
கல்லறை 4
ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்தையும் மறந்து அனு உறங்கிக் கொண்டிருக்க அவளருகே நின்றிருந்த கார்த்தியின் முகத்தில் வேதனை கவிழ்ந்திருந்தது. எப்படி இருந்தவள் இப்போது இப்படியிருக்கிறாளே…! நான் தான் அனைத்திற்கும் காரணமாகிப் போய்விட்டேன் போல என்று தன்னையே அவன் குற்றம் சுமத்திக் கொள்ள “கார்த்தி” என்ற குரலில் திரும்பினான்.
“ஆதி” என்றவனின் குரலில் இருந்த சோகம் அவனுக்கும் புரிந்தது. “என்னாச்சு கார்த்திக். அவங்க நல்லா தூங்கிட்டுத் தானே இருக்காங்க. வாங்க, இப்படி வெளிய போய் பேசலாம்… இங்க பேசுனா அவங்க உறக்கம் தடைபடும்” என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் ஆதித்தன்.
“அனு மயங்குறதுக்கு முன்னாடி அவகிட்ட தான் குழந்தை இருக்குன்னு சொன்னாங்க தானே அவங்க யார்னு உங்களுக்குத் தெரியுமா???” சட்டென்று கார்த்திக்கிடம் ஆதி கேட்டான்.
“தெரியும் ஆதி” என்றவன் நடந்து முடிந்தவற்றை அப்படியே அவனிடம் சொல்லத் தொடங்கினான். கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் கண்களில் வியப்பு, சிலிர்ப்பு, வேதனை, இறுக்கம் என மாறி மாறி உணர்வுகள் பிரதிபலிக்கப்பட்டு இறுதியில் ஒருவித சோகமே ஆழ்ந்திருந்தது.
பின் அழுந்த இமைகளை மூடித் திறந்தவன் “ஒன்னும் பிரச்சனை இல்லை கார்த்திக். எல்லாமே சரி பண்ணிடலாம். அதுவும் நீங்க மனசு வச்சா சீக்கிரமாகவே சரி பண்ணிடலாம். அவங்களுக்கு இப்போ குழந்தை இறந்துடுச்சுன்னு தெரியலை. அதை தெளிவா புரிய வச்சுட்டா அவங்க தெளிவாகிடுவாங்க. அவங்க மனசு அந்த பொண்ணைத் தான் குற்றவாளி மாதிரி சித்தரிச்சு வச்சுருக்கு. அவகிட்ட கொடுத்தோம் அவதான் குழந்தையை எதுவோ பண்ணிட்டான்னு. அதனால பர்ஸ்ட் அந்த விசயத்தை நாம கிளியர் பண்ணனும் கார்த்திக். இப்போ அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். அடுத்தடுத்த கவுன்சிலிங்ல அவங்களோட உணர்வுகளை வெளியேக் கொண்டு வந்துடலாம். அதுக்கப்பறம் எல்லாத்தையும் நீங்களே சரி பண்ணிடுவீங்க” என்றதும் அவனும் தலையாட்டினான்.
“என்னாச்சு கார்த்திக். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“இருக்கு ஆதி” அவன் வார்த்தைகளில் நம்பிக்கையென்து கொஞ்சங் கூட இல்லை.
“யாரா இருந்தாலும் இந்த சூழ்நிலையில எல்லாமே சரியாகிடும்னு நம்பிக்கை வர்றது ரொம்பவே கஷ்டம். நீங்க இதுக்காக பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றதும் தலை கவிழ்ந்தான் அவன்.
“மத்தவங்க மனசை புரிஞ்சுக்குறதுக்காக தான் நாங்களும் படிச்சுட்டு இப்படி கோர்ட் மாட்டிக்கிட்டு சுத்திட்டு திரியுறோம். ஆனாலும் புரிஞ்சுக்க முடியல. முயற்சி தான் பண்ணிட்டு இருக்கோம். Be positive கார்த்திக். இனி எல்லாம் சுகமே” என்றதும் அவனும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆதியின் மனதுக்குள் அவளின் நினைவுகள். சடுதியில் அவன் எண்ணங்கள் எல்லாம் எங்கெங்கோ பயணிக்க தொடங்க அந்த பயணத்தினை நிறுத்த வேண்டியே அங்கே வந்தாள் நர்மதா ஆதியென்று கத்திக் கொண்டு.
மனதினை சூழ்ந்திருந்த மாய உணர்வுகள் பட்டென்று தன்னை மறைத்துக் கொண்டு அவள் முன் இயல்பாய் இருப்பதினைப் போல் காட்டிக் கொள்ள அவன் முகத்தினை வித்தியாசமாகப் பார்த்தபடி நின்றுவிட்டாள் அவள்.
“என்ன நர்மதா” அதில் அவளுக்கு புரிந்துவிட்டது அவன் எதையோ மறைக்கிறான் என்று.
“ஆதி, நல்லா இருக்கயா நீ?”
“நல்லாத்தான் இருக்கேன். ஏன் அப்படி கேக்குற?”
“எனக்குத் தெரியும், உன்னைப் பத்தி. நீ பொய் பேசுற. அதுவும் என்கிட்டயே. என்னவோ நடந்துருக்கு சொல்லு”
“அப்படிலாம் எதுவும் இல்லை நர்மதா”
“அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு?”
“நான் தான் இல்லைன்னு சொல்லிட்டேன்ல. அப்பறமும் ஏன் இப்படி கேள்வி கேட்டுட்டே இருக்க?. அதுவும் இல்லாம அப்படியே ஏதோவொரு விசயமாவே அதிருக்கட்டும். அதை உன்கிட்ட சொல்லியே ஆகணுமா நர்மதா. எனக்குன்னு பெர்சனல் ஸ்பேஸ் இருக்கு. அதுக்குள்ள வர முயற்சி பண்ணாத” என்றவன் கிளம்பியே விட்டான்.
வார்த்தைகளில் அழுத்தத்தினை திணித்து தள்ளி நிறுத்துவான் தான். இருந்தும் இந்த பர்சனல் என்ற வார்த்தை அவளை மிகவும் வலிக்கச் செய்தது. ஆதியென்றால் அவனுக்கு அவ்வளவு விருப்பம். எந்தளவுக்கு என்று இதுவரை அவனிடம் அவள் வெளிப்படுத்தியதில்லை. அதனால் அவள் மனம் இவனது விலகலில் வலி கண்டு அங்கயே சோர்ந்தமர்ந்துக் கொண்டது.
சிறிது தூரம் சென்றவன் தன் தலையில் தட்டிக் கொண்டு திரும்பி வந்தான் அவளிடம்.
“நதிம்மா” என்று அவன் உருக்கமாய் அழைக்க அவள் நிமிர்ந்தும் பார்த்தாளில்லை.
“உன்னைத்தான் நதி”
இறுக்கமாக மூடியிருந்த இதழ்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவள் செய்கை குழந்தையின் செய்கை போல் இருந்தது. “நதி மா சாரி” என்று அவன் சிரிக்க அவளுக்கு லேசாய் விழியில் ஈரம் கோர்த்துக் கொண்டது.
“ஏய் பையித்தியம் என்னதிது” அவளைக் கடிந்துக் கொள்ள “ஒன்னுமில்லை சார் நீங்க கிளம்புங்க” ஒட்டாத் தன்மையுடன் பேசினாள் அவள்.
“ஓ காட்.. லூசு மாதிரி பண்ணாத.. நீயென்ன சின்னக் குழந்தையா?” என்று அவன் நெற்றி சுருக்க “லூசா இல்லை.. குழந்தையா ஏதாவது ஒன்னு சொல்லு” என்று அவள் உதட்டைச் சுழிக்க ஆட்காட்டி விரலை மடக்கியவன் அவள் கன்னத்தில் சுண்டிவிட்டான்.
“ஷ்ஷ்…டேய் ஆதி லூசு” என்று அவள் கத்த “லூசு தான் கன்பார்ம் பண்ணிக்கோ” சிரித்தான் அவன்..
“சிரிக்காத ஆதி. ப்ளீஸ், எனக்கு மனசு வலிக்குது”
“அப்போ வா. நான் கவுன்சிலிங் தர்றேன்”
“நீதான் என்னை ஹர்ட் பண்ண?”
“நீ கேள்விப்பட்டதில்லையா..! நோய் தருபவனே நோய் தீர்க்கும் மருந்தாவான்”
“அதனால இப்போ நீ மருந்து தரப்போறயா… ஆனால் காயப்பட்ட என்னோட…” இன்னும் என்ன பேச வந்தாளோ அவளது இதழின் மீது ஆட்காட்டி விரலை வைத்தவன்
“ஷ்ஷ் நீயொரு டாக்டர். உனக்குன்னு சொந்தமா மூளை இருக்குதானே.. அதை யூஸ் பண்ணுவயா மாட்டயா” என்றான் அழுத்தமான குரலில்.
“சொந்தமா மூளை இல்லை. உன் மூளையை வேணும்னா கொஞ்சங் கடன் குடுத்துட்டுப் போ”
“அப்பவும் யோசிக்காம ஓப்பிதான் அடிப்ப நீ” என்க “ஆதி” என்றவள் சிணுங்க “நதி” என்று அவனும் அவளைப் போலவே கத்திச் சிணுங்க அவள் சிரித்தே விட்டாள்.
“இப்போ அழகா இருக்காங்க நதி” நிம்மதியுடன் சொல்ல “அப்போ இதுக்கு முன்னாடி” கேள்வி விரைவாய் வந்தது அவளிடத்திலிருந்து.
“ம்ம்…இதுக்கு முன்னாடி வாய் ஒருபக்கம் கோணலா அப்படியே சுடுகாட்டுல உலவித் திரி.. ” என்றவன் முகம் மாற தன் பேச்சினை சட்டென்று நிறுத்திக் கொண்டான்.
“டேய் நானென்ன பேயா” என்று அவள் அவன் உணர்வுகளைக் கவனிக்காமல் பேச அவனோ மௌனித்து விட்டான்…
“ஆதி ஆதி” என்று அவன் தோளைத் தட்டி அவள் உசுப்ப அதன்பிறகே அவன் தெளிந்து நிமிர்ந்து பார்த்தான்.
“நீ, நீயாவே இல்லை ஆதி. அதுசரி, அது உன்னோட பர்சனல். பட் அதுக்குள்ள நானும் ஓர் ஓரமா இருக்குறவ அப்படிங்கிற உரிமையில கேக்குறேன். நீ புதுசா தெரியுற? அதே மாதிரி உன் கண்ணுல வேற உணர்வுகள் எல்லாம் எனக்குத் தெரியுது. இன்னதுன்னு என்னால விளக்க முடியலை. ஆனாலும் அந்த உணர்வு சம்திங் டிபரெண்ட் தான். அது என்ன ஆதி?” என்றவள் “நர்மதா” என்ற அழைப்பில் வாயை மூடிக்கொண்டாள்.
இனி அவன் எதையும் பேச மாட்டானென அவளுக்கு தெரிந்ததால் எழுந்து “சரி நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
அங்கேயே அமர்ந்தவன் தனக்குள் குமிழியிட்ட அவ்வுணர்வுகளை ஆழ்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு விந்தையான உணர்வினைத் தந்தபடி இருந்தது. காதல் எனும் உணர்வா என்று அவன் உள்ளுக்குள் கேட்க அவனுக்குள் இருந்த மருத்துவன் ஆதியோ சும்மா எதையாவது நினைச்சு உளறிட்டு இருக்காம வேலையினைப் பார் என்று வசைபாட அவனும் ப்ச் என்று சலித்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
சில நாட்கள் கழிந்த நிலையில்
அன்று...
காலையில் எழும் போதே செல்விக்குத் தலை பாரமாக இருந்தது. தலையை தேய்த்துப் பிடித்துக் கொண்டு எழுந்தவள் முகத்தை அலம்பிக் கொண்டு கண்ணாடியின் அருகே வந்து நிற்க அதற்குப் பக்கத்தில் இருந்த காலண்டரை நோக்கி அவளிரு கண்கள் சென்றது.
கரங்கள் தேதியினைக் கிழிக்க அதில் தெரிந்த தேதியில் அவள் நெஞ்சம் பக்கென்று அடைத்துக் கொண்டது. இந்த நாள் வரக் கூடாதென்றே அவள் நினைத்தாலுங் கூட வந்து நிற்கும் அந்நாளின் அழுத்தம் அவளை இப்போது நிம்மதியாக இருக்க விடவில்லை. இனி எந்த வேலையும் செய்ய இயலாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
சுடலைப் பக்கம் இன்றொருநாள் சென்றுவிடக் கூடாதென்று அவள் உறுதியாய் முடிவெடுத்துக் கொண்டாள். ஆனால் அது அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடுமா என்ன..?
அவள் நினைத்த மாத்திரத்திலே அவளது போன் அலறியது. சுடுகாட்டுக்குப் போற வேலை வந்துடுச்சு என்று அவள் போனை எடுக்க அதைத்தான் எதிர்முனையும் சொன்னது.
“வர்றேன்” இவ்வாறு சொல்லிவிட்டு அவள் அங்கே கிளம்பினாள். தெருவில் இறங்கி அவள் நடக்க சிலரது விநோத பார்வைகள் எப்போதும் போல் அவள் மேல் விழுந்தது. அதையெல்லாம் அவள் எப்போதும் பெரியதாய் நினைத்ததே இல்லை. அதனால் நிமிர்ந்து கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தாள். உன்னதமான பணியினை செய்து கொண்டிருக்கிறோம் என்ற மனநிறைவே அவள் கம்பீரத்திற்கு காரணமாக இருந்தது. ஆனால் இந்த கம்பீரம் சற்று நேரத்தில் தவிடுபொடியாகி விடும் என்று அவளுக்குப் புரிந்துப் போனது. இருந்தாலும் அங்கே செல்லாமலும் இருக்க முடியாது அல்லவா..? ஆகையால் அவள் பாதங்கள் அவளுக்கான பாதையின் வழியே பரிதவிப்புடன் நடந்தபடியே இருந்தது.
கிட்டே நெருங்க நெருங்க ஒருவித பயம் அவளை ஆட்கொண்டு நெஞ்சை கவ்விப் பிடித்துக் கொள்ள எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நடந்தாள்.
உள்ளே நுழைந்தவளுக்கு சகலமும் மறந்து தான் செய்ய வேண்டிய வேலை மட்டுமே நினைவிலாட, விரைந்து அனைத்து வேலையையும் செய்து முடித்துவிட்டு அவள் நிமிர… அங்கே நின்றிருந்தது அந்த ஊரிலுள்ள ஈசன் டிரஸ்ட் நிறுவனர் சிவநாதன்.
“ஐயா நீங்க அதுக்குள்ள வந்துட்டீங்களா!” என்று அவள் அவசரமாய் கேட்க “ஆமாம்மா செல்வி. எப்படி இருக்க?…” என்றார் அவர்.
“சொந்த பந்தத்தோட ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஐயா” என்று அவள் சுற்றிலும் பார்வையை வீசியபடி சொல்ல அவர் இளநகையை சிந்தியபடி “அதுசரி உனக்கு உண்மையிலே இவங்கதான் சொந்தக்காரங்க. அதிருக்கட்டும், நான் சொன்ன அந்த விசயம் என்னாச்சு?” என்று அவளிடம் கேட்க அவளோ “மறுத்துப் பேசுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஐயா.. எனக்கு கல்யாணம், குழந்தை இதுல எல்லாம் நாட்டம் இருந்ததே இல்லை. தெரிஞ்சுட்டே இந்த கேள்வியே கேக்கலாமா ஐயா?” என்றாள்.
“இல்லை செல்வி. உனக்குன்னு ஒரு துணை வேண்டும்”
“அந்த துணை எனக்கிருக்கு ஐயா”
“இப்படிப் பேசாத செல்வின்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லியிருக்கேன்”
“நானும் அத்தனை தடவை இதுக்கான பதிலை சொல்லிட்டேன் ஐயா. உங்க மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. அம்மா இல்லாத நாள்ல இருந்து, அந்த இடத்துல நீங்க நின்னு என்னை ரொம்ப அக்கறையா அன்பா பார்த்துருக்கீங்க. இருந்தும் இந்த விசயத்துல என்னால உங்க பேச்சை கேட்க முடியலையே ஐயா. என்னை மன்னிச்சுடுங்க”
“அதில்லை செல்வி. கல்யாணம் அப்படிங்கிறது…”
“எங்க அம்மாவை சாகடிச்ச மாதிரி என்னையும் சாகடிச்சுடும். அவ்வளவுதான் இல்லையா ஐயா…” அப்பாவியாய் வினவியவளின் விழிகளில் என்ன முயன்றும் ஈரம் படர்ந்து அவளை பலவீனமாய் அந்த இடத்தில் காட்டிவிட்டது.
“சரி செல்வி. ஒரு நாள் உனக்கே இந்த உண்மை புரியும். அப்போ நீயும் மனசு மாறி உனக்குன்னு துணையை தேடிக்குவ.. எனக்கு அப்படித்தான் தோணுது”
“எனக்குத் தோணலை” என்று அவள் தோளைக் குலுக்கவும் அங்கே சங்கு சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது.
செல்வியோ “வந்துட்டாங்க நான் போய் அடுத்த வேலையை பார்க்குறேன் ஐயா” என்றே நகர முற்பட.
“சரி மா. ஆனா இந்த கிழவன் சொல்லுறதையும் நீ மனசுல வச்சுக்கோ” என்றவரின் வார்த்தைகள் மீண்டும் நிற்க வைக்க அவளது இதழ்களோ “நான் சொன்னதை நீங்களும் மனசுல வச்சுக்கோங்க ஐயா… இனிமேல் இதைப் பத்தி பேச வேண்டாம். எனக்கு கடைசி வரைக்கும் இந்த சுடுகாடே போதும். கல்யாணத்தைப் பண்ணிட்டு பொண்ணுங்களும் சரி, பசங்களும் சரி அனுபவிக்கிற டார்ச்சர் எல்லாம் நான் பார்த்தபிறகும் அதே பாழுங்கிணத்துல போய் விழுவேனா… எனக்கெதுவும் வேண்டாம். இதுவே போதும். இங்கிருப்பதுதான் எனக்கு உண்மையான சந்தோசம். இதை விட்டு யாருமே இல்லாத, யாருமே நம்மளைப் புரிஞ்சுக்காத ஒரு கட்டமைப்புக்குள்ள காலம் முழுக்க என்னை அடைச்சுட்டு என்னால வாழ முடியாது…” என்றவாறு முணுமுணுத்தது.
“ஆனா உன்னால வேற யாருக்காவது சந்தோசம் கிடைக்கும்னா அப்பவும் இப்படித்தான் பேசுவயா” என்க இப்போது சங்குச் சத்தம் வெகு அருகே கேட்டது.
“ஐயா கிட்ட வந்துட்டாங்க” என்று அவள் சொல்லிவிட்டு அங்கே சென்று விட்டாள். செல்லும் அவளின் வாழ்வினை குறித்த கவலையில் சிவநாதன் ஆழ்ந்து விட்டார்.
ஆனால் செல்வி அந்த கவலையெதுவும் இல்லாது பிணத்தினை தகன மேடை அருகே இறக்கி வைத்துவிட்டு அவர்கள் செய்ய வேண்டிய சடங்கினை சொல்லத் தொடங்கினாள். அதிலொருவன் மட்டும் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒருவித உதாசீனத்தோடு கலந்த உணர்வொன்று தென்பட்டது. நிமிர்ந்து பார்த்த அவளும் அவனைக் கண்டுக் கொண்டாள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலை அவளுக்கு என்றும் இருந்ததே இல்லை. அவள் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள். இப்போது மட்டுமல்ல எப்பொழுதும் அவள் இப்படித்தான்.
அப்போது சிவநாதன் அருகே வந்து “ஆபரேசன் செய்த உடம்பு மா கொஞ்சம் சீக்கிரம்” என்று சொல்ல அவளும் வேகமாய் சடங்குகளை உறவினர்களைக் கொண்டு செய்ய வைத்தாள்.
அந்த மனிதர் இறந்தும் இவ்வுலகத்தினை விட்டு பிரிய மனமில்லாது தன் கண்களைத் தானமாக கொடுத்திருந்தார். அதனால் தான் அவர் இறந்ததும் சிவநாதனே அனைத்தையும் செய்து முடித்துவிட்டு கண்களையும் முறைப்படி ஒப்படைத்துவிட்டு இப்போது அவருக்கான இறுதி மரியாதை செய்யவும் வந்துவிட்டார். இதனாலே அவருக்குச் சடங்கு செய்வதில் செல்விக்கு பரம ஆனந்தம். தன் நலனே பெரிதென இருக்கும் இப்பூமியில் மற்றவருக்காக யோசித்து செயல்பட்ட இந்த முதியவரின் ஆன்மா நிச்சயம் சிவனடி சேர்ந்துவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. என்றவாறு அவள் நினைத்துக் கொண்டே அனைத்தையும் தயாராக எடுத்து வைத்தாள்.
கட்டைகளை அடுக்கி வைத்தவள் அருகில் இருந்தோர்களின் உதவியால் பிணத்தினை தூக்கி வைத்துவிட்டு அதன்மேல் வறட்டியினை அடுக்கத் தொடங்கினாள். “முகத்தைப் பார்க்குறவங்க பார்த்துக்கோங்க மூடிட்டா பார்க்க முடியாது” என்று அவள் சொல்ல அவன் அவளுருகே இடிப்பது போல் வந்து நின்று உற்றுப் பார்த்தான். ஆனால் அது அப்பிணத்தினை அல்ல.
அந்த நேரத்தில் அது அசௌகரியமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் எதிர்த்து நிற்க முடியவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் விட்டுவிட்டு தன்னை நம்பி வந்த அந்த தேகத்திற்கான மரியாதையினை செலுத்தத் தொடங்கிவிட்டாள்.
சிதையும் பற்றியெறியத் தொடங்கியது. மெதுவாய் அங்கிருந்தோர் களையத் தொடங்க அவள் மட்டும் அங்கேயே இருந்து எரிந்துக் கொண்டிருக்கும் அந்த சிதையினையே பார்த்தாள்.
அவளுக்கு நினைவுகள் வேகமாய் பின்னோக்கி ஓடியது. எட்டு வயது ஞாபகங்கள் அவள் நினைவில் வந்து சதிராட்டம் ஆடத்தொடங்கிவிட்டது.
மறந்துவிடு மனமே மறந்துவிடு மனமே என்று அவளுக்கு அவளே கடிவாளமிட்டு தன்னை நிலைநிறுத்த மிகவும் போராடினாள். இருந்தும் அந்த நெருப்பு சத்தத்துடன் பற்றியெறியும் போதெல்லாம் அந்த சத்தத்தோடு செல்வி ஆ….ஆ… என்று அவள் அன்னை கதறும் அந்த நாளின் கொடூரமும் கேட்கத் தொடங்கியது.
‘அம்மா அம்மா” என்று அவள் கதற அவள் விழியில் நீர் கசிந்து கண்ணைத் தாண்டி வழியத் தொடங்கிவிட்டது. ‘அம்மா அம்மா’ என்று அவள் பிதற்ற அன்னை கருகி விழுந்தது அவளை இன்னும் இறுகச் செய்தது.
கொடிய தீயின் கோரநாக்குள் அவள் அன்னையின் உடலை ஒட்டு மொத்தமாக சிதைத்து போட்டிருக்க…. அந்த வயதில் அது அவள் பார்க்க வேண்டிய காட்சியே இல்லை. இருந்தும் அவள் விதி, அவள் அதைப் பார்க்கும் படியாகிவிட்டது. கண்ணெதிரே நடந்த தாயின் கொடூர மரணம் அவளை இதுவரை வேறொன்றிலும் ஒன்ற விடாது தனிமையில் வளர வைத்துவிட்டது.
இப்போது இந்த நிலையில் இருப்பவளுக்கு இங்கே புதைத்திருக்கும் உடல்கள் மட்டுமே உறவு. அதனாலயே அதிகமாய் இங்கேதான் இருக்க விரும்புவாள். இதை விட்டு வெளியேறிவிடக் கூடாதென்பதாலேயே அவள் கல்யாணம்,குழந்தை இதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. ஆனால் அந்த கனவு… அதை நினைத்தவுடன்… படக்கென்று எதுவோ எழுந்தமரும் சப்தம் கேட்டு அவள் அங்கே பார்த்தாள்.
கல்லறையிலிருந்து உருவாகிடுமோ கருவறை?

