Loading

               சித்து தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க, அவனை அமைதிப்படுத்திய மகிழ், “அங்க விட இங்க வேலையும் கம்மி. அதோட சம்பளமும் அதிகம். அப்பறம் அந்த மாதிரி கிராமத்தை விட இங்க வசதி அதிகம் இல்ல. அதான் ஃப்ரண்ட் இங்க வேகன்ஸி இருக்குனு சொன்னதும் ஷிப்ட் ஆகிட்டேன். அவ்ளோதான்.” என்றாள்.

அவள் பதிலில் சில நிமிடங்கள் அதிர்ச்சி ஆனவன், “நீயா இப்படி பேசற?” எனக் கேட்டான். “ஏன் அபி இதுல எதுவும் தப்பு இல்லையே. சரி அதை விடுங்க. நீங்க எப்படி இங்க? இதுவும் உங்க ஆபிஸா? ஆனா வேற பேர்ல இருக்கா அதான் தெரியல.” என்றாள் மகிழ்.

அதற்குள் அவள் ஏதோ ஒரு காரணத்திற்காக உண்மையை மறைக்கிறாள் என நினைத்தவன் அதை பற்றி கேட்காமல், “ஆமா மகிழ். இங்கதான் நான் வேலை பார்க்கறேன். முதலாளியா இருந்து போர் அடிச்சதா அதான் கொஞ்ச நாள் இப்படி இருக்கலாம்னு.” என்றான் அவனும்.

“ஓ. ஓகே. ஓகே. சரி நீங்க ஏன் ரொம்ப நாளா காண்டாக்ட்லயே இல்ல. நம்ம ஃப்ரண்ட்ஸ் யாரையாவது பார்த்தீங்களா?” எனக் கேட்டாள் மகிழ். “இல்ல மகிழ். ஒரு வருஷம் முன்னாடி என்னோட ஃபோன் மிஸ்ஸாகிடுச்சு. அதோட நம்பரும் மாத்திட்டேன். அதான் யார்கிட்டயும் பேச முடியல.” என்றான் சித்து.

“ம்ம் சரி ஓகே கிளம்பலாமா?” எனக் கேட்க, “ஒரு நிமிஷம் இரு வரேன்.” என சென்றவன் திரும்பி வரும்போது கையில் இரு ரோஸ்மில்க் பாட்டில் இருந்தது. “பர்ஸ்ட் டைம் இங்க வந்து மீட் பண்ணியிருக்கோம். எதுவும் சாப்பிடாம போனா எப்படி?” என அவள் கையில் குடுத்தான்.

“நீ யார்க்கிட்டயும் பேசினியா?” என சித் அவளிடம் கேட்க, அவள், “இல்ல அபி நானும் நம்பர் மாத்திட்டேன். ஆறு மாசத்துக்கு மேல ஆகுது.” எனவும் சித்துக்கும் அது ஒருவித நிம்மதியை கொடுத்தது. “அப்பறம் ஹாஸ்டல்லயா ஸ்டே பண்ணியிருக்க?” என சித்து கேட்க, “இல்ல ஃப்ரண்டோட ரூம் ஷேர் பண்ணியிருக்கேன். இங்க பக்கம்தான்.” என்றாள் மகிழ்.

பிறகு அவளது முகவரி கேட்டு அவளை அங்கு இறக்கி விட்டவன்.. மறக்காமல் அவளது அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டான். அறைக்குள் வந்த மகிழிடம், “என்னாச்சுப்பா? ஏன் லேட்? ஏதாவது ப்ராப்ளமா?” எனக் கேட்டாள் அவளது தோழி அகல்யா.

மகிழ், “இல்லல்ல. என் ப்ரண்டை பார்த்துட்டு வந்தேன். எனக்கென்னவோ இனிமே எந்த பிரச்சனையும் வராதுனு தோணுது. வந்தாலும் பார்த்துக்கலாம்.” என உறுதியாக கூற, “யார்டி அது எனக்கு தெரியாத ஃப்ரண்ட்?” என அகல்யா கேட்க, “அதுவா. அபி. ஆபிஸ்ல பார்த்தேன்.” எனவும் அகல்யா அது உடன் வேலை பார்க்கும் பெண் தோழி என நினைத்துக் கொண்டாள்.

அவளை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தபோது, கவின் சமையறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருக்க, “என்னடா பண்ற?” எனக் கேட்டுக் கொண்டே எட்டிப்பார்த்தான் சித்து. “ம்ம். உப்புமா.” என கவின் கூற, “இது ரொம்ப தப்புமா.” என்ற சித்து, “ம்ம் சொல்ல மறந்துட்டேன்டா. நான் வெளிலயே சாப்பிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டு தூங்கு.” என்றான்.

கவின் “டேய். டேய். உன் கதை தெரியும்டா. நான் உப்புமானு சொன்னதும் நீ வெளில சாப்பிட்டு வந்தேனு சொல்ற. இன்னைக்கு என்ன விட்டுட்டு போனதுக்கு நீ அனுபவி.” என அவனை அமரவைத்தவன் உணவை எடுத்து வர, உள்ளே சப்பாத்தி தான் இருந்தது.

சித்துவிற்கு உப்புமா என்றால் சுத்தமாக பிடிக்காது. அதை அறிந்தே அவனுக்காக சப்பாத்தி செய்திருந்தான். அதை கண்டதும், “நண்பேன்டா.” என்ற சித்து உண்ண ஆரம்பித்து, “வேற எந்த வேலையும் இல்லனாலும் ஒரு கையேந்தி பவன் ஆரம்பிச்சாவது நாம பிழைச்சுக்கலாம்டா. உன் சமையலுக்கு.” என்றான்.

“தமிழ்நாட்ல விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரன்ல ஒருத்தன் நீ. நீ கையேந்தி பவன் ஆரம்பிக்க போறீயா. பேசாம சாப்பிடு” என்றான் கவின். “அதை நியாபகம் பண்ணாதடா. எனக்கு இந்த லைஃப் தான் பிடிச்சிருக்கு.” எனும்போதே கவினின் அலைபேசி ஒலித்தது.

சந்துரு தான் அழைத்திருந்தான். ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “சொல்லுங்க சார்” என கவின் கூற அவனை முறைத்தான் சித்து. “அண்ணா ப்ளீஸ். அம்மா ஏதோ சொல்லிட்டாங்கன்னு நீங்களும் இப்படி பேசாதீங்க.” என சந்துரு கூற, “சரி சொல்லு. என்ன விசயம்.” என்றான் கவின்.

“நான் இப்ப லண்டன்ல இருக்கேன். ஒரு பிஸினஸ் ட்ரிப்க்கு வந்தேன். அதான் உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையாவது பார்க்க முடியுமானு கேட்க பண்ணேன்.” என்றான் சந்துரு. “எதுக்குனு தெரிஞ்சுக்கலாமா?” என கவின் கேட்க, “வேற எதுக்குண்ணா. அண்ணா இங்க எதுவும் வந்திருப்பாரோன்னு தான்.” என்றான் அவன்.

“அதான் பாஸ்போர்ட் செக் பண்ணதுல பாரீன் எதுவும் போகலன்னு தெரிஞ்சிடுச்சே. அதெல்லாம் எதுவும் தேட வேண்டாம். அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. அவனாதானே போனான். அவனே வருவான். ஏன் இப்படி தேடறீங்க? அவன் மூலம் ஏதாவது காரியம் ஆகனுமா?” என சற்று காரமாகவே கேட்டான் கவின்.

“அப்படில்லாம் எதுவும் இல்லண்ணா. இது அண்ணா கஷ்டப்பட்டு உருவாக்குன கம்பெனி. அதை விட்டுட்டு எங்க போனாருனு தெரியாம, எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்குண்ணா. நானும் இங்க இருக்கனும்னு நினைச்சிருக்கேன். ஆனா எனக்கானதா அது மாறனும்னு ஒரு நாளும் யோசிச்சது இல்ல. ப்ளீஸ் அண்ணாவை எங்கையாவது பார்த்தா இங்க வர சொல்லுங்க. நாங்க வேணா வீட்ட விட்டு போய்ட்றோம்.” என்றான் சந்துரு.

“பார்த்தா சொல்றேன். நீ எங்கையும் தேடிட்டு இருக்காம உன் வேலையை முடிச்சுட்டு கிளம்பு. என்னைக்கா இருந்தாலும் அவன் வரத்தான் போறான். அதுவரை கம்பெனியை நல்லபடியா நடத்து.” எனக் கூறி வைக்க போனவன்,

சித்து ஏதோ சைகை காட்ட, “ஒரு நிமிஷம். ஆபிஸ் உன் கண்ட்ரோல்ல தானே இருக்கு. இல்ல.” என இழுக்க, அதை புரிந்து கொண்ட சந்துரு, “அவங்கள வர வேணாம்னு சொல்ல எனக்கு ரைட்ஸ் இல்லண்ணா. ஆனா மேனேஜ்மென்ட் என் கண்ட்ரோல்தான் இருக்கு.” எனக் கூறி வைத்தான்.

“என்னதான் நீ மனசுல நினைச்சிட்டு இருக்க? சந்துரு மேலயும் தப்பு இருக்குனு தோணுதா?” என கவின் சித்துவிடம் கேட்க, “கண்டிப்பா இல்லடா. சந்துருவும், சிந்துவும் என் மேல பாசமா தான் இருக்காங்க. ஆனா அவங்க தான் பகடைக்காயா இருக்காங்கன்னு அவங்களுக்கே தெரியல. நேரம் வரும்போது உனக்கே புரியும்.” என்று எழுந்து சென்றான் சித்து.

           சென்னையில், ஆகாஷ் அன்று வேலை முடிந்து கார்முகிலனுக்கு அழைப்பு விடுத்து இன்று அலுவலகத்தில் நடந்ததை கூற, “இவங்கதான் சித்தார்த்க்கு ஏற்கனவே பார்த்த பொண்ணா? இல்ல வேறவங்களான்னு தெரியலயே” என யோசித்தான் கார்முகிலன்.

“எனக்கும் அது தெரியல ப்ரோ. ஆனா சித்து இப்ப இங்க இல்லாம இருக்கறதுக்கு இவங்களும் ஒரு காரணமா இருக்கலாம். ஏற்கனவே கல்யாணம் பிடிக்காமதானே வீட்ட விட்டு வெளில வந்ததா சொல்லியிருந்தாரு.” எனக் கேட்டான் ஆகாஷ்.

“அது நடந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது. அதுக்கு அப்பறம் ஒன் இயர் எல்லாரும் அப்பப்ப பேசிட்டே தானே இருந்தோம். அதுவும் இப்ப ஆறு மாசமா தான் சித்தார்த் இங்க இல்லனா கண்டிப்பா வேற ஏதோ பிரச்சனையாதான் இருக்கும்.” என்றான் கார்முகிலன்.

“நீங்க அவங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் பார்த்தீங்களா?” என ஆகாஷ் கேட்க, “விசாரிச்சேன். அங்கையும் வரலயாம்.” என்றான் கார்முகிலன்.

“சரி. இவ்ளோ ரிஸ்க் எடுத்து அவரை தேடனுமா? நமக்கு அவர் ஃப்ரண்ட் தான் இல்லனு சொல்லல. இருந்தாலும் அவரோட பர்சனல் லைஃப்ல அவ்வளவா இன்வால்வ் ஆகறது நல்லா இருக்காதுல்ல?” என ஆகாஷ் கேட்டான்.

கார்முகிலன், “அப்படி இல்ல ஆகாஷ். யார்க்கிட்டயும் சொல்ல முடியாத ஏதாவது ப்ராப்ளமா கூட இருக்கலாம்ல. நம்ம ஹெல்ப் தேவைப்படலாம்.” என்றவன் வேறு ஏதேதோ பேசி மழுப்பியவன் ஃபோனை வைக்க, ஆகாஷூக்கு தான் அவன் எதையோ மறைப்பது போல தோன்றியது.

அப்போது வெளியே வந்த மகி, “ஆகாஷ் நீயும் நாளைக்கு வீட்டுக்கு வரீயா?” எனக் கேட்க, “எதுக்கு. நீ வாங்கின மாதிரி நானும் அந்தம்மா கிட்ட திட்டு வாங்கவா?” என்றான் ஆகாஷ் கிண்டலாக.

தன்னை கண்டுகொண்டானே என நினைத்தவள், “அப்படில்லாம் இல்ல. எங்க வீட்ல நாளைக்கு நிறைய ஸ்னாக்ஸ் செய்வாங்க. அதான்.” என்றாள் மகி. “ஸ்னாக்ஸ் எல்லாம் வரவங்க சாப்பிடதான் உனக்கு இல்ல. நாளைக்காவது ஏதாவது வேலை பண்ணு.” என்றவன் அங்கிருந்து கிளம்ப, மகியும் கிளம்பினாள்.

அடுத்த நாள் மதியம் மகி கிளம்பிவிட அதன்பிறகு அலுவலகம் வந்தான் சந்துரு. ராகினியை அழைத்து ஏதோ ஒரு ஃபைல் பற்றி கேட்க, அவளோ அது மகியிடம் ஏதோ ரெபரன்ஸ்காக குடுத்தாக கூறினாள். “சரி அதுனால என்ன? போய் வாங்கிட்டு வாங்க.” என்றான் சந்துரு.

அவள் வெளியே வந்து  மகியின் இடத்தில் தேடிப்பார்க்க அங்கு இல்லை. சரி மகிக்கே அழைத்து கேட்கலாம் என்றால் அவளுக்கு அழைப்பு செல்லவில்லை. மீண்டும் உள்ளே சென்றவள், “சார். அவங்க எங்க வைச்சிருக்காங்கன்னு தெரியல. இன்னைக்கு மதியம் அவங்க லீவ்ல போய்ட்டாங்க.” என்றாள் ராகினி.

“என்ன சொல்றீங்க? லீவா இருந்தாலும் ஃபைல் இங்கதானே இருக்கும். ஆமா அவங்க இப்பதானே ஜாயின் பண்ணாங்க. அதுக்குள்ள யாரை கேட்டு லீவ் போட்டாங்க. ஒன் மன்த் லீவ் எடுக்க கூடாதுனு ரூல்ஸ் இருக்குல்ல.” என்றான் சந்துரு.

“ஆமா சார். ஆனா அவங்க பர்மிஷன் தான் வேணும்னு கேட்டாங்க. மேடம்தான் லீவ் எடுத்துக்க சொல்லிட்டாங்க. அதான்.” என்றாள் ராகினி தயங்கியபடி. “ஓ. அப்ப ரூல்ஸை யாரும் ஃபாலோ பண்ண மாட்டிங்க. அப்படிதானே?” என திட்ட ராகினி, “அப்படில்லாம் இல்ல சார். அவங்க புதுசு.” என்க, “நாளைக்கு காலைல வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க.” என்றான் சந்துரு.

‘என்னடா இது. லீவ் குடுத்தது அவங்க. எடுத்தது இவ. ஆனா ரெண்டு பேரையும் விட்டுட்டு என்ன திட்டுறாரு பாஸூ. எனக்கே இப்படின்னா நாளைக்கு அவ தொலைஞ்சா. இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன்.’ என யோசித்துக் கொண்டே தன்னிடத்திற்கு வந்தாள் ராகினி.

அடுத்தநாள் அலுவலகம் வந்த மகியை பிடித்துக் கொண்டாள் ராகினி. “நேத்து ஃபோன் பண்ணப்ப ஏன் எடுக்கல. எவ்ளோ பிரச்சனை தெரியுமா?” எனக் கேட்க, “என் ஃபோன்ல ஏதோ நெட்வொர்க் பிராப்ளம் ராகினி. அதான் எடுக்கல போல.. என்னாச்சு..?” எனக் கேட்டாள் மகி.

“என்ன ஆச்சு.. நீ அந்த பக்கம் போனதும் சந்துரு சார் ஆபிஸ் வந்துட்டாரு. யாரைக் கேட்டு நீ லீவ் போட்டனு ஒரே திட்டு.” என்றாள் ராகினி. “நீ சொல்ல வேண்டியது தானே மேடமை கேட்டுதான்னு.” என மகி இலகுவாக கூற, “ஓ அப்ப உனக்கு விசயமே தெரியாதா? மேடம்க்கும், சார்க்கும் ஆகவே ஆகாது. அவர் இல்லாதப்ப தான் அவங்க வருவாங்க.” என்றாள்.

“ஓ. அப்ப நீ ஏன் அவங்ககிட்ட பர்மிஷன் கேட்க சொன்ன. இப்ப பாரு. எல்லாம் உன்னால தான். சார் ரொம்ப திட்டுவாரா?” எனக் கேட்டாள் மகி. “அடிப்பாவி. ஏதோ நீ கேட்டியேனு ஐடியா குடுத்தா. கடைசில நீ என்னையை மாட்டி விட்டுடுவ போலவே. எனக்கு என்ன தெரியும். சார் உடனே வருவாருனு.” என்றவள் அங்கிருந்து நகர, மகிதான் படபடப்புடன் காத்திருந்தாள் சந்துருவின் வருகைக்காக…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்