Loading

சிறிது நேரம் கழித்து அந்த அழைப்பு ஏற்கப்பட்டது. 

 

“ஹலோ”என்று மறுமுனையில் இருந்து குரல் வந்ததும், 

 

“ஹலோ மேம்! நான் ஆராத்ரிகாவோட ஹஸ்பண்ட் அபூர்வன் பேசுறேன்”எனக் கூறி அவருக்குத் தன்னை ஞாபகப்படுத்த, 

 

“ஆங்! சொல்லுங்க சார். எப்படி இருக்கீங்க? ஆரா எப்படி இருக்கிறாள்?”என்று மகிழ்வுடன் விசாரித்தார் ஆராத்ரிகா படித்த துறையின் தலைவர் கலைமகள். 

 

“நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்கோம் மேம். ஆனால் எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு உதவி வேணும்!”என்று அவரிடம் தயக்கத்துடன் மொழிந்தான் அபூர்வன். 

 

“என்ன உதவி வேணும் சார்?”

 

“எனக்கு ஆரா கூடப் படிச்ச கனிஷ்காவோட தகவல்கள் வேணும் மேம்! அட்லீஸ்ட் அவங்களோட மொபைல் நம்பராவது கிடைக்குமா?”என்று அவரிடம் வேண்டிக் கேட்க, 

 

“அந்தப் பொண்ணோட தகவல்கள் உங்களுக்கு எதுக்கு? அதுவும் இல்லாமல் அவளும், ஆராவும் இப்போ வரைக்கும் காண்டாக்ட்டில் தான் இருக்காங்க! நீங்க ஆராகிட்டேயே கேட்டு அவங்க கிட்ட பேசலாமே?”எனக் குழப்பத்துடன் வினவினார் கலைமகள். 

 

உடனே,”இல்லை மேம். நான் அந்தப் பொண்ணுக்கிட்டே ஆராவைப் பத்தின சில முக்கியமான விஷயங்களைப் பேசித் தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு! அதனால் தான், ஆராவுக்குத் தெரியாமல் அவளோட ஃப்ரண்ட் கிட்டே பேசனும்னு நினைக்கிறேன். இட்ஸ் வெரி அர்ஜன்ட் மேம்!”என்று அவருக்குச் சொல்லிப் புரிய வைக்க முயன்றான் அபூர்வன். 

 

“ஆரா நல்லா தானே இருக்கா? அவளுக்கு ஏதாவது பிரச்சினையா? அதைப் பத்திப் பேசத் தான் கனிஷ்காவோட தகவல்களைக் கேட்கிறீங்களா?”எனத் தன் முன்னால் மாணவியும், அவனின் மனைவியுமான ஆராத்ரிகாவின் மேலிருந்த தனது அக்கறையைக் காட்டிக் கேட்கவும், 

 

“ஆமாம் மேம்! அது சீரியஸ் ஆகுறதுக்குள்ளே அதைச் சரி பண்ண நினைக்கிறேன்! அதான், உங்களோட உதவியைக் கேட்டுக் கால் பண்ணி இருக்கேன்”என அவருக்குப் பதிலளிக்க, 

 

“நீங்க சொல்றது எனக்குப் புரியுது சார். ஆனால் நீங்க கேட்கிறதுக்காக எல்லாம் கனிஷ்காவோட மொபைல் நம்பரை என்னால் தர முடியாது! சாரி”எனத் தயவு தாட்சண்யம் இன்றி மறுத்து விட்டார் கலைமகள்.

 

“அப்போ அவங்களை நான் உங்க காலேஜிலேயே மீட் பண்றதுக்கு ஏதாவது சான்ஸ் இருக்கா மேம்?”என்று அவரிடம் இறைஞ்சினான் அபூர்வன். 

 

அவனது மன்றாடலைக் கேட்டு,”அவளுக்கு என்னப் பிரச்சனைன்னு முதல்ல எங்கிட்ட விவரமாகச் சொல்லுங்க சார். நான் அதுக்கு ஏதாவது தீர்வை யோசிச்சு சொல்றேன்”என்றதுமே, 

 

அவன் தனது மனைவியின் மன அழுத்தத்தைப் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்று முடிவெடுத்து இருந்ததால் அதை அவரிடம் உரைக்கத் தயங்கினான். 

 

அதைப் புரிந்து கொண்டு,”இங்கே பாருங்க சார்! உங்களோட தயக்கம் எதுக்குன்னு எனக்குப் புரியுது! ஆனால் நீங்க என்னைக் கண்டிப்பாக நம்பலாம்! இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கிறேன்! எனக்கு ஆரா மேலே ரொம்ப அக்கறை இருக்கிறதால் தான் இந்தளவுக்கு உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்!”என்று அவனுக்குப் புரிய வைத்தார் கலைமகள். 

 

ஒரு பெருமூச்செறிந்தவாறு தனது மனைவியின் தற்போதைய மனநிலையைப் பற்றி அவரிடம் விவரித்து முடித்திருந்தான் அபூர்வன்.

 

அதை நிதானமாக கேட்டு முடித்ததும்,”நீங்க சொல்வதைப் பார்த்தால் ஆரா தினமும் மொபைலில் பேசுறப் பொண்ணுப் பேரு காரிகாவா இருக்காது சார்! அவளோட பேர் நிஹாரிகா! அவளும், ஆராவும் தான் காலேஜில் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ஆக இருந்தாங்க!”என்றதைக் கேட்டதும், 

 

“ஏன் அவ எங்கிட்ட அவளோட ஃப்ரண்ட்டோட உண்மையான பேரைச் சொல்லல மேம்? அதே மாதிரி நான் உங்ககிட்ட வந்து கேட்கும் போது காரிகான்னு யாருமில்லை! நிஹாரிகான்னு தான் ஸ்டூடண்ட் படிச்சாங்க! அவங்க தான் அவளோட பெஸ்ட் ஃப்ரண்ட்ன்னு அப்போவே நீங்க எங்கிட்ட ஏன் சொல்லலை மேம்?”என அவரிடம் கேள்விகளை அடுக்க, 

 

“அன்னைக்கு நீங்க இவ்வளவு தெளிவாக, விவரமாக கேட்கலையே சார்? காரிகா அப்படின்ற ஸ்டூடண்ட் இங்கே படிச்சாங்களான்னுக் கேட்டீங்க! நான் அதுக்கு இல்லைன்னுப் பதில் சொன்னேன். அவ்வளவு தான்! அதுக்கப்புறம் ஆராவைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டோம்!”என்றதுமே தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகி விட்டது அபூர்வனுக்கு. 

 

ஆனாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு,”ஓகே மேம். இப்போ தான் உங்ககிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே! எனக்கு நீங்க உதவிப் பண்ணுவீங்களா? மாட்டீங்களா?”என அவரிடம் முடிவாக கேட்கவும், 

 

“கண்டிப்பாகப் பண்றேன்! ஆனால் ஆரா சொன்னக் கதையில் ஒரு பெரிய விஷயத்தைப் பத்தின தகவலைத்தப்பாகச் சொல்லி இருக்காள்! அதை நீங்க இந்நேரம் ஈஸியாக கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்!”என்றிருந்தார் கலைமகள். 

 

“அது என்ன விஷயம் மேம்?”என்று அதிர்ச்சியுடன் வினவினான் அபூர்வன். 

 

உடனே அவனிடம் அந்த விஷயத்தை தெரிவித்து விட்டார் கலைமகள். 

 

அதைக் கேட்டுப் பேரதிர்ச்சி அடைந்தவனோ அடுத்த வார்த்தைப் பேச முடியாமல் நிலைகுலைந்து போய் விட்டிருந்தான் ஆண்மகன்! 

 

அவன் வெகு நேரமாக அமைதியாக இருக்கவும்,”ஹலோ சார்! லைனில் இருக்கீங்களா?”எனக் குரல் கொடுக்க, 

 

“ஹாங்! லைனில் தான் இருக்கேன் மேம்! அவளோட காலேஜ் டைமில் அவளை நிலைகுலைய வச்ச ஏதாவது ஒரு சம்பவத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா மேம்? அப்படி தெரிஞ்சிருந்தா அதையும் எனக்கு இப்போவே சொல்லுங்க. ப்ளீஸ்!”என்று அவரைத் துரிதப்படுத்தினான் அபூர்வன். 

 

அவரும் அவனது கெஞ்சலில் ஆராத்ரிகாவின் கல்லூரி வாழ்க்கையில் அவளுக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தைப் பற்றியும் அவனிடம் தெள்ளத் தெளிவாக கூறி முடித்தார் கலைமகள். 

 

அதைக் கேட்டதும் அவனுக்குத் தனது மனைவியின் வித்தியாசமான செயல்கள் மற்றும் கோபங்களுக்கான காரணம் விளங்கி விட்டிருந்தது! 

 

அதனால் ஏற்பட்ட மன உளைச்சலை எதிர்முனையில் பேசிக் கொண்டு இருப்பவரிடம் காட்டிக் கொள்ளாமல்,

 

“தாங்க்யூ சோ மச் மேம்!”என அவருக்கு நன்றி தெரிவித்தான் அபூர்வன்.

 

“நீங்க கனிஷ்கா கூடப் பேச நான் அரேன்ட்ஜ் பண்ணவா?”என்று அவனிடம் அக்கறையுடன் வினவினார் கலைமகள். 

 

“இப்போ வேண்டாம் மேம். நான் சொல்லும் போது எனக்காக அதைப் பண்ணிக் கொடுங்க! போதும்”என்று கூறி அவருக்கு மீண்டும் நன்றி நவின்று விட்டு அழைப்பைத் துண்டித்து ஆழ மூச்செடுத்துக் கொண்டுத் தனது வேலையைத் தொடர்ந்தான். 

 

மாலை ஆனதும் தனது வீட்டிற்குள் பிரவேசித்தவனோ, மனைவியை ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு, அமைதியாக அறைக்குச் சென்று விட்டான்.

 

அவனது இந்தச் செய்கையால் மனம் வலித்தாலும்,’தன்னால் தானே இவர் இப்படி நடந்து கொள்கிறார்?’என்று புரிந்து கொண்டு அவனது பாரா முகத்தை மனதார ஏற்றுக் கொண்டாள் ஆராத்ரிகா.

 

மறுநாள் காலையில் தனது கணவனுக்காக ஃப்ரைட் ரைஸ் செய்தவளோ, அவனை உணவுண்ண அழைத்ததும் எப்போதும் போல் வந்து சாப்பிட ஆரம்பிக்க, 

 

அவனிடம்,”இதை நம்ம ஆரா தான் சமைச்சு இருக்கா. உனக்குப் பிடிச்ச சாப்பாடு தானே? இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடு”என்று தெரிவித்தார் நீலவேணி. 

 

 அதைக் கேட்டவுடன் நிமிர்ந்து மனைவியைப் பார்த்து விட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டு உணவுண்டான் அபூர்வன்.

 

“என்னடா நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ அதைக் கண்டுக்காமல் சாப்பிட்ற?”என அவனை அதட்டிய நீலவேணியைக் கெஞ்சும் பார்வைப் பார்த்தாள் ஆராத்ரிகா.

 

அதனால் மகனை அதட்டுவதை நிறுத்தி விட்டு அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டார் அவளது மாமியார்.

 

சாப்பிட்டு முடித்தவன் அலுவலகத்திற்குக் கிளம்பும் சமயத்தில் தாய், தந்தை, மனைவி மூவரையும் பார்த்துப் பொதுவாக,”கிளம்புகிறேன்”என்று கூறி விட்டு வெளியேறினான் அபூர்வன்.

 

“என்னமோ இரண்டு பேரும் எப்போ தான் ஒழுங்காகப் பேசிக்கப் போறீங்களா?”என நீலவேணியும், நாச்சிமுத்துவும் சலித்துக் கொண்டனர்.

 

ஆனால் தன் கலங்கிய கண்களை அவர்களுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் ஆராத்ரிகா. 

 

பொதுவாகவே ஒரு சிலர் தங்கள் கோபத்தைப் பொருட்களை உடைத்து, தம்மைத் தாமே காயப்படுத்திக் கொண்டு வெளிப்படுத்துவர்.

 

மற்றச் சிலரோ, தங்களது கோபத்தைக் கட்டுப்படுத்த அமைதியைக் கையாள்வர்.

 

இவ்விருவரில் முதல் ரக மனிதர்கள் எளிதில் சமாதானம் அடைந்து விடுவர்.

 

ஆனால் இரண்டாவது ரக மனிதர்கள் தங்களது கோபத்தைக் கட்டுப்படுத்தி மட்டுமே வைத்திருப்பர்.

 

அவர்களது கோபம் மனதிற்குள்ளேயே கனன்று கொண்டு இருக்குமே தவிர வெளியில் போட்டுடைத்து விட மாட்டார்கள்.

 

இவர்கள் எப்போது சமாதானம் அடைவார்கள் என்பதைச் சுற்றி இருப்பவர்களால் எளிதில் கண்டறிந்து கொள்ள இயலாது.

 

இதில் அபூர்வன் இரண்டாவது ரகம்!

 

அமைதியாக இருந்து அனைவரையும் பதட்டத்தில் ஆழ்த்திக் கொண்டு இருக்கிறான்.

 

தன் மனைவியின் செயலை அவனால் மறக்கவும், மன்னிக்கவும் இயலவில்லை.

 

குழந்தையின் முக்கியத்துவத்தை எத்தனையோ தடவைகள் அவளுக்குப் புரிய வைக்க முயன்று ஏற்கனவே தோற்றுப் போயிருந்தவனுக்கு அவள் வாழ்வில் நடந்த மோசமான சம்பவத்தை தன்னிடம் மறைத்ததையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் கனத்த மனதுடன் தான் வலம் வருகிறான் அபூர்வன்.

 

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் மகனை அழைத்த நாச்சிமுத்துவோ, 

 

“ஆராவுக்குச் செக்கப் பண்ணனும். ஹாஸ்பிடலில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்ட தானே? இன்னைக்கு லீவைப் போட்டுட்டுக் கூட்டிட்டுப் போயிட்டு வா அபூர்வா?”எனத் தெரிவித்து விட்டு ஆராவையும் கிளம்பச் சொல்ல, 

 

“சரிப்பா”என்றவனோ,

 

தனது வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு,” ஹாஸ்பிடலுக்குப் போகலாம் வா”என மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் அபூர்வன். 

 

அங்கே தங்களது ஆஸ்தான மருத்துவரிடம் பரஸ்பர விசாரிப்பை முடித்துக் கொண்டுத் தன் மனைவியின் கர்ப்பத்தைப் பற்றிக் கூறிப் பரிசோதித்துப் பார்க்கச் சொன்னான் அபூர்வன்.

 

அவரும்,”வாம்மா. குழந்தை எப்படி இருக்குன்னுப் பார்க்கலாம்”என ஆராத்ரிகாவைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவளைப் பரிசோதித்துப் பார்த்தார்.

 

சில மணி நேரப் பரிசோதனைக்குப் பிறகு, வெளியில் வந்தனர் இருவரும். 

 

ஆராவை நாற்காலியில் உட்காரச் சொல்லி விட்டு அபூர்வனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் மருத்துவர்.

 

“குழந்தை ஹெல்த்தியா இருக்கு ஆபூர்வன். ஆனால் அம்மா தான் ஸ்ட்ரெஸ் ஆக இருக்காங்க!”என்று அவர் இப்படி கூறியதும் மனைவியை நோக்கி வெற்றுப் பார்வைப் பார்த்தவனோ அடுத்து அவர் கூறப் போவதைக் கேட்கத் தொடங்கினான்.

 

“என்ன மிஸஸ். ஆராத்ரிகா அதிகமாக ஸ்ட்ரெஸ் ஆகுறீங்களோ? அது குழந்தையையும் பாதிக்கும்னு தெரியும் தானே?”என அவளைக் கண்டிக்கும் குரலில் பேசினார். 

 

“டாக்டர் ஸ்ட்ரெஸ் ஆகுற அளவுக்கு எனக்கு எந்தப் பிராப்ளமும் இல்லை. என் குடும்பம் என்னை ரொம்ப நல்லாப் பாத்துக்கிறாங்க. அதனால் எனக்கு ஸ்ட்ரெஸ்ஸே இல்லன்னு என்னால் கண்டிப்பாகச் சொல்ல முடியும்”என்றவளை வெறித்துப் பார்த்தான் அவளது கணவன். 

 

“உங்க முகத்தில் இருந்து வர்ற சின்ன மாற்றத்தைக் கூடக் கண்டுபிடிச்சுட்டேன். எப்பவும் கலகலன்னுப் பேசுற மிஸ்டர். அபூர்வன் இப்போ என்னைப் பார்த்ததும் பேருக்கு விசாரிச்சார். நீங்களும் வந்ததில் இருந்து பதட்டமாக இருக்கீங்க. அதோட அபூர்வனை நொடிக்கு, நொடி திரும்பித், திரும்பிப் பாத்துட்டே இருக்கீங்க! நீங்க மன அழுத்தம் ஆகி இருக்கீங்கன்றதுக்கு இதுக்கு மேலே வேற என்னக் காரணம் வேணும் சொல்லுங்க?”என்றதுமே, 

 

இவர் தன்னைச் சரியாக கணித்து விட்டாரே! என அதிர்ந்து போய் விட்டாள் ஆராத்ரிகா.

 

அபூர்வனுக்குமே திடுக்கிடல் தான். ஆனால் வாய் திறவாமல் இருந்தான்.

 

“உங்களுக்குள்ளே ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அது உங்கப் பர்சனல்! நான் அதைப் பத்திக் கேட்க மாட்டேன். ஆனால் அதனால் பாதிக்கப்படப் போறது நீங்க மட்டுமில்லாமல் உங்க குழந்தையும் தான்னு யோசிச்சுப் பார்த்துட்டு, உங்க மனசை ரிலாக்ஸ் ஆக வச்சுட்டு, அடுத்தச் செக்கப்புக்கு வாங்க”என்று அறிவுறுத்தவும், 

 

ஆராத்ரிகாவின் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொண்டு மருத்துவருக்கு நன்றிக் கூறி விட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்து காரில் ஏறினர் அபூர்வன் மற்றும் ஆராத்ரிகா. 

 

உடனே தனது கணவனிடம் மன்னிப்பை யாசிக்கும் விதமாக,”சாரி அபூ!”என்றவளிடம், 

 

“ஆரா ப்ளீஸ்! நீ கெஞ்சினா நான் மனசு மாறிடுவேன்! அதனால் புரிஞ்சுக்கோ! நம்மக் குழந்தையை நீ கவனமாகப் பார்த்துக்கோ! எனக்கு அதுவே போதும்! டாக்டர் சொல்லச், சொல்ல நான் அழுக கூடாதுன்னுக் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்! மறுபடியும் என்னை இதைச் சொல்ல வைக்காதே! ஸ்ட்ரெஸ் ஆகாதே! அதுக்குக் காரணமான விஷயங்களையும், மனுஷங்களையும் உன்னை விட்டுத் தள்ளியே நிறுத்தி வை”என்றவன் குறிப்பிடுவது காரிகாவைத் தான் என்று ஆராத்ரிகாவிற்குப் புரிந்தது. 

 

“இல்லை அபூ! காரிகா!” 

 

“போதும் ஆரா! உன் ஃப்ரண்ட்டோட இனிமேல் நீ பேசக் கூடாதுன்னு நான் கண்டிஷன் எதுவும் போட மாட்டேன்! நாளைக்கே உனக்கு மொபைல் வாங்கித் தர்றேன்! உன் ஃப்ரண்ட்ஸ் யார் கிட்ட வேனும்னாலும் பேசிக்கோ! ஆனால் மன அழுத்தம் ஆகாதே! உனக்குத் தான் எங்கிட்ட வெளிப்படையாகப் பேசுறதை விட உன் ஃப்ரண்ட்ஸ் கிட்டே வெளிப்படையாகப் பேசுறது தான் வசதியாக இருக்குமே? அதான் சொல்றேன்!”என்றவனைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தாள் ஆராத்ரிகா.

 

அவனது வேண்டுகோள், தான் மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே! 

 

இதற்கு முன்பெல்லாம், தான் பேசுவதை பொறுமையாக கேட்கும் மணாளன் இன்றோ பேசுவதற்கு முன்னரே வேண்டாம் என்று இடைநிறுத்தி விட்டானே! 

 

 தன்னுடைய திட்டம் இவனுக்குத் தெரிந்து விட்டதோ? அதனால் தான் இப்படி தன்னிடம் நடந்து கொள்கிறானோ? என்றக் கேள்விகள் தான் அவளது மனதை அரிக்கத் தொடங்கியது. 

 

இந்தக் குழப்பத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் மனதிற்குள்ளேயே துடித்தாள் ஆராத்ரிகா.

 

“வீடு வந்துருச்சு. இறங்கு ஆரா”என வளை இறங்கச் சொல்லியவன் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி அப்படியே காரைத் திருப்பிச் சென்று விட்டான் அபூர்வன்.

 

“ஆராம்மா வா. வந்து உட்காரு. உன்னை இறக்கி விட்டுட்டு இவன் ஆஃபீஸூக்குக் கிளம்பிட்டானா?” என்ற மாமனாரிடம், 

 

“ஆமாம் மாமா. அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்”என்றுரைத்து விட்டாள் ஆராத்ரிகா. 

 

“சரி, ஹாஸ்பிடலில் என்ன சொன்னாங்க? உன் ரிப்போர்ட் எங்கே?”எனத் தன்னிடம் ஆறுதலாக விசாரித்த மாமியாரிடம் தனது பரிசோதனை அறிக்கையைக் கொடுத்தாள் ஆராத்ரிகா. 

 

“இந்தா குடி”என்று இப்போதும் நேரம் தவறாமல் அவளுக்கானப் பழச்சாற்றைக் குடிக்க கொடுத்து விட்டு அவளது அறிக்கையைப் படித்து முடித்து விட்டுப் அதைப் பத்திரமாகப் பீரோவில் வைத்து விட்டு, 

 

“மாத்திரையை நானே வேலை தவறாமல் தர்றேன். இந்த அபூர்வனுக்கு மண்டகப்படி கொடுத்தால் தான் சரிப்படுவான்! இன்னுமே மருமக முகம் தெளிவாகவே இல்லை!”என்று பொரிந்தார் நீலவேணி. 

 

அவர் கொடுத்தப் பழச்சாற்றை மெது, மெதுவாகப் பருகிக் கொண்டு இருந்த ஆராவோ,’நான் உனக்குப் பண்ணின நல்லதுக்கு நீ பண்ணி இருக்கிற கைம்மாறுக்கு நன்றி நிஹாரிகா!’என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டவளது மனம் மௌனமாக அழுதது என்றால் முகம் பாறையாக இறுகி விட்டிருந்தது.

 

– தொடரும் 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்