Loading

வராண்டா திண்டில் கையை ஊன்றிய பவித்ராத்யா இரண்டடி தள்ளி நின்று பேண்ட் பாக்கெட்டினுள் கரத்தை நுழைந்து நின்றவனை ஓரக்கண்ணில் பார்த்தாள்.

அவன் பார்வையை வேறு எங்கோ வைத்திருக்க, சுவரை சுரண்டியபடி மெல்ல அவன் புறம் நகர, அவன் அப்போதும் கண்டுகொள்ளவில்லை.

“சா…ரி…”

அவளை விழி தழைத்துப் பார்த்த அக்னி, “சாரியெல்லாம் தெரியாம செஞ்சதுக்கு தான். வேணும்னே செஞ்சதுக்கு இல்ல…” என்றான் காரமாக.

“கட்டிக்க முறையுள்ள பொண்ணு தப்பு செஞ்சா மன்னிச்சு விடலாம்” தலையை தொங்க போட்டுக்கொண்டு கூறியதில்,

“கட்டிக்க முறையுள்ள பொண்ணு, கட்டிக்க தான் என்ன வழின்னு பார்க்கணும். கஷ்டப்படுத்த பார்க்க கூடாது”

அவனது அழுத்தம் நிறைந்த கோபத்தில் முகம் சுருங்கிப் போனவள், பேசும் வழியறியாது சில நொடிகள் மௌனத்தைக் கடைபிடித்தாள்.

“ஒருவேளை அத்தான், என்னை விட சொன்னா நீங்க விட்டிருக்க மாட்டீங்களா?” அம்பை அவன் புறம் எய்தினாள் மெல்லமாக.

திரும்பி அவளை முறைத்தவன், “ஒருத்தருக்காக இன்னொருத்தரை காயப்படுத்துனா அதுக்கு பேர் அன்பு இல்ல. ஒருவேளை விக்ரம் உன்னை வேணாம்னு சொல்லிருந்தா, அதை சரி பண்ண உங்கிட்ட டைம் கேட்டுருப்பேன். ஓடிப்போக மாட்டேன்…” என்றான் சுருக்கென.

“நான் சொன்னேனே. நார்மலா திலோ வேணாம்னு சொல்லிருந்தா நானும் ஆர்கியூ பண்ணிருப்பேன் வேந்தா. நிஜமா” என நிமிர்ந்து கலங்கிய விழிகளுடன் அவனைக் காண, அந்நேரம் அவனது விழிகளும் அவளைத் தீண்டியது.

பின் அவளே, “நாலு வருஷமா நானே அவங்களுக்கு இடைஞ்சலா தான் இருக்கேன்னு ஒரு குற்ற உணர்வு. இதுல பிரச்சினையாகும்னு தெரிஞ்சே, அவங்களை சிக்கல்ல மாட்டி விட மனசு வரல. விக்ரம் அத்தானை கஷ்டப்படுத்துன மாதிரி உங்களையும் ஹர்ட் பண்ணிட்டா… அது இன்னும் கஷ்டம்னு தான” என்றதில்,

“நான் என்ன சொன்னேன் உங்கிட்ட… என் அம்மா மட்டும் எதிர்த்து பேசுனா, அவங்களை கூட்டிட்டு வந்துடுவேன்னு சொன்னேனா இல்லையா?” அடக்கப்பட்ட சினத்துடன் வினவ, பாவமாக தலையாட்டினாள்.

“அங்க யாரும் திலோவை ஏத்துக்கணும்னு நான் நினைக்கவே இல்ல. விக்ரமை வீட்டுக்கு கூட்டிட்டு போனப்பவே நான் நினைக்கல அப்டி இருக்கும்போது, எல்லாம் தெரிஞ்சப்பறம் அம்மாவையும் உன்னையும் அங்க வச்சு வாழ வைப்பேன்னு எப்படி நினைக்கலாம்டி…

பிஸினஸ்ல பங்கா வரக்கூடாதுன்னு தான் அவனத் துரத்துனாங்கன்னு எப்ப தெரிஞ்சுதோ. அப்பவே அந்த பிஸினஸ அவங்ககிட்ட இருந்து பறிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி தான் பண்ண வேண்டியதா இருந்துச்சு. கொஞ்சம் பிசிறுனாலும் ஒருத்தர் சைன் பண்ணலைன்னாலும் வேஸ்ட் ஆகிடும் எல்லாம்.

பதவியும் பணமும் இருந்தா, என்னால லீகலா எதுவும் பண்ண முடியாது. அதுனால தான் அவங்களை பொண்ணு பார்க்க அங்க இங்க கூட்டிட்டு போயிட்டு இருந்தேன் அவங்க கவனத்தை திசை திருப்ப. எல்லாம் முடிச்சு வரும்போது, நீ ஈஸியா பேசிட்ட. எங்க வேணாலும் தொடுவியான்னு…” என்று பல்லைக்கடிக்க,

“ஐயோ இல்ல வேந்தா… என்னால உங்களை ஒரு கட்டத்துக்கு மேல அவாய்ட் பண்ண முடியல. எனக்கும் கஷ்டமா தான் இருந்துச்சு. அதான்… என்னவோ பேசிட்டேன். மனசுல இருந்து பேசலங்க. ப்ளீஸ் சாரி…” என்றாள் அவன் கையைப் பிடித்துக்கொண்டு.

கையை அவளிடம் இருந்து உறுவிக்கொண்டவன், “உன் சாரியை நான் அக்செப்ட் பண்ணிக்கனும்னா, நான் சொல்றத நீ கேள்வி கேட்காம செய்யணும்” என்றான் அழுத்தமாக.

“என்ன செய்யணும் சொல்லுங்க செய்றேன்…” எதற்கும் தயாராக இருப்பது போல் நின்றாள்.

எப்படியும் தவறாக கேட்கமாட்டானென்ற நம்பிக்கையும் இருந்தது.

“ஃபைன்…” என்றவன் அதற்கு மேல் பேச்சை வளர்க்காது கிளம்பி விட்டான்.

சற்றே வலித்தது! அவன் அன்பை கேட்டு ஏங்கிய உள்ளத்தினை சமன்செய்ய இயலாதவளாக அறைக்குள் சென்றவளுக்கு கண்ணில் நீர் நிரம்பி நின்றது.

இங்கு திலோத்தமா தான் தவித்துப் போனாள், விக்ரமின் கோபம் கண்டு.

“எல்லார் முன்னாடியும் உன்னை விட்டுகுடுக்க பிடிக்காம தான் கோபத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன் திலோ. என்ன காரியம் செஞ்சு வச்சுருக்க?”

“ரொம்ப சாரி விக்ரம்…”

“உன் நிலைமை எனக்குப் புரியுது. அதுக்காக அவங்க லைஃப் எப்படி இருக்கணும்னு நீ முடிவு பண்ண கூடாது… இப்ப என்ன லவ் பண்ணது தெரிஞ்சா என் அப்பா ஏதாச்சு செஞ்சுடுவாரா? ரிஸ்க் இருக்குன்னு தெரிஞ்சு தான என் கூட அஞ்சு வருஷமா வாழ்ந்த. . எதுக்காக, எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் என் காதல் உனக்கும் உன் காதல் எனக்கும் வேணும்னு தான என்கூட இருந்த. அப்போ அவங்க மட்டும் ஐயோ கஷ்டம் வருதுன்னு விட்டுட்டுப் போகணும்னு நினைக்கணுமா?”

“நான் என்ன ரீசன் சொன்னாலும் நான் செஞ்சது தப்பு தான் விக்ரம். சத்தியமா இப்படி ஒரு முட்டாள்தனத்தை இனி பண்ண மாட்டேன். ப்ராமிஸ். அகியை எப்டியாச்சு சமாதானப்படுத்துறேன்…” என்றவளைக் கண்டு பெருமூச்சு விட்டவன்,

“என் மச்சினிச்சி ரொமான்டிக்கா சமாதானப்படுத்துனா தான் உண்டு” என்று ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க , அங்கு இருவருமே இல்லை. அக்னி காரை எடுத்துக்கொண்டு செல்வது தெரிந்தது.

“இன்னும் மலை இறங்கல போலயே இவன்…” என நொந்து கொண்டான்.

திலோத்தமா தலையைத் தொங்க போட்டு குற்ற உணர்ச்சியில் நெளிந்து கொண்டிருக்க, அவளது அருகில் அமர்ந்தவன், “சரி விடு… இதை எப்படி சரி பண்றதுன்னு பார்க்கலாம். ஆனா என் தம்பி, இதுக்கு ஒரு பதில் செய்கை வச்சுருப்பான். அதை செஞ்சு முடிக்கிற வரை விட மாட்டான்னு தான் நினைக்கிறேன்” எனக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டான்.

காலையில் சென்றவன் மாலை நேரம் தான் இல்லத்திற்கு திரும்பினான்.

நிவேதாவின் முகமே பளிச்சென்று இருந்ததை கண்டு மனமும் நிம்மதி கொண்டது.

“அம்மா, இங்க பக்கத்துலயே வீடு பார்த்தாச்சு. ஒரு வாரத்துல ரெஜிஸ்டரேஷன் பண்ணிடலாம். அதுவரை இங்க இருக்க ஓகே தான?” எனக் கேட்க,

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல தம்பி. நான் நல்லா இருக்கேன்” என்றதில் முறுவலித்துக் கொண்டவன், அக்னிலாவுடன் விளையாடிக்கொண்டிருந்த பவித்ராத்யாவை ஊடுருவியபடி உள்ளே சென்றான்.

அங்கு விக்ரம் கைக்கு பயிற்சிகள் செய்து கொண்டிருக்க, “இப்ப எப்படி இருக்கு விக்ரா?” எனக் கேட்டான்.

“இப்ப நல்லாருக்குடா. நடுக்கம் கூட சுத்தமாவே நின்னுடுச்சு”

“குட்… இன்னும் ஒரு மந்த் நல்லாவே ரெஸ்ட் எடு. தென் நீ லெதர் பேக்டரிக்கு போகணும்”

“எதுக்குடா அது…” விக்ரம் தயங்க,

“நீ போகணும். என்னோட ஈகோ சாடிஸ்ஃபேக்ஷன்காக…” என்ற தம்பியிடம் மறுக்க இயலாமல் தலையாட்டினான்.

“அப்போ ஹோம்?”

“நான் பார்த்துக்கிறேன். நீ ஃப்ரீ டைம்ல வந்துக்கோ.”

“வேணும்னா இப்படி பண்ணலாம். ரெண்டு பேரும் ரெண்டு பிஸினஸையும் ஷேர் பண்ணி பார்த்துக்கலாமே!” என விக்ரம் கண்ணை சுருக்கி கெஞ்சலாக கேட்க,

“இல்லடா இங்க எனக்கு செட் ஆகிடுச்சு. அது மட்டும் இல்லாம, நெக்ஸ்ட் அப்க்ரேட் வேலை எல்லாம் முழு மூச்சா செஞ்சா தான் முடியும். நீயும் திலோவும் பேக்டரியை மேனேஜ் பண்ணுங்க. நானும் ஆத்யாவும் இங்க பார்த்துக்குறோம். ஒன்ஸ் ஒர்க் எல்லாம் செட் ஆனதும், நம்ம எங்க ஹெவி ஒர்க் இருக்கோ அங்க ஒர்க்க ஷேர் பண்ணிக்கலாம்” என்றதும், அவனுக்கும் அது சரியாக பட்டது.

சட்டென விழிகள் மின்ன, “பவி மேல கோபம் போய்டுச்சா சாருக்கு…” என்று ஆர்வமாக வினவ,

“கோபம் போயிருக்கலாம். பட் இன்னும் ஈகோ சாடிஸ்ஃபை ஆகல” என்றவனை முறைத்தான்.

“டேய் பாவம்டா அவ. ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கா” எனப் பேசும்போதே, “நீ முதல்ல அவளுக்கு சோக கீதம் வாசிக்கிறதை நிறுத்து” என அதட்டியவன், “ஆத்யா” என அழைத்தான்.

அவனது குரல் கேட்டதும், அக்னிலாவை நிவேதாவிடம் ஒப்படைத்து விட்டு சிட்டாக அவனிடம் பறந்து சென்றாள்.

ஒருவித படபடப்பும் ஆர்வமும் மின்ன அவன் முன்னே வந்து நின்றவளிடம், சில தாள்களை நீட்டினான்.

“என்ன இது?”

“நாளைக்கு மார்னிங் உனக்கு சென்னைக்கு பிளைட். இதுல ஸ்கூல், கம்பெனிஸ்னு சில இடத்துல இன்டெர்வியூ ஸ்கெடியூல் பண்ணுன டீடெய்ல்ஸ் இருக்கு. போய் நீயே வேலை தேடிக்கோ. இது உன்னோட ஹாஸ்டல் டீடைல். ஒரு மந்த்கு மட்டும் தான் நான் பே பண்ணிருக்கேன். அடுத்த மாசம் நீ வேலைக்கு சேர்ந்து நீயே ஹாஸ்டல் ஃபீஸ் கட்டிக்கோ…” என அடுக்கடுக்காக பேச, திலோத்தமா திகைத்து நின்றாள்.

விக்ரமோ “டேய் என்னடா?” எனப் பேச வர அவனைத் தடுத்தவன், “இதுல யாரும் தலையிட வேணாம்…” என்றான் அழுத்தமாக.

“அகி எவ்ளோ கோபமா இருந்தாலும் கூட இருந்து காட்டு” திலோத்தமா வருத்தமாக கூற,

“எனக்கு கோபம் எல்லாம் இல்ல திலோ. வீ நீட் திஸ் ஸ்பேஸ். அவளுக்கும் அவளுக்குன்னு ஒரு ஸ்பேஸ் கிடைக்கணும்… ரொம்ப எல்லாம் இல்ல. ஒரு வருஷத்துக்கு தான்…” என்றான்.

“இல்ல அகி…” எனத் திலோத்தமா ஏதோ பேச வர, பிளைட் டிக்கட்டை அவனிடம் கொடுத்த பவித்ராத்யா, “நான் இன்னைக்கு நைட்டு பஸ்ல போய்க்கிறேன்” என்று விட்டு மற்ற தாள்களின் மீது பார்வையை பதித்தபடி தனதறைக்குச் சென்றாள்.

“என்னடா?” விக்ரம் ஆதங்கத்துடன் கேட்டான்.

“என்னடா? அவளோட வாழ்க்கைல அவளுக்கான முக்கிய முடிவை எடுக்குற சிட்டுவேஷன்ல அவள் இருக்கணும். அதுக்கு அவளுக்குன்னு ஃபைனான்ஷியல் சப்போர்ட் இருக்கணும். அது மட்டும் தான் அந்த தைரியத்தை குடுக்கும்” என்றதில் திலோத்தமாவிற்கு முகம் சுண்டி போனது.

“அவளுக்கு வேலை இல்லாததுனால நான் அவளோட உணர்வுக்கு மதிப்பு குடுக்காம விட்டுட்டேன்னு சொல்றியா அகி…” உள்ளம் கலங்கியது அவளுக்கு.

அவளை இடுப்பில் கையூன்றி பார்த்தவன், “லூசு மாதிரி பேசாத திலோ. நீ அவள்கிட்ட லவ் வேணாம்னு சொன்னதுக்காக இதை பண்ணல நிஜமா. அந்த இன்சிடென்ட் நடக்கலைன்னாலும் கூட, உடனே அவளை கல்யாணம் பண்ணிக்க நான் நினைக்கல. அவளுக்குனு ஒரு கேரியர் வேணும்னு தான் நினைச்சேன். அதை இங்க இருந்தே பில்ட் பண்ண வைக்க நினைச்சது என்னவோ உண்மை தான். பட், ஸ்டார்டிங்ல இந்த இன்டிபென்டண்ட் அவளுக்கு இருந்தா நல்லாருக்கும். உங்களை டிபண்ட் பண்ணி இருந்தது அவளுக்கு சின்னதா ஒரு காம்ப்ளெக்ஸ்ஸா இருக்கு” என்றிட, திலோத்தமா சற்றே இலகுவானாள்.

“புரியுது அகி… ஆனா, உண்மையை சொல்லனும்னா, அவளை டிபன்ட் பண்ணி தான் நாங்களும் நிலாவும் இருந்தோம். அவள் மட்டும் இல்லைன்னா கேரியரையும் பாப்பாவையும் மேனேஜ் பண்றது உண்மையாவே பெரிய சவாலா இருந்துருக்கும் எங்களுக்கு. காம்ப்ளெக்ஸ் எங்களுக்கு தான் வரணும் அவளுக்கு ஏன் வருது…
உங்கிட்ட சொன்னாளா?” திலோ கேட்டதில்,

“நிறைய தடவை…” என்றான் அர்த்தத்துடன்.

“அவள் உங்கிட்ட இந்த அளவு மனசு விட்டு பேசி இருக்காளா?” அவளுக்கு வியப்பு தான் தோன்றியது.

“பேசாமலா லவ் வந்திருக்கு” என்ற விக்ரம், “அதுக்கு ஏன் அவளை சென்னைக்கு அனுப்பனும்… இங்கயே வேலை பார்க்க சொல்ல வேண்டியது தான” எனக் கேட்க,

அவனை முறைத்த அக்னி வேந்தன், “நீ உண்மையாவே லவ் பண்ணி தான கல்யாணம் பண்ணிக்கிட்ட” எனக் கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றான்.

விக்ரமோ தலையை சொறிந்து “என்னை எதுக்கு முறைச்சுட்டு போறான்…” எனக் குழம்ப, திலோத்தமாவிற்கு அக்னி வேந்தனின் எண்ணம் கண்ணாடியாக பிரதிபலித்தது.

“ஐயோ விக்ரம்… இங்க இருந்தா, அவனாலயும் அவள்கிட்ட பேசாம எப்படி இருக்க முடியும். அவளை டிஸ்ட்ராக்ட் பண்ண வேணாம்னு நினைக்கிறான் போல… அவனுக்கும் கஷ்டம் தான”

“அட ஆமா!”

“ம்ம்க்கும்… வீட்டுக்கு பெரிய பசங்க டியூப் லைட்டா தான் இருக்காங்க” திலோத்தமா முணுமுணுக்க,

“அதுல நம்பர் ஒன் நீ தான்…” என்றதில் அவனைக் கண்ணை சுருக்கி முறைத்தாள்.

இங்கோ எவ்வித சலனமுமின்றி துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் பவித்ராத்யா.

ஏன் எதற்கு? எந்த கேள்வியும் கேட்கவில்லை.

பேருந்து பயணச்சீட்டும் அவளே புக் செய்து கொண்டாள்.

மாதம் மாதம் திலோத்தமா அவளது கைச்செலவிற்கு பணம் தந்து விடுவாள். அதையும் நிலாவிற்கோ அல்லது வீட்டின் அவசரத் தேவைக்கோ மட்டுமே உபயோகம் செய்து கொள்வாள். உடையிலிருந்து அவளுக்கு தேவையான அனைத்தையும் திலோத்தமா அவள் கேட்பதற்கு முன்பே கவனித்து வாங்கி விடுவதால், தனிப்பட்ட செலவு என அவளுக்கு எதுவும் இருந்ததில்லை.

தற்போது யோகா வகுப்பு எடுத்ததற்கு அக்னியும் சம்பளம் கொடுத்திருந்தான்.

ஹாஸ்டல் பீஸையும் மறுத்து விடலாம் என்றே நினைத்தாள். பின், வேலை கிடைக்க தாமதமாகி விட்டால் சிரமம் என்றே அதனை ஏற்றுக்கொண்டாள்.

நிவேதாவோ அக்னியிடம் சண்டையே போட்டார்.

“வயசு பொண்ணை எப்படிபா தனியா அனுப்ப முடியும்? அவளை அனுப்ப வேண்டாம் அகி”

“ம்மா… அவள் என்ன கடல் கடந்தா போறா. அவள் அவளை பார்த்துப்பா” என்று விட்டு மற்றவர்கள் பேசியதை காதில் வாங்காது தனது அலுவல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

திலோத்தமா பவித்ராத்யாவிடம் பேச முயன்ற போது கூட, அவள் மிகவும் இயல்பாகவே இருந்தாள்.

“இன்னைக்கே போகணுமா பவிமா” திலோத்தமா வருத்தமாக கேட்க,

“நாளைக்கே ஒரு இன்டர்வியூ இருக்குக்கா. அட்டென்ட் பண்ணுனா நல்லது தான…” என்றதில்,

“ம்ம்ம்… கேட்கணும்னு நினைச்சேன். சர்வீஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சா” எனக் கேட்டதில் விழித்தாள்.

“அது புட்டுக்குச்சு” அசடு வழிந்தபடி கூறிய தங்கையைக் கண்டு முறுவல் பிறந்தது.

“நான் தான் நீ அதுக்காக ஸ்ட்ரெய்ன் பண்ணாதன்னு முன்னாடியே சொன்னேன்ல… நீ படிக்கணும்னு சொன்னாலே காத தூரம் ஓடுவ” எனக் கிண்டல் செய்ததில், “எனக்கும் ஒர்கவுட் ஆகாதுன்னு தெரியும். இருந்தாலும் ஃப்ளூட்ல பாஸ் ஆகிட்டா…” என நெளிந்தாள்.

“அடிப்பாவி…” தங்கையின் மீது தலையணையை விட்டு எறிந்தவள், “உனக்கு ஓகேவா பவிமா?” எனக் கேட்டாள்.

“உன் அருமை க்ளாஸ்மேட் வேற சாய்ஸ் வச்சுருக்காரா?” எனக் கண்ணை உருட்டினாள்.

“அவன்கிட்ட பேசு… புருஞ்சுப்பான்!”

அதில் மெலிதாய் முறுவலித்தவள், “புரிஞ்சதுனால தான் இது எல்லாம்…” எனக் கர்வம் பொங்க கூற, திலோத்தமா புருவம் உயர்த்தினாள்.

அவளையே குறுகுறுவென பார்த்த திலோத்தமா, “அவனை விட்டு இருந்துடுவியா பேபி?” எனக் கேட்க, பவித்ராத்யாவின் முகம் வாடிப்போனது.

அக்கேள்விக்கு பதில் கூற மறுத்த தங்கையிடம் ஆறுதல் கூறவும் வழியில்லை.

இங்கோ விக்ரமும் அதே கேள்வியைத் தான் தம்பியிடம் முன் வைத்தான்.

அக்னியோ, “உனக்கு சும்மா இருக்க போர் அடிக்குதா?” எனக் கிண்டலாகக் கேட்க

“டேய்… சமாளிக்காத பதில் சொல்லு…” என்றதில், தோளைக் குலுக்கிக் கொண்டான்.

அன்றிரவே, பவித்ராத்யா கிளம்பி விட்டாள்.

அக்னி வேந்தன் அப்போதும் அலுவல் அறையில் தான் இருந்தான். அவனிடம் சொல்லி விட்டுச் செல்ல மனம் துடித்தது. சொன்னால் செல்ல முடியாது. அது மட்டும் நிச்சயம் அவளுக்கு.

அதன்பிறகான நாள்கள் கடும் வேகத்தில் சென்றதா எனத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் சிறு ஊசியின் வலியை சுமந்து கொண்டே இருந்தது நெஞ்சம்.

அவள் சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே நல்ல கம்பெனியில் வேலையும் கிடைத்தது.

அதனை மகிழ்வுடன் வீட்டினரிடம் பகிர்ந்து கொண்டவள், “அவருகிட்டயும் சொல்லிடுக்கா” என்றாள்.

“நீயே சொல்லேன்” திலோத்தமா கூறியதில், அவளிடம் பதில் இல்லை.

அதன்பிறகு விக்ரமும் திலோத்தமாவும் ‘பேக்டரி ஷோரூம்’ என பிசியாகி விட்டனர். நிவேதாவின் பொழுது அக்னிலாவுடனே அருமையாக கழிந்தது.

அவ்வப்பொழுது பெரியவர்கள் வந்து வீட்டை கலகலப்பாக்கி விட்டுச் செல்வர்.

சிலநேரம் அக்னிலா தான் சித்தியைக் கேட்டு அழுவாள். அந்நேரம் மட்டும் பவித்ராத்யாவிற்கு கண்ணில் நீர் நிறைந்து விடும்.

“என் தங்கப்பொண்ணுல சித்தி கொஞ்ச நாள்ல வந்துடுவேன்… அதுவரை சமத்தா இருப்பீங்களாம் சரியா” என வீடியோ காலில் மகளை சமன்செய்வாள்.

அக்னி வேந்தன் காலையில் இல்லத்திற்கு செல்பவன் தான் இரவு வரையிலும் வீட்டிற்கு திரும்புவதில்லை.

“என்ன தம்பி ரொம்ப வேலையா?” அவனுக்கு உணவு எடுத்து வைத்தபடி கேட்கும் நிவேதாவிடமும் “ம்ம்” என்பதோடு முடித்துக்கொள்வான்.

விக்ரம் தான், “எதுக்கு அவளை அனுப்பனும். இப்ப கஷ்டப்படுறது யாரு?” என்று கடிந்து கொள்ள, எப்போதும் அவளை பற்றி பேசினால் நிமிர்ந்து முறைப்பவன், இப்போதெல்லாம் முறைப்பதும் இல்லை.

அமைதியாக நொடி நேர முறுவலை தந்து விட்டு தலையைக் குனிந்தபடி அறைக்குச் சென்று விடுவான்.

விக்ரமிற்கு தான் வருத்தமாகி போனது. பவித்ராத்யாவிற்கு அழைத்து “நீ வேலை பார்த்தது வரை போதும் பவி. இங்க ஒருத்தன் சுத்தமா சரி இல்ல” என்றிட, அதில் இருந்து அவளும் அதிகம் வீடியோ கால் செய்வதில்லை.

தப்பி தவறி அதில் இருவரின் விழிகளும் தீண்டிக்கொள்ளும் அவலம் நேர்ந்து விடுகிறதே!

“ரெண்டும் அழுத்தமா இருக்குதுங்க” விக்ரமிற்கு எரிச்சல் தான் மிகுந்தது.

ஆகினும் பவித்ராத்யாவினால் அத்தனை எளிதாய் இதனைக் கடக்க இயலவில்லை.

ஒரு வார்த்தையேனும் பேசி விடலாமா? என்ற எண்ணத்துடன் இரவு நேரத்தில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.

‘அவன் சரியே இல்ல பேபி’ திலோத்தமா வருத்தமாகக் கூறியது காதில் எதிரொலிக்க, தாக்குப் பிடிக்க இயலாதவளாக அவனது எண்ணை அழுத்தினாள்.

அப்போது தான் அக்னி வேந்தனும் மெத்தையில் விழுந்தான். எண்ணமெங்கிலும் அவளின் நினைவுகளே!

அவளது நலனிற்காக தான் இந்தப் பிரிவை வலிய ஏற்றுக்கொண்டான். ஆகினும் அவளைப் பிரிந்திருப்பது இத்தனை கடினமாக இருக்குமென்று அவனும் எதிர்பார்க்கவில்லை போலும்.

அந்நேரம் அலைபேசி ஒலித்திட, அதில் பவித்ராத்யாவின் எண்ணை கண்டதும் விருட்டென எழுந்தமர்ந்தான்.

அடுத்த நொடியே அழைப்பை ஏற்றவன், “ஆத்யா ஆர் யூ ஓகே. எதுவும் பிரச்சினையா?” என்றவனின் குரலில் அத்தனை பதற்றம்.

அவனது பதற்றத்தில் அவளது உள்ளமும் குளிர்ந்தது.

“பிரச்சினை இருந்தாதான் கால் பண்ணனுமா?” மெலிதான குரலில் வினவினாள்.

அதன்பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டவன், “என்ன அதிசயமா கால் பண்ணிருக்க?” என்றபடி கட்டிலில் சாய்ந்தமர்ந்தான்.

“நீங்க அது கூட பண்ணலையே?”

“ம்ம்… ஊருக்குப் போகும்போது என்கிட்ட சொல்லிட்டுப் போவன்னு வெய்ட் பண்ணுனேன். சொல்லாமலே போய்ட்ட. கோபமா?”

அவளோ விழி விரித்தாள். தனக்காக தான் அலுவல் அறைக்குள் அடைந்து காத்திருந்தாரா?

“அச்சோ அதெல்லாம் இல்லங்க. உங்ககிட்ட சொல்லிட்டுப் போகணும்னு தான் எனக்கும் இருந்துச்சு. ஆனா சொன்னா என்னால கிளம்ப முடியாது. அந்த அளவு மனதைரியம் எனக்கு இல்ல…”

அவளின் கூற்றில் இளமுறுவல் அவனிடம்.

“அப்போ கோபம் இல்லையா?”

“எதுக்கு கோபம்?”

“உன்னை அனுப்புனதுக்கு”

“நீங்க அனுப்புனதுக்கு காரணம் தான் எனக்குத் தெரியுமே…”

“என்ன தெரியும்? என்னை விட்டுப் போக நினைச்சதுக்கு தண்டனையா நினைச்சுக்கிட்டியோ?”

அவளிடம் சில நொடி அமைதி நிலவியது.

“இல்ல. என் அக்கா அத்தான் வீட்ல இருந்ததை நான் காம்ப்ளெக்ஸ்சா ஃபீல் பண்றேன். பின்னாடி, உங்களை டிபன்ட் பண்ணி இருந்தாலும் நான் இதே மாதிரி தான் நினைப்பேன்னு தான என்னை அனுப்புனீங்க. அவங்க வீட்ல இருந்ததுனால திலோ சொன்னதை தட்ட முடியாம தான், உங்க மேல இருந்த காதலை விட்டுக்கொடுக்க நினைச்சேன்னு தான, இந்த முடிவு.”

ஆடவனின் ஒற்றைப் புருவம் அழகாய் உயர்ந்தது.

“திலோ சொன்னாளா?”

“இல்லையே. அவள்கிட்ட எதுவும் சொன்னீங்களா?” அவள் புருவம் சுருக்கினாள்.

தானாகவே புரிந்து கொண்டாளா? சின்னதொரு கர்வம் அவன் இதழ்களில்.

“உங்களுக்கு என் மேல கோபம் போய்டுச்சா?” பவித்ராத்யா தயக்கமாக கேட்க,

“நீ வேணும்னே செஞ்சதுக்கு காரணம் என்னன்னு தெரியாம தான் மண்டையை உடைச்சுக்கிட்டேன். கோபத்தை விட வருத்தம் தான் அதிகம் இருந்துச்சு” என்றான் ஆழ்க்குரலில்.

அவளிடம் பேரமைதி நிலவ, “அதுவும் என்னைக் காணோம்னு ஹோம் வராண்டால ஆவி மாதிரி அலைஞ்சுட்டு இருந்தியே அப்பவே அதுவும் காணாம போய்டுச்சு” என்றவனிடம் தற்போது ரசனை தென்பட்டது.

‘ஸ்ஸ்ஸ்…’ ஒற்றை கண்ணை மூடி திறந்து அசடு வழிந்தவள், “எங்க போனீங்க அன்னைக்கு? எதுவும் பிரச்சனையோன்னு தான் பயந்துட்டேன்…” என்றாள்.

“பிரச்சினை எதுவும் இல்ல ஆத்யா”

“அப்போ உங்க அப்பா சித்தப்பா எல்லாம் எங்க வேந்தா?”

“ஜெயில்ல” என்றான் இறுகிய குரலில்.

பின் அவனே, “கொலை முயற்சி முதல் காரணம். ரெண்டாவது காரணம் பேக்டரில கழிவை எல்லாம் சரியான முறையில வெளியேத்தல. என்விரான்மெண்ட் டேமேஜ் கேஸ், டேக்ஸ் அது இதுன்னு எவ்ளோ முடியுமோ அவ்ளோ காரணத்தை திரட்டிருக்கேன். அனுபவிக்கட்டும்…” என்றதில், “அப்போ பாட்டி?” என இழுத்தாள்.

“அவங்க அந்த வீட்ல தான் தனியா இருக்காங்க.”

“தனியா எப்படிங்க?”

“வேலைக்காரங்க இருக்காங்களே”

“ஆனாலும் வயசானவங்க…” பவித்ராத்யாவின் கூற்றில், “நீ வேணும்னா வச்சுக்கிறியா?” எனக் கிண்டலாக கேட்டதில், “ஐயோ அந்த தாய் கிழவியை எல்லாம் என்னால மேனேஜ் பண்ண முடியாதுப்பா” என்று சிரித்தாள்.

பின் அவளே, “அதுக்காக அப்படியே விட முடியாதுல…” என்றதில், “கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும். அப்ப தான் உறவோட அருமை புரியும். நான் ஆளுங்க வச்சு வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன்” என்றதும் சற்றே நிம்மதியானாள்.

சவுந்தரவல்லி மீது ஏற்பட்ட திடீர் பாசமெல்லாம் இல்லை. அவனால் அவருக்கு ஏதும் நேர்ந்து விட்டால், அவனும் தானே வருந்துவான்… அதனாலேயே கேட்டுக்கொண்டாள்.

“ம்ம்… சாப்டாச்சா?” அவள் வினவியதும்,

“மணி பதினொன்னுடி” என்றவனின் அதரங்கள் அழகாய் புன்னகைத்தது.

“ஓ! நான் மணியை பார்க்கவே இல்லை. அதான் என் நம்பர்ல இருந்து கால் வரவும் பயந்துட்டீங்களோ?”

“பின்ன, அர்த்த ராத்திரியில போன் பண்ணுனா பயப்பட மாட்டாங்களா? அதுவும் பர்ஸ்ட் டைம் கால்… ஊருக்கு போயிட்டு…”

“நீங்க பண்ணிருக்கலாம்ல”

“ம்ம் பண்ணுனா பார்க்கனும் போல இருக்கும். பார்த்தா கட்டிக்கணும் போல இருக்கும். கட்டிக்கிட்டா கூடவே ஒட்ட வச்சுக்கணும் போல இருக்கும்…” என்றவனின் குரல் தழைந்தது.

பெண்ணின் கன்னங்கள் செங்கொழுந்தாகிட, “அதுனால தான் நானும் பண்ணல” என்றாள் மெதுவாக.

“நிஜமாவா?” அவனின் ஆழ்குரல் மென்மையாக தீண்ட,

“நிஜம்மா…” என்றாள் வெட்கத்துடன்.

“அப்ப இப்போ மட்டும் ஏண்டி பண்ணுன?”

“நீங்க சரியே இல்லையாம். சரியா சாப்புடுறது இல்லையாம். தூங்குறது இல்லையாம். எப்ப பார்த்தாலும் என்னையவே நினைச்சுட்டு இருக்கீங்களாம். நீ வேலை பார்த்தது போதும் வா’ன்னு அத்தான் ஒரே புலம்பல்…” என்றாள் ரசனையுடன்.

“அவன் பார்த்த வேலையா இது? அப்படிலாம் ஒன்னும் இல்லையே” அவன் கெத்தாக மறுத்தான்.

“ஒண்ணுமே இல்லையா வேந்தா?”

இருந்த கொஞ்ச நஞ்ச கம்பீரமும் கரைந்து விட்டது அவனுக்கு இக்கேள்வியில்.

“மிஸ் யூ’டி… எப்படா ஒரு வருஷம் போகும்னு இருக்கு” என்றான் உருகும் குரலில்.

“எனக்கும்!” அவள் குரல் நலிவது உணர்ந்து தன்னை மீட்டுக்கொண்டவன், “வேலை எல்லாம் எப்படி போகுது. செட் ஆகிடுச்சா ஆத்யா. ஹாஸ்டல் ஓகே தான?” எனப் பேச்சை திசைதிருப்ப, அதனைப் புரிந்து கொண்டவள் “எல்லாம் ஓகே தான் அகி…” என்றாள்.

அதன்பிறகு இருவரின் உரையாடலும் நீண்டது. தினம் தினம் அலைபேசியில் அளவளாவுவதும் அதிகரிக்க, தூரங்களும் குறைந்த மனநிலை இருவருக்கும்.

ஒவ்வொரு நாளும், அலைபேசி அழைப்புக்காகவே இரு மனங்களும் தவம் கிடந்தது.

“அங்க ஹோம்ல எல்லாரும் எப்படி இருக்காங்க வேந்தா? ஹோம்கு பக்கத்துலயே கோச்சிங் சென்டர், சின்ன கார்மெண்ட்ஸ் எல்லாம் ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போல. நம்ம யங் கைஸ் எல்லாம் ஆர்வமா வேலை பாக்குறாங்களா?” என்றாள் கிண்டலாக.

“நீ தான் வாரம் வாரம் வீடியோ கால்ல பேசி எல்லா டீடெயிலும் வாங்கிடுறியே அப்பறம் என்னடி தெரியாத மாதிரி கேக்குற…” என்றவன் அலமாரியில் சட்டை தேடிக்கொண்டிருந்தான்.

“நான் வீடியோ கால் பண்றது உங்களுக்கு எப்படி தெரியும்?”

“நீ யாருக்கு வீடியோ கால் பண்ணாலும் அங்க நானும் இருப்பேன் ஆத்யா பேபி…” என்றதில் அவளுக்கு செவிமடல்கள் சிவந்தது.

“அதென்ன எல்லாருக்கும் வீடியோ கால் எனக்கு மட்டும் ஆடியோ கால்?” அவன் மீண்டும் சீண்டிட, அவளுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.

“அது… பார்த்தா வரணும் போல இருக்கும் அதான்…”

“அது மட்டும் தான் ரீசனா? ஆனா வாய்ஸ பார்த்தா வேற ஏதோ இருக்கும் போலயே” என்றான் சிரித்தபடி.

“இல்லையே” அவள் தடுமாற,

“சொல்லுடி…” என்றான் பிடிவாதமாக.

“அது… கொஞ்சம் வெட்கமா இருக்கு அதான்…” என்றவளுக்கு அவனை எதிர்கொள்வதென்றாலே வெட்கம் பிடுங்கி தின்றது.

அடுத்த நொடி அவனிடம் இருந்து வீடியோ அழைப்பு வர, ‘அய்யயோ’ என காலை உதறினாள்.

வேறு வழியற்று எடுத்து விட்டவள், அப்போது தான் குளித்து முடித்து தலையை துவட்டிக்கொண்டிருந்தாள்.

அவனும் அப்போது தான் குளித்து வந்து இன்னும் சட்டையை தேடி முடிக்காது இருக்க, அவனைக் கண்டு கண்ணை மூடியவள், “ஹலோ மிஸ்டர் தீ வேந்தன் இப்படி தான் அரைகுறையா வீடியோ கால் வர்றதா?” என்றாள் சிணுங்களாக.

அவனோ அவளையே ஊடுருவி அப்பட்டமாக சைட் அடித்துக்கொண்டிருந்தான்.

“எப்படியும் நீ இப்படி என்னை பார்க்க தான போற” குறும்பு கொப்பளித்தது அவனிடம்.

“ஹும் வேந்தா…” முகத்தை மூடிக்கொண்டு நின்றாள் அவள்.

“ஏய் முகத்தை காட்டுடி. மனுஷனை தவிக்க விடாத”

“நீங்க ஷர்ட் போடுங்க முதல்ல…”

“அதான் பேண்ட் போட்டுருக்கேன்ல” என்றவன், அவசரமாக ஒரு டீ – ஷர்ட்டை மாட்டிக்கொண்டு, “இப்ப பாருடி” என்றான்.

அதில் கண்ணைத் திறந்தவள், அப்போதும் அவனைப் பார்த்து தலை கவிழ்ந்திருக்க, “ஹலோ அம்மணி, நேர்ல இருந்தாலும் கன்னத்தை பிடிச்சு என்னை பார்க்க வச்சு ஒரு கிஸ் குடுக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்ல. நிமிருங்களேன்” என்றான் கிண்டலாக.

“ப்ச் டீஸ் பண்ணாதீங்க வேந்தா” என சிணுங்கியவள் அவனை தவிப்பாக ஏறிட, அவனும் அவளை கண்ணெடுக்காது பார்த்து வைத்தான்.

இரு விழிகளும் எத்தனை நொடிகள் தழுவி தடுமாறியதோ!

இருவரின் இதழ்களிலும் புன்னகை நிரம்பி இருக்க, “நீங்க டீ – ஷர்ட்ட திருப்பி போட்டுருக்கீங்க” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

“ரொம்ப முக்கியம்… நீயும் தான் பொட்டை புருவத்துக்கிட்ட வச்சுருக்க” என்றான் இதழ் மடித்து.

அதன்பிறகே கேமராவின் தன்னைக் கவனித்தவள் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள்.

அவனிடம் பேசிக்கொண்டே பொட்டை வேறெங்கோ வைத்திருந்தவள் தற்போது சரி செய்து கொண்டதில், அவனும் தலையாட்டிச் சிரித்தான்.

நாளும் பொழுதும் மின்னலென கரைந்தது.

அவள் அழைக்கும் நேரமெல்லாம் சில நிமிடங்களேனும் பேசி விட்டுத் தான் வைப்பான். வேலை நேரத்தில் அவனும் தொந்தரவு செய்வதில்லை. அலைபேசியில் காதல் வளர்த்துக் கொள்ளும் தருணங்கள் கவிதையாய் கரைய, விக்ரம் தான் தலையில் அடித்துக்கொள்வான்.

“அப்படி ரெண்டும் போன்ல என்ன தான் பேசுமோ…”

“சுவீட் நத்திங்ஸ் இருக்கலாம்ல விக்ரம்” திலோத்தமா கண்சிமிட்டிக்கொள்ள, “அந்தக் கருமத்தை நேர்லயே பேச வேண்டியது தான. ஏன் இப்படி பிரிச்சு வச்சு வலி குடுத்துக்கணுமா…” என்று முறுக்கினான்.

“முதல்ல நானும் அப்படி யோசிச்சேன் தான் விக்ரம். ஆனா இப்ப பவி பேச்சுல ரொம்ப கான்பிடென்ஸ் தெரியுது. அது வேணும்னு தான அவனும் ஆசைப்பட்டான். நாளை பின்ன, அவள் ஏதாச்சு சங்கடப்படுறதுக்கு முதல்லயே கஷ்டப்பட்டுக்குறது பரவாயில்லைன்னு நினைச்சுக்கிட்டானோ என்னவோ. இன்னும் கொஞ்ச நாள் தான… அவள் வந்ததும் முதல் வேலையா கல்யாணத்தை வச்சுடலாம். அப்பறம் அவங்க பாடு.”

“ம்ம் கரெக்ட் தான்” என்றவனின் முகம் செழுமையில் மிளிர்ந்தது.

லெதர் தொழிற்சாலையின் எம்டியாக தற்போது கம்பீர கலையும் தானாக வந்திருக்க, இப்போதெல்லாம் அவனைத் திருட்டுத்தனமாக ரசிப்பதை தனது வேலையாக வைத்திருந்தாள் திலோத்தமா.

அக்னிலாவின் ஆசைப்படி, விக்ரம் அவளுடன் தினமும் விளையாடுவதும் வழக்கமாக, இப்போது அவர்களுடன் அக்னி வேந்தனும் இணைந்து கொள்வதில், அவளுக்குத் தான் பேரானந்தம்.

“அப்பாவை நல்லபடியா பார்க்கவும் தான் நிலா முகமே பளிச்சுன்னு இருக்கு. பாவம் குழந்தை மனசுக்குள்ள எவ்ளோ வேதனைப்பட்டுச்சோ…” நிவேதா அவர்களை ரசித்தபடி கூறியதில், திலோத்தமாவும் அக்காட்சிகளை கவிதையாக மனதில் வடித்துக்கொண்டாள்.

“ரொம்ப ஏங்கிட்டா அத்தை…”

“அவள் மட்டுமா?” நிவேதா குறும்பாக கேட்டதில்,

புன்சிரிப்பை கொடுத்தவள், “நானும்” எனும்போதே உதட்டைப் பிதுக்கி அழத் தயாராகி விட்டாள்.

கடந்த சென்ற நாள்களின் அழுத்தம் இன்னும் அவளை விட்டு மறையவில்லை போலும்.

“ச்சு… அதான் இப்ப அவன் நல்லபடியா வந்துட்டான்ல. எதை நினைச்சும் கவலைப்படாத திலோ. உன் அப்பாவும் அம்மாவும் உன் கண்ணீரை என்னைக்கும் விரும்ப மாட்டாங்க…” என்றார் அவள் தலையைக் கோதி.

அன்று விக்ரமின் வீடே பரபரப்பாக காட்சியளித்தது.

“விக்ரா… தாம்பூலத் தட்டு எல்லாம் மண்டபத்துக்கு போயாச்சு தான” நிவேதா கேட்க, “போயாச்சுமா. நீங்களும் கிளம்புங்க. தாத்தா பாட்டிலாம் மண்டபத்துல இருக்காங்க. ஏதாச்சு எடுக்கணும்னா நான் வந்து எடுக்குறேன்…” என்றபடி திலோத்தமாவைத் தேடினான்.

“திலோ ரெடியா?”

“ஹான் வந்துட்டேன் விக்ரம்” சிவப்பு நிற ஜரிகை புடவை மினுமினுக்க வந்தவளைக் கண்டு அவனுக்கு தான் நெஞ்சை அடைத்த நிலை.

‘இவள் மத்த நாள்ல எல்லாம் இப்படி ரெடியாக மாட்டா…’ என்று லேசாய் சலித்தவன்,

“பவி எங்க திலோ. இன்னும் வரல.”

“அவள் கோயம்பத்தூருக்கு காலைலயே வந்துட்டாளாம். அதுக்கு அப்புறம் அவ எங்கன்னு உங்க ஆசை தம்பியைத் தான் கேட்கணும்” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

“நாளைக்கு ரெண்டு பேருக்கும் கல்யாணம்ன்ற நினைப்பு இருக்கா இல்லையா?”

“ஒரு வருஷம் கழிச்சு பாக்குறாங்கள்ல… பேசிட்டு வரட்டுமே. நீங்க வாங்க…” என இழுத்துச் செல்ல, ‘இவன் பேசிட்டு மட்டுமா இருப்பான்’ என முணுமுணுத்துக் கொண்டான்.

தன்னைக் கையில் ஏந்திக்கொண்டு அக்ரம் இல்லத்தின் அலுவலக அறைக்கு வந்தவனிடம் இருந்து விடுபட முயன்று துள்ளினாள் பவித்ராத்யா.

“வேந்தா கல்யாண பொண்ணை காணோம்னு எல்லாரும் தேடிட்டு இருப்பாங்க. நீங்க ஏர்போர்ட்ல இருந்து இங்க கடத்திட்டு வந்துட்டீங்க” என சிணுங்கிட,

“பின்ன என்னடி, நீ வந்ததும் உன்னைப் பார்க்க கூடாதாம். நலுங்கு வைக்கணுமாம். மருதாணி வைக்கணுமாம். பக்கத்துல வரக்கூடாதாம் ஆயிரம் ரூல்ஸ் போட்டா எப்படி? நான் கேட்பானாக்கும். அதான் எல்லாம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே பொண்ணை தூக்கியாச்சு:” எனக் கண்சிமிட்டிட, அவளுக்கு கொள்ளை வெட்கம் அள்ளியது.

“நாளைக்கு நீங்க தாராளாமா தூக்கிட்டுப் போங்க யார் கேட்பா…” அவன் சட்டை பட்டனைத் திருகியபடி கூற,

“மூச்சடைக்குது ஆத்யா. ஐ மிஸ் யூ சோ மச்” என்றவனின் விரல்கள் அவளது இடையுடன் பதிந்து கொள்ள, “நான் இன்னும் ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆகிட்டு வரலாம்னு இருந்தேன்…” என்றாள் போலி வருத்தத்துடன்.

அதில் கடுப்பாகி அழுத்திய இடையில் கிள்ளினான்.

“ஆஅ…” எனத் துள்ளியவள், மேனி சிலிர்க்க, “இதோ பாருங்க… தப்பு தப்பா நடத்துக்கிட்டா அப்பறம் அக்காகிட்ட சொல்லிடுவேன்…” என முன்னை போலவே மிரட்டல் வைக்க,

“சொல்லுடி நானும் சொல்லுவேன்” என்றான் அவள் கரத்தை அவனது தோள்களில் மாட்டிக்கொண்டு.

“என்ன சொல்லுவீங்களாம்…?”

“ம்ம்ம் உன் தங்கச்சி என்னை போதையேத்துறா. என்னை வந்து கட்டி கட்டி பிடிக்கிறா. என்னைக் கட்டிக்க போறவன்னு ஹோம் முழுக்க சொல்லி வச்சுருக்கான்னு சொல்லுவேன்” என நாக்கைத் துருக்கினான்.

“உங்களை” என அவன் நெற்றியில் எட்டி முட்டியவளிடம், “இதோ இப்ப கூட முட்டிட்டா, அப்போ மூக்கும் மூக்கும் டச் ஆகிடுச்சுன்னு கூட சொல்லுவேன்” என்றதில், நாணம் நிறைய “போங்க வேந்தா” என கூச்சத்தில் நகர முயன்றவளை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டவன்,

“அதுனால, நான் பழிக்கு பழி வாங்க. லிப்சும் லிப்சும் டச் ஆக வச்சுட்டேன்னு சொல்லட்டா…” என்றபடி அவள் உணரும்முன்னே இதழ்களை சிறைபிடித்தான்.

உயிர் உருகி, பாதம் வழியே நழுவிச் செல்வதை முதல் முறை உணர்கிறாள்.

முத்தத்தின் வழியே அவளின் மொத்தத்தையும் கொள்ளையிட்டுச் செல்ல, தற்போது போதை கொள்வது அவளேயானாள்.

இதழ் பாராம் தாளாது மூச்சின் சீரமைப்பிற்காக அவன் நெஞ்சிலேயே தஞ்சம் கொண்டிருந்தவளின் முதுகை மெல்ல நீவி விட்டான்.

“இப்ப ஓகேவாடி?” செவிமடலில் ஊதியபடி வினவ, சிலிர்த்து தவித்தவள், “சேட்டை பண்ணாதீங்க வேந்தா. என்னை மண்டபத்துல விடுங்க…” என வெட்கப்புன்னகையுடன் நகர, அவனோ “நாளைக்கு வரை கண்ட்ரோலா இருக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா நீ வேணும்னு தான என்னை டெம்ப்ட் பண்ணுன…” என்றான் இடுப்பில் கையூன்றி.

“நான் என்ன பண்ணுனேன்?” அவள் பாவமாக கேட்டாள்.

“உன்னை யாருடி ஃப்ரீ ஹேர்ல வர சொன்னது. ஆல்ரெடி இந்த கூந்தல்ல விழுந்து என்னையே தேடிட்டு இருக்கேன்…” எனப் புருவம் உயர்த்த, அவள் நளினமாக புன்னகைத்தாள்.

“உங்களுக்கு பிடிக்கும்னு தான்…பிடிச்சிருக்கா?”

“ரொம்ம்ம்ப! கட்டிக்கோ” எனக் கை நீட்டி காட்ட, யோசியாது அவனிடமே சரணடைந்து கொண்டாள் பவித்ராத்யா.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
28
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்