Loading

திடீரென காவல்துறையினர் வீட்டினுள் நுழையவும் அனைவரும் பதட்டம் அடைய, பிரபு அவர்களிடம் அவர்கள் வந்த காரணத்தை விசாரிக்கவும், “சஜீவ் சர்வேஷ்… நித்ய யுவனி… இவங்க உங்க பசங்களா?” என்ற காவல் அதிகாரியின் கேள்வியில் அனைவரையும் பயம் தொற்றிக்கொண்டது.

தம் பெற்றோரின் பெயரைக் கேட்டதும் விரானும் வியானும் ஆளுக்கு ஒரு பக்கம் தம் தாத்தாக்கள் இருவரையும் பிடித்துக்கொள்ள, எதுவும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த ஆத்யாவைத் தூக்கிக் கொண்டாள் ஜனனி.

ராஜாராம் பதட்டமாக, “என் பொண்ணும் மருமகனும் தான் சார்… என்னாச்சு? அவங்க நல்லா இருக்காங்கல்ல…” எனக் கேட்க, சில நொடி மௌனம் காத்த காவல் அதிகாரி, “சாரி சார்… உங்க பொண்ணும் பையனும் போன கார் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு…” என்கவும் அதிர்ச்சியில் அனைவரும் நெஞ்சில் கை வைத்தனர்.

பிரேம், “என்ன சார் சொல்றீங்க? அவங்களுக்கு என்னாச்சு?” என்க, “அவங்க போன கார் வேகமாக வந்த ஒரு லாரில மோதி ஆக்சிடன்ட் ஆகி பக்கத்துல இருந்த 100 அடி ஆழமுள்ள பள்ளத்துல விழுந்திருக்கு… விழுந்த வேகத்துலயே அவங்க கார் வெடிச்சதனால உள்ள இருந்த ரெண்டு பேருமே ஸ்பாட் அவுட்…” என காவல் அதிகாரி கூறவும், “ஐயோ என் புள்ள…” என வசந்தியும் ஈஷ்வரியும் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்க, விரானின், “தாத்தா…” என்ற குரலில் தன்னிலை அடைந்த பிரபு, “சார்… நீங்க ஏதாவது தப்பா சொல்றீங்கன்னு நினைக்கிறேன்… என் பையனுக்கும் மருமகளுக்கும் எதுவும் ஆகி இருக்காது சார்… அவங்க நல்லா இருப்பாங்க…” என்றார் உடைந்த குரலில்.

காவல் அதிகாரி, “சாரி சார்… நாங்களும் அப்படி இருக்கணும்னு தான் விரும்புறோம்… பட் எங்க ரெஸ்கியு டீம் இப்போ கொஞ்சம் முன்னாடி தான் கீழ இறங்கி செக் பண்ணிட்டு சொன்னாங்க… கார் வெடிச்சு கருகி போயிடுச்சு… எதுவுமே எஞ்சி இல்லன்னு சொன்னாங்க… அவங்க பாடி கூட இன்னும்…” எனத் தயக்கமாகக் கூறவும் அனைவருமே கதறினர்.

ஜனனி, “நித்து…” என ஆத்யாவை அணைத்துக்கொண்டு அழ, விரானும் வியானுமோ எதுவும் பேசவில்லை. முகத்தில் கூட எந்த உணர்ச்சியையும் காட்டாது எங்கோ வெறித்த வண்ணம் நின்றிருக்கவும் அவர்களைக் கவனித்த சித்தார்த்திற்கு பயமாக இருந்தது.

“வியான்… விரான்…” என சித்தார்த் கண்ணீருடன் அவர்களை அணைத்துக்கொள்ள, அவர்களோ கல் போல் சமைந்து நின்றிருந்தனர்.

அனைவரும் அழுவதைக் கண்டு சிறுவர்கள் கூட பயந்து தம் பெற்றோரிடம் வர, ஆத்யாவோ திடீரென வீரிட்டு அழத் தொடங்கினாள்.

அவளை சமாதானப்படுத்தக் கூட திராணியற்று அனைவரும் சஜீவ்வையும் நித்ய யுவனியையும் நினைத்து அழுது கொண்டிருக்க, மெதுவாக ஜனனியிடம் சென்ற வியான் ஆத்யாவைக் கேட்டு இரு கரங்களையும் நீட்டினாள்.

ஆத்யா உடனே தன் சகோதரனிடம் தாவிக்கொள்ள, தன் தங்கையைத் தூக்கிக்கொண்டு தம் அறையை நோக்கி நடந்தான் வியான். அவர்களைத் தொடர்ந்து விரானும் செல்ல, அதனைக் கவனிக்கும் மனநிலையில் கூட யாரும் இருக்கவில்லை.

காவல் அதிகாரி, “சார்… யாராவது ஒருத்தர் ஸ்பாட்டுக்கு வந்து கன்ஃபார்ம் பண்ணீங்கன்னா எங்களால ஃபர்தரா ஆக்ஷன் எடுக்க முடியும்…” என்க, “நாங்க வரோம் சார்… வீர்… நீங்க இங்க இருந்து எல்லாரையும் பார்த்துக்கோங்க…” என்ற ஹரிஷ் பிரேம், ஆரவ், சித்தார்த்துடன் விபத்து நடந்த இடத்துக்கு செல்ல, தாங்களும் வருவதாக அடம் பிடித்த பெண்களைக் கண்டித்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பிரபுவும் ராஜாராமும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஆண்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல, அங்கு ஏற்கனவே மக்கள் கூட்டம், மீடியா, காவல்துறை அனைவரும் கூடி இருந்தனர்.

உயர் அதிகாரி கண்ணால் ஏதோ கேட்கவும் காவல் அதிகாரி ஒருவர் அவரிடம் ஆம் எனத் தலையசைத்து விட்டு ஒரு திசையை நோக்கி கை காட்டவும் அவர் காட்டிய திசையில் அனைவரும் நடந்தனர்.

அங்கு கறுப்பு பொலித்தீனால் இரு இறந்த உடல்களை முழுதாக மூடி வைத்திருக்க, அதனைக் கண்டதும் ஆண்கள் அனைவரின் உள்ளமும் உடைந்தது.

காவலர் ஒருவர் அந்த பொலித்தீனை திறக்கவும் அதனைக் கண்டவர்கள் ஒரு நொடி கண்களை இறுக மூடிக் கொண்டனர்.

ஏனெனில் எரிந்த காரிலிருந்த கிடைத்த நித்ய யுவனியினதும் சஜீவ்வினதும் உடல் அடையாளம் தெரியாதவாறு முற்றாகவே கருகி இருக்க, இருவரின் கரங்களோ இறுதி நிமிடங்களில் கூட ஒன்றாகக் கோர்த்து இருந்தன.

காவல் அதிகாரி ஒருவர் ஏதோ கொண்டு வந்து தர, “நம்ம ரெஸ்கியு டீமுக்கு கிடைச்சது இந்த திங்க்ஸ் மட்டும் தான்… பார்த்து கன்ஃபார்ம் பண்ணுங்க சார்…” என உயர் அதிகாரி அதனைக் கொடுக்கவும் கரங்கள் நடுங்க அதனை வாங்கிப் பார்த்த ராஜாராமின் கண்கள் கலங்கின.

ஏனெனில் அவர் தந்தது நித்ய யுவனிக்கு சஜீவ் ஆசையாகப் போட்டு விட்ட மோதிரமும் சஜீவ் கட்டி இருந்த வாட்ச்சும் தான்.

“யுவனிம்மா…” என ராஜாராம் கதற, “சர்வா… ஐயோ…” என ஒரு பக்கம் பிரபு கதறினார்.

அதிர்ச்சியில் கண்ணீர் வடிய நின்ற பிரேம், ஆரவ், ஹரிஷ், சித்தார்த் நால்வருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. நித்ய யுவனியையும் சஜீவ்வையும் நினைத்து கண்ணீர் விடுவதா? இல்லை வயதான காலத்தில் பிள்ளைகளை இழந்து அழும் இவர்களை சமாதானப்படுத்துவதா? என்றே தெரியவில்லை.

ஆரவ் தான் ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு, “அப்பா… மாமாவைக் கூட்டிட்டு நீங்க வீட்டுக்கு கிளம்புங்கப்பா… நாங்க போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிச்சிட்டு வந்துடுறோம்…” எனப் பிரபுவிடம் கூற, “இல்லப்பா ஆரவ்… நாங்களும் வரோம்… என் பையன், மருமகளோட சாவுக்கு காரணமானவங்களை சும்மாவே விடக் கூடாது…” என்றார் பிரபு ஆத்திரமாக.

“இல்ல அங்கிள்… நாங்க அதைப் பத்தி விசாரிச்சிட்டு வரோம்… வீட்டுல எல்லாரும் நிதுவையும் சர்வேஷையும் நினைச்சி அழுதுட்டு இருப்பாங்க… நீங்க போய் அவங்களுக்கு ஆறுதலா இருங்க அங்கிள்…” என சித்தார்த் கூற, நண்பர்கள் அனைவரும் வற்புறுத்தவும் வேறு வழியின்றி பிரபுவும் ராஜாராமும் வீட்டிற்கு கிளம்பினர்.

தடயவியல் நிபுணர்கள் இன்னும் கார் விழுந்த பள்ளத்தாக்கை ஆராய்ந்து கொண்டிருக்க, சித்தார்த்தோ அந்த உயர் அதிகாரி தந்த நித்ய யுவனியின் மோதிரத்தையே பார்த்து கண் கலங்கிக் கொண்டிருந்தான்.

சஜீவ் நித்ய யுவனியின் பிறந்தநாளின் போது இருவரின் பெயரின் முதல் எழுத்து வருவது போல் பதித்து அவளுக்கு ஆசையாக போட்டு விட்ட மோதிரம் அது. சித்தார்த்திடமே பல தடவை அந்த மோதிரத்தைக் காட்டி மகிழ்ந்து உள்ளாள் நித்ய யுவனி. ஒரு தடவை கூட அவள் கரத்தில் இருந்து அதனைக் கழட்டியதில்லை.

சித்தார்த் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, “சார்… போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்தீங்கன்னா இந்த ஆக்சிடன்ட் பத்தி ஃபர்தரா விசாரிக்கலாம்…” என்ற காவல் அதிகாரியின் குரலில் தன்னிலை மீண்டவனுக்கு அந்த லாரி ட்ரைவரை அடித்து வீழ்த்தும் அளவுக்கு வெறி வந்தது.

************************************

“ஹஹஹஹா… ஹஹஹஹா… ஜெய்ச்சுட்டா… ஜெய்ச்சுட்டா… இந்த சுசித்ரா ஜெய்ச்சுட்டா…” என பைத்தியம் போல் அவ் அறையே அதிர சிரித்தாள் சுசித்ரா.

தன் மகளின் சிரிப்பை ரசித்தபடி மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தார் ரகுவரன்.

சுசித்ரா, “இந்த சுசித்ராவையே ஜெய்ல்ல போட்டீங்களா? பத்து வருஷம்… பத்து வருஷம் அதுக்குள்ள கஷ்டப்பட்டேன்… அதுக்கு காரணமானவங்களை சும்மா விட்டுருவேன்னு நினைச்சீங்களா? அதான் கொன்னுட்டேன்… ஜெய்ல்ல இருந்து வெளிய வந்ததுமே உங்க ரெண்டு பேரையும் ஒன்னாவே மேல அனுப்பிட்டேன்…” என மீண்டும் சிரித்தவள், “அப்பா… நீங்த கரெக்ட்டா செக் பண்ணீங்களா? அவங்க ரெண்டு பேரும் செத்துட்டாங்க தானே…” எனக் கேட்டாள் சந்தேகமாக.

ரகுவரன், “பாடி கூட எஞ்சி இருக்காது சுச்சி… அப்படியே கிடைச்சாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிஞ்சி போயிருக்கும்… பக்காவா ப்ளேன் போட்டு தூக்கினோம்… அந்த லாரி ட்ரைவர் கூட என்ன நடந்தாலும் நம்மள காட்டி கொடுக்க மாட்டான்… அப்படி காட்டி கொடுத்தா என்ன நடக்கும்னு அவனுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… நம்ம ஆளு ஒருத்தன் ஸ்பாட்ல இருந்து இப்போ தான் இன்ஃபார்ம் பண்ணான்…” எனக் குரூரப் புன்னகையுடன் கூற, ஒரு க்ளாஸில் மதுவை ஊற்றி தன் வாயில் சரித்த சுசித்ரா, “ஆனாலும் அந்த சர்வாவையும் நித்யாவையும் துடி துடிக்க வெச்சி கொல்லலயேன்னு கொஞ்சம் வருத்தமா தான் இருக்குப்பா… ஹ்ம்ம்ம்… எப்படியோ போய் சேர்ந்துட்டாங்க… அதுவரை சந்தோஷம் தான்… சரிப்பா… வாங்க போகலாம்…” என எழுந்தவளைப் புரியாமல் பார்த்தார் ரகுவரன்.

சுசித்ரா, “என்னப்பா பார்க்குறீங்க? உங்க தங்கச்சி வீட்டுக்கு தான்… பையனையும் மருமகளையும் இழந்து தவிக்கிறவங்களை இன்னும் கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்க வேணாமா? அதுவும் இந்த சுசித்ராவையே நம்ப வெச்சி ஏமாத்தின உங்க தங்கச்சை மட்டும் அவ்வளவு ஈஸியா விட்டுருவேனா?” எனக் கேட்டாள் விஷமமாக.

************************************

“என்ன சார் சொல்றீங்க? குடிச்சிட்டு ட்ரைவ் பண்ணி இருக்கானா? அவனை சும்மாவா விட்டீங்க?” என ஆவேசமாகக் கேட்டான் ஆரவ்.

காவல் அதிகாரி, “சீசிடீவி ஃபுட்டேஜஸ் எல்லாம் செக் பண்ணோம் சார்… குடிச்சிட்டு ட்ரைவ் பண்ணி தான் ஆக்சிடன்ட் பண்ணி இருக்கான்… நாங்க அந்த ட்ரைவரை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சிட்டோம்…” என்க,

“என்ன சார் சாதாரணமா சொல்றீங்க குடிச்சிட்டு ட்ரைவ் பண்ணி ஆக்சிடன்ட் பண்ணிட்டான்னு? எங்களோட ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இறந்து இருக்காங்க… உங்களால அவங்களை திருப்பி தர முடியுமா?” எனக் கேட்டான் ஹரிஷ் கோபமாக.

சித்தார்த்தும் பிரேமும் அவர்களை சமாதானப்படுத்த, “குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணுறது எல்லாம் இப்போ எல்லா இடத்துலயும் நடக்குது சார்… நாங்களும் எங்களால முடிஞ்ச அளவு வார்னிங் கொடுக்குறோம்… அப்படி கண்டு பிடிச்சா அரெஸ்ட் பண்றோம்… ஆனா இன்னுமே கை நீட்டி லஞ்சம் வாங்குற சில போலீஸ் இருக்காங்க… லஞ்சம் வாங்கிட்டு குடிச்சிட்டு வண்டி ஓட்டுறவங்களை ஈஸியா விட்டுருவாங்க… அதனால தான் இந்த மாதிரி ஆக்சிடன்ட் நடக்குது… போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கூட சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்ல… லாரி ட்ரைவருக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கும் சார்… ஆனா இதுக்கு மேல இந்த கேஸை வீணா இழுத்து அடிக்க முடியாது… சாட்சிகள் கூட இது ஒரு ஆக்சிடன்ட்னு தான் சொல்லுது… உங்க மன ஆறுதலுக்காக நான் இதைத் தனிப்பட்ட முறைல விசாரிக்கிறேன்… பட் என்னால உங்களுக்கு எந்த நம்பிக்கையும் தர முடியாது சார்…” என்றார் காவல் அதிகாரி.

************************************

ராஜாராமும் பிரபுவும் மனம் உடைந்தவர்களாக வீட்டிற்கு வர, “என்னங்க? என்னாச்சுங்க? அது நம்ம சர்வாவும் நித்யாவும் இல்ல தானேங்க… சொல்லுங்கங்க…” என ஈஷ்வரி பிரபுவைப் போட்டு உலுக்க, “ஏன்ங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? தயவு செஞ்சி சொல்லுங்க… பெத்த வயிறு பதறுதுங்க…” என வசந்தி கதற, அந்த துரதிஷ்டசாலித் தந்தைகளோ அழும் மனைவிகளைக் கூட சமாதானப்படுத்த திராணியற்று வாய் மூடி அழுதனர்.

அவர்களின் அழுகையே அனைவருக்கும் உண்மையை உரைத்து விட, “ஐயோ என் பசங்க…” என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதனர் ஈஷ்வரி மற்றும் வசந்தி.

தோழிகளும் சஜீவ்வையும் நித்ய யுவனியையும் நினைத்து ஒரு பக்கம் கண்ணீர் வடிக்க, அன்னைகளின் கதறலைக் கண்டு சிறுவர்களும் அழத் தொடங்கினர்.

காலையில் இருந்த சந்தோஷ மனநிலை மாறி அனைவரும் ஒப்பாரி வைத்து அழ, வசந்தியோ அழுது அழுதே இரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி விட்டார்.

உடனே ஜனனி ஒரு வைத்தியராக செயற்பட, “எல்லாம் நான் பண்ணின பாவம் தான்ங்க… என்னால தான் எல்லாமே… என் புள்ளையையும் மருமகளையும் சந்தோஷமா சேர்ந்து இருக்க வேண்டிய காலத்துல அவங்களை சதி பண்ணி பிரிச்சி கஷ்டப்படுத்திட்டேன்… இப்போ கொஞ்சம் காலமா தான் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சந்தோஷமா வாழ்ந்தாங்க… அது கூட பொறுக்கலயா அந்தக் கடவுளுக்கு? ஐயோ… நான் பண்ண பாவத்துக்கு என் உயிரை எடுக்க வேண்டியது தானே கடவுளே… ஏன் என் சர்வாவை என் கிட்ட இருந்து பிரிச்சீங்க?” எனத் தலையில் அடித்துக்கொண்டு கதறினார் ஈஷ்வரி.

“அம்மா…” என ஜீவிகா கண்ணீருடன் அவரை சமாதானப்படுத்த முயல, அவரோ சமாதானம் ஆன பாடில்லை.

வயதான காலத்தில் புத்திர சோகம் என்பது கொடுமையே. அதனைத் தான் அந்த பெற்றோர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

மரண செய்தி கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் எல்லாரும் வர ஆரம்பிக்க, மொத்த வீடும் கண்ணீரில் மூழ்கின.

சற்று நேரத்திலேயே காவல் நிலையம் சென்ற ஆரவ், பிரேம், ஹரிஷ், சித்தார்த் நால்வரும் வர, அவர்களைத் தொடர்ந்து நித்ய யுவனி மற்றும் சஜீவ்வின் உயிரற்ற உடல்களை ஏந்திக்கொண்டு அவசர ஊர்த்தி வந்தது.

“யுவனிம்மா…” “சர்வா…” எனக் கதறிக்கொண்டு ஈஷ்வரியும் வசந்தியும் வெளியே ஓட, அவர்களை நெருங்க விடாமல் செய்வது பெரும்பாடாக இருந்தது.

சடலங்களை வெள்ளைத் துணியால் முற்றாக மூடி ஹாலில் வைக்க, அதனைச் சுற்றி அமர்ந்துகொண்டு அனைவரும் ஒப்பாரி வைத்தனர்.

உடல்கள் அடையாளம் தெரியாதவாறு முற்றாக கருகி விட்டதால் ஒருவருக்குமே அதனைக் காணும் சக்தி இல்லாததால் யாருக்குமே திறந்து காட்டவில்லை. 

பிரியாவின் பெற்றோர் சிறுவர்களைக் கவனித்துக்கொள்ள, அவர்கள் இருந்த மனநிலையில் யாருக்குமே வியான், விரான், ஆத்யா பற்றிய நினைவு வரவில்லை.

சுற்றியும் பார்வையை சுழல விட்ட சித்தார்த் அவர்களைக் காணாது, “நிது பசங்க எங்க?” எனக் கேட்கவும் தான் நினைவு வந்தவர்களாக நண்பர்கள் அனைவரும் அவசரமாக சஜீவ், நித்ய யுவனியின் அறைக்கு ஓடினர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சியில் அனைவரின் கண்களும் கலங்கி விட்டன.

ஆத்யா அழுது அழுதே வியானின் மடியில் உறங்கி விட்டிருக்க, விரானும் வியானும் அவளின் இரு கரங்களையும் பற்றியபடி கண் மூடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தனர்.

பிரியா ஆத்யாவைத் தூக்க முயற்சிக்க, திடுக்கிட்டு விழித்த சகோதரர்கள் இருவரும் ஆத்யாவின் கரத்தை விடாது அழுத்தமாகப் பிடித்துக் கொண்டனர்.

அதனைக் காணவும் அனைவரும் இன்னும் உடைந்து போக, “விரு… வியு… வாங்க கீழ போகலாம்…” என பிரேம் அவர்களை அழைக்கவும் எந்த உணர்வுமே இன்றி அவர்களுடன் விரானும் வியானும் செல்ல, பிரியா ஆத்யாவைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினாள்.

ஹால் நடுவில் அனைவரும் சடலங்களைச் சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருக்க, தம் பெற்றோரின் உயிரற்ற உடல்களை நெருங்கி வியானும் விரானும் மண்டியிட்டு அமர்ந்தனர்.

“விரான் கண்ணா… உங்க அப்பு நம்மள விட்டுட்டு போய்ட்டான்ப்பா…” என ஈஷ்வரி கதற, விரானோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது மூடி இருந்த உடல்களையே வெறித்தான்.

வியான் சடலங்களை மூடி இருந்த துணியை விலக்கப் பார்க்க, “வியான் வேணாம்…” என அவனைப் பிடித்துக் கொண்டான் ஆரவ்.

ஆனால் வியானோ ஆரவ்வைத் தள்ளி விட்டு அந்தத் துணியை விலக்கவும் கருகியிருந்த உடலைக் கண்டு சுற்றி இருந்தவர்கள் கதற, “ஐயோ யுவனி… என் பொண்ணைப் பாருங்கங்க… சின்ன காயம் வந்தா கூட தாங்க மாட்டாளேங்க… இப்போ இப்படி இருக்காளே…” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழுதார் வசந்தி. 

வியானும் விரானுமோ ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாது தம் பெற்றோர்களையே வெறித்தனர்.

ஜனனியால் நித்ய யுவனியை அந் நிலையில் காண முடியாது முகத்தை மூடிக்கொண்டு அழ, அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பிரேம்.

திவ்யாவும் அஞ்சலியும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தனர்.

அனைவரின் அழுகை சத்தத்திலும் விழித்த ஆத்யா வீரிட்டு அழத் துவங்க, பிரியாவின் கரத்தில் இருந்த ஆத்யாவை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டான் விரான்.

ஆத்யா, “அம்மு… அம்மு வேணும்… அப்பு…” என பல மணி நேரமாக பெற்றோரைக் காணாததாலும் சுற்றியிருந்தவர்களின் அழுகையைக் கண்டு பயந்தும் அழ, அங்கு வந்திருந்த அனைவரின் உள்ளமும் பாரம் அடைந்தது.

இமை மூடாது தம் பெற்றோரின் உயிரற்ற உடல்களையே வெறித்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டு பயந்த ஹரிஷ், “விரான்… வியான்… அழணும்னா அழுதுடுங்கப்பா… இப்படி இருக்க வேணாம்…” எனக் கண்ணீருடன் கூற, அவர்களோ சிலை போல் அமர்ந்து இருந்தனர்.

ராஜாராம், “வியான் கண்ணா… என் ராசா… இப்படி இருக்காதேப்பா… அழுதுடு கண்ணா… இந்த வயசான காலத்துல உங்களையும் இந்த நிலமைல இருக்குறத பார்த்துட்டு இருக்க முடியாதுப்பா…” எனக் கெஞ்ச, “தாத்தா சொல்றதை கேளுப்பா… விரான்… அழுதுடுப்பா…” எனக் கண்ணீர் வடித்தார் பிரபு.

விரானின் மடியில் இருந்து எழுந்த ஆத்யாவிற்கு என்ன புரிந்ததோ சஜீவ், நித்ய யுவனியின் சடலங்களின் அருகே சென்று, “அப்பு… அம்மு…” என அழைத்தாள்.

“ஐயோ… இந்தச் சின்னக் குழந்தை கிட்ட நான் என்ன சொல்லுவேன்? இனிமே உங்க அப்புவும் அம்முவும் வர மாட்டாங்கன்னு எப்படி சொல்லுவேன்… கடவுளே… ஏன் இந்த பசங்களை இப்படி சோதிக்கிற? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?” என ஆத்யாவை வாரி அணைத்துக்கொண்டு கதறினார் ஈஷ்வரி.

பிரேமின் தாய் ஜானகி, “ஈஷ்வரி… என்ன இது? பாரு குழந்தை எப்படி பயந்து அழுறான்னு…” என்றவர் ஆத்யாவை வாங்கிக் கொண்டார்.

வீர், “எல்லாருமே இப்படி மாறி மாறி அழுதுட்டு இருந்தா எப்படி? ஜீவி… இந்தப் பசங்களை கொஞ்சம் பாருங்க… நீங்களே அழுதுட்டு இருந்தா அவங்களுக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க?” என சத்தம் இட்டவனாலும் தன் அழுகையை அடக்க இயலாவில்லை.

பின்னே? உடன் பிறக்காவிட்டாலும் சொந்த தங்கை போல் ராஜு‌‌ ராஜு எனத் தன்னிடம் உரிமையாக சண்டையிடுபவளை இழந்தால் எப்படி தாங்குவான் அவனும்?

ஜனனி, “விரு… வியு… பெரியம்மா சொன்னா கேட்பீங்க தானே… நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குறதை அப்புவும் அம்முவும் விரும்புவாங்களா? இல்ல தானே… மனசு விட்டு அழுதுடுங்க கண்ணா…” எனக் கண்ணீருடன் கெஞ்ச, அவர்களோ கொஞ்சம் கூட அசையாது எந்த உணர்வும் இன்றி நித்ய யுவனி, சஜீவ்வின் உடல்களையே வெறித்தனர்.

அப்போது சரியாக ரகுவரன் வீட்டினுள் நுழைய, அவரைத் தொடர்ந்து கையில் மலர் மாலையுடன் வந்தாள் சுசித்ரா‌.

இருவரையும் கண்டு அதிர்ந்தவர்களின் மனதில் ஒரே கேள்வியே எழுந்தது. ‘சுசித்ரா எப்போது சிறையில் இருந்து விடுதலை ஆனாள்?’ என்பதே.

சடலங்களுக்கு மலர் மாலை இட்ட சுசித்ரா, “அச்சச்சோ… பாவம்… வாழ வேண்டிய வயசுல இப்படி அல்பாயுசுல போய் சேர்ந்துட்டாங்களே… ப்ச்… என் எதிரியாகவே இருந்தாலும் ரெண்டு பேருக்கும் இப்படி நடந்திருக்க கூடாது… ஹ்ம்ம்… என்ன பண்ண? விதி வலியது… புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினாங்க… ஆனா இப்போ… நான் ஜெயில்ல இருந்து வெளியே வரும் போது ரெண்டு பேரும் ஒன்னாவே மேல போய்ட்டாங்க…” என நீலிக் கண்ணீர் வடித்தவள், “அப்பா… இதெல்லாம் கோ இன்சிடன்ட் ஆகவா நடக்குது?” எனக் கேட்டாள் விஷமச் சிரிப்புடன்.

அதனைக் கேட்டு உச்சுக் கொட்டிய ரகுவரனின் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை.

சுசித்ராவின் பேச்சிலே இதற்குக் காரணம் அவள் தான் என அனைவருக்கும் புரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஹரிஷ், “இது உன் ப்ளேன் தானா? நீ தான் எங்க சர்வாவையும் யுவனியையும் கொன்னியா?” எனக் கேட்டான் ஆத்திரத்துடன்.

“உங்களை போலீஸ்ல பிடிச்சு கொடுக்காம சும்மா விட மாட்டேன்…” ஆத்திரமாக சுசித்ராவையும் ரகுவரனையும் நெருங்கிய ஆரவ்வைத் தடுத்த சித்தார்த், “ஆரவ்… இப்போ எதுவும் பண்ண வேண்டாம்… இவங்களை அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றவன் சுசித்ராவை முறைத்தான்.

அவர்களைக் கண்டு இளக்காரமாக உதடு சுழித்த சுசித்ராவை நெருங்கிய அஞ்சலி யாரும் எதிர்ப்பார்க்காதவாறு சுசித்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைய, “ஏய்…” எனக் கத்திக்கொண்டு அவளை நெருங்கினார் ரகுவரன்.

“அஞ்சு… என்ன பண்ணுற நீ?” எனத் தன் மனைவியைக் கடிந்து கொண்டான் சித்தார்த்.

சுசித்ரா, “இவ்வளவு பட்டும் உங்க யாருக்கும் புத்தி வரலல்ல… என்னையே அடிக்கிறியா?” என அஞ்சலியை அறையக் கை ஓங்கவும் இடையில் வந்து அவளின் கரத்தை முறுக்கிய திவ்யா, “ரொம்ப நொந்து போய் இருக்கிறோம் நாங்க… வீணா பிரச்சினை பண்ணாதே…” என மிரட்டி விட்டு சுசித்ராவின் கரத்தை விட்டாள்.

வலியில் முகம் சுருக்கிய சுசித்ரா அனைவரையும் கோபத்துடன் முறைக்க, “என்னப்பா சாவு வீட்டுல வந்து பிரச்சினை பண்ணிட்டு இருக்கீங்க? முதல்ல இங்க இருந்து கிளம்புங்கப்பா… இல்ல போலீஸை கூப்பிடுவோம்…” என அக்கம் பக்கத்தினரில் ஒருவர் கூற, அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

இனியும் அங்கு நின்றால் தமக்கு தான் ஆபத்து எனப் புரிந்து கொண்ட ரகுவரன் சுசித்ராவை அழைத்துக்கொண்டு கிளம்ப, அனைவரையும் திரும்பி முறைத்தபடி சென்ற சுசித்ராவையே வெறித்தான் வியான். 

சற்று நேரத்தில் ஒரு பெரியவர், “இன்னும் என்னப்பா பார்த்துட்டு இருக்கீங்க? நேரமாச்சு… நெருப்புல வெந்த உடம்பு… இதுக்கு மேல வெச்சிட்டு இருக்க முடியாது… எடுத்துடலாம்…” என்கவும் அனைவரும் ஒப்பாரி வைத்தனர்.

சித்தார்த், “வியான்… விரான்… அப்புவையும் அம்முவையும் கடைசியா பார்த்து அழுதுடுங்க கண்ணா… எதையும் மனசுல போட்டு வெச்சிக்க வேணாம்…” எனக் கண்ணீருடன் கெஞ்ச, அவர்களோ கண்டுகொள்ளவில்லை.

“பப்பு… அம்முவையும் அப்புவையும் பாருடா செல்லம்… அவங்க இனிமே நம்ம கிட்ட வர மாட்டாங்க…” என ஜனனி ஆத்யாவைப் பார்த்து அழ, “அம்மு… அப்பு…” என குழந்தை வீரிட்டது.

நித்ய யுவனி, சஜீவ் சர்வேஷின் இறுதிச் சடங்குகள் மிக விரைவாக நடந்தன.

நித்ய யுவனி, சஜீவ் சர்வேஷின் உயிரற்ற உடல்களைத் தூக்கும் போது அவர்களின் குடும்பமும் நண்பர்களும் அழுத அழுகையில் யாராக இருந்தாலும் கண்ணீர் வடிப்பர்.

சிறுவர்களின் அழுகையுடன் கூடவே, “அத்தை”, “மாமா”, “சித்தப்பா”, “சித்தி” என்ற கதறல்களும் ஒலித்தன.

ஆத்யா ஒரு பக்கம் தன் பெற்றோரைக் கேட்டு அழ, யாருக்கும் ஒன்றும் செய்ய இயலாத நிலை.

விரானும் வியானுமே தம் பெற்றோருக்கு இறுதிச் சடங்கை செய்தனர்.

கொள்ளி வைக்கும் போது விரானும் வியானும் கரங்களைக் கோர்த்துக்கொண்டு, “அம்மு… அப்பு…” என்று கூறி ஒரு நொடி கண் கலங்கினர்.

ஆனால் அதன் பின் முன்பு இருந்தது போலவே உணர்ச்சி துடைத்த முகமாக மாறினர்.

சடங்குகள் முடித்து விட்டு ஆண்கள் வீட்டுக்கு வரும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் மடங்கி அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்.

வியான் உள்ளே நுழைந்ததுமே அழுது கொண்டிருந்த ஆத்யாவைத் தூக்கவும் தன் சகோதரனை உணர்ந்து அழுகையை நிறுத்தினாள் ஆத்யா.

ஜனனி, “வசும்மா… ஆன்ட்டி… கொஞ்சம் தண்ணியாவது குடிங்க… ப்ளீஸ்… நீங்களே இப்படி இருந்தா பசங்களுக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க?” எனக் கெஞ்ச, அவர்களோ மறுப்பாகத் தலையசைத்து விட்டு கண்ணீரில் மூழ்கினர்.

“அப்பா… மாமா… நீங்களாவது சொல்லுங்க… ஆல்ரெடி பீபி கூடி மயங்கிட்டாங்க… சாப்பிடாம வேற இருந்தா என்ன ஆகும்?” எனப் பிரபுவிடம் கூறினாள் ஜீவிகா வருத்தத்துடன்.

அஞ்சலியும் திவ்யாவும் மற்ற சிறுவர்களை உண்ண வைத்து உறங்க வைத்து விட, ஜனனியும் பிரியாவும் பெரியவர்களை மருந்து மாத்திரை போட இருப்பதைக் காரணம் காட்டி கெஞ்சிக் கொஞ்சி ஓரளவு உண்ண வைத்தனர்.

ஆரவ், “வியான்… விரான்… வந்து சாப்பிடுங்க…” என்கவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட‌ சகோதரர்கள் உணவு உண்ண அமர்ந்தனர்.

பிரியா, “ஆதும்மா… பப்பு… பப்பு குட் கேர்ள் தானே… கொஞ்சம் சாப்பிடுடா கண்ணா…” எனக் கெஞ்ச, ஆத்யாவோ, “அம்மு… அம்மு வேணும்…” என்று அழுது கொண்டே மறுத்து விட்டாள்.

வியான் உணவை வைத்து விட்டு பிரியாவிடம் வந்தவன், “அத்த… பப்புவை என் கிட்ட கொடுங்க…” என்க, பல மணி நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் பேசி விடவும் மகிழ்ந்த பிரியா ஆத்யாவை அவனிடம் கொடுத்தாள்.

வியான் ஆத்யாவை தூக்கிச் சென்று விரானுக்கும் தனக்கும் இடையில் அமர வைத்தவன் தன் தங்கைக்கு ஊட்டி விட, ஆத்யா மறுக்காது வாங்கிக் கொண்டாள்.

விரானும் வியானும் ஆத்யாவிற்கு மாற்றி மாற்றி ஊட்டி விட்டுக் கொண்டிருக்க, அதனைக் கண்டு அனைவரின் கண்களும் கலங்கின.

ஹாலில் ஆண்கள் ஒன்றாக அமர்ந்து இருக்க, “மச்சான்… சர்வாவுக்கும் நித்யாவுக்கும் நடந்தது ஆக்சிடன்ட் இல்ல பக்கா ப்ளேன்ட் மர்டர்னு தெரிஞ்சி போச்சே… அடுத்து என்னடா பண்ணலாம்?” எனக் கேட்டான் ஹரிஷ்.

ஆரவ், “அந்த சுசித்ரா தான் அவங்களைப் பழி வாங்க இதைப் பண்ணி இருக்கா… அவளை இப்பவே போய் கொன்னு போடுற அளவுக்கு வெறி வருது…” என ஆத்திரமாகக் கூற, பிரேம் தான் இருவரையும் அமைதிப்படுத்தினான்.

சித்தார்த், “இது ஆத்திரப்பட வேண்டிய நேரம் கிடையாது… முதல்ல போலீஸ் கிட்ட நம்ம சந்தேகத்தை சொல்லலாம்…” என்க,

“சித்தார்த் சொல்றது தான் கரெக்ட் ஆரவ்… நாளைக்கு காலைலயே போலீஸ்ல கம்ப்ளைன் பண்ணலாம்… முதல்ல அந்த சுசித்ராவுக்கு எதிரான ஆதாரங்களை கலெக்ட் பண்ணணும்…” என்றான் பிரேம்.

மறுநாள் காலையிலேயே காவல் நிலையம் சென்ற நண்பர்கள் சுசித்ரா மீது சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

காவல் அதிகாரி, “நான் ஆல்ரெடி தனிப்பட்ட முறைல இதைப் பத்தி விசாரிச்சிட்டு தான் இருக்கேன் சார்… இப்போ நீங்க சொன்ன ஆங்கில்ல கூட விசாரிக்குறேன்… பார்க்கலாம்… ஏதாவது இன்ஃபார்மேஷன் கிடைச்சா சொல்லி அனுப்புறேன்…” என்றார்.

சுசித்ரா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவளைக் கைது செய்து விசாரிக்க, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமையால் இலகுவாக தப்பித்து விட்டாள்.

நீதிமன்றத்தில் கூட கொலை என்பதற்கு எந்த ஆதாரம் இல்லாததால் அதனை ஒரு விபத்து என்றே பதிவு செய்து வழக்கை முடித்தனர்.

அந்த லாரி ட்ரைவருக்கு குடித்து விட்டு வண்டி ஓட்டுதல், விபத்து, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியமைக்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சஜீவ், நித்ய யுவனியின் நண்பர்களுக்கு தம் நண்பர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள் எனத் தெரிந்தும் எதுவுமே செய்ய முடியாத நிலை.

நித்ய யுவனி, சஜீவ் இருவரின் மரணத்தில் இருந்து யாராலும் வெளியே வர முடியாமல் இருக்க, விரான், வியான் இருவருமோ அன்றிலிருந்து முற்றிலும் மாறினர்.

ஆத்யா அடிக்கடி தன் பெற்றோரைக் கேட்டு அழ, அவளுக்கு அனைத்துமே அவளின் சகோதரர்கள் ஆகிப் போனது. 

எப்போதும் தன் சகோதரர்களுடனே இருப்பாள். 

வியான் பேசுவதை முற்றிலும் குறைத்துக்கொள்ள, விரான் பேசினாலும் முன்பிருந்த துள்ளல் அவன் பேச்சில் இருக்கவில்லை.

இருவருமே தம் பெற்றோரை எண்ணி ஒரு துளி கண்ணீர் வடிக்காது தமக்குள்ளே இறுகிப் போயினர். 

கெஞ்சி, கொஞ்சி, ஏன் திட்டியும் கூட இருவரும் வாய் விட்டு அழவில்லை.

நாள் போகப் போக அனைவருக்கும் இருவரையும் நினைத்து பயம் தொற்றிக்கொண்டது.

தம் பேரப் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வசந்தியும் ராஜாராமும் சஜீவ்வின் வீட்டிற்கே வந்து விட்டனர்.

ஆனாலும் வசந்தி அடிக்கடி நித்ய யுவனியை எண்ணிக் கலங்குவதால் உடல்நிலை கெட்டு படுத்த படுக்கை ஆகி விட, பாவம் ராஜாராம் தான் ஒரே மகளையும் இழந்து மனைவியின் நிலையும் அவரை வாட்டியது.

அவ் வீட்டின் குட்டி இளவரசியோ தன் அண்ணன்களின் அரவணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாள்.

அடிக்கடி, “அம்மு… அப்பு…” எனத் தன் பெற்றோரைக் கேட்டு அழுதாலும் சகோதரர்களின், “பப்பு…” என்ற குரலில் அனைத்தும் மறந்து புன்னகைப்பாள்.

ஆத்யாவின் புன்னகை ஒன்றே அவ் வீட்டில் இருந்தவர்களுக்கு மருந்தாக அமைந்தது.

************************************

சில வருடங்களுக்கு பிறகு…

மொத்த கல்லூரியுமே ஒரே பரபரப்பாக காணப்பட்டது. அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஃப்ரஷர்ஸ் டே பார்ட்டி. 

அனைத்து மாணவர்களும் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஒன்று கூடியிருக்க, விழா இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

“ஹேய் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு ஃபங்ஷனுக்கு சீப் கெஸ்ட்டா ஒரு போலீஸ் ஆஃபீஸரை கூப்பிட்டு இருக்காங்க டி…” என இரண்டாம் ஆண்டு மாணவி ஒருத்தி தன் தோழிகளிடம் கூற, “ப்ச்… ஃப்ரஷர்ஸ் டே பார்ட்டில போலீஸுக்கு என்ன வேலை டி? அப்படி இருங்க… இப்படி இருங்க… அதைப் பண்ணாதீங்க… அப்படி இப்படின்னு மொக்க போட்டு நம்ம கழுத்து அறுக்க போறாங்க… காலேஜ் மேனேஜ்மன்ட்டுக்கு கொஞ்சம் கூட அறிவில்ல டி…” என சலித்துக் கொண்டாள் இன்னொரு மாணவி.

ஆனால் அவர்களில் ஒருத்தியோ தம் தோழிகள் வருத்தமாகப் பேசுவதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திலேயே போலீஸ் ஜீப் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கேட்போர் கூடத்திற்கு முன் நின்றது.

ஜீப்பில் இருந்து இறங்கியவனை கல்லூரி முதல்வர் பொக்கே கொடுத்து வரவேற்க, லேசான தலையசைப்புடன் அதனைப் பெற்றுக்கொண்டவன் மேடையை நோக்கி நடக்க, இவ்வளவு நேரமும் அவனின் வருகையை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர்களோ ஆச்சர்யத்தில் வாய் மேல் கை வைத்தனர்.

அவர்களின் நிலையை புன்னகையுடன் பார்த்தவளோ அவனின் மீதே பார்வையைப் பதித்தாள்.

சீராக வெட்டப்பட்ட கேசம், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, முறுக்கேறிய புஜங்கள், உடலை இறுக்கிப் பிடித்த காக்கிச்சட்டை, ஆளை அளவிடும் கூர் விழிகள் என கம்பீரமாக மேடை ஏறியவனை விட்டு அங்கிருந்த மாணவியர் யாராலுமே பார்வையை அகற்ற முடியவில்லை. 

அவர்களில் ஒருத்தி மாத்திரம் அவனின் ஆளுமையான தோற்றத்தையே ரசித்துக் கொண்டிருந்தாள்.

விரிந்திருந்த மார்பில் ‘ஏ.சி.பி. வியான் சர்வேஷ்’ என அவனின் பெயர் மாட்டியிருக்க, முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லாத அவனின் தாடையோ இறுகி இருந்தது.

வியான் வந்ததும் விழா இனிதே ஆரம்பமாக, “ஏய்… செம்ம ஹேன்ட்ஸமா இருக்கான் டி…” என முன்பு வருத்தப்பட்ட மாணவி கண்கள் மின்னக் கூற, “அவர் உங்க அண்ணன் டி… அப்படி எல்லாம் என் ஆளைப் பார்த்து சொல்லக் கூடாது…” என்றாள் இன்னொருத்தி.

அவளை முறைத்த மற்றவளோ, “உனக்கு முன்னாடி நான் தான் அவரைப் பார்த்தேன்… அவர் என் ஆளு…” எனச் சண்டை இட, இவ்வளவு நேரம் அவனை ரசித்துக் கொண்டிருந்தவளோ, “உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லயா டி? இப்போ கொஞ்சம் முன்னாடி தானே அவரை அவ்வளவு திட்டினீங்க… இப்போ அவரைப் பார்த்தே ஜொள்ளு விடுறீங்க… அவர் ஒன்னும் உங்க யாரோட ஆளும் கிடையாது…” என்றாள் முறைப்புடன்.

“ஓஹ்… நீ எதுக்கு இவ்வளவு கோவப்படுற? அவர் என்ன உன் ஆளா?” என அவளின் தோழிகள் சந்தேகமாகக் கேட்க, அவளின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

அவளின்‌ கண்களோ மேடையில் அமர்ந்து இருந்த வியானை ரசிக்க, அவளையே காதலுடன் நோக்கிக் கொண்டிருந்தான் நான்காம் ஆண்டு மாணவனான ருத்ராக்ஷ் சக்கரவர்த்தி‌. சக்கரவர்த்தி க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் ஒரே வாரிசு.

மேடையில் கல்லூரி முதல்வர் பேசி விட்டு வியானுக்கு பேச சந்தர்ப்பம் வழங்க, “ஹலோ ஸ்டூடன்ட்ஸ்…” என்ற வியானின் கம்பீரக் குரலில் அனைவரும் மெய் மறந்து நின்றனர்.

வியான், “இது ஃப்ரஷர்ஸ் டே பார்ட்டி… சோ அட்வைஸ் என்ற பெயர்ல உங்க மூடை ஸ்பாய்ல் பண்ண விரும்பல… காலேஜ் சேர்மன் ரொம்ப வேண்டிக் கேட்டதால தான் வந்தேன்… இந்த வயசுல படிப்புங்குறது ஆண், பெண் ரெண்டு தரப்புக்குமே ரொம்ப முக்கியம்… அதே அளவு ஒருத்தருக்கு முக்கியமானது தான் நல்லொழுக்கம்… டீவி நியூஸ், பேப்பர்ஸ்ல எல்லாம் பார்த்து இருப்பீங்க நாட்டுல இப்போ என்ன நடந்துட்டு இருக்குன்னு… உங்க பேரென்ட்ஸ் உங்களை நம்பி காலேஜ் அனுப்புறாங்க… அதுலயும் பொண்ணுங்களைப் பெத்த ஒவ்வொரு பெற்றோரும் அவங்க பொண்ணு திரும்பி வீட்டுக்கு வரும் வரை எந்த அளவுக்கு பயத்துடன் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது… எவ்வளவு தான் போலீஸ் இருந்தாலும் உங்களில் ஒவ்வொருத்தரும் உங்க பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பாக இருக்கணும்… சோ நான் சொல்ல விரும்புறது ஒன்னே ஒன்னு தான்… காலேஜ்லயோ வெளியிலயோ கொஞ்சம் கவனமாக நடந்துக்கோங்க… நான் இதை இவ்வளவு வலியுறுத்துறதுக்கு என்ன காரணம்னு உங்க எல்லாருக்குமே புரியும்னு நம்புறேன்… என்ட் ஃபைனலி உங்களுக்கு கிடைச்சி இருக்குற இந்த ஃப்ரீடத்தை எந்த காரணம் கொண்டும் மிஸ் யூஸ் பண்ணாதீங்க… தேங்க் யூ…” என்று தன் உரையை முடித்துக்கொள்ள, அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பி வழிந்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்