Loading

அத்தியாயம் 26

புதிய ஊரில் குடித்தனம் ஆரம்பித்து எட்டு மாதங்கள் முடிந்திருந்தது. இதுவரை இரண்டு முறை இவர்கள் சென்னைக்கு சென்று வந்திருந்தார்கள். ஒரு முறை அவர்களும் மகன், மருமகள், பேரனைத் தேடி வந்து பார்த்துச் சென்றார்கள்.
வசந்தராவுக்கு தற்போதெல்லாம் ஒரே அலுப்பாக இருந்தது. ரொட்டீனாகச் செல்லும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் மிகவும் சோர்ந்து தெரிந்தாள். போன முறை இவர்களைப் பார்க்க வந்திருந்த அனுபமா கூடக் கேட்டிருந்தார்,

“என்னாச்சு.? ஏன் ரொம்ப டல்லா தெரியுற.?” என்று. ஒன்றுமில்லை தான் நன்றாக இருப்பதாகக் கூறி அவரைச் சமாளித்திருந்தாள் இவள்.

யாரிடம் சொல்லுவது என்ன என்று தெரியாமல் ஒரே தவிப்பாக இருந்தது. சொன்னாலும் எப்படி எடுப்பார்களோ என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. பேசுவதற்கோ பழகுவதற்கோ பெரிதாக நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் அதுவும் அவளின் வேதனையைக் கூட்டியது.
கணவனின் அன்பு தற்போது வெகுவாகக் குறைந்து விட்டதாக எண்ணம் தோன்றி  கொண்டிருந்தது. அதற்கேற்றது போல் அவனுக்கும் வேலையில் நிறைய டென்ஷன். போட்டிகள் அதிகரித்திருக்க என்ன ஏது என்று சொல்லப்படாமலேயே சிலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார்கள். இது போன்ற பெரிய எம்என்சி கம்பெனிகளில் எவ்வளவு சலுகைகள் இருக்குமோ அவ்வளவு ஆபத்தும் வேளையில் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உனக்கு வேலை இல்லை வீட்டிற்கு கிளம்பலாம் என்று அவர்கள் சொல்லும் நிலைதான் இருந்தது. அதற்காகவே வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

காலையில் எழுவதும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி செல்வதும். உடலில் உள்ள சாரு முழுவதையும் பிழிந்து. சக்கையை போல் வீட்டுக்கு வருவதும்.அலுவலக யோசனைலேயே என்ன உண்கிறோம் என்பது கூடத் தெரியாமல் உண்டு விட்டு அலுப்பில் உறங்கி விடுவதும் தொடர்கதை ஆகிக்கொண்டிருந்தது. சுமார் மூன்று மாதமாக எங்கும் வெளியில் செல்லாமல் அலுவலகம் விட்டால் வீடு. வீடு விட்டால் அலுவலகம் என்று மாறி இருந்தான் சஞ்சய். விடுமுறை தினத்திலும் ஏதேனும் வேலை இருக்கும்.அல்லது ஒரு வார அலுப்பில் உடல் அசதியில் நாள் முழுவதும் உறக்கம் இருக்கும்.
இடை இடையாக மனைவியையும் நாடிக் கொள்வான். அதுவும் ஒரு இயந்திர கதியில்தான் நடந்தேறிக் கொண்டிருந்தது.

அவனாவது வேலைக்கென்று வெளியில் சென்று நான்கு பேரைப் பார்க்கிறான். அதிகபட்ச ஸ்ட்ரெஸ் வேளையில் இருந்தாலும், ஒரு காபி குடிக்கும் நேரம் ஆவது கூட வேலை செய்யும் நபர்களோடு சற்று பேசவோ சிரிக்கவோ முடிகிறது. ஆண் அவனால். ஆனால் பெண் இவளுக்கோ அதற்குக் கூட வழி இல்லாத நிலை தான். அதற்கு மேல் அவள் உடல் நிலையில் மாற்றம் வேறு அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. கணவன் அவளை ஆசையாகவோ வேட்கை கொண்டோ நெருங்கும்போது பெண்ணாக அதை உணர்ந்து அனுபவிக்க தயாராக இருக்கும்போது சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்து அவன், அவளை விட்டு நீங்கிச் செல்கிறான். அவனுக்கு வேண்டியது கிடைத்து விடுகிறது ஆனால் பெண் அவளுக்கோ வலிகள் நீங்கி இன்பம் தொடங்கும் வேலை அவனுக்கு முடியும் நேரமாக இருக்க. உச்சம் செல்ல முடியாத நிலை கோபத்தை ஏற்படுத்தியது. இதுவே தொடரும்போது ஆத்திரமும் ஆக்ரோஷமும் இணைந்து வெளிப்பட, அதைக் காட்டும் வழியும் அறியாமல் பெண் அவளை, நீரில் அமுங்கிய பந்துபோல் வெளியே வெடிக்க முடியாமலும் உள்ளே அமுங்க முடியாமலும் நிலை கொள்ள முடியாமல் தடுமாறச் செய்தது.

மகனையும் இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். தந்தை செல்லும் நேரத்திலேயே இவனும் கிளம்பி விடுவான். இவனுக்கும் பள்ளி வாகனம் வந்துவிடும். இவன் வீடு வந்து சேரவும் மாலை நான்கு மணிபோல ஆகிவிடும். கணவனும் மகனும் சென்றபிறகு மெது மெதுவாக வேலைகளைப் பார்த்தாலும் இரண்டு மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து அதற்குப் பின் தேவையில்லாத சிந்தனைகளும் நினைவுகளும் வந்து இவளைப் பாடாய்படுத்தியது.

உடலில் ஹார்மோன் மாற்றம் ஏதேனும் ஆரம்பித்திருக்குமா என்பதும் தெரியவில்லை பெண்ணவளுக்கு. அவளும் முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தாள். இயற்கையாக எழும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல், அது கேட்கும் தீர்வையும் கொடுக்க முடியாமல் திணறினாள் பெண்.

திருமணமான புதிதில் இதைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. கணவன் காதலோடு கூடும்போது அதிகபட்ச வலியை மட்டுமே அனுபவிப்பதால் அதன் இன்பம் என்ன என்பது தெரியாமலே இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அதன் சுவையை அறிந்தாலும். அது எப்போதும் தொடர்வதில்லை. அத்தி பூத்தார் போல் என்றோ ஒருநாள் மட்டுமே கிட்டும் அந்த இன்பம். அதன்பின், அதைப் பற்றிச் சிந்திக்க கூட நேரம் இல்லாமல் குழந்தை வரவு. கர்ப்பகால பிரச்சனைகள், அதற்குப் பின் பேரு கால பிரச்சனைகள். பின், குழந்தை வளர்ப்பு. என நாட்கள் பறந்து விடும்.இடை இடையே கணவனின் அண்மை கிடைத்தாலும், வேண்டும் இன்பம் கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சும். ஏன் இப்படி என்று.?
இதைப் பற்றிச் சிந்திக்கவோ கணவனிடம் பேசவோ முடியாமல் கூச்சமும் தடை செய்ய. யாரிடமும் கேட்டுத் தெளிவு பெற முடியாத சூழ்நிலைதான்.

மேலும் ஒரு மாதம் கடந்திருந்தது. பத்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறையெனக் கணவன் அவளை நாடுவது மட்டும் நிற்கவில்லை. ஆனால் அதில் இவளுக்குச் சுகம் கிடைத்ததா என்றால் அது கேள்வி குறிதான். அவனுக்கு வேண்டியது கிடைத்து, அனுபவித்த இன்பத்திலும், சோர்விலும் அவன் நிம்மதியாகத் தூக்கத்தை தழுவ. பெண் இவள் தான் ஆரம்பித்தது பாதியில் நிற்க. அதை எப்படி முழுமை பெறச் செய்ய வேண்டும் என்பது தெரியாமல், அது கிடைக்காததால் ஒரு விதமான வலியையும் அதனால் உண்டாகும் எரிச்சலையும், கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.

பின் இதற்குத் தீர்வாக மருத்துவரான மாமியாரை அணுகுவது என்று முடிவு முடிவெடுத்த பின்பே சற்று நிம்மதி ஏற்பட்டது. அவருக்குமே இவளிடம் ஏதோ மாற்றம் இருப்பது புரிந்து தான் இருந்தது அதனாலேயே அவ்வப்போது

“என்ன ஆச்சு.? உடம்பு சரியில்லையா.?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இவர்களை ஒரு முறையேனும் வந்து செல்லுங்கள் என அழைத்தாலும் சஞ்சயின் வேலை, வருணனின் பள்ளிக்கூடம் இவர்களைப் போகவிடாமல் தடுத்திருந்தது. அவர்களுக்கும் வர முடியாமல், மழைக்காலம் ஆதலால் நோயாளிகளின் வருகையும் அதிகமாக இருந்தது.

அத்தையோடு பேச வேண்டும் என முடிவெடுத்தவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்பதில் தான் பெரிய குழப்பமும், தயக்கமும். தாயை விட அதிக பாசம் கொண்டு தன்னை பார்த்துக் கொள்ளும் மாமியார் தான். தாய் பாசத்தை கூட இவரிடம் தான்  அனுபவித்தாள் அவள். ஆனாலும் அவரிடம் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பது தெரியாமல் குழம்பி தவித்துக்கொண்டிருந்தாள்.

இவள் மனநிலை புரிந்தது போல எப்போதும் அந்நேரத்தில் இவளுக்கு அழைக்காத அனுபமா அன்று அலைபேசி அழைப்பு விடுத்தார். நேரத்தைப் பார்த்துவிட்டு மிகுந்த ஆச்சரியத்துடன் அலைபேசியை  எடுத்தவள்,

“என்ன அத்தை.? இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க. கிளினிக் போகலையா நீங்க.?” என்று கேட்டாள் ஆச்சரிய குரலில்.
“நீ தான் சொல்லணும் என்னன்னு.?” என்றார் இவரும்.
“என்ன அத்தை புரியல.?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“உனக்கு என்ன ஆச்சுன்னு நீ தான் சொல்லணும். கொஞ்ச நாளா நீ சரியில்லன்னு எனக்குத் தோனி கிட்டே இருக்கு. நானும் அப்பப்போ உன்கிட்ட கேட்டுகிட்டு தான் இருக்கேன். உடம்பு சரியில்லையான்னு. ஆனா நீ அதுக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்டேங்குற. கேட்கும் போதெல்லாம் நான் நல்லா இருக்கேன்னு சொல்ற. ஆனா உன் குரலில் ஒரு வித்தியாசம் இருக்கு. நீ நல்லா இல்லைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. என்ன உன்னைப் போட்டுத் தின்னுதுன்னு சொல்லு. என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பா நான் உனக்குச் செய்வேன். சஞ்சய் ஏதாவது பிரச்சனை பண்றானா.? உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா.? மனஸ்தாபமா.?மாமியாரா நினைக்காத அம்மாவா என்னை நெனச்சு சொல்லு.” எனப் பரிவாக அவர் கேட்க. மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத்தான் கண்ணீர் கண்களை நிறைத்தது.

அந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் இல்லாமல் இருக்க
“வசுந்தரா.” என அழைத்தார் ஆழ்ந்த குரலில்.
“ம்ம்.” என்றவளின் குரலிலேயே அவள் அழுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட அனுபமா.
“என்னம்மா.? என்ன பிரச்சனை.? சொன்னா தானே எனக்குத் தெரியும். வீடியோ கால் வரவா.?” எனப் பாசத்தை குரலில் தேக்கி கேட்க.
“வேண்டாம் அத்தை.”
“சரி வீடியோ கால் வேண்டாம். என்ன பிரச்சனை அதையாவது  சொல்றியா.?”

“ம்ம்.” என்று மெதுவாக முனங்கியவள். வெகுநேர தயக்கத்திற்கு பிறகு,
“எனக்கு ஏதாவது ஹார்மோனல்  பிரச்சனை இருக்குமா அத்தை.?” என்று கேட்டாள்.
“ஏன் உனக்குத் திடீர்னு இப்படியொரு சந்தேகம். மென்சுரல் சைக்கிள் எப்படி இருக்கு உனக்கு. மாதம் மாதம் சரியா தலைக்கு ஊத்திக்கிறியா.?”

“ஹான். அதெல்லாம் சரியா தான் இருக்கு. யார் எப்படி போனாலும் இருபத்தி எட்டாவது நாள், நான் வந்துட்டேன்னு வந்துரும்…”என்றாள் சலிப்பான குரலில்.

“உனக்குச் சலிப்பா இருக்கா.? எவ்வளவு பேர் இந்தப் பிரச்சனையால கஷ்டப்படுறாங்க. என் கிளினிக்குகே எத்தனை பேர் வராங்க தெரியுமா? சின்னப் பொண்ணுங்க கூட வராங்க. உனக்கு அப்படி இல்லன்னு சந்தோஷப்படு.”
பின் யோசித்தவராக

“இது சரியா இருந்தாலே முக்காவாசி பிரச்சனை இல்லன்னு அர்த்தம். அதுவும் நீ சொல்ற நாள் கணக்கு ரொம்ப பர்ஃபெக்ட். இது இல்லாம வேற என்ன ஹார்மோன் பிரச்சனை.? எங்கேயாவது வலி இருக்கா என்ன…?” என மருத்துவராக ஒவ்வொன்றையும் அவர் கேட்க.

“வலியெல்லாம் எதுவும் இல்ல அத்தை.” என்றவள். வெகுவாகத் தயங்க
“இங்கே பார் வசுந்தரா. நான் இப்போ உன்னோட மாமியார் கிடையாது. ஒரு டாக்டர். என்கிட்ட எதையும் மறைக்காமல் என்ன பிரச்சனைன்னு சொல்லு.”
“அது வந்து, எனக்குச் செக்ஸுவல் டிசையர்(உடலுறவு ஆசை) அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்.”
“எத வச்சு அப்படி சொல்ற.?”

“எனக். எனக்குத் திருப்தியாகவே முடியல. அதனால ரொம்ப கோவம் வருது யாரைப் பார்த்தாலும் எரிச்சலா இருக்கு. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியல…”

“எவ்வளவு நாளைக்கு ஒரு முறை.?” என்ற மாமியாரின் கேள்வியைப் புரிந்து கொண்டவள்
“பத்து நாள். இல்லனா ரெண்டு, மூணு வாரம் கூட ஆகிடும்.”
“ம்ம். இத பத்தி சஞ்சய் கிட்ட பேசுனியா…?”
“இத பத்தியா.? சீச்சீ.! இல்லை, இல்லை.” என்றாள் வேகமாக.

“என்ன சீச்சீ.?” இதுபற்றி உன்னுடைய பார்ட்னர் கிட்ட பேசாம யார்கிட்ட பேசுவ. இதுல எல்லாம் வெட்கப்படவே கூடாது. இது உன்னுடைய உரிமை. சரி உனக்கு வலி இருக்குமா.?”

“ஆமா, ஆரம்பத்துல இருக்கும் அதுக்கப்புறம் இருக்காது.”

“ஹ்ம்ம். அதுக்குள்ள அங்க  முடிஞ்சிடும். இது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம்தான். இதைப் பற்றி வெட்கப்படவோ, கூச்சப்படவோ ஒண்ணுமே இல்ல. சில விஷயங்கள் நமக்குக் கிடைக்கலன்னா அதைக் கேட்டுப் பெறுவதில் தப்பே இல்ல. ஆவலும், ஆசையும் அடங்காததால் தான் உனக்குப் ஃபிரஸ்ட்ரேஷன் ஆகுது. கோவம் வருது, எரிச்சல் வருது.” என்றவர்,
“இதைத்தான் ஹார்மோனல் பிரச்சனைன்னு சொன்னியா. சரி, இத நான் என்னன்னு பாக்குறேன்.”

“என்ன பண்ணப் போறீங்க.?”என்று சந்தேகமாக அவள் கேட்க,
“சஞ்சய் கிட்ட பேசப் போறேன்.” என்றார்.
“ஐயையோ…! அத்தை, அது எல்லாம் வேண்டாம்.”என்றாள் பதறியவளாக.
“வேண்டாம்னா. சரி, என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.?”
“இந்த ஆசை அடங்கிப் போய், மறுபடியும் வராத மாதிரி ஏதாவது மாத்திரை இருந்தா குடுங்க.”

“ஹேய்.! பைத்தியமா நீ.? இருபத்தி ஒன்பது வயசுல இதெல்லாம் வரலனா தான் மாத்திரை மருந்து எடுத்துக்கணும். வர்றதுக்கு எடுக்கக் கூடாது…”என்று கண்டிப்புடன் கூறியவர்.
“நீ வை, இதை என்னன்னு நான் பாக்குறேன்.”என்றபடி அலைபேசி அழைப்பை அனைத்தார்.
சொல்லிவிட்டவளுக்குத்தான் என்ன ஆகுமோ எனப் பயந்து வந்தது.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்