Loading

தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் இருக்கலாம் ஆனால் கனிஷ்காவிடம் பேசி விட எண்ணினாள்.

 

அவளிடம் தன் முடிவைக் கூறி விடலாம் என்றெண்ணி அவளுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்தாள். 

 

அதை உடனே ஏற்றுக் காதில் வைத்து,”சொல்லு காரிகா”என்றாள் கனிஷ்கா.

 

“கனி நான் ஆராவுக்கு கால் பேசிட்டே இருக்கும் போது கட் ஆகிடுச்சு. அதுக்கு அப்பறம் ரிங் போகல. என்னன்னுத் தெரியல. அபூர்வன் அண்ணா நம்பர் இருந்தால் கொடுடி. ப்ளீஸ்”என்றதுமே இவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

 

“உன்னை என்னப் பண்றதுன்னுத் தெரியலைடி! நாம ரெண்டு பேரும் அவ கேட்டதுக்காகத் தானே உதவி செய்ய ஒத்துக்கிட்டோம்? அப்படி இருக்கும் போது நீ இப்படி பண்ணினது ரொம்பத் தப்புடி!”என்று தன்னைக் கண்டித்த தோழியிடம், 

 

“ஐயோ கனி! நான் இனிமேல் ஆராவைச் சத்தியமாகத் தொந்தரவு பண்ண மாட்டேன்! அதே மாதிரி இதிலிருந்து நான் விலகிக்க முடிவெடுத்து இருக்கேன்!” என்று திட்டவட்டமாக கூறியிருந்தாள். 

 

“ஹேய்! என்னடி இப்படி திடீர்னு பின் வாங்குற? ஆரா பாவம் டி! எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்த? ஏன் உன்னைத் திட்றதுக்கும், உன் மேல் கோவிச்சுக்கிறதுக்கும் எங்களுக்கு உரிமை இல்லையா?”என அதிர்ச்சியுடனும், ஆதங்கத்துடனும் கேட்டாள் கனிஷ்கா. 

 

“அதுக்கெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் உரிமை இருக்குடி! ஆனால் நீங்க ரெண்டு பேரும் என்னோட மனநிலையைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! இந்த விஷயத்தால் நானும் மனதளவில் ரொம்பப் பாதிக்கப்பட்றேன்! இதுக்கு மேலே இந்த விஷயத்தில் என்னால் எதுவும் பண்ண முடியும்ன்னுத் தோணலை கனி!”என்றவளை, 

 

“காரிகா! என்னப் பேசுறன்னுப் புரிஞ்சுத் தான் பேசுறியா?”என்று தன் குரலை உயர்த்தி அவளை அதட்ட, 

 

அதற்கு அவளோ,”என்னோட பேரு காரிகா இல்லை நிஹாரிகா! ப்ளீஸ்! இனிமேல் என்னைக் காரிகான்னுக் கூப்பிடாதீங்க!”என்று அவளுக்கு இணையாக குரலை உயர்த்திச் சொல்லி இருந்தாள் நிஹாரிகா. 

 

அதில் ஸ்தம்பித்துப் போய் விட்ட கனிஷ்காவோ, 

 

“ரிகா! நீ…”என்றவளை இடைமறித்து, 

 

“ஆமாம்! நான் நிஹாரிகா மட்டும் தான்! இதை இத்தோட நிறுத்திக்கலாம்! என்னால் இதுக்கும் மேலே இதில் தலையிட முடியாது! நான் இதிலிருந்து ஒதுங்கிக்கிறேன்!”என்று தீர்க்கமாக உரைத்து இருந்தாள் மறுமுனையில் இருந்தவள். 

 

“நீ என்னச் சொல்றடி? நாம ஆராவுக்கு ஹெல்ப் பண்றோம்னுப் பிராமிஸ் செஞ்சிக் கொடுத்து இருக்கோம்!”என்றிருந்தாள் கனிஷ்கா. 

 

“ஆமாம்! நான் இல்லைன்னு சொல்லலையே? அவ எனக்குப் பண்ணின உதவிக்கு நான் அதுக்கு மேலேயே அவளுக்கு உதவிப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். இதுக்கு மேலே எங்கிட்ட எதையும் எதிர்பார்க்காதீங்க! அவ மேலே இருக்கிறப் பாசத்தால் தான் நான் அவளைப் பார்க்கப் போனேன்! ஆனால் அதைப் புரிஞ்சிக்காமல் அதைச் சொல்லிச், சொல்லியே என்னைக் குற்ற உணர்வில் ஆளாக்குறீங்க நீங்க ரெண்டு பேரும்! அதனால் என்னால் இதுக்கு மேலே உங்க கூடச் சேர்ந்து இந்தத் திட்டத்தில் பயணிக்க முடியாது!”என்று உறுதியாக கூறி விட்டிருந்தாள் நிஹாரிகா.

 

தானும் எத்தனை தடவைகள் இருவருக்கும் உதவி இருக்கிறேன் அதைக் கூட நினைவுக் கூர்ந்துப் பார்க்காமல் ஆராத்ரிகாவும், கனிஷ்காவும் தனது ஒரு தவறான செயலிற்காகத் தன்னைக் கடிந்து கொண்டதன் காரணமாக இவளுக்கு மன அழுத்தம் வந்திருந்தது.

 

“நீ ரொம்ப சுயநலமாக யோசிக்கிறடி!”என ஆதங்கத்துடன் மொழிந்தாள் கனிஷ்கா. 

 

கடைசியில் இவளது வாயிலிருந்தும் அந்த வார்த்தை வந்து விட்டதைக் கேட்டதுமே மொத்தமாக உடைந்து போனாள் நிஹாரிகாவோ, 

 

“ஆமாம்! நான் சுயநலவாதி தான் கனி. இதுவரை ஆரா எனக்குச் செஞ்சதுக்காக எல்லாம் நானும் அவளுக்குக் குறையாமல் செஞ்சிட்டேன். ஆனால் இனிமேலும் என்னால் இதில் பங்கேற்க முடியாது! நான் இதை முதல்லயே நினைச்சுப் பார்த்து உடைஞ்சுப் போய் தான் இருந்தேன்! ஆனால் அவ வீட்டுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்பறம் என்னை நீங்க ரெண்டு பேரும் திட்டினதைக் கேட்டு இன்னும் உடைஞ்சிப் போயிட்டேன்! அதனால் நான் இனிமேல் ஆராவைப் பார்க்கக் கூடாது! அவ கூடக் காண்டாக்ட் வச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்”என்றவளின் இந்த முடிவைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை இவள்! 

 

ஆனாலும்,ரொம்ப சந்தோஷம்! உனக்கு பெரியக் கும்பிடு! நானும், ஆராவும் உன்னை இனிமேல் எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம்! எங்களுக்கு இதுவரைக்கும் நீ பண்ண உதவிக்கு எல்லாம் ரொம்ப தாங்க்ஸ் நிஹாரிகா. குட் பை”என்று அவளிடம் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் கனிஷ்கா. 

 

தோழியிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த நிஹாரிகாவோ, தனக்கு நேர்ந்த கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இருந்தவள் ஆராவின் நட்புக் கிடைத்ததால் அதைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தாள்.

 

ஆராத்ரிகாவும் கூடத் தன் தோழியின் கடந்த கால வாழ்க்கை அவளை நிலைகுலையச் செய்திருக்கிறது என்பதால் அவளை அதிலிருந்து மீட்டெடுக்க முனைந்து அதில் வெற்றியும் கண்டிருந்தாள். 

 

ஆனால் தற்போது தனக்கு ஒரு உதவிச் செய்யுமாறு நிஹாரிகாவிடம் கேட்டிருக்க அவளோ பாதியிலேயே காலை வாரி விட்டுச் சென்று விட்டதைக் கூட அறியவில்லை ஆராத்ரிகா. 

 

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அபூர்வனும் விடுமுறை

தினத்தன்று வீட்டில் ஓய்வாக அமர்ந்து இருந்தான். 

 

மசக்கையினால் ஏற்பட்ட அதீத சோர்வால் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தாள் ஆராத்ரிகா. 

 

அவளது மாமியார் அருகே அமர்ந்து கொண்டு அவளை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் உரையாடினார்.

 

“ஏன் ஆரா இந்த டாக்டர் கொடுக்குற மருந்து நல்லா தானே இருக்கு? சைட் எஃபெக்ட் எதுவும் இல்லை தானே? அப்படி எதுவும் இருந்தால் சொல்லு! நானே சத்து மருந்து செஞ்சுக் கொடுக்குறேன். எந்தச் சைட் எஃபெக்ட்ஸூம் இருக்காது”என்று மருமகளிடம் கேட்டுக் கொண்டு இருந்தார் நீலவேணி.

 

அவர்களது பேச்சைக் கண்டு கொள்ளாமல், தனது செல்பேசியைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபூர்வன்.

 

“வேணி! மருமகளை ரெஸ்ட் எடுக்கத் தான் விடேன்ம்மா. சும்மா, சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்கிற?”என்று மனைவிக்கு அறிவுறுத்தினார் நாச்சிமுத்து. 

 

உடனே,”அப்படி எதுவும் இல்லை மாமா. அத்தைக் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதால் எனக்கு மனசு இலேசாகுது. அவங்க எப்பவும் எனக்கு நல்லது தான் சொல்றாங்க”என்று தன் மாமியாருக்கு ஏற்றுப் பேசி இருந்தாள் ஆராத்ரிகா. 

 

“அப்படி சொல்லுடா!”எனத் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசிய மருமகளுக்குத் திருஷ்டி எடுத்தார் நீலவேணி.

 

அபூர்வன் தன் கண்களைச் செல்பேசியில் இருந்து அகற்றவே இல்லை.

 

ஆனாலும் ஆராவின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டும், அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் தான் இருந்தான்.

 

அவளிடம் எத்தனை முறை தான் விட்டுக் கொடுத்துப் போவது? அவள் தன்னிடம் எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்துள்ளாள் என்று அவள் மீது கோபம் உண்டானாலும் கூட, இந்த முறை, தான் கோபப்பட்டால் அவளது நிலை மிகவும் மோசமாகி விடும் என்பதாலேயே மனைவியைப் பொறுமையாக கையாள முடிவெடுத்து விட்டிருந்தான் அபூர்வன்.

 

ஆனால் ஆராவின் விழிகள் கணவனிடமே நிலைத்திருந்தது.

 

அந்த நேரம் பார்த்து வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

 

“யாருன்னுப் போய்ப் பாரு அபூர்வா”என்றத் தாயின் குரலுக்கு இணங்கி எழுந்து போய்க் கதவைத் திறந்து, வாசலில் நின்றிருந்த நபரைக் கண்டதும்,”யார் நீங்க?” என்று விசாரித்தான் அபூர்வன். 

 

“நான் ஆராவோட ஃப்ரண்ட் கனிஷ்கா”என்றதுமே, தனது கண்களில் தோன்றிய மின்னலை மறைத்துக் கொண்டு, 

 

“உள்ளே வாங்க”என அவளை வீட்டினுள் நுழைய அனுமதித்து விட்டு,”ஆரா! உன்னைப் பார்க்க யார் வந்து இருக்கான்னுப் பாரு”எனத் தன் மனைவியிடம் தெரிவித்தான் அபூர்வன். 

 

அதைக் கேட்டவுடனே,’காரிகா தான் மறுபடியும் வந்து இருக்காளோ?’என்று தனது அதிர்ந்து போனாள் ஆராத்ரிகா.

 

அப்படி அவள் மட்டும் வந்திருந்தால் ஆராவிற்கு மேலும் கோபம் தான் வரும்!

 

இப்போது தான் அவளே அபூர்வனைச் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறாள்! 

 

அதைக் கெடுக்கும் விதத்தில் காரிகா வருகை புரிந்திருக்கிறாளோ என்று எண்ணி ஆத்திரம் உண்டானது ஆராத்ரிகாவிற்கு.

 

ஆனால் உள்ளே நுழைந்த கனிஷ்காவைக் கண்டதுமே, தன்னல ஆசுவாசப்படுத்திக் கொண்டு,”கனி! நீயா? எப்படி இருக்கேடி?”என அவளையும் நெடுநாட்களுக்குப் பிறகுச் சந்திப்பதைப் போன்று நடந்து கொண்ட மனைவியை ஆயாசமாகப் பார்த்தான் அபூர்வன். 

 

“நான் நல்லா இருக்கேன் ஆரா! ஐ மிஸ் யூ டி”என்றிருந்தாள் கனிஷ்கா.

 

ஆராவிற்கு எப்போதும் பக்க பலமாக இருக்கும் உற்றத் தோழி ஆயிற்றே இவள்! இவளைப் பார்த்ததும் ஆராவிற்குப் புது தெம்பு வந்தது.

 

“உட்காரும்மா”என்று அவளை

வரவேற்று நலம் விசாரித்தார்கள் நாச்சிமுத்து மற்றும் நீலவேணி.

 

“இவளும் என்னோட இன்னொரு பெஸ்ட் ஃப்ரண்ட்”எனக் கூறித் தன் குடும்ப உறுப்பினர்களிடம் கனிஷ்காவை அறிமுகப்படுத்தி வைத்தாள் ஆராத்ரிகா

 

“ஓஹோ! சரிம்மா! ஆரா, உன் ஃப்ரண்ட் கூடப் பேசிட்டு இரு. நான் இவங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்”என்று கூறி நீலவேணி சமையலறைக்குப் போய் விடவும், 

 

“ உன் ஃப்ரண்ட்டை ரூமுக்குக் கூட்டிட்டுப் போய்ப் பேசு ஆரா”என மனைவியிடம் அறிவுறுத்தினான் அபூர்வன். 

 

அதைக் கேட்டதும் தோழிகள் இருவருக்கும் மிகவும் வசதியாகப் போயிற்று. 

 

உடனே,”சரிங்க”எனக் கூறி விட்டுக் கனிஷ்காவை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று அங்கே அவளுடன் பேச ஆரம்பித்து விட்டாள் ஆராத்ரிகா. 

 

“ஆரா! நீ எப்படி இருக்க?”என்று மகிழ்ச்சிப் பொங்க விசாரித்தாள் கனி.

 

“நல்லா இருக்கேன்டி! ஆமா, என்னடி காரிகா தான் வீட்டுக்குச் சஸ்பன்ஸ் ஆக என்னைப் பார்க்க வந்தாள்ன்னா, நீயும் இப்படி திடுதிப்புன்னுக் கிளம்பி வந்து இருக்கிற?”எனத் தோழியிடம் விசாரணை நடத்தினாள் ஆராத்ரிகா. 

 

“அதுவா? நீ கர்ப்பம் ஆக இருக்கேன்னுச் சொல்லியும் உன்னைப் பார்க்க வராமல் இருக்கக் கூடாதுல்ல? அதான், நேரில் வந்து உன்னைப் பார்த்துட்டு அப்படியே உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னைச் சொல்லனும்னு வந்தேன்” என்றிருந்தாள் கனிஷ்கா. 

 

“என்ன விஷயம் டி?”என்றவளோ, அது காரிகாவின் விஷயமாகத் தான் இருக்கும் என்று கணித்து விட்டிருந்தாள்.

 

“அதை அப்பறமாகச் சொல்றேன். ஆமா, அபூர்வன் அண்ணா என்னைப் பார்த்ததும் எதுவுமே சொல்லலை. சாதாரணமாக நடந்துக்கிறார்! அது எப்படிடி?”என அவளிடம் ஆர்வத்துடன் கேட்டாள் கனிஷ்கா.

 

“அது தான் நான் ஃபோனிலேயே சொன்னேனேடி! எனக்குக் குழந்தைப் பிறக்கிற வரைக்கும் என்னை எதுவுமே சொல்ல மாட்டேன்! கேட்க மாட்டேன்னு வாக்குறுதி கொடுத்துட்டார்! அதான் இப்படி நடந்துக்கிறார்”என அவளுக்கு விளக்கம் அளித்தாள் ஆராத்ரிகா.

 

“அதுவும் நல்லது தான்! நான் ஒரு விஷயம் உங்கிட்ட சொல்லவா?”என்றச் சமயத்தில் அவர்களது அறைக் கதவுத் தட்டப்பட்டு, 

 

“ஆரா! காஃபி கொண்டு வந்திருக்கேன்”என்றிருந்தார் நீலவேணி. 

 

“உள்ளே வாங்கத்தை”என அவருக்கு அனுமதி அளித்தாள் ஆராத்ரிகா. 

 

உடனே அறைக்குள் புகுந்து, தனது கையிலிருந்த காப்பிக் கோப்பையைக் கனிஷ்காவிடம் கொடுத்து விட்டு, 

 

“ம்ஹ்ம்! இவளுக்கு இத்தனை ஃப்ரண்ட்ஸ் இருந்தும் ஒருத்தர் கூட இவங்களோட கல்யாணத்துக்கு வரலையேம்மா நீங்க?”என அவளிடம் ஆதங்கமாக வினவினார் நீலவேணி. 

 

அதற்கு,”சாரிம்மா! அந்த நேரத்தில் நாங்க யாருமே இந்தியாவில் இல்லை! முக்கால்வாசிப் பேர் ஃபாரீனுக்குப் போயிட்டோம்! அதான் எங்க யாராலும் இவங்களோட மேரேஜூக்கு வர முடியலை!”என்று அவரிடம் மன்னிப்புக் கோரினாள்.

 

“பரவாயில்லைம்மா”என்று பெருந்தன்மையுடன் கூறி விட்டார். 

 

அவர் அதற்கு மேல் அந்த விஷயத்தை தோண்டித் துருவாமல் விட்டதை எண்ணி நிம்மதியுற்றாள் ஆராத்ரிகா. 

 

ஏனென்றால், தனது திருமணத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று தோழிகளிடம் கறாராக உரைத்து அவர்களை வராமல் தடுத்ததே அவள் தானே? 

 

அந்தக் குற்ற உணர்வும் இப்போது அவளைப் பாதித்துக் கொண்டிருக்கிறது எனலாம்! 

 

அப்போது,“நீ இங்கேயே சாப்பிட்டுப் போம்மா”என்று கனிஷ்காவிடம் அறிவுறுத்தினார் நீலவேணி. 

 

அவளோ,”சாரிம்மா. என் பையன் தூங்கிட்டு இருக்கான். அவனை அத்தை தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அதனால் நான் ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது! சீக்கிரம் கிளம்பனும்”என அவரிடம் தன் நிலையைச் சொல்லிப் புரிய வைத்தாள்.

 

“என்னம்மா நீ? முதல், முதல்ல எங்க வீட்டுக்கு வந்துருக்கிற! கொஞ்சமாகச் சாப்பிட்டுப் போறதால் லேட் ஆகிடாது”என்றவருக்கோ அவளை உணவுண்ண வைக்காமல் அனுப்புவதை விருப்பமில்லை.

 

ஆனால்,”இவ அத்தைக்கு மூட்டு வலி அத்தை. அவங்களால் ரொம்ப நேரம் இவ பையனைப் பார்த்துக்க முடியாது! அதனால் தான் வந்ததும் கிளம்பறேன்னு சொல்றாள். இவ போய் தான் அங்கே எல்லாத்தையும் பாத்துக்கனும்! அதான்!”எனத் தோழிக்குப் பரிந்து பேசினாள் ஆராத்ரிகா. 

 

“சரிம்மா. ஏதாவது கொறிக்கக் கொண்டு வர்றேன். அதையாவது சாப்பிடு”எனக் கனிஷ்காவிடம் கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினார் நீலவேணி. 

 

“நீ சொல்லுடி, உன் மொபைலுக்கு என்ன ஆச்சு?”என்றவளிடம், 

 

“அதுவா?”என்றவளோ, கடைசியாக நிஹாரிகாவிடம் பேசிக் கொண்டு இருந்த அன்று நடந்தவற்றை அவளிடம் கூறி முடித்தாள் ஆராத்ரிகா. 

 

“அச்சோ! உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இவ்வளவு பிரச்சினை ஆகிடுச்சா?”என அவளுக்காக வருத்தப்பட்டாள் கனிஷ்கா. 

 

“ஆமாம்!”என்றத் தோழியிடம், 

 

“நான் நிஹாவைப் பத்தின ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லத் தான் உன்னைப் பார்க்க வந்திருக்கேன்!”என்றதுமே, 

 

அவளது,’நிஹா’என்ற உச்சரிப்பில் திகைத்துப் போய்த் தோழியைப் பார்த்திருந்தாள் ஆராத்ரிகா. 

 

இதே சமயம், வரவேற்பறையில் தனது கையிலிருந்த செய்தித்தாளை மேசையில் வைத்து விட்டுத் தனது மனைவி என்னச் சிற்றுண்டி செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்வையிடுவதற்காகச் சமையலறைக்குச் சென்றிருந்தார் நாச்சிமுத்து. 

 

அப்போது, அங்கே அபூர்வன் மட்டும் தான் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தான். 

 

தன் மனைவியின் தோழியான கனிஷ்காவின் இந்த திடீர் வருகையால் தன் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கும், கேள்விகளுக்கும் நிச்சயமாகத் தீர்வுகளும், பதில்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கைப் பிறந்தது அவனுக்குள். 

 

அதனால் ஆராத்ரிகாவின் தோழி தங்களது வீட்டில் இருந்து கிளம்பும் வரையில் அவ்விருவரையும் தொல்லை செய்யாமல் சமர்த்தாகத் தானும் சமையல் அறைக்குப் போய்த் தனது தாய், தந்தையின் பேச்சில் ஐக்கியமாகி விட்டிருந்தான் அபூர்வன். 

 

– தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்