் குடுக்கணும். அவளை என்கிட்ட குடுத்துடு. குடுத்துடு என்று அவளைத் தாக்குமவளை மிகுந்த பிரயத்தனப்பட்டு பிரித்தெடுத்து அழைத்துச் சென்றான் அவன் கணவன்… அதை நினைத்துப் பார்த்தவள் கண்கள் கலங்கியது. கண்ணைத் துடைத்துவிட்டு தன்னை தேற்றியவளுக்கு இன்று இன்று அந்த பெண் வெகு சாந்தமாக வந்து குழந்தையின் சமாதியின் அருகே நின்று பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டது தான் கொஞ்சம் யோசனையாக இருந்தது. அவள் மனம் மாறியது அவளுக்கு ஆறுதல் தான். ஆனால் ஏனோ ஒரு விரக்தி அவள் விழியில் தெரிந்ததை மட்டும் அவள் கண்கள் கண்டுக் கொண்டது.
அந்நேரத்தில் அந்த குழந்தையின் அப்பா மட்டும் செல்வியிடம் நின்று “இப்போ கொஞ்சம் கொஞ்சம் மனசு தேறி வந்துருக்கா . நீ அப்போ நடந்ததை எல்லாம் மனசுல வச்சுக்காத ம்மா ப்ளீஸ்” எனச் சொல்ல அவளோ “என்னையும் மதித்துப் பேசுறவங்களே இங்க அபூர்வம். அதனால நான் எதையும் நினைக்கலை. நீங்க அவங்களைப் பத்திரமாக பார்த்துக்கோங்க. அது போதும். இன்னமும் அவங்க தெளியாத மாதிரிதான் இருக்கு. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க. சொல்லணும்னு தோணுச்சு” என்றவள் சொன்னதும் அவனும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அதுவேதான் அவளுக்குள் மாறி மாறி காட்சியாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஏனோ அவள் அமைதியாய் சென்றதை அவளால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. இதற்கு முன் எப்படி நடந்துக் கொண்டாளோ அப்படியே நடந்திருக்கலாமென அவள் மனம் வருந்தியது. இதன் காரணமும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இதன் பின்னால் ஏதோ ஓர் புயலிருக்கும் என்று மட்டும் அவளுக்குப் புரிந்தது. அதற்கும் தன் வயிற்றில் குழந்தை இருப்பது போல் கனவு வந்ததற்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென்று அவளுக்குள் சின்னதாய் ஓர் எண்ணம் தோன்ற… இல்லை.. இல்லை.. அதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. நான்தான் இந்த மாதிரியான விசயங்கள் வேண்டாம்னு ஒதுங்கியே இருக்கேன்ல. அதனால இது வெறும் கனவு தான் செல்வி. என்று அவள் அதை நினைக்காது தன் கவனத்தினை வேறொன்றில் ஈடுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் மூழ்கிப் போனாள்.
———————
சுடுகாட்டுக்கு சற்று தொலைவில் இருந்த அந்த மருத்துவனையை நோக்கி ஓர் உருவம் வேகமாய் சென்று கொண்டிருந்தது. இந்த உருவம் தான் இடைவிடாது செல்வியை தொடர்ந்துக் கொண்டிருந்த உருவம்.. இருளில் புதைந்து புதைந்து போன அந்த உருவம் மருத்துவமனையின் பின்பக்கம் சென்று நின்று சுற்றிலும் பார்வையை செலுத்திக் கொண்டே இருந்தது.
பொறுமையிழந்து அந்த உருவம் நகர முற்பட “ஏய் சிவா” என்ற சத்தம்தனில் அந்த உருவம் சட்டென்று நின்றுவிட்டு திரும்பியது.
“எவ்வளவு நேரம்” சிவா கடிந்துக் கொள்ள “பேஷண்ட்ஸ் பார்த்துட்டு வர லேட்டாகிடுச்சு” போட்டிருந்த வெள்ளைக் கோட்டைக் கழட்டியபடி அவன் பேச “ம்ம் அதுசரி நாம பேசுறதை யாராவது கேட்டுட்டா பார்த்துட்டா பிரச்சனையாகிடும் அதுதான்”என்றான் சிவா.
“புரியுது சிவா. நீ போன காரியம் என்னாச்சு”
“ஆல்மோஸ்ட் டன்”
“அப்போ அந்த பொண்ணே ஓகேவா”
“ஆமா மகேஷ். அவளுக்குன்னு யாரும் இல்லை. தனியாள் தான் அவ தனியா இருக்குறதுதான் நம்மளோட பலம். என்ன நடந்தாலும் கேக்குறதுக்கு ஒரு நாதி இல்லை. நமக்கான பர்பெக்ட் டார்க்கெட் அவ தான்”
“அப்போ அடுத்த ப்ளானை ஸ்டார்ட் பண்ணிடு”
“ஸ்மார்ட்டா ஸ்டார்ட் பண்ணனும். அதை என்கிட்ட விட்டுடு. நான் பார்த்துக்கிறேன். மிஞ்சிப் போனா இன்னும் ஒருவாரம். அவ நம்மகிட்ட வந்நு சேர்ந்துடுவா”
“சிவா உன்கிட்ட ஒரு வேலையை ஒப்படைச்சா அதை எப்படியாவது கரெக்டா முடிப்பன்னு எனக்குத் தெரியும். அடுத்த வேலையை நீ பாரு. நான் இங்க செய்ய வேண்டிய வேலையைப் பார்க்கிறேன்” என்று அவன் சொல்லவும் இவனும் சரியென்று வந்த வழியே திரும்பினான்…
சிந்தையில் சிவனை வைத்து தானுண்டு என வாழுமவளுக்கு சிவன் நாமம் கொண்டவர்களாலே ஆபத்தா?
இதுதான் சிவனின் திருவிளையாடலா? இது அவளுக்கு நன்மையா தீமையா? இல்லை அவளை பக்குவப்படுத்த சிவன் எண்ணுகிறானா?
கல்லறையிலிருந்து உருவாகிடுமோ கருவறை?

