
அத்தியாயம் 25
அனைவரிடமும் விடை பெற்று விமான நிலையத்தை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் சஞ்சையும், வசுந்தராவும்.
கணவனுடனான முதல் பயணம். அது மட்டும் அல்லாமல் அனைத்துமே முதல்தான் அவளுக்கு. முதல் வெளியூர் பயணம், முதல் விமான பயணம். ஆர்வத்துடனும், பூரிப்புடனும் தன் பயணத்தை மேற்கொண்டாள்.
டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்கு மணி நான்கை கடந்திருந்தது. ஏதேனும் ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச் செல்வானென இவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நேராக ரயில் நிலையத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டு அவளோடு வாடகை காரில் அமர்ந்தான். டெல்லி போக்குவரத்தில் நீந்தி இவர்கள் ரயில் நிலையத்தைச் சென்றடையவே ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. ரயில் நிலையத்திலேயே இருந்த உயர் ரக ஓய்வறையை பதிவு செய்து மனைவியோடு உள்ளே நுழைந்தவன்.
“போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா நமக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல ட்ரெயின்.” என்ற கணவனை யோசனையாகப் பார்த்தவள். அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் வெளிவந்ததும் இவனும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அந்த அறையை மூடிவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்தின் உள்ளேயே இருந்த ஓர் உயர்ரக உணவகத்தில் மாலை சிற்றுண்டி உடன் காப்பியையும் அருந்திவிட்டு அறைக்குத் திரும்பச் சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு கால்க்கா என்ற ஊருக்குச் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தான்.
எங்குச் செல்கிறோம் என்பது தெரியாமல் கணவனைப் பின்பற்றி அவன் செல்லும் வழியில் சென்றாள் வசுந்தரா. ஸ்லீப்பர் ஏசி கோச்சில் தனக்கான இடத்தில் படுத்தவன்.
“தூங்கு நாம ரீச்சாகக் காலையில அஞ்சு மணி ஆயிடும்.” எனத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் கூறிவிட்டு கண்களை மூடியவன் இருந்த அலுப்பில் உடனே தூக்கத்தை தழுவினான். ஒன்றும் புரியாமல் தன் இடத்தில் படுத்தவளும் ரயிலின் சுகமான தாலாட்டில் லயித்து அதன் சுகத்திலேயே கண்ணயர்ந்தாள்.
சுகமான தூக்கமாக இருந்தாலும் ரயிலில் தாலாட்டில் அவ்வப்போது முழிப்பு வரப்பெற்றவளாக வெளிச்சத்துடன் தாண்டிச் செல்லும் சிறு சிறு ரயில் நிலையங்களைப் பார்த்த படியே உறக்கமும், விழிப்புமாகப் பயணப்பட்டாள். யாரோ தன்னை வேகமாக உலுக்க பதறிக் கொண்டு எழுந்தவளை பார்த்தவன்
“ஈஸி, ஈஸி ஸ்டேஷன் வந்துருச்சு. நாம இப்ப இறங்கனும். ரெஸ்ட் ரூம் யூஸ் பண்றியா.?” எனக் கேட்கச் சரி என்பதாகத் தலையசைத்தது வேகமாகச் சென்று அவசரத் தேவையை முடித்துவிட்டு வந்தாள். இவள் வருவதற்கும் ரயில் நிற்பதற்கும் சரியாக இருந்தது. பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு இறங்கினார்கள். அங்கிருந்து சிறிது தூரம் சென்று, ரயில்கள் வந்து போகும் ஷார்டை ஓடவிட்டுக் கொண்டிருந்த பெரிய எல்ஈடி டிவியின் முன் வந்து நின்றவன். எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் அருகில் நின்றவள், சுற்றி முற்றி புது ஊரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தாங்கள் எங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியாமல்.
அவன் தேடியது தெரிந்ததும், வசுந்தராவை திரும்பிப் பார்த்தவன்.
“போலாம்.” என்றபடி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மற்றும் ஒரு பிளாட்பார்ம்க்கு அழைத்துச் சென்றான். அவன் எதிர்பார்த்த ரயில் நிற்பதை பார்த்தவன் அதன் அருகே நடந்து செல்ல இவன் பின்னோடு வந்தவளுக்குத்தான் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்து பார்த்தது பார்த்தபடியே அவன் பின்னே வந்துகொண்டிருந்தாள்.
பாதி அளவுக்குக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு முழுவதும் குளிர்சாதன பெட்டியாக வெகு அழகாகக் காட்சி தந்தது அந்த ரயில். அதன் உள்ளே ஏற முற்பட்டவனை பார்த்தவள்,
“இதுலயா போறோம்.? பொம்மை டிரெயின் மாதிரி ரொம்ப அழகா இருக்கு. எங்க தான் போறோம்.?” எனத் தன் ஆச்சரியத்தையும், தயக்கத்தையும் மீறிக் குதுகளித்தபடி கேள்வி கேட்டவளை திரும்பிப் பார்த்துச் சிரித்தவன்
“இதுக்கு பெயரே டாய் ட்ரைன் தான்.” என்றவன்.
“ஏறு, சொல்றேன்.”என்றபடி அவளோடு ஏறினான். ஜன்னல் என்ற பெயரில் பாதி அளவுக்கு முழுவதுமாகக் கண்ணாடியால் அமைக்கப்பட்டு அதற்குத் திரை சிலைகளும் போடப்பட்டிருந்தன. மெத் இருக்கைகளும் பெரியதாகவும் விஸ்தாரமானதாகவும் இருந்தது. கண்ணாடி ஒர சீட்டில் அவளை அமர வைத்துவிட்டு, அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவளின் கேள்விக்குப் பதிலாக
“சிம்லாக்கு போறோம்.” என்றான் புன்னகையுடன்.
“டெல்லின்னு தானே சொன்னீங்க.”
“ஆமா டெல்லி, அங்க இருந்து சிம்லா.” என்றாலும் கண்களைச் சிமிட்டி.
சிறிது நேரத்தில் ரயிலும் கிளம்ப, 360 கோணத்தில் மலைகளைச் சுற்றிக்கொண்டு ஏற ஆரம்பித்தது அந்தக் கண்ணாடி ரயில். அழகான, ரம்யமான காட்சிகளை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே ஆனந்தத்துடன் பயணப்பட்டாள் வசுந்தரா.
கண்களைக் கூடச் சிமிட்டாமல் இயற்கையின் கொள்ளை அழகில் மதி மயங்கிப் பயணப்பட்டாள் வசுந்தரா. பார்க்கும் அனைத்தும் அவளுக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் சேர்த்தே கொடுத்தது. ஒரு மலையை மட்டும் சுற்றி செல்லாமல் கிட்டதட்ட ஐந்து ஆறு மலைகளைச் சுற்றி செல்வது போல் தோன்றியது அவளுக்கு. சிறிதும் பெரிதுமான குகைகளைக் கடந்து வருவதும் கடந்து வந்த குகையை எதிரில் பார்ப்பதும் இனி வரப் போகும் குகையை மேலே மற்றொருபுறம் இருப்பதையும் பார்த்தவளுக்கு வியப்பு தாங்கவே முடியவில்லை. பல ஆச்சரியத்தோடும் மகிழ்வோடும் வந்து இறங்கினார்கள் சிம்லாவிற்கு.
குல்மார்க் ரெசிடென்சியில் அவர்களுக்கென அறையைப் பதிவு செய்திருந்தான் சஞ்சய். ஹோட்டல் ரூமிலிருந்து இவர்களை அழைத்துச் செல்லக் கார் வந்திருந்தது அதில் ஏறிப் பயணப்பட்டார்கள் இருவரும் வழிநெடுகிலும் பூக்களையும் மலைகளையும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தாள் வசுந்தரா. அறைக்குச் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டவர்கள் ஹோட்டலிலேயே இருந்த உணவு விடுதிக்குச் சென்று மதிய உணவை முடித்துவிட்டு அவளைப் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் சுட்டிக்காட்ட அழைத்துச் சென்றான் சஞ்சய். குளிர் பிரதேசம் என்பதால் விரைவிலேயே குளிரும் இருட்டும் படர்ந்து விடும். அதைக் கொண்டு இரவு உணவையும் வெளியே முடித்துவிட்டு அறைக்குள் வந்தவர்கள் சூடான வெந்நீரில் இரண்டு நாள் பயன அழுப்பை தீர்க்கும் வகையில் குளித்துவிட்டு வர அடுத்து என்ன என்பதுதான் பெண் அவளுக்குப் பெரும் தயக்கத்தை கொடுத்தது. ஆனால் அப்படி ஒன்று சஞ்சய்க்கு இல்லை போல.
“ரெண்டு நாள் டிராவல் பண்ணி செம டையர்ட். வா, வந்து தூங்கு. நாளைக்கு காலைல கைடு வந்துருவாங்க நமக்குச் சுத்தி காட்ட. எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி கீழ இருக்க லாபிக்கு போகணும். நம்மைப் போல டூரிஸ்டா வந்து இருக்குறவங்கள சேர்த்து ஒன்ன கூட்டிட்டு போவாங்க. சுத்தி காட்ட. நாம லேட் செய்தோம்னா மற்றவங்களுக்கும் அது சிரமம் ஆயிடும். அதனால அவங்க சொன்ன நேரத்துக்கு நாம தயாராகி போயிடனும்.” என்று மனைவிக்குக் கூறியவன் அலைபேசியில் அலாரத்திற்கு செட் பண்ணி விட்டு ஒரு பக்கமாகப் படுத்து மனைவியைப் பார்க்க. அவன் பார்வை உணர்ந்து அவளும் அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள். பக்கத்தில் வந்து படுத்த மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
இருந்த அலுப்பில் விரைவிலேயே உறக்கம் அவர்களைத் தழுவியது.
அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே விழித்து எழுந்தவள் கிளம்பி தயாராக அலாரம் அடிக்கும் சத்தத்தில் முடித்த சஞ்சய் மனைவி எழுந்து தயாராக இருப்பதை பார்த்தவன்,
“ரெடி ஆயிட்டியா.? குட்.” என்று கூறியபடியே குளியலறை நோக்கிச் சென்றான்.
இருவரும் ஹோட்டலிலேயே இருந்த ரெஸ்டாரண்டில் காலை உணவை முடித்து விட்டு லாபிக்கு வந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கைடுடன் இவர்களின் பயணமும் இனிதாகத் தொடங்கியது. அங்குப் பிரசித்தி பெற்ற கோயில்களையும் முக்கியமான சுற்றுலா தளங்களையும் சுற்றி காட்டிய பின் மாலை ஐந்து மணி அளவில் அனைவரும் ரிசார்டிற்கு திரும்பினார்கள்.
வசுந்தராவுடன் அறைக்குள் நுழைந்த சஞ்சய்.
“ரெப்ரெஷ் ஆகிட்டு வா. நம்ம பக்கத்துல ஒரு வாக் போயிட்டு வரலாம்.” என்றவன் பத்து நிமிடத்தில். அவளுடன் வெளியேறினான். ரிசப்ஷனுக்கு சென்று அவர்கள் அறையின் சாவியை கொடுத்துவிட்டு வர “எதுக்கு அவங்க கிட்ட சாவி கொடுத்துட்டீங்க.?” என்ற மனைவியின் கேள்வியில், “சும்மாதான். போற இடத்தில் எங்கேயாவது தொலைந்து விடக் கூடாது இல்ல. அதனால தான்.”
“நான் தான் ஹேண்ட் பேக் வச்சிருக்கேனே, என்கிட்ட கொடுத்தா அதுல வச்சிருப்பேன் இல்ல.”
“சரி, பரவால்ல இருக்கட்டும். அது வேற வெயிட் ஆயிடும்.”என்றவனை ‘சாவி வெயிட் ஆகிடுமா.?’ என்ற கேள்வியுடன் நெற்றி சுருக்கி அவனைப் பார்த்தவளை, புன்னகையுடன் ஏறிட்டு, அவள் தோள்களில் கைப்போட்டு அழைத்துச் சென்றான்.
இவர்கள் சென்ற பாதையில் இரு பக்கங்களிலும் கடைகள் நிறைந்திருந்தன அவற்றைப் பார்த்த படியே கைகோர்த்து நடப்பது குளிரில் சுகமாக இருந்தது. குளிர் உடலை ஊடுருவ அவனோடு நெருங்கி நடந்தாள் தன்னையும் அறியாமல். சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டே. அவனோடு ஒட்டி நடப்பது குளிருக்கு இதமாக அவளுக்குச் சுகத்தை கொடுக்க. இவனுக்கோ போதையை கொடுத்தது.
அருகில் இருந்த உணவு விடுதியைப் பார்த்தவன்
“வா, சாப்பிட்டு கிளம்பலாம்.” என அவளை அழைக்க
“அதுக்குள்ளேயே வா, இன்னும் பாக்குறதுக்கு நிறைய இருக்கே.”
“அதெல்லாம் மறுபடியும் அப்புறமா வந்து பாத்துக்கலாம். இப்ப சாப்பிட்டு கிளம்பலாம். வேலை இருக்கு.” என்றவனிடம்
“என்ன வேலை.” என்றாள் கேள்வியுடன்.
“போனபிறகு, நீயே தெரிஞ்சிக்குவ என்ன வேலைன்னு.” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.
அதைக் கவனிக்காதவள் அவனுடன் உண்டு விட்டு, ரிசப்ஷனில் சாவியை வாங்கிக்கொண்டு அறைக்குள் வந்த வசுந்தரா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள் சில நொடிகள்.
பிறகே கணவன் கூறிய வேலை என்ன என்பது உரைத்தது. அவளைப் பின்னின்று அணைத்தவன்
“என்ன வேலைன்னு தெரிஞ்சிருச்சு போல.” என்றான் காதின் ஓரம் இருந்த மச்சத்தின் மீது முத்தமிட்டவாரு. அதில் கூசி சிலிர்த்து, நெளிந்தவளை தன்னை நோக்கித் திருப்பியவன்.
“ஓகே தானே.” என்று கேட்டவனிடம்,
சம்மதமாகத் தலையசைக்க. இவன் சொன்னபடி மலர்கள் மற்றும் பலூன் கொண்டு ஏற்பாடு செய்திருந்த அறையின் லாவண்டர் மணத்துடனான அலங்காரங்கள் வீணாகாமல் மஞ்சத்திலிருந்து மலர்கள் கலைந்து, காற்றில் கலந்த மணமாய் இரு உள்ளங்கள் ஒன்றாகி, அவர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்தார்கள் காதலுடன்.
குளிர் உடலை நடுங்க செய்யக் கதகதப்பாகத் தன் அருகில் தன்னை அணைத்தபடி படுத்திருந்த சஞ்சய் முகத்தைப் பார்த்தபடியே விழித்தெழுந்தாள் வசந்தரா. இரவு நடந்தவைகள் ஞாபகம் வர மெலிதாகச் சிரித்தவள்.
“பாக்க தான் சாப்ட்டா தெரியிறாங்க.”என நினைத்தபடியே குளியல் அறைக்குச் சென்றவள் தன்னை சுத்தப்படுத்தி குளித்துக் கணவன் எழும் முன்பே தயாராக அமர்ந்திருந்தாள். இவர்கள் அறையின் பெரிய ஜன்னலின் திரைசீலையை அகற்றினால் பனி படர்ந்த மலைகள் அழகாகக் காட்சியளித்தன. தன்னை மறந்து அதன் அழகில் லயித்திருந்தவளைவளை
“குட் மார்னிங்.” என்ற குரல் கலைத்தது. திரும்பிப் பார்த்தவளுக்கு ஆச்சரியம்தான்.
சஞ்சய் எழுந்து குளித்துவிட்டு வந்து இடுப்பில் டவளுடன் தலையைக் கைகளால் துவட்டியபடியே கண்ணாடி முன் நின்றபடி இவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எழுந்து சென்றது கூடத் தெரியாமல் இயற்கை அழகில் தன்னை மறந்து நின்றிருந்தாள். பெண்.
“காபி, டீ ஏதாவது குடிச்சியா.?” என்றவனின் கேள்விக்கு. இல்லை என்பதாகத் தலையை அசைக்க “கெட்டில் இருக்கே.” என்றபடி அதன் அருகில் சென்றவன் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கெட்டிலில் ஊற்றி, அதைக் கொதிக்க வைத்தவன். அருகில் இருந்த சர்க்கரை, காபித்தூள், பால் பவுடர் கொண்டு இன்ஸ்டன்ட் காபி தயாரித்தவன் தனக்காக ஒன்றை எடுத்துக்கொண்டு மனைவியிடம் ஒன்றை கொடுத்தான்.
அவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அதன் செயல் முறையைத் தெரிந்து கொண்டாள். இதற்கு முன் இதுபோல இடங்களில் தங்கி இராதவளுக்கு இவை அனைத்துமே புதுமையாக இருந்தது.
அவளைப் பார்த்துக் கொண்டே காப்பியை அருந்தி முடித்தவன். அடர் நீல நிற சல்வார் அணிந்து, ஈர கூந்தலை தளர்வாகப் பின்னலிட்டு, தயாராக அமர்ந்திருந்தவளை பார்த்தவன்,
“எங்க போகக் கிளம்பி இருக்க.?” எனக் கேட்டான். கடைசி மிடறு காபியை அருந்திவிட்டு.
“நேத்து மாதிரி இன்னைக்கும் போகணும் போலன்னு நினைச்சேன். அதான் தயாராகி உட்கார்ந்து இருந்தேன்.”
“எங்க போகணும்.?”
“சுத்தி பார்க்க.” என்றவளின் அருகில் வந்தவன். இடையோடு அவளை இறுக்கி பிடித்து, காதின் ஓரம் குனிந்தவன் அங்கிருந்த மச்சத்திற்கு மென் முத்தத்தைக் கொடுத்தவன்.
“சுத்தி தான் பார்க்கப் போறோம். வெளியே போய் இல்ல. உள்ளேயே. என்னை நீயும். உன்னை நானும்.” என்றவன், செயலில் இறங்கி நன்றாகச் சுற்றி பார்க்க முயல, அவனுக்கு வழி விட்டவள், அவள் சுற்றி பார்த்தாளா என்பது சந்தேகம்தான். அவன், இவளைச் சுற்ற ஆரம்பிக்கும்போதே மயக்கத்தில் விழிகளை முடியாவள் தான், பின் திறக்கவே இல்லை. அவன் திறக்க விடவும் இல்லை.
இன்றோடு அவர்கள் சிம்லாவிற்கு வந்து ஆறு நாட்கள் முடிந்து இருந்தது. இன்று மதிய உணவை முடித்துவிட்டு அவர்கள் சிம்லா மலையை விட்டுக் கீழே இறங்க வேண்டும். குளிருக்கு இதமாகப் பெரிய பிளாங்கெட்டின் உள் கணவனின் அணைப்பில் சுகமாக ஆழ்ந்திருந்தவள் விழிப்பு வர, எழுந்தவள். குளித்து முடித்து அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துப் பேக் செய்து கொண்டு இருந்தாள்.
பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவள்
“இந்த நாலு டிரஸ் போடவே இல்லை. வேஸ்டா தூக்கிட்டு வந்திருக்கோம். தேவையில்லாத சுமை.” என்று தன் போல் பேசியபடி துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவளை, “நான்தான் அப்பவே சொன்னேனே. நிறைய துணி தேவைப்படாதுன்னு. நீ தான் என் பேச்சு கேக்காம எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து இருக்க.” என்றான் விழித்தெழுந்து ஒரு கைக்கொண்டு தலையைத் தாங்கியபடி அரங்கநாதர் போஸ்ஸில் படுத்து, அவள் செய்வதையும் புலம்புவதையும் பார்த்து ரசித்தபடி இருந்த சஞ்சய்.
திடீரென்று கேட்ட அவனின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவனின் கள்ள புன்னகையை பார்த்து, பெட்டியை அடுக்கும் சாக்கில் குனிந்து கொண்டு வெட்கத்தில் சிவக்கும் முகத்தை மறைத்துக் கொண்டாள். அவளை மேலும் சிவக்க வைக்கும் முயற்சியில்
“பாரு, நாலு நாளா நமக்கு எந்தத் துணியும் தேவைப்படல்லை. டவலும் பெட்ஷீட்டும் மட்டுமே நமக்கு உடையாக இருந்தது. அத கூட ஹோட்டல்காரனே கொடுத்துட்டான். ஆளுக்கு ரெண்டு டிரஸ் உன்னுடைய ஹேண்ட் பேக்லையே வச்சு எடுத்துட்டு வந்து இருக்கலாம் தேவை இல்லாம இவ்வளவு பெரிய ட்ராலி உன்னால தான்.” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே.
அவனுக்கு முகம் காட்டாமல் மேலும் மறைத்தவள் பின்
“நீங்கப் போய்க் குளிச்சிட்டு வாங்க நான் காபி போடுறேன்.” என்று கூறியபடியே பெட்டியை அடுக்கி மூடியவள் அவன் செய்வதை முதல் நாள் பார்த்துக் கற்றுக் கொண்ட படி கெட்டிலில் தண்ணீரை சுட வைத்துக் காபி போட ஆரம்பித்தாள். இதற்கு மேல் அவளைச் சீண்ட வேண்டாமென நினைத்தவனும் சமர்த்தாக எழுந்து சென்றான் குளிப்பதற்கு. அவன் குளித்து வர இருவருக்கும் சூடான காபி தயாராக இருந்தது. குளித்து வந்தவன் உடையை அணிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்,
“என்ன இன்னைக்கும் டவலோட இருப்பேன்னு நினைச்சியா.? அப்படி இருக்க எனக்கும் ஆசை தான். ஆனா இன்னைக்கு நம்ம கிளம்புறோம் இல்லையா.? அதான், வீட்ல இருக்குறவங்களுக்கும் உனக்கும் ஏதாவது வாங்குவோம். சின்னதா ஒரு ஷாப்பிங்.” எனக் கண்ணடித்து கூறியவன் அவள் அப்படியே நிற்பதை பார்த்துவிட்டு
“என்ன போக வேண்டாமா.!” எனக் கேட்க
“போலாம், போலாம்.” என்றாள் வேகமாக.
“என்ன இவ்வளவு வேகமா பதில் வருது. அவ்வளவா படுத்தி வச்சுட்டேனா உன்ன.?” என்று மெதுவாக அவளின் அருகே வந்து, அவளை அணைத்தவாறு கேட்க, இல்லையெனத் தலையசைத்தாள் அவன் தோள் சாய்ந்த படி. அவள் நாடி பிடித்துத் தன்னை நோக்குமாறு உயர்த்தியவன் அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு.
“போலாமா.?” எனக் கேட்கச் சரியெனத் தலையசைத்து அவனோடு கிளம்பி சென்றாள் மகிழ்வுடன். கணவனின் காதலும் அன்பும் அவளுக்கு அவ்வளவு மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது.
ரெசார்ட்டிலேயே இருந்த உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு அவன் கைப்பிடியில் ரோட்டோர கடைகளை முதலில் சுற்றி வந்தார்கள் இருவரும். அவளுக்கும் அவளின் இரு சகோதரிகளுக்கும் தன் மாமியாருக்கும் என அழகான கைப்பைகளை வாங்கிக் கொண்டாள்.
பின் மால் ரோடு என அழைக்கப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் அவளை. பெரும்பாலான டூரிஸ்ட் கள் கூடும் இடம் இது. அதிகபட்சமான ஷாப்பிங் இங்கேயே நடைபெறும். அங்கு அழைத்துச் சென்றவன் சில உடைகளையும் கைவினைப் பொருட்களையும் வாங்கி கொடுத்தான். தந்தையைத் தவிர முதல் முதலாகத் தனக்கென ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து வாங்கித் தரும் கணவனின் மீது காதல் பெருகியது. இயற்கை கொஞ்சும் சூழலை அனுபவித்தபடியே அந்த வீதி முழுவதும் உலா வந்தார்கள் இருவரும். அங்கேயே உணவை முடித்துக் கொள்ள எண்ணி அருகில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன்.
அங்கிருந்து மெனு கார்டை அவள் கையில் கொடுத்து அவளையே ஆர்டர் பண்ண சொல்ல, இருவருக்கும் வேண்டியதை கூறிக் கொண்டவள் கடைசி பக்கத்தில் இருந்த மில்க் ஷேக் வெரைட்டிகளை பார்த்தபடி அமர்ந்திருக்க,
“மில்க்ஷேக் வேணும்னா சொல்லு. குடிக்கலாம்.” எனக் கூறியவனை பார்த்தவள், கண்கள் மின்ன வேகமாகத் தலையசைத்து
“எனக்குப் பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்.” என்றாள் குதுகல குரலில்.
“ஹ்ம்ம். எனக்கும் அதே சொல்லு.” என்றவன். காத்திருந்த வெயிட்டரிடம் உணவு வகைகளைக் கூறி அவர் சென்றபின் மனைவியை ஏறிட்டு பார்த்தவன்.
“அவ்வளவு பிடிக்குமா பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்.” எனக் கேட்க. ஆம் என்று வேகமாகத் தலையசைத்தாள். “எப்பவுமே அது மட்டும் தான் ஆர்டர் பண்ணுவியா.?” எனச் சிரித்தபடி கேட்டவனிடம்,
“எப்பவுமே வா. ஒரே ஒரு முறை தான் குடிச்சிருக்கேன்.” என்றவளை கேள்வியாகப் பார்க்க.
“ஸ்கூல் படிக்கும்போது ஃபேர்வெல்க்கு கிப்ட் வாங்க எங்க டீச்சர் என்னைத் தான் கூட்டிட்டு போனாங்க. அப்ப அவங்க வாங்கி கொடுத்தது தான். எனக்கு அந்த டேஸ்ட் ரொம்ப ரொம்ப பிடிச்சது.”என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தவன்
“ஸ்கூல் படிக்கும் போதா.? அதுக்கப்புறம் காலேஜ் படிச்ச இல்லையா.? அதுக்கப்புறம் கொஞ்ச நாள் வேலை பார்த்து இருக்கே. அப்ப எல்லாம் கூட உனக்கு வேண்டியதை நீ செஞ்சுக்கலயா.?”
இல்லையெனத் தலையசைத்தவள், “அப்படி நானா முடிவெடுத்து எங்கேயும் போகவும் முடியாது. எதையும் வாங்கவும் முடியாது.” என்றாள் மெதுவான குரலில். அவள் கைப் பிடித்து மெதுவாக அழுத்தியவன்.
“இனி அப்படி இல்லை. உனக்கு எங்க போகணும்னாலும் போகலாம்? என்ன வேணும்னாலும் வாங்கலாம்.” என்றான் ஆழ்ந்த குரலில்.
பின் அவள் ஆசைப்பட்ட மில்க் ஷேக்கை ரசித்துக் குடிப்பதை வேடிக்கை பார்த்தவன் அவளைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி எடுத்தவனாக உணவை முடித்துவிட்டு அவளோடு கிளம்பியவன். அறையையும் காலி செய்து மலையிலிருந்து கீழ் இறங்குவதற்கு ஒரு டாக்ஸியை பிடித்து அதில் பயணப்பட்டார்கள் இருவரும். முதலில் கால்கா அங்கிருந்து டெல்லி அங்கிருந்து சென்னையென அவர்களின் ஹனிமூன் பயணம் இனிமையான நினைவுகளுடன் இனிதே முடிவுப்பெற்றது.
ஊரிலிருந்து வந்த மறுநாளே வசுந்தராவை அழைத்துக் கொண்டு அவளின் தாய் வீட்டிற்கு சென்றான் சஞ்சய். அவர்களுக்கென வாங்கிக் வந்திருந்த பரிசு பொருட்களைக் கொடுக்கும் நோக்கத்துடன்.
வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்து வாங்கி வந்தவற்றை அனுபமாவிடம் கொடுக்க அனைத்தையும் பார்த்தவர் “ரொம்ப அழகா இருக்கு எல்லாமே.” என்றார் மகிழ்வுடன்.
இவர்கள் வீட்டுக்கு வரும் செய்தியை முன்பே ரகுபதியிடம் கூறியிருக்க. அவரும் இவர்களுக்காகக் காத்திருந்தார். எப்பொழுதும் போல வீட்டில் நடக்கும் செய்தி வசுமதியை சேர்வது போல இன்றும் சேர அவளும் தாய் வீட்டுக்கு வந்திருந்தாள்.
மாலை ஆறு மணிபோல் வந்தவர்களுக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பு கிடைத்தது வசுந்தராவின் தந்தையிடமிருந்து. கோகிலா வந்தவர்களை “வாங்க.” என அழைத்துவிட்டு மகளை மட்டுமே ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். வசுந்தராவின் முகத்திலிருந்து பூரிப்பையும் மகிழ்ச்சியையும் கண்டு மகள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட ரகுபதிக்கு மிகுந்த மகிழ்வாக இருந்தது. தங்கையின் முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட புன்னகையிலேயே அவள் கணவனோடு வாழ ஆரம்பித்து விட்டாள் என்பதை புரிந்து கொண்ட வசுமதி.
“என்னடி கல்யாணம் ஆகிப்போன ரெண்டு வாரத்திலேயே ஒரு சுத்து பெருத்துட்ட. மாமியார் வீட்டு சாப்பாடா.? முகம் எல்லாம் கூட மினு மினுன்னு டால் அடிக்குது.” எனச் சிறிது கேலியும் சிறிது பொறாமையுமாகக் கூறினாள்.
கணவன் முன்பே இப்படி பேசும் தமக்கையை சங்கடமாகப் பார்த்தவள் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவர்களுக்குச் சிற்றுண்டியும் காபியும் கொடுத்துப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார் ரகுபதி. கோகிலாவும் வந்ததிலிருந்து மகளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவளின் பூரிப்பு அவரின் கண்களுக்கும் தப்பவில்லை. மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்பதில் சிறு நிம்மதியே அவருக்கு.
கணவனின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தவளுக்கு ஜாடை காட்டி உள்ளே வருமாறு அழைக்க.
“இதோ வந்துடறேன்.” எனக் கணவனிடம் கூறிவிட்டு முன்பு அவள் உபயோகித்த அறைக்குள் சென்றாள் தாயை பின்பற்றி.
உள்ளே சென்றவுடன்,
“எப்படி இருக்க.?”என்று கேட்ட தாயிருக்கு
“நல்லா இருக்கேம்மா.” என்றாள் இவளும்.
“அதுதான் உன்ன பார்த்தாலே தெரியுதே. செம கவனிப்பு போல மாமியார் வீட்டுல.”என்று கேட்ட வசுமதிக்கு இப்போதும் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக நின்று கொண்டாள் வசந்தரா.
“நான் சொன்னது என்ன ஆச்சு.? ஏதாவது ஏற்பாடு பண்ணியா.?”என்ற அன்னையின் கேள்வியில் அன்று காலைத் தங்கள் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள் வசுந்தரா.
காலையில் இருவரும் ஒன்றாகக் காபி அருந்திக் கொண்டிருக்க, ஞாபகம் வந்தவனாக
“கேக்கணும் நினைச்சுக்கிட்டே இருந்தேன். உன்னோட அக்கௌன்ட் டீடைல் சொல்லு.”எனக் கேட்டவன், தன் அலைபேசியையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். அவன் கேட்டதை கூறியவள் ‘அவளின் அக்கவுண்ட் டீடைல்ஸ் இப்போது எதற்கு.?’ என நினைத்தபடி பார்த்துக் கொண்டிருக்க. அவளின் வங்கி கணக்கில் இருபதாயிரம் வந்ததற்கான நோட்டிபிகேஷன் காட்டியது. இவ்வளவு பெரிய தொகை எதற்கு என அவள் யோசிக்கும் போதே,
“நான் தான் அனுப்புனேன். உன்னோட செலவுக்கு.” என்றான் சஞ்சய்.
“எனக்கு என்ன செலவு இருக்க போகுது.?”
“எவ்வளவோ இருக்கும். ஒன்னு ஒண்ணுக்கும் நீ என்கிட்ட கேட்டுட்டு இருக்க முடியுமா.? அதனால, அது உனக்குத் தான். உனக்கு என்ன வேணுமோ நீ வாங்கிக்கலாம். நீ ஆசைப்பட்டதை செஞ்சுக்கலாம்.”என்றான் மென் புன்னகையுடன்.
காலையில் தனக்கெனக் கணவன் கொடுத்த பணம் பற்றி இவர்களுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களைத் தேடி வந்திருந்தார் ரகுபதி.
*இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்.? அங்க மாப்பிள்ளை மட்டும் தனியா உட்கார்ந்து இருக்காரு.” என்ற ரகுபதியின் கேள்வியில்.
“ஏன் நீங்க அங்க தானே உட்கார்ந்து இருந்தீங்க.” என்றார் கோகிலா சற்று சிடுசிடுப்புடன்.
“நான் அங்க தான் இருந்தேன். நீங்க இங்க என்ன மாநாடு போட்டுட்டு இருக்கீங்க தனியா.?” என்றவரின் சந்தேகமான கேள்வியில்,
“அப்பா, பெண்கள் நாங்க பேசிக்கிறதுக்கு நிறைய விஷயம் இருக்கும். உங்க பொண்ண அப்படி யாரும் இங்க கடிச்சு தின்னுட மாட்டோம். புதுசா கல்யாணம் ஆகி போனவ, புது இடம், அவ மாமியார் வீடு எப்படி இருக்குன்னு பொதுவா தான் பேசிட்டு இருந்தோம். பேசிட்டு நாங்களே வந்துடுவோம் கொஞ்ச நேரத்துல. நீங்கப் போய் மாப்பிள்ளை கூட உட்காருங்கள்.” என்ற வசுமதியின் கூற்றில்
“சீக்கிரம் வாங்க.” என்ற படி வெளியேறிச் சென்றார் ரகுபதி.
தந்தையின் தலை மறையும் வரை அமைதியாக நின்று இருந்த வசுமதி.
“என்ன அம்மா சொல்றது புரியாத மாதிரி நின்னுட்டு இருக்க.? அவங்க என்ன சொல்ல வராங்கன்னு உனக்குப் புரியலையா.? உனக்குக் கல்யாணம் ஆகும்போது சொன்னாங்கல்ல கல்யாணம் ஆகி போனாலும் இந்த வீட்டு செலவை நீயும் கொஞ்சம் பாத்துக்கணும்னு அதுக்கு தான் பணம் ஏதாவது ஏற்பாடு பண்ணியான்னு கேக்குறாங்க.?’ என்றவளை கூர்ந்து பார்த்த வசுந்தராவின் பார்வையை படித்தவள்,
“என்னை மட்டும் கேட்கிறீங்களே, நீ இந்த வீட்டுக்கு, கல்யாணம் பண்ணிக்கிட்டு போய், எவ்வளவு பணம் கொடுத்தங்கிற மாதிரி தானே பாக்குற. நான் உன்னை மாதிரி வசதியான வீட்டுல கல்யாணம் பண்ணிட்டு போகலை. என்னைச் சாதாரண ஒரு வீட்டில் தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. உன்ன மாதிரி வசதியான வீட்டுல கல்யாணம் பண்ணி கொடுத்து இருந்தா, இப்படி கேக்குற அளவுக்கு நான் வச்சுக்க மாட்டேன். பணத்தை கொண்டு வந்து அம்மா கைல கொட்டி இருப்பேன்.” என்றவளுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த வசுந்தராவின் அருகில் வந்த கோகிலா,
“அவ சொல்றது புரிஞ்சுதா.? இதெல்லாம் நம்ம வீடு நம்ம குடும்பம்னு உனக்கா தோனி இருக்கணும். எங்க.”என்று இழுத்தவர் மேலும் அவளை நெருங்கி
“இப்ப ஏதாவது பணம் எடுத்துட்டு வந்து இருக்கியா.? இல்லையா.? என ரகசிய குரலில் கேட்க.
‘என்னை எப்போ இது என் வீடு, என் குடும்பம்னு நினைக்க வச்சிருக்கீங்க.?” என யோசித்தபடி நின்றிருந்தவளை
“உன்ன தான் கேட்கிறேன்.” என்று அவள் கைப்பிடித்து உலுக்கும் போதே உள்ளறைக்கு வந்திருந்தார் ரகுபதி.
“இன்னும் பேசி முடியலையா நீங்க. இதுக்கு மேல என்ன பேசுறதா இருந்தாலும் அப்புறமா பேசுங்க. இப்ப மாப்பிள்ளை கிளம்பிட்டாரு. உன்ன கூப்பிடுறாரு. வா வசந்தரா.” எனக் கையோடு மகளை அழைத்துக் கொண்டு சென்றார்.
‘அப்பாடி.” என நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவரின் பின்னே சென்றாள் வசுந்தரா.
இவர்கள் வெளியே வரும்போது கிளம்பி செல்வதற்கு தயாராக எழுந்து நின்றிருந்தான் சஞ்சய்.
“சாப்பிட்டு போலாமே மாப்பிள.” என்ற கோகிலாவின் விருந்தோம்பலில்.
“இருக்கட்டும் அத்த.” என்றபடி அவர்களுக்கு வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை மனைவியின் மூலம் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்றார்கள் இருவரும்.
தாய் வீட்டிற்கு வந்ததற்கு புதிதாக ஒரு பேக் கிடைத்தது என்று சந்தோஷத்தில், அவள் வாங்கி வந்திருந்த பொருளின் தரம் பார்த்தே அவள் எப்படிப்பட்ட செல்வ நிலையில் இருக்கும் வீட்டில் வாழச் சென்று இருக்கிறாள் என்பதை புரிந்தவள், நீண்ட பெருமூச்சை விட்டு. தானும் அவ்வப்போது வேண்டியதை தங்கையிடம் கேட்டுப் பெற வேண்டும். என்ற முடிவுடன் தன் வீட்டை நோக்கிச் சென்றாள் வசுமதி.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
4
+1
+1


