
“குடி!”
அக்னி பணித்ததில், சூடான காபியை ஊதியவள் சொட்டு சொட்டாக உறிஞ்சினாள்.
அவனைத் தள்ளி அமரச் சொல்ல உள்ளம் துடித்தது. ஆனால் சொல்லவும் ஏதோ தடுத்தது.
காபியை பருகியபடியே சிந்தித்தவள் வேகமாக, “உங்களுக்கு காபி வேணாமா?” எனக் கேட்டாள்.
“வேணும்!” அவள் இதழ் மீது படிந்த பார்வைதனை திருப்ப இயலாதவனாக கூறினான்.
“வாங்கல உங்களுக்கு”
“இதோ இருக்கே…” என அவளின் கப்பை வாங்கியவன் தானும் காபியை உறிஞ்சிட, இம்முறை முறைத்து வைத்தாள்.
“இன்னொன்னு வாங்குனா உங்க சொத்து அழிஞ்சுடுமா?” நொடித்தபடி கேட்டதில், அவனிடம் அடக்கப்பட்ட புன்னகை.
“என்னால முழு காபி குடிக்க முடியாது. ஷேர் பண்ணா நீ குறைஞ்சுடுவியா…” அவனும் கேலிநகையுடன் வினவ, நாக்கைத் துருக்கி அழகு காட்டியவள் அதற்கு மேலும் எழுந்த சிலிர்ப்பை அடக்க இயலாதவளாக, எழுந்து ஓடி விட்டாள்.
அவள் சென்ற திசையை ரசனையாய் பார்த்திருந்தவனுக்கு நிவேதா அழைத்தார்.
“சொல்லுங்கம்மா”
“பயமா இருக்கு தம்பி. மனோஜ் எதுவும் பெரிய பிரச்சினையா பண்ணுவானோன்னு. என்னவோ உன் அப்பா சப்போர்ட் பண்றதுனால கொஞ்சம் தைரியம் இருக்கு. ஆனாலும் மனசு ஒரு மாறி அழுத்திட்டே இருக்கு” எனப் புலம்பினார்.
“நான் பாத்துக்குறேன்மா. இப்போதைக்கு இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க.”
பொதுவாக சின்ன விஷயத்திற்கும் கூட, வீட்டாரை பந்தாடி விடுபவன். இத்தனை பெரிய விஷயத்தில், யாரையும் எதிர்த்துப் பேசாமல் அமைதி காத்தது நிவேதாவிற்கே ஆச்சர்யம் தான்.
அவனோ, “நீங்க முன்னாடியே சொல்லிருந்தா நான் ஸ்கூல் படிக்கும் போதே மேரேஜ் பண்ணிருப்பேன்…” என்றான் தீவிரமாக.
“என்ன தம்பி சொல்ற புரியல?” நிவேதா குழம்பிட,
“ம்ம்… உங்க மருமகளுங்களுக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுருந்தா, நான் இவ்ளோ நாள் சிங்கிளா இருந்துருக்க மாட்டேன்னு சொன்னேன்…” தாயை நக்கலடித்து விட்டு அழைப்பைத் துண்டிக்க, நிவேதாவின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.
‘சேட்டைப் பிடிச்ச பையன்!’ செல்லமாக இளைய மகனைத் திட்டிக்கொண்டார்.
மறுநாள் திலோத்தமாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்தது.
அவளையே பார்த்திருந்த விக்ரம், “திலோ ஒருவேளை இந்த சர்ஜரி ஃபெயிலியர் ஆச்சுன்னா… ஆனா பரவாயில்ல தான?” தவிப்பாய் கேட்டிருந்தான்.
அவனது அலைப்புறுதல் புரிய, “இந்த முயற்சியை செய்யாமலே போயிருந்தா தான் எனக்கு காலம் முழுக்க குற்ற உணர்ச்சியா இருந்துருக்கும் விக்ரம். இப்போ எது நடந்தாலும் பரவாயில்ல. நீங்க உயிரோட இருக்கணும். எப்பவும் சந்தோஷமா, சிரிச்சிட்டே இருக்கணும். அவ்ளோ தான்” என்றாள் தலைசாய்த்து.
அப்போதும், அவளுடன் இருக்க வேண்டுமென அவள் கூறவில்லை. அதனை அப்போதைக்கு கவனியாது விட்டான் விக்ரம்.
“ஒரு கிஸ் குடு திலோ!” விக்ரம் கெஞ்சல் தொனியில் கேட்க, மறுகணம் அவன் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்திருந்தாள்.
அதில் மெல்லப் புன்னகைத்தவன், “உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் திலோ…” என்றான் அவள் நெற்றி முதல் நாடி வரை பார்வையால் வருடியபடி.
“என்ன விக்ரம்?”
“சர்ஜரி முடிச்சுட்டு வந்து ரிலாக்ஸ்ஸா சொல்றேன். இங்க வா” என்று இன்னும் அருகில் அழைக்க, வழமை போல அவள் கன்னத்தைக் காட்டினாள்.
மீசை படர அழுத்த முத்தமிட்டவனை நோக்கி அக்னிலா ஓடி வந்தாள்.
“அப்பா, நீங்க இனிமே என் கூட விளையாடுவீங்களா?” ஆர்வமாகக் கேட்ட மகளைக்கண்டு கண் கலங்கியது இருவருக்கும்.
“அப்பாக்கு சீக்கிரம் சரி ஆகிடும் நிலா. அப்பறம் உன்கூட தான் விளையாடுவாங்க” மகளைக் கட்டி அணைத்துக்கொண்ட திலோத்தமாவிடம்,
“சித்தப்பாவும் சொன்னாங்க. அப்பா சரியாகிடுவாங்கன்னு… எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவாங்கன்னு சொன்னாங்க…” என்ற சிறுமியின் மனதில் பேராசைகள் பல நிராசையாய் தொக்கி நின்றதை உணர்ந்த விக்ரமிற்கு தொண்டை அடைத்தது.
“சித்தப்பா எங்க நிலா?”
“வெளில இருக்காங்க.”
“சித்தப்பாவ கூட்டிட்டு வர்றியா?” சற்றே ஏக்கமாகக் கேட்டான் விக்ரம்.
“ம்ம்” வேகமாகத் தலையாட்டியவள், திடுதிடுவென வெளியில் ஓடினாள்.
மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த அக்னி வேந்தனின் சட்டையைப் பிடித்து இழுத்தவளைத் தூக்கியவன், “அப்பாவை பார்த்தாச்சா குட்டிமா?” என வினவினான்.
“அப்பா உங்களைக் கூப்பிட்டாங்க சித்தப்பா”
“டாக்டர்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு சொல்லுடா…” என அவளை மட்டும் உள்ளே அனுப்பி விட்டவனுக்கு விக்ரமை அறுவை சிகிச்சைக்கு வழியனுப்பும் அளவிற்கு எல்லாம் மனதைரியம் இல்லை.
அதனைக் காட்டாது இருக்க கோப முகமூடியை அணிந்து கொண்டான்.
“அப்பா, சித்தப்பா டாக்டர் கூட பேசிட்டு இருக்காங்களாம்…” அப்படியே வந்து ஒப்பித்து விட்ட மகளிடம், “டாக்டர்கிட்ட எந்த ஊசி போடப்போறாங்கன்னு விளக்கமா கேட்குறான். உன் சித்தப்பா என்ன டாக்டரா?” என்றான் சலிப்பாக.
“இதையும் சொல்லட்டா?”
அக்னிலாவின் கேள்வியில் இதழ் விரித்தவன், “சொல்லு போ” என்று அனுப்பி விட, அவளோ அதனை அப்படியே அக்னி வேந்தனிடம் கொட்டி விட்டதில் தன்னை மீறி முறுவலித்தான்.
“நீ அம்மா கூட இரு குட்டிமா. சித்தப்பா வந்துடுறேன்” என்று உள்ளே அனுப்பி விட்டவனுக்கோ, மூச்சு விடவே சிரமமாக இருந்தது. விக்ரமின் விபத்து நேரத்திலெல்லாம் நல்லவேளை இந்தக் கடவுள் தன்னைப் பிரித்து வைத்து விட்டான். இல்லையென்றால், அவன் சிதைந்து இருப்பதை எப்படி பார்த்திருக்கக் கூடும்? இப்போதே அவனால் பாரத்தை தாங்க இயலவில்லையே. கண்ணை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன், அவர்கள் கண்ணிலேயே படாமல் வெளியில் சென்று விட்டான்.
“என்ன சொன்னான் உன் சித்தப்பா?” விக்ரம் சுவாரஸ்யமாக கேட்க,
“சித்தப்பா ஸ்மைல் பண்ணாங்களே” அவள் தலையாட்டிக் கூறிட, விக்ரமும் நளினமாய் புன்னகைத்தான்.
அண்ணன் தம்பியின் கண்ணாமூச்சி விளையாட்டை ரசித்த திலோத்தமாவிற்கு வருத்தமும் மேலோங்கியது.
எத்தனை அழகான நாள்களை தொலைத்து இருக்கிறோம்! அவளை அதிகம் யோசிக்க விடாதவாறு தாதியர்கள் விக்ரமை அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட, விக்ரமின் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தவள், தளர்ந்து அமர்ந்து விட்டாள்.
“அம்மா அப்பா எங்க போறாங்க?” அக்னிலாவின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாதவளாக அவளது மடியில் முகம் புதைத்து அழுது விட்டாள்.
“ம்மா டோன்ட் க்ரை” அக்னிலாவும் பயந்து அழத் தொடங்க, வேகமாய் கண்ணீரைத் துடைத்த திலோத்தமா, “ஒன்னும் இல்லடா சும்மா…” எனக் கண் சிமிட்டி மகளுக்கு சிரிப்பு காட்டி விட, அப்போது தான் அங்கு வந்தாள் பவித்ராத்யா.
“எங்க போன பவி?”
“நானும் அத்தையும் கோவிலுக்குப் போனோம்கா. அத்தான் ஆபரேஷன் தியேட்டருக்கு போய்ட்டாங்களா?” கேட்டபடி திலோத்தமாவிற்கும் அக்னிலாவிற்கும் விபூதி இட்டவள், “அத்தை இன்னும் கோவிலிலேயே தான் இருக்காங்க. ஆப்ரேஷன் முடிஞ்சுதுன்னு சொன்னா தான் வீட்டுக்குப் போவாங்கலாம். அவங்களை பார்க்கவும் பாவமா இருக்கு” என்றவளின் விழிகள் சுற்றி முற்றி தேடியது.
“எங்க உன் அருமை க்ளாஸ்மேட்?” பிடிக்காத தொனியில் கேட்டதில்,
“வெளில இருக்கான் போல பவிமா. அவனால கண்டிப்பா விக்ரமை இப்படி பார்க்க முடியாது. நீ அவன்கூட பேசிட்டு இரு…” என்றவளுக்கு நண்பனின் மனம் நன்கு புரிந்தது.
“சரி நான் பிரசாதம் குடுத்துட்டு வரேன்…” என அவனைத் தேடிச் செல்ல முந்தைய நாள் அவள் அமர்ந்து அழுத்த இடத்திலேயே அவனும் அமர்ந்திருந்தான்.
நெற்றியை கையில் புதைத்து, கண்ணை மூடி அமர்ந்திருந்தவனின் நிலை வலி கொடுக்க, அக்னி என அழைத்தாள் மெல்லமாக.
அதில் கண் விழித்தவன், “ம்ம்” என்க, அவன் விழிகள் சிவந்திருந்தது.
“கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்” என விபூதியை நீட்ட, “ப்ச் வேணாம்” என மீண்டும் குனிய போக,
“அச்சச்சோ வேணாம்னு சொல்லக்கூடாது… விக்ரம் அத்தானுக்காக அர்ச்சனை பண்ணது” என்றவள் விபூதியை அவளே இட்டு விட்டாள்.
“நீங்களே இப்டி வந்து உட்காந்தா எப்படி… இப்ப கை சரியாக தான ஆப்ரேஷன் பண்றாங்க. அவர் ஆக்சிடென்ட் ஆனப்ப நிறைய சர்ஜரி. பொழைப்பாரா மாட்டாரான்னே” எனும்போதே, “பேசாத. எனக்கு எதையும் கேட்க பிடிக்கல…” எனக் காதை மூடிக்கொண்டவனை திகைத்துப் பார்த்தாள்.
“இல்லைங்க அப்பவே அவர் பொழைச்சு வந்துட்டாருல்ல. இப்பவும் அதே மாறி வந்துடுவாரு அதுக்கு தான் சொன்னேன். கஷ்டப்படுத்த சொல்லல… சாரி” என பதற்றமாக கூற, “ம்ம்ம்ம்” அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அவன்.
“கொஞ்சம் காபி குடிக்கிறீங்களா? பெட்டரா இருக்கும்…”
“வேணாம்…”
“கொஞ்சம் குடிங்க… நம்ம ஷேர் பண்ணி குடிக்கலாம்” என்றவளுக்கு பச்சைத் தண்ணீர் குடிக்கவும் மனதில் இடமில்லை.
ஆகினும் அவனைச் சற்று சாந்தப்படுத்த ஒரு காபியை வாங்கியவள், அவனிடம் நீட்ட அவனுக்கும் மறுக்க விருப்பமின்றி வாங்கிக்கொண்டான்.
சில துளிகள் பருகியதும் “நீ குடிக்கல” எனக் கேட்டான்.
அவனது க்ளாஸைப் பறித்து அதிலேயே அவளும் குடித்ததில் அவனது இரு புருவமும் உயர்ந்தது.
“எப்படியும் நீங்க பாதி தான் குடிக்கிறீங்க. அதான் எதுக்கு வேஸ்ட் பண்ணனும்னு…” அவனது பார்வையில் பதில் அளித்தவளுக்கோ, அவனை இயல்பாக்கும் நோக்கம் மட்டுமே எண்ணமெங்கிலும் தாண்டவமாடியது.
அந்நேரம் அக்னி வேந்தனின் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வர, அதனைப் பார்த்து புருவம் சுருக்கியவன், “உன் அக்காட்ட பேசணும் வா…” என்று கையோடு அவளை அழைத்துச் சென்றான்.
“என்ன திடீர்னு?” என்ற கேள்விக்கு பதில் கூறாதவனாக மருத்துவமனை அறைக்குள் நுழைய, அங்கு ஜன்னலை வெறித்தபடி மகளை மடியில் போட்டு தட்டிக்கொடுத்து உறங்க வைத்துக்கொண்டிருந்தாள் திலோத்தமா.
அக்னி வேந்தனைக் கண்டதும் அக்னிலாவை சோஃபாவில் படுக்க வைத்து விட்டு எழுந்தவள், அவனை எதிர்பாராமல் விழித்தாள்.
அவனோ கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, “விக்ரமுக்கு ஆபரேட் பண்ண டாக்டர்ஸ் எல்லாம் வந்தாச்சு” என்றான் எகத்தாளமாக.
“ஸ்டார்ட் ஆகிருக்குமா?” அவள் தவிப்பாக கேட்க, “ஸ்டார்ட் ஆகணுமா வேணாமான்னு நீ தான் சொல்லணும்…” தோள் குலுக்கியவனை இருவரும் விசித்திரமாகப் பார்த்தனர்.
“என்னங்க சொல்றீங்க?” பவித்ராத்யா எரிச்சலாய் கேட்க,
“ஏன், எப்படி, என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்” என அழுத்தமாக திலோத்தமாவைப் பார்த்தான்.
திலோத்தமாவிற்கு நெற்றியில் வியர்வை அரும்புகள் உதயமாக, “எத பத்தி கேட்குற அகி” என்றாள்.
“ம்ம் உங்க காதல் கதையைப் பத்தி தான்?” சிறு நக்கல் தெளித்ததோ என்ற சந்தேகமே அவளை அதிகம் தடுமாற வைத்தது.
“அது… நாங்க லவ் பண்ணோம். அவருக்கு வீட்ல மேரேஜ் பத்தி பேசவும், நாங்க மேரேஜ் பண்ணிக்கலாம்னு…” எனத் திக்கி திணறினாள்.
“ஓஹோ… அப்போ லவ் பண்ணப்ப வெளில ஊர் சுத்தி இருப்பீங்க தான? எங்க எங்கலாம் போய் காதலை வளர்த்தீங்க?”
“தனியா போய் வளர்க்க என்ன இருக்கு அகி… இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்… நொடி நேரத்துல தோணுறது எப்போ எப்படி வளருதுனு யாருக்கு தெரியும்…” சட்டென சொல்லி விட்டு திருதிருவென விழித்தாள்.
அக்னி அவளை ஆழமாக ஊடுருவி, “நீ பேசுறதுல இந்த ஒரு விஷயத்துல வேணும்னா உண்மை இருக்கும்னு ஒத்துக்குறேன். இப்ப ஒட்டு மொத்தமா உண்மையை மட்டும் பேசலாமா?” என்றான் வெகு கேலியுடன்.
“என்ன உண்மை? எனக்குப் புரியல” திலோத்தமா மருகினாள்.
“விக்ரமுக்கு சரியாகணும்னு ஆசை இருந்தா சொல்லு…” தமையனின் வாழ்க்கையுடன் நிச்சயம் விளையாட மாட்டான் என்ற திணக்கம் பவித்ராத்யாவிற்கு இருந்தது. ஆனால் திலோத்தமா ஏற்கனவே ஒரு வித உணர்வுப்பெருக்கில் இருந்ததில், எதையும் யோசிக்க இயலவில்லை.
“ஏன் அகி நீயும் இப்படி பண்ற?” தேம்பி அழுதவளின் மீது சிறு இரக்கமும் காட்டாதவன், “நானும்னா? வேற யார் என்ன செஞ்சா?” அவனது பிடியில் பிடிவாதமாக இருந்தான்.
“அக்னி, இப்ப எதுக்காக அவளை இப்படி அழுக வைக்கிறீங்க?” பவித்ராத்யா கொந்தளிக்க, “என் அண்ணனோட காதல் கதையைத் தெரிஞ்சுக்க நினைக்கிறது தப்பா ஆத்யா… வா வந்து உக்கார்ந்து நீயும் கேளு” என அவனுக்கு அருகில் உரசியபடி அவளை இழுத்து அமர வைக்க, அவள் தான் நெளிய வேண்டியதாகப் போயிற்று.
“ப்ளீஸ் அகி… சர்ஜரி ஸ்டார்ட் பண்ண சொல்லு” திலோத்தமா கிட்டத்தட்ட கெஞ்சிட, “உண்மை தெரியாம இப்ப ஒரு அணு கூட அசையாது திலோ…” அழுத்தம் திருத்தமாகக் கூறிய நண்பனிடம் போராட இயலாது தரையில் தொப்பென அமர்ந்தாள்.
“திலோ” பவித்ராத்யா எழப்போக, அக்னி வேந்தன் அவளை நகர விடாமல் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.
திலோத்தமாவிடம் கேட்க அவளுக்கும் நிறைய கேள்விகள் இருந்ததே! இதை விட்டால், அவளிடம் இருந்து உண்மையை வாங்க முடியாது என்ற நிஜம் உணர, பவித்ராத்யாவும் அக்னி வேந்தன் மீது நம்பிக்கை கொண்டு தன்னை அடக்கிக்கொண்டாள்.
திலோத்தமா சில நொடிகள் தரையையே சலனமின்றி பார்த்திருந்தாள். அவள் பேச்சை மீறி கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட, “நீ துபாய் போயிருக்குற நேரத்துல… விக்ரம் எங்க ஏரியா வழியா வந்தாரு. அப்போ அவர் கார் பஞ்சர். அப்பா தான் வேலை பார்த்து குடுத்தாரு. விக்ரமோட கால்ல சின்ன அடி. காலைல இருந்து பேங்க்கும், ஹோம்கும் அலைஞ்சுட்டு வந்ததா சொன்னாரு. அவருக்கு காயம் இருந்ததுனால, நான் தான் அவருக்கு மருந்து போட்டுவிட்டேன்” என அன்று நடந்ததை பகிர்ந்தவள்,
“எங்கிட்ட விளையாட்டா அவர் பேசுன ஒரு வார்த்தை, எங்க வாழ்க்கையைவே தலைகீழா திருப்பி போட்டுடுச்சு அகி.
‘என் கால்ல விழுந்து கெஞ்சாத நான் உன்னையவே கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு… அவர் கிண்டலா சொன்னத, உன் சித்தப்பா கேட்டுட்டாரு… உங்க வீட்டுப் பக்கம் ரோடு வேலை நடந்ததுனால, உங்க சித்தப்பாவும் என் வீட்டு வழியா தான் வந்துருக்காரு. விக்ரமோட காரை பார்த்துட்டு அவரைத் தேடி இருக்காரு. அங்க இருந்த சின்ன கோவில்ல, அவரைக் கண்டுபிடிக்கிறதும் பெருசு இல்ல. நாங்க பேசுறதும் வெளில கேட்காம இருக்காது. வெளில கேட்க கூடாதுன்னு மறைஞ்சு மறைஞ்சு பேச, நாங்க தப்பும் பண்ணலையே. ஆனா, அவர் கூட நான் சாதாரணமா பேசுனதே எவ்ளோ பெரிய தப்புன்னு அப்பறம் தான் புரிஞ்சுது…” எனக் கேவியவளை அக்னி வேந்தன் சலனமின்றி பார்க்க, பவித்ராத்யா சிலையாக அமர்ந்திருந்தாள்.
“நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலக்கா. விக்ரம் அத்தானை அப்போ நீ காதலிக்கலையா?”
“எங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல நட்பு இருந்துச்சு பவிமா. அதைத் தாண்டி, உங்களை எல்லாம் விட்டுட்டு எங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை எங்களால எப்படி யோசிச்சுருக்க முடியும்? உறவோட அருமை தெரிஞ்ச யாராலயும் சந்தோஷத்தையும் வேதனையையும் தனியா அனுபவிக்க முடியாது பேபி. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த விதி, எங்களுக்கு நிறைய தனிமையை குடுத்துடுச்சு” என்று தேம்பி தேம்பி அழுதவளை சமன்செய்யக்கூட தோன்றாதவளாக பவித்ராத்யா பிரம்மை பிடித்தது போல பார்த்தாள்.
—————–
சில வருடங்களுக்கு முன்…
மனோஜிற்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. எத்தனை தைரியம் இருந்திருந்தால், தன் வீட்டுப் பையனின் காலுக்கு அடியில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருப்பாள்?
அவனும் உடன்சேர்ந்து உருகுகிறானே. விக்ரமின் கிண்டலும் அவளது பார்வையும் போதுமே, ஒருவர் மற்றவருக்கு அறியாது புதைத்து வைத்த நேசத்தை வெளிக்காட்ட.
மனோஜ் மிகுந்த ஆத்திரத்துடன் மீண்டும் வீட்டை அடைந்து, சவுந்தரவல்லியிடம் கத்தித் தீர்த்தார்.
“உங்க பேரனை வளர்க்குற லட்சணம் இது தானா? நம்ம ஊரெல்லாம் அவனுக்குப் பொண்ணு தேடி அலைஞ்சுட்டு இருக்கோம். தொழிலை பார்க்க தான் வக்கில்லை. கவுரவமான இடத்துல பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க கூடவா அவனுக்கு அறிவில்ல. அவன் ஹோம் ஆரம்பிக்கிறேன்னு போறப்பவே அடிச்சு புரிய வச்சிருக்கணும். இப்ப பாருங்க சொந்தக்காரங்க முன்னாடி நம்ம தான் தலைகுனியனும்” நிவேதா கோவிலுக்குச் சென்றிருந்ததால் இந்தக் கலவரம் முதலில் தெரியவில்லை.
மனோஜின் சத்தத்தில் சிவக்குமாரும் இனியாவும் வந்து விட்டனர்.
சிவக்குமாருக்கும் மகனது செயலில் கோபம் தான். அவனை விசாரிக்க கூட அவருக்குத் தோன்றவில்லை.
“அந்தப் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போதே அக்னியை கண்டிச்சு இருக்கணும்” எனப் புலம்பினார்.
“அண்ணே, விஷயம் கைமீறி போறதுக்குள்ள நம்ம ஒரு முடிவு எடுக்குறது நல்லது…” மனோஜ் எச்சரிக்க,
“என்ன முடிவு எடுக்க… இவன் எப்படியும் ஹோம் நடத்த முடியாது. அதுல இருந்து பைசா வருமானம் வராதுன்னு எனக்கும் தெரியும். அடிபட்டு என்கிட்ட வந்து நிக்கட்டும்னு தான் நான் பொறுமையா இருந்தேன். அப்படியே அதை நல்லா நடத்துனாலும், என்னால முடியாதா அதை ஓரங்கட்ட… எப்படியும் அவனை தொழிலை எடுக்க வைக்கலாம்னு இருந்தேன். இப்ப முதலுக்கே மோசம் பண்ணிடுவானோன்னு இருக்கு மனோ…” என தலையைப் பிடித்தார்.
இதில் மனோஜ் சற்றே சுதாரித்து விட்டார். என்னதான் சொகுசு இல்லம் ஆரம்பிக்கப் போவதில் கோபமிருப்பினும் குடும்பத்தொழிலுக்கு விக்ரம் வராததே அவருக்கு ஆனந்தமாக இருந்தது.
தனது மகன் மட்டுமே அடுத்த தொழில் வாரிசாக வரவேண்டுமென்பது அவரது பேராசை.
தற்போது கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட மனதில்லை. அக்னி வேந்தனும் ஊரில் இல்லாதது வசதியாகிப் போயிற்று.
“அவன் அந்தப் பொண்ணு கூட கல்யாணம் பண்றதை பத்தி பேசிட்டு இருந்தான் அண்ணா. இப்படியே விட்டா சரிவராது” மனோஜ் தூண்டிலிட, “வேற என்ன பண்ண சொல்ற மனோஜூ” எனப் பரிதவித்தார் சவுந்தரவல்லி.
“அவனே கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்னா, அந்த சேரிப் பொண்ணுக்கும் நம்ம சொத்தை தார வார்க்கணும். கொஞ்ச நாளைக்கு விக்ரமை வீட்டை விட்டு அனுப்பி விட்டா…?” என நிறுத்த சிவக்குமார் பதறினார்.
“என்னப்பா சொல்ற?”
“நான் சொல்றதை பொறுமையா கேளுங்க அண்ணா. அந்தப் பொண்ணை மிரட்டி அவ குடும்பத்தை முதல்ல இங்க இருந்து காலி பண்ணலாம். கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு வராதன்னு தண்டனை குடுக்கலாம். அப்ப தான், அந்த ஹோமை கட்டிட்டு அழுகாம காசோட அருமை தெரியும். அப்பறம் அவனே வந்து தொழிலை எடுத்துப்பான்…” என்று பெரிய திட்டத்தைக் கூற,
சவுந்தரவல்லியும் “அந்தப் பொண்ணோட நினைப்பு கூட இந்த வீட்டுக்கு வர கூடாது சிவா. அவளை மறந்தா தான் இங்க வரணும்னு உறுதியா சொல்லணும். மொதல்ல அந்த சிறுக்கியை இங்க இருந்து துரத்தி விடணும்” என்று பொரிந்ததில் சிவக்குமாருக்கும் கோபம் பீறிட்டு எழுந்தது.
“மனோ, ஆளை விட்டு அவளைத் தூக்க சொல்லு” என சிவக்குமார் உத்தரவு கொடுத்ததில், மனோஜின் இதழ்களில் வெற்றிப்புன்னகை பரவியது.
திடீரென கையில் பொருளுடன் ஆள்கள் வீட்டினுள் நுழைந்ததில் திலோத்தமாவும் சுந்தரமும் அதிர்ந்தனர்.
“ஏய்… மொத்தமா நாலு சுவரு கூட இல்லாத வீட்ல இருந்துட்டு உனக்கு பங்களால இருக்குறவனோட காதல் கேக்குதா?” என ஒருவன் நாராசமாகப் பேச, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“யாருங்க நீங்க. தப்பா நினைச்சு இங்க வந்துருக்கீங்கன்னு” என சொல்லி முடிக்கும் முன்னே, வீட்டிலுள்ள பொருள்கள் எல்லாம் உடைந்து சிதைந்தது.
சில அடிகள் திலோத்தமாவின் மீதும் சுந்தரத்தின் மீதும் பட, “ப்ளீஸ் நிறுத்துங்க… நீங்கள்லாம் யாரு” என அழுதபடி கேட்டாள் திலோத்தமா.
அந்நேரம் அங்கு நுழைந்தார் மனோஜ்.
“நீ எவன் கூட கூத்தடிச்சியோ அவன் வீட்டு ஆளுங்க தான். நான் விக்ரமோட சித்தப்பா” என்றதும் அவளிடம் பேரதிர்வு.
‘நீங்க தப்பா புருஞ்சுட்டு…” அவள் பேசி முடிக்கும்போதே மனோஜ் அவளது கன்னத்தில் பளாரென அறைந்தார்.
ஒரே அறையில் அவளது உதட்டில் இருந்து உதிரம் உருப்பெற, சுந்தரம் சண்டைக்கு வந்தார்.
“இதோ பாரு வயசான ஆளுன்னு பார்க்க மாட்டேன். இங்கயே கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுடுவேன். உன் பொண்ணுக்கு தராதரம்னா என்னனு சொல்லித் தர மாட்டியா? காரை பார்த்ததும் அவனை வளைச்சு போட உன் பொண்ணை கலர் கலரா ட்ரெஸ்ஸ போட்டு வெளில அனுப்புறியே… இவள் உன் பொண்ணு தான?” என நாக்கில் நரம்பின்றி பேச, இருவரும் கூனிக் குறுகினர்.
அக்கம் பக்கத்தினர் அனைவரும் வேறு அங்கு கூடி விட, திலோத்தமாவிற்கு பூமியில் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது.
“எனக்கும் விக்ரமுக்கு நடுவுல எதுவும் இல்ல…” அழுகையுடன் அவள் கூறியதை காதில் வாங்காத மனோஜ்,
“ஒரு மணி நேரம் டைம் தருவேன். அதுக்குள்ள இங்க இருந்து பெட்டி படுக்கையை எல்லாம் கட்டிட்டு குடும்பத்தோட ஓடிடனும். ஒரு நிமிஷம் லேட்டானாலும், உன் பொண்ணை கொன்னு பொதைச்சுடுவேன்…” என சுந்தரத்திடம் மிரட்ட, அவரோ கண்ணீர் மல்க நின்றார்.
“ஐயா… என் பொண்டாட்டி ஆஸ்பத்திரில படுத்துருக்கா. என் பொண்ணு நீங்க நினைக்கிற மாறி இல்லைங்க… தயவு செஞ்சு எங்களை விட்டுடுங்க” எனக் கெஞ்ச, மனோஜ் மனம் இறங்கவே இல்லை.
“என் வீட்ல காலடி எடுத்து வச்சான்னு தெரிஞ்சப்பவே காலை வெட்டி இருக்கணும்… இப்ப விளக்கேத்த நினைக்கிற கையையும் வெட்டி போட்டா, முடமா தான் சாவணும். ஜாக்கிரதை” என மிரட்டி விட்டுச் செல்ல, தந்தையும் மகளும் திக்பிரம்மை பிடித்தது போல உறைந்திருந்தனர்.
“ப்பா சத்தியமா நான் எந்தத் தப்பும் பண்ணலைப்பா” திலோத்தமா மடங்கி அமர்ந்து அழுதிட, “உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்மா. இப்ப இந்த பணக்கார முதலைங்ககிட்ட இருந்து எப்படி சொல்லி தப்பிக்கன்னு தெரியலையே…” என பயந்து போனார்.
“நான் தான்பா தப்பு பண்ணிட்டேன். என்னதான், அகியும் விக்ரமும் நல்லா பழகி இருந்தாலும், நான் அவங்களோட பேசி இருக்கவே கூடாதுப்பா. பவி கூட நிறைய தடவை சொன்னா… இப்ப எவ்ளோ பெரிய பிரச்சினை ஆகிடுச்சு பாருங்க… அம்மா வேற ஹாஸ்பிடல்ல… இதுனால பவிக்கும் பிரச்சினை வருமாப்பா?” எனப் பரிதாபமாகக் கேட்ட மகளை நெஞ்சில் சாய்த்து அவரும் கண்ணீர் வடித்தார்.
அவளை மிரட்டி விட்டு மனோஜ் வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களிலேயே விக்ரமும் வந்திருந்தான்.
காலையில் இருந்து சரியான அலைச்சல் அவனுக்கு.
தம்பியும் அருகில் இல்லாத சோர்வு ஒரு புறம். திலோத்தமா சொன்னது போன்றே, ஊசியும் போட்டு விட்டு தான் வந்திருந்தான்.
ஒரு அரை மணி நேரமாவது மெத்தையில் படுத்தால் தான் சற்றே தெளிவடையும் என்ற நிலை அவனுக்கு.
அவன் வீட்டினுள் நுழையும்போதே சவுந்தரவல்லி பெருங்குரலெடுத்து கத்தினார்.
“நில்லுடா”
விக்ரம் குழப்பமாக “என்ன பாட்டி?” என வினவ,
“கண்டவ கூட சுத்திட்டு வந்துட்டு ஒன்னும் தெரியாத மாதிரி கேள்வி வேற. உனக்கு புத்தி பிசகி போச்சா விக்ரம்…” எனக் கொந்தளித்தார்.
“என்ன உளறிட்டு இருக்கீங்க? ப்ச் செம்ம டயர்ட் பாட்டி. மொதல்ல உள்ள வந்து பேசலாம்” என ஒரு அடி எடுத்து வைக்கும்போதே சிவக்குமார் “வெளில போடா” எனக் கத்தினார்.
ஒரு கணம் அதிர்ந்து நின்ற விக்ரம், “அப்பா…” என நம்ப இயலாமல் பார்க்க,
“குடும்பத்தோட மானத்தை காப்பாத்தணும்னு எண்ணம் கொஞ்சமாவது இருக்கணும். கண்டவளோட கல்யாணத்தை வச்சுக்க டிஸ்கஸ் பண்ணிட்டு வந்துட்டு, நடிக்கிற வேலையெல்லாம் உன் தம்பிகிட்ட வச்சுக்கோ. அவன் நம்புவான்” எனக் கடிந்தவரின் கூற்று இன்னுமும் கூட அவனுக்குப் புரியவில்லை.
சற்றே பொறுமையாய் சிந்திக்கும்போது விடை கிடைத்து விட, “நீங்க திலோவை சொல்றீங்களா?” என ஐயமாய் வினவ,
“அந்தச் சிறுக்கியை தான் சொல்றோம்” என சவுந்தரவல்லி பொருமினார்.
சிவக்குமாரோ, “இதோ பாரு விக்ரம். அவளை குடும்பத்தோட ஊரை விட்டு துரத்தியாச்சு… அவளை மொத்தமா தலைமுழுக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வர்றதா இருந்தா வா. இல்லைன்னா அப்படியே போய்டு. வெளில போய் பிச்சை எடுத்தா தான் காசோட அருமை தெரியும் உனக்கு…” என்றான் சினத்துடன்.
விக்ரமிற்கு அதிர்வுடன் கோபமும் பெருகியது.
“யாரைக்கேட்டு அவளை ஊரை விட்டு துரத்துனீங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களாப்பா. அவ அம்மா வேற ஹாஸ்பிடல்ல இருக்காங்க…” எனக் கொதித்திட,
“என்னடா அவளைத் தொட்டா இங்க துடிக்குதோ…” மனோஜ் எகிறிட, ‘அவள் மேல சின்ன கீறல் பட்டாலும் நான் யாரையும் சும்மா விட மாட்டேன் சித்தப்பா” என உறுமினான் ஆடவன்.
சிவக்குமார் அவன் கன்னத்தில் சப்பென அறைந்தார்.
“மனோ சொன்னப்ப கூட முழு மனசா நம்பலை விக்ரம். ஆனா என் முன்னாடியே அந்த லோ க்ளாஸ் பொண்ணுக்கு வக்காலத்து வாங்குறல்ல… அவுட். கெட் அவுட்” என்று வாசலைக் கை காட்டினார்.
முடிவெடுத்து விட்டு பேசுபவர்களிடம் எப்படி வாதாடுவது? திலோத்தமாவின் நிலை என்னவோ என்ற பயம் அவனுக்கு. அவர்களிடம் வாதாட கூட தெம்பற்று தன்னவளைத் தேடி ஓட, அப்போதும் சவுந்தரவல்லி கத்தியது கேட்டது.
“மனோஜூ, அவளை உயிரோட விடாத. அவள் இருந்தா தேவை இல்லாத பிரச்சினை தான்” என்ற கூற்று வேறு அவனை நடுங்க வைத்தது.
திலோத்தமாவின் வீட்டின் முன்னே கூட்டம் குழுமி இருக்க, அங்கு தந்தையும் மகளும் அழுது அரற்றியதைக் கண்டு கரைந்து போனான்.
இந்த முட்டாள் குடும்பம் என்ன செய்து வைத்திருக்கிறது என்ற கோபமும் பதைபதைப்பும் எழ, “திலோ” என்றான் தவிப்பாக.
அதில் நிமிர்ந்தவள், “இங்க பாருங்க விக்ரம். உங்களுக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லைனு சொல்லியும் உங்க சித்தப்பா கேட்கவே இல்ல. நீங்களாவது சொல்லுங்க விக்ரம்…” எனக் கேவினாள்.
“நான் சொல்றதை கேட்குற நிலமைல யாரும் இல்ல திலோ… தப்பு என்மேல தான். என்னால உனக்கு தான் கஷ்டம் சாரி திலோ” என்றான் வேதனையுடன்.
“தம்பி… என் பொண்ணை கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க. தயவு செஞ்சு என் பொண்டாட்டி ஆபரேஷன் முடியிற வரையாவது பொறுமையா இருக்க சொல்லுப்பா.” எனக் கையெடுத்து கும்பிட,
“ஐயோ அங்கிள். யாருக்காகவோ பயந்து நீங்க ஏன் போகணும்?” என்றவனிடம்,
“வேற என்னப்பா செய்ய சொல்ற. என் பொண்ணு தப்பு பண்ணலைன்னு எனக்குத் தெரியும். ஆனா இங்க இருக்குற யாருகிட்டயும் நிரூபிக்க முடியாது. இப்பவே இவளைக் கண்டமேனிக்கு பேச ஆரம்பிச்சு இருப்பாங்க. என் பொண்டாட்டி வந்தா இதெல்லாம் தாங்க மாட்டா. அவள் அதிர்ந்து பேசுனாலே பயப்படுற ரகம். இவங்க கம்பு கத்தியெல்லாம் எடுத்துட்டு வந்து மிரட்டுறாங்க. அதை விட சொல்ற வார்த்தை எல்லாம் வலிக்குதே…
பணக்காரங்க ஒன்னை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டா அவங்க கூட எதிர்த்து போராட எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு தெம்பு இல்லப்பா…” என்றார் பயத்துடன்.
“அவங்க நானும் இவளும் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு ஸ்ட்ராங்கா நம்புறாங்க. நீங்க இங்க இருந்து போனா கூட இவளை உயிரோட விடப்போறது இல்ல…” விக்ரம வேந்தன் நரம்பு புடைக்க நிற்க, இருவரும் அதிர்ந்தனர்.
“என்ன விக்ரம் இது?” திலோத்தமா அச்சத்துடன் கேட்க,
அவளை நிதானமாக ஏறிட்டவன், கண்ணை மூடித் திறந்து, “என்கூட வந்துடு திலோ. நீ இங்க இருந்தா, கண்டிப்பா பிரச்சினை ஆகும். என்ன ஏதுன்னு விசாரிக்காம என்னையே என் அப்பா வீட்டை விட்டு அனுப்பிட்டாரு. உன்னை அப்படியே விட மாட்டாரு” என்றதில் அவள் மருண்ட விழிகளால் விழித்தாள்.
“அய்யயோ என்ன விக்ரம் சொல்றீங்க… இப்ப உங்க கூட வந்தா உங்களுக்கு பிரச்சினை ஆகாதா? வேணாம் விக்ரம்… அப்பா சொன்ன மாதிரி நாங்க இங்க இருந்து போயிடுறோம். நீங்க வீட்டுக்குப் போய் பேசுங்க…” தன்னால் அவனுக்கும் அல்லவா கஷ்டம் .
“எதுவுமே பண்ண முடியாது திலோ. நீ என்கூட இருக்குறது தான் உனக்கு சேஃப்” என்றவனின் மூளை பரபரவென செயல்பட்டது.
“அங்கிள்… திலோவை நான் மேரேஜ் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?” என நேரடியாக அவனிடம் வினவ திலோத்தமா அதிர்ந்து விட்டாள்.
“விக்ரம் என்ன பேசுறீங்க. ஏற்கனவே அப்படி தப்பா நினைச்சு தான இவ்ளோ பிரச்சினை”
“இப்ப நம்ம காதலிக்கவே இல்லைன்னு கத்தி சொன்னா கூட யாரும் நம்ப போறது இல்ல திலோ. இப்ப எனக்கு உன் சேஃப்டி தான் முக்கியம். அங்கிள் என்மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா, என்னை நம்பி அவளை அனுப்புங்க. கண்டிப்பா உங்க நம்பிக்கையை நான் பொய்யாக்க மாட்டேன்” எனத் தீர்மானமாக நின்றவனைக் கூர்ந்து பார்த்தார்.
அவனை நம்புவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை என்றாலும், அவரது உள்மனம் விக்ரமை நம்பியது.
மகளின் நம்பிக்கைக்கு உரியவன் என்ற நல்லெண்ணம் ஏற்கனவே இருந்ததும் ஒரு காரணம்.
“அவள் எங்கயோ நல்லாருக்கட்டும். கூட்டிட்டுப் போய்டுங்க தம்பி…” என்ற தந்தையை திகைத்துப் பார்த்த திலோ, “அப்பா என்ன இது?”என்றாள் அழுகையுடன்.
“நமக்கு டைம் இல்ல திலோ. எமோஷனலா யோசிக்காம லாஜிக்கலா யோசி…” விக்ரம் அழுத்தமாய் கூறிட, அவளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருளையும் சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்ப முற்பட, அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“அப்பா…”
“எதுக்கும் கவலைப்படாதமா. உன் அம்மாவையும் தங்கச்சியையும் கூட்டிட்டு உன்னைப் பார்க்க வந்துடுறேன்” என நம்பிக்கை கொடுத்து கண்ணீருடன் மகளுக்கு விடை கொடுத்தவர் அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார், இனி அவரது மனையாளையும் பெண்ணையும் பார்க்கவே போவதில்லை என்ற உண்மை உணராதவராய்.
யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்த விக்ரம், அவளை அவசரமாக அங்கிருந்து கூட்டிச் செல்ல, போகும் வழியில் அந்தக் குட்டிக் கோவில் கண்ணில் பட்டது.
ஒரு கணம் நின்றவன், சுற்றியும் பார்வையை சுழல விட்டான்.
சுற்றத்தார் திலோத்தமாவை ஏதோ பேசியபடி பார்ப்பது உணர்ந்து, “திலோ… ஒரு நிமிஷம்” என்று விட்டு விறுவிறுவென கோவிலுக்குச் சென்றான்.
திலோத்தமா தலையை நிமிர்த்தவே இல்லை. யாரையும் எதிர்கொள்ளும் தைரியமும் அவளுக்கு இல்லை.
கோவிலில் இருந்த மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்தவன், திலோ உணரும் முன்னே அவளுக்கு அணிவித்து இருக்க, நெஞ்சில் உரசிய மஞ்சள் கிழங்கின் அரவம் உணர்ந்தே அதிர்ந்து நிமிர்ந்தாள்.
“விக்ரம்?”
“உன்னை யாரும் தப்பா பார்க்குறத என்னால பார்க்க முடியாது திலோ…”
அவளுக்கோ, அவன் தாலி கட்டியது கூட உறைக்கவில்லை. தாங்கள் என்ன அனாதைகளா? தங்களுக்கென அழகிய குடும்பம் இருக்கும்போது, நடுத்தெருவில் பெரியவர்களின் ஆசியின்றி அவசரத் திருமணத்தை இந்த விதி ஏன் கொடுத்தது என்ற ஆதங்கம் தாள இயலாமல், “கஷ்டமா இருக்கு விக்ரம்” என்றாள் தேம்பலுடன்.
“நான் தாலி கட்டுனதா திலோ?” விக்ரமின் கேள்வியில் சட்டென நிமிர்ந்தவளோ, அவனது விழிகள் சிவந்திருந்ததைக் கண்டு துடித்து விட்டாள்.
“யாருமே இல்லாம ஏன் இப்படி நடக்கணும்னு தான்…” அவளது விளக்கத்தில் சற்றே நிம்மதியுற்றவனுக்கு, அவள் தன்னை மறுக்கவில்லை என்பதே பெரும் ஆறுதல்.
விக்ரமிற்கும் கூட அக்னி வேந்தனின் நினைவு தீயாய் சுட்டது.
தன் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழன் நான் தான் என்றானே! அவனின்றி தன் வாழ்வில் ஒரு நல்லதா? நெஞ்சம் குமுறினாலும், அதனை வெளிக்காட்டாது அடுத்தடுத்த வேலைகளில் இறங்கினான்.
கும்பகோணத்தில் இருக்கும் தனது நண்பனின் வீட்டில் திலோத்தமாவின் குடும்பத்தினரைத் தங்க வைப்பது அவனது திட்டம்.
அவளது தாயின் சிகிச்சை முடிந்த பின், அவரைப் பாதுகாப்பாக கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கவும் சடுதியாக வேலைகளை செய்தவன், தன்னவளுடன் சென்னை நோக்கி வாடகைக் காரில் பயணம் செய்தான்.
நல்லவேளையாக, அன்று தான் வங்கியில் இருந்து பணமும் எடுத்திருந்தான். அக்ரம் இல்லத்தின் வேலைக்காக அதிகப்படியான பணமே எடுத்திருந்தவனுக்கு அதனை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்துவது உறுத்தியது. இருந்தாலும், அக்னி வேந்தன் வந்த பிறகு இந்தப் பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்… என்ற எண்ணத்தில் இருந்தவன் கூட தற்காலிகமாகத் தான் அவளை சென்னைக்கே அழைத்துச் சென்றான்.
இனி இருவரும் இணைந்து புது அழகியலை வடிக்கப் போகும் ரகசியம் அறியாமேலேயே சென்னை மாநகரத்தில் காலடி எடுத்து வைக்க, முதல் இடியாய் வந்தது ஜானகியின் இறப்புச் செய்தி.
போதை தெளியும்
மேகா.
ஹாய் டியர்ஸ் ரொம்ப சாரி.. ரொம்பவே டிலே பண்ணிட்டேன். கொஞ்சம் பெர்சனல் கமிட்மென்ட் ஆகிடுச்சு… முடிஞ்சவரை சீக்கிரம்.போடுறேன் drs… மன்னிச்சு 😍
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1

