
“சித்தி… பசிக்குது!” அக்னிலா கேட்டதில், “இட்லி தரட்டாடா?” எனக் கேட்டாள் பவித்ராத்யா.
“ம்ம்ஹும் சாக்லேட்…”
“இப்ப தான கைல ஊசியை எல்லாம் கழட்டி இருக்காங்க. சாக்லேட் சாப்பிட கூடாதுடி தங்கம். டூ டேஸ்ல உடம்பு சரி ஆனதும் வாங்கித் தரேன் சரியா?” என மகளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
“அப்போ ப்ரவுனி?”
அவள் கேட்டதில், பவித்ராத்யாவின் முகம் கசங்கிப் போனது.
“சித்தி…” ஆடவனின் நினைவில் அசைவற்று நின்றவளை அக்னிலா தான் உலுக்கினாள்.
“ப்ரவுனி வேணும்” எனக் கேட்டதும், “வாங்கிட்டு வரேன்… நீ அதுவரை அம்மா ரூம்ல இரு” எனத் தூக்கி விட்டு திரும்பியவள் திகைத்தாள்.
அதே அறைக்குள் அவளது ரிப்போர்ட்டை எல்லாம் ஆராய்ந்தபடி நின்றிருந்தான் அக்னி வேந்தன்.
‘இவர் எப்போ வந்தாரு?’ என்ற திகைப்பில் இருந்தவளுக்கு ப்ரவுனியை பற்றிய தனது அதிர்வை பார்த்திருப்பானோ என்ற படபடப்பு வேறு.
அவனோ கோப்பை மூடி வைத்து விட்டு, அக்னிலாவைத் தூக்கியவன், “குட்டிமாவுக்கு எல்லாமே சரி ஆகிடுச்சாம். நம்ம வீட்டுக்குப் போகலாமா?” எனக் கொஞ்சினான்.
“அப்போ ப்ரவுனி வேணும்…”
“வாங்கிட்டா போச்சு. நம்ம போய் சாப்பிட்டு வரலாமா” என முத்தமிட்டவன், பவித்ராத்யாவின் இருப்பை எல்லாம் சட்டை கூட செய்யவில்லை.
அப்படியே நின்றிருந்தவளுக்கு பெருமூச்சு பரவியது. அவனருகில் இருந்து கொண்டு, அவனையும் காயப்படுத்தி தானும் காயப்படுவது ரணமாக வலித்தது. அவனது ஸ்பரிசமும் நேசமும் அக்கறையும் சமீப காலமாக அனுபவித்து தற்போது மொத்தமாக அந்த நேசம் உடைந்து போனதில் அவளுக்கு ஒரு விரக்தி நிலை தோன்றியது.
என்னவோ எதிலும் நாட்டமில்லை. மிட்டாயை கொடுத்து ஏமாற்றி பின் பறித்து விட்ட குழந்தையின் ஏக்கம்!
அவனுக்கும் அப்படி தான் வலித்திருக்கும் எனப் புரிந்தது. ஏதேதோ நினைவில் அதே நிலையில் தான் வெகு நேரமாக நின்றிருந்திருக்கிறாள்.
ப்ரவுனியை வாங்கி கேண்டீனிலேயே சாப்பிட்டு விட்டு இருவரும் வரும் வரையிலும் அவள் அசையக்கூட இல்லை போலும்.
“சித்தி…” அக்னிலாவின் குரலில் தான் சட்டென மீண்டவள், தன்னையே பார்வையால் ஊடுருவிக்கொண்டிருந்த ஆடவனின் சில நொடி பார்வைத் தீண்டலில் மருகிப் போனாள்.
“ப்ரவுனி வாங்கியாச்சா?” தட்டு தடுமாறி அவளிடம் பேச, “நான் சாப்பிட்டே முடிச்சுட்டேனே” என்றதில் அவளுக்கு தான் ஐயோ என்றானது.
இப்படியா பிடித்து வைத்த பிள்ளையார் போல நிற்பது!
அக்னி வேந்தன் வேறொரு தனி வீடு பார்த்துக் கொண்டிருந்தான். அதுவரையிலும் அக்ரம் இல்லத்திலேயே இருந்து கொள்ளலாம் என முடிவெடுக்க, அனைவருமே பொருள்களை எடுத்து வைத்துக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அந்நேரம் அக்னி வேந்தனுக்கு அழைப்பு வர, அவனது வக்கீல் தான் பேசினார்.
அக்னி பங்குகளை ஏமாற்றி எழுதி வாங்கி விட்டதாக, மனோஜ் வழக்கு பதிந்திருப்பதாக கூற, “நான் வந்து பார்க்குறேன்…” என்றவன்,
“விக்ராண்ணா பைனல் டச்சா அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஒரு குட்டு குடுத்துட்டு வரேன். நீங்க ஹோம்கு போங்க” என்று விட்டு விறுவிறுவென கிளம்பினான்.
பவித்ராத்யா தான் அவன் சென்ற திசையை யோசனையுடன் பார்த்தான்.
“அத்தான்… உங்க சித்தப்பா வேணும்னே கூட இப்படி பண்ணலாம். இவர் தனியா போறது சேப் இல்லையோன்னு தோணுது. எதுனாலும் போலீஸ் வர சொல்லி பார்த்துக்கலாம் தான?” எனத் தவிப்பாக கேட்க,
“அதை நீயே சொல்றது…” என்றான் புருவம் உயர்த்தி.
அத்துடன் வாயை மூடிக்கொண்டாலும், மற்றவர்கள் காதில் இந்த உரையாடல் எதுவும் விழவில்லை.
அக்ரம் இல்லத்தினுள் நுழைந்ததுமே விக்ரமிற்கு சொல்லொணா ஓர் நிம்மதி.
அவன் எண்ணியதை விடவும் இல்லத்தையும் அதில் இருந்த வசதிகளையும் செதுக்கி இருந்தான் அக்னி வேந்தன்.
அடுத்ததாக, அவன் கொண்டு வரப்போகும் திட்டங்கள் பற்றியும் கூறி இருந்தான் தான். ஆனால் அதற்கான வேலைகளை இத்தனை தூரம் மெனக்கெட்டு செய்திருப்பானென நினைக்கவில்லை.
தம்பியை மனதினுள் மெச்சிக்கொண்டவனுக்கு, ஏதோ ஒரு சுதந்திர காற்றை சுவாசிப்பது போல இருந்தது.
அத்தனை பேராசையுடன் அல்லவா இந்த இல்லத்தை உருவாக்கி இருந்தான்.
விக்ரமனின் மனதை உணர்ந்த திலோத்தமா அவன் கையை இறுக்க பற்றிக்கொண்டாள். அவளிடம் அவனது கனவு இல்லம் பற்றி பலமுறை பேசி இருக்கிறான். அதனை அக்னி கண்முன் கொண்டு வந்ததைக் கண்டு அவளுக்கும் அத்தனை நிம்மதி.
“சூப்பரா பண்ணிருக்கான்ல விக்ரம்…”
நிவேதா தான், “நானும் இங்க ஒரு தடவை தான் வந்துருக்கேன். அப்பாவும் அம்மாவும் சொல்லிருக்காங்க… சொந்த வீடு மாதிரி பீல் பண்ண வச்சுடுவான்னு. அவங்க சொன்னா பரவாயில்ல. தேவாரம் அப்பாவும் ஜெயசுதா அம்மாவும் அதே தான் சொல்லுவாங்க.” எனப் பெருமிதமாக கூறினார்.
அங்கு இருந்தவர்களுக்கு ஏற்கனவே பவித்ராத்யாவை தெரியும் என்பதால், அவளிடம் தான் நலம் விசாரித்தனர்.
“நீ யோகா க்ளாஸ்கு வரலைன்னு சொன்னதும், இங்க வரவே மாட்டியோன்னு நினைச்சோம்மா” என ஒரு பெரியவர் கூற, “அதெப்படி வந்து தான ஆகணும்” என தேவாரம் கிண்டல் செய்தார்.
அவரை முறைத்தவள், “பேச்செல்லாம் இருக்கட்டும். யோகா எல்லாம் ஒழுங்கா பண்றீங்களா?” எனக் கண்ணை உருட்டி மிரட்டினாள்.
ஜெயசுதாவோ, “யோகா பண்ண வந்த பொண்ணு எங்களை கழட்டி விட்டுட்டுப் போய்ட்டா, அதுனால இன்னும் லட்சணமா வேற யோகா டீச்சரை தேடலாம்னு இருக்கோம் இல்லடா ரம்மு” என அவர் பங்கிற்கு நக்கல் செய்ய,
“ஓஹோ வரட்டும் வரட்டும். ஒரு நாள் தாங்குறாங்களான்னு பார்க்கலாம்…” என்று சிலுப்பினாள்.
“ஏன் ஏன் தாங்க மாட்டாங்க?” ஜெயசுதா சண்டைக்கு வந்தார்.
“நீங்க பண்ற அலும்புக்கு என்னை மாதிரி பாவப்பட்ட ஜீவன் ஊர்ல ஒண்ணோ ரெண்டோ தான் இருக்குமாக்கும்”
“டார்லிங்… உன்னால பாவப்பட்ட ஜீவன் நாங்க தான் தெரியுமா. இப்படி அம்போன்னு எங்களை விட்டுட்டுப் போக பார்த்ததுக்கு…” என குருமணி குமுற,
“இதுக்கு மேல யோகாவே இல்லையே அங்கிள். எல்லாமே சொல்லிக் கொடுத்துட்டேன். இனி புதுசா தான் நான் யோகா உருவாக்கணும்” என உதட்டைப் பிதுக்கிட பெரியவர்கள் சிரித்தனர்.
அவர்கள் மட்டுமல்லாது, வேறொரு பெரியவர் வந்து அவரது உடல்நிலை பிரச்சினையைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, அவருக்கு எப்போதும் போல உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சி பற்றியும் கூறியவள், அங்கிருந்தவர்களிடம் இலயித்துப் போனாள்.
கூடவே, அக்னியிடம் ஒரு கோரிக்கை கொடுப்பதை பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பவித்ராத்யா நெளிந்தாள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் பேச?
இடைப்பட்ட நாள்களில், அவர்களுக்கு அங்கு தேவையான மற்றும் தேவைப்படும் சில விஷயங்களை பற்றியும் அவர்களிடம் கலந்து பேசி, அவர்களின் மனநிலையையும் மகிழச் செய்யும் பொருட்டு கேட்டு தெரிந்து கொள்வாள். அதனை அக்னியிடமும் சொல்லி, அவர்களது தேவைகளை சரியான முறையில் நிறைவேற்ற வைப்பாள். யோகா டீச்சர் என்பதையும் தாண்டி, அங்கு ஒரு முக்கிய அங்கமாக அவள் மாறி விட்டு தற்போது சட்டென அனைத்தையும் துண்டித்தது தான் அங்கிருந்தவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அவளைக் கண்டதும் மடை திறந்த வெள்ளமாகப் பேசினர்.
திலோத்தமா தான் தங்கையையே யோசனையாகப் பார்த்திருந்தாள். மனதில் எதுவோ உறுத்தியது.
வெறும் யோகா சொல்லிக் கொடுத்தப்பதாக தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் இங்கு அவள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, தனி உலகத்தில் வாழ்ந்திருக்கிறாளோ? என்ற குழப்பம் நேர்ந்திட, விக்ரமிற்கும் பவித்ராத்யாவின் ஈடுபாடு கண்டு பெருமை பரவியது.
விஜயா தான், பவித்ராத்யா சங்கடப்படுவதை உணர்ந்து, “சரி சரி எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம். எல்லாரும் போய் தூங்குங்க. நேரமாச்சுல” எனக் கூட்டத்தை கலைத்து விட்டார்.
நிவேதா தாயுடன் உறங்க ஆசை கொண்டு அவர் அறைக்குச் சென்று விட, மற்றவர்களுக்கு அங்கு தனி தனி அறை தயாராக இருந்தது.
விக்ரம் திலோத்தமாவை ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல, மற்றொரு அறையை பவித்ராத்யாவிற்கு காட்டினான்.
அக்னிலா உறக்கம் வருவதாகக் கண்ணைக் கசக்கியதில், “நான் என் ரூம்ல தூங்க வச்சுக்குறேன் அத்தான்…” என அவளைத் தூக்கிச் சென்றாள்.
இரவு நேரம் தாண்டியும் அக்னி வேந்தன் வராதது அவளது தவிப்பை அதிகப்படுத்தியது.
அறை வாயிலில் நடந்தபடி அக்னிலாவைத் தோளில் போட்டுகொண்டு உறங்க வைத்தவளின் விழிகள் கேட்டை தான் அலசியது.
அவள் உறங்கியதும் படுக்கையில் கிடத்தியவள், மணி பதினொன்றை தாண்டியும் குளிரில் கையை குறுக்கி கொண்டு வராண்டாவில் அங்கும் இங்கும் நடந்தபடி கேட்டையே தான் பார்த்திருந்தாள்.
‘இவர் எங்க போனாரு. இவ்ளோ நேரம் ஆச்சு…’ எனப் புலம்பல் வேறு.
“நீ இன்னும் தூங்கலையா?” விக்ரமின் குரல் கேட்டதில் வாரி சுருட்டி திரும்பியவள், “அது… அது தூக்கம் வரலை அதான் காத்து வாங்கலாம்னு வந்தேன் அத்தான்” எனத் திணறினாள்.
அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன், “கொட்டுற பனில உனக்கு காத்து மட்டும் வராது பவி ஜன்னியும் சேர்ந்தே வரும்…” எனக் கேலி செய்ய, அசடு வழிந்தவள், “நீங்க தூங்கலையா?” எனக் கேட்டாள்.
“நான் தூங்கிக்கிறேன் நீ ரூம்க்கு போ…” என்றிட,
அவளது விழிகளோ கேட்டை ஒரு முறை தழுவியது.
“கொஞ்ச நேரத்துல போறேனே…” கையைப் பிசைந்தவளிடம், “இன்னும் கொஞ்ச நேரம் இந்தக் குளுருல நின்னா மொத்தமாவே போய்டலாம்” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“போங்க அத்தான்” என சிணுங்கும் போதே அக்னியின் கார் சத்தம் கேட்க, அவசரமாக அவளது விழிகள் அவனைத் துழாவி நிம்மதி கொண்டது.
“சரி நான் தூங்க போறேன்…” என திடுதிடுவென அறைக்குள் ஓடி விட்டாள்.
விக்ரமிற்கு அவளது அலைப்புறுதலின் காரணம் விளங்கிட, புன்னகைத்தாலும் ஒரு சிந்தனையும் பரவியது.
‘இவ்ளோ தவிப்பை வச்சுட்டு ஏன் வேணாம்னு சொன்னா?’
அவனது சிந்தனையை கலைக்கும் வண்ணம் வந்தான் அக்னி.
“ரெஸ்ட் எடுக்காம பனில என்னண்ணா பண்ற?”
“அதுவா, ஒரு திருட்டுப் பூனை குட்டிப்போட்ட மாதிரி வராண்டாவையே சுத்தி சுத்தி வந்துச்சு. குட்டியை பார்த்ததும் தெறிச்சு ஓடிடுச்சு. அதான் அதை வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
ஒரு கணம் புருவம் சுருக்கியவன் விக்ரமின் கூற்று புரிந்ததும், எந்த எதிர்வினையும் காட்டாது “ரொம்ப முக்கியம். போய் தூங்குடா குட் நைட்” எனத் தனக்கென ஒதுக்கிய அறையில் சென்று கதவை அடைத்துக்கொண்டான்.
விக்ரம் ‘அதில்லடா’ என பேச ஆரம்பிக்கும்போதே அவன் புயலாக சென்றிருக்க, ‘ரெண்டும் ரெண்டு திசைல போகுதே சரி இல்லையே’ என்று நம்பியார் தோரணையில் அறைக்கு வந்தான்.
அருகில் விக்ரம் இல்லையென்றதுமே அப்போது தான் கண்ணயர்ந்த திலோத்தமா விழித்து அவனைத் தேட, அவன் உள்ளே வந்ததும் தான் படபடப்பு குறைந்தது.
“எங்க விக்ரம் போனீங்க? அகி வந்துட்டானா? ஒன்னும் பிரச்சினை இல்லையே” என அடுத்தடுத்து கேள்விக்கணைகளைக் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல திலோ. நீ ஏன் எந்திரிச்ச…” என்று அவளருகில் படுத்துக் கொண்டவன், அவளது தலையை தனது மார்பில் வைத்துக் கொண்டான்.
அவ்வரணைப்பில் நொடி நேரங்கள் கரைந்தவள், “போதும் விக்ரம். உங்களுக்கு கை நல்லா சரி ஆகட்டும். வலிக்கப்போகுது” என தலையணையில் படுக்கப் போக, “ப்ச் வலிக்கல திலோ. இப்படியே இரு ப்ளீஸ்” என்றதில், “எதுக்கு ப்ளீஸ் எல்லாம்…” என்று அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்.
விக்ரம் உறங்காமல் இருப்பதைக் கண்டு, “என்னாச்சு விக்ரம்? என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க” என வினவ,
“என் மச்சினிச்சி பத்தி தான்” என்றதில் அவள் தலையை உயர்த்திப் பார்த்தாள்.
“அவளைப் பத்தியா?”
“ம்ம்… அவள் ஏன் அகிக்கு நோ சொன்னா?” இக்கேள்வியில் திலோத்தமாவின் குற்ற உணர்வு அதிகரித்தது.
விக்ரமே தொடர்ந்து, “இத்தனைக்கும் அவளும் அவனை லவ் பண்ணிருக்கான்னு மொத்த ஹோமே சொல்லுது. அப்படி தான் ரெண்டு பேரும் லவ் பர்ட்ஸ்ஸா இருந்துருக்காங்க. பட் சட்டுன்னு லவ் பண்ணலைன்னு சொல்லிருக்கா. என்னவா இருக்கும்?” என தாடையைத் தேய்க்க, திலோத்தமா அதிர்ந்தாள்.
“நிஜமாவே பவி அகியை லவ் பண்ணுனாளா விக்ரம்?” அவளுக்கு வார்த்தையே வரவில்லை.
“மத்தவங்க சொல்றதை விடு. நானே பீல் பண்றேன். லவ் பண்ணாதவ தான் அவன் கட்டிப்பிடிச்சா சும்மா இருக்காளா… இப்போ அவன் வர லேட்டாகிடுச்சுன்னு கொட்டுற பனில பேய் மாதிரி நின்னுட்டு இருக்கா. மனசுல இருக்குறத சொல்ல என்ன தயக்கம் அவளுக்கு. நாளைக்கு நானே அவள்கிட்டே நேரடியா கேட்க போறேன். அப்படியும் அவள் ஏதாச்சு சமாளிச்சா, பார்த்துக்கறேன் அவளை…” என்றவன், கொட்டாவி விட்டபடி “குட் நைட் திலோ” என அவள் நெற்றியில் முத்தமிட்டு சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.
திலோத்தமா தான் அசைவற்று படுத்திருந்தாள்.
அவளிடம் பேச செல்லும்போது அவள் முகத்தில் இருந்த பூரிப்பும், புதுமையான சிகை அலங்காரமும் அப்போது தான் உறைத்தது.
அதன்பிறகு சுண்டிப்போன முகத்தை தனக்கு காட்ட விரும்பாதவளாக இருந்ததே அவளது நடவடிக்கை.
கடவுளே! என எழுந்தே விட்டாள்.
விடிய விடிய உறக்கம் தொலைத்தது என்னவோ அவள் தான்.
இங்கோ, அறைக்குச் சென்ற அக்னி வேந்தன் உடையை மாற்றி விட்டு, பவித்ராத்யாவின் அறைக்கு வந்தான்.
லேசாய் தட்டி விட்டு கதவைத் திறந்தவன் மடமடவென உள்ளே வர, அப்போது தான் படுக்கையில் விழப்போனவள் அவனைக் கண்டதும் திகைத்து எழுந்து அமர்ந்தாள்.
“என்… என்ன?” அவளது கேள்விக்கு பதில் கூறாதவனாக, கட்டிலுக்கு மறுபுறம் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அக்னிலாவிற்கு முத்தம் பதிப்பித்தவன், மீண்டும் திரும்பிப் பாராது வெளியில் சென்றிருந்தான்.
அவன் முகம் கண்ட நிம்மதியில் படுத்ததும் உறங்கியும் போனாள்.
தன்னைக் காணாது தவித்ததில் தானே, அவனாக வந்து தரிசனம் காட்டி விட்டுப் போனதும்!
திலோத்தமா பவித்ராத்யாவை தானே அவளது தோழி வீட்டில் விட்டுச் சென்றதை தெரிந்து கொண்டதுமே அவனுக்கு புரிந்து விட்டது.
அத்தனை நாள்களிலும் கண்களில் காதலை வழிய விட்டவள், எதற்காக தன்னை மறுத்தாளென்று.
ஜெயசுதா அவளைக் குத்தி பேசியபோதும் கூட தமக்கையை விட்டுக் கொடுக்கவில்லையே!
காதலை மட்டும் அவளுக்காக விட்டுக் கொடுத்து விடலாமா! உள்ளுக்குள் கனன்ற கோபத்துடன் படுக்கையில் விழுந்தான் அக்னி வேந்தன்.
மறுநாள் பொழுது நிவேதாவிற்கு அத்தனை நிம்மதியாக விடிந்தது.
இத்தனை வருடங்களும் போல, அலாரம் அடித்தது போல எழுந்து கழிவறைக்கு கூட செல்லாமல் அடுக்களைக்கு ஓட வேண்டிய அவசியம் இல்லை. மாமியாரின் குத்தல் பேச்சுக்கள் இல்லை. பொறுமையாக முகம் கழுவி விட்டு தாய் தந்தையைத் தேடி வெளியில் வந்தார்.
காலை காபியைக் குடித்தபடி, மரத்தினடியில் அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்.
“வா நிவேதா. நல்லா தூங்குனியா?” விஜயா கேட்டதும்,
“நிம்மதியா தூங்குனேன்மா” என்றார் புன்னகைத்து.
“எனக்கு இந்த இடம் ரொம்பவே பிடிச்சுருக்கு. அமைதியா மனசுக்கு இதமா இருக்கு. நானும் உங்களோடவே இங்க இருந்துடவா?” என்றதும் ஜெயசுதா அதட்டினார்.
“என்ன பேசுற நிவேதா. இப்ப தான் உன் மருமக பேத்தி கூட எல்லாம் நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. இங்க வந்து என்ன பண்ண போற? நீ உன் அப்பா அம்மாவையும் கூட்டிட்டுப் போய்டு”
“அகி வீடு பார்த்ததும் கண்டிப்பா கூட்டிட்டுப் போக தான் போறேன் சுதாம்மா. ஆனா இந்த மனசுக்கு இதமா இருக்குல்ல அதுக்காக சொன்னேன். அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு நாளாச்சு இங்க வந்து தங்கிடணும்…” என்றதும் குருமணியும் விஜயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நிவேதா… நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. நாங்க இங்கயே இருக்கோம்” விஜயாவின் கூற்றில் நிவேதா முறைத்தார்.
“கோபப்படாத நிவேதா. என் பேரன் என்ன எங்களை நடுத்தெருவுலயா விட்டான். நீயே பார்த்த தான, வீட்ல கூட கிடைக்காத வசதியும் நிம்மதியும் இங்க கொட்டி கிடக்கு. இங்க எங்களுக்குன்னு ஒரு சின்ன உலகத்தை உருவாக்கி வாழப் பழகிட்டோம். சொல்லப்போனா, இது எங்க வீடாவே மாறிடுச்சு. அதனால நாங்க இங்க இருக்குறது தான் எங்களுக்கு நிம்மதி…” நிவேதாவின் முகம் வாடுவதை உணர்ந்து,
“அப்போ அப்போ நாங்க வந்து இருக்கோம். வரமாட்டோம்னு சொல்லல. ஆனா, எங்க போனாலும் வீடு வந்து சேர்ந்த ஒரு நிறைவு இங்க வந்து தூங்குனா தான் வரும்…” என்றார் உள்ளார்ந்து.
அவரது மனநிலை புரிய, “சரிம்மா உங்களை போர்ஸ் பண்ணல. உங்களுக்கு எங்க தோணுதோ அங்க இருங்க. நீங்க வரும்போது தேவா அப்பாவையும், சுதா அம்மாவையும் கூட்டிட்டு வந்துடனும்” என்று அன்பு கட்டளை விதித்தார்.
திலோத்தமா வராண்டாவில் நகத்தைக் கடித்தபடி நின்றாள்.
விக்ரம் காபியுடன் அவள் அருகில் வந்தவன், “என்ன திலோ டென்ஷனா இருக்க ஓகே தான?” எனக் கேட்டதும், மையமாக தலையாட்டி வைத்தவள், அக்னி வேந்தனும் பவித்ராத்யாவும் அவரவர் அறையில் இருந்து ஒன்றாக வெளியில் வருவதை பார்த்தாள்.
அவனும் அவளும் அரை நொடிக்கும் குறைவாக பார்த்து விட்டு பின் பார்வையைத் திருப்பிக்கொள்ள, “அகி ஒரு நிமிஷம்” என நிறுத்தினாள் திலோத்தமா.
அதில் அக்னி நின்று விட, பவித்ராத்யா வேறேதோ பேச போகிறாளென எண்ணி வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, திலோத்தமா தன்னை அழைத்ததில் குழப்பமாக திரும்பினாள்.
“பேபி… நான் உங்கிட்ட ஒன்னு கேட்கணும்” திலோத்தமா தயக்கமாக ஆரம்பிக்க,
“என்னக்கா?” என்றாள் காற்றில் அசைந்தாடிய கூந்தலை அடக்கியபடி.
“நீ நிஜமாவே அகியை விரும்பலையா?”
அக்கேள்வியில் பவித்ராத்யா சற்றே அதிர, “ப்ச்” என எரிச்சலுற்று அக்னி கிளம்ப முற்பட, “அகி ஒரே நிமிஷம் ப்ளீஸ் என்றாள்” கெஞ்சலாக.
“இப்ப எதுக்குகா இது?” பவித்ராத்யா கையைப் பிசைந்தாள்.
“சொல்லு பவி. அன்னைக்கு நான் கேட்டப்ப நீ விரும்பலைன்னு தான சொன்ன…” என சொல்லிக்கொண்டே வந்தவள் சட்டென நிறுத்தி, “இல்ல… அன்னைக்கு உன் வாயில இருந்து நீ அவனை விரும்பலைன்னு சொல்லவே இல்லைல. அவன் ப்ரொபோஸ் பண்ணுனா வேணாம்னு சொல்லிடுறேன்னு தான சொன்ன…” என்றவளுக்கு நடுமண்டையில் அப்போது தான் உறைத்தது.
விக்ரம் கூர்மையுடன் “என்னைக்கு?” என வினவ,
பவித்ராத்யாவிற்கு சங்கட நிலை.
“பதில் சொல்லு பவி… நான் சொன்னதுக்காக தான் நீ அகியை வேணாம்னு சொன்னியா?” திலோத்தமாவின் குரல் நலிந்தது.
“அக்கா… இப்ப எதுக்குக்கா அது!”
“கேட்டதுக்கு நேரடியா பதில் பேசு பவிமா”
“ஐயோ விடு திலோ ப்ளீஸ்…” பவித்ராத்யா தடுமாறினாள்.
விக்ரமோ, “என்ன லூசுத்தனம் பண்ணுன திலோ?” எனக் கேட்க, திலோத்தமா நடந்ததை கூறியதும் விக்ரமிற்கு கோபம் கொப்பளித்தது.
“அறிவிருக்கா உனக்கு. வர்ற கோபத்துக்கு உன்னை அடிச்சா என்ன…” என ஓரடி முன்னே எடுத்து வைக்க, “டேய்” என்று அக்னி அதட்டினான். திலோத்தமா உதட்டை கடித்து அழுகையை அடக்க, விக்ரமோ திட்டித் தீர்த்தான்.
அவனது சத்தம் கேட்டு பெரியவர்களும் அங்கு கூடி விட்டனர்.
“உனக்கு பயம்னா அதை உன் வாழ்க்கைல மட்டும் தான் அப்ளை பண்ணனும். தங்கச்சியாவே இருந்தாலும் அவள் வாழ்க்கைக்குள்ள மூக்கை நுழைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு திலோ?”
“அத்தான்… ப்ளீஸ். அவள் எதுனாலும் என் நல்லதுக்கு தான் பண்ணுவான்னு…” பவித்ராத்யா முடிக்கும் முன்னே,
“எது இதுவா நல்லது? ஜஸ்ட் மிஸ் ஆகிருந்தா என் அப்பா உன்னை கொன்னுடுப்பாரு. அக்கா மேல பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்காக காதலை விட்டுக்கொடுத்து உன் அன்பை அர்பணிக்கணும்னு அவசியம் இல்ல” என்று கடிந்தான்.
பவித்ராத்யாவோ, “இதெல்லாம் நார்மலா நடந்துருந்தா கண்டிப்பா நான் அவள்கிட்ட ஆர்கியூ பண்ணிருப்பேன் அத்தான். அவள் வாழ்க்கையே சிக்கல்ல இருக்கும்போது, நானும் பிரச்சினையா வர வேணாம்னு தான்…
ஏற்கனவே உங்களுக்கும் எனக்கும் இருக்குற உறவை தப்பா தான் பேசுனாங்க. அவர் கூடவும் தப்பா தான் பேசுனாங்க. நான் இல்லைன்னா கூட, அட்லீஸ்ட் அவளை மட்டும் அக்செப்ட் பண்ணிக்க சான்ஸ் இருக்கு.
அது மட்டும் இல்லாம, ஏற்கனவே உங்க சித்தப்பா உங்களை டிவிஸ்ட் பண்ணி விட்டுட்டாரு. இதுல எங்க விஷயம் தெரிஞ்சு, உங்களை இன்னும் கஷ்டப்படுத்துனா என்னாலயும் எப்படி ஏத்துக்க முடியும் அத்தான். ஆரம்பத்துல இதெல்லாம் யோசிக்கல. திலோ சொன்னதும் தான் இதெல்லாம் யோசிச்சுருக்கணுமோனு தோணுச்சு. நான் முதல்லயே மறுத்துருக்கனும். ஆனா அதுக்காக, வேணும்னே நம்பிக்கை குடுத்துட்டு, ஒட்டி உறவாடிட்டு கழட்டி விடணும்னு நினைக்கல…” இறுதி வார்த்தையை சொல்லும்போது அவளை மீறியும் குரல் உடைந்து கண்ணீர் துளிகள் சொட்டுநீராக தரையில் விழுந்தது.
ஜெயசுதாவிற்கு தான் சங்கடமாகி போனது.
“என்னமா நீ… சும்மா உன் வார்த்தையை பிடுங்க தான் அப்படி சொன்னேன். இங்க யாரும் உன்னை அப்டி நினைக்கல பவிமா. சாரி…” சட்டென மன்னிப்பை வினவினார்.
“எதுக்கு ஆண்ட்டி சாரி எல்லாம். நான் ஜஸ்ட் சொன்னேன்…” என்றவள் தவறியும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனைச் சந்திக்க போதிய வலுவும் இல்லை.
திலோத்தமாவிற்கு ஐயோ என்றிருந்தது.
“சாரி பவி… நான் சத்தியமா உன்னையும் அவனையும் கஷ்டப்படுத்தணும்னு, வேணும்னே பிரிக்கணும்னுலாம் பண்ணல. பயமா இருந்துச்சு. விக்ரமை சாவோட விளிம்பு வரை கண்ணு முன்னாடி பார்த்தத என்னால மறக்க முடியல. அதே மாதிரி அகிக்கும் ஆகிடுமோன்ற பயத்துல தான் அப்படி சொன்னேன். அப்ப இருந்த மனநிலைல எனக்கு வேற வழி தெரியல சாரி பவி” எனத் திலோத்தமா உடைந்து விட, அவள் வாயை மூடியவள்,
“லூசு மாதிரி பேசாதக்கா. நீ விளக்கம் சொல்லலைன்னாலும் உன்னை எனக்குப் புரியாதா? நீ எவ்ளோ பயத்துல இருந்துருப்பன்னு அப்ப புரியலைன்னாலும் அதுக்கப்பறம் நல்லாவே புரிஞ்சுது. நீ வேணும்னுலாம் எதுவும் பண்ணல… விடுக்கா இதை” என்றாள் வருத்தமாக.
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், “சரி இன்னைக்கு மறுபடியும் கேட்குறேன். சமாளிக்காம பதில் சொல்லு. அகியை நீ விரும்புறியா?” என்றதில், விழிகளைத் தரையில் புதைத்தவள், “அது அவருக்கே தெரியும்” என்றாள் மென்மையாக.
விக்ரமால் அதற்கு மேலும் மனையாளின் மீது கோபம் கொள்ள இயலவில்லை. அவளது நிலை புரிந்தபிறகு குற்றம் சாட்டுவது வீண்.
தம்பியை திரும்பப் பார்த்தான். இந்த கலவரத்திற்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல சாவகாசமாக தூணில் சாய்ந்திருந்தான்.
“டேய் நீ ஏதாச்சு பேசுடா…” விக்ரம் தூண்டி விட,
“இங்க என்ன சட்டசபை கூட்டமா நடக்குது ஆள் ஆளுக்கு பேச. இந்தக் குட்டி சாத்தான் தான் ஏதோ வேலையை பார்த்துருக்குன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். இப்ப என்ன பண்ண சொல்ற?” என்றான் தோளை குலுக்கி.
“பவிட்ட பேசுடா”
“ஏதாச்சு அசிங்கமா சொல்லிட போறேன். அக்கா சொல்லிட்டா ஆட்டுக்குட்டி சொல்லிட்டான்னு என்னை அவாய்ட் பண்ண அவள் என்ன என்ன பேசுனா தெரியுமா. லவ் பண்ணா அதை தக்க வச்சுக்க தான் யோசிக்கணும். அவாய்ட் பண்ண காரணம் யோசிக்க கூடாது. இதை இப்படியே விட்டுரு…” என்று காட்டமாக கூற,
“ரெண்டு பேரும் விடு விடுன்னா எப்படி அகி… தப்பு என்மேல தான. என்னால தான் அவள் உன்னை கஷ்டப்படுத்துனா. உன் கோபத்தை என்மேல காட்டு” என்றாள் திலோத்தமா.
அவளை தீயாக முறைத்தவன், “நீ என் ப்ரெண்டா மட்டும் இருந்திருந்தா, இந்நேரம் கல்லெடுத்து மண்டையை உடைச்சுருப்பேன். அண்ணியா போய்ட்ட…” எனப் பல்லைக்கடிக்க, விக்ரமோ “எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லப்பா” என்றதில் திலோத்தமாவிற்கு விழி பிதுங்கி விட்டது.
“பரவாயில்ல உடைச்சுக்கோ…” கண்ணில் நீர் நிரம்ப நின்றவளிடம்,
“அடடா என் பொண்டாட்டி ஏசு நாதரையே மிஞ்சிடுவா. ஒரு பக்க தலையை உடைச்சா, மறுபக்க தலையையும் தானாவே காட்டுவா…” என விக்ரம் நக்கலடிக்க, “நீங்க அவனை ஏத்தி விடாதீங்க விக்ரம்” என்றாள் பரிதாபமாக.
அவள் தோள்மீது கைபோட்டுக் கொண்ட விக்ரம், “பாவம்டா என் பொண்டாட்டி. மன்னிச்சு விட்டுடு. ஏதோ அறியாத்தனமா பண்ணிட்டா” என அவள் கண்ணீரை தாள இயலாமல் கூற,
“இன்னும் நான் கல்லே எடுக்கல. அதுக்குள்ள சமாதானக்கொடியை பறக்க விடாதாண்ணா…” அக்னி சற்றே தளர்ந்து புன்னகைத்தான்.
“அப்போ ரெண்டு சமாதானக்கொடி காட்டுறேன். என் மச்சினிச்சிக்கும் சேர்த்து” என்றிட, அக்னி துப்பட்டாவின் நுனியை திருகியபடி நின்றிருந்தவளின் மீது பார்வையை பதித்தான்.
“எனக்காக யாரும் அவருகிட்ட பேச வேணாம்… கோபம் போற வரை வெய்ட் பண்றேன். இல்லனா இப்படியே விட்டுடுங்க…” சின்னக்குரலில் கூறியதில்,
“எனக்காக யாரும் வெய்ட் பண்ண தேவையில்ல…” அவனும் முறுக்கிக் கொள்ள, “சபாஷ் சரியான போட்டி” என்று விக்ரம் கைதட்டி இருவரையும் ஊக்கப்படுத்திட, திலோத்தமா முறைத்தாள்.
“இவள் ஸ்கூல் படிக்கைல இருந்தே இவனைத் திட்டிட்டே தான் இருப்பா விக்ரம். இந்த பணக்காரங்களுக்கு எல்லாம் கொம்பு இருக்கும். அவங்கட்ட எல்லாம் நம்ம பேசக்கூடாதுனு என்னையும் இவன்கிட்ட பேச விட மாட்டா. அதுனால தான் அவனை லவ் பண்ணலைன்னு சொன்னதும் நான் நம்பிட்டேன். அழுத்தக்காரி… என்னையவே நம்ப வச்சுட்டா”
“ஓ ஸ்கூல் படிக்கும்போது இருந்தேவா?” விக்ரம் பவித்ராத்யாவை ஆராய, அவளோ பதறினாள்.
“ஐயோ இல்லத்தான். உங்க வீட்டுக்கு வந்தப்ப ஒரு பொம்மையை எடுக்க போய் எதையோ தட்டி விட்டதுக்கு என்னை முறைச்சாரு… அப்பறமும் இவர் பர்த்டே பார்ட்டிக்கு வந்தப்ப அந்த தாய் கெழவி இவளை ரொம்ப மோசமா பேசுச்சு. அதுனால எனக்கு இவங்க ப்ரெண்ட்ஷிப் மேலயே கொஞ்சம் கோபம் இருந்துச்சு. பெர்சனலா எதுவும் இல்ல…”
“ஓஹோ கோபம் காதலா மாறிடுச்சோ?” நக்கல் குரலில் விக்ரம் வினவியதில், தானாக கன்னங்கள் மலர்ந்தது அவளுக்கு.
“அவரை ரொம்ப பிடிக்கும். என் வாயாலேயே பிடிக்கலைன்னு சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்னு நான் எதிர்பார்க்கல” தலையை தரையை நோக்கி புதைத்தவளுக்கு சொல்லொணா ஏக்கம்.
அவளைக் கண்டு விக்ரமிற்கும் திலோத்தமாவிற்கும் வருத்தம் நிறைந்தது.
திரும்பி தம்பியைப் பார்க்க, அவனோ பார்வையை இன்னும் அவள் மீது அழுத்தமாக ஊன்றினான்.
அதில் சத்தமின்றி பெரியவர்களை கலைத்து விட்டு, திலோத்தமாவை அறைக்கு அழைத்துச் செல்ல, இங்கோ அக்னி வேந்தனும் பவித்ராத்யாவும் மட்டுமே தனித்து இருந்தனர்.
போதை தெளியும்
மேகா
அடுத்த பதிவு ஃபைனல் டியர்ஸ்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
73
+1
5
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


💞💞💞💞💞💛💜