Loading

அத்தியாயம் 26

திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது. புகுந்த வீட்டில் நன்றாகவே பொருந்தி கொண்டாள் வசுந்தரா. மாமனார், மாமியாரும் பெண் குழந்தை இல்லாத குறையை இவளைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டார்கள். அவர்களின் பாசத்திலும் கணவரின் காதலிலும் திகழ்ந்து சந்தோஷ பூரிப்பில் மிதந்துகொண்டிருந்தாள். அவர்களின் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொண்டவள் கிச்சனையும் முழுதாகத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

மருத்துவரான மாமியாருக்கு இவள் பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்து கொடுத்தாள். இதுவரை குடும்பத்திற்கு என அவர் செய்ததை இவள் தன் கையில் எடுத்துக் கொண்டு அனைவரையும் கவனித்துக் கொண்டாள். அதில் அனுபமாவிற்கு தாள முடியாத பெருமையே. தான் இதுவரை கணவனையும் மகனையும் கவனித்துக் கொள்ள. தற்போது தன்னை கவனிக்க ஒருவர் என்பதே அவருக்கு மிகுந்த மகிழ்வை கொடுத்தது.ஆரம்பத்தில் இருந்த தயக்கங்கள் நீங்கிச் சற்று இலகுவாகக் கணவனுடனும் பேசவும் பழகவும் ஆரம்பித்திருந்தாள்.

மாமியார் பிளாஸ்கில் காபி போட்டு வைக்கும் பழக்கத்தை முதலாக மாற்றி இருந்தாள். அவரவர் வரும்போது சூடாக அவர்களுக்குக் கலந்து கொடுத்தாள். மாமனாரும் மாமியாரும் பத்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவதால் ஏழு மணிக்கு எழுந்து வேலை செய்வது இலகுவாக இருந்தது. வெகுசீக்கிரம் எழுந்து விட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாகவே வளம் வந்தாள் பெண்ணவள். கணவன் மட்டுமே எட்டு மணிக்கு மேல் கிளம்புவான். அதுவும் அவன் வேலை செய்வது எம் என் சி கம்பெனி ஆதலால் மதிய உணவை அவர்களே கொடுத்து விடுவார்கள். காலை உணவும் அங்கே கிடைக்கும் ஆனாலும் இவள் கணவனுக்கும் சேர்த்தே காலை உணவைச் செய்து விடுவாள்.

ஸ்ட்ரைன் பண்ணிக்காத என்று கணவன் சொன்னாலும் கேட்பதில்லை. வீட்டைப் பராமரிப்பதும் வேலை செய்வதும் அவள் பழகிய ஒன்று என்பதால் அவளுக்கு எதுவுமே சிரமமாக இல்லை. அதுவும் மனமுவந்து தன் மனதிற்கினியவர்களுக்கு மகிழ்வோடு செய்யும்போது ரெட்டிப்பு சுறுசுறுப்புடன் வலம் வந்தாள்.

அன்றும் வார நாட்களில் ஒரு நாளாக இருக்க வேலைகளைச் செய்வதற்காக எழுந்தவளுக்கு காலைக் கீழே வைக்க முடியாமல் தலை சுற்றி கொண்டு வந்து மறுபடியும் மெத்தையில் அமர்ந்து விட்டாள். இரு கைகள் கொண்டு தலையைப் பிடித்துப் படி அமர்ந்திருந்தவளுக்கு அறையே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. மறுபடியும் சுருண்டு படுத்துக் கொண்டாள். எப்பொழுதும் தனக்கு முன் எழுந்து சென்றுவிடும் பெண் இன்று சுருண்டு படுத்திருப்பதை யோசனையுடன் பார்த்தவன் தன்னை சுத்தப்படுத்தி வந்து பார்க்க, அப்போதும் அவள் அதே நிலையில் இருப்பதை பார்த்து மெதுவாக அவளை எழுப்பியவன்,

“என்ன ஆச்சு.?” என்று கேட்க.
“தலை சுத்துது.” என்றபடி மறுபடியும் கண்களைக் கூடத் திறக்க முடியாமல் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் பதிலில் ஏதோ புரிவதாக இருக்க மருத்துவர்கள் ஆன பெற்றோர்களிடம் விசயத்தைக் கூற, இருவருமே அவனின் அறைக்கு வந்து பெண்ணவளை சோதித்துப் பார்க்க அவர்களின் வாரிசு ஜம்மென்று வீற்றிருந்தது அவள் மணி வயிற்றில். மகிழ்வுடன் மருமகளை அணைத்த அனுபமா.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.” என்று வாழ்த்துக்கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டவர் தற்போதைய அவளின் மயக்கத்திற்கு சிறு வைத்தியம் செய்து அவளைச் சற்றே தெளிய வைத்தார்.
“என் பிரண்டோட மனைவி கய்னி தான்.(மகப்பேறு மருத்துவர்) அவங்க கிட்ட பேசிட்டு ஈவினிங் அப்பாயிண்ட்மெண்ட் போட்டு வச்சிடறேன். பாத்துட்டு வந்துடலாம்.” எனக் கூறிய பிரபு அலைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட.

“மெதுவாய் இறங்கி கீழ வரியா.? இப்போ எப்படி இருக்கு தல சுத்து.?” என மருமகளிடம் கேட்க. தற்போது பரவாயில்லை என்று கூறியவள் குளியலறை நோக்கிச் செல்ல, “சீக்கிரம் கீழ வா. உனக்குச் சூடா குடிக்க கலந்து வைக்கிறேன்.” என்று கூறியவர் சந்தோஷ் ஆர்ப்பாட்டத்துடன் கீழே இறங்கி சென்றார்.

இதற்கு முழு முதல் காரணமான ஆண் அவனை யாருமே கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்து செல்பவர்களைப் பார்த்தவனுக்கு முகம் கொள்ளா புன்னகை தான். குளியலறையிலிருந்து வெளிவந்தவளுக்கு கணவனை எதிர்கொள்ள வெட்கமாக இருந்தது. அவள் எப்போது வெளி வருவாளெனக் காத்திருந்தவன் அவள் வந்ததும் வேகமாக அவளை இறுக்கி அணைத்தவன் எப்பொழுதும் போலக் காதின் அருகே இருக்கும் மச்சத்தில் அழுத்த முத்தமிட்டு,

“என்னடி அதுக்குள்ள ஜூனியர் வந்துட்டாங்க. உன்னையே நான் இன்னும் முழுசா சுற்றி பார்க்கல.” என்றான் கேலியுடன்.
“நீங்க எவ்வளவு சுத்தி பார்த்திருக்கீங்கங்கிறதுக்கு விடை தான் இது.” என்றாள் மென் புன்னகையுடன்.
“உனக்கு ஓகே தானே.” என்று அவள் முகத்தில் ஒட்டி இருந்த முடிகளை ஒதுக்கிவிட்டபடியே கேட்க.
“ஏன் ஓகே இல்லாமல்.? குட்டி பாப்பாங்க எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
“அதான் தெரியுமே. உன்ன முதன்முதலில் பார்க்கும் போதே இடுப்புல ஒரு குட்டியோட தான பார்த்தேன்.”என்றான் குறுஞ் சிரிப்புடன்.
“ஏன் உங்களுக்குக் குட்டி பாப்பா பிடிக்காதா.?”
“ரொம்ப, ரொம்ப பிடிக்கும். ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லேயேன்னு ரொம்ப நாள் ஏங்கி இருக்கேன். இப்போ அதெல்லாம் விடச் சிறப்பா என் பிள்ளை.” என்றான் மகிழ்வுடன்.

“எனக்கே எனக்குன்னு என் ஜூனியர். எங்க அம்மாக்கு எப்பவுமே ஒரு வருத்தம் இருக்கு. எனக்கு அப்புறமா ஒரு குழந்தை தங்களன்னு. அதனால நாம ஒன்றோட எல்லாம் நிறுத்தக் கூடாது. ஒரு மூணு, நாளாவது பெத்துக்கணும். உனக்கு ஓகே தானே.”
“மூணு, நாலா.?” என்று அதிர்வோடு கேட்டவளை பார்த்தவன்.
“ஏன் முடியாதா.?” எனப் பாவமாகக் கேட்க,
“முடியும்.” என்று விட்டுத் தலையைக் குலுக்கியபடி,
“முதல்ல இத நல்லபடியா பெத்து எடுப்போம். அப்புறம் மூணு, நாலு யோசிப்போம்.” என்றாள் அவன் கைச் சிறையில் நன்றாகப் பொருந்திய படி.
அன்று அலுவலகத்திற்கு செல்லாமல் குடும்பமாக மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, அவளின் கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டார்கள். அவர்களே மருத்துவர்களாக இருப்பதினால் அதிகப்படியான கேள்விகளோ விளக்கங்களோ தேவைப்படாமல் மருத்துவர் கூறியதை கேட்டுக்கொண்டு அவளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

முறையே அவளின் தந்தை ரகுபதிக்கு அழைத்துச் சொல்ல. அவருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டது. திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகியிருந்த போதும் பெரிய மகளுக்குக் குழந்தை வரம் இன்னும் கிட்டாமல் இருக்க, திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் இரண்டாம் மகளின் கர்ப்ப செய்தி அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருந்தது. கரகரத்த தொண்டையை சரி செய்து அவர்களுக்கு வாழ்த்து கூறியவர் தன் மகளிடமும் பேசிவிட்டு நாளை வந்து பார்ப்பதாக உறுதி அளித்து அலைபேசியை அனைத்து இருந்தார்.

“வசுந்தரா. மா நீ பாட்டுக்குக் காலைல எழுந்து வந்து எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்காத உனக்கு மார்னிங் சிக்னஸ் இருக்கும் போல. அதுவும் உனக்குக் கொஞ்சம் அதிகமாக இருக்கும் போல.”என அத்தை கூறியதை கேட்டுக் கொண்டவள் சரி என்பதாகத் தலையசைத்துக் கொண்டாள். அவளுக்குமே தலைச்சுற்று சற்று அதிகமாகவே இருந்தது. மாத்திரை எடுத்துக் கொண்டதால் சற்று மட்டுப்பட்டு இருந்தது, மீண்டும் அவளை எழ முடியாமல் படுத்திக் கொண்டுதான் இருந்தது.

மறுநாள் எழும் போதே தலைச்சுற்றுடன் வாந்தியும் சேர்ந்து கொண்டது சோர்ந்து துவண்டவளை தாங்கிக் கொண்டான் சஞ்சய். அன்றும் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்தான்.
அவள் குடிப்பதற்கும் உண்பதற்கும் மேலே கொண்டுவந்து கொடுத்தவனை பார்த்தவள்
“நீங்க ஆபீஸ் போலையா…?” எனச் சோர்ந்த குரலில் கேட்க.
“போலாம், போலாம் எங்க ஓடிட போகுது.” என்றான் அசட்டையாக. உணவுடன் மருந்தும் வந்திருக்க அதை உண்டவளுக்கு சற்று தெம்பாக இருந்தது.

குளித்து வந்தவள் சஞ்சையை பார்க்க. அவன் மும்முறமாக லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் கீழே போறேன்.”என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்.
“உனக்காக நான் இங்க வேலைக்கு லீவு போட்டுட்டு உட்கார்ந்திருந்தா. நீ கீழ போறன்னு சொல்ற.?” எனக் கேட்டவனுக்கு பதில் கூற ஆரம்பிக்கும் போதே அவர்களின் அறை வாசலில் அரவம் கேட்டதில் திரும்பிப் பார்க்க, ரகுபதி மற்றும் கோகிலா வந்திருந்தார்கள்.

 அவர்களோடு அனுபமாவும் மேல் ஏறி வந்திருந்தார்.
“வாங்க மாமா, வாங்க அத்தை.” என்று முறையே அவர்களை வரவேற்றிருந்தான் சஞ்சய்.
தந்தையை கண்டதும் அவரின் அருகே விரைந்தவள்.
“வாங்கப்பா, வாங்கம்மா.” என அவளும் வரவேற்க, அவளை லேசாக அணைத்து கொண்டார் ரகுபதி.
“எப்படிம்மா இருக்க.?” என்றவரின் கேள்விக்கு நன்றாக இருப்பதாகத் தலையசைத்துக் கொண்டாள் பெண்.

அவர்களையே பார்த்திருந்த சஞ்சய்க்கு, தாயுடன் மனைவிக்கு அவ்வளவாக ஒட்டுறுதல் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவளுக்கு இல்லை என்பதை விட அவளின் தாய்க்கு சுத்தமாக இல்லை. என்பது மிக நன்றாகத் தெரிந்தது அவனுக்கு.
‘ஏன்.? இப்படி. ?’ என்று யோசித்தவன் இதைப் பற்றி மனைவியிடம் பேச வேண்டும் எனக் குறித்து கொண்டான்.

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே போக முற்பட அறையைச் சுற்றி பார்க்கும் நோக்கத்தில் கோகிலா அங்கே நின்றுவிட, தாயும், மகளும் ஏதேனும் தனிமையில் பேசிக்கொள்வார்கள் என நினைத்து மற்றவர்கள் வெளியேறினார்கள். ஆனாலும் சந்தேகமாக ரகுபதி மனைவியைப் பார்த்துவிட்டே சென்றார். கர்ப்பமாக இருக்கும் மகளிடம் இப்பொழுதேனும் மனைவி பாசமாக நடந்து கொள்ளட்டும் என்று நினைத்தவராக அவரும் கீழே இறங்கி சென்றார். அறையைச் சுற்றிப் பார்த்த கோகிலா,
“ஹ்ம்ம். ரொம்ப அழகா இருக்கு. இந்த அறையே நம்ம வீடு அளவுக்கு இருக்கும் போல. ” என்றார் சுற்றிப் பார்த்துக் கொண்டே.

“அப்புறம் சந்தோஷமா இருக்க. நல்லது. நாங்களும் சந்தோஷமா இருக்க வேண்டாமா.?” எனக் கேட்கும் அன்னையைப் பார்த்தவள், தன்னை பற்றி எதுவும் நலம் விசாரிக்காமல் தன் நோக்கத்தை மட்டும் பேசும் தாயைப் பார்த்து, பெருமூச்செறிந்தபடி,
“நாளைக்கு வசந்தியோட அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுறேன்.” என்றாள். அதற்கு மேல் தொல்லை தாங்காமல்.

“ம்ம் சரி, நீ எப்படி இருக்க.? நான் நாளைக்கு தான் வரணும்னு நினைச்சேன். உங்க அப்பா தான் இன்னைக்கே போகணும்னு பிடியா நின்னுட்டாரு.” என்று அவர் அழுது கொண்டு கூறும் போதே, வாசலின் அருகே வந்திருந்தான் சஞ்சய்.
அவனைப் பார்த்ததில் இரு பெண்களுக்குமே அதிர்வு தான்.
அவர்கள் பேசியதை எங்குக் கேட்டிருப்பானோ என இரு பெண்களும் இரு வேறு கோணத்தில் நினைத்துக் கொண்டார்கள்.

“அம்மா கீழ கூப்பிட்டாங்க.”என இருவரையும் பார்த்துக் கூறியவன் அவர்களோடு கீழே இறங்கி சென்றான்.

கீழே வந்தவர்களைக் காலை உணவு உண்ண அழைக்க, அவர்களும் தயக்கம் இல்லாமல் அமர்ந்து கொண்டார்கள்.
சோர்வையும் மீறி மகளின் முகத்தில் தெரிந்த புன்னகையையும் மகிழ்வையும் பார்த்து நிம்மதி கொண்டார் ரகுபதி.

தன் அருகில் அமர்ந்திருந்த பிரபுவையும் உணவு பரிமாறிக் கொண்டிருந்த அனுபமாவையும் பார்த்த ரகுபதி.
“பெண்ணை, எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகட்டுமா சம்பந்தி.? ஒரு பத்து நாள் வெச்சி இருந்துட்டு அனுப்புறோம்.”
“தாராளமா கூட்டிட்டு போங்க. அவளுக்கும் அம்மா வீட்டுக்குப் போகணும்னு இருக்கும் தானே.”
என்ற அனுபமாவின் பதிலில் அதிர்ந்து நின்றவள் வசுந்தராதான்.
பரிதவிப்புடன் கணவனைப் பார்த்தாள்  ‘ஏதேனும் செய்யேன்…’ என்பதைப் போல. அதே நேரம் அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். பின், ரகுபதியை நோக்கி,

“இல்லைங்க மாமா. தப்பா எடுத்துக்காதீங்க. அவளுக்கு ஏற்கனவே மயக்கம், தல சுத்து எல்லாம் ரொம்ப அதிகமாவே இருக்கு. எங்க அம்மா, அப்பா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். அதனால எது ஒன்றென்றாலும் அவங்க உடனே பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அவ இல்லாம என்னால இருக்க முடியாது. பிரசவத்தை கூட நானே பாத்துக்கலாம்னு இருக்கேன். நீங்க எதுவும் நினைக்காம உங்களுக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் வந்து பாத்துட்டு போங்க.” என்றவனின் பதிலில் அனுபமா தான்,
“என்ன சஞ்சய் இப்படி சொல்ற.? அவங்களுக்கும் அவங்க பொண்ண பக்கத்துல வச்சி சீராட்டனும்னு இருக்காதா.?  வசந்தராவும் அவங்க வீட்டுக்குப் போகணும்னு ஆசைப்படலாம் இல்லையா. நீயா ஒரு முடிவு எடுத்துப் பேசுறது நல்லா இல்ல. சொல்லிட்டேன்.” என்றார் ஆதங்கமாக.

கணவன் பேச்சில், எங்கு அவள் வீட்டிற்கு வந்தால் அவளுக்கு வேலை பார்க்க நேருமோ  என யோசித்துக் கொண்டிருந்த கோகிலா,
“மாப்பிள்ளை சொல்றதும் சரிதான். நீங்க மருத்துவர்கள் வீட்டிலேயே இருக்கும்போது எந்தப் பிரச்சனையும் இல்ல. இதே அவ அங்க வந்தாள்னா    ஒவ்வொண்ணுக்கும் அவசரமா ஓட வேண்டி வரும். அது சிரமம் தானே.” என்றார் லேசாகச் சிரித்தபடி.
பெற்ற தாயே இப்படி கூறுவது ஆச்சரியமாக இருந்தது அனுபமாவிற்கு.
விரக்தியான புன்னகை அரும்பியது வசுந்தராவிற்கு ‘தான் கர்ப்பமாக இருக்கும் இந்நிலையில் கூடத் தன்னை வைத்துப் பார்க்கத் தன் அன்னைக்கு மனதில்லை.’ என்பதை நினைத்தவளுக்கு கண்ணீர் அரும்பியது நாசுக்காக அதைத் துடைத்துக் கொண்டு பெருமூச்செறிந்தாள்.

தன் பெண்ணை வைத்து எப்போதும் தன்னால் சீராட்ட முடியாது தன் வீட்டில் என்பதை தெரிந்துகொண்ட ரகுபதி
“மாப்ள சொல்றதும் சரிதான். எப்ப எல்லாம் எனக்குத் தோணுதோ அப்பெல்லாம்  நான் வந்து பார்த்துக்கிறேன். என்னடாமா.?” என மகளைப் பார்த்துக் கேட்க. சரி என்பதாகத் தலையசைத்தாள் அவளும். அவளுக்கென வாங்கி வந்திருந்த பழங்களை அவளிடம் கொடுத்து விட்டு விடை பெற்றார்கள் இருவரும்.
வீட்டின் கேட்டைத் தாண்டிச் சென்றதும்.
“கர்ப்பமா இருக்குற நேரத்துல கூட அந்தப் பொண்ண உன்னால பார்த்துக்க முடியாது இல்ல. சீய்.! நீ எல்லாம் என்ன பொம்பளையோ.? நல்லவேளை தங்கமான புகுந்த வீடு அமைஞ்சிருக்கு என் பொண்ணுக்கு.” என்று கோபமும் நிம்மதியும் ஒருங்கே கொண்டு கூறியவர், அருகில் சென்று இருந்த ஆட்டோவைக் கைதட்டி அழைத்தபடியே முன்னாள் செல்ல,

“ம்ம்க்கும்.” என்று நாடியை தோளில் இடித்தபடி அவரின் பின்னே சென்றார் கோகிலா.

சஞ்சய் வீட்டில், இரவு உணவு முடிந்து மாத்திரைகளையும் உட்கொண்ட பிறகு தன் அருகில் படுத்த வசுந்தராவை தன்  கை வளைவுக்கு மெதுவாக இழுத்துக் கொண்ட சஞ்சய்.
“உங்க அம்மாக்கு உன்னைப் பிடிக்காதா.?” என நேரடியாகவே  கேட்டிருந்தான்.
“கண்டுபிடிச்சிட்டீங்களா.?” என்றவளின் கேள்விக்கு,
“முதலிலேயே டவுட் இருந்தது. இன்னைக்கு தான் கன்ஃபார்ம் பண்ணேன்.” என்றவனுக்கு மெலிதான புன்னகையை கொடுத்தவள்.தன் பதிலுக்காக அவன் காத்திருப்பதை பார்த்துவிட்டு.

“எங்க அம்மாக்கு, நான் அவங்களையும் அவங்களுடைய மற்ற இரண்டு மகள்களையும் போலக் கலரா, அழகா  இல்லைன்னு ரொம்ப வருத்தம். அதுவும் இல்லாம நான் அப்படியே அவங்களுக்கு பிடிக்காத அவங்க மாமியார், அதாவது என் அப்பாவுடைய அம்மா, அவங்க ஜாடை. அதனாலயே அவங்களுக்கு என்னைப் பிடிக்காது.”
“இது என்ன அநியாயமா இருக்கு.? பாட்டியோட ஜாடையில இருக்கிறது உன்னோட தப்பா.?”
“இதைத்தான் எப்பவுமே நான் எங்க அப்பா கிட்ட கேட்பேன்.”
“உங்க அப்பா எதுவும் சொல்லமாட்டாரா.?”
“எனக்காக நிறைய சண்டை பிடிச்சு இருக்காரு. அதுக்கும் சேர்த்து இன்னும் எனக்குத் தான் அடி விழும். அதனால கேட்கிறதையே  விட்டுட்டார்.”
“ஹ்ம்ம்.! அப்படி ஒன்னும் நீ கலர் கம்மி இல்ல. அழகான பிஸ்கட் கலர் தான். அதுவும் இல்லாம வெள்ளையா இருக்கிறது தான் அழகுன்னு  யார் சொன்னது.? அப்புறம், உன்னை அழகில்லன்னு சொன்ன அவங்க பார்வையில தான் கோளாறு இருக்கு. என் கண்ணுக்கு நீ பேரழகியா தான்  தெரியற.” என்றவன் பின்,
“அவங்க எல்லாம் ஒரு கூட்டு. நீயும் உங்க அப்பாவும் தனி அணியா.?” என்றவனின் கேள்விக்கு ஆம் என்பதாகத் தலையசைத்தாள் அவள்.

“அவங்க என்ன உன்னை ஒதுக்கறது. நாம ஒதுக்குவோம் அவங்களை எல்லாம் இனி.” என்றான் அவள் கன்னத்தில் முத்தமிட்ட வாரு.
சிறிய மௌனத்திற்கு பிறகு, ஞாபகம் வந்தவனாக,
“அக்கவுண்டுக்கு இருபத்தைந்து  ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன் செக் பண்ணிக்கோ.” எனக் கூற
“எதுக்கு அவ்ளோ பணம்.?”
“இப்ப நீ மட்டும் தனியா இல்லையே. ஜூனியர் வேற இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும்  வேணுங்கிறத வாங்கிக்கோ.” என்றவனுக்கு பதில் கூறாமல், அவள் சிந்தனையை ஆக்கிரமித்து இருந்தது அன்னை கேட்டிருந்த பணமே.
“என்னாச்சு.?” என்று கேட்டவனிடம் “ஒன்றுமில்லை.” என்று பதில் கூறியவள் நாளை அன்னை கேட்ட பணத்தை தங்கையின் வங்கி கணக்கிற்கு  அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்தவளாகக் கண்ணயர்ந்தாள்.

அன்று கணவனும் வேலைக்குச் சென்று இருந்தான். மாமனார் மாமியாரும் தங்களின்  கிளினிக்கிற்கு சென்றிருந்தார்கள். இவள் எழுந்து கீழே வரும் போதே அனுபமா அனேக வேலைகளை முடித்து இருந்தார். மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மயக்கமும் வாந்தியும் சற்று மட்டுபட்டிருந்தது.

வேலை செய்யும் வேணி அம்மா வந்து மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்க. ஓய்வாகச் சோபாவில் அமர்ந்திருந்தவள் அலைபேசி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்நேரம் வசுமதியிடமிருந்து அழைப்பு வந்தது. பொதுவாகத் தமக்கை இவளுக்கு அழைப்பதில்லை திருமணம் முடிந்த இந்த ஒரு மாதத்தில் கூட இதுவரை ஒரு முறை கூட அழைத்து நலம் விசாரித்ததில்லை. இன்று திடீரென அவளிடமிருந்து அழைப்பு வரவும் யோசனையாக அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு அதற்கு வாழ்த்து கூற அழைக்கிறாளோ என நினைத்தவள் அழைப்பு முடியும் தருவாயில் எடுத்து “ஹலோ.” என்று இருந்தாள்.
“ஹலோ வசந்தரா. எப்படி இருக்க.? ஏன் இவ்வளவு நேரம் போன் எடுக்க.?நீ தூங்கிட்டியோன்னு நெனச்சேன்.”
“இல்ல இல்ல போன் சார்ஜ்ல இருந்தது.”
“ஓஹ்.! சரி, சரி கர்ப்பமா இருக்கியாம் வாழ்த்துக்கள். அம்மா சொன்னாங்க.”
“ம்ம். தேங்க்ஸ்.” என்றாள் மெதுவாக.
“ஹ்ம்ம். நீ கர்ப்பமாயிட்ட. ஆனால் நானு. இப்போ இந்த விஷயம் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா எங்க மாமியார் ஆடும். என்னைக் குறை சொல்லி. ஹ்ம்ம். என்ன செய்றது.? எல்லாம் என் விதி.வசதி, வாய்ப்பு இருந்தா டாக்டர் கிட்ட போய்க் காட்டி ட்ரீட்மென்ட் எடுக்கலாம். எங்க அதுக்கும்தான் இங்க வழி இல்லையே. அப்புறம் அம்மா சொன்னாங்க நீ காசு அனுப்புறேன்னு சொன்னியாமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அனுப்பிட்டியா.?” என்று கேட்ட பிறகே, அவளுக்கு அது ஞாபகம் வந்தது.

“இல்லை இனிமேதான் அனுப்பனும்.”
“சரி, சரி அப்புறம் தப்பா எடுத்துக்காத. பணம் இருந்தா எனக்கும் அனுப்புறியா. டாக்டர் கிட்ட காட்டணும்னு பார்க்கிறேன்.”
“எவ்… எவ்வளவு வேணும்.”  எனக்  கேட்டாள் சற்று பயத்துடன்.
“ஒரு பத்தோ, இருபதோ  உனக்கு எவ்வளவு முடியுமோ அனுப்பு.”
“பத்தாயிரமா.? எனத் தெளிவுபடுத்திக் கொள்ள மறுபடியும் கேட்க.
“ஆமாம். அது சின்ன அமௌன்ட் தானே.” என்றாள்  அவளும்.

அம்மா வேறு கேட்டிருக்க தற்போது இவளும் கேட்டதில் பயந்து வந்தது அவளுக்கு. கணவன் அனுப்பியதில் மொத்தம் நாற்பத்தைந்தாயிரம் இருந்தது. இவளின் வங்கி கணக்கில் ஏற்கனவே ஐந்தாயிரத்து சொச்சம் இருந்தது. அவர்கள் கேட்டபடி அம்மாவிற்கு இருபதாயிரமும் தமக்கைக்கு பத்தாயிரமும் அனுப்பலாமென முடிவு செய்தவள் காத்திருந்தவளுக்கு சரி என்ற பதிலைக் கூறிவிட்டு அலைபேசியை அனைத்தவள் இருவருக்கும் அவர்கள் கேட்டபடி பணத்தை அனுப்பி வைத்தாள். கணவனுக்கு இதைச் சொல்வதா வேண்டாமா என்ற யோசனையுடன்.

அடுத்து வந்த ஒரு வாரமும் வாந்தி, மயக்கம் என மிகவும் சிரமப்பட்டாள்  வசுந்தரா. மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டாலும் மசக்கை அவளைப் பாடாய்படுத்தியது. சஞ்சய்க்கு விடுமுறை எடுக்க முடியாததால் அனுபமாவே அவளைப் பார்த்துக் கொண்டார்.
“ஏம்மா மாத்திரை போட்டுக் கூட வாந்தி மயக்கம் சரியாகல.?”என்று கேட்ட மகனிடம்
“சில பேருக்கு அப்படித்தான். மாத்திரை மருந்து எடுத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது.
உன் புள்ள அப்படி தொல்லை படுத்துது அவளை.” என்று சிரித்தவாறு கூற அவனும் மருத்துவரான அம்மா சொல்வதை ஏற்றுக்கொண்டான்.

இப்படியாக அவளின் கர்ப்ப நாட்கள் சிறப்பாக நகர்ந்தது. மாதாமாதம் சஞ்சய் அவளுக்குப் பணம் அனுப்புவதும், அன்னைக்கும் தமக்கைக்கும் அவர்கள் கூறும் மருத்துவ செலவு, காலேஜ் பீஸ், தங்கைக்கு நகை சீட்டு என அவர்கள் கேட்பதற்கு எல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். கணவனிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் ஏதேனும் நிகழ்வுகள் நடந்த அவளைச் சொல்லவிடாமல் மறக்க வைத்திருந்தது.

அவளின் பிரசவ காலம் மகிழ்வுடனேயே கழிந்தது. அனைத்து செக்கப்பிற்கும்  உடன் சென்று விடுவான் சஞ்சய். சில நேரம் இவர்களுடன்  பிரபுவும் சேர்ந்து கொள்வார். கணவன் மற்றும் மாமியாரின் கவனிப்பில் நன்றாகவே பிரசவ காலத்தை அனுபவித்தாள்.

தங்களின் வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவை ஆவலாக அனைவருமே எதிர்பார்த்து இருந்தார்கள். மாமியார் வீட்டில் நன்றாகவே பொருந்திக் கொண்டாள் வசுந்தராவும். அன்னை வீட்டில் கிடைக்காத சுதந்திரமும், அன்பும், பாசமும் இங்கு அவளுக்குத் தங்கு தடையின்றி நிறையவே கிடைத்தது. அதோடு கணவனின் அளப்பரியாத காதலும். அவ்வப்போது ரகுபதி வந்து மகளைப் பார்த்துச் செல்வார். பிறந்த வீட்டில் அவளின் நிலையை ஏற்கனவே பட்டும் படாமல் சஞ்சய் தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்க. அவர்களும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மருமகளை அவர்களே மகளைப் போலப் பார்த்துக் கொண்டார்கள்.பிரசவ கால சிரமங்களைப் பெரும்பாலும் அனுபமாவே நிவர்த்தி செய்துவிடுவார். இப்படியாக ஒன்பதாவது மாதமும் நெருங்கியிருந்தது. ஒரு வாரத்தில் சீமந்தம் செய்வதாக முடிவு செய்து இருந்தார்கள்.

மண்டபம் பார்த்து அதற்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். உணவு செலவைச் சஞ்சய் முழுவதுமாக ஏற்றிருந்தான். மற்ற செலவுகளைத் தந்தை பார்த்துக் கொண்டார். மனைவிக்கும் அவனே வெளிர் ரோஜா நிறத்தில் காஞ்சிபுரம் பட்டு எடுத்து வந்து கொடுத்து அவளைச் சர்ப்ரைஸ் செய்திருந்தான். அதன் நிறமும் டிசைனும் அவ்வளவு பிடித்திருந்தது வசுந்தராவிற்கு.

இப்படியாக அனைத்தும் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது.
அன்று காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்தான் சஞ்சய். தாயும் தந்தையும் ஒரு மெடிக்கல் கேம்பிற்கு விரைவாகவே சென்று இருந்தார்கள். ஒன்பது மாத சிசுவை தாங்கிக் கொண்டு கணவனுக்கு வேண்டியதை செய்துகொண்டிருந்தாள் வசுந்தரா. காலை உணவிற்கு அமர்ந்தவன் மும்முரமாக அலைபேசியில் ஏதோ செய்துகொண்டிருந்தான். இடை இடையில் “ப்ச்.” என்ற சலிப்பு வேறு.
ஒன்றும் புரியாமல் காலை உணவை டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தவள் கணவனின் சுருங்கிய முகத்தைப் பார்த்தபடி
“என்ன ஆச்சு.?” எனக் கேட்க.
“உன் போன் எங்க.?”என்றான்  பதிலுக்கு.
“அதோ, அங்க தான் இருக்கு.” என அவள் கண் ஜாடை காட்ட, அவன் இடது கையின் அருகிலேயே இருந்தது அவளின் அலைபேசி.

“இன்னைக்கு கேட்டரிங் ஆளுங்களுக்கு பணம் அனுப்பனும். என்னன்னு தெரியல என்னோட அக்கவுண்ட்ல இருந்து பணமே போக மாட்டேங்குது. அம்மா, அப்பா இருந்தாலாவது அவங்க அக்கவுண்ட்ல இருந்து அனுப்ப சொல்லலாம். அதுதான், நான் உனக்கு அனுப்புன பணம் உன்னுடைய அக்கவுண்ட்ல அப்படியே தானே இருக்கு. எனக்குத் தெரிஞ்சு நீ இதுவரைக்கும் எதுவுமே அதிலிருந்து செலவு பண்ணலன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு அதிலிருந்து அவங்களுக்கு பணம் அனுப்பிடலாம். அதுக்கப்புறம் நான் உன்னோட அக்கவுண்டுக்கு பணத்தை மறுபடியும் டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்.” என்று கூறியபடியே அவள் அக்கவுண்டில் உள்ளே சென்று பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதுவரை என்னவோ எனக் கேட்டுக் கொண்டிருந்தவள் பணம் என்று கூறிய உடனே, வயிற்றிலிருந்து பயப்பந்து அவள் வாய் வழியாக வெளியே வந்துவிடும் போல் இருந்தது. இதயத்துடிப்பும் வேக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. பயத்தில் கை, கால்கள் சில்லிட தொடங்கின. அவனிடம் கூற வேண்டும் என நினைத்திருந்த ஒவ்வொரு முறையும் வேறு, வேறு வேலைகளால் மறந்து விட்டிருந்ததை தற்போது நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள்.

அக்கவுண்ட்டை பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி. தன் அருகில் நின்றிருந்தவளை ஏறிட்டு அதிர்ச்சி விலகாமல் பார்த்தான். அவனின் அருகே நின்று கொண்டிருந்தவள் தனக்கு முன்னால் இருந்த நாற்காலியை  அழுந்தப் பற்றிக் கொண்டிருக்க. அவள் விரல்கள் நடுங்கிக் கொண்டிருப்பது அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது. அவளின் அதீத பயத்தினால் வயிற்றினுள் இருந்த குழந்தையும் வேகமாகச் சுற்றி சுழன்றது. அவள் வயிற்றின் அசைவின் மூலம் அது, அவன் கண்களுக்குத் தப்பாமல் தெரிந்தது.

பெருமூச்செறிந்தவன் தன்னை ஒரு நிலை படுத்திக் கொண்டு தன் அருகே நின்றிருந்தவர்களின் கையைப் பற்றி அருகில் இருந்த நாற்காலியில் அமரச் செய்தவன் அவளுக்குத் தண்ணீரை குடிக்க கொடுத்தான். நடுங்கும் விரல்களோடு வாங்கி குடித்தவள் பயத்துடன் அவனைப் பார்க்க. இப்பொழுது விழுந்து விடுவேன் எனக் கண்ணீரும் அவள் கண்களில் நடுங்கிக் கொண்டிருந்தது.

“என்ன ஆச்சு.? எங்க போச்சு அவ்வளவு பணமும்.?” என்று சற்று தன்மையாகவே கேட்டான். அவனையே பயப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எப்படி கூறுவது என்பது தெரியாமல் மௌனமாகத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“இதுவரைக்கும் நான் உனக்கு ரெண்டு லட்சத்து இருவதாயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன். அதிகபட்சம் அம்பதாயிரம் ரூபாய் நீ செலவு பண்ணி இருந்தாலும் ஒன்றரை லட்சம் ரூபாய் அக்கவுண்ட்ல இருக்கணும். ஆனா இதுல வெறும் நாற்பதாயிரம் ரூபாய் தான் இருக்கு. மிச்ச பணம் எல்லாம் எங்கே.? என்ன பண்ணின.?” என்று கோபத்தை அடக்கிய அமைதியான குரலில் கேட்க. அந்தக் குரலே அவளுக்கு மேலும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த ஒன்பது மாத கால வாழ்க்கையில் தன்னிடம் அவள் ஒன்றை மறைத்திருப்பது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. அவள் இலகுவாகப் பழகும் விதத்தில் தான் அவளிடம் நடந்து கொள்ளவில்லையோ என்ற யோசனையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் அமைதியும் இவ்வளவு பெரிய விஷயத்தைத் தன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு வராமல் இருந்ததை நினைத்துக் கடும் கோபம் ஏற்பட,
“உன்ன தான் கேட்கிறேன். சொல்லு.” என்றான் கோபத்துடன் குரல் உயர்த்தி.

இந்த ஒன்பது மாத கால வாழ்க்கையில் காதலையும் பாசத்தையும் மட்டுமே காட்டிய கணவன் முதல் முறையாக அவனின் கோப முகத்தைக் காட்ட, அதில் அதிர்ந்து பயந்தவளுக்கு இப்படி நடப்பதற்கு தானே காரணம் என்பதும் புரிய ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த கண்ணீர் கண்களைத் தாண்டி வழிந்து சென்றது.

பயத்துடன் அவனைப் பார்த்தவள் திக்கி திணறியபடி
“நான் உங்ககிட்ட சொல்லணும்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா சொல்ல வரும் போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்து சொல்ல முடியாம போயிடுச்சு. அதுக்கப்புறம் எனக்கு அது மறந்தும் போயிடுச்சு. உங்ககிட்ட மறைக்கணும்னு நான் என்னைக்குமே நினைச்சதில்ல” என்றாள்  மெதுவான குரலில்.
“மறந்துட்ட. ம்ம். சரிதான். சொல்லு ஒன்னே முக்கால் லட்சத்துக்கு அப்படி என்ன செலவு பண்ண.?”
“நான் எதுவும் செலவு பண்ணல.”
“நீ செலவு பண்ணலன்னா.அப்ப யாரு செலவு பண்ணது.?”
“அம்மாவும், அக்காவும் கேட்டாங்கன்னு கொடுத்துட்டேன்.” “என்னது.” என்றவன். வேகமாக எழுந்து நின்றான் அதிர்வில்.

“அம்மாவும் அக்காவும் கேட்டாங்கன்னு குடுத்துட்டியா.?”
“ஆம்.” என்று தலையசைத்தாள்.
“எதுக்கு கேட்டாங்க.?”
“அம்மா வந்து, வசந்தியோட காலேஜ் பீஸ் கட்றதுக்கும் அவ கல்யாணத்துக்கு நகை சீட்டு கட்டுறதுக்கும் கேட்டாங்க.”
“சரி உங்க அக்கா எதுக்கு கேட்டாங்க.?”
“அது வந்து கல்யாணம் ஆன உடனே நான் கர்ப்பம் ஆயிட்டேன் இல்ல. ஆனா அவளுக்கு அந்த வரம் இன்னும் கிடைக்கல. அதனால ட்ரீட்மெண்ட் செய்வதற்கு கேட்டா.”
“அவங்க குழந்தை பெத்துக்கறதுக்கு நம்ம வீட்டு பணத்த கேப்பாங்களா.? நீயும் அவங்க கேட்டவுடனே கொடுத்து இருக்க. அதுவும் உன்ன கண்டாலே ஆகாதவங்களுக்கு.அவங்க இப்படி கேக்குறாங்கன்னு எங்கிட்ட சொல்லனும்னு உனக்குத் தோணலையா.?” எனக் கோபமும் ஆதங்கமும் கலந்து கேட்க.

அமைதியாகத் தலைகுனிந்தவளுக்கு கண்ணீர் அவள் விரல்களில் பட்டுத் தெறித்தது.
“இங்க பாரு. என்னைப் பாரு.” என்றவன் அவள் நாடி பிடித்துத் தூக்கி தன்னை பார்க்க வைத்தான். அவளின் அதீத பயம் அவள் உடல் நிலைக்கு நல்லதில்லையெனத் தெரிந்து. அதுவும் வீட்டில் யாரும் இல்லாத இந்நேரத்தில் அது ஆபத்தாகவும் முடியும் என்று நினைத்தவனாக.

அலைபாயும் விழிகளோடு  பரிதவிப்புடன் அவனை ஏறிட்டு பார்த்தவளின் பயப்பார்வை அவனை என்னவோ செய்தது.குனிந்து அவள் கண்களில் முத்தமிட்டவன், அவளைப் வயிற்றரோடு அணைத்துக் கொள்ள. அவன் வயிற்றுக்குள்ளேயே போய்விடுவது போல அழுந்த முகத்தைப் புதைத்தவளுக்கு  அழுகை பீறிட்டுக் கிளம்பியது. பெரிதான கேவலுடன், “சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா எப்படியோ சொல்ல முடியாம மறந்துட்டேன். உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கல.” என்றாள் மறுபடியும் தெவிங்கிக் கொண்டே. அவள் தலையை மெதுவாகத் தடவியவனை இறுக அணைத்து,

“சாரி, சாரி.” என முணங்கிக் கொண்டே இருந்தாள் உடல் நடுங்க.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்