Loading

திமிர்-23(இறுதி)

 

 

“இதை நீ சொல்லாமலே இருந்திருக்கலாம் தங்கச்சி. உசிரு போகப் போற நேரத்தில், வரலாறும், புவியியலும் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம்.? அடேய், வீரபத்ரா, நீதேன் டார்கெட்டுன்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தால் நான் அப்படியே எஸ்கேப் ஆகியிருப்பேனே?” காத்தவராயனின் புலம்பல் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஆனால் வீரபத்ரனின் பார்வையோ இன்னுமும் பசுபதியின் மீது தான் நிலைத்திருந்தது.

 

 

 

 

“வீரா! வீரா..! இங்கிருந்து எப்படி தப்பிக்கிறது? நீ என்னடான்னா அவன் மூஞ்சியவே பார்த்துட்டு இருக்கிறே?” மெல்லிய குரலில் வீராவின் காதோரமாய் கிசுகிசுத்தாள் மேகவர்ணா.

 

 

 

 

“உன் ஃப்ரெண்ட் தானே மயிலம்மா, நீதேன் சொல்லணும் எப்படி தப்பிக்கனும்னு..” சாதாரணமாய் பதில் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

“அடேய் அரசி மயனே.. என்னடா, என்னமோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து கதை பேசுற மாதிரி பேசிட்டு இருக்கீங்க? சட்டுபுட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க டா! இந்த மொட்டை பார்க்கிற பார்வையைப் பார்த்தாலே பயந்து வருது. இவன் வேற குறுகுறுன்னு நம்மளையே பார்க்கிறான்.!” என காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மேகவர்ணாவின் பக்கத்தில் வந்திருந்தான் பசுபதி.

 

 

 

 

“ஏன் வர்ணா, என்னை உனக்குப் பிடிக்கலையா? என்கிட்டே உனக்கு என்னதான் பிடிக்கலை. என் கூட நீ நல்ல ஃப்ரெண்டாகத் தானே இருந்த? திடீர்ன்னு ஏன்?” மேகவர்ணாவின் மிக அருகில் நெருங்கி வந்து அவள் செவிகளுக்குள் அவன் கேட்க, பயந்து நடுங்கி, அச்சம் தேங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தாள் அவள். அவள் கண் முன்னே, பசுபதி கொலை செய்த காட்சியே திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

 

 

 

 

“நீ எனக்குக் கொஞ்ச நாள் நல்ல நண்பனாகத்தான் இருந்தே.. ஆனால், நட்பின் எல்லையை நீ தாண்டிப் போக நினைச்சது எனக்குப் பிடிக்கலை. உன்னோட பார்வை, செய்கை எல்லாமே வித்தியாசமாய் இருந்துச்சு. உன்னோட செயல்கள் என்னை இயல்பாய் இருக்கவிடவே இல்லை. அதனால் தான் உன்னை என் பின்னாடி வராதேன்னு சொன்னேன். ஆனால் நீதேன், ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டியே?” எனத் தடுமாறியபடி பேசினாள் மேகவர்ணா.

 

 

 

 

“ஹா.. ஹா.. ஹா..! நான் ஒளிஞ்சுக்கிட்டேனா? நான் ஒளியக் கூடிய ஆளுன்னு நீ நினைக்கிறியா வர்ணா?” என பசுபதி சிரிக்க, மேகவர்ணாவிற்கோ, உள்ளுக்குள் உதறலெடுத்தது.

 

 

 

 

“என்னடா இவன், பக்தி தொடரில் வர்ர அரக்கன் மாதிரி சிரிக்கிறான். பயமா இருக்கு டா! அடேய் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க? ஏதாவது ஐடியா பண்ணி தப்பிக்க வழி செய்டா!” என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான் காத்தவராயன்.

 

 

 

“என்ன வர்ணா யோசிக்கிறே? நான் என்ன செஞ்சேன்னு யோசிக்கிறியா?” எனக் கேட்ட பசுபதி,

 

 

 

 

“உன் க்ளாஸ்மேட் நாதன் ஞாபகம் இருக்கா?” பசுபதி கேட்ட வார்த்தையிலும் தோரணையிலும் மேகவர்ணாவின் உடல் வெளிப்படையாய் நடுங்கத் துவங்கியது.

 

 

 

 

“மேகா.. பயப்படாதே.! மேகா ஒண்ணும் இல்லை! மேகா சொல்றேன்ல்ல..!” என வீரபத்ரன் சொன்னது எதுவுமே அவள் செவிகளில் விழவே இல்லை.

 

 

 

 

“வீரா.. இவன்.. இவன்.. நாதனையும் கொன்னுட்டான். கொன்னுட்டான்..!” என நடுங்கியக் குரலில் சொன்னவளின் கண்களில் உவர்நீர் ஊற்றெடுத்தது. ஒரேயொரு நாள் பேசியதற்காக எந்தப் பாவமும் அறியாத நாதனையும் இவன் தான் கொன்றிருக்கிறான் என்பதை அறிந்துக் கொண்டதும், மேகவர்ணாவின் உள்ளம், ஆயிரம் முறை கத்தியால் குத்தியதைப் போல் வலித்தது. இதுவரை, அந்த நாதன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டான் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் பசுபதி கொன்றிருப்பான் என அவள் நினைத்தும் பார்த்ததில்லை.

 

 

 

 

“பரவாயில்லையே.. கண்டுபிடிச்சுட்டியே..! உங்க அப்பன் நாச்சியப்பன் தான், நான் அந்தப் பயலைக் கிணத்தில் தள்ளி விடறதைப் பார்த்துட்டு, போலீசில் பிடிச்சுக் கொடுத்துட்டான். அதனால் தான் நான் காணாமல் போனேன். நான் ஒண்ணும் ஓடி ஒளிஞ்சுக்கலை புரியுதா?” கோபமாய் உறுமலுடன் கேட்டான் பசுபதி.

மேகவர்ணாவோ பதில் பேசாது, அழுதுக் கொண்டே இருந்தாள். மனம் வலித்தது. அந்த நாதன் இவளுக்கு நெருங்கிய நண்பனெல்லாம் கிடையாது. ஆனால் அவனின் முடிவிற்கு, தானும் ஓர் காரணம் என்ற, குற்றவுணர்வில் இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது.

 

 

 

 

“‘Do not feel lonely, the entire universe is inside you’ இது யாரு சொன்னதுன்னு தெரியுமா வர்ணா. இந்த வார்த்தைகளில் இருக்கிற மாதிரி எனக்குள் உலகமா, என்னோட உலகமா நீ இருந்த. என்னைத் தாண்டி நீ போனது எனக்குப் பிடிக்கலை. என்னைத் தவிர உன் வாழ்க்கையில் யாரு வந்தாலும், நான் அவங்களைக் கொல்லுவேன். உன் காலேஜ்மேட்ஸ் ரெண்டு பேர் காணாமல் போன மாதிரி, ஒவ்வொருத்தரா காணாமல் போவாங்க.. ஒட்டுமொத்தமா!” எனச் சொல்லிவிட்டு பசுபதி நிறுத்த, விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மேகவர்ணா.

 

 

 

 

 

“என்னைச் சுத்தி இருக்கிறவங்களை கொல்றதுக்கு பதில், என்னைக் கொன்னுடு பசுபதி. உன்னை நண்பன்னு நினைச்சு ஏமாந்தது என் தப்புதான்.!” எல்லாவற்றிற்கும் தான் மட்டுமே காரணம் என்ற குற்றவுணர்வும் ஆற்றாமையும், கொஞ்சம் கொஞ்சமாய் மேகவர்ணாவின் மனதைக் கூறு போட்டுக் கொண்டிருந்தது. 

 

 

 

‘அவனை நல்ல நண்பனாக நினைத்ததை விட, நான் என்ன தவறு செய்துவிட்டேன்.? நல்ல நண்பனாய் நினைத்தவனின் பார்வை வேறுபாடு கண்டு, விலகியது தான் நான் செய்த தவறா? ஒருவேளை நான் தான் இவனின் இந்த நிலைக்குக் காரணமா?’ பெண்ணின் மனப் பெட்டகத்தில் ஓராயிரம் வினாக்கள் ஒரு நொடியில் முகாமிட்டது. 

திடீரென ஏதோ யோசித்தவளாய், கண்ணீர் தழும்பித் ததும்பிய விழிகளுடன், வீராவை ஏறிட்டவள்,

 

 

 

 

“உன்னை நான் இவன்கிட்டே சிக்க வச்சிட்டேனே வீரா? எல்லாத்துக்கும் நான் தானே காரணம்? இவன் உன்னைக் கொன்னுடுவான்ங்கிற பயத்தில் தான் நான் உன் கிட்டே என் மனசில் இருந்தக் காதலை சொல்லவே இல்லை வீரா! எல்லாத்துக்கும் நான் தான் காரணம், என்னை மன்னிச்சுடு வீரா ப்ளீஸ்..!” குற்றவுணர்வின் உச்சியில், உணர்வுகளின் பிடியில் இருந்தவள், என்ன பேசுகிறோம் என்பது புரியாமலே பேசினாள்.

 

 

 

 

“எம்மா தங்கச்சி, நீ அவனை மட்டும் இல்லை, என்னையும் சேர்த்துதேன் சிக்க வச்சிருக்க!” என காத்தவராயன் சொல்ல,

 

 

 

 

“நான் வேணும்ன்னு எதையும் செய்யலை. என்னை மன்னிச்சுடுங்ண்ணே!”மனதார மன்னிப்பு கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

 

“அடேய்! அரசி மயனே! தங்கச்சி அழுவுது டா! எதாவது பண்ணுடா. தங்கச்சி நீ அழாதேம்மா! எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்.!” என தைரியம் சொன்னான் காத்தவராயன்.

 

 

 

 

“இந்தாரு மயிலம்மா! எதுக்கும் நீ காரணமில்லை. அதை முதலில் புரிஞ்சுக்கோ! இப்படி எனக்குப் பிடிச்சதைதேன் எல்லாரும் செய்யணும்னு, தன்னை மட்டுமே முன் நிறுத்தி யோசிக்கிற இவனெல்லாம் மனுஷனே இல்லை. தான் பாதுகாப்பா உணராத யாரையுமே ஒரு பெண், தன்னோட உறவு எல்லைக்குள் அனுமதிக்க மாட்டாங்கிற அடிப்படை கூட தெரியாத மிருகம் இவன். இவனோட சைக்கோத்தனத்திற்கு தீனி போட இவன் செஞ்சதுக்கெல்லாம் நீ எப்படி பொறுப்பாக முடியும்?” என அவளைத் தேற்றுவதற்காக பேசியபடியே, கட்டப்பட்டிருந்த தன் கரத்தை விடுவிக்க முயன்றுக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.

 

 

 

“நான் மனுஷனே இல்லை தான். நான் மிருகம் தான். மனித இரத்தம் ருசிக்கும் மிருகம் தான். ஆனால் என்னை மிருகமா மாத்தினது இவளை மாதிரி ஏமாத்துற ஆளுங்க சேர்ந்த இந்த சமூகம். கொலை செஞ்சவங்களை விட, கொலை செய்ய தூண்டினவங்களுக்கு தான் அதிக தண்டனை. அப்படின்னா என்னை கொலைகாரனா மாத்தின இவளுக்கு தானே தண்டனை கொடுக்கனும்? என்ன வர்ணா உனக்கு தானே தண்டனை கொடுக்கனும்? இந்த மாதிரி குற்றத்திற்கு இந்த பசுபதியோட நீதி மன்றத்தில் என்ன தண்டனை தெரியுமா? மரணம்..!” என ஒரு மாதிரியானக் குரலில் சொல்லிவிட்டு அவன் கெக்கலிக் கொட்டி சிரிக்க, பசுபதியின் அரக்கத்தனமான சிரிப்பு மட்டுமே அந்த இடத்தை சில நொடிகளுக்கு ஆக்கிரமித்திருந்தது.

 

 

 

 

அதே நேரம், மெல்ல மெல்லமாய் அவன் சிரிப்பு மறைய, கண்களில் கொடூரமான பாவம் குடியேற, அந்த அறையின் மூலையில் பழைய பொருட்களின் நடுவே, பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்தவன் மேகவர்ணாவை நோக்கி வந்தான்.

 

 

 

 

 

பசுபதியின் அசுர கரத்தினுள் அடைக்கலமாகியிருக்கும் கத்தியைப் பார்த்ததும், கட்டிப் போடப்பட்டிருந்த மூவரின் முகமும் அச்சத்தை அச்சுப் பிசுகாமல் பிரதிபலித்தது. வாள் போன்று நீண்டு நுனியில் சில வளைவுகளுடன் அமைந்திருந்த அந்தக் கத்தியைப் பார்த்ததும்,

 

 

 

 

“ப்ளீஸ் பசுபதி! யாரையும் எதுவும் பண்ணிடாதே! ப்ளீஸ்..!” என்ற மேகவர்ணாவின் கெஞ்சல் அவன் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை.

 

 

 

 

“இவனைக் கொன்றால் நீ அழுவ தானே வர்ணா? உனக்கு இவனை ரொம்பப் பிடிக்கும் இல்ல? முதலில் இவனைக் கொல்லவா? இல்லை அவனைக் கொல்லவா? சாய்ஸ் இஸ் யுவர்ஸ் வர்ணா!” எனச் சொன்னபடியே அவன் காத்தவராயனை நெருங்க,

 

 

 

 

“ஆத்தாடி! ஆத்தா! முதல் பலி நான் தானா? அடேய் அரசி மயனே! இவன் என்னைக் கொன்னுருவான் போலடா.! கத்தியைப் பார்க்கவே பயமா இருக்கே? மொட்டை சார், மொட்டை சார்! எனக்கு இரத்தத்தைப் பார்த்தாலே பயம், இரத்தம் வராமல் கொல்ல முடியுமா ப்ளீஸ்.? முன்னே பின்னே சாவைப் பார்த்ததில்லையே? சாவு இப்படி முடி இல்லாமல் மொட்டையா வரும்ன்னு நான் கனவில் கூட நினைக்கலையே?” எனக் காத்தவராயன் புலம்பிக் கொண்டிருந்த அதே நேரம், உதடுகளில் கோணல் சிரிப்பும், கண்களில் மயக்கமுமாய், பசுபதி கத்தியுடன் நெருங்க, சிரமப்பட்டு தன் கரத்தினை கட்டிலிருந்து விடுவித்துவிட்டு வீரபத்ரன் எழுந்து நிற்கவும் சரியாக இருக்க, பசுபதி வீரபத்ரனை நோக்கி கத்தியை இறக்கவும் சரியாக இருந்தது.

 

 

 

****

 

 

இங்கே நடந்துக் கொண்டிருந்த விபரீதங்களை அறியாமல், தங்கள் மகிழுந்தில், அம்மாப்பட்டியை ஒட்டினாற் போல் இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தனர் போஸ்பாண்டியும் அவனது உடன் பிறப்புகளும்.

 

 

 

“போஸூ! அந்தக் காட்டுக்குள்ளே எங்கிட்டு போய் தேடறது? நம்ம தங்கச்சிக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு. இந்த பசுபதி பரதேசி என்ன செஞ்சு வச்சிருக்கானோ?” என்ற இராஜபாண்டியின் குரலுக்கு,

 

 

 

 

“நம்ம பெரியம்மாப்பட்டி பக்கத்தில் இருக்கிற காட்டுப் பகுதின்னா, பழநிக்கு போற வழியில் இருக்கிற காட்டுப் பகுதியாகத்தேன் இருக்கும். பாலாறு டேம் ஒட்டினாற் போல் வருமே அதுவான்னு சந்தேகமா இருக்கு! அந்தப்பக்கம் கொஞ்சம் உள்ளாற போனோம்ன்னா, ஆனைமலை வரை போற கிளைப் பாதை ஒண்ணு இருக்கு. அந்தப் பக்கம் யானைகள் நடமாட்டம் இருக்கும்ன்னு நம்ம ஃபாரஸ்ட் ஆஃபீஸர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன்.!” என முத்துப்பாண்டி பதில் சொல்லவும்,

 

 

 

 

“பழநி மலை வரைக்கும் அந்த பசுபதி போயிருப்பானா போஸண்ணே?” என மூத்தவனிடம் கேள்வி கேட்டான் இராஜபாண்டி.

 

 

 

 

“போயிருக்க வாய்ப்பு இருக்கு. நம்ம பழநி மலையும் மேற்குதொடர்ச்சி மலைதேன். அதோட, கொடைக்கானல் வரையுமே இந்த மலை நீண்டுதேன் கெடக்கு. ஆனால் சரியான நேரத்தில் ஞாபகப் படுத்தின முத்துப்பாண்டி. நம்ம ஃபாரஸ்ட் ஆஃபீஸருக்கு ஃபோனை போட்டு விவரத்தை சொல்லி வை. ஆள் நடமாட்டம், கார் எதுவும் போச்சான்னு கேளு!” எனச் சொல்லியபடியே போஸ்பாண்டி வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க, முத்துப்பாண்டி வனத்துறை காவலருக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்க, மூவரின் செவியையும் தீண்டியது அந்தச் சத்தம்.

 

 

 

 

“இராஜபாண்டி உனக்கு அந்தச் சத்தம் கேட்டுச்சா?”

 

 

 

“எனக்கு ஒண்ணும் கேட்கலியே போஸண்ணே!” 

 

 

 

 

“ஏன்டா முத்து! உனக்கு எதாச்சும் சத்தம் கேட்டுச்சு?”

 

 

 

“நான் ஃபோனில் பேசிட்டு இருந்தேனே, எனக்கு ஒண்ணும் சத்தம் கேட்கலியே?” முத்துப்பாண்டியும் பதில் சொல்ல,

 

 

 

“நம்ம கருப்பனோட, கழுத்துமணிச் சத்தம் போல கேட்டுச்சு! ஒருவேளை அவனை ஒத்தைக்கு விட்டுப்புட்டு வந்துட்டோம்ங்கிற நினைப்பில் சத்தம் கேட்டுச்சோ என்னவோ?”

 

 

 

“கருப்பன் இம்புட்டு தூரம் வர்ரதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைண்ணே! அவனுக்கு நம்ம வீட்டையும் காடுகரையையும் விட்டால் ஒண்ணும் தெரியாது. அவந்தேன் பழக்கமில்லாத எல்லைக்கெல்லாம் போக மாட்டானே?” என முத்துப்பாண்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மூவரின் செவிகளுக்கும் அந்த மணிச்சத்தம் கேட்டது.

 

 

 

 

“எங்களுக்கும் கழுத்து மணிச் சத்தம் கேட்குதே!” என இராஜபாண்டியும், முத்துப்பாண்டியும் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், வாகனத்தின் குறுக்கே, கழுத்து மணிகள் குலுங்க, முதுகுத் திமில் அதிர, முன்னங் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கழுத்துச் சதை கருப்பனின் அதீத வேகத்தில் அசைய, அவனைக் கட்டியிருந்த கயிறு தரையில் உரசிக் கொண்டிருக்க, தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தான், கருப்பன் எனும் காளை.

 

 

 

 

“ஏய் கருப்பு நில்லுடா! அடேய் கருப்பா எங்குட்டு போறடா? நில்லுடா!” போஸ்பாண்டியின் குரலைக் கேட்டும் கூட, கருப்பனின் ஓட்டம் நிற்கவில்லை.

 

 

 

 

“இவன் என்ன இந்தப் பக்கமா ஓடுறான். ஒண்ணும் சரியா படலையே?” என முணுமுணுத்தபடியே, வாகனத்தை கருப்பன் செல்லும் திசையை நோக்கி செலுத்தினான் போஸ்பாண்டி.

 

 

 

 

“என்னத்துக்கு வண்டியை இந்தப் பக்கமா திருப்புறீக? நாம தங்கச்சியை தேடிப் போகணும்ண்ணே!” என அவசரமாய் மொழிந்தான் முத்துப்பாண்டி.

 

 

 

 

“அங்கண பாரு! கருப்பன் திரும்பிப் பார்த்துக்கிட்டே நிற்கிறியான், நம்மளை அவனைத் தொடர்ந்து வரச் சொல்றான்னு நினைக்கிறேன்.!” என போஸ்பாண்டி சொல்ல, அவர்களின் மகிழுந்து கருப்பனைத் தொடர்ந்து பயணிக்கவாரம்பித்தது.

 

 

 

*****

 

 

“அழகரு! நாமபாட்டுக்கு எங்கே போறோம், என்ன ஏதுன்னு தெரியாமல் வந்துட்டோம்! எப்படி வீராவை கண்டு பிடிக்கிறது.?”

 

 

 

 

“அவனோட ட்ரோன் கேமிராவோட லொக்கேஷன் எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியும். எங்க ரெண்டு பேர் ஃபோன் மூலாமாகவும் ட்ரோனை ஆப்ரேட் பண்ண முடியும். டிஜி ஃப்ளை (Dji fly) மூலமாக இரண்டு டிவைஸில் கனெக்ட் ஆகியிருக்கு. நான் சொல்ற வழியில் நீ வண்டியை மட்டும் ஓட்டு நெடுமாறா!” தெளிவாகவே சொன்னான் துடிவேல் அழகர். அவனிடம் தெளிவான திட்டமும் இருந்தது. 

 

 

 

நெடுமாறன் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க, அலைபேசியின் மூலமாய், யார் யாரையோ தொடர்புக் கொண்டு விபரம் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட இடத்திற்கான விபரங்களையும் பகிர்ந்தான். அது மட்டுமில்லாமல், பசுபதி பற்றிய முழு விபரங்களையும் சேகரித்து, காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்திருந்தான். எல்லாவற்றிற்கும் காரணம் துடிவேல் அழகரின் அனுபவம். தான் தேன்நிலவிற்காக கொடைக்கானல் சென்ற போது, அங்கே நடந்த நிகழ்வுகள் முன் அனுபவமாக அமைந்து, அவனைச் சரியாக திட்டமிட்டு யோசிக்க வைத்தது.

 

 

 

 

“போலீஸ் சரியான நேரத்திற்கு வந்துடுவாங்கன்னு நினைக்கிறியா அழகரு? ஒருவேளை வரலைன்னா? அந்த பசுபதி எப்படிப்பட்டவன்னு நமக்கு எதுவுமே தெரியாது. நாம ஏதாவது செய்யப் போய் ஏடாகூடமாய் எதாவது நடந்துட்டா?” குரலில் தெரிந்த தடுமாற்றத்துடனே கேள்வி கேட்டான் நெடுமாறன்.

 

 

 

“நடக்காதுன்னு நம்புவோம் நெடுமாறா!”

 

 

“நீ ஆஸ்பத்திரியில் படுத்திருந்தப்போ நம்ம குடும்பம் பட்ட பாடு எனக்குதேன் தெரியும் அழகரு. நம்ம அப்பத்தாவுக்கு வேற வயசாகிடுச்சு. எதாவது ஒண்ணுன்னா தாங்கிப்பாங்களான்னு தெரியலை அழகரு.!”

 

 

 

 

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது வீரா மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு! அப்பறம் இன்னொன்னும் ஞாபகம் வச்சிக்க, நம்ம அப்பத்தா ஒண்ணும் அம்புட்டு லேசுப்பட்ட மனுஷி இல்லை. எவ்வளோ தாண்டி வந்துட்டாங்க! எதை வேணும்ன்னாலும் பார்த்துடலாம்ங்கிற வலு அவங்கக்கிட்டே இருக்கு. வயசு உடம்புக்கு தானே தவிர, மனசுக்கு இல்லை.” தன்னைச் சுற்றியுள்ளவர்களை நன்கு அறிந்தவனாய் பேசினான் துடிவேல் அழகர்.

அதே நேரம் அழகரின் அலைபேசி ஒலியெழுப்ப, திரையில் தெரிந்த “கரு கரு” என்றப் பெயரைப் பார்த்ததும் இதழ்களில் புன்னகை மலர,

 

 

 

“சொல்லுடி கரு கரு! அம்மாப்பட்டியைக் கூட இன்னும் நெருங்கல, அதுக்குள்ளே மாமன் நெனைப்பு வந்துடுச்சாக்கும்?”

 

 

 

“அழகரு!” என்ற அவளின் சிணுங்கலில் அவனின் சன்னச் சிரிப்பு, கொஞ்சம் பெரிதாக விரிந்தது.

 

 

 

“என்னடி கிறுக்கச்சி?!”

 

 

 

“வீ.. வீராவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல? அவனைப் பத்திரமா கூட்டிட்டு வந்துருவல்ல அழகரு.?” தொண்டை அடைக்க அவள் கேட்பது அவள் குரலிலேயே அவனுக்குப் புரிந்தது.

 

 

 

“அதெல்லாம் உன் கொழுந்தனுக்கு ஒண்ணும் ஆகாது. அவனையும், அவன் மயிலம்மாவையும் பத்திரமா வீடு வந்து சேர்த்துடுவேன் போதுமா? கண்டதையும் யோசிச்சு விசனப்படட்டு கிடக்காமல், நல்லா சாப்பிட்டு ஓய்வெடு. அப்பறம் புள்ளை பொறந்துட்டா கண்ணுறங்க நேரமே இருக்காது.!”

 

 

 

“ம்க்கும்! நான் இராவெல்லாம் முழிச்சுக் கிடப்பேன்னு கனவு காணாதே! பகலில் நான் பார்த்துப்பேன். இராத்திரியில் நீதேன் நம்ம புள்ளையை உறங்க வைக்கணும். நாங்க மட்டும் முழிக்கணுமாம் இவரு தூங்குவாராம். இதெல்லொம் ஓரவஞ்சனை சொல்லிப்புட்டேன்.!”

 

 

 

 

“அம்புட்டு தானே? எம் மவளை நான் பார்க்காமல் யார் பார்ப்பா? நானே தூங்க வைக்கிறேன் போதுமா? இப்போ நீ போய் எதையும் நினைக்காமல் ஓய்வெடு. சாப்பிட்டியா?” அக்கறையாய் அந்த அவசர நேரத்திலும் கேட்டான்.

 

 

 

“ம்ம்ம்!”

 

 

 

“வாயைத் திறந்துதேன் பதில் சொல்லேன் டி?!”

 

 

“உன் புள்ளைக்கு மட்டுமில்லை உனக்கும் சேர்த்து சாப்பிட்டேன் போதுமா? நீ வீராவையும், வர்ணாவையும் பத்திரமாய் கூட்டியாந்திரு அழகரு. நான் ஒருத்தி இங்கண இருக்கேன் மறந்துடாதே! பார்த்து சூதானம்!” ஆயிரம் பத்திரம் சொல்லி கருவிழி இணைப்பைத் துண்டித்த அதே நேரம், அம்மாப்பட்டியை நெருங்க நெருங்க, வீரபத்ரனின் ட்ரோனிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த, சிக்னல் கொஞ்சம் கொஞ்சமாய் தடைபட்டு, தடைபட்டு மீண்டும் வந்தது.

 

 

 

“அழகரு! சிக்னல் வீக்கா இருக்கு. காட்டுப் பகுதி பக்கத்தில் வர வர நெட்வொர்க்கே இல்லை. இப்போ எப்படிப் போகப் போறோம்?”

 

 

 

 

“பக்கத்தில் ரிசர்வ்டு ஃபாரஸ்ட் இருக்கிறதால் சிக்னல் கிடைக்கலை. எப்படியும் நம்ம கண்ணுக்கு எதிரே தெரியுற காட்டுக்குள்ளே இருக்கிற இடத்தில் ஏதாவது ஒரு இடமாகத்தான் இருக்கணும்! குறுக்கு வழியில் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா வீரா வர்ணாவோட சேர்த்து காத்தவராயனையும் கடத்தியிருக்கலாம்ன்னு தோணுது. எதாவது பெரிய வண்டியாகத்தேன் இருக்கணும். பெரிய வண்டி சின்ன பாதையில் நுழைய முடியாது. கொஞ்ச தூரம் முன்னால் போ, டயர் மார்க்ஸ் இருக்கான்னு பார்ப்போம்!” எனச் சொன்னவன்,

 

 

 

“ஹலோ! நான் அழகர் பேசுறேன் டா.! ஒண்ணுமில்லை ஒரு சின்ன விஷயம்! உன் ஹெல்ப் வேணும்! நான் ஒரு ஃபோன் நம்பர் தர்ரேன். அது கடைசியாய் எந்த டவர் ரேஞ்சில் கனெக்ட் ஆகிச்சுன்னு சரியான லொக்ஷன் எனக்கு வேணும்.!” என அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசினான்.

 

 

 

“சரி! சரி! ஒரு பத்து நிமிஷத்தில் திரும்பக் கூப்பிடுறேன்.!” எனச் சொல்லி அணைத்தான்.

 

 

 

“யாரு அழகரு? யார்கிட்டே பேசினே?”

 

 

 

“வேற யாரு நம்ம கூட படிச்ச பயலுகதேன். அவசர ஆத்திரம்ன்னு கேட்டால் உதவி செய்வானுங்க!” எனச் சொன்னான். அவன் சொன்னபடியே அடுத்த பத்து நிமிடங்களுக்குள்ளேயே, அவர்கள் இருக்குமிடம் தெரிந்துவிட, மூலிகைச் செடிகளின் வாசம் மணக்கும், அந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது அவர்களின் வாகனம்.

 

 

 

****

 

 

 

பசுபதி கத்தியை ஓங்கிக்கொண்டு வரவும், வீரபத்ரன் எழுந்து நிற்கவும் சரியாக இருக்க, எழுந்த வேகத்தில், தன் ஓட்டு மொத்த பலத்தையும் திரட்டி, நெருங்கி வந்த பசுபதியை வேகமாய் தள்ளிவிட்டான் வீரபத்ரன். வீரபத்ரன் தள்ளிய வேகத்தில், அந்த அறையின் இன்னொரு மூலையில், தலை வேகமாக மோத போய் விழுந்தான் பசுபதி. விழிந்த வேகத்தில், தலையில் அடிபட்டு பசுபதிக்கு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி,மேகவர்ணாவையும், காத்தவராயனையும் பிணைத்திருந்த கட்டுக்களை அவிழ்த்துவிட்டு,

 

 

 

 

“இங்கண இருந்து வெளியில் போங்க! முதலில் ஓடுங்க! இந்தா என் ஃபோன்! சீக்கிரம் போங்க!” திறந்திருந்த கதவின் வழியே, அவர்களை வெளியேறும்படி அவசரப்படுத்தினான் வீரா.

 

 

 

 

“நான்.. நான்.. நீ வராமல் போக மாட்டேன் வீரா.! நாம சேர்ந்தே போய்டுவோம் வீரா! வா, ப்ளீஸ்..!” அவன் கரம் பிடித்து இழுத்தாள் மேகவர்ணா.

 

 

 

 

“பைத்தியமா டி! அவன் எழுந்திருச்சுட்டான்! அவன் சுதாரிக்கிறதுக்குள்ளே போய்த் தொலையேன்டி! நான் அவனை திசை திருப்பிட்டு பின்னால் வர்ரேன்.!” என வீரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உதிரம் வழிந்த முகத்துடன், கத்தியைக் கையில் பிடித்தபடி, பசுபதி மேகவர்ணாவை நோக்கி வர, இதை முன்னரே உணர்ந்து மேகவர்ணாவைத் தள்ளிவிட்ட காத்தவராயனோடு சேர்த்து தள்ளிவிட்ட வீரபத்ரன், பசுபதி ஓங்கியக் கத்தியை தன் இடக் கையால் பிடித்திருந்தான். கத்தியின் கூரான முனை அவன் கரத்தைக் கிழிக்க, சொட்டு சொட்டாய் உதிரம் வேகமாய் வடியத் துவங்கியது.

 

 

 

 

“ஐயோ வீரா! இரத்தம்!” சத்தமாய் அலறிய மேகவர்ணா, அவசர அவசரமாய் கண்களால் துழாவி, கையில் ஒரு கட்டையைப் பிடித்தபடி எழுந்தவள், தன்னால் தூக்க முடியாத அந்தக் கட்டையை வெகு சிரமப்பட்டு தூக்கி, அதீத கோபமும், ஆத்திரமும் மேலோங்க, பசுபதியின் கரத்தில் ஓங்கி அடித்திருந்தாள். அவள் அடித்த வேகத்தில், பசுபதியின் கரம் கத்தியை கீழே தவறவிட, அது க்ளிங் என்ற சத்தத்துடன், அந்த சிமெண்ட் தரையில் விழுந்து மோதியது.

தன்னை அடித்த மேகவர்ணாவை உற்றுப் பார்த்த பசுபதி,

 

 

 

“இவனை அடிச்சா உனக்கு வலிக்குதே வர்ணா?! உன்னோட கண்ணீர், இந்த அழுகை, இந்தக் கோபம் எல்லாமே என்னை இன்னும் கொஞ்சம் பைத்தியக்காரனா மாத்துது வர்ணா!” எனச் சொன்னபடியே வில்லச் சிரிப்பு சிரித்தவன், மேகவர்ணாவை பார்த்தபடியே, வீரபத்ரனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருந்தான். 

கரத்திலிருந்து வழிந்த உதிரத்தில் கவனம் வைத்திருந்த வீரபத்ரன், சூழலை உணர்ந்து சுதாரிக்கும் முன்னமே, வீரபத்ரனின் கழுத்தைப் பிடித்து தன் தலைக்கு மேல் தூக்கியிருந்தான் பசுபதி.

 

 

 

“வீரா!”

 

 

 

“வீராவை விட்டுடு ப்ளீஸ்..!”

 

 

 

“அடேய்! காய்ஞ்சு போன மொட்டைத் தலையா, அவனை விடுடா!” கையில் கிடத்ததை வைத்து அடித்து பசுபதியின் கவனத்தைத் திருப்ப முயன்றுக் கொண்டிருந்தனர், மேகவர்ணாவும், காத்தவராயனும்.

 

 

 

கால்கள் இரண்டும், அந்தரத்தில் மிதக்க, மூச்சுக்காற்றுக்கு தவித்து, தொண்டைக் குழல் இறுகுவதை உயிரோடு இருக்கும் போதே உணர்ந்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன். நேரம் போகப் போக பசுபதியின் பிடி இறுக, கண்கள் மேல்நோக்கி சொருக, ஒருவேளை செத்துவிடுவோமோ? என்ற எண்ணம் அவன் மூளைக்குள் பளிச்சிட்ட அந்த தருணத்தில், மேகவர்ணாவின் கண்ணீர் சுமந்த முகம் அவன் கண்களுக்குள் வந்து போனது. அந்த நொடி மனதிலௌ முடிவெடுத்தவனாய், தன் குரல்வளை பசுபதியின் கரங்களில் நசுங்கிக் கொண்டிருக்கும், அந்த தருணத்திலும், வெகு பிராயத்தனப்பட்டு, தன் கால்களின் உதவியால், பசுபதியின் மார்பில் ஓங்கி மிதித்தான். இரண்டு மூன்று முறைகள் முயற்சியின் பின், வீரா மிதித்த வேகத்தில், நிலை தடுமாறி பசுபதி கீழே விழ, அவன் பிடியும் தளர்ந்திருந்தது. பசுபதியின் பிடியிலிருந்து விடுபட்ட வீரபத்ரன், தன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, வேக மூச்சுக்கள் எடுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்றான்.

 

 

 

“வீரா! வீரா! உனக்கு ஒண்ணும் ஆகலையே?”

 

 

 

 

“அடேய்! வீரபத்ரா! என்னமாவது பேசுடா! பயந்து வருது!” வர்ணாவும், காத்தவராயனும், வீரபத்ரனின் மீது கவனம் வைத்திருந்த அந்த நேரத்தில், விழுந்த வேகத்தில் திரும்ப எழுந்து, கத்தியைக் கையில் எடுத்தபடி, வீராவைக் குத்துவதற்கு சத்தமில்லாமல் பின்னால் வந்துக் கொண்டிருந்தான் பசுபதி.

அதே நேரம் வாகனங்கள் வெளியே வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், பசுபதியின் கவனம் சிதறியது. அவன் புருவங்கள் மூக்கின் மேலே இடுங்கியது. கண்களும், காதுகளும் கூர்மையானது. கத்தியை அவன் கரம் இறுகப் பிடிக்க, அந்தக் கட்டடத்தை விட்டு வெளியே வந்து, அவன் கூர்மையாய் அந்தச் சூழலை ஆராய்ந்துக் கொண்டிருக்க, அந்த நொடியில், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, காத்தவராயன் வீராவைத் தோளில் தாங்கிய படி, வெளியேறுவதற்கு தயாராய் நின்றிருந்தான்.

 

 

 

 

வெளியே யாருமே இல்லை, என்பதை உறுதி செய்தவனாய், உள்ளே திரும்ப முயன்ற அந்த நொடி, பசுபதியின் செவிகளுக்குள் மணிச்சத்தம் கேட்டது. வேகமும், அவசரமுமாய், வெளியே திரும்பிய பசுபதியின் வயிற்றில் இறங்கியது கருப்பனின் கூர்மையான கொம்புகள். பசுபதியின் கரம் கத்தியைத் தவறவிட, பசுபதி சுதாரிக்கும் முன்னமே, அவனைத் தன் கொம்புகளால் குத்தி தூக்கி வீசியிருந்தது கருப்பன். கழுத்து மணிகள் அசைய, அவனைக் கொம்புகளின் உதவியால் திருப்பி திருப்பிப் போட்டது. அவனோ கண்கள் சொருக எழ முடியாமல் கிடக்க, குடல் சரிந்து உதிரம் கொப்பளித்தது.

 

 

 

 

கழுத்துமணியின் ஓசை கேட்டு “கருப்பா!” என வேகமாய் மேகவர்ணா ஓடிவர, சின்னக் குழந்தை போல், அவள் மூக்கோடு மூக்குரசி, நாவால் அவள் முகம் வருடி குழந்தையாய் நின்றது கருப்பன். கொம்புகளில் ஒட்டியிருந்த பசுபதியின் உதிரம், மேகவர்ணாவின் முகத்திலும் பட்டும் படாமல் ஒட்டியது அவளுக்கு திலகமிட்டதைப் போல்.. அவள் பின்னால், காத்தவராயனின் தோளில் சாய்ந்தபடி நின்றிருந்த வீராவின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை அரும்பியது. 

 

 

 

 

“இந்த அஞ்சறிவு ஜீவனுக்குளே எம்புட்டு பாசம் பார்த்தியா காக்காவிரட்டி! என் மயிலம்மாவை மீட்டு தந்திருக்கான் இந்தக் கருப்பன்.!” மூச்சை இழுத்துப் பிடித்து வெகு சிரமப்பட்டு நெகிழ்வுடன் வீரபத்ரன் பேசிய அதே நேரம், தூரத்தில் கேட்ட வாகனத்தின் இரைச்சல் மிக அருகில் கேட்டது.

வரும் போதே, ஆம்புலன்ஸ், காவல் துறை, என அனைவரையும் சேர்த்தே அழைத்து வந்திருந்தான் துடிவேல் அழகர். காளை மாடான கருப்பனை தவற விட்டு கொஞ்சம் தாமதமாய் வந்து சேர்ந்தனர் போஸ்பாண்டியும் அவனது சகோதரர்களும்.

 

 

 

வீரபத்ரனுக்கு முதலுதவி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பசுபதியின் அரகுறை உயிருடன் கிடந்த உடல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

 

 

“போஸ்பாண்டி நல்ல வேளையாய், நீங்க ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட்க்கு தகவல் சொன்னீங்க! மரண தண்டனைக் கைதியைத் தப்பிக்க விட்டுடோம்ன்னு பயங்கர ப்ரஷர். இப்போவும், இவன் மனநிலை சமநிலை இல்லாமல் தான் இவன் கொலையெல்லாம் பண்ணுறான்னு யாராவது மனு கொடுத்துடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தோம். தேங்க் காட் அப்படி எதுவும் இல்லை.!” என்றவர்,

 

 

 

 

“குட் வொர்க், மிஸ்டர்.துடிவேல் அழகர், நீங்களும் சரியா யோசிச்சு, திட்டமிட்டு செயல்பட்டீங்க!” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

 

“என் கருப்பன், என் கருப்பனை ஒண்ணும் பண்ணிட மாட்டீங்களே?” அவசரமாய் இடையிட்டாள் மேகவர்ணா.

 

 

 

“நோ மேம்! காட்டு மாடு முட்டிடுச்சுன்னு கேஸ் எழுதியாச்சு. உங்க பேர் எதுவுமே இதில் வராது. இது சொக்கேசன் ஐயா குடும்பத்திற்காக பர்ஸ்னலா நான் செய்றது!” எனச் சொல்லிவிட்டு அந்தக் காவல் அதிகாரி விடை பெற்ற அதே நேரம், தயங்கியபடி, நின்றிருந்தனர், போஸ்பாண்டியும், அவனது தம்பிகளும்.

 

 

 

 

“நான் சொன்னபடி உங்க தங்கச்சியை உங்க கையிலேயே ஒப்படைச்சுட்டேன். என் தம்பிக்கும், வர்ணாவுக்கும் கல்யாணம் பண்ணணுமா? வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க! பொண்ணை வளர்த்தவங்க உங்களுக்கு பொண்ணு வாழ்க்கையில் முடிவெடுக்கிற உரிமை இருக்குதுதேன். ஆனால் புள்ளை மனசில் என்ன இருக்குதுன்னு தெரிஞ்சுட்டு முடிவெடுங்க!” எனச் சொல்லிவிட்டு, வீரபத்ரனையும், காத்தவராயனையும் அழைத்துக் கொண்டு நெடுமாறனோடு கிளம்பியிருந்தான் துடிவேல் அழகர்.

 

 

 

*****

சில வருடங்களுக்கு பின், 

 

 

 

“வீரா! வீரா! எம்புட்டு நேரமா எழுப்பிட்டே இருக்கேன். மருதைக்குப் போகணும். எழுந்திரு. அத்தை ஆறேழு தடவை ஃபோன் போட்டுட்டாக! நீ மட்டும் இப்போ எழுந்திருக்கலை நான் மட்டும் ஒத்தைக்குப் போயிருவேன் சொல்லிப்புட்டேன்.!”

 

 

 

“அதெல்லாம் நீ என்னை விட்டு ஒத்தையில் போக மாட்ட மயிலம்மா! அம்புட்டு தைரியமெல்லாம் உனக்கு இல்லை.!” என்றவன் அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து, அவள் இதழ்களில் தன் மீசையடர்ந்த உதடுகளைப் பதித்தான்.

 

 

 

 

“ச்சீ! பல்லு விளக்காமல், இதென்ன காலையிலேயே! ஒழுங்கா எழுந்திரு வீரா!”

 

 

 

 

“அஞ்சு நிமிஷம் டி! விடிய விடிய ஸ்க்ரிப்ட் எழுதிட்டு காலையில் தானே டி தூங்கினேன். கொஞ்ச நேரம் விடேன்.!”

 

 

 

 

“நீ எப்போ ஸ்க்ரிப்ட் எழுதினே?” யோசனையோடு புரியாமல் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

 

“நான் பேனா நீ பேப்பர்

கதை எழுதாமல் விடுவேனா

இரவென்ன பகல் என்ன

கதை முடிக்காமல் போவேனா?!” குறும்பாய் கண் சிமிட்டி சிரித்தபடி பாடலாகவே பாடினான் வீரபத்ரன்.

 

 

 

“காலையிலேயே பேச்சைப் பாரு! எருமை மாடு! உனக்கெல்லாம் கொழுப்பு அதிகமாகிடுச்சு.!”

 

 

 

 

“பின்னே என்னடி, இப்படி ஓவர் டைம் பார்க்காமல், வயித்துக்குள்ளே இப்படி குட்டி வீராவோ, குட்டி மயிலம்மாவோ வந்திருக்குமா? உனக்காக வீட்டோட மாப்பிள்ளையாய் வந்திருக்கிற என்னை சோதிக்காத மயிலம்மா! இப்படி அழகா நீ பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் என்னென்னவோ தோணுது!” என்றவன் அவளின் ஐந்து மாத வயிற்றை மென்மையாய் வருடி, லேசாக மேடிட்ட வயிற்றில் முத்தம் வைத்தான்.

 

 

 

“இப்போவெல்லாம் உன் புள்ளைக்கு மட்டுந்தேன் முத்தம்! எனக்கு இல்லையா?!” எனக் கேட்டு வாங்கிக் கொண்டாள் வீரபத்ரனின் வர்ணமானவள்.

 

 

 

“ஏன் வர்ணா, என்னை உனக்கு எப்போ பிடிச்சுச்சு? நான் இங்கே வரும் முன்னவே என்னை உனக்குத் தெரியும் தானே?”

 

 

 

 

“கல்யாணம் முடிச்சு பிள்ளையெல்லாம் பிறந்த பின்னால் கேட்க வேண்டியது தானே?” எனச் சலித்துக் கொண்டவள்,

 

 

 

 

“நீ முதன் முதலில் ஒரு குறும்படம் எடுத்து ரிலீஸ் பண்ணியே, அதில் ஹீரோவோட ஃப்ரெண்ட் கேரக்டரா வருவ. அப்போவே உன் மேல் எனக்கு ஒரு சின்ன க்ரஷ். உன்னை அதுக்குப் பிறகுதேன் ஷோஷியல் மீடியாவில் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கருவிழி அக்கா கிட்டே பேசி, ஃப்ரெண்டாகி உன்னைப் பத்தி எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் நீ என் சொந்தக்காரனாய் இருப்பேன்னு நானே எதிர் பார்க்கலை. உன் கல்யாணம் நின்னப்போ கூட, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.!” நிஜமான வருத்ததுடன் கடைசி வரியைச் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

 

“எனக்கு முதலில் பார்த்த பொண்ணு, நான் ஒரு யூ-ட்யூபர்ன்னு தெரிஞ்சதால்தேன் கல்யாணத்தை நிறுத்திப்புட்டு போனாள்.ஆனால் நீ அதையே பாஸிட்டிவ்வா பார்க்கவும், அந்த நொடியிலேயே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஐ லவ் யூ மேகா!” மென்மையாய் அவள் கரம் பற்றிக் கொண்டான் அவன். அதே நேரம் கதவு தட்டப்பட்டது.

 

 

 

 

“முதலில் உங்க பெரிய அண்ணணுக்கு கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி, மத்தவிங்க ரெண்டு பேருக்கும், கல்யாணம் பண்ணி வச்சிடனும். அப்போதேன் கதவைத் தட்ட மாட்டாய்ங்க!” எனச் சொன்னபடியே கதவைத் திறக்க, இராஜபாண்டி தான் நின்றிருந்தான்.

 

 

 

“நீங்க கிளம்பிட்டீங்கன்னா போதும் மாப்பிள்ளை! எல்லாரும் புறப்பட்டுடலாம்!” எனச் சொல்லவும், 

 

 

 

 

“ஆமா! கருப்பன் எங்கே? அவனை இங்கண விட்டுப்புட்டு போய் அத்துக்கிட்டு மருதைக்கு வந்தாலும் வந்துடுவான்!” என வீரா கேட்க,

 

 

 

 

“அங்கிட்டு பாருங்க மாப்பிள்ளை, கழுத்து மணியை ஆட்டிக்கிட்டு, குட்டி யானையில் ஒய்யாரமாய் நிக்கிறியான் பாருங்க!” என இராஜபாண்டி சொல்ல, தங்கள் காதலின் முதல் பிள்ளையான கருப்பனை வாஞ்சையோடு பார்த்தான் வீரபத்ரன்.

 

 

 

அடுத்த சில நிமிடங்களில், வீரபத்ரன் கிளம்பி, வரவும் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாய் கிளம்பி மதுரையை நோக்கிப் பயணத்தைத் துவக்கினர்.

 

 

 

*******

 

 

“இந்தா நான் சொல்றேன்ல்ல? இறங்குறியா இல்லையா?”

 

 

 

“மாத்தேன்!”

 

 

 

“இறங்கு மா! என் தங்கமில்ல?”

 

 

 

“இல்லை! நீ பாத்தூ(பாட்டு) பாதினா மத்துந்தேன் நான் எங்குவேன் (இறங்குவேன்)” மழலையில் மிழற்றியது குழந்தை.

 

 

 

“பாப்பாதேன் கேட்கிறாளே, பாடினால் தான் என்ன?” அழகர், கருவிழியின் குழந்தையை முதுகில் சுமந்தபடி, மண்டியிட்டிருந்த காத்தவராயனைப் பார்த்துக் கேட்டாள் கயல்.

 

 

 

 

“இவிங்க ஆத்தா அப்பன், செஞ்சதெல்லாம் பத்தாதுன்னு, இந்த குட்டி பக்கியும் படாது பாடு படுத்துது!” எனப் புலம்பியவன்,

 

 

 

“சொல்லு பக்கி, என்ன பாட்டு பாட?”

 

 

 

“என் பேது பக்கி இல்ல தென்தல் (தென்றல்)! நீ யாதது சொன்னது பாத்து பாதணும்!” என அவன் சட்டைக் கலரைப் பிடித்துக் கொண்டு முதுகில் அமர்ந்தபடி குதூகலித்தாள் குழந்தை தென்றல்.

 

 

 

“ப்பா! நான் தான் பர்ஸ்ட்து! மாமாத்த சொல்லு!” அழகரையும் துணைக்கழைத்தாள் தென்றல்.

 

 

 

“ஏய்! என்னடி ரொம்பத்தேன் திமிருத்தனம் பண்ணுற? மாமா எம்புட்டு நேரந்தேன் முதுகில் சுமந்துட்டு திரிவாக? உனக்கு தென்றல்ன்னு வச்சதுக்கு பதில் புயலுன்னு வச்சிருக்கலாம். அலப்பறை தாங்க முடியலை. ரொம்ப திமிரு பண்ணிக்கிட்டு திரிஞ்ச, பொறந்த நாளுன்னு பார்க்க மாட்டேன். அடிச்சுப்புடுவேன்.!” கருவிழி மிரட்ட,

 

 

 

 

“புள்ளையை வையாதே விழி!” ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒரே குரலில் சொல்ல, தன்னை மீறி சிரித்துவிட்டாள் கருவிழி.

 

 

 

“எனக்கும் இப்படித்தேன் செல்லம் கொடுத்து கெடுத்துப்புட்டீக! இவளுக்கும் அதே மாதிரி ரொம்ப செல்லம் கொடுக்குறீக!” என கருவிழி சொல்ல,

 

 

 

 

“ரெண்டு வயசு பிள்ளை தானே விழி! வளர வளர சரியாகிடுவா! அடேய் காக்காவிரட்டி பயலே.. நீ யானை மாதிரி போ! பிள்ளை பாட்டு பாடட்டும்!” என அங்கயற்கண்ணி சொல்ல,

 

 

 

 

“போறேன் போறேன்.. இந்த நண்டு சிண்டுக்கு மத்தியில், முழியாங்கண்ணியோட அலப்பறை தாங்க முடியலை!” என்ற படியே குழந்தையைத் தூக்கிக் கொண்டு யானை போல் சவாரி செய்தான் காத்தவராயன்.

 

 

 

“எம்புட்டு நேரம் முட்டி போட்டுகிட்டு திரியறது? பாட்டு பாடு பக்கி!” எனக் காத்தவராயன் சொல்ல,

 

 

 

“யாரது சொன்னது மியாவ்வூ..!” என தென்றல் தன் மழலைக் குரலில் பாட,

 

 

 

“நான் தான் உங்கள் காத்தூ..!” எனக் காத்தவராயன் பதில் பாட்டு பாட, ஒட்டு மொத்த குடும்பமும் சிரித்தது.

 

 

 

“என் பொழப்பே சிரிப்பா சிரிக்கிது இவிங்க வேற சிரிக்கிறாய்ங்க!” என சலித்துக் கொண்டவன்,

 

 

 

 

 “அரைக்கால் படி சைஸில் இருந்துக்கிட்டு, என்னையவே ஆட்டி படைக்கிறியா பக்கி?” எனக் குழந்தையை கரங்களில் தூக்கி விளையாட்டுக் காட்டினான் காத்தவராயன். அவனுக்கும், கயலுக்கும் குழந்தை இல்லாத ஏக்கத்தை தீர்ப்பது என்னவோ, அழகரின் மகள் தென்றலும், நெடுமாறனின் மகன் ஆதித்தும் தான். என்னதான் வெளியே சடைத்துக் கொண்டாலும், தான் பெற்ற மகவுகளாகத்தான் பாவிக்கின்றனர் இருவரும்.

 

 

 

 

“அப்பறம்ண்ணே! எப்பபோ அம்மாபட்டிக்கு கிளம்புறதா இருக்கீங்க?” என்றபடி வந்து நின்றாள் மேகவர்ணா.

 

 

 

“என்னத்துக்கு தங்கச்சி, உன் அண்ணேங்க அந்த கொடுவா மீசைக்காரனுங்க கிட்டே மிதி வாங்கவா?” என காத்தவராயன் கேட்ட நொடி, போஸ்பாண்டியும் அவன் சகோதரர்களும் பின்னால் வந்து நிற்க,

 

 

 

“இது சும்மா.. விளையாட்டுக்கு..!” என மழுப்பினான் காத்தவராயன்.

 

 

 

“வரலைன்னா சொல்லு மயிலு, இவனைத் தூக்கிட்டு போயிருவோம். எங்க தங்கச்சி புள்ளைக்கும் உன்னையோட சேர்த்து நாலு அண்ணேங்க! வர்ணா புள்ளையை நீதேன் முதுகில் வச்சு யானை சவாரி சுமக்கணும். அதனால் புள்ளை பொறந்ததும் வந்துடனும்.!” போஸ்பாண்டி அதட்டலாய் சொல்ல, பயந்தபடியே தலையசைத்தான் காத்தவராயன்.

 

 

 

 

“சும்மா அவனைப் போட்டு மிரட்டாதீங்க டா! அவனும் நம்ம குடும்பத்தில் ஒருத்தன்தேன். நான் சொல்றது சரிதானே அரசி?” என நாச்சியப்பன் வினவ,

 

 

 

“சரித்தேன். எங்க புள்ளைங்க இக்கட்டில் இருந்தப்போ எல்லாம் இவந்தேன், உறுதுணையா கூடவே இருந்திருக்கான். நான் பெத்த புள்ளைங்க ரெண்டும் நல்லா இருக்கானுங்கன்னா இவன் மட்டுந்தேன் காரணம். நன்றியெல்லாம் சொல்லி பிரிச்சு வைக்க எனக்கு மனசு வரலை. நம்ம பிள்ளைக்கு நாமளே நன்றி சொல்லணுமா?” என அரசி சொல்ல,

 

 

 

“அரசிம்மா! இப்படியெல்லாம் பேசாதீக! எனக்கு கண்ணு வேர்க்குது!” எனக் காத்தவராயன் கலங்கிய குரலில் சொல்ல,

 

 

“காத்து மாமா! டூக்கு!” எனக் கையை நீட்டினாள் தென்றல். 

 

 

 

“மாமா தூக்குறேன் அழகி!” என குழந்தையைத் தூக்கியவன், தென்றலின் கன்னத்தில் முத்தம் வைக்க, குழந்தையும் அவனுக்கு தன் செப்பு இதழ்களால் முத்தம் வைக்க, நெகிழ்ந்து கரைந்து நின்றிருந்தான் காத்தவராயன். ஒருபுறம் அழகரும், மறுபுறம் வீராவும் தத்தம் இணையோடு நின்றிருக்க, நெகிழ்வும் நிறைவும் நிறைந்திருந்த இந்த தருணத்திலே, நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

 

 

                        ❤ நிறைந்தது ❤

 

கதையுடனும் என்னுடனும் தொடர்ந்து பயணித்த அத்தனை நல்லுள்ளங்களும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

 

 

என்றும் அன்புடன்..

 

சுசி கிருஷ்ணன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்