Loading

அத்தியாயம் 23

கொடுக்கப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்பாகவே பிரசவ வலி வந்திருந்தது வசுந்தராவிற்கு. அன்று காலையிலிருந்தே அவள் முகம் வாடித் தான் இருந்தது. காலையிலேயே மனைவியின் முகம் கண்டு யோசனையான சஞ்சய் அன்னையைச் சென்று அழைத்து வந்தான். பிரசவ காலம் நெருங்கவுமே வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அலுவலகத்தில் அனுமதி வாங்கி இருந்தான். அவளைப் பரிசோதித்த அனுபமா,

“பிரசவத்துக்கு இன்னும் நாலு நாள் இருக்கே.” என்றவர் அவளை உடல் பொறுக்கும் அளவிற்கு வெந்நீரில் குளிக்க வைத்து மெதுவாகக் கீழே அழைத்து வந்தவர் காலை உணவைக் கொடுக்க. ஏனோ ஒரு அசவுகரிய நிலை. முடிந்தும் முடியாமலும் உண்டு முடித்தவளுக்கு. சிறிது நேரத்தில் நன்றாக வலி தெரிய ஆரம்பித்தது.

அது பிரசவ வலி தான் என்பதை உறுதி செய்து கொண்ட அனுபமா மகன் மற்றும் மருமகளுடன் குழந்தைக்குத் தேவையான வற்றையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
இவர்களோடு மருத்துவமனையில் உடன் சேர்ந்து கொண்டார் பிரபு. நன்றாக வலி வந்த போதும் குழந்தை வயிற்றுக்குள்ளே மலம் கழிக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவளை அறுவை சிகிச்சையின் அறைக்குள் அழைத்துச் சென்ற பதினைந்து நிமிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

குழந்தையின் சத்தத்தில்
“பையன்.” என்றார் அனுபமா புன்னகையுடன்.
“ஸ்கேன் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டிங்களா.? எத்தனை முறை கேட்டோம். சொன்னீங்களா.?” எனப் பொய் கோபத்துடன் கேட்ட மகனைப் பார்த்தவர்.
“ஜெண்டர் ரிவில் பண்ணா. போலீஸ்  பிடிச்சிட்டு போயிடும் மகனே. தெரியாதா.? எனக் கேட்டார் விரிந்த சிரிப்புடன். இவர்கள் இங்கு வழக்காடிக் கொண்டிருக்க நீல நிற பூந் துவளையில் சுற்றி சஞ்சய்யின் மகனைக் கொண்டு வந்தார் மருத்துவர்

“அனு, பையன்.” என்று சிரிப்புடன் கூறியவர் அனுபமாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு. “அம்மாவும் நல்லா இருக்காங்க? கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க.” என்ற வழக்கமான தகவலைக் கூறிவிட்டு மறுபடியும் உள்ளே சென்று விட்டார்.

எந்த நிற குறைபாட்டினால் வசுந்தரா, தாய் மற்றும் சகோதரிகளால் வெறுக்கப்பட பட்டாளோ அந்த நிறத்தில், பாலில் குங்குமப்பூ கலந்தது போன்ற செக்கச்சிவந்த நிறத்தில் பிறந்திருந்தான் சஞ்சய் மற்றும் வசுந்தராவின் மகன்.
“அப்படியே உன்னை உருச்சி வச்ச மாதிரி பிறந்து இருக்கான்டா உன் புள்ள.” என்று  அனுபமா கூற சிறகு இல்லாமல் பறப்பது போன்று உணர்ந்தான் அந்தப் புத்தம் புதிய தந்தை.

மருத்துவமனை வாசம் முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தார்கள் தாயும் சேயும் நலமாக. கோகிலா உடன் ரகுபதி மருத்துவமனைக்கு வந்து மகளையும் பேரணையும் பார்த்துவிட்டுச் சென்றார். செக்கச் சிவந்த நிறத்தில் குழந்தையைப் பார்த்ததும் அவனை விட்டுச் செல்லவே மனமில்லை கோகிலாவிற்கு.

‘நிறம் எப்படி பாசத்தை  அளவீடாகக் கொள்கிறது.’  என இப்போதும் நினைத்து வேதனைப்பட்டாள்  வசுந்தரா.
சிலரை எப்போதும் திருத்த முடியாது என நினைத்து மனதை சமன் செய்து கொண்டாள்.
அதுபோல வசுமதியும் அவள் கணவனுடன் வந்து பார்த்துச் சென்றாள்.
குழந்தையை கையில் வைத்திருந்த வசுமதி,
” ஹப்பா..! உனக்கு எப்படி டி இப்படி கலரா ஒரு புள்ள..” எனக் கேட்டு அதிசயிக்க, இவளை எல்லாம் திருத்தவே முடியாது என்ற எண்ணம் தான் வசுந்தராவிற்கு.

பிரச்சனை நடந்த மறுநாளே சஞ்சய், மனைவியிடம் கேட்டுச் சொன்ன தொகையை அனுப்பி இருந்தான் வசுமதியின் கணவன். மறுபடியும் ஒரு மன்னிப்போடு. அதன் பிறகு, வசுந்தராவின் உடல்நிலையை கேட்டு அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொள்வார்கள் இருவரும்.

பதினாறாம் நாளில் குழந்தைக்கு மொட்டை அடித்து அனு வருணன் எனப் பெயர் சூட்டியிருந்தார்கள்.
அன்னையின் பெயரைச் சேர்த்து தன் மகனுக்கு வைக்க வேண்டும் என்பது சஞ்சயின்  ஆசையாக இருந்தது. தன்னைப் போல ஜாடையில் இருக்கும் பேரனுக்குத் தன் பெயரின் பாதியும் இணைந்ததில் பெரும் மகிழ்வு அனுபமாவிற்கு.
இவை அனைத்தையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் பிரபு.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக நாட்களும் கடந்து செல்ல அனு வர்ணனுக்கும் மூன்று வயது முடிந்திருந்தது. கணவன் மாமனார் மாமியார் மகன் என மகிழ்வாகவே நாட்கள் நகர்ந்தது வசுந்தராவிற்கு. இந்த நாலரை வருடத்தில் கணவனின்  காதலை முழுவதுமாகப் பெற்றிருந்தாள். தன் தயக்கம் நீங்கி மெது மெதுவாகக் கணவனோடு பழக ஆரம்பித்திருந்தாள். சண்டை என்று பெரிதாக அவர்களுக்குள் வந்ததில்லை. அவனுக்குப் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லாததால் அவர்களோடு வெளியே செல்வதோ, வீட்டிற்கு நேரம் கடந்து வருவதோ இல்லாமல் குடும்பத்துடன் வெளியில் செல்வதே எப்போதும் வாடிக்கையாக இருக்க. சண்டைக்கு வேலை இல்லாமல் இருந்தது அங்கு.

கணவனைவிட மாமியாரே உற்ற தோழிபோல இருந்தார். அதிகமான நேரம் இவர்கள் இருவருமே ஒன்றாக இருக்க. மாமியார், மருமகளுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அன்பு மட்டுமே இருவருக்கும் இடையில் இருந்தது.

சஞ்சைக்கும் அலுவலகத்தில் அடுத்த உயர் பதவி நிலைக்குச் செல்ல, கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தாய், தந்தை இருவரும் மனைவி மற்றும் மகனை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் எந்தக் கவலையுமின்றி தன் பதவி உயர்வுக்காக  நேரம் காலம் இல்லாமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான்.

அவ்வப்போது வசுந்தராவின் தந்தை மட்டுமே வந்து பார்த்துச் செல்வார். இவளுக்கும் தாய் வீடு என்பதே இல்லாமல் போய்ப் புகுந்த வீடே பிறந்த வீடாகவும் மாறி இருந்தது. குறை கூற முடியாத அளவிற்கு கண்ணிற்குள் வைத்துப் பார்த்துக் கொள்வதைப் போலப் பார்த்துக் கொண்டார் அனுபமா. ஒற்றைப் பிள்ளையாகச் சஞ்சய் அவருக்கு இருக்க. மகனுக்குப் பிறந்த குழந்தையும் ஆண் குழந்தையாக இருக்க பெண் குழந்தைக்கான அவரின் ஏக்கத்தை மருமகளை வைத்தே தீர்த்துக் கொண்டார். அதில் இன்னும், இன்னும் அதிகமான பிணைப்பு ஏற்பட்டது இருவருக்கும். அவரின் அதீத அன்பில் ஒரு முறை தன் பிறந்த வீட்டில் தந்தை மற்றும் தந்தையின் அன்னை இருவரையும் தவிர தன் மேல் பாசம் காட்ட யாரும் இல்லை என்பதை கூறியிருந்தாள்.

“இப்படி உங்க பாசம் முழுக்க எனக்கு மட்டுமே  கிடைக்கணும்னு  தான் அங்க நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன் போல.”எனச் சிரிப்புடன் சில நேரம் கூறுவாள்.

பதவி உயர்வுக்காகக் கணவன் வேலையே கதியென இருப்பதில் சில நேரம் இவளுக்கு அலுப்பாக இருக்கும். நேரம் சென்று வீட்டுக்கு வருபவன் தூங்கும் குழந்தையை முத்தமிட்டு செல்லும்போது அந்த முத்தம் இவளுக்கும் வேண்டியதாக இருக்கும். ஆனால் வாய் திறந்து கேட்க மட்டும் முடியாது.

இப்படியே ஆறு மாதத்தில் சஞ்சய் எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைத்தது இடமாற்றத்துடன். ஆம், அவனுக்கு அகமதாபாத்திற்கு மாற்றல் கிடைத்தது. அன்று வேலை முடிந்து விரைவாகவே வீட்டிற்கு வந்தவன் இரவு உணவின்போது அனைவரிடமும் இதைப் பற்றிக் கூறினான். அனைவருக்குமே மகிழ்வு தான். அவன் இரவு பகலாக உழைத்ததற்கு அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு.

“இப்போ என்னப்பா செய்றது.?” எனக் கேட்டான் இரவு உணவாகச் சப்பாத்தி குருமாவை தானும் சாப்பிட்டு தன் மடியில் அமர்ந்திருந்த மகனுக்கும் ஊட்டியப்படியே. விடுமுறை தினங்களில் மட்டும் பார்க்கும் தந்தையை அன்று பார்த்ததும் வருணனுக்கு  அவ்வளவு மகிழ்வு. தந்தையோடு ஒட்டிக்கொண்டு அவன் மடியிலிருந்து இறங்காமல் அமர்ந்திருந்தான்.

“என்னப்பா செய்றதுனா.? இப்ப சாப்பிடற சப்பாத்திய சாப்பிட்டு பழகிக்கோ. இனிமே சப்பாத்தி தான் உனக்கு.”என்று கூறிவிட்டு அவர் அட்டகாசமாகச் சிரிக்க.
உண்பதை நிறுத்திவிட்டு கடுப்புடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சஞ்சய்.
“போதும் போதும் அவனைக் கேலி செஞ்சது.” என அனுபமா வர அமைதியானது இடம்.

“ஏன் சஞ்சய்.? இத்தனை நாளா பதவி உயர்வு வேணும்னு கடுமையா உழைச்சிட்டு இருந்த. இப்போ கிடைச்சிருக்கு. அப்புறம், என்ன யோசனை.?” என்ற அன்னையின் கேள்விக்கு

“ஆமாம்மா.பதவி உயர்வு வேணும்னு தான் கடுமையாக உழைத்தேன். ஆனா இப்போ வேற ஊருக்குப் போகச் சொல்றாங்களே. அதான் என்ன செய்றதுன்னு பார்க்கிறேன்.?”

“வேற ஊரா இருந்தா என்ன.? ஆப்பர்ச்சூனிட்டீஸ் வரும்போது புடிச்சிக்கணும். இதோ இருக்கிற அஹமதாபாத். பிளைட் ஏறினா மூன்று அல்லது நான்கு மணி நேரத்துல வந்துடலாம். அதுக்கு போய் இவ்ளோ யோசிக்கிற. இப்போ இருந்தே அங்க இருக்கிற ஸ்கூல், வீடுபற்றி எல்லாம் விசாரிச்சு பாரு. உன் ஆஃபீஸ் கிட்ட இருக்கிற மாதிரி வீடு அமைந்தா நல்லது தானே. அங்க இருக்கிற ஆபிஸர்ஸ்  யார் கிட்டயாவது கேட்டுப் பாரு. இங்கேயே ஒரு அளவுக்கு முடிவு பண்ணிட்டு அங்க போய்ப் பைனலைஸ் பண்ணிடு.அதுக்கப்புறம் வந்து ரெண்டு பேரையும் கூட்டிட்டு போ.” என்று இலகுவாக அனுபமா கூற.

பெரும் கவலையுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா
“ஏன் அத்தை நீங்களும் அங்கேயே வந்துற முடியாதா.?” எனப் பாவமாகக் கேட்கும் மருமகளை பார்த்துச் சிரித்தவர்.
“நான் வந்துட்டா இங்க கிளீனிக்கை யாருமா பாத்துக்குறது.?” என்றவர் மகனுக்குக் கூறியதையே அவளுக்கும் கூறினார்
“எப்போ நினைச்சாலும் உடனே வரத் தூரத்தில் தானே இருக்கோம்? அப்புறம் என்ன.? வார இறுதியில் நீங்க வாங்க.அப்புறம் நாங்க வரோம்.” என்றார் சுலபமாக.

“என்ன ஒன்னு இந்தக் குட்டி பையன தான் ரொம்ப தேடும்.” என்றார் மகனின் மடியில் அமர்ந்திருந்த பேரனின் நாடியைப் பிடித்து ஆட்டியபடி. அதற்கே அவன் தந்தையிடமிருந்து பாட்டியிடம் தாவி இருந்தான்.

“நீங்க எப்படி இருப்பீங்களோனு கவலைப்படுறீங்க ஆனா அவன் எப்படி இருப்பானோ உங்கள விட்டு அப்படின்னு யோசிக்க மாட்டேங்கிறீங்க.” என்றாள் மனம் தாங்காமல் வசுந்தரா.
“புரியுதுமா. சூழ்நிலை வரும்போது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள தானே வேணும்.? என்றார் பெருமூச்செரிந்தவராக.

“நீ பேசுவதை பார்த்தால் பையன் கஷ்டப்படுவான்னு  பேசுற மாதிரி இல்ல. நீதான் எங்க அம்மா இல்லாம ரொம்ப கஷ்டப்படுவ போல. அவன் தேடுறானோ இல்லையோ நீதான் அவங்களை அதிகமா தேட போற.”

‘ஆமா உங்களுக்கு என்ன.? நீங்கப் பாட்டுக்கு வேலைக்குப் போயிடுவீங்க. தனியா இருக்க போறது நான்தானே.’ என்று அவள் வாய்க்குள் முனுமுனுத்தது யாருக்கும் கேட்காமலே போனது. மற்ற இருவரும் சஞ்சயின் கூற்றில் சிரித்த சிரிப்பலையில்.

புது வேளையில் சேர்வதற்கு இன்னும் இருபது நாட்கள் இருந்தது சஞ்சய்க்கு. அன்னை கூறியது போலவே இங்கிருந்தபடியே தன் அலுவலகத்தின் அருகிலேயே வீட்டையும் மகனுக்குப் பள்ளிக்கூடத்தையும் தேடினான். அப்படி அலுவலக விஷயமாகவும், சொந்த விஷயமாகவும் பேசியதில் அவனுக்கு இங்கிருந்தே ஒரு நட்பு கிடைத்தது. அவர் பெயர் தாரணி, மலையாளி. இவன் தென்னிந்தியாவிலிருந்து வருவதை தெரிந்துகொண்டு அவராகவே முன்வந்து பேசி அவனோடு அங்கிருந்தபடியே நட்பு பாராட்டிக்கொண்டார்.

அவர் அங்கு ஏற்கனவே தங்கி இருக்கும் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட்டை பற்றிக் கூறி அங்கேயே வீடு ஏதும் வாடகைக்கு கிடைத்தால் கூறுவதாகக் கூறியிருந்தவர், அதற்குள்ளாகவே மழலையர்களுக்கான பள்ளிக்கூடமும் இருப்பதைப் பற்றிக் கூறினார். இவனுக்குமே  அவர் சொன்னது ஏற்புடையதாக இருந்தது.

அலுவலகத்திற்கு அருகில் வீடு இருப்பதும் அதன் உள்ளே குழந்தைக்கான பள்ளிக்கூடம் இருப்பதும் மற்ற தேவைகளுக்கு அவசியமான கடைகள் இருப்பதும் புது இடத்தில் மனைவிக்கும் வசதியாக இருக்கும். தனக்கும் ஒரு நண்பராக அவர் அங்கு இருக்கும்போது பல வகையில் உதவியாக இருக்கும் என எண்ணியவன். தாரணி கூறியவற்றுக்கு சம்மதித்து அவனும் கூகுளில் அவர் சொன்ன அப்பார்ட்மெண்ட்டை பார்த்துப் படித்துத் தெரிந்து கொண்டான். தாரணி இவனைவிட ஐந்து வயது மூத்தவராக இருந்தார்.
பழகிய சில நாட்களிலேயே இருவருக்கும் வெகுநாள் பழகியது போன்ற நட்புறவு ஏற்பட்டிருந்தது.

மனைவியிடமும், தாய், தந்தையிடமும் இதைப் பற்றிக் கூறியிருக்க,
“போற இடத்துல நல்ல பழகுறவங்க யாராவது இருக்கிறது நல்லது தான்.ஆத்திர அவசரத்துக்கு அவர்களிடமிருந்து உதவியும் பெற்றுக் கொள்ளலாம். தெரியாததையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு பாதுகாப்பு உணர்வும் இருக்கும்.”என்ற அனுபமாவிற்கு மிகுந்த திருப்தியே.

புது இடத்தில் மருமகள் எங்குச் சிரமப்படுவாளோ என்று மனதிற்குள் பயந்து கொண்டே இருந்தார் அவர். துணிச்சலாக எதையும் செய்து கொள்ளும் பெண் அல்ல அவள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்காக ஒரேடியாகப் பயந்தவளும் அல்ல. இருந்தாலும், புது ஊரில் ஆரம்பகட்ட தயக்கம் அவளுக்கு இருக்கும் என்பது அவர் அனுமானித்தே இருந்தார். இதுவரை தனியாகவும் இருந்ததில்லை என்பதால் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்க போகிறாளோ என நினைத்தவருக்கு இது, பெரும் கவலையாக இருந்தது. இப்போது சஞ்சய் கூறிய விஷயத்தில் சற்றே நிம்மதியும் ஆசுவாசமும் கிடைத்தது.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்