27 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 27

முகம் முழுவதும் ரத்தம் வழிய.. எதிரில் நின்றவர்களை நிமிர்ந்து பார்க்க கூட உடலில் தெம்பில்லாத போதும்.. அவளை காக்க முன் வந்தான் சத்யன்.  அதுவே அவள் மீது அவன் கொண்ட உண்மையான அன்புக்கு சான்று.

 

” இவன் வேற.. நீ இன்னும் சாகலயாடா? ” என்று விஜய் சத்யனை பிடித்து இழுத்து தள்ளியவன். அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்து.. அருகில் இருந்த ஒரு மர நாற்காலியை  கொண்டு அவனை தாக்க  முன்னேறவும்..

“அவனை எதுவும் பண்ணிடாதீங்க” என்று கதறி அழுதாள் வர்ஷா.

அதனை கேட்டு விஜயின் கரம் அப்படியே நின்றது… ” ஒஹ் இவனுக்கு சுவிட்ச் அங்க இருக்கா.. சூப்பர் ” என்ற தேவன் சத்யனை மிதிக்கவும்…

சத்யனது வாயில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது… கண்கள் நிலைகுத்தி நிற்க.. இமைகள் ரத்தத்தில் திளைத்திருக்க.. மூச்சு விட முடியாமல் தவித்து கொண்டிருந்தான் சத்யன்.  அதனை பார்த்து பதறிபோனாள் வர்ஷா.

” ப்ளீஸ் அவனை விட்டுடுங்க..அவன் உங்களை என்ன பண்ணா? என்னால தானே உங்களுக்கு பிரச்சனை என்னை என்ன வேணா பண்ணுங்க அவனை விட்டுடுங்க… பாவம் அவன் ப்ளீஸ் விட்டுடுங்க ” என்று வர்ஷா அவனுக்காக கதறி அழுவதை பார்த்த சரத்துக்கு கோவம் தலைக்கேறியது..

” உன்னால என் தம்பி எழுந்துக்க முடியாமல் படுத்த படுக்கையா கிடக்கிறான்.. நீ என்னனென்னா எவனுக்காகவோ துடிக்கிறியா? உன்னை நான் சும்மா விட மாட்டேன்டி ” என்ற சரத். வர்ஷாவை  தாக்க வர..   அவனை தள்ளி விட்டாள் நந்தினி.

” பைல் கைக்கு வரட்டும் ” என்று அவள் கூற.. ” ஆமா சரத் ” என்று தேவனும் கூறினார்.

சரத் கூறியதை வைத்து அதியனுக்கு ஏதோ ஆபத்து என்பதை மட்டும் வர்ஷா உணர்ந்து கொண்டாள்.. ” அதி ” என்று அவள் அவனை பற்றி கேட்க வாய் எடுக்கும் முன்.. சத்யனின் கையை பிடித்து முறுக்கிய விஜய் அவனது கையை தனது கால் முட்டியில் வைத்து அடித்து உடைத்தான்.. அதில் சத்யன் வலி தாங்க முடியாமல் தன்னையும் மீறி கத்தினான். சத்யனது கதறலில் அனைத்தையும் மறந்த வர்ஷா..

” ப்ளீஸ் அவனை விடுங்க ” என்று கைகூப்பி வணங்கியவள், ஒருகட்டத்தில் சத்யன் படும் கஷ்டத்தை தாங்க  முடியாமல் அருகில் இருந்த நந்தினியின் காலை பிடித்து கொண்டு ” அக்கா அவனை விட சொல்லுங்க அக்கா ப்ளீஸ் அக்கா.. நீங்க சொன்னா கேட்பாங்க விட சொல்லுங்க அக்கா.. ” என்று கதறினாள்.

அவளது கதறலை கேட்டும் கல் போல அசையாமல் நின்ற நந்தினியின் மீது சத்யனுக்கு கொலை வெறி வந்தது.

தனது உயிரை அவள் காப்பாற்ற வேண்டும் என சத்யன் நினைக்க வில்லை.. அவளிடம் இருந்து அதனை எதிர்பார்க்கவும் இல்லை.. ஆனால் இப்படி ஒருவர் தன் காலில் விழுந்து கதறுவதையும் பொருட்படுத்தாமல் ஒரு மனிதனால் அதுவும் ஒரு பெண்ணால் எப்படி இருக்க முடியும்? பெண்மைக்குறிய அந்த தாய்மை குணம் கூடவா இவளிடம் கொஞ்சமும் இல்லை.. என்று தான் யோசித்தான் சத்யன்.

எதிரியாக இருந்த போதும் காலில் விழுந்தவனை தூக்கி விடுவது தான் மனித குணம்.. ஆனால் அதனை  உதறி தள்ளும் இவர்களை போன்றவர்களை மனிதர்கள் என்று யாரால் கூற முடியும்…

சத்யனின் கண்ணுக்கு இப்போது அங்கிருந்த அனைவரும் மிருகமாக தான் தெரிந்தனர்.. குறிப்பாக நந்தினியின் மீது அவனுக்கு விவரிக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் வந்தது.

பெண் என்பவள் கருணையின் மொத்த உருவமாவாள்.. அதனால் தான் இறைவன் பெண்களுக்கு தாய்மை எனும் வரத்தை கொடுத்துள்ளார். அவ்வாறு நாம் எண்ணும் ஒரு பெண்ணே இங்கு இன்னொரு பெண் அடையும் துன்பத்தை கண்டு கலங்காமல் இருக்கிறாள் என்றால் அவள் எப்படி ஒரு தாயாகவோ, மகளாகவோ,பெண்ணாகவோ இருக்க முடியும். என்ற கோவம் தான் சத்யனுக்கு இருந்தது.

கண்களை மூடி தன்னை கல்லாக்கி கொண்ட நந்தினி வர்ஷாவின் பிடியில் இருந்து வெளியே வரும் எண்ணத்தில் அவளை உதறி தள்ளினாள்.. அதில் மீண்டும் வர்ஷாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட.. “ஆஆ ” என்று வலியில் துடித்தவள் அப்போது தான் கவனித்தாள்.. தன் ஆடை முழுவதும் உதிரத்தால் நிறம் மாறி இருப்பதை.

” ஐயோ …ஐயோ என் குழந்தை என் குழந்தை ” என்று திக்கி திக்கி வயிற்றை தொட்டு பார்த்து கதறியவள்.. ” ஆஆஆஆ ” என்று அந்த இடமே அதிரும் படி கதறி அழுதாள்..

தன் உதிரத்தில் உருப்பெற காத்திருந்த மலர் ஒன்று அரும்பிலே கருகி போனதை எண்ணி கதறி அழுதாள்..

அவளது கதறல் சத்தம் சத்யனின் நெஞ்சை பிளந்தது.. அவளது கண்ணீர் அவனுக்கு வலித்தது… அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணி தன்னை தானே வெறுத்தான்.

” ஒஹ் நீ கர்ப்பமா வேற இருந்தியா? ஆமா அந்த குழந்தைக்கு அப்பன் யாரு ? ” என்று விஜய் கேலி பேசினான்.

” நீ ஏன்டா அழுகுற.. ஒருவேளை உன் குழந்தையா என்ன? ” என்று சத்யனிடம் கேட்டவன் சரத்..

அதனை கேட்டு ஊமையாக அழுத வர்ஷாவின்  இதயத்தில் ஒருகணம் அதியனின் எண்ணம் வந்து வலியை கொடுத்தது.

கொண்டவன் உடன் இல்லை எனும் போது கண்டவனும் கண்டதை பேசுவது உலகத்தில் நடப்பது தானே..

விஜய் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் சத்யனது கரத்தை பிடித்து முறுக்கினான்… சத்யன் வலியில் துடிக்க.. தனது வலியை புறம் தள்ளிய வர்ஷா” அவனை விடுங்க ” என்று கூறி சத்யனின் அருகில் வந்து விஜயை தடுக்க முயன்றவளின் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் விஜய்..

கீழே விழுந்தவளுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று வலி ஏற்பட.. பல்லை கடித்து தன் வலியை பொறுத்து கொண்டவள்.. ” அவனை விடுடா ” என்று உயிர் போகும் வலியில் கத்தினாள்.

 

அதனை கேட்டு அருகில் இருந்த கண்ணாடி ட்ரேவை எடுத்து வர்ஷாவின் தலையில் போட்டான் சரத். ” என்னடி குரல் உயருது.. கொன்னுடுவேன் ” என்று ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தான்.

அதனை பார்த்த சத்யாவினால் கதறி அழ கூட முடியவில்லை.. விழியோரம் சூடாக ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

கண்ணாடி ட்ரே விழுந்ததில் வர்ஷாவின் தலையில் இருந்து வழிந்த ரத்தம் நெற்றி வழியே கீழிறங்க.. மெல்ல மெல்ல கண்களை மூட தொடங்கினாள்.. பின்னர் மீண்டும்  ஒரு கண்ணாடி ட்ரேவை எடுத்து அவள் தலையில் அடிக்க சரத் முன்வரவும்..

நடுங்கிய கையுடன் அவனது அடிக்கி பயந்து கையெடுத்து கும்பிட்டு பின் நகர்ந்தவளை பார்த்து சத்யனுக்கு இதயம் ரணமாக வலித்தது.. இருந்தும் ஒன்றும் செய்யமுடியாத தன் இழிநிலையை எண்ணி நொந்து கொண்டவனால் அந்த சூழ்நிலையில் கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது.

பின்னர் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து விஜய் அவளை குத்த போகவும். அப்போது இடையில் வந்து விழுந்த சத்யனின் முதுகில் அந்த கண்ணாடி துண்டு இறங்கியது ” ஹாக் ” என்ற சத்தத்துடன்.. சுருண்டு விழுந்தான் சத்யன்.

” ச்சே நீ ஏன்டா குறுக்க வந்த? சாகுறதுக்கு அவ்ளோ ஆசையா என்ன ? ஆனால் அமர காதல் தான்டா உன்னோடது.. அதனால நீயே முதலில் செத்திடு ” என்ற விஜய் அந்த கண்ணாடி துண்டை கொண்டு சத்யனை குத்த போகவும்..

” உங்களுக்கு அந்த பையில் தானே வேணும் நான் கொடுத்துடுறேன்.. நான் கொடுத்துடுறேன்.. ப்ளீஸ் அவனை உயிரோட விட்டுடுங்க ” என்று தட்டு தடுமாறி உரைத்த வர்ஷா விஜயின் காலை பிடித்து கெஞ்சினாள்.

” ரொம்ப கெஞ்சிறாள் அவனை விடுடா ” என்ற தேவன் கீழே கிடந்த வர்ஷாவின் உச்சி முடியை பிடித்து மேலே தூக்கியவன் ” சொல்லுடி பையில் எங்க இருக்கு ? ” என்று கேட்டான்.

ரத்தம் வழிய வலியில் முனங்கி கொண்டிருக்கும் சத்யனை வலியுடன் திரும்பி பார்த்த வர்ஷா  ‘ என்னால தானே சத்யா உனக்கு இவ்ளோ கஷ்டம் என்னை மன்னிச்சிடு… இனியும் என்னால நீ கஷ்டபட வேண்டாம்..  எப்படியும் இவங்க என்னை கொன்னுடுவாங்க.. நான் இல்லனாலும்,நான் வாழனும்னு ஆசைப்பட்ட நீ உயிரோட இருக்கணும்.. இன்னொரு பிறவி இருந்தால் உனக்கு நான் மகளா பிறக்கணும் சத்யா…   ‘ என்று மானசீகமாக அவனிடம் பேசியவள், அவனது உயிருக்காக அந்த பைல் தனது வீட்டில் இருக்கும் இடத்தை கூறினாள் வர்ஷா.

‘யாருக்கு என்ன ஆனால் எனக்கு என்ன? ‘ என்று ஒரு ஓரத்தில் கண்களை மூடி நின்று கொண்டிருந்தாள் நந்தினி. பூனை தன் கண்களை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எண்ணுமாம் அது போல..

அவள் கண்கள் பார்க்காத காட்சிக்கும் அவளுக்கு சம்மந்தம் இல்லை என்று எண்ணி ஒருவேளை அமைதி காத்தாளோ என்னவோ!!!

விஜய் பைலை எடுக்க, விக்ரமனின் வீட்டிற்கு வந்தான்.  வர்ஷாவின் அறைக்குள் சென்று அவள் சொன்ன மெட்டல் பாக்ஸை எடுத்தான்.

பின்னர் அந்த தகவலை தேவனிடம் அவன் போன் செய்து கூறினான். அப்போது அவர்கள் வர்ஷாவையும், நிதினையும் அடுத்து என்ன செய்வது?பேசாமல் கொன்று விடுவோமா? என்று அவன் கூறி கொண்டிருக்க.. அப்போது வர்ஷாவின் அறைக்கு அவளை தேடி வந்த ஜோதி அவன் பேசியதை கேட்டு விட்டார்.

தேவனிடம் பேசிவிட்டு விஜய் திரும்பி பார்க்க.. அங்கு ஜோதி நின்றிருந்தார். விஜய்க்கு பதட்டமானது.. உடனே தன்னை வெளிப்படுத்தாமல் அவன் வெளியே செல்ல பார்த்தான்.

வர்ஷாவின் அறைக்குள் இருந்து விஜய் வெளியே வருவதை பார்த்த ஜோதி ” இப்போ யார் கிட்ட பேசின? வர்ஷா நிதின்.. கொலைன்னு ஏதோ பேசினியே? என்ன அது? ” என்று கேள்வி கேட்க..

என்ன பதில் கூறுவது என்று தடுமாறிய விஜய், பதில் சொல்லாமல் அவரை கடந்து செல்ல.. அவனை பின் தொடர்ந்தபடி ஹாலிற்கு வந்த ஜோதி அவனை தடுத்து நிறுத்தினார்.

விஜயின் கையில் இருந்த வர்ஷாவின் அந்த பாக்ஸை பார்த்த ஜோதிக்கு ஏதோ ஒன்று சரி இல்லாததை போல தோன்ற ” இது வர்ஷா உடையது தானே.. ” என்று கேட்டார். தடுமாறிய விஜய்…

” இல்லை ” என்று கூற… அப்போது பார்த்து மீண்டும் தேவனிடம் இருந்து விஜய்க்கு அழைப்பு வந்தது.. அலைபேசியின் திரையில்  தேவனும் விஜயும் சேர்ந்திருக்கும் போட்டோ ஜோதிக்கு தெரிய, அவருக்கு தூக்கி வாரி போட்டது.

“உனக்கு எப்படி தேவனை தெரியும்..  நீ இப்போ வர்ஷா ரூமில் இருந்து தானே இதை எடுத்துட்டு வந்த? எதுக்கு இப்போ நீ இவ்ளோ பதட்டமாக இருக்க வர்ஷா எங்க? என் பொண்ணு எங்கடா? ” என்று ஜோதி அடுக்கடுக்காக.. கேள்வி கேட்டு அவன் சட்டையை பிடிக்க… கோவமான விஜய் அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது என அறிந்து கொண்டு கையில் இருந்த அந்த மெட்டல் பாக்ஸை கொண்டு ஜோதியின் தலையில் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான்.

அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜோதியின் கழுத்தில் தனது காலை வைத்து அழுத்தியவன் அவரது உயிர் பிரியும் வரை கழுத்தில் இருந்து காலை எடுக்கவில்லை.

ஜோதியின் உயிர் விஜயின் காலடியில் துடி துடித்து போனது.. பின்னர் அந்த மெட்டல் பாக்ஸை எடுத்துக்கொண்டு ஆய்வகத்துக்கு வந்தான் விஜய்.

தேவனை தனியாக அழைத்து ஜோதியை தான் கொலை செய்த விஷயத்தை கூறினான் விஜய்.

” சரி விடு பார்த்துக்கலாம்.. நாளைக்கு எப்படியும் போலீஸ் அர்ஜுனை அரஸ்ட் பண்ணிடுவாங்க.. சோ விஷயம் கேள்வி பட்டு மாரடைப்பில் அவள் செத்து போன மாதிரி மாத்திடுவோம் ” என்று தேவன் அவனுக்கு ஐடியா கொடுக்க.. நிம்மதி அடைந்தான் விஜய்.

” இதை ஓபன் பண்ண முடியல சார் ” என்று அந்த மெட்டல் பாக்ஸை வைத்து கொண்டு விஜய் கூற..

அங்கே குறை மயக்கத்தில் கிடந்த வர்ஷாவின் முகத்தில் தண்ணீரை தெளித்த தேவன் ” ஏய் இதை ஓபன் பண்ணு ” என்று கேட்டார்.

இவளை போலவே குறை மயக்கத்தில் கிடந்த சத்யனை பார்த்த வர்ஷா ” அவனை வெளியே விடுங்க.. அவனை ஹாஸ்ப்பிட்டலில் சேருங்க.. நான் எப்படி ஓபன் பண்ணுறதுன்னு சொல்லுறேன் ” என்றவளை வேதனையுடன் பார்த்தான் சத்யன்.

அவளை எரிச்சலாக பார்த்த தேவன் தனது அடியாட்களிடம் ‘அவனை கொண்டு போய் என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல போடு.. ‘ என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவர் ” அவனை ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்க சொல்லியாச்சு ” என்று வர்ஷாவிடம் பொய் கூறினார்.

சத்யாவின் சட்டையை பிடித்து அவர்கள் இழுத்து செல்ல.. அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றவனால் சிறிது கூட நகர முடியவில்லை.. வலியுடன் வர்ஷாவின் முகத்தை பார்த்த சத்யனது கண்ணில் இருந்து இரு துளி கண்ணீர் தன்னிச்சையாக வழிய ‘ ஏன்டா.. என்னை காப்பாத்த நினைக்கிற? உன்னை இவங்க கிட்ட தனியா விட்டுட்டு நான் எப்படிடா? ” என்று மானசீகமாக அவளிடம் உரையாடியவன்.. அவளை நோக்கி தனது கரத்தை நீட்ட முயற்சித்தவனால் உடைந்து போன அவனது கரத்தை அசைக்க கூட முடியவில்லை.

பின்னர் அங்கு நின்றிருந்த  நந்தினியை அழைத்த தேவன். ஒரு மருந்தை கொடுத்து அதனை சத்யாவுக்கு போட சொன்னார்.

அவளும் தேவன் கொடுத்த அந்த மயக்க மருந்தை அரை மயக்கத்தில் இருந்த சத்யனின் கரத்தில் செலுத்தினாள். கண்களை சுருக்கி எதிரில் இருந்த நந்தினியை பார்த்தவனுக்கு. ” பெண்மைக்கே களங்கம் இவள்.. ” என்று தான் தோன்றியது.. அவள் கொடுத்த மருந்தின் செயல்பாட்டால் மெல்ல மெல்ல மயக்கமடைந்தான் சத்யன். அவனது உதடுகள் உதிர்த்த இறுதி வார்த்தை ” தேவா” என்பது தான். சத்தமில்லாமல் அவனது இதயத்தில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அது.

நந்தினி உள்ளே வரவும்.. அங்கு சரத்துக்கு மருத்துவமனையில் இருந்து போன் வந்தது..

அதனை எடுத்து பேசினான் சரத் “என்ன சொல்லுறீங்க? இதோ இப்போவே வரேன் ” என்ற சரத் வெளியே செல்ல பார்க்க..

” டேய் எங்கடா போற? ” என்று கேட்டு அவனை தடுத்து நிறுத்தினார் தேவன்.

” நான் உடனே ஹாஸ்பிட்டல் போகணும் அதியனுக்கு பிக்ஸ் வந்துடுச்சாமா ”

” ஒஹ் சரி.. ” என்ற தேவன் அவனை தனியே அழைத்து அர்ஜுன் விஷயத்தில் தாங்கள் வைத்திருக்கும் திட்டத்தை கூறி.. ” இன்னும் கொஞ்சம் நாள் நீ இங்க வர வேண்டாம்.. வெளியூர் எங்கேயாவது போய்டு.. விகர்மன் கண்ணுல பட்டுடாத நம்பர் எல்லாம் மாத்திடு ” என்று கூறினார்.

” சரி ” என்று சரத்.. அதியனை காண மருத்துவமனைக்கு சென்றான்.

தேவன் அந்த மெட்டல் பாக்ஸை திறக்க சொல்லி வர்ஷாவிடம் கேட்க.. தட்டு தடுமாறி எழுந்தவள், அங்கு மூலையில் விழுந்து கிடந்த தன் ஹேண்ட் பேக்கை கைகாட்டி அதனை எடுத்து தர கூறினாள்…

நந்தினியும் அதனை எடுத்து அவளிடம் கொடுக்க… அதிலிருந்து அந்த மெட்டல் க்யூபையும் தனது இடையில் இருந்த அந்த பட்டர் ப்ளை செயினையும் கழட்டி கொடுத்தாள்.

” என்ன இது ? ” என்று தேவன் புரியாமல் கேட்க..

” படிச்சவன் தானே நீ… பையில் அந்த பாக்சுக்குள்ள தான் இருக்கு.. உனக்கு அறிவு இருந்தால் முயற்சி பண்ணி அதை வெளியே எடுத்துக்கோ ” என்று கூறிய வர்ஷாவின் முதுகில் கோவத்தில் ஓங்கி மிதித்தார் தேவன்.

அவனை பார்த்து இதழ் வளைத்து சிரித்த வர்ஷா ”  இதை வச்சு தான் அந்த பாக்ஸை ஓபன் பண்ணனும்.. முடிஞ்சா திறந்து அந்த பையிலை எடுத்துக்கோ.. அது உன்னால முடியாது.. இப்போ கூட இந்த விஷயத்தை நான் உன்கிட்ட கொடுக்க காரணம்.. கண்டிப்பா எங்க விக்ரமன் எங்களை தேடி வருவான்.. அவனுக்கு இந்த பையில் கிடைக்கனும்.. இந்த விஷயம் என்னோட அழிஞ்சி போயிட கூடாதுன்னு தான் இதை உங்க கையில் கொடுத்து இருக்கேன்.. இதை நீங்க பார்க்கலாம் ஆனால் திறந்து ஆதாரத்தை எடுக்க முடியாது..  ” என்றவளின் தலையில் ஓங்கி அடித்தான் விஜய்.. வர்ஷா அந்த இடத்திலேயே  மயங்கி சரிந்தாள்..

” சார் இப்போ என்ன பண்ணுறது ” என்று விஜய் கேட்க..

” இவளை ஏதாவது பண்ணனும் விஜய்.. அப்போ தான் என் மனசு ஆரும்.. நந்தினி இதுல தானே பைல் இருக்கு இதை பத்திரமா வச்சுக்கோ.. அப்படியே அந்த க்யூப் செயின் எல்லாத்தையும் பத்திரமா வச்சுக்கோ.. என்ன பண்ணலாம்னு அப்ரோம் யோசிப்போம் ” என்று கூறி நந்தினியிடம் அந்த மெட்டல் பாக்ஸ்.. மெட்டல் க்யூப், பட்டர் ப்ளை செயின் என அனைத்தையும் ஒப்படைத்தார். நந்தினியும் அதனை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றாள்..

பின்னர் மயங்கி கிடந்த வர்ஷாவை தனக்கு தெரிந்த ஆட்கள் மூலமாக வெளிநாட்டிற்கு விற்று விடுவோம்.. என்று விஜய் ஐடியா கூற.. தேவனுக்கும் அது தான் சரி என்று தோன்றியது..

” இந்த விக்ரமன் குடும்பம் கடைசி வரை அவளை தேடி தேடியே சாகனும் ” என்று கூறி குரூரமாக சிரித்து கொண்டார் தேவன்.

பின்னர் அடுத்தநாள் அவர்கள் திட்டப்படியே அர்ஜுன் கைது செய்யப்பட்டார். விஜயும் தேவன் கூறியதை போலவே ஜோதி அதிர்ச்சி தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார், என கதையை மாற்றி விட்டான்.

*******

விக்ரமன் அறைக்குள் இருந்த அந்த ஒரு மணிநேரத்தில்  தனக்கு மட்டுமே தெரிந்தபடி ஹாலின் முன் பகுதியில் யாருக்கும் தெரியாமல் தான் வைத்திருந்த அந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான். வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காக அவன் பண்ணிய விஷயம் அது..  அது அவனை தவிர வேறு யாருக்கும் தெறியாது.

அதன் மூலம் தான் ஹாலில் வைத்து தன் தாயை விஜய் அடித்தே கொன்றிருப்பதை அறிந்து கொண்டான் விக்ரமன்.. தன் தாயை கொன்ற விஜயின் மீது எல்லை இல்லா கோவம் இருந்த போதும்.. எதற்காக அவன் இதை செய்தான்.. யாருக்காக இதனை செய்தான் என்பதை அறிய முற்பட்டான்.

அதனால் தான் அவனை தன்னோடு அழைத்து கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றினான்.. நிச்சயம் வர்ஷா விஷயத்தில் அவனுக்கும் தேவனுக்கும் தொடர்பு இருக்கும் என்று யூகித்தவன்..  அவனை தன்னுடனே வைத்து கண்காணிக்க தொடங்கினான்.

இன்று…

” உன்னையும் தன் புள்ளை போல தானடா அவங்க பார்த்தாங்க.. அவங்களை போய்… உனக்கு ஒன்னு தெரியுமா? வர்ஷா உன்னை வேண்டாம்ன்னு சொன்ன அப்போ எல்லாரை விட அவங்க தான்டா ரொம்ப வருத்தப்பட்டாங்க.. அந்த அளவுக்கு உன்மேல அவங்களுக்கு அன்பு இருந்தது… அந்த அன்புக்கு கொஞ்சம் கூட உண்மையா இல்லாமல் அந்த தேவனுக்கு துணையா இருந்து இருக்கியே? உன்னை எவ்ளோ நம்பினேன் தெரியுமாடா? ஆனால் நீ ” என்றவன் விஜயின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து காட்டி.. ” நம்ம போற எல்லா இடத்தையும் தேவனுக்கு மெசேஜ் பண்ணி சொல்லிட்டு இருந்திருக்க… எதுக்கு உன்னை என்கூட அழைச்சிட்டு வந்தேன் தெரியுமா? நான் உன்கூட இருக்கும் போதே நீ இத்தனை வேலை பார்த்திருக்க அப்படின்னா.. உன்னை தனியா விட்டுட்டு வந்தால் என்ன எல்லாம் பண்ணி இருப்ப? சொல்லுடா வர்ஷா எங்க?  ” என்று ஆக்ரோஷமாக கேட்டான் விக்ரமன்.

” எனக்கு தெரியாது ” என்று விஜய் நொடியில் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து விக்ரமனை சுட முயற்சிக்கவும்.. நொடியில் அவனது கரத்தில் இருந்து துப்பாக்கியை பறித்து எடுத்து தன் வசமாக்கி கொண்டான் விக்ரமன்.

“தெரியும்டா நீ இந்த மாதிரி வேலை எல்லாம் பார்ப்பன்னு.. சொல்லு அவங்க எங்க? ” என்று அவன் கேட்க.. மீண்டும் மீண்டும் விஜய் உண்மையை சொல்ல மறுக்க… விஜயின் முகத்தில் ஓங்கி குத்திய விக்ரமன்.. அவனது கரத்தை வலிக்க பற்றி முறுக்கினான்.

“என்ன சொன்ன சத்யா வர்ஷா கிட்ட மிஸ்பிகேவ் பண்ணத நீயே பார்த்தியா?  சத்யாவை பத்தி தப்பு சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு? அவனை பத்தி எனக்கு தெரியும்.. இந்த ஒரு விஷயம் போதுமே நீ சொல்லுறது எல்லாம் பொய் அப்படிங்குறதுக்கு.. சொல்லுடா வர்ஷா எங்க? சத்யன் எங்க ? ”

அடித்த அடியில் வலி பொறுக்க முடியாமல் தவித்து விஜயின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் விக்ரமன். உயிருக்கு பயந்து வர்ஷாவும்,சத்யனும் இருக்கும் இடத்தை பற்றி கூறினான் விஜய்.

அவனை அழைத்து கொண்டு முதலில் வர்ஷா இருக்கும் இடத்துக்கு சென்றனர் இருவரும்.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் வர்ஷாவை கப்பலில் ஏற்றி நாடு கடத்த தயாரா இருந்தனர். அங்கு செல்லும் கண்டைனர் வண்டியில் தான் வர்ஷா இருந்தாள்.. அவர்கள் இடத்தில் இருந்து கண்டைனர் வண்டி கிளம்ப போகும் நேரம் அங்கு வந்து நின்றான் விக்ரமன்.

விக்கிரமன்.. விஜயை அழைத்து கொண்டு வர்ஷா இருக்கும் இடத்துக்கு வந்தான்.

வர்ஷாவுக்கு தெளிய தெளிய  போதை ஊசி போடப்பட்டிருக்க..அந்த  கிறக்கத்திலே தள்ளாடியபடி அவர்களுடன் இருந்தாள் வர்ஷா..

தேவன் ஏற்கனவே அந்த அடியாட்களிடம் கூறி இருந்தார்.. யாராவது அவளை காப்பாற்ற வந்தால் தயங்காமல் தான் கொடுத்த மருந்தை அவளது உடலில் செலுத்தி விடு என்று…

கண்டைனர் வண்டியை நிறுத்திய விக்ரமன் விஜயை அழைத்து கொண்டு அதற்குள் நுழைந்தான். விஜய் தன் அடியாட்களிடம் கண்ணை காட்ட.. விக்ரமனை தாக்க தொடங்கினர்  அவர்களது அடியாட்கள்.

அனைவரையும் அடிக்க தொடங்கினான் விக்ரமன்.. அங்கு மயங்கி சரிந்து கிடந்த வர்ஷாவை பார்த்து அவனது இதயம் கனத்து போனது.. அந்த கோவத்தில் தனக்கு அருகில் நின்றவர்களை வெறி தீர அடித்தான்..

சண்டையிட்டு கொண்டிருந்த விக்ரமனின் முதுகில் மறைந்து வந்து கத்தியால் குத்தினான் விஜய். “ஆ ” என்று வலியில் பல்லை கடித்த விக்ரமன் பின்னால் திரும்பி விஜயின் கழுத்தை பிடித்தான்..

”  முதுகில குத்தி துரோகின்னு இன்னொரு முறை நிரூபிச்சிட்டியேடா ” என்ற விக்கிரமன் அவனது கழுத்தை நெரித்து கீழே தள்ளியவன்.. ஓங்கி விஜயின் கழுத்து நரம்பில் மிதிக்க.. அவ்விடமே விஜயின் உயிர் பிரிந்தது..

” சாவுடா நம்பிக்கை துரோகி ” என்ற விக்ரமன் வர்ஷா இருந்த இடத்தை திரும்பி பார்க்க.. வர்ஷா அங்கு இல்லை.

 

39.(B)

வர்ஷாவை தூக்கி கொண்டு இருவர் வெளியே செல்ல முற்பட.. விக்கிரமன் அவர்களை பின் தொடர்ந்து வந்தான். முதுகில் இருந்து வேறு அவனுக்கு ரத்தம் வழிய.. அதனை பொறுத்து கொண்டு அவர்களை நோக்கி சென்றான்.

அப்போது அந்த இரண்டு பேரில் ஒருவன்.. தேவன் கொடுத்த மருந்தை வர்ஷாவின் கழுத்தில் செலுத்தி விட்டு.. அவளை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தவர்களை பாய்ந்து பிடித்த விக்ரமன்.. அந்த இருவரையும் அடித்தே கொன்றான்.

பின்னர் கீழே விழுந்து கிடந்த வர்ஷாவின் அருகில் வந்து அவளை தன் மடியில் ஏந்தி கொண்டவன். “தேவா.. தேவா என்ன ஆச்சுடா ” என்றவன் அவளது கன்னத்தை தட்டி பார்க்க.. அவளிடம் எந்த அசைவும் இல்லை உடல் மரக்கட்டை போல மரத்து இருந்தது.. கண்கள் ஆகாயத்தை வெறித்து பார்த்தபடி நிலைகுத்தி நின்றது..கை நரம்புகள் கருநீல நிறமாக மாறி இருந்தது..

தேவன் கொடுத்த மருந்தின் தாக்கம் அது! என்ன? ஏது? என்று அவன் யோசிக்கும் முன் யாவும் நடந்து விட்டது.

பின்னர் அவளை அழைத்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தான் விக்ரமன்.

சத்யன் தேவனது கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கிறான். என்று விஜய் கூறியிருக்க.. அவன் கூறியபடி தேவனது கெஸ்ட் ஹவுசுக்கு சென்று அங்கு பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த சத்யனையும் காத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தான்.

பொழுதும் விடிந்தது..  தன் தாயின் சடலத்துக்கு மரியாதை செய்து.. அவரது சிதைக்கு தீ மூட்டிய விக்ரமனின் கண்களில் இருந்து வலியுடன் ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

…குற்றவாளிகளை பிடிக்க சென்ற அசிஸ்டண்ட் கமிஷனர் விஜய் ரௌடிகளால் அடித்து கொலை செய்ய பட்டார்.. அதில் நான்கு பேரை அசிஸ்டன் கமிஷனர் சுட்டு கொலை செய்தது குறிப்பிடதக்கது.. அவர்கள் கூட்டத்தில் மீதம் இருந்தவர்கள் அவரை அடித்து கொலைசெய்து விட்டு தப்பி ஓட்டம்…. என்று செய்தியை காரில் அமர்ந்தவாறு தனது போனில் பார்த்துக்கொண்டிருந்தார் தேவன்..

‘அடுத்து என்ன செய்யலாம்?’என்று பேசி முடிவெடுப்பதற்காக.. நந்தினியை காண முடிவு செய்து அவளுக்காக  அங்கு காத்திருந்தார் தேவன்.. ஆனால் வந்தது நந்தினி அல்ல விக்ரமன்..

திடீரென காரை திறந்து கொண்டு உள்ளே வந்த விக்கிரமனை பார்த்து மிரண்டு போனார் தேவன் ” ஏய் நீ எங்கே இங்க? ” என்றவரை பார்த்து கேலியாக சிரித்தவன்..

” நியூஸ் பார்த்திட்டு இருக்கீங்களா? எல்லாம் நம்ம கைவண்ணம் தான். உங்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி பண்ண தெரியுமா என்ன ? அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை கொடுத்தாச்சு.. இதுக்கு எல்லாம் மூல காரணமாக இருக்கும் உங்களுக்கும் தண்டனை கொடுக்கணும் இல்லையா ” என்ற விக்ரமன்… அவர் எதிர்பார்க்காத நேரம் அவரது கரத்தில் ஒரு ஊசியை செலுத்தினான்..

” ஏய் என்ன மருந்துடா இது ? ” என்று தேவன் பதற..

” நானும் டாக்டர் தான் தேவன்.. உங்களை அடிச்சி கொல்ல எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது.. ஆனால் அப்படி செத்தால் வலின்னா என்னன்னு உனக்கு தெரியாமலே போய்டும்.. உனக்கு வலிக்கனும்.. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து நீ ஏங்கணும்.. இந்த மருந்துக்கு வெறும் முப்பது நாள் தான் கெடு..  இந்த மருந்துக்கு எந்த மாற்று மருந்தும் கொடுக்கலன்னா நீ பிழைச்சுக்குவ.. ஆனால் அதுவே இந்த முப்பது நாளில் நீ ஒரு தலைவலி மாத்திரை போட்டா கூட.. இந்த மருந்து உன் உடல் நிலைக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கும்.. என்னடா இவன் நம்ம கிட்ட எல்லாத்தையும் சொல்லுறான்.. முப்பது நாள் எந்த மருந்தும் யூஸ் பண்ணாமல் தப்பிச்சிக்கலாம்னு பார்க்குறியா ? அது தான் முடியாது.. என்ற விக்ரமன் வேறு ஒரு மருந்தை ஊசியில் நிரப்ப போக.. தேவன் காரை திறந்து ஓட முயற்சிக்க.. நொடியில் அவரது கரத்தை வலிக்க பற்றி நிறுத்தினான் விக்ரமன்.

” ஹாஹான் மிஸ்டர் தேவன் சக்ரவர்த்தி.. நான் தான் சொன்னேனே.. வர்ஷா என் கைக்கு வந்த உடனே உங்க விதி என்னால எழுதப்படும் அப்படின்னு.. இப்போ அவளோட நிலைமை மோசமா தான் இருக்கு ஆனால் கண்டிப்பா அவளை என்னால காப்பாத்த முடியும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ” என்ற விக்ரமன் தேவனது கண்களை அனல் தெறிக்க பார்த்தவாறே.. அவரது கையில் இன்னொரு ஊசியை செலுத்தினான்..

அந்த ஊசி செலுத்தப்படவும் தேவனது உடலில் மாற்றம் உருவாக ஆரம்பித்தது.. அவரோ அச்சத்துடன் மிரண்டு முழிக்க…

” செய்யுற தொழிலுக்கு உண்மையா இல்லாதவன்.. வாழ தகுதி இல்லாதன்..இதை சொல்லி தான் என் அப்பா என்னை வளர்த்தாரு.. அதனால் நான் என் டாக்டர் தொழிலை விட்டுட்டு தான் உனக்கு இந்த தண்டனையவே கொடுத்து இருக்கேன்.. உனக்கு தண்டனை கொடுக்கணும் அப்படிங்குறதுக்காகவே நான் உயிரா நெனச்சு செய்த இந்த தொழிலையே விட்டுட்டு போறேன்.. இதுவும் உன்னால தான்டா ” என்ற விக்கிரமன்.. அவரை அனல் தெறிக்க பார்த்தவாறே காரில் இருந்து வெளியேறியிருந்தான்.

சிறிது நேரத்தில் விக்கிரமன் போட்ட ஊசியால் தேவனது கை கால் எல்லாம் இழுத்து கொண்டது. வாய் பேசமுடியாமல் ஆனது..

அப்போது தேவனை காண வந்த நந்தினி.. அவரை அந்த கோலத்தில் பார்த்து, அச்சம் கொண்டவள்.  உடனே இப்போது தான் வேலை செய்யும் ராஜேந்திரன் அவர்களுடைய மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தாள்..

நந்தினியும் தேவனை குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு ஏதேதோ மருந்துக்களை கொடுத்து பார்க்க… அவள் கொடுக்கும் மருந்தை எல்லாம் ஏற்க முடியாமல் அவரது உடல் நாளுக்கு நாள் மோசமாகி போனது.. அதனை அந்த மருத்துவமனையின் உரிமையாளர்.. ராஜேந்திரனும் வந்து பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் இருக்க.. அப்போது அவர் ஏதோ ஒரு புது மருந்தை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து தேவனுக்கு பரிசோதித்து பார்க்க.. தேவனது உடலின் அனைத்து துவாரம் வழியும் ரத்தம் வெளி வந்து அவர் துடிக்க துடிக்க உயிரை விட்டார்..

அவர் இறந்ததை பார்த்து அதிர்ந்த நந்தினி ” என்ன சார் கொன்னுட்டிங்க? ” என்று ராஜேந்திரன் மீது பழி போட.. பயந்து போன ராஜேந்திரன் அந்த மருத்துவனையின் உண்மையான உரிமையாளர் ஆன விக்ரமனை அழைத்து இதனை கூறினார்.

அவர்கள் பயந்து நடுங்கியபடி விக்ரமனிடம் இதை கூற அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

பூபாலனுக்கு தேவன் இந்த மருந்துவமனையில் அனுமதிக்க பட்டது நன்கு தெரியும்.. ஆனால் அவரது உடல் நிலையும் மோசமாக இருக்க, அவர் தேவனை வந்து பார்க்கவில்லை.. ராஜன் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்வார்.. சரத்துக்கு இந்த விஷயம் எதுவும் தெறியாது.. அவன் தான் தன்னுடைய நம்பர் தொடக்கம் அனைத்தையும் மாற்றி விட்டான் அல்லவா?  அதனால் தேவனை பார்த்துக்கொள்ளும் முழுப்பொறுப்பையும் நந்தினியின் கையில் விட்டிருந்தார்கள் சக்ரவர்த்தியின் குடும்பத்தினர்.

ராஜன் வேறு அடிக்கடி போன் போட்டு தேவனை பற்றி மருத்துவனையில் விசாரிக்க.. என்ன பதில் சொல்வது என்று யாருக்கும் தெரியவில்லை.. காரணம் தேவன் குணமாக வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ட கண்ட மருந்தினை அவர் உடலில் செலுத்தியதால் தான் இந்த மரணம் ஏற்பட்டிருக்குமோ? என்று பயந்து போய் இருந்தனர் அனைவரும்..

அந்நேரம் பார்த்து உண்மையிலேயே அந்த மருத்துவமனையில் நடந்த ஒரு விபத்தில் நூறு பேர் இறந்திருந்தனர்.

(இந்த விபத்தை தான் விக்ரமன் ஏற்படுத்தியதாக மகிழனிடம் பொய் கூறினாள்.. விக்ரமனை தப்பானவனாக காட்ட அவள் ஜோடித்த கதைகள் அவையாவும்…)

உடனே விக்கிரமன் அந்த நூறு பேரில் தேவனையும் ஒருவராக கணக்கு காட்ட முடிவு செய்து அந்த நூறு பேரில் ஒருவரது ரிபோர்ட்டை தேவனது பெயரில் தன் கைப்பட மாற்றினான். பின்னர் தேவனது உடலுக்கு சிதை மூட்டி அவரும் அந்த நூறு பேரோடு எரிந்து இறந்து விட்டார் என அனைவரையும் நம்பவைத்தான்.

அந்த அறையின் சிசிடீவி பதிவுகளை அழிக்க போகும் முன் விக்ரமன் தேவனது உடலுக்கு தீ மூட்டிய காட்சியை மட்டும் நந்தினி தனியே பதிவு செய்து வைத்து கொண்டாள்.. அதில் விக்ரமன் முகம் தெரியவில்லை என்பது வேறு கதை.. இருந்தும் நாளை தேவனது கொலைக்கு தான் தான் காரணம் என்று யாரும் கூறினால் என்ன செய்வது?  விக்ரமன் தான் இதற்கு காரணம் என்று அவனை கைகாட்ட.. அந்த வீடியோ ஆதாரத்தை எடுத்து வைத்தாள்…

மேலும் தேவனது மாற்றம் செய்யப்பட்ட ரிபோட் அதனை விபத்தாக அவன் மாற்றியது என விக்ரமனுக்கு எதிரான சில ஆதாரங்களை திரட்டி தனக்கு பாதுகாப்புக்காக வைத்து கொண்டாள் நந்தினி. தனது மருத்துவமனை பெயர் கெட்டுவிட கூடாது என்பதற்காக அவன் தான் இதை செய்தான் என்பதை போல அதற்கு தேவையான ஆதாரத்தை அவள் சேகரித்து வைத்தாள். ( அது தான் விக்ரமன் கீர்த்தியிடம் இருந்து எடுத்து எரித்த தேவன் சக்ரவர்த்தி பைல் )

பூபாலன் குடும்பம் தேவன் விபத்தில் இறந்து விட்டதாக முழுமையாக நம்பினர்.. நம்ப வைத்தாள் நந்தினி…  ( நம்ம அக்காவுக்கு நடிக்க சொல்லியா கொடுக்கணும் )

ஆனால் பாவம் விக்ரமன் தான் தேவன் சாவுக்கு காரணம் என அங்கிருந்த ஒருவருக்கும் தெரியாமல் போனது.. சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் தன்னை தானே தேவனது இறப்போடு சம்மந்த படுத்தி கொண்டனர்.. நந்தினி, ராஜேந்திரன் உட்பட அனைவருமே அப்படி தான் நினைத்தனர்.. தங்களால் தான் தேவன் இறந்து விட்டார் என்று.. ஆனால் அதற்கு எல்லாம் காரணமாக இருந்தவனோ ஓரமாக நின்று அவர்களது புலம்பலை கேட்டுக்கொண்டிருந்தான்.

 

வர்ஷாவுக்கு உயிர் இருக்கிறது ஆனால் உடலில் எந்த அசைவும் இல்லை.. அவளது கை கால் நரம்புகள் எல்லாம் கருநீல நிறமாக இருந்தது..

சிலர் அதனை அதிக போதை மருந்து கொடுத்ததன் தாக்கம் என்று கூற.. என்ன ஏது என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை.. அவளது உடல் குணமாக காத்திருந்தான் விக்ரமன்.

அதியனுக்கு உடல் நிலை சீரானதும் அவன் சரத்திடம் கேட்ட முதல் கேள்வி ” வர்ஷா எங்கே என்பது தான். ” அதனை கேட்டு கோவம் ஆனான் சரத்..

” அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அவள் புருஷனோட வெளிநாடு போய் செட்டில் ஆகிட்டாள் ” என்று கூறியவன் ஆதாரத்துக்கு சில மார்பிங் செய்த போட்டோவையும் அதியனிடம் காட்டினான்…

அதனை கேட்டு அதியன் அழுதான்..வேதனைப்பட்டான்.. பின்னர் ‘அவள் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும் ‘ என்று மனதை தேற்றி கொண்டு சரத்துடன்.. கோயம்புத்தூரில் வந்து தங்கினான். இந்த தொலைவும்,பிரிவும் அதியனுக்கு தேவைப்பட்டது.. ஆனால் அவளை ஒரு நொடி கூட அவனால் மறக்க முடியவில்லை என்பது உண்மை.

சத்யன் தான் விக்ரமனிடம் ‘ அர்ஜுன் அங்கிள் சம்மந்தபட்ட நமக்கு தேவையான ஆதாரம் எதுவோ  இருக்கிறது..  அதனை கேட்டு தான் வர்ஷாவை அவர்கள் அடித்தனர்.. இந்த உண்மை எல்லாம் தெரிந்தது நந்தினி மட்டுமே’ என்று கூறினான்..

விக்ரமனுக்கோ நந்தினியின் குடும்பத்தில் இருக்கும் ஒருவரை வைத்து மிரட்டி அந்த ஆதாரத்தை வாங்க விருப்பம் இல்லை.. அப்படி செய்தால் அவளுக்கும் தனக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தான். ( அப்படி நீ மிரட்டினாலும் அவள் கொடுத்திருக்க மாட்டாள் )

“அது என்ன ஆதாரம்னு நான் தெரிஞ்சிட்டு வரேன் விக்ரமன் சார்.. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.. அவளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையும் பாக்கி இருக்கு அவளை நான் பார்த்துகிறேன் ” என்று விக்ரமணிடம் வாக்கு கொடுத்த நிதின், சத்யாவாக நந்தினியின் வாழ்க்கைக்குள் நுழைந்தான்.

மெல்ல மெல்ல அவள் அன்பை பெற ஆரம்பித்தவன்.. அவள் வாயில் இருந்தே அந்த பைலின் உண்மையை வாங்க கிட்டத்தட்ட அவனுக்கு மூன்று வருடம் தேவைப்பட்டது.

சத்யன் நந்தினியிடம் பழகியவரை தன் எல்லையை அவன் மீறியதே இல்லை.. அவளே நெருங்கி வந்தாலும் விலகி தான் செல்வான்.. அன்று ஒரு நாள் அதிக போதையில் என்ன நடந்தது என்று கூட அவனுக்கு தெரியவில்லை.. அவர்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.. அதன் விளைவு தான் நந்தினியின் கர்ப்பம்..

‘ஏன் இப்படி ஒரு தவறு செய்தோம் என்று தன்னை தானே அவன் தண்டித்து கொள்ளாத நாளே இல்லை..

அதன் பிறகு தான் விக்ரமன்.. நந்தினியிடம் அந்த பயிலை கேட்டு மிரட்டியது.. அதனால் நந்தினி அதியனின் மெயில் ஐடிக்கு தகவல் கொடுத்து சரத்திடம் பேச முடிவு செய்தாள்.. சரத்திடம் விக்ரமனுக்கு அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து விட்டது என்று அவள் கூறினாள்..

அதியனிடம் விக்கிரமன் அவன் தந்தையை வெளியே கொண்டு வர தங்கள் மீது வீண் பழி சுமத்த பார்க்கிறான்.. நந்தினியை கொல்ல பார்க்கிறான் என்று ஏதேதோ கூற.. அதியனுக்கு ஒன்றும் புரியவில்லை.. இருந்தும் சரத்துக்காக.. அவனும் அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை..

அதில் கேள்வி கேட்பதற்கோ! ஆர்வம் செலுத்தவோ! அவனுக்கு விருப்பம் இல்லை வர்ஷாவை பிரிந்து வாழ்க்கையை வெறுத்து வாழ்பவனுக்கு அது எதுவுமே அவனது மூளையை சென்றடையவில்லை…

அதியனை வர்ஷாவிற்காக தேடினான்.

சரத்தை தண்டனை கொடுக்க தேடினான்..

அந்த பையிலை தன் தந்தையை காப்பாற்றுவதற்காக தேடினான் விக்ரமன்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்