
அன்றில்-10
மெனக்கெடல்களின்றி
சாளரத்திற்குள்
சிறை புகும்
வான் போல
உன் புன்னைக்கைக்குக் கூட
சிறைப்படுகிறது
என் நேசம்..
நேத்ரா தன்னிடம் நடந்து கொள்வது கனவா? நனவா? என்ற குழப்பத்தில் இருந்த துருவனுக்கு அவளை விட்டுச் செல்ல மனதே இல்லை.
இவ்வளவு நிமிடங்கள் எல்லாம் அவளோடு அவனுக்கு வாய்த்ததே இல்லை.. இன்று ஒரே நாளில் கிடைத்திருக்க அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பியது இதயம்.
உள்ளே பல்லவியின் ஆராய்ச்சிப் பார்வை அவளை அசௌகரியம் கொள்ள வைக்க.. அதை உணர்ந்தோ அல்லது அவளை இன்னும் சற்று நேரம் தனிமையில் தன்னோடு இருத்தி வைக்க நினைத்தோ என்னவோ.. அம்மாவிடம் தலையசைத்துவிட்டு துருவன் வெளியே அழைத்து வந்தான்.
நேத்ராவிற்கும் இது சற்றே ஆசுவாசமாய் இருக்க.. தனக்குத் தோன்றிய சந்தேகங்களைக் கேட்க.. அவனும் விளக்க ஆரம்பித்தான்.
வெகுவிரைவில் அவள் வந்த வேலையும் முடிய.. தன் லேப்டாப்பை பத்திரப் படுத்தியவாறே “கம்மிங் மண்டே நா மொராக்கோ கிளம்பனும்” என்று சொல்ல.. அதிர்வாய் அவளைப் பார்த்தான் துருவன்.
அவன் முழியில் அவள் என்ன கண்டாளோ “என்ன யோசனை.. நீங்க என்னை கூப்பிட வரும்போதே நா இதைப் பத்தி சொன்னேன்ல.. அங்க ஒரு த்ரீ டேஸ் இன்டர்நேஷனல் கான்பரன்ஸ் இருக்குதுன்னு.. த்ரீ மன்த்ஸ் முன்னாடியே ப்ளான் பண்ணியாச்சு” என்று மீண்டும் ஆறு மாதங்கள் நடந்த நிகழ்வுக்கு கொசுவர்த்தி சுத்த..
நினைவு இருப்பதாய்த் தலையசைத்த துருவன் அவள் கிளம்பும் விபரம், கூட வருபவர்கள், அங்கே தங்கும் இடம் அனைத்தையும் விசாரித்தான்.
தன் மீதான அவன் அக்கறை ஏதோ ஓர் ஓரத்தில் சிறு இதத்தைத் தந்தது தான் நேத்ராவிற்கும்.
ஒருகட்டத்தில் நேத்ராவே “இவ்வளோ கேக்கறதுக்கு நீங்களே எங்கூட வந்துருங்க.. சும்மா தொணத்திக்கிட்டே இருக்கிங்க” என்று சலித்துக் கொண்டாள்.
அவள் வார்த்தைகளில் புன்சிரிப்புடன் அவளை நோக்கி சாவகாசமாகத் திரும்பி அமர்ந்து “அப்போ கூட வந்தா ஓகே தானா.. வரட்டுமா” என்றவனின் குரல் மாறுபாட்டில் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முயல.. குறும்பு மிதக்கும் அவன் விழிகளும், குறுநகையும் தான் காணக் கிடைத்தது.
‘இதென்ன புதுசா இருக்கு’ என்று தன் பார்வையை மீண்டும் மடிமீது இருந்த தன் விரல்களுக்குக் கொண்டு வந்தவள் “என்னோட கைட், கூட பிஹெச்டி பண்ற மத்த ஸ்காலர்ஸ் எல்லாரும் தான் வர்றாங்க” என்று சற்றே இறங்கிய டெசிபலில் பேச.. அவன் பார்வை அவள் இதழில் தான் மையம் கொண்டிருந்தது.
குவிந்த செவ்விதழ்களில் இருந்த வரிகளில் விழுந்து, கன்னக் கதுப்புகள் பற்றி மேலேறி, அலையும் அவள் கருவிழிகளில் மீண்டும் விழ ஆரம்பித்தவனின் மோன நிலையை ஏதோ சத்தம் கலைக்க.. இருவரும் அப்போது தான் நிகழ்காலம் வந்து சேர்ந்தனர்.
பார்த்திபன் குடும்பத்தினர் தான்.. உள்ளே பேச்சுவார்த்தை முடிந்தது போல..
அவர்கள் வருவது கண்டு துருவனும் அவளிடம் ஓர் அனுமதிப் பார்வையுடன் எழுந்து அவர்கள் அருகே சென்று சிரித்தபடியே பேச.. இப்போது தயக்கமின்றி அவன் முகத்தில் தன் பார்வையைப் பதித்தாள் நேத்ரா.
பேஸ்டல் ப்ளூ நிறச் சட்டையும், சார்கோல் க்ரே நிற ஃபேன்ட்டும் அணிந்து கேஷூவலாக பேசிக் கொண்டிருந்த அவன் மேனரிசத்தை தன்னையும் அறியாமல் இரசிக்க ஆரம்பித்தாள் நேத்ரா.
தன் குடும்பத்திற்காக எவ்வித இரண்டாவது யோசனையும் இன்றி நிற்பதும், அவன் நியாயமான கோபமும், யாரையும் பார்க்காமல் தெளிவாக அவன் முடிவெடுப்பதையும் அவதானித்தபடி துருவனின் கிளாஸி ஆட்டிட்யூடை நினைத்தவள் இதழ்களில் பலநாட்களுக்குப் பிறகு மென்னகை நெளிந்தது.
எப்போதும் தட்டித் தட்டி வைக்கும் உள்ளத்தை இன்று சுதந்திரமாக உலவ விட.. இதுவரை இப்படி எல்லாம் கட்டவிழ்ந்திடாத அதுவும் ‘எப்படி இப்படி எஃப்பர்ட்லெஸ்லி மேன்லியா இருக்கறாங்க’ என துருவனைப் பார்த்து ஆராய்ச்சியில் இறங்கியது.
பதினொரு மணி வெயில் துருவனின் நீள இமை முடிகள் துளைத்து அவன் தேன் நிற கருவிழியில் உரச.. அதில் மின்னும் அவன் விழிகளை தன்னை மீறி எழுந்த ரசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க.. சட்டென்று அவளிடம் தன் பார்வையைத் திருப்பினான் அவன்.
அதில் ஒரு நொடி அவளில் மின்னல் வெட்டிச் செல்ல.. அவனது கூர் விழிப்பார்வை அவள் இதயம் வரை ஊடுருவியது.. அப்பார்வையில் விழிகளைத் திருப்ப முடியாமல் திணறினாள் நேத்ரா.
ஆனால் அதில் பெரிதும் தவித்துப் போனது துருவன் தான்.
‘அடியே.. தனியா இருக்கும் போது தள்ளி நில்றான்ற மாதிரி பாத்துட்டு.. இங்க நம்மள சுத்தி ஊரே நிக்குது.. இப்போ போய் இந்த லுக்க கொடுக்கற’ என மனதோடு பேசிக் கொண்டவன் கடினப்பட்டு அவளிடம் இருந்து தன் விழிகளைத் திருப்பி பார்த்திபனுடனான பேச்சில் கவனம் வைத்தான்.
இமைக்க மறந்து துருவனையே வட்டமிட்ட நேத்ராவின் விழிகள் அவன் அருகே எதேர்ச்சையாக கவனிக்க.. பார்த்திபனின் கவனம் அவ்வப்போது அவளைத் தொட்டுச் செல்ல.. அவர் அருகே பல்லவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நேத்ராவை முறைத்தபடி இருந்தார்.
அதில் இவ்வளவு நேரம் துருவனைச் சுற்றிய மனது.. தன்னிலை உணர்ந்து அவளுக்குள் வழக்கம் போல சுருண்டு கொண்டது.
‘என்ன புதுசா துணை தேடுற.. இந்த உலகத்துல உனக்கு நீ மட்டும் தான்.. உங்கம்மா மாதிரி ஏமாந்து நிக்க ரெடி ஆகிட்டியா.. வேலைய மட்டும் பாரு’ என்று தன்னையே கடிந்து கொள்ள.. மீண்டும் துருவனை நிமிர்ந்து பார்க்க அவளால் இயலவில்லை.
“அடுத்த வாரத்துல நீங்க ஆசைப்பட்ட மாதிரி நேமிங் செரிமனி வச்சுக்கலாம்.. பதினோராவது மாசம் எங்க குல தெய்வம் கோவில்ல மொட்டை அடிச்சு காது குத்திட்டு நாங்க பாப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்.. அவ ஃபர்ஸ்ட் பர்த்டே எங்க வீட்ல தான்” என பார்த்திபன் உத்திரவாதம் கொடுக்கவும்..
“உங்க விருப்பப்படியே பண்ணிக்கலாம் அங்கிள்” என்று துருவனும் சொன்னான்.
ஆகாஷ் குழந்தையோடு சிறிது நேரம் இருந்துவிட்டு வருவதாகச் சொல்ல.. பார்த்திபன் நேத்ராவை விழிகளில் நிரப்பியவாறே விடைபெற.. பல்லவி பதைபதைப்புடன் அவசரமாக ஜனனியை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
சற்று முன்னர் இருந்த உற்சாகமும், புன்னகையும் வடிந்து போன நிலையில் குழப்பமாக அமர்ந்திருக்கும் நேத்ராவை நெருங்கினான் துருவன்.
அவன் வந்து அருகில் அமர்வது தெரிந்தாலும் கவனமாக அவன் முகம் தவிர்த்தவள் “உங்களுக்கு டைம் ஆகுதே நான் கிளம்பவா” எனத் தன் பேக்கை எடுக்க.. அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான் அவன்.
‘என்ன ஆச்சு.. இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்தா’என்று யோசித்தவனுக்கும் அப்போது தான் அந்த விஷயம் நியாபகம் வர “இவங்கள எல்லாம் ஆல்ரெடி உனக்கு தெரியுமா” என்று நேத்ராவிடம் வினவினான் துருவன்.
அதில் அவள் விழிகள் தெறித்துவிடும் போல விழித்து அவனைப் பார்க்க.. அவள் விழிகளை ஊன்றிப் பார்த்தபடியே “இல்ல.. நேத்து இவரை யாரோ மாதிரி தான் பாத்த.. ஆனா ஹர்ஷா கூட நல்லா பேசற.. அதான் கேட்டேன்.. அவங்களுக்கும் நேட்டிவ் கோயம்புத்தூர் தான்” என்று ஒவ்வொரு விஷயமாகக் கோர்க்க..
“எங்களுக்கு எந்த சொந்தக்காரனும் இல்ல.. பாத்தீங்க தான இழவு விழுந்த வீட்ல நான் மட்டும் ஒத்தையா உக்காந்துட்டு இருந்தத.. இன்னும் என்ன கேள்வி” என்று சிடுசிடுத்தாள் நேத்ரா.
அதில் அவனும் அவளை முறைத்து “யார்னே தெரியாம எதுக்கு அவரை நேத்து ஒரு பார்வையில கதிகலங்க வச்ச நீ.. பாத்த தான எவ்வளவு பெரிய மனுஷன் அவரு.. நான் சொன்னத மதிச்சு வீடு வரைக்கும் வந்து பேசிட்டு போறாரு..” என்று வக்காலத்து வாங்க..
இப்போது நன்றாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் ‘அந்த காரியவாதிங்க எதுக்கு வந்துருப்பாங்கன்னு எனக்குத் தெரியாது’ என மனதில் நினைத்தவாறே “பெரிய்யயய மனுஷன்.. பொண்ணு கட்ட மட்டும் தெரியுது.. ஆனா வாழ வைக்க வலிக்குதோ.. சொன்ன உடனே வந்தாங்களாம்.. இதெல்லாம் எப்ப நீங்க உயர்ந்த உள்ளம்னு தூக்கி வச்சு கொண்டாட ஆரம்பிச்சிங்க.. ஆளையும் அவரையும் பாரு.. வெப் சீரிஸ் வில்லன் மாதிரி” என்று உதட்டைச் சுழிக்க.. அவன் மனக்கண்ணில் பார்த்திபனின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் வந்து போனது.
அவள் சொன்னதில் இருந்த உண்மை அவனுக்கு உரைத்தாலும் அவளிடம் இளக்கத்தைக் காட்டாமல் “பெரியவங்கள என்ன பேசற நீ.. இதைத்தான் மேம் சொல்லிக் குடுத்தாங்களா” என்று துருவன் கண்டிக்க..
“என்னவோ பண்ணுங்க.. அது உங்க குடும்ப விஷயம்.. எனக்கு என்ன.. அதோட ஏற்கனவே நான் சொல்லிட்டேன்.. யார்கிட்ட எப்படி நடக்கனும்னு எனக்கு நீங்க கிளாஸ் எடுக்க வேண்டாம்.. அன்ட் இதோட செகண்ட் டைம் நீங்க எங்கம்மாவ பத்தி பேசறது.. இதுவே லாஸ்ட் டைம்மா இருக்கட்டும்.. ஐ வோன்ட் அலவ்(allow) சச் திங்க்ஸ்” என்று முகத்தை தூக்கினாள் நேத்ரா.
அவள் வார்த்தைகளில் அவனுக்கும் சுர்ரெனக் கோபம் எழ “ஓஓ.. என்னோட குடும்பம்.. உன்னையும் நான் ஒன்னுமே சொல்லக் கூடாது அப்படித்தான.. ரைட்.. நீ கிளம்பு” என அவன் எழுந்து கொள்ள..
அவளும் எழுந்து கொண்டு “உங்க சொந்தக்காரங்க அவ்வளவு நைன் ஒன் சிக்ஸா இருந்தா நீங்களே தலையில தூக்கி வச்சுக்கோங்க.. அவங்கள்ட்ட நான் எப்படி பிகேவ் பண்ணனும்னு டிக்டேட் பண்ணாதீங்க” என்று அவனிடம் கோபமாகக் குரல் உயர்த்தியவள் “இதுங்களுக்கு இப்ப குடுக்குற மரியாதையே கூட இவ்வளவு தான்.. இதுல மதிக்கனுமாமா” என்று முணக.. அவளை முறைத்துப் பார்த்தான் துருவன்.
“என்ன முறைக்கறீங்க.. என்னோட வளர்ப்ப குறை சொன்னா எனக்கு கோவம் வராதா.. நீங்க வார்த்தைக்கு வார்த்தை அதைத்தான் சொல்றீங்க.. அவங்க எங்கூட இல்லைன்றத உங்கள பாக்கும் போதெல்லாம் நியாபகப்படுத்தறீங்க.. இதுக்கு தான் அவ்வளவு பிடிவாதமா இங்க வரச் சொன்னீங்களா” என்றவள் விழிகளில் நீர்ப்படலம் கவிழ.. அதுவரை அவனிடம் இருந்த ரோஷம் மொத்தமும் காணாமல் போக.. வெளிப்படையாகவே தன் தலையில் அடித்துக் கொண்டான்.
அவள் அருகே நெருங்கி “சாரிம்மா.. என்ன இருந்தாலும் அவங்க நம்ம ப்ரியாவோட இன்-லாஸ் இல்லையா.. நீ உன்னோட குடும்பம்னு சொன்னல்ல.. அதான் லைட்டா கோவம் வந்துருச்சு.. இனி அவங்கள பத்தி உங்கிட்ட பேசல.. நான் கிளம்பற நேரத்துல இப்படி ஃபீல் பண்ணாத” எனத் தேற்றவும்.. அவனை விலக்கிவிட்டு நடக்க ஆரம்பிக்க.. அவள் வலக்கை பற்றி அருகில் இழுத்து நிறுத்தவும்.. அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் நேத்ரா.
அவன் நெருக்கத்தில் “என்ன” என்று குரலே எழும்பாமல் அவள் வினவவும்..
அப்போதும் அவள் கரத்தை விடாமல் இறுக்கிப் பிடித்தவன் “இங்க உன்ன எதுக்கு வரச் சொன்னேன்னு கரெக்டான டைம் வரும்போது சொல்றேன்.. இன்னொரு தடவை என்முன்னால உன்னோட கண்ணுல இருந்து தண்ணி வரக்கூடாது” என்று கட்டளை போல் கூறியவனுக்கும் தெரியவில்லை.. அடுத்தமுறை அவளைப் பார்க்கும் போது அவள் இதைவிட முற்று முழுதாக உடைந்து போயிருப்பாள் என்று.
“ம்க்கும்.. பேசறது எல்லாம் பேசிட்டு ரொம்பத்தான் கரிசனம்.. விடுங்க” என்று விலகப் பார்க்க..
மெதுவாக அவள் கையை விடுவித்தவன் “நான் த்ரீ டேஸ் ஹைதராபாத் போறேன்.. நீ இங்க குறும்பு பண்ணி யாரையும் டையர்ட் ஆக்காம இரு” என குழந்தையை அதட்டுவது போலச் சொல்ல..
“எல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு அங்கிருந்து நகர.. அவனும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான்.
‘இவங்க சங்காத்தமே வேண்டாம்னு இருந்தா.. விதி ஏன் எனக்கு மட்டும் இப்படி பண்ணுது.. இன்னைக்கு இவங்க எதுவும் கேக்கல.. எப்பவாச்சு தெரிய வரும்போது என்ன பதில் சொல்றது’ என அவள் மனம் துடிக்க.. துருவனும் கிளம்பும் அவசரத்தில் ஏன் பார்த்திபனைப் பார்த்து மட்டும் இவ்வளவு கோபப்படுகிறாள் என்ற யோசனையை இப்போதைக்குப் பின்னுக்குத் தள்ளினான்.
தன்போக்கில் ஏதோ யோசனையில் காரை நெருங்கியவளை “நேத்ரா” என்ற குரல் நிறுத்த.. அது யாரென உணர்ந்து கொண்டவள் திரும்ப முடியாமல் அப்படியே நின்றாள்.
துணையாவான்..

