
“அக்கா…” திலோத்தமாவைக் கட்டிக்கொண்ட பவித்ராத்யாவை தானும் அணைத்தாள்.
“இப்படி எல்லாம் பிரிஞ்சுருந்து எனக்கு தண்டனை கொடுக்காத பேபி…” நீர் கசிந்து விட்டது அவளுக்கு.
“என்னக்கா…”
“கஷ்டமா இருக்கு பேபி.”
“ப்ச் அதான் நான் வந்துட்டேன்ல” என்றவள், அக்னிலாவைத் தூக்கிச் சுற்றினாள்.
விக்ரம் தான் அவளை முறைத்தபடியே சுற்றினான்.
அவளும் தேவாரம், விஜயா, குருமணி, நிவேதா, ஜெயசுதா என அனைவரிடமும் ஒரு வருட கதையைப் பேசி தீர்க்க, விக்ரமையும் ‘அத்தான் அத்தான்’ எனப் பின்னாலேயே அலைந்து சமாதானம் செய்தாள்.
அதன்பிறகு மற்றவற்றை யோசிக்க விடாதவாறு, சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி போகினர் மணமக்கள்.
மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் மிளிர்ந்த அக்னி வேந்தனை கண்ணெடுக்காது பார்த்திருந்தான் விக்ரம வேந்தன்.
இறுதியாக அவனது தம்பியை அருகில் இருந்து குடும்பமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தே விட்டது.
தங்களது திருமணத்தை கோவிலிலேயே வைத்துக்கொள்ளலாம் என்றே இருவரும் கூறினர்.
ஆனால் விக்ரமும் திலோத்தமாவும் முடிவாக மறுத்து விட்டனர்.
‘உங்களுக்காவது க்ராண்டா செஞ்சு பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை. வேணாம்னு சொல்லாதீங்க’ என்றதில், அனைத்தையும் அவர்கள் விருப்பத்திற்கே விட்டு விட்டனர்.
பிரம்மாண்டமாகவே திருமணத்தை நடத்தினர் தம்பதியினர்.
விக்ரம் தந்தையின் ஸ்தானத்தில் பவித்ராத்யாவிற்கும் அனைத்தும் செய்தான்.
சிவப்பு நிற பட்டுடுத்தி, நீண்ட கூந்தலின் அலங்காரங்களுடன் அழகுப் பதுமையாக நடந்து வந்தவளைக் காண இரு கண்கள் போதவில்லை அக்னி வேந்தனுக்கு.
இரு புருவம் உயர்த்தி பாராட்டுத் தெரிவித்ததே அவளுக்கு பூனை முடிகளை உயிர்த்தெழச் செய்தது.
தன்னருகில் அமர்ந்தவளை நோக்கி கண் சிமிட்டி புன்னகைத்தவனிடம் தானும் புன்னகை தந்தவள், “நீங்க சூஸ் பண்ண சேரி எப்படி இருக்கு?” எனக் கேட்டாள்.
“நான் சூஸ் பண்ணது எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கும்” என்றான் குறுநகையுடன்.
அவளையும் இணைத்தே சொல்கிறான் எனப் புரிய, கர்வ நகை மிளிர்ந்தது அவளுக்கு.
பின், “உங்க பாட்டி வரலையாங்க” எனக் கேட்க,
“இல்ல. அம்மா கூப்பிடவே வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றான்.
“பாருடா அத்தையா இது?” அவள் வியப்பாக கேட்க,
“ம்ம் நானும் விக்ரமும் கூட அவங்கள கூப்பிடலாம்னு தான் சொன்னோம். ஆனா விக்ரம் வீட்டை விட்டு போக அவங்களும் தான காரணம். என் பையனோட நல்லது கெட்டதை என்னை பார்க்க விடாம பண்ணதுக்கு தண்டனைன்னு சொல்லிட்டாங்க. ஆனா கல்யாணம் முடிச்சதும் நம்மளை போய் ஒரு தடவை பார்த்துட்டு வர சொன்னாங்க… ஒரு பார்மாலிட்டிக்கு. பட் உன்னைக் கூட்டிட்டுப் போக எனக்கு எனக்கு இன்டரஸ்ட் இல்ல. எப்படியும் அவங்க இயல்பு குணம் மாறாது என்றான் கண்டிப்பாக.
இருவரும் தீவிரமாகப் பேசுவதைக் கண்டு, விக்ரம் தான் “டேய் என்ன தான்டா பேசுவீங்க ரெண்டு பேரும். மண்டபத்துல கூட அடக்க ஒடுக்கமா உக்கார மாட்டீங்களா” எனக்கு நக்கல் செய்தான்.
கூடவே, பவித்ராத்யாவிடம் “யம்மா இந்த வெட்கம் மடம் நாணமெல்லாம் கொஞ்சம் முகத்துல காட்டுறியா” என்று வாரிட, “போங்க அத்தான்” என அக்னியின் தோளில் புதைந்தே வெட்கம் கொள்ள, அக்னி வேந்தனுக்கு பெருமை பரவியது.
அக்னிலாவும் சித்தி சித்தப்பாவுடன் அமருவதாக அடம்பிடிக்க, அவளைத் தனது மடியில் இருத்திக் கொண்ட அக்னி வேந்தன், அவள் கையில் கொஞ்சம் அட்சதையைக் கொடுத்து, “நான் சித்திக்கு இந்த செயின் போடும்போது நீ எங்க ரெண்டு பேர் மேலயும் போடணும் ஓகே வா…” எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“அகி… போட்டோக்கு உன் முகம் தெரியவே இல்லை. நிலாவை குடு நான் வச்சுருக்கேன்…” என திலோத்தமா கேட்க,
“அவள் இருக்கட்டும்கா” என்ற பவித்ராத்யா, “குட்டி அகி நடுவுல உக்காந்துருக்கீங்களா. அப்போ போட்டோக்கு நம்ம மூணு பேரும் நல்லா தெரியுவோம்” என்றிட அவளும் சமத்தாக நடுவில் அமர்ந்து கொண்டதில் விக்ரமும் திலோத்தமாவும் அவளை முறைத்தனர்.
“டார்லிங் ஒரு வருஷமா யோகாவுக்கு லீவ் விட்டுட்ட. இனியாவது க்ளாஸ் எடுப்பியா?” குருமணி கேட்டதில்,
ஜெயசுதா தான், “உனக்கே க்ளாஸ் எடுத்துட்டு இருந்தா, அவ குழந்தை எப்படா கிளாசுக்கு போறது…” என்று வாரிட, நிவேதா “உங்க வயசுக்கு தகுந்த பேச்சே பேச மாட்டிங்களா” எனத் தலையில் அடித்துக் கொண்டார்.
தேவாரம், “உன் மருமகளே எங்களை அங்கிள் ஆண்ட்டின்னு தான் கூப்புடுற. நாங்க யங் பீப்பிள் நிவேதாமா. இல்ல பவி…” என அவளிடம் அபிப்ராயம் கேட்க, “ஆமா அங்கிள்… உங்களை போய் யாராச்சு தாத்தா பாட்டினு கூப்டுவாங்களா. எனக்கு நீங்க நாலு பேரும் அங்கிள் ஆண்ட்டி தான்…” என்றாள்.
விஜயாவோ, “நீ வச்ச ஐஸ்ல உச்சி குளுர்ந்துருச்சு பவிமா. இப்ப முதல்ல தாலியை வாங்கிக்கிறியா. என் பேரன் ரொம்ப நேரமா வெய்ட் பண்றான்” என்றபிறகே அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ கையில் தாலியை வைத்துக்கொண்டு பின்னால் திரும்பி பேசியவளை முறைத்திருந்ததில் அங்கு சிரிப்பலை பரவியது.
“ஹி ஹி கட்டுங்க” என்று வேகமாக குனிந்து காட்டியவளைக் கண்டு சிரிப்பை அடக்கியவன், “ஹேப்பி கல்யாண டே அம்மணி…” என்று அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்.
தானாய் அவள் கண்களும் கலங்கி விட்டது. அவளுக்கே அவளுக்கான ஒரு உறவு! நினைக்கவே தித்தித்தது.
“ஹலோ அம்மணி அழுகுறீங்களா?” அவள் புறம் குனிந்து கேட்க, மறுப்பாய் தலையசைத்தவள் சில துளி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
அவளை தோளோடு அணைத்து கொண்டவன், “குட்டிமா நீங்க இன்னும் அட்சதை போடல… போடுங்க” என அக்னிலாவிடம் குனிந்து காட்ட, அவளும் மற்றவர்களை போல இருவர் தலையிலும் போட்டு சிரித்தாள்.
அதில் பவித்ராத்யாவும் இலகுவாகிவிட, பெரியவர்களிடமும் ஆசி வாங்கினர்.
திலோத்தமா தங்கையை இறுக அணைத்துக்கொண்டாள். ஓர் நிறைவு அவளுள். பின் பவித்ராத்யா விக்ரம் காலில் விழுக போக,
“ஓய் சைக்கிள் கேப்ல என்னை வயசானவனாக்குறீல…” எனக் கிண்டலாகத் தடுத்தான்.
“என் அப்பா இருந்தா நான் ஆசீர்வாதம் வாங்குவேன்ல… ப்ளீஸ்ஸ்ஸ்…” எனத் தலை சாய்த்துக் கேட்டதில் அவன் நெகிழ்ந்தான்.
அவள் விருப்பப்படி அவளுக்கு ஆசி வழங்கியவன், “எப்பவும் இதே மாதிரி சிரிச்சிட்டே இரு. என் தம்பியை மட்டும் மலை ஏத்திடாத…” என இறுதி வரியை கிசுகிசுப்பாக கூற, அவள் சத்தமாக சிரித்தாள்.
அவர்களது அன்பின் ஆழத்தை அமைதியாக தள்ளி நின்று ரசித்திருந்தனர் அக்னி வேந்தனும், திலோத்தமாவும்.
அன்றைய இரவின் அழகை ரசிக்க, புதுமணத் தம்பதியர் ஆயத்தமாகினர்.
திலோத்தமா பரபரப்பாக அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்க, அக்னி அவளிடம் வந்தான்.
“என்ன அகி… எதுவும் வேணுமா?”
“நான் துபாய் போயிட்டு வந்ததும், அந்த பேகை கூட ஓபன் பண்ணல ரொம்ப வருஷமாவே. நேத்து தான் ஞாபகம் வந்துச்சு…: என அவள் அவனிடம் முதல்முதலாகக் கேட்ட கைக்கடிகாரத்தை எடுத்து நீட்டினான்.
அவள் என்னவோ எளிமையாகத் தான் கேட்டிருந்தாள்.
ஆனால் அவன் அவளுக்காக தேடி அலைந்து, தங்கம் படர்ந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை வாங்கி வந்திருக்கிறான்.
திலோத்தமாவிற்கு கண் கலங்கியது.
“ஞாபகம் வச்சு வாங்கிருந்தியா அகி?”
“மறக்க கூடிய ஆளா நீ” கையைக் கட்டிக்கொண்டு நகைக்க, “தேங்க்ஸ்டா எல்லாத்துக்கும்…” என்றாள் நெகிழ்வாக.
“கிஃப்ட் குடுத்தா யாராச்சு அழுவாங்களா” என அவள் தலையில் செல்லமாகத் தட்டி விட்டுச் சென்றதில், அவளும் தலையாட்டி முறுவலித்தாள்.
அக்னிலாவோ, வெகு நாள்கள் கழித்து சித்தியைப் பார்த்ததால் அவளை ஒட்டிக் கொண்டே இருந்தாள்.
“சித்தி இன்னைக்கு நீ கதை சொல்றியா?” முன்பே அவளை புக் செய்து விட்டவளைப் போல கேட்டதில் திலோத்தமா தான் விழித்தாள்.
“நிலா, சித்தி இன்னைக்கு டயர்டா இருப்பா. நாளைக்கு கதை சொல்லுவா. வா தூங்கலாம்” என அழைக்க, “இல்ல எனக்கு சித்தி வேணும்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“விடுக்கா. அவளைத் தூங்க வச்சுட்டு தரேன். வாங்க நம்ம போய் கதை சொல்லலாம்…: என அக்னி வேந்தனின் அறைக்கு அக்னிலாவையும் தூக்கிச் சென்றாள்.
“ஐயோ விக்ரம் உங்க பொண்ணை பாருங்க. சித்தியைப் பார்த்ததும் அடம்பிடிக்கிறா.”
“அவள் கூடவே இருந்துட்டா. திடீர்னு போகவும் அவளும் ஏங்கிட்டா திலோ. கொஞ்ச நேரத்துல அவளே வந்துடுவா. ஃபோர்ஸ் பண்ணாத. விடு”
“அட விக்ரம் இன்னைக்கு அவங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட்ல” என்றதுமே திருதிருவென விழித்தவன், “ஆமால…” என்று தலையைச் சொறிந்தான்.
மகளைக் கண்டதும் அக்னி வேந்தனும் அவளைத் தூக்கி கொண்டான்.
“நிலாக்குட்டிக்கு கதை வேணுமாம்…” என்றபடி அக்னியின் அருகில் பவித்ராத்யா அமர, “சித்தி நீயும் சித்தப்பா ரூம்ல தூங்க போறியா” என்றாள்.
அதில் வெட்கத்தில் நெளிந்தவள், “ஆமா உங்க சித்தப்பாக்கும் கதை சொல்லணுமாம்…” என்றிட,
“ஹை… சித்தப்பா அப்போ சேர்ந்து கதை கேட்கலாம்” என அக்னி வேந்தனின் மீது ஏறி படுத்துக்கொண்டாள்.
:உங்க சித்தி, ‘ஏன்டி உன் அக்கா பேச்சை கேட்டு விட்டுப் போன’ன்னு கேட்டா நல்லா கதை அளப்பா… நானும் கேட்டிருக்கேன் குட்டிமா…” எனக் குறை கூற, அவன் தோளில் அடித்தவள், “சும்மா இருங்க வேந்தா” என உதடு குவித்தாள்.
“சும்மா சும்மா” எனக் கண் சிமிட்டியவன், மகளுடன் இணைந்து கதை கேட்க ஆயத்தமாக, அவன் கையில் படுத்தபடி தீவிரமாக கதை கூற தொடங்கினாள் பவித்ராத்யா.
விளைவாக, அக்னிலாவுடன் அக்னியும் பவித்ராத்யாவும் இணைந்தே உறங்கி விட்டனர்.
“விக்ரம் வாங்க பாப்பாவை தூக்கிட்டு வரலாம்…” திலோத்தமா நச்சரித்ததில் இருவரும் அக்னியின் அறைக் கதவைத் திறந்து மெல்ல எட்டிப்பார்த்தனர்.
பவித்ராத்யா அக்னியின் வலது நெஞ்சில் தலை வைத்து படுத்திருக்க, அக்னிலா மற்றொரு பக்கம் அவன் மீது கையை காலை போட்டு நெஞ்சில் உறங்கிக்கொண்டிருந்தாள்.
பார்க்கவே தெவிட்டாத ஓவியம் போல இருந்தது அக்காட்சி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
விக்ரம் தான் “ஃபர்ஸ்ட் நைட்டுக்கு வந்துட்டு கும்பகர்ணனுக்கு குடும்ப இஸ்திரி மாதிரி தூங்குதுங்க பாரு திலோ” என்றதில், “எல்லாம் உங்க பொண்ணு பண்ணுன வேலை தான்” என்றாள்.
விக்ரம் மெல்லமாக அக்னிலாவைத் தூக்க முயல அதில் அக்னி வேந்தன் விழித்து விட்டான்.
“டேய்” எனப் பேச வரும்போதே விக்ரம் வாயை மூடி, “கத்தாத எந்திரிச்சுட போறா… நீ தூங்கு” என மகளை மட்டும் தூக்கிச் சென்றான்.
உறக்கம் கலைந்த அக்னி வேந்தன் தன்னருகில் உடலைக் குறுக்கி படுத்திருந்தவளின் புறம் திரும்பினான்.
“கதை சொல்லி தூங்க வைக்கிற ஆளை பார்த்திருக்கேன். செல்ஃபா கதை சொல்லி தூங்குறவளை இப்ப தான் பார்க்குறேன்” எனச் சிரித்துக் கொண்டான்.
செல்லும்போது திலோத்தமா கதவை சற்று அழுத்தமாக அடைக்க, அந்தச் சத்தத்தில் கண்ணைச் சுருக்கி விழித்தாள் பவித்ராத்யா.
வெகுஅருகில் கணவனின் முகம் தெரிய, நன்றாக விழித்தவள் “பாப்பா எங்க அக்கா தூக்கிட்டுப் போய்ட்டாளா?” எனக் கேட்க, “ம்ம்… நீ தூங்கு” என்று தட்டிக்கொடுத்தான்.
அவளுக்கோ அவனின் அண்மையில் உறக்கமே பறிபோன நிலை.
“உங்களுக்கு தூக்கம் வருதா?” அவன் சட்டைப் பட்டனை சுரண்டியபடி கேட்டதில்,
“ம்ம்ஹும்… உனக்கு?” என்றான் சற்றே ஆர்வம் கலந்து.
“ம்ம்ஹும்…” மறுப்பாய் தலையசைத்தவள் அவன் விழிகளை ஏறிடாது தவிக்க, “தூக்கம் வர்றதுக்கு யோகா எதுவும் இல்லையா ஆத்யா?” எனக் கேட்டான் தீவிரமாக.
“ஹான்?”
“எனக்கு கொஞ்சம் தெரியும் சொல்லித் தரவா?” என்றபடி அவளருகில் வர,
“தூக்கம் வர யோகாவா?” என இன்னும் அவள் குழப்பத்தில் இருந்தாள்.
“ம்ம்… செஞ்சு காட்டவா?” என்றபடி கருமேகம் நிலவினை சூழ்வது போலவே அவனும் அவள் மீது பரவினான்.
உறக்கம் கொள்ளவே விழைந்த இரு தேகங்களுக்கும் உறங்கா இரவாகிப்போனது.
முத்தங்களில் நீளங்களை சற்று குறைக்கலாமா? அல்லது கூடல்களின் நொடிகளை சற்றே நீடிக்கலாமா என்ற ஆராய்ச்சியிலேயே அவளைத் திணற வைத்தான் அக்னி வேந்தன்.
புது உறவின் உணர்வு வீரியம் தாளாது தளர்ந்து போன பவித்ராத்யா, நெஞ்சம் படபடக்க அவன் காட்டும் அசைவுகளுக்கெல்லாம் இசையானாள்.
வளைவுகளின் ஆபத்தில் விபத்தானாள்.
இறுதியில் நேச போதை கொண்ட ஆண்மகனின் மயக்கத்தில் தானும் போதை கொண்டாள்.
கூடும் போதை தீரும்போதும்,
தேடும் பாதை அடைந்தபோதும்,
காதல் போதை தீர்ந்திடாதோ!
“ஏன்டா இப்படி அடம்பிடிக்கிற” விக்ரம வேந்தன் தம்பியை முறைத்தான்.
“நீ வந்தா நானும் போவேன்…” அக்னி வேந்தன் மனையாள் கொடுத்த காபியை பருகியபடி சாவகாசமாக கூற,
“டேய் ஹனிமூன்க்கு நாங்க எதுக்குடா” என்றான் விக்ரம்.
“நீங்களும் செகண்ட் பேபி ட்ரை பண்ணுங்க” அக்னி இயல்பாக கூறியதில், சோபாவின் மீதிருந்த சிறிய தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள் திலோத்தமா.
“என்னடா பேசுற” என்றவளுக்கு வெட்கம் வேறு.
“அதெல்லாம் நாங்க ரெடி பண்ணிட்டு தான் இருக்கோம்” விக்ரம் முந்தைய இரவின் சில்மிஷங்களின் விளைவாக திலோத்தமாவை குறுகுறுவென பார்க்க, அவளோ நாணம் மறைக்க திடுதிடுவென அடுக்களைக்கு ஓடி விட்டாள்.
விக்ரமோ மனையாளை சைட் அடிப்பதையே தற்போது முழுநேர வேலையாக பார்க்க,
“இதே சைட்டை ஊட்டிக்கு வந்து அடியேன்” எனக் கிண்டல் செய்தான் அக்னி வேந்தன்.
“சொன்னா கேளு. ஒழுங்கு மரியாதையா நீங்க போயிட்டு வாங்க. பாப்பாவையும் கூட்டிட்டுப் போனா, அவள் உங்க ரெண்டு பேரையும் கதை கேட்டே கொல்லுவா…” என்றிட,
“அது பரவாயில்ல. அம்மாவையும் கூட்டிட்டுப் போகலாம்” என்றதில் நிவேதாவிற்கு புரை ஏறியது.
“நான் எதுக்கு அகி?” பரிதாபமாக கேட்டவரிடம், “பாப்பாவை பார்த்துக்கமா” என்று கண்சிமிட்டினான்.
“அடேய்” விக்ரம் கத்தியதில், “அப்படி சொன்னா தான்டா அவங்க வருவாங்க” என்று சிரித்ததில்,
“டேய் உண்மையை சொல்லு உங்களுக்கு கபில் ஷுட் எடுக்க தான் என்னை வலுக்கட்டாயமா கூப்பிட்ட” என்றதும், பவித்ராத்யா கிளுக்கி சிரித்தாள்.
“நான் சொன்னேன்ல அத்தான் ரொம்ப ஷார்ப்புன்னு” என்று அக்னியிடம் வார, அவன் நமுட்டு நகை புரிந்தான்.
“புருசனும் பொண்டாட்டியும் கலாய்க்கிறீங்களா?” விக்ரம் கடுப்பாகி, “உன்னை துபாய்கு வம்படியா அனுப்பி விட்ட மாதிரி ஊட்டி மலைக்கு அனுப்பி விடுறேன் இரு” எனப் போலியாய் மிரட்ட, அக்னியின் முகம் மாறியது.
“நான் போன தடவை போயிட்டு வந்தப்ப நீ இல்ல விக்ரா. இப்பவும் என்னால தனியா போக முடியாது…” என்றதில் விக்ரமின் நெஞ்சம் உருகி விட,
“ரொம்ப பண்ணாதீங்க அத்தான். எல்லாரும் சேர்ந்து போகலாம்னு தான கூப்புடுறோம்” கணவனின் சுருங்கிய முகத்தை தாள இயலாது கூறினாள் பவித்ராத்யா.
இறுதியில் தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்துச் சென்ற அக்னி வேந்தனை நிவேதா தான் முறைத்தார்.
ஐவரும் அக்னிலாவுடன் ஒரே காரில் ஊட்டியை நோக்கிப் பயணிக்க,
“ஹனிமூன்கு உங்களையும் இழுத்துட்டுப் போவான்னு அன்னைக்கு ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்… இன்னைக்கு உண்மையாவே நடந்துடுச்சு விக்ரம்…” திலோத்தமா கிண்டலாகக் கூற, விக்ரமின் இதழ்களில் குறுநகை.
“கூடவே நீயும் வருவன்னு அப்போ நீ எதிர்பார்க்கலைல” எனக் கண்சிமிட்டியதில், மலர்ந்த புன்னகை அவளிடம்.
“அகி… இங்க நிறுத்துங்களேன்” பவித்ராத்யாவின் கூற்றில் காரை ஓரம் கட்டினான்.
“என்னாச்சு ஆத்யா?”
“இங்க வியூ நல்லாருக்கு போட்டோ எடுக்கலாமா?” எனக் கேட்டதில் இரு ஜோடிகளும் கீழே இறங்கியது.
அக்னிலா உறங்கியதில் நிவேதா காரினுள்ளேயே இருக்க, பனிமூட்டத்தினுள் புதைந்திருந்த மலைகளை ரசித்துப் பார்த்தாள் பவித்ராத்யா.
“வா…” என அவளது இடையைப் பற்றி இழுத்த அக்னி வேந்தன், அவளுடன் செல்பி எடுக்க முற்பட, “வேந்தா கையை எடுங்க” என நெளிந்தாள்.
“அரையடி தள்ளி நின்னு போட்டோ எடுக்கவா ஹனிமூன் வந்தோம்…” என அவள் காதோரம் கிசுகிசுக்க, “ம்ம்ஹும் போங்க” என்று வெட்கம் மறைக்க தலையைக் குனிந்தாள்.
“அகி ரெண்டு பேரும் நில்லுங்க நான் போட்டோ எடுக்குறேன்” என்று விக்ரம் இருவரையும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்க, பவித்ராத்யாவிற்கு கூச்சம் கொன்று எடுத்தது.
அவன் தான் கடுகளவும் தள்ளி நிற்க மாட்டேனென்று விட்டானே!
திலோத்தமா வேறு “நீ அவன் மேல கை வச்சுக்கோ பேபி” என எடுத்துக்கொடுக்க, ‘தெரியாம போட்டோ எடுக்க இறங்கிட்டேன்’ என்ற ரீதியில் விழி பிதுங்கி நின்றாள்.
அவனோ, “இடைல எங்கயும் நிறுத்தாம ஸ்ட்ரைட்டா ரூம்க்கு போய்டலாமா ஆத்யா” எனக் கிறக்கமாக கேட்க, “அடி வாங்கப்போறிங்க…” என்று தோளில் குத்தினான் நாணத்துடன்.
அழகாய் புன்னகைத்து நகர்ந்த அக்னி வேந்தன், “போனை குடு… உங்களை போட்டு எடுக்குறேன்” என்று விக்ரமிடம் கூற, இப்போது விழிப்பது திலோத்தமாவின் முறையானது.
இதுவரை புகைப்படங்கள் எல்லாம் பெரியதாக எடுத்துக்கொண்டதில்லை.
அக்னி பவித்ராத்யாவின் திருமணத்தின் போது தான் அவர்களுக்கும் அழகாய் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அதிலும், அவளுக்கு தான் புதுமணப்பெண் போல படபடப்பு ஏற்பட்டு விட்டது.
அக்னியும் பவித்ராத்யாவும் அவர்களை விதவிதமாக புகைப்படம் எடுக்க, விக்ரமோ இது தான் சாக்கென்று திலோத்தமாவின் இடையை இறுக்கிட, அவளோ “ஐயோ போதுமே போட்டோ…” என்றாள் வெட்கி.
“நீ என்னக்கா, என்னை விட வெட்கப்படுற” பவித்ராத்யா வாரியதில், “போடி…” என்று தவிப்புடன் ஆடவனை விட்டு விலகி நிற்க, “ரொம்ப கஷ்டம்ண்ணா” என்று கேலி செய்தான் அக்னி வேந்தன்.
“தெரிஞ்சா சரி…” விக்ரம் மனையாளை ரசித்தபடி கூறியதில், அங்கு சிரிப்பலை பரவியது.
பின், அருகிலேயே இருந்த சிறிய கடையில் டீ வாங்கிப் பருகினர்.
அக்னி வேந்தன் எப்போதும் போல ஒரு டீ’யை வாங்கி வந்து பவித்ராத்யாவிடம் கொடுக்க, அவளும் குளிரில் கையைக் குறுக்கியபடி வாங்கிக் கொண்டாள்.
“செம்ம குளுருல!” என்றபடி சூடான தேநீரைப் பருக, “ஹ்ம்ம்…” எனத் தனது ஜெர்கினைக் கழற்றி பின்னிருந்து போர்த்தி விட்டவன், அப்படியே அணைத்தான்.
“இப்போ ஓகேவாடி?” அக்னி வேந்தனின் ரகசிய குரலில் “ம்ம்ம்ம்” எனப் புன்னகை மின்னத் தலையாட்டியவள், “நீங்க குடிக்கல” என வினவினாள்.
“இதோ இருக்கே…” என்றவன் அவளது கப்பிலேயே தேநீரை உறிஞ்சிட, எப்போதும் போல கன்னக்கதுப்புகள் சிவந்து போனது அவனுக்கும் கண்கொள்ளாக் காட்சியானது.
பனி மூட்டங்களுக்கு நடுவில், பனிச்சிற்பமாக உறைந்து போன நேசத்துடன் நின்றிருந்த இருவரையும் விக்ரம வேந்தன் அவனது அலைபேசியில் புகைப்படமாக்கிக் கொண்டான் புன்னகையுடன்.
இரு ஜோடிகளின் தேனிலவுப் பயணமும் தேனாய் இனித்து நலம் பெற நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
முற்றும்!
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
82
+1
2
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


💛💜💖💖💖💖💖 குடும்ப பாசம், சகோதர பாசம், காதல், நிறைந்த அழகான கதை… அக்ரம் youthகளின் குறும்பு 👌🏻😆.. அருமையான நிறைவான கதை… வாழ்த்துகள் 💐💐💐💐💐💞💕💞💕💞