

முகம் 17
தீரன் சென்று வெகுநேரமாகியும் அவன் பேசிய வார்த்தைகளில் உறைந்திருந்த ராம்பிரசாத் மனதிலோ ‘நான் நாலு வயசுப் பொண்ணுக்கு அப்பா’ என்ற தீரனின் குரல் தான் ஒலித்தது.
அப்படியே அந்த இருக்கையில் மடங்கி அமர்ந்தவர் “தியா என்ன சொல்லுறான் இவன். இவனுக்கு… இவனுக்கு, பொண்ணு” என்று நிறுத்தியவர் அடுத்து பேசமுடியாமல் நிற்க,
அதற்கு மேல் மறைக்க முடியாமல் குற்ற உணர்ச்சி வாட்டியத்தில் “நம்ம மொழிக்கு பொறந்தது ட்வின்ஸ்” என்றார் மெல்லிய குரலில்…
நண்பன் சொன்னதை நம்பமுடியாமல் அவர் பார்க்க, அவரது காலடியில் அமர்ந்த தியாகராஜன் ஐந்து வருடங்களின் முன் நடந்ததை சொல்லத் தொடங்கினார்.
_____________________
ஐந்து வருடங்களின் முன்…
ராம்பிராசாத்தின் வழக்கில் தீர்ப்பு வந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. இப்போதெல்லாம் அவர் ஆசிரமத்திலேயே தான் நேரத்தை கடத்துகிறார். மகளிடம் கூட பேசுவதில்லை…
அவள் செய்த காரியம் பிடிக்கவில்லை அவருக்கு…
அன்று ஒரு அவசரக் சிகிச்சை விஷயமாக வெளியில் சென்றிருந்த தியாகராஜன் நண்பனை சந்தித்து பேசி விட்டே வந்திருந்தார் .
வந்தவர் கண்டது பேரு வலியைக் கண்ணில் தங்கியபடிப் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டியிருக்கும் மயல் மொழியைத்தான்.
அன்று மழை வேறு அடித்துப் பெய்ந்து கொண்டிந்தது.
வரும் வழியில் அவரது கார் பஞ்சர் ஆகி இருக்க, சிரமப்பட்டே வீடு வந்து சேர்ந்திருந்தார்.
இப்போது இவளை அழைத்துச் செல்ல வேண்டுமே என பயம் பிடித்துக்கொண்டது.
அதிலும் அவளுக்கு இப்போது எட்டாவது மாதம் தான் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் நிச்சயம் இது பேரு வலி தான் என்பது ஒரு மருத்துவராக அவருக்குப் புரிய, நேரம் கடத்தாமல் கோதைக்கு அழைத்து வரச் சொல்ல எண்ணியவர் அழைப்பை விடுக்க, அது எடுக்கப்படவே இல்லை. நண்பனுக்கு அழைக்க அதுவும் தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றே செய்தி வந்தது.
அவளோ அவர் கையைப் பிடித்து வலியை அடக்குவதைப் பார்த்தவர் “டேய் மொழி இப்போ போய்டலாம்டா” என்று வெளியே ஓடியவர் முச்சக்கர வண்டியுடன் மீண்டும் வந்தார்.
அடுத்த பத்து நிமிடத்தில் கற்பகம் மருத்துவமனைக்கும் வந்து சேர்ந்திருந்தனர்.
அன்று கோதை, கயல் இருவரும் அங்கே இல்லை, கோதை இலவச மருத்துவ முகாம் ஒன்றுக்கு செற்றிருக்க, வீட்டில் தனியே இருக்க வேண்டுமே என கயலும் அவருடன் சென்றிருந்தாள்.
உள்ளே மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்க, அப்படி ஒரு அழுகை சத்தம் மயல் மொழியிடம்…
‘பேருவலியை தாங்க முடியாமல் அழுதாளா?? இல்லை அடைத்து வைத்திருந்த அழுத்தம் தாங்காமல் அழுதாளா??’ என அவளைத் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை…
ஆனால் அவள் அழுததில் தியாகராஜன் மனதில் கவலைக்குப் பதில் நிம்மதியே எழுந்தது.
இந்த ஐந்து மாதம் அவளிடம் ஒரு நீண்ட மௌனம் மட்டுமே! பொதுவாகவே அமைதியாக இருப்பவள் தான் அவள். ஆனால் இந்த ஐந்து மாதம் அவள் முகத்தில் ஒளியே இல்லை.
அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்டி வைத்தவளது விழிகளில் மறந்தும் கண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை. அழுதாலாவது அவள் கஷ்டம் குறையுமே என்ற எண்ணம் தான் தியாகராஜனுக்கு…
வெளியே வந்த தாதி ஒருவரோ “சார் சார்… மேம் சிசேரியன் பண்ண ஒதுக்க மாட்டேங்குறாங்க சார், சுகப்பிரசம் பண்ணும்னு ரொம்ப அடம்பிடிக்கிறாங்க. ஏற்கனவே ரொம்ப கிரிட்டிகளா இருக்கு அவங்க டெலிவரி. இதுல இவங்க இப்படி அடம் பண்ணா ரெண்டு பேரையும் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் சார்” என்ற தாதியின் குரலில் சுய உணர்வு பெற்றவர். படபடப்புடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.
அங்கு வலியைப் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டிருந்த மயலைக் கண்டதும் அவருக்கு இந்த உலகமே இருண்டு போன உணர்வு தான்.
‘ஏன் இவளுக்கு மட்டும் இத்தனை கஷ்டம்? ஒரு இருபது வயதுப் பெண் இத்தனை அனுபவிக்க வேண்டுமா?’ என்று தான் இருந்தது அவருக்கு…
அவள் அருகில் சென்றவர், “மொழிமா, என்னடா இப்படி அடம்பிடிக்கிற? அது பாப்பாக்கும் தான்டா கஷ்டம், நாம சிசேரியன் பண்ணிக்கலாம்டா, நீங்க ரெண்டு பேரும் ஆரோக்கியமா வரணும்ல” என்றார் கலங்கிய குரலுடன்.
அவளோ “என்..ன்னா.ல முடியும் மாமா… எவ்வ்..வளவு கஷ்…டம் வேணா…லும் தாங்..குவேன். அது என…க்குப் புதுசு இல்ல..யே!” என்று அந்த நிலையிலும் திக்கித் திணறிப் பேச, அந்த மாமனின் உள்ளமோ வலியில் துவண்டது.
“அச்சோ! ஏன்டா மொழி உன்ன நீயே கஷ்டப் படுத்திக்கிற, பாப்பாக்கோ இல்ல உனக்கோ ஏதாச்சும் ஆனா, என்னடா பண்ணுவேன் நான். உன் அப்பாக்கு என்ன பதில் சொல்லுவேன்? என்ன இப்படி பாவியா நிக்க வைக்காதடா” என்றவர் அவள் கரத்தைப் பற்றிக்கொண்டார்.
அதன் பிறகு எவ்வளவு பேசியும் அவள் மனதை மாற்ற முடியவில்லை. நேரம் போனது தான் மிச்சம்.
மருத்துவர்களுக்கு கூட இவள் மீது கோபம் தான். ஆனால் அந்த மருத்துவமனை முதலாளியே அவள் என்னும் போது எங்கே பேசுவது?
‘தன் குழந்தை மேல் பாசம் கூடவா இல்லாமலா போகும்?’ என்ற கோபம் தோன்றுவதையும் தடுக்க முடியவில்லை. இருந்தும் கவலை இருக்க தான் செய்தது. இரண்டு உயிர்கள் அல்லவா??
அதுக்கு மேல் பொறுக்க முடியாததை உணர்ந்து மருத்துவர்கள் அடுத்த நடவடிக்கையை தொடங்கும் முன்னரே, உள்ளே இருக்கும் அவள் மகள் தாயின் ஆசையை நிறைவேற்ற எண்ணினாளோ என்னவோ?? அவளாகவே வெளியே வரத் தொடங்கி இருந்தாள்.
அடுத்து மருத்துவர்கள் நிலைமையைக் கையில் எடுத்திருக்க, அடுத்த சில நாளிகைகளுக்கு பின் மொழியின் வதனம் காண அவள் உயிர் இப்பூவுலகில் உதிர்த்திருந்தாள்.
குழந்தையைக் கண்களால் பார்த்தபடியே அவள் விழிகள் மூடத் தொடங்க மீண்டும் வலி உயிர்ப்பானது.
இதுக்காகவே காத்திருந்தது போல் அங்கிருந்த தாதி ஒருவரோ அதுவரை தன் தொலைபேசி அழைப்பில் இணைந்திருந்தவனுக்கு தகவல் சொல்லி அழைப்பைத் துண்டித்திருந்தார்.
வெளியே பதபதைக்கும் மனதுடன் நின்றிருந்த, தியாகராஜனுக்கோ உள்ளே நடப்பது புரியாமல் தலையே வெடித்தது.
சற்று முன்னர் மயலின் அழுகை சத்தம் மீண்டும் கூடியதில் பதறியவரை, மருத்துவர்கள் வெளியே அனுப்பி இருக்க, தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதார் அந்தப் பெரிய மனிதர்.
அடுத்த வினாடி வீறிட்டு அழுத அவரது பேத்தி அவருக்குத் தைரியம் சொன்னாளோ என்னவோ? மனிதர் அந்தக் குரலில் உள்ளே உருகித்தான் போனார்.
ஒரு பிஞ்சின் அழுகுறள் அவருள் ஒரு நிம்மதியைக் கொண்டு வந்திருந்தது.
அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது அடுத்த சில வினாடிகளில் அவர் புரிந்து கொள்ளும் நிகழ்வும் நடந்தேறியது.
சற்று முன்னர் தான் குழந்தை பிறந்துவிட்டது என்ற நிம்மதியுடன் தளர்ந்து அமர்ந்திருந்தவரை நெருங்கிய காலடிச்சத்தம் அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
அது அவன் தான் அவனே தான். அவரது நண்பனின் வாழ்வில் மட்டுமல்லாது, தான் குழந்தையெனப் பார்க்கும் மயலின் வாழ்விலும், மறக்க முடியாத பக்கத்தை தந்தவன்.
கோபத்தோடு எழுந்தவர் “நீங்க எதுக்காக இங்க வந்தீங்க, அவ உயிரோட இருக்காளா இல்ல செத்துட்டாலான்னு பார்க்கவா? மனிஷன் தானா நீங்க, ஒரு சின்னப் பொண்ணப் போய் இவ்வளவு கஷ்டப்படுத்திடீங்களே!” என்று ஆக்ரோஷமாய் அவன் கழுத்தைப் பிடிக்கப் போக, சட்டென அவர் கரத்தைப் பிடித்துக்கொண்டான்.
“என்ன மிஸ்டர் தியாகராஜன் ரொம்ப கோபம் வருது போல இருக்கே, உங்களுக்கு எல்லாம் கோபம் வரலாமா? உங்க ஃபிரண்ட்டும் அவர் பொண்ணும் பண்ணது இதுக்கு மேலன்னு புரிய வேணாமா?” என்றவன் அவரைப் பிடித்திருந்த கையை விலக்கினான்.
அவனே மீண்டும் “உங்க நண்பன் பண்ண தப்பு எல்லாம் இப்போதைக்கு மறைஞ்சு இருக்கலாம்? ஆனா சீக்கிரமே வெளிய கொண்டு வருவேன். அப்பறம் நிரந்தரமா ஜெயில் தான்” என்க,
“இங்க வீணா சண்டை வேணா, சண்டை போடுற நிலைமைலயும் நாங்க இல்ல, நீங்க என் ராமுக்கு பண்ணது வரை போதாதா? மயல் பண்ணது தப்புதான். ஏதோ அப்பா மேல உள்ள பாசத்துல பண்ணிட்டா இதோட எல்லாத்தையும் விட்டுட்டுங்க” என்று கையெடுத்துக் கும்பிட, அவனோ அப்படியே நின்றிருந்தான். இதனை விட பெரிய நடிப்பு எல்லாம் அவன் பார்த்திருக்கின்றானே!
அப்போது அவனிடம் தகவல் சொன்ன தாதியோ குழந்தையைக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, அந்தப் பிஞ்சுக் குழந்தையை வாங்கி நெற்றியில் முத்தமிட்டவன்,
“வெல்கம் ஏஞ்சல், அப்பா கூடவே நம்ம வீட்டுக்குப் போகலாம்? யார் உன்ன வேணான்னு சொன்னா என்னடா, அப்பா நான் இருக்கேன் உனக்கு” என்றபடி குழந்தையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டான்.
தியாகராஜனோ அதிர்ச்சியுடன் “வேணா, அவ வாழ்க்கைல இருந்து குழந்தையையும் பிரிச்சிடாதீங்க” என்றார்.
“குழந்தையப் பிரிக்க வேணாமா? உள்ள படுத்திருக்க அந்த ராம்பிரசாத் பொண்ணுக்கு என் பொண்ணு வேணாமாம்? அவ என்ன சொல்றது வேணான்னு எங்களுக்கு அவ வேணாம். எத வேணா மன்னிப்பேன். ஆனா தாய் இல்லாம வாழ்ந்த கஷ்டத்தை அனுபவிச்ச அவளே, என் பொண்ணு வேணான்னு தூக்கிப் போட யோசிச்சத என்னைக்கும் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்” என்றான்.
தியாகராஜனோ அவன் பேசுவது புரியாமல் நின்றிருந்தார்.
அவர் பார்வையை உணராதவனோ “என் பொண்ண உங்கள மாதிரி ஆட்கள் கிட்ட விட்டுட்டு போக என்னால முடியாது. என் பொண்ணு என் ஊர்ல என் குடும்பத்துகிட்ட தான் வளருவா, அவ என் பொண்ணு மட்டும் தான்” என்று நிறுத்தி நிதானமாய் சொல்லித் திரும்பி நடந்தவன்,
மீண்டும் இவர் பக்கம் திரும்பி “அவ கிட்ட சொல்லுங்க, இனிமேல் எப்பவும் எங்க வாழ்க்கைல வந்துடவே வேணாம்னு” என்றவன் அதன்பின் நிற்கவே இல்லை. அங்கிருந்து சென்றிருந்தான் மொத்தமாய்…
அவனைத் தடுக்க நினைத்து முன்னேரப் போனவரை தடுத்த அந்தத் தாதியோ, மீண்டும் இன்னொரு குழந்தையை தியாகராஜன் கையில் வைத்திருந்தார்.
அவரோ கேள்வியாகப் பார்க்க “மேமுக்கு ரெட்டை குழந்தை சார். அவங்க இங்க செக்கப் வர்ற நேரம் எல்லாம், சாருக்கு ஃபோன் பண்ணி குழந்தையைப் பத்தி சொல்ல சொல்லுவாங்க. ட்வின்ஸ் என்கிறத மட்டும் சொல்ல வேணான்னு சொல்லி இருந்தாங்க. நானும் மத்த எல்லா விஷயத்தையும் அவங்களுக்குத் தெரியாதுங்கிற மாதிரி சார் கிட்ட சொல்லுவேன். இதுவும் மயல் மேம் ஆசை தான். அவங்க முதல் குழந்தைய சாருக்கு கொடுக்கணும்னு. அதான் நானே சாருக்கு கால் பண்ணி வர வெச்சேன்” என்றார் முழு விளக்கமாய்…
அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்றே புரியாத நிலை.
மயல் கண் விழிக்கும் வரை காத்திருந்தவரோ “என்ன பண்ணி வெச்சிருக்க மொழி, இது என்ன சின்ன புள்ள விளையாட்டா?” என்றார்.
“என்னோட ஜெய்ய நான் ரொம்பவே காயப்படுத்திட்டேன் மாமா… இப்போ என் பொண்ணால மட்டும் தான் என் ஜெய்ய உயிர்ப்போட வெச்சிருக்க முடியும். அதான் என் பொண்ணு முதல்ல பொறந்திருக்கா” என்றாள் கண்ணீருடன்…
“என்ன சொன்னாலும் நீ பண்ணது தப்பு மொழி, உனக்கு குழந்தை வேணான்னு நீ தூக்கி போட்டுட்டதா அந்தத் தம்பி சொல்லுது. அந்த நர்ஸ் பொண்ணு என்னவோ எல்லாம் சொல்லுது. நீ ஏன் உன் வாழ்க்கைய இவ்வளவு காம்ளிகேட் பண்ணிக்கிற மொழி?” என்று கேட்டார் இயலாமையுடன்…
“நான் வேணான்னு சொல்லலனா நிச்சயம் ஜெய் குழந்தையைக் கூட்டிட்டுப் போய் இருக்கமாட்டாங்களே மாமா” என்றாள்
‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பது போல அவள் நினைவில் எல்லாம் அவன் மட்டும் தான்.
அவள் பதிலில் கோபம் கொண்டவரோ “உனக்கு ட்வின்ஸ்னு உன் அம்மாக்கு தெரியுமே! கோதை வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்?” என்று கேட்க,
“அவங்களுக்கு நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல மாமா” என்று கோபமாய் சொன்னவளை தீர்க்கமாய் பார்த்தவர்,
“அப்போ நீ பண்ணது மட்டும் என்ன மொழி, உன் அம்மா பண்ண அதே தப்ப தானே இப்போ நீயும் பண்ணி இருக்க, என்ன காரணமா வேணா இருக்கட்டுமே! உன் அம்மா உன்ன உன் அப்பாகிட்ட கொடுத்தது தப்புனுனா, இப்போ நீ பண்ணது மட்டும்? உனக்கு அம்மா பாசம் கிடைக்கலன்னு அவ்வளவு கஷ்டப்பட்டியே, அதே கஷ்டத்தைத் தான் இப்போ உன் பொண்ணுக்கும் கொடுத்திருக்க” என்றார் காட்டமாய்…
அவர் பேசிய வார்த்தைகளில் இருக்கும் நியாயம் அவளுக்குப் புரிய, தாயின் பக்கம் இருந்து யோசிக்க தவறி விட்டோமோ என்று ஒரு எண்ணம் எழாமல் இல்லை…
“ப்ளீஸ் மாமா ஐ காண்ட்… எனக்கு எதையுமே யோசிக்க முடியல என்னை விட்டுடுங்க, நான் பண்ணது பெரிய தப்புத்தான். ஆனா இனிமேல் ஜெய் வாழ்க்கைல நான் வேணாம். ஜெய் நம்பிக்கையை மொத்தமா உடைச்சிருக்கேன். அந்த குற்றவுணர்ச்சி என்னக் கொல்லுது. என்னால என் ஜெய் முகத்த இனி எப்படி பார்க்க முடியும். என் அப்பா அப்படி பண்ணலனு நிரூபிக்கணும். அது ஒன்னு நடந்தா மட்டும் தான் என்னால என் ஜெய்கூட வாழமுடியும். ஆனா இதெல்லாம் என்னைக்கும் நடக்கப் போறதில்லையே மாமா” என்று நிதர்சனம் என்ற ஒன்றை எண்ணி கண்ணீர் வடித்தவள்,
“அதான் நான் என் ஜெய்க்கு வேண்டவே வேண்டாம். என் சார்புல என் பொண்ணு பார்த்துப்பா” என்றாள் கண்களை இறுக்கமாய் மூடியபடி…
அவளது உணர்வுகள் எண்ணங்கள் இப்படி எதையும் தந்தையிடம் பகிர வேண்டாம் என பிடிவாதமாய் சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.
_______________________
அனைத்தையும் சொல்லி முடித்தவரோ “மொழி எங்கிட்ட சத்தியம் வாங்கிடிச்சு ராம். உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு” என்றவர்,
“ஆனா நான் அவகிட்ட அப்போவே சொல்லிட்டேன், என் ராமே வந்து கேட்டா நான் மறுக்காம எல்லாம் சொல்லிடுவேன்னு. எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா உன்கிட்ட மறைக்க, ஐ எம் சாரி ராம்” என்றார் சிறு குழந்தையென நண்பன் மடியில் தலை சாய்த்தபடி…
அவரது சிகை கோதிய ராமோ “என் நண்பன்டா தியா நீ உன்ன எனக்குப் புரியாதா?” என்றவர் விரக்தி புன்னகையுடன்
“என் பொண்ணு அவ அம்மாக்கு தான் பொறந்தான்னு நிரூபிச்சிட்டாளேடா!” என்றவருக்கு கண்களில் இருந்து நீர் வடிந்தது.
ஒரு கோதையின் பிடிவாததால் அவர் இழந்தது கொஞ்சமா? இப்போது மகளும் இன்னொரு கோதையாய் அதையே செய்து வந்து நிற்கிறாளே!
__________________
காலையில் எழுந்ததில் இருந்து அடம்பிடிக்கும் மகனை மயல் முறைக்க, அரவிந்த், மீனா இருவரும் தாயையும் மகனையும் தான் பார்த்திருந்தனர்.
“மம்மி ப்ளீஸ் மம்மி. அபி உன் செல்லம்ல?” என்று மீண்டும் அதையே கேட்க,
மயலோ “அங்க கே.ஜி போக சொன்னா இல்லைனு அவ்வளவு அடம் பிடிப்ப, இப்போ என்னடான்னா போகணும்னு குதிக்கிற என்ன அபி இது. வர வர ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற நீ” என்றாள் சற்று கண்டிப்புடன்…
“மம்மி, மீனா ஆன்ட்டி கூடவே போய் அவங்க கூடவே வந்துடுவேன் ப்ளீஸ்” என்றான் மீண்டும்.
மயல் மீனாவைப் பார்க்க, அவளும் புன்னகையுடன் தலையசைத்து தான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகையில் பேச,
“ம்ம்ம்ம், இங்க வந்ததுல இருந்து உன் அடம் அதிகமாகிட்டே இருக்கு, உன்னப் பார்த்துகிறேன்” என்றவள்,
“சாரி அரவிந்த், இவன் உங்கள ரொம்பவே படுத்துறான்ல” என்றாள் அவள் தயக்கமாய்…
வேலைக்கு செல்ல தயாராகி வந்த தம்பதி இருவரையும் போக விடாமல் தடுத்து அடம்பிடித்துக் கொண்டிருக்கும் மகனை தடுக்க முடியாமல் அவள் தவிப்புடன் தான் நின்றாள்.
அபி அவர்களிடம் சற்று அதிகமாகவே உரிமை எடுத்துக்கொள்ள, இவளால் தடுக்க முடியவில்லை. அவர்களுக்கு தொல்லையோ என்னவோ என்ற தயக்கம் அவளுக்கு…
“அதெல்லாம் ஒரு தொல்லையும் இல்ல டாக்டர். அங்க மீனா எத்தனை குழந்தைங்கள பார்த்துக்கப் போறா, அதுல ஒன்னா அபியும் கூட இருக்கப் போறான் அவ்வளவு தானே! எதுக்கு வீணா டே கேர் எல்லாம்?” என்க, அபியும் அவளை பாவமாய் பார்த்து வைத்தான்.
குழந்தை பராமரிப்பு மையத்தில் இருக்க அவனுக்கும் பிடிக்கவில்லை தான்.
துவா இருக்கும் வரை அவளுடன் இருந்தவன், அவர்கள் இல்லாத இந்த சில நாட்கள் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் தான் சேர்த்து விடப்பட்டிருந்தான்.
மாலையில் தாயுடன் ஊர் சுற்றினாலும் காலை வேலை அவனுக்கு சோர்வு தான்.
மருத்துவமனைக்கு வருவதாக அடம்பிடித்தாலும் மயல் ஒப்புக்கொள்வதாய் இல்லை…
வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாய் அங்கே சென்று வந்தவனுக்கு, மீனா வந்ததும் அவளுடன் செல்ல ஆசை வந்திருந்தது.
மயலுக்கும் மகன் மனது புரிந்தது. இப்போதே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலும் அவள் இருக்கவில்லை…
ஆறு மாதங்கள் இருக்கிறதே பின்னர் சென்று கொள்ளாமல் என்றே அவள் மருத்துவமனைகளில் விண்ணப்பித்தது கூட, ஆனால் தந்தை இப்போதே செல்லச் சொல்லி இருக்க, அவரது வார்த்தையை மறுக்க முடியாமல் செல்ல வேண்டிய சூழ்நிலை.
தன்னையே பாவமாய் பார்க்கும் மகனைப் பார்த்தவளுக்கு பாவமாய் போய் விட,
“மீனா ஆண்டிய தொல்லை பண்ண கூடாது அபி” என்று ஒன்றுக்கு இரண்டு முறை வலியுறுத்தி விட்டே அங்கிருந்து வேலைக்குக் கிளம்பி இருந்தாள்.
அவள் செல்லும் வரை பார்த்திருந்த அபி, அவளது கார் வெளியே சென்றதும் “ஜாலிஈஈஈ” என்று ஒரு ஆட்டமே போட்டிருந்தான்.
அரவிந்த் மீனா இருவருக்கும் அபியை அத்தனை பிடித்தது. இங்கே வந்து ஒரு வாரம் கூட ஆகி இருக்கவில்லை. அதற்குள் அத்தனை நெருக்கம் மூவரிடமும்…
குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்து, கிடைத்த பொக்கிஷம் கை நழுவிப் போன அவர்களுக்கு அபியின் வருகை மருந்தாகவே இருந்தது.
அதிலும் கயலை நன்கு தெரிந்தவர்களுக்கு மயலை பார்த்த மாத்திரத்தில் அவள் கோதையின் மகள் என்று தெரிய வந்திருக்க, கோதை மீதிருந்த அவர்களது மரியாதை மயலிடமும் தாவியிருந்தது.
அதிலும் இந்த சில நாட்களாக மனைவியின் முகத்தில் தெரிந்த மகிழ்வு அரவிந்த் மனதில் இன்னும் அவள் மீதான மதிப்பை உயர்த்தி இருந்தது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி பழகும் அவளது குணம் மனைவிக்காக அவனை ஈர்த்தது எனலாம்.
மனைவியுடன் புதிதாக பழகும் பலர், ஒன்று நேரடி வார்த்தையால் வதைப்பதுண்டு, இல்லையேல் ஆறுதல் சொல்கின்றேன் என்ற பெயரில் மறைமுகமாக அவர்களுக்கே தெரியாமல் வதைப்பதுண்டு.
ஆறுதல் சொல்கிறேன் என்று வருபவர்களுக்கு தெரிவதில்லை, அவர்களுக்கு தேவை ஆறுதல் அல்ல சாதாரண அங்கீகாரம் மட்டுமே என்று!
திருமணம் நடந்த இத்தனை ஆண்டில், இவையெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால், அவர்கள் அதனைக் கடந்து போகவும் பழகியிருந்தனர்.
ஆனால் மயல் மொழியிடம் அப்படிப்பட்ட பேச்சுக்கள் எதுவும் இல்லை. மீனாவைப் பற்றி தெரிந்துகொண்ட அன்று,
“எனக்கும் சைன் லாங்குவேஜ் கத்துக்க ரொம்ப ஆசை மீனா. பெயர்லயே மொழிய வெச்சிருக்கேன் சோ எல்லா லேங்குவேஜும் தெரியனும்ல. பட் கொஞ்சமா தெரியும் எதாச்சும் பிழைனா கரைக்ட் பண்ணுங்க” என்றவள்,
“குருதட்சனையா என் ஃபிரண்ஷிப்பையும், அன்புத் தொல்லையையும் வெச்சிக்கோங்க” என்றிருந்தாள் சைகை மொழியிலேயே!
மீனாவுக்கு அதிலேயே அவளை அத்தனை பிடித்துப்போனது. பழகிய சொற்ப நாட்களிலே அவளது மனதில் இருப்பதைக்கூட மயலிடம் பகிரும் அளவுக்கு நெருங்கி இருந்தாள்.
ஒருவழியாய் ஆட்டம் முடிந்து தாயராகி மூவரும் மீனா வேலை செய்யும் பாலர் பாடசாலைக்கு சென்றனர்.
அங்கே மீனா குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கவே செல்கிறாள்.
அது அரவிந்துக்கு தெரிந்த ஒருவர் மூலம் கிடைத்த வேலை. மீனாவுடன் இன்னொரு ஆசிரியரும் அங்கே இருக்கிறார்.
அவள் மனது அமைதிப்படட்டும் என அவனும், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியும் என்பதால் அவளும் அந்த வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டனர்.
மீனா, அபி இருவரையும் அங்கே இறக்கி விட்டு, அரவிந்த் கிளம்பப் போக, பரஞ்ஜோதி இணர்வியுடன் அங்கே வந்திருந்தான்.
இவர்களைக் கண்டதும் இறங்கி புன்னகை முகமாக வரவேற்ற அரவிந்த்.
“குட் மார்னிங் மிஸ்டர் பரஜ்ஜோதி” என்க,
“குட் மார்னிங் அரவிந்த், ஜோதின்னே கூப்பிடுங்க” என்றவன் அவனுடன் கரத்தை குழுக்கிக் கொண்டான்.
“இன்னைக்கு தீரன் சார் வரலையா?” என்று கேட்க,
“அவனுக்கு இன்னைக்கு ஒரு மீட்டிங் அதான். அவனை ஸ்டேஷன்ல விட்டுட்டு, இணர விடலாம்னு நானே வந்தேன்” என்றான்.
அரவிந்தோ புன்னகையுடன் இணர்வியைப் பார்த்தவன் “இணர்விக்கு ஒரு பாட்னர் கிடைச்சாச்சு. அபியும் இங்க புதுசா ஜொயின் பண்ணப் போறாரு” என்றான் அவள் கன்னம் பிடித்து…
ஜோதியோ “ஹாய் சொல்லுடா இணர்” என்க, அவளோ அவன் பின்னே ஒளிந்து கொண்டாள்.
ஜோதி குழந்தை அபியை புன்னகையுடன் சங்கடமாய்ப் பார்க்க, அபியோ பெரிய மனிதன் தோரணையில்,
“இட்ஸ் ஓகே அங்கிள். டோன்ட் பி சாட், பேபி கொஞ்சம் பயந்துட்டா நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றவன்,
“அங்கிள் நான் அபி, அபினவ்” என அவனுக்கு கை குழுக்கக் கையை நீட்டினான்.
ஜோதியோ அவன் பேச்சில் அசந்தே போய்விட்டான்.
“அடடா பெரிய மனிசா” என்று அவனும் அந்த பிஞ்சுக் கரத்தைப் பற்றி “ஹெலோ குட்டி ஹீரோ சார். அங்கிள் சாட் ஆகல, என் பொண்ண நீங்க பத்திரமா பார்த்துப்பீங்களா?” என்று கேட்க,
தன்னை ஹீரோ என்றதில் மகிழ்ந்த அபியோ “ஸ்யோர் அங்கிள், நான் பார்த்துக்கிறேன்” என்றவன், பரஞ்ஜோதியை தன் உயர்த்துக்கு அழைத்து, கன்னத்தில் முத்தமும் பதித்தான்.
பதிலுக்கு பரஞ்ஜோதியும் அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, இணர்வி அவனையே ஒரு முறைப்புடன் பார்த்திருந்தாள். பரஞ்ஜோதி தான் அவளுடைய ஜோதிப்பா ஆகிற்றே!
தன்னையே முறைத்தபடி தன் உயரத்துக்கு நிற்கும் பெண்ணைப் பார்த்தவன் புன்னகைக்க, அவள் அப்போதும் முறைத்துத்தான் வைத்தாள்.
ஆனால் அவள் மீது அவனுக்குக் கோபம் எழவில்லை, தன்னை எப்போதும் பெரியவன் என்று எண்ணும் அவனுக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள்…
மீனாவோ நேரம் கடைப்பதை உணர்ந்து, அவர்கள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு குழந்தைகளுடன் உள்ளே சென்று விட்டாள்.
சிறிது நேரம் பொதுவான பேச்சு அங்கே ஓட, ஜோதி தயக்கத்துடன் “இங்க வரப்போ எல்லாம் உங்க கூட பேசணும்னு நினைப்பேன் ஆனா முடியல” என்றான்.
அவன் ஏதோ சொல்ல எண்ணுகிறான் என்று புரிந்த அரவிந்தோ “எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஜோதி” என்க,
“உங்களுக்கு அங்க ஓகே தான அரவிந்த், அவன் அப்படி பண்ணுவான்னு நானும் நினைக்கல, அவன் ஏற்கனவே இருந்த பழைய குவார்டர்ஸ் தான் வேணும்னு சின்ன புள்ள மாதிரி அடம்பிச்சு உங்கள அங்க அனுப்பிட்டான். நான் நல்லா திட்டிட்டேன். உங்களுக்கு எதுவும் கோபம் இல்லையே!” என்று கேட்க,
“இதுல என்ன இருக்கு ஜோதி, தீரன் சார் எனக்குப் பழக்கம் தான். எந்த சங்கடமும் இல்ல, நான் ஏற்கனவே சொந்த ஊருக்கே ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணி இருந்தேன், இன்னும் வன் மந்த்ல போற மாதிரிதான் இருக்கும் அதுனால அங்க இருந்து வெகேட் பண்ணுற யோசனைல தான் இருந்தேன். இன்னும் வன் வீக்ல நான் ஊருக்கே போகணும். நான் கூட சொன்னேன் வெளில வீடு பார்த்துக்கிறேன்னு, சார் தான் விடல. கொஞ்சம் கொஞ்சமா திங்ஸ் ரெடி பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. நீங்க சங்கடப்படமா இருங்க” என்றான்.
அதில் ஜோதி புன்னகையுடன் “உங்களுக்கு ஓகேனா ஓகே தான் அரவிந்த். திடீர்னு அவன் அப்படி பண்ணவும் ஒரு மாதிரி ஆகிடிச்சு அதான் அவன் சார்புல சாரி கேக்கலாமேன்னு” என்றான்.
அவன் பேச்சில் மெல்ல புன்னகைத்த அரவிந்த்தோ “சாரி எல்லாம் எதுக்கு ஜோதி விடுங்க” என்றவன்,
“டாக்டர், தீரன் சாருக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.
ஜோதியோ சித்தார்தைக் கேட்கின்றான் என நினைத்து “தீரனோட தங்கச்சிய சித்துக்கு தான் கட்டி கொடுத்திருக்கோம். மச்சான் முறை வேணும்” என்க,
“நான் சித்து சார கேட்கல ஜோதி, மயல்மொழி மேடம கேக்குறேன்” என்றதில் குழம்பியவன்,
“மயல் மொழியா??” என்றான் சந்தேகத்துடன்…
அந்தப் பெயர் அவன் மறக்கக் கூடியாதா?? முகம் தெரியா விட்டாலும், அந்தப் பெயர் அவனுக்கு மனதில் பதிந்து போன ஒன்றாகிற்றே!
“ஆமா, மயல்மொழி தான். அது சித்து சார் வீடுன்னு தெரியும். இப்போ மேடம் தான் அங்க இருக்காங்க. உங்களுக்குத் தெரியாதா?? டாக்டர் ராம்பிரஷாத்தோட பொண்ணு அவங்க. நான் கூட தீரன் சாருக்கு தெரிஞ்சவங்கனு நினச்சேன். அபி கூட அவங்க பையன் தான். எங்க கூட நல்லா ஒட்டிக்கிட்டான்” என்றதும் ஜோதியின் சந்தேகம் உறுதியானது.
இறுதியில் அவன் சொன்ன, ‘அபி கூட அவங்க பையன் தான்’ என்ற அரவிந்தின் குரல் மீண்டும் மீண்டும் அவனுக்கே கேட்டுக் கொண்டிருந்தது.
அதன்பின் அரவிந்த் பேசிய எதுவும் அவன் மூளையில் பதியவில்லை…
அங்கே மீனாவின் கையை ஆளுக்கொரு புறமாய் பிடித்து உள்ளே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மீதும் தான் அவன் பார்வை நிலைத்திருந்தது.
அவன் நினைப்பது மட்டும் சரியாக இருந்தால்??? நினைக்கவே மனது துடித்தது.
மயல்மொழி மேல் கட்டுக்கடங்காத கோபம் பெறுக, அரவிந்திடமிருந்து விடுபட்டவன், முதலில் அழைத்தது சித்தார்த்துக்குத் தான்.
“சித்து, எதுவும் பேசாத நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்க, அவனோ என்னவென்று புரியாமல் “முதல்ல கேளுடா என்னனு?” என்றான்.
“அபி, தீரனோட பையன் என்கிறது உனக்குத் தெரியுமா தெரியாதா? என்று கேட்க, அந்தப்பக்கம் இருந்தவன் சாதாரணமாக அதிர்ச்சி ஆகி இருக்க வேண்டும், ஆனால் சித்தார்த்தோ உண்மையில் நிம்மதிதான் அடைந்தான்.
“ஜோதி…” என்று அவன் இழுக்க,
“நேர்ல என் கைல மாட்டு உனனை என்னை பண்றேன்னு பாரு” என்றவன்,
“எனக்கு ஜெய் பொண்டாட்டிய பார்க்கணும்” என்றான்.
சித்தார்த்தோ “இப்போ ஹாஸ்பிடல்ல தான் இருப்பா மச்சான்” என்க, அடுத்த நொடி அழைப்புத் தூண்டிக்கப் பட, அதிலேயே அவன் கோபம் புரிந்தது சித்தார்த்துக்கு
கண்களை மூடித்த திறந்த ஜோதியோ, தீர்க்கமான முடிவுடன் மயல் மொழியை நோக்கித்தான் சென்றான்.
அபியின் விடயம் தீரனுக்குத் தெரியப்படுத்த முன் அவனுக்கு, அவளிடம் கேட்கவும் சொல்லவும் பல விடயங்கள் இருந்தது.
அவளைத் தேடி செல்லும் ஜோதியின் இந்தப் பயணம் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ????
ஈர்க்கும்…

