
அத்தியாயம்: 24
என்ன தான் ஆதித்தின் மீது ஆராவிற்குக் கோபம் இருந்தாலும், அவனின் பிரிவு அதை மறையச் செய்திருந்தது. ஆம் அவனின் பதினைந்து நாள் டெல்லி பயணத்தின் முதல் நாள் அன்று. மகேஷ் அவளை வீட்டில் விட்டுச் சென்ற பின்,மிகவும் பசித்தது ஆராவுக்கு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டுக் குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்த போது உணவு வீட்டிற்கே வந்து சேர்ந்திருக்க. காலை உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் சரிந்து தன்னுடைய தொடுதிரை அலைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன்னவன் ஆன்லைனில் இருக்கிறானா என்பதைப் பார்த்தாள். அவன் இரவு பனிரெண்டு மணிக்கு வாட்ஸ் ஆப்பை பார்த்திருக்கிறான் என்பதைத் தெரிந்துக்கொண்டவள். உறங்கிக்கொண்டிருப்பான் என உறுதி செய்து விட்டு,
“ஹாய் க்ரிஷ், இப்போ தான் ஷிஃப்ட் முடிச்சு வீட்டுக்கு வந்தேன். நான் தூங்க போறேன் பை பை” எனக் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு இருவரும் சேர்ந்தெடுத்திருந்த செல்ஃபிகளை ஒவ்வென்றாய் பார்த்தபடி பெண்ணவள் உறங்கி போனாள்.
********
அந்தி மாலைப்பொழுதில் தன்னுடைய அலைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் மகேஷ். மஹதியிடம் இருந்து அழைப்பு வருமெனக் காத்திருந்தான் அவன்.
“டேய் மகேஷ்!! நீயும் போய்ட்டால் இன்னைக்கி கச்சேரில யாருடா பாடுவாங்க?” என அவனுடன் இசை கச்சேரியில் வேலை பார்க்கும் நண்பன் சூர்யா கேட்டான்.
“உனக்கென்ன பாடுறதுக்கு ஆள் தானே வேணும், மாலதியை வரச்சொல்றேன்” எனப் பதில் சொன்னவனின் விழிகள் இப்போதும் அலைப்பேசியை ஆன் செய்து பார்த்துக்கொண்டிருந்தது.
“மாலதியை தான் கழட்டி விட்டுட்டியே டா”
“யார் சொன்னது கழட்டி விட்டேன்னு இப்போ சொன்ன கூட அவ வருவா” என்றான்.
“நான் போன் பண்ணி கூப்பிட்டேன் வரலைன்னு சொல்லுச்சு” என்றான் சூர்யா.
“இப்போ பாரு, நான் கூப்பிட்ட உடனே ஓடி வருவா” எனச் சொன்னவன் மாலதி என பதிவு செய்து வைத்திருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
“ஹே மாலதி!!” அதிகாரமாய் ஒலித்தது மகேஷின் குரல்.
“மகேஷ்!” எனச் சொன்ன பெண்ணின் குரல் நடுங்கியது. ஆராவை போல் தான் மாலதியும். ராககீதத்தில் பாட்டு பாட வந்த பெண்.
“ஏய் என்ன திமிரா? சூர்யா பாடுறதுக்கு ஆள் இல்லைன்னு கூப்பிட்டானாம், நீ வரலைன்னு சொல்லிட்டியாம். என்ன மாலதி பயம் விட்டு போய்டுச்சா?” அவன் அதட்டலாய் கேட்டதில், பயந்து போனவள்,
“அய்யோ இல்லை இதோ இப்போ உடனே கிளம்பிடுறேன்” என்றாள் அழுதபடி,
“ஏய் சீ அழாதே, நீ இப்படி அழுதா ராத்திரி எப்படிப் பாடுவ? குரல் எல்லாம் சரி பண்ணிட்டு நான் அனுப்புற அட்ரஸ்க்குப் போய்ச் சேரு”
“மகேஷ், நீ பாடலையா?” எனக் கேட்டாள் மாலதி.
“இல்லை சூர்யா இருப்பான். அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான். நீ ஒழுங்க வந்து சேரணும் புரிஞ்சுதா? இல்லைன்னா?” என அவன் அவளிடம் மிரட்டிக்கொண்டிருந்தான்.
“இல்லை இல்லை நீ எதுவும் பண்ணிடாதே நான் வந்திடுறேன்” எனப் பதற்றமாய்ச் சொன்னவள் அழைப்பை துண்டித்தாள்.
“என்னடா மகேஷ், அந்தப் பொண்ணு எதுக்கு உனக்கு இவ்வளவு பயப்படுது?” எனச் சூர்யா மகேஷை பார்த்துக் கேள்வி எழுப்பிய போது,
“அதெல்லாம் உனக்குத் தேவையில்லாதது, பாடிட்டுப் பணம் கேட்டான்னா என்கிட்ட வந்து வாங்கிக்கச் சொல்லு புரிஞ்சுதா?” என அவன் பேசிக்கொண்டிருந்த போதே அவனின் அலைப்பேசி சிணுங்கி அதன் இருப்பைக் காட்டியது. அது மஹதியாகத் தான் இருக்கும் என்ற நினைப்பில் அந்த அலைப்பேசியைக் கையில் எடுத்தவனின் விழிகளில் விழுந்தது அவளின் பெயர் ஆரா காலிங் என மிளிர்ந்துக் கொண்டிருந்த பெயரில் முத்தம் வைத்தவன்.
“டார்லிங் நீயே கால் பண்ணிட்டியா? எனக்குத் தெரியும் நீ கால் பண்ணுவன்னு, எப்படியும் நான் விரிக்கிற வலையில் நீயா வந்து விழுவன்னு எனக்கு நல்லாவே தெரியும்” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த மகேஷ் இப்போது தான் அழைப்பை ஏற்றான்.
“ஹே ஆரா! என்ன நல்லா தூங்கி முழிச்சீயா?” எனக் கேட்டான் அவன்.
“ஆமா டா! நீ தூங்குனீயா எறுமை? நைட் முழுக்க எனக்காகக் காத்திக்கிட்டு இருந்திருக்க?” எனச் சோர்வான குரலில் கேட்டாள் அவள்.
“இன்னும் தூக்கம் போகலை போலையே வாய்ஸ் டல்லா இருக்கு” என அவன் கேட்க,
“இல்லைடா ஒரு மாதிரி லோன்லியா ஃபீல் ஆகுது வர்றீயா ஷாப்பிங் போயிட்டு வரலாம்? நீ ஃப்ரீயா இருந்தா சொல்லு இல்லைன்னா நானே போய்க்கிறேன்” என அவனிடம் சொன்னாள் ஆரா.
“இல்லை ஆரா! இங்கே டைட் வொர்க் நீ போயிட்டு வா”
“சரி ஓகேடா? வந்தால் ஷாப்பிங் பேக்கை தூக்க வசதியா இருக்குமேன்னு பார்த்தேன்” என்றாள் குறுநகையுடன் அவள் குழந்தைப் போல்,
“அதானே பார்த்தேன் எதோ பாசத்தில கூப்பிட்டீயோன்னு நினைச்சேன்” என மகேஷ் சொல்ல,
“உன் மேல பாசமாவது பாயசமாவது போவீயா?” என மேலும் அவள் சிரித்துக்கொண்டே சென்னாள்.
“ஆமா எங்கே போற ஆரா ஷாப்பிங்க்கு?”
“ரெங்கநாதன் ஸ்ட்ரீட்” என்றாள்.
“இன்னைக்கி வொர்க் இல்லையா?”
“இல்லைடா சன்டே வொர்க் பண்ணினேன், இன்னைக்கி ஆஃப்” என்றாள் ஆரா.
“அப்போ ஜாலியா போயிட்டு வா” என அவன் பேசிக் கொண்டிருந்த போதே புதிதாய் எதோ ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
“ஏய் ஆரா கொஞ்சம் வேலை இருக்கு, நான் கூப்பிடுறேன்” என விரைந்து அழைப்பை துண்டித்தவன். அந்தப் புதிய எண்ணின் அழைப்பை ஏற்றான்.
“கால் பண்ணுவேன்னு சொன்னேன்ல , லைனா ஃப்ரீயா வச்சுக்க மாட்டியா? உன்கிட்ட பேசுறதுக்கு , ஹோம் மினிஸ்டர் ஜெகன் நாதன் பொண்ணு காத்துக்கிட்டு இருக்கணுமா” என ஒலித்தது அந்தப் பெண்ணின் குரல்.
“மேடம் நீங்க”
“நான் மஹதி பேசுறேன். ஆதித் கிருஷ்ணாவோட லவ்வர்” என்றாள் அழுத்த திருத்தமாய்.
“சாரி மேடம், ஆரத்யா தான் கூப்பிட்டு இருந்தாள் அதான்” என இழுவையாய் இழுத்தான்.
“ஓ! அவ கூடத் தான் பேசிட்டு இருந்தியா?”
“ஆமாம் மேடம்” அவள் ஹோம் மினிஸ்டரின் மகள் எனத் தெரிந்தவுடன் தானாய் மரியாதையும் சேர்ந்து வந்து அமர்ந்துக்கொண்டது.
“என்ன சொன்னா அவ?”
“ரெங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு ஷாப்பிங் போறாளாம், நீயும் வர்றீயான்னு கேட்டாள். நான் வரலைன்னு சொல்லிட்டேன்”
“பைத்தியாமா நீ? ஏன் வரலைன்னு சொன்ன? ஆமா உன் பேர் என்ன சொன்ன, ஹம்ம் மகேஷ், ஆதித் கிருஷ்ணா சென்னை திரும்புறதுக்கு இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு அப்படி இப்படின்னு ஒரு இரண்டு நாள் முன்ன பின்ன ஆகும். அவன் வர்றதுக்குள்ள இந்த ஆரா உனக்குச் சொந்தம் ஆகியிருக்கணும் புரிஞ்சுதா? இப்போ ரெங்கநாதன் ஸ்ட்ரீட் போ, உன்னோட அக்கௌண்ட் டீடெயில்ஸ் அனுப்பு, அவ என்ன கேட்டாலும் வாங்கிக் கொடு. நான் பணம் அனுப்பி விடுறேன்” என மஹதி சொல்ல,
“இல்லை அதெல்லாம் வேண்டாம் மேடம்”
“நீ செய்யப்போற வேலைக்குத் தான் இந்தப் பணம், ஷாப்பிங் முடிச்சதும் எனக்குக் கால் பண்ணு” எனச் சொன்னவள் அழைப்பை துண்டித்தாள் மஹதி.
அதே சமயம்,
ஆரா தன் வீட்டில் அமர்ந்தபடி தன்னுடைய தொடுதிரை பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆதித் கிருஷ்ணாவிடம் இருந்து எந்த அழைப்பும் குறுந்தகவலும் வரவில்லை எனக் கவலைக் கொண்ட பெண்ணோ மீண்டும் வாட்ஸ் அப்பை திறந்தாள். அதில் அவள் ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவலை பார்க்காமல் இருந்ததற்குச் சான்றாக நீல நிற டிக் அதில் வரவில்லை.
“அப்படிப் போனை கூட எடுத்து பார்க்க முடியாத அளவுக்கு என்ன தான் பிசியோ?” எனத் தனக்குள் புலம்பியவள்.
“க்ரிஷ் நான் தூங்கியே முழிச்சிட்டேன் இன்னும் நீ எனக்குக் கால் கூடப் பண்ணலை. சரி ஓகே பசியா இருக்கப்போல. நான் ஷாப்பிங் போகப்போறேன். உன்னைத் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போறேன்” எனச் சொன்னவளுக்கு அழுகை வந்ததோ இல்லையோ அவள் அவன் மீது வைத்திருக்கும் காதலின் வருடலை மெல்ல உணர்ந்தாள் பெண்.
அவனிடம் கேள்விக் கேட்டு விட்டு அதற்கு அவளே பதிலையும் சொல்லி தன்னைச் சமாதானம் செய்துக்கொண்டவளுக்கோ. பொங்கி எழும் காதல் அலையைக் கட்டுபடுத்த தான் முடியவில்லை. முதல் முறை அவனைச் சந்தித்த போது அவனுடன் ஏற்பட்ட ஒரு நொடி நெருக்கத்தை இப்போது நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டாள். அவனுக்காகவே அவதரித்து வந்திருக்கும் கலியுக கிருஷ்ணனாய் ஆதித் கிருஷ்ணா அவள் விழிகளின் இடையில் நின்றுக்கொண்டு. நகர மறுத்தான் அந்தக் காதலன்.
இந்தத் தனிமை அவளுக்குள் அவனின் நினைப்பை அதிகரிக்கிறது என்பதை அறிந்து தான் ஷாப்பிங் செல்ல முடிவு செய்திருந்தாள். தோளுரசி நின்ற அவளின் கார்குழலை போனிடெயிலில் அடக்கினாள். கருப்பு நிற டீ சர்ட் அணிந்தவள். முட்டி வரையில் இருக்கும் நீல நிற ஜீன்ஸை அணிந்துக்கொண்டாள். லென்ஸ் வைத்துத் தேடினால் கூடக் கண்ணுக்கு தெரியாத அளவிற்குச் சிறிய கருப்பு நிற பொட்டை தன்னுடைய ஐலைனரின் உதவியுடன் வைத்துக்கொண்டாள். அவளின் நிறத்திற்கு ஏற்ப லிப்ஸிட்டிக்கை உதட்டில் பூசியவள். வாசனை திரவியத்தைத் தன் மேல் தெளித்துக்கொண்டாள்.
இறுதியாய் அவள் பணம் வைப்பதற்குச் சிறிய வகையிலான பிங்க நிற ஸ்லிங் பேக்க இடது புற தோளில் மாட்டியவள் அதைக் குறுக்கே போட்டுக்கொண்டாள். வீட்டை பூட்டி விட்டு சாவியைப் பத்திரபடுத்தினாள். அவளிருக்கும் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றாள். சுதந்திர பறவைப்போல் ரயில் நிலைய படிகளில் ஏறி இறங்கி சென்று பயணச்சீட்டை பெற்ற நேரம் அவள் ஏற வேண்டிய இரயில் வந்தது. இரயிலின் கடைசிப் பெட்டியில் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவள் செவிகளில் ஏர்பட்டை மாட்டி விட்டுப் பாட்டை ஒலிக்க விட்டாள்.
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே. எனத் துவங்கிய பாடல்,
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ?” என்ற வரிகளின் அர்த்தத்தை அன்று உணர்ந்தாள் பெண்ணாள்.
அவனன்றியும்,அவனின் நினைவுகளன்றியும் அவளால் அரை நொடி கூட இருக்க முடியாது என்பதை உணர்ந்துக் கொண்டாள் பெண். அவனின் பணம், புகழ் எதுவும் அவளுக்குத் தேவையில்லை அவன் மட்டுமே. அவனுடைய காதல் மட்டுமே அவள் வாழ போதுமானது.
நான்கு நிறுத்ததிற்குப் பிறகு ஐந்தாவது நிறுத்தமாய் மாம்பலம் ரயில் நிலையத்தில் தன்னுடைய வெள்ளை நிற ஷூ கால்களைப் பதித்து இறங்கினாள். இரயிலின் இரைச்சலை தாண்டி பேரிரச்சலாய் இருந்தது அங்குக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் சத்தங்கள். கூட்டம் கூட்டமாய் மக்கள் முண்டியடித்துக்கொண்டு நான் முன்னே செல்வதா நீ முன்னே செல்வதா என இரயில் நிலைய படிகளில் போட்டி போட்டு ஏறிக்கொண்டிருந்த மக்களின் கூட்டத்தையும். ஐஸக்கீரிமிற்காகத் தேம்பி அழுதுக்கொண்டிருந்த குழந்தைகளையும் அமைதியாய் பார்த்து நின்றவள். முண்டியடித்த கூட்டம் கரை சேர்ந்த பின் படிகளில் ஏறி விரைந்தாள்.
அடுத்த இரயில் வந்தால் மீண்டும் கூட்டம் வந்து சேர்ந்து விடும் என்பதை அவள் அறிந்தே வைத்திருந்தாள். நடைமேடையில் இருந்து விரைந்தவள் படிகளில் ஏறினாள். கடைகள் நிறைந்து வழிந்த அந்த ரெங்கநாதன் தெருவில் குண்டூசி கீழே விழுந்தால் கூடத் தெரியாத அளவுக்குக் கூட்ட நெரிசல்.
அவள் அங்கு வந்து சேர்ந்த போது மணி ஆறு. வண்ண விளக்குளால் மிளிர்ந்துக்கொண்டிருந்த கடைகளைப் பார்த்தபடி நடந்தாள் பெண்.
வழக்கமாய் அவள் செல்லும் கடை வந்துவிட, உள்ளே நுழைந்தவள் நகரும் படிகெட்டில் ஏறி, பெண்களுக்கு ப்ரேத்யமாக அமைக்கப்பட்டிருந்த ஆடை பிரிவிற்க்குள் நுழைந்தாள். அவளுக்குப் பிடித்த உடைகளை அவள் தேர்ந்தெடுக்கவே ஒரு மணி நேரம் பிடித்தது. அதன் பின் அள்ளிக்கொண்டு ட்ரையல் ரூம்மிற்க்குள் நுழைந்தவள் அவளுக்குப் பொருந்திய மூன்று உடைகளைப் பில் போட்டு வாங்கி அவள் வெளி வந்த போது அவளை எதிர்கொண்டு நின்றான் மகேஷ்.
“டேய் மகேஷ் வரலை சொல்லிட்டுக் கரெக்ட்டா பேக் தூக்கிட்டு போக வந்திருக்கப் பார்த்தியா?”
“என்ன பண்ணுறது ஃப்ரெண்டா போயிட்ட, துணைக்கு ஆள் இல்லம்மா தனியா சுத்திக்கிட்டு இருப்பன்னு நினைச்சு வந்தேன்.” என அவன் சொல்ல பேசியபடி ஷாப்பிங் பைகளை மகேஷின் கையில் ஒப்படைத்திருந்தாள். அவனும் அதைக் கையில் வைத்துக்கொண்டு ஆரத்யாவை பின்தொடர்ந்தான்.
ஒருவரின் நம்பிக்கையைப் பெற சில துரோகிகள் காலின் செருப்பாக இருக்கக் கூடத் தயங்கமாட்டார்கள், அதுவே அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராய் மாறிய பின் அருகில் இருந்து கொண்டே துரோகங்களை அடுக்கடுக்காய்ச் செய்து வருவார்கள். அப்படித் தான் மகேஷூம் ஆராவின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களுக்குள் அவள் அவனுக்குரியவளாய் மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவளைப் பின்தொடர்ந்துக்கொண்டிருந்தான். சாலையோர பானிப்பூரி கடையைப் பார்த்தவுடன் அவளின் நடை தடைப்பட்டது.
அந்தக் கடை அவளுக்குச் சுதாவை நினைவூட்டியது. சுதா பாண்டிச்சேரி செல்வதற்கு முன் இங்குத் தான் ஷாப்பிங் வருவார்கள். சாலையோர கடைகளில் பேரம் பேசி வாங்குவதில் சுதா கெட்டிக்காரி.
“மகேஷ்! பானிப்பூரி சாப்பிடலாமா” அவள் திரும்பி கேட்டாள்.
“ஹே ஆரா இதெல்லாம் ஹைஜினிக்காவே பண்ணமாட்டாங்க”
“உனக்கு வேண்டாம்னா வேண்டாம்ன்னு சொல்லு, உனக்குப் பிடிக்காதுன்றதுக்காக ஊர் உலகமே சாப்பிடக் கூடாதுன்னு நினைக்கிறதும் ஒரு வகை வன்முறை தான். எனக்கு இந்த அண்ணா கடையை நல்லாவே தெரியும். அந்த அண்ணா சுத்தமா தான் செய்வாங்க” எனச் சொன்னவள்,
“அண்ணா ஒரு ப்ளேட் பானிபூரி” எனச் சொன்னவள் அவனைத் திரும்பி பார்த்தாள்.
“உனக்கு ஒண்ணு சொல்லவா நல்லா இருக்கும்டா” என அவள் கேட்டவுடன் சரியெனத் தலையசைத்திருந்தான் மகேஷ்.
“அண்ணா இரண்டு ப்ளேட்” எனச் சொன்னாள். இருவரும் பானிபூரியை உண்டு விட்டு மீண்டும் கடை வீதிகளில் நடக்க ஆரம்பித்தாள். அவள் உற்சாகமாய் நடந்து சென்றாள். மகேஷூக்கு தான் கால் நொந்து போனது.
“ஆரா! எங்கே போற? இன்னும் எவ்வளவு தூரம் தான் நடக்கணும்?”
“இல்லைடா நானே தேடி கண்டு பிடிச்சிடலாம்ன்னு பார்த்தேன் ஆனால், இதைபத்தி எனக்குத் தெரியலை கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறீயா” என அவன் கைகளில் இருந்த ஷாப்பிங் பேக்குகளைத் தன கைக்கு மாற்றியபடி கேட்டாள் ஆரத்யா.
“என்ன ஹெல்ப்”
“மென்ஸ் கலெக்சன்ஸ் கொஞ்சம் காஸ்ட்லியா எங்கே கிடைக்கும்?”
“இது தானா விசயம் வா நான் கூட்டிட்டு போறேன்” என்றவன், ஆண்களுக்காக அமைக்கக்கபட்டிருந்த ஆடை உலகத்திற்க்குள் அவளை அழைத்துச் சென்றான்.
“என்ன ஆரா வாங்க போற?”
“ஒரு ஷர்ட் வாங்கணும்டா” எனச் சொல்லிக்கொண்டிருந்தவள் தலையைத் திருப்பி அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அந்த ஷர்ட் நல்லா இருக்குல?” என ஷோகேஸ் பொம்மையைக் காட்டி சொன்னாள் ஆரத்யா.
“சரி யாருக்கு வாங்க போற? என்ன சைஸ்” என மகேஷ் கேட்ட போது தான் ஆராவின் புத்திக்கு உரைத்தது.அவனுடைய சட்டையின் அளவு என்னவென்ற இவளுக்குத் தெரியாது என்பது தலையில் அடித்துக்கொண்டவள்,
“அய்யோ! டேய் இருடா கேட்டுட்டு வர்றேன்” என்றவள் கடைக்கு வெளியே வந்து தன்னுடைய காதலனான ஆதித் கிருஷ்ணாவிற்க்கு அழைப்பு விடுத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை.
“க்ரிஷ் உன்னோட ஷெர்ட் சைஸ் மெசேஜ் போடேன், ஃப்ரெண்டோட ஷாப்பிங் வந்தேன், ஒரு ஷெர்ட் பார்த்திருக்கேன். உன் சைஸ் தானான்னு தெரியலை, நீ சைஸ் சொன்னால் உடனே வாங்கிடுவேன்” என்ற குரல் பதிவை போட்டு விட்டு மீண்டும் கடைக்குள் நுழைந்தாள்.
“க்ரிஷ்க்கு ஒரு ஷர்ட் வாங்கலாம்ன்னு பார்த்தேன் ஆனால் பாரு சைஸ் தெரியலை, ரொம்பக் கஸ்டமா இருக்குடா மகேஷ்” என அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். சரி வா இன்னொரு நாள் பார்த்துக்கலாம். என அந்தக் கடையில் இருந்து வெளியே அழைத்து வந்தான் மகேஷ். தன்னவனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனத் தெரிந்தவுடன் மிகவும் சோர்வாகி போனாள் ஆரத்யா. சோக சித்திரமாய் அவனுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தவளை பார்த்து,
“ஆரா! உனக்கு எதாவது வேணும்னா வாங்கிக்கோ நான் பணம் தர்றேன்” என்ற மகேஷின் குரல் அவளின் சிந்தையைக் கலைத்தது.
“இல்லைடா அதெல்லாம் வேணாம். நான் எனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டேன்” என இயல்பாய் பேசிக்கொண்டிருந்தவள்,
“ஆமா உனக்கு ஏது பணம், பேமெண்ட் கூடச் சரியா தரலைன்னு புலம்பிக்கிட்டு இருந்த” அவள் பட்டெனக் கேட்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்வதற்கு முன் சின்னத் தடுமாற்றம் அவனுளுள் ஏற்பட்டது.
“என்னடா திருதிருன்னு முழிக்கிற? வீட்டுக்கு அனுப்பவே பணம் இல்லைன்னு நீ தானே சொன்ன?”
“அதுவா?? எனக்குப் பென்டிங் இருந்த பணத்தையெல்லாம் ராககீதத்துல போட்டுட்டாடாங்க”
“அப்போ எனக்கு ஏன்டா போடலை, இரு நான் போன் பண்ணி கேட்கிறேன்” என அலைப்பேசியை எடுக்கச் சென்றவளை தடுத்தவன்.
“ஏய் ஆரா, போன் பண்ணிடாதே” எனப் பதறினான்.
“இல்லை எதோ சரியில்லை? எதையோ என்கிட்ட நீ மறைக்கிற”
“பேமெண்ட் போட்டதை யார்க்கிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க போதுமா, உனக்கு நெக்ஸ்ட் வீக் பேமெண்ட் வந்திடும் ஓகேவா ” எனத் தற்காலிமாக ஆராவிடம் இருந்து அவன் தப்பித்தான்.
ஆரத்யாவோ அலைப்பேசியை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன பண்ணுற ஆரா??”
“க்ரிஷ்க்கு மெசேஜ் அனுப்பியிருந்தேன் ரிப்ளை வந்திட்டா ஒரு ஷர்ட் வாங்கிட்டு கிளம்பலாம்ன்னு பார்த்தேன்” என்றாள் அவள் அவனின் அழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து மணி பத்தை எட்டியிருந்தது. மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என அவள் முடிவெடுத்தாள்.
“சாரி டா மகேஷ் என்னால உனக்கும் லேட் ஆகிடுச்சுல? சரி வா போகலாம்” என ரயில் நிலையம் நோக்கி நடந்தவளை.
“வா நான் ட்ராப் பண்ணுறேன்” என்றான் மகேஷ்.
“இல்லைடா நான் போயிக்கிறேன்” என்றாள்.
“மணியைப் பார்த்தல்ல?”
“டேய் நான் நைட் ஷிஃப்ட்க்கே தனியா தான் போவேன்டா இதெல்லாம் ஒரு இருட்டா? நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என அவனுடன் செல்வதற்கு உறுதியாய் மறுப்பு தெரிவித்தாள். ஆனால் அவளை அவன் தனியாய் செல்ல விடாமல். அதை இதைச் சொல்லி அவனுடைய பைக்கில் செல்வதற்க்கு சம்மதிக்க வைத்திருந்தான். சில நிமிடங்களில் அவளின் வீட்டு வாசலில் ட்ராப் செய்து விட்டு அவன் கிளம்பியிருந்தான்.
வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி விட்டு மாற்று உடைக்கு மாறியவள் தன்னுடைய அலைப்பேசியை எடுத்தாள்.
“ஏய் க்ரிஷ்! உன்கிட்ட ஷர்ட் சைஸ் கேட்டேனே சொன்னீயா? போ உன் மேல் கோபமா இருக்கேன்” என்ற குரல் பதிவை அவள் அனுப்பியவுடன் இதுவரை நீல நிற டிக் பெறாத குறுந்தகவல்கள் நீல நிற டிக் பெறுவதைப் பார்த்தவள் க்ரிஷ் (krish) என்ற பெயரின் கீழே ஆன்லைன் (online) என வர ஆராவின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“சாரி மை டியர் ஸ்மைலி” என்ற குறுந்தகவலை அவள் திறந்து பார்க்கும் முன் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே அழைப்பை ஏற்றாள்.
“க்ரிஷ்!” ஏக்கத்துடன் தன்னவனை அழைத்தாள் ஆரத்யா.
“மை டியர் ஸ்மைலி!!” அவனின் ப்ரத்யேகமான அழைப்பில் அவள் குழைந்தாலும் அதையும் தாண்டி கிளர்ந்து கொண்டு வந்தது அவளின் கோபம்.
“உன்னோட ஸ்மைலி இப்போ ஆங்கிரி பேர்டா மாறிட்டா” எனப் பதில் கொடுத்தாள் ஆரா.
“ஹே சாரி டியர், மீட்டிங்க் இருந்தது. நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணினேன் தெரியுமா? இந்த அழகான குரலை கேட்க நான் காத்திருந்த இந்த ஒரு நாள் ஒரு யுகம் மாதிரி தெரிஞ்சது ஆரா” என அவன் மன்னிப்பு வேண்டிய பிறகு அவளின் கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.
அவளுக்கு வரமாய்க் கிடைத்த இந்த அழகான நேரத்தை சண்டையிட்டு கெடுக்க அவள் விரும்பவில்லை. இன்று நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னவள் மகேஷின் பெயரை சொல்லாமல்
“ஃப்ரெண்டோட போயிட்டு வந்தேன், அவன் தான் ட்ராப் பண்ணினான்” போன்ற விவரங்களை அவள் சொன்னாள் அவனும் களைப்பில் அதைப் பற்றியெல்லாம் ஆராயாமல் அவளிடம் காதல் மொழிகளில் பேசிக்கொண்டிருந்தான். இருவரும் பேசியபடி உறக்கம் தழுவியிருந்தார்கள்.
***************
“பரவாயில்லையே சொன்ன நேரத்துக்கு சரியா வந்திட்ட” எனக் கருப்பு நிற புடவை அணிந்திருந்தவள் தன் எதிரே அமர்ந்திருந்த மகேஷை பார்த்துச் சொன்னாள். உயர் ரக ஸ்டார் ஹோட்டலின் டைனிங் ஹாலில் காஃபியுடன் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
“இந்தாங்க மேடம் உங்க பணம், நீங்க சொன்ன வேலையை நான் செய்யலை. ஆரா எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாள்” என்றவன் பணத்தை அவளிடம் நீட்டினான்.
“அதை முதல்ல உள்ளே வை” என அதட்டலாய் சொன்னாள் மஹதி.
“சரிங்க மேடம்” எனப் பணத்தைத் தன் பையில் திணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவனைப் பார்த்து.
“நீ ஆராவை லவ் பண்ணுறீயா?”
“அது வந்து மேடம்” என இழுத்தான் மகேஷ்,
“கேட்ட கேள்விக்குப் பதில் உடனே வரணும்”
“ஆமா மேடம், நான் மட்டும் தான் காதலிக்கிறேன் ஆனால் அவக்கிட்ட எதுவும் சொல்லலை”
“ஏன் சொல்லலை?”
“ஆரா என்னை ஃப்ரெண்டா தான் பார்க்கிறா, அப்பறம் அவளோட லவ் ஸ்டோரியை கூட என்கிட்ட சொல்லியிருக்கா” என்றான்.
“எல்லாமே சொல்லிட்டாளா? என்ன சொன்ன?”
“அவங்க இரண்டு பேருக்கும் நடுவுல இப்போ பிரச்சனை போயிக்கிட்டு இருக்கு மேடம்” என்றான் மகேஷ்.
“நிஜமாதான் சொல்லுறீயா? அப்போ அவங்க பிரிய போறாங்களா?” எனக் கேட்டவளின் விழிகள் மர்மமாய்ப் புன்னகைத்தது.
**********

