Loading

அன்றில்-9

வெறுமைகளுக்குக் கொஞ்சம்..

விஞ்சிய வேதனைகளுக்குக்

கொஞ்சம் எனப் 

பாகம் பிரித்த என் இதயத்தின்

சிறு ஓரத்தில்

உன் பேரன்பின் 

முதல் அத்தியாயம்..

குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளின் சத்தத்தில் வெளியே வந்த துருவன் அவள் புன்னகை முகத்தில் அம்மா, அக்காவிற்கு அவளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதைக் கூட மறந்து தன்னைத் தொலைத்து நின்றான்.

 

தன் தம்பியை ஆச்சர்யமாகப் பார்த்த ப்ரியா குழந்தையை வாங்க அவள் அருகே வர அவள் காதில் இருந்த கம்மலை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அவளிடம் போக மறுக்க.. அப்போது தான் ப்ரியாவைக் கவனித்தவள் “இந்நேரம் அந்த சிலை புள்ளை மேல் விழுந்துருக்கும்.. எங்க போனீங்க தனியா புள்ளைய விட்டுட்டு” என்று குரல் சற்று உயரவே வந்தது.

 

‘ஆத்தாடி.. நம்ம தம்பி நிக்கற போஸப் பாத்தா இவ தான்  அவனை ரவுண்டு கட்டி அடிக்கப் போறவன்னு நினைச்சு சந்தேகப்பட்டா.. இவ என்ன வண்டிய நம்ம பக்கம் திருப்புறா’ என்ற யோசனையுடன் ப்ரியா நேத்ராவை எடைபோட..

 

‘இவ என்ன வந்ததும் நாத்தனார் சண்டை போட ஸ்டார்ட் பண்ணிட்டா’ என உள்ளுக்குள் சிரித்த துருவன் அவளருகே வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு “ம்மா இது நேத்ரா.. பிரபா மேம் பொண்ணு” என்று கார்த்திகாவிடம் அறிமுகம் செய்தவன்.. அவளிடம் “இவங்க அம்மா, இது அக்கா.. மூனு பேரும் ஒரு இம்பார்டென்ட் டிஸ்கஷன்ல இருந்தோம்.. அதுக்குள்ள இந்த மேடம் வெளிய ஓடி வந்துட்டாங்க.. மெய்ட் இருந்தாங்க தான்.. அவங்க ஏதோ வேலையா இருப்பாங்க போல” என்று விளக்கம் கொடுத்தான்.

 

“ஓஓ.. அப்போ நீங்க கன்டினியூ பண்ணுங்க.. கொஞ்சம் டவுட்ஸ் இருந்துச்சு.. அதைக் கேக்க தான் வந்தேன்.. நான் மெயில் பண்றேன்..” என்று விடைபெறும் நோக்கில் நேத்ரா சொல்லவும்..

 

“ஹேய்.. நோ நோ.. வேலையும் இம்பார்டென்ட் தான்.. வெய்ட் பண்ணு.. முடிச்சுட்டே போலாம்” என்று அவளைத் தடுத்து நிறுத்திய துருவன் தன் அம்மாவையும் அக்காவையும் பார்த்தான்.

 

 

‘பிரபா மேம் பொண்ணு’ என்றதிலேயே மற்ற அனைத்தும் மறந்த கார்த்திகாவும், ப்ரியாவும் அவளைப் பரிவோடு அழைத்துச் சென்று அமர வைத்து ஏதோ பேசவும்.. அவர்களின் சரளமான பேச்சில் தத்தளித்த நேத்ரா ‘காப்பாத்து’ என்பது போல துருவனைப் பார்த்தாள்.. அவனோ கண்டு கொள்ளாமல் குழந்தையிடம் கவனம் இருப்பது போலக் காட்டிக் கொண்டான்.

 

கார்த்திகா “அம்மா தவறினது கேட்டு ரொம்ப வருத்தப்பட்டோம் ம்மா.. நியூஸ் வந்த அப்போ தான் இவளுக்கு டெலிவரி.. எங்களால வந்து உன்ன பாக்க முடியல” என்று வருத்தம் கொண்டார்.

 

ஆம் பிரபா தவறிய போது ப்ரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.. அப்போதும் அவன் அப்பா கூட இல்லாததால்.. துருவன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. முழுதாக ஒரு பகல், ஓரிரவு வலியைத் தாங்கிய பின் தான் குழந்தை பிறந்திருக்க.. துருவனால் தந்தை வந்த பின்னால் கூட நகர முடியவில்லை.

 

அன்றே அவன் சென்றிருந்தால் நிறைய குழப்பங்களைத் தவிர்த்து இருக்கலாம்.. அதன் பின் ஒரு வாரம் கழித்து தான் அவளைச் சென்று பார்த்தனர் துருவனும், கோகுலும்.

 

ஒரு வாரம் கழித்துச் சென்றும் கூட அவள் முகம் பார்க்க அவன் மனது பட்ட வேதனை அவனே அறிவான்.. அப்போதே முடிவு செய்து விட்டான்.. அவளை அங்கேயே விடக்கூடாது என்று.

 

கேட்டவுடன் எதையும் நேத்ரா ஒப்புக்கொள்ளவில்லை.‌. நிறைய முறை பேசிச் சரிக்கட்டியே இங்கு அழைத்து வந்துள்ளான்.

 

அனைத்தும் அவன் மனக்கண்ணில் ஓட.. குழந்தை அவனிடம் இருந்து நழுவி கீழே இறங்கத் துள்ளியதில் இயல்புக்கு வந்தவன் குழந்தையைக் கீழே விட.. தவழ்ந்து நேத்ரா அருகில் சென்று.. அவள் காலைப் பிடித்து எழுந்து நின்று சிரிக்க.. நமது எப்பேர்ப்பட்ட வேலியையும் பிள்ளைப் சிரிப்பு பதம் பார்த்திடுமே.. அதற்கு நேத்ரா மட்டும் என்ன விதிவிலக்கா.. இயல்பாக எழுந்த உரிமையில் அள்ளி எடுத்துக்கொண்டாள் குழந்தையை.

 

“அடேய்.. யாரு இந்த அழகிப்புள்ள.. என்ன வேணுமாமா.. என்ற தங்கத்துக்கு.. அத்தைய பாத்தியா.. நீ இருக்கறது கூட ஞாபகம் இல்லாம உனக்கு எதுமே வாங்கிட்டு வரல.. சாரி.. நெக்ஸ்ட் டைம் வரையில அத்தை நிறைய பொம்மை, பாப்பாக்கு டிரஸ், சாக்லேட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்” என்று உரிமையுடன் மடியில் இருத்தி கொஞ்சித்தள்ள.. மூவரும் அவளைப் புன்னகை முகத்துடன் இரசித்திருந்தனர்.

 

அப்போது பார்த்திபனும், பல்லவியும் வந்து சேர.. மூவரும் வரவேற்க எழுந்து செல்ல.. நேத்ரா குழந்தையோடு அப்படியே அமர்ந்திருந்தாள்.. குழந்தை இல்லாமல் இருந்தாலும் எழுந்து நிற்கும் உத்தேசம் எல்லாம் அவளிடம் இல்லை.

 

‘இங்க என்ன பண்றா இவ’ என்ற குழப்பத்துடன் பல்லவியின் பார்வை அவளிடம் மட்டுமே பதிந்திருந்தது.. அதை உணர்ந்த நேத்ராவும் ‘இது ஒரு திருந்தாத ஜென்மம்’ என்று நினைத்துக் கொண்டவள் துருவனிடம் தான் செல்லவா என்பது போலக் கண்களால் வினவ.. அவன் மறுத்துத் தலையசைத்தான்.. இவை அனைத்தும் பல்லவியின் கருத்தில் பதிந்து கொண்டு தான் இருந்தது.

 

“வாங்க.. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.. நீங்க மட்டும் தான் வந்திங்களா” என்று கார்த்திகா கேட்க..

 

“இல்ல ஆகாஷ் கூட தான் வந்தோம்.. கார் நிறுத்திட்டு வரேன்னு போனான்.. வந்துருவான்” என்று பார்த்திபன் பதில் சொல்லிக் கொண்டிருக்க.. ஆகாஷூம், அவன் கடைசி சித்தப்பா பெண் ஜனனியும் வந்தனர்.

 

ஆகாஷைப் பார்த்ததும் குழந்தை துள்ள.. அவனும் இரண்டெட்டில் அவளைத் தூக்க வர.. அப்போது தான் நேத்ராவைக் கவனித்தான்.

 

“அம்மாடி எப்படி இருக்கற” என்று தன்னை மறந்து அவளிடம் வினவி விட.. பின்னிருந்து கவனித்தவர்களுக்கு அவன் குழந்தையிடம் கேட்பதாகத் தான் தெரிந்தது.

 

“நான் இங்க நல்லா தான் இருக்கேன்.. நீங்க ஏன்ப்பா விசிட்டிங் ஹவர்ஸ்ல மட்டும் என்னைய பாக்க வர்றீங்கன்னு கேக்கறா உங்க பொண்ணு” என்று பெரியவர்களை ஒன்றும் சொல்ல முடியாது போய் ஆகாஷைக் குத்தினான் துருவன்.

 

அவர்கள் எதுவும் பேசாமல் இருக்க.. வேலையாள் கொண்டு வந்த ஜூஸை அனைவருக்கும் கொடுத்தபடி இருந்த கார்த்திகா தான் “போதும் தம்பி.. வந்த உடனே ஆரம்பிக்காத” என்று நிறுத்தி வைத்தார்.

 

“இல்ல பரவால்லைங்க.. துருவனுக்கு கோவம் போல.. பெரிய குடும்பம் எங்களோடது.. உங்களுக்கே தெரியும்.. எல்லாரையும் பத்தி யோசிக்கனும்ல.. பெரியவங்க என்ன சொல்றாங்கன்னும் கேக்கனும்” என்று பல்லவி துருவனிடம் சொல்லவும்..

 

“பெரிய குடும்பம் தான் குடும்பம்னு உங்களுக்கு யாரோ தப்பா சொல்லிருக்காங்க ஆன்ட்டி.. ரெண்டு பேரு இருந்தாலும் அதுவும் குடும்பம் தான்.. ஆனா ஒரு குழந்தைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய அப்பாவோட அரவணைப்புக்கு முன்னாடி நீங்க சொல்ற சோ கால்ட் குடும்ப அமைப்பு எல்லாம் தூசி” அவன் ஆணித்தரமாகச் சொல்லவும்.. நேத்ராவின் நயனங்கள் துருவனின் மீது தான் அழுத்தமாய்ப் பதிந்திருந்தது.

 

எப்போதும் இந்தப் பேச்சு வந்தால் மனம் காயப்படும் ஆகாஷ் கூட துருவனைக் குறுக்கிடாமல் அமைதியாக நின்றிருந்தான்.. என்றோ நடந்த ஒரு விஷயத்திற்கு.. இப்போது இருவரும் கைகட்டி நிற்பது போல அவனுக்குத் தோன்ற.. மச்சானுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொண்டான் மனதில்.

 

“நான் அப்படி சொல்லல துருவன்.. அந்த காலத்து ஆளுங்க.. அதுவும் ஆகாஷ் முதல் பேரன் அவங்களுக்கு.. அவனுக்கு பையன் வேணும்னு அவங்க எதிர்பார்க்கறதுல நாம எப்படி தப்பு சொல்ல முடியும்” தன் பக்கத்தை விட்டுக் கொடுக்க பல்லவி தயாராக இல்லை.

 

“நீங்களே சொல்லிட்டிங்க அவங்க எதிர்பார்ப்பு.. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்.. இல்ல நீங்க எல்லாம் இவ்வளவு பண்ணியும் நாங்க அமைதியா இருக்கறதால எங்களால எதுவும் பண்ண முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா” என்று அவனும்  சொல்ல.. சமாதானம் பேச வந்து ஏதேனும் பிரச்சினை ஆகிவிடுமோ எனப் ப்ரியா கலக்கத்துடன் கணவனைப் பார்த்தாள்.

 

அவள் விழிகளின் பாஷையை உணர்ந்த ஆகாஷ் ‘ஒன்னுமில்ல’ என்பது போலத் தலையசைத்தான்.

 

ஆனால் கார்த்திகாவிற்குத் தான் மகன் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கணவனும் இல்லாத சூழ்நிலையில் ஏதேனும் ரசாபாசம் ஆகிவிடுமோ என்று மகனிடம் “துருவ்.. நீ கொஞ்சம் நிதானமா பேசு.. பெரியவங்ககிட்ட இப்படியா பேசறது” என்று கடிந்து கொள்ளவும்..

 

“சாரி அங்கிள்.. இட் மே சவுண்ட்ஸ் ரூட்.. திருப்பி திருப்பி அதையே பேசறேன்னு நினைக்காதீங்க.. ஆனா பாப்பாவ பாருங்க.. அவளுக்கு அடையாளம் தெரிய ஆரம்பிச்சிருக்கு.. இந்த டைம்ல அவங்க அப்பா கூட இருக்க வேண்டாமா” என்று முன்னர் கேட்டதை இப்போது பொறுமையுடன் கேட்டான்.

 

 

அதற்கு பார்த்திபன் பதில் சொல்வதற்குள்.. பல்லவி “என்னமோ நாங்க அங்க வர வேண்டாம்னு சொன்ன மாதிரி சொல்லாதீங்க துருவன்.. இது ஒரு சின்ன விஷயம்.. அதை மனசுல வச்சுட்டு நீங்க தான் பெருசு பண்றீங்க” என்றுவிட..

 

 

“இதான்.. இந்த லெதார்ஜிக் ஆட்டிட்யூட் தான் ப்ராப்ளம் அங்கிள்.. என்ன சின்ன விஷயம் நீங்களே சொல்லுங்க உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா சரி எப்படியோ போன்னு விட்ருவிங்களா” என பார்த்திபனிடம் துருவன் கேட்டான்.

 

பார்த்திபனிடம் ஒரு இறுக்கமான அமைதி நிலவ.. அதைப் பார்த்து பல்லவி பயந்தார் என்றால், நேத்ரா ஒரு பக்க இதழ் வளைவுடன் பல்லவியைக் கடந்து குழந்தையோடு எழுந்து சென்றாள்.

 

அந்த அரவத்தில் அவளைப் பார்த்த பார்த்திபன் பல்லவியிடம் திரும்பி “இங்க எதுக்கு வந்தோம்னு ஞாபகம் இருக்கா” என்று அடிக்குரலில் வினவ.. பல்லவி அதோடு கப்சிப்.

 

கார்த்திகாவிடம் திரும்பிய பார்த்திபன் “ஏற்கனவே துருவனைப் பாத்து பேசினேன் ம்மா.. எங்க சைட்லயும் தப்பு இருக்கு.. ஆனா எங்கள நம்பி எப்படி உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக் குடுத்தீங்களோ.. அதே நம்பிக்கைய இப்பவும் வச்சு மருமகளையும், பேத்தியையும் அனுப்பி வைங்க.. நல்லா பாத்துக்குவோம்” என்று இரங்கிய குரலில் கேட்க..

 

“அய்யோ நம்பிக்கை அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாமே.. துருவனுக்கு மட்டுமில்ல அவங்க அப்பாவுக்குமே கொஞ்சம் வருத்தம் தான்.. நான் பேசறேன்.. அவர் வந்துடட்டும்.. நல்ல நாள் பாத்து அனுப்பி வைக்கிறோம்” என்று கார்த்திகாவும் சமாதானம் உரைத்தார்.

 

“அதுக்கு முன்னாடி நேமிங் செரிமனி வைக்கனும்” என்று துருவன் சொல்லவும்.. மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

 

வந்ததில் இருந்து குழந்தையைக் கையில் கூடத் தொடாமல் இருக்கும் பல்லவியை நினைத்து கடுப்பு தோன்றினாலும்.. தன்னவள் தாங்கிக் கொண்டிருப்பது பிடித்துத் தான் இருந்தது துருவனுக்கு.

 

அவன் பார்வையைக் கச்சிதமாக உணர்ந்த பல்லவி தன் அருகே இருந்த ஜனனியிடம் “போய் குழந்தைய வாங்கு.. நீ தான் அவளுக்கு இருக்கற ஒரே அத்தை.. உனக்கு அப்பறம் நம்ப வீட்டுல பிறந்த பொண்ணு.. போ” என்று ஊக்கவும்.. அவளும் நேத்ராவின் அருகே சென்று குழந்தையை வாங்க முயற்சித்தாள்.

 

அம்மாவிடமே ‘மாட்டேன்’ என்ற குழந்தை அவளிடம் செல்லுமா.. உடலை முறுக்கித் தன் மறுப்பைத் தெரிவிக்க.. ஜனனி நேத்ராவைப் பார்க்க ‘வந்தா, எடுத்துட்டு போ’ என்பது போல நின்றாள் நேத்ரா.

 

 

அதில் வெகுண்டு வெடுக்கெனப் பிடுங்க.. வீறிட்ட குழந்தையை மீண்டும் வாங்கிக் கொண்ட நேத்ரா ஜனனியை முறைத்து “ஷோல்டரோட சேத்து பிடிக்கனும்.. வெறும் கைய மட்டும் பிடிச்சு தூக்கினா வலிக்காதா” என்று கேட்கவும்.. முகத்தைத் தூக்கி வைத்தபடி பல்லவியின் அருகே சென்றுவிட்டாள் அவள்.

 

“உங்க வீட்டுக்கு தான வரப் போறா.. அப்ப உன்ன பழகிக்குவா” என்று கார்த்திகா சமாதானம் சொல்ல..

 

“ஆமா அத்தை.. என் அண்ணன் பொண்ணு.. எப்படி இருந்தாலும் எங்ககிட்ட தான வரனும்” என்று நேத்ராவைப் பார்த்தவாறே சிலுப்பிக் கொண்டாள்.

 

கார்த்திகா அவர்களோடு பேசியபடி நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்க.. ஆகாஷூம், ப்ரியாவும் ஒருவழியாகப் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

 

இதற்கு மேலும் நேத்ராவைக் காக்க வைக்காமல் அவள் வந்த வேலையைப் பற்றி துருவன் பேச ஆரம்பிக்கவும்.. அவளும் அது பற்றிச் சொல்ல.. தன் மொபைலில் நேரம் பார்க்க.. “உங்களுக்கு டைம் ஆகிருச்சா” என்று நேத்ரா கேட்கவும்.. “சேச்சே.. ஐம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ்.. உனக்கு எங்கிட்ட டைம்லாம் தேவையா என்ன” என ஒரு ஃப்ளோவில் துருவன் சொல்லிவிட்டான்.

 

அவன் விளையாடுவதாக நினைத்தவள் “ஆஹான்.. நான் நினைச்சேன் உங்களுக்கு உங்க குடும்ப பஞ்சாயத்த பாக்க தான் டைம் இருக்குன்னு.. ஆஃபீஸ்ல, வீட்டுலன்னு ஓவர் டைமால்ல ஓடுது.. ஒரு சொம்பும், ஆலமரமும் மட்டும் மிஸ்ஸிங்” என்று அவளும் நக்கல் அடித்தாள்.

 

“பின்ன.. எப்படி பேசுறாங்க பாரு.. எங்கள என்னன்னு நினைச்சுட்டு இருக்கறாங்க.. மாமாவ ‘தனியா வாங்க, அப்ப தான் அக்காவ அனுப்புவேன்’னு சொல்லிருப்பேன்.. சரி அதை நெக்ஸ்ட் டைம் யூஸ் பண்ணிக்கலாம்னு விட்ருக்கேன்.. அடுத்து எதாவது சில்மிஷம் பண்ணட்டும் வச்சுக்கறேன்” என அவன் சொல்லவும்..

 

அவனை விழி விரித்துப் பார்த்து “சரியான வில்லன் தான்” என்றவளிடம் இருந்து புன்னகையுடன் குழந்தையை துருவன் வாங்கவும்.. அவர்கள் பேசிச் சிரிப்பதை பதைப்புடன் பார்த்தபடி இருந்த பல்லவியை இன்னும் கொஞ்சம் டென்ஷன் செய்து பார்க்க நினைத்தவள் “நானே வச்சுக்கறேன்.. ஷர்ட் கசங்கிடப் போகுது.. கிளம்பனும்ல இப்ப.. ஆல்ரெடி கொஞ்சம் கசங்கிருச்சு பாருங்க” எனக் குழந்தையை திரும்ப வாங்கியவள் அவன் முழங்கையின் மேல் பகுதியில் கொஞ்சமாகக் கசங்கியிருந்த சட்டையின் சுருக்கங்களைத் தன் மறு கையால் நீவி விட்டாள்.

 

இதில் பல்லவியை மட்டுமே நினைத்த நேத்ரா.. ஒருவனின் உணர்வுகளும் சம்பந்தப்பட்டிருப்பதை உணர மறந்துவிட்டாள்.. அதை உணரும் போது காலம் அவளுக்குக் கை கொடுக்குமா??

 

துணையாவான்..

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்