
மது கூறிய வார்த்தைகளை கேட்டு ஒரு நொடி அரண்டுப் போனாள் சைத்ரா.
“எல்லாம் உனக்காக தான பண்ணியிருக்கான். அவனை உன்னால புருஞ்சுக்க முடியலைனா என்ன அர்த்தம் மது?”
“நான் சொன்னது உனக்கு தான் புரியலை. ரகுவை என்னால புருஞ்சுக்க முடியாது. ஆனால் என் நந்தாவை என்னால புருஞ்சுக்க முடியும்.” என்று கூறும்போதே அவளது இமை தாண்டி கண்ணீர் உருண்டு திரண்டு கீழே விழுந்தது.
“மது..?” சைத்ரா அதிர்ச்சியுடன் அவளை ஏறிட்டாள்.
“எஸ் ஐ லவ் ஹிம். அவங்கிட்ட மயங்கக்கூடாதுனு என்னை நானே எத்தனை முறை கன்ட்ரோல் பண்ணியிருப்பேன் தெரியுமா? அவனோட பேசக் கூடாது. அவனை பார்க்கக் கூடாதுனு என் மனசுக்குள்ள போராட்டமே நடக்கும். அதையும் மீறி பேசுவேன். சண்டை போட்டாலும் அவனோட சண்டை போட பிடிக்கும். அவன் கண்ணு இருக்கே அய்யோ அப்பா… அப்படியே உள் மனசுக்குள்ள ஊடுருவி போற மாதிரி இருக்கும் அவனோட பார்வை. நான் திட்டுனாலும் சிரிப்பான். நான் திமிரா பேசுனாலும் ரசிப்பான். இப்படிபட்ட ஒருத்தனை யாருக்காவது பிடிக்காமல் போகுமா? உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பர்த்டே சர்பிரைஸ்ல நான் மொத்தமா விழுந்துட்டேன். அவனை பார்த்ததும் என்னையும் மீறி அவனுக்கு முத்தம் கொடுத்தேன்.” என்றவள் இடை நிறுத்தி அந்த முத்தத்தை எண்ணி பார்த்து கண்ணீர் வடித்தாள்.
“அந்த முத்தத்துல அவனுக்கு என் காதல் தெரியலையா? தெரிஞ்சு இருந்தா இப்போ என்னை விட்டு போயிருப்பானா? எஸ், நான் ஒத்துக்கிறேன். அவங்கிட்ட தோத்துட்டேன், அந்த கோபத்துல ரொம்ப தப்பா பேசிட்டேன். அதுக்கு என்னை அவன் நாலு அறை அறைஞ்சிருக்கலாம். ஏன் போனான். அடுத்த நாள் அவனை மட்டும் தான் தேடுனேன். அந்தநொடி அவனை ஏன் விலக்கி வைக்கணும். அவனோட வாழ்ந்து பாருனு என் மனசு சொல்லுச்சு.”
“மது, என்ன சொல்ற?”
“ஆமா நேத்தே முடிவு பண்ணிட்டேன். என் நந்தாவோட வாழணும்னு. அவனுக்கு குடிக்க பிடிக்காது. ஆனால் குடிச்சிட்டு வந்தான். எல்லாம் எதுனால, என்னால தான். ஆனால் கெட்டதுலயும் ஒரு நல்ல விசயமா அவன் காதலை அவ்ளோ அழகா எடுத்து சொன்னான். அவனோட நெருக்கம், அவனோட அணைப்பு அவனோட அன்பு இது எல்லாமே எனக்கு கிடைச்ச வரமா நேத்து உணர்ந்தேன். அவ்வளவு சந்தோசமா எழுந்து வந்து காஃபி எல்லாம் கொடுத்தேன். ஆனால் அவன் என்னை விட்டு போறேனு போயிட்டான். எனக்கு எவ்வளவு வலிக்கும்னு நந்தா யோசிக்கவே இல்லை தானே?” என்றவள் உதடு மடித்து அழ சைத்ராவும் கலங்கிப் போனாள்.
இது தானே அவனும் ஆசைப்பட்டான் அவன் நினைத்தது போல மதுவின் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது ரகு அல்ல நந்தா மட்டுமே. ‘ரகு இந்த நேரம் நீ இல்லாம போயிட்டியேடா. நீ ஜெய்ச்சுட்ட… உன் லவ் ஜெய்ச்சிடுச்சு.’ என்று மானசீகமாக சைத்ரா கண்ணீரை வடித்தாள்.
“மது, இப்பவும் ஒண்ணுமில்லை. நம்ம ரகுகிட்ட சாரி நந்தாகிட்ட பேசுவோம். அவன் ரொம்ப சந்தோசப்படுவான்.”
“நந்தாவோட அன்புக்கு நான் தகுதியானவளே இல்ல சைத்து. எத்தனை முறை அவனை காயப்படுத்தியிருக்கேன். இப்போ எந்த மூஞ்சியை வெச்சுட்டு அவனை பார்ப்பேன்.”
“பைத்தியம் மாதிரி பேசாத மது. நந்தாவோட உயிரே நீ தான். உனக்கே தெரியாம ஒவ்வொரு முறையும் உன்னை காப்பாத்தியிருக்கான். உன்னை மட்டுமே அளவு கடந்து நேசிக்குறான். இந்த லூசு முன்னாடியே எங்கிட்ட சொல்லியிருந்தா அப்போவே அவனோட காதலை உங்கிட்ட சொல்லியிருப்பேன். கல்யாணம் நடக்கயிருந்த இரண்டு நாள் முன்னாடி வந்து சொல்லி சத்தியம் வேற வாங்கிட்டான் பாவி. இப்படி தன் குடும்பத்தையே விட்டு அவன் உனக்காக வந்திருக்கான்னா, உன் மேல அவனுக்கு எவ்வளவு அன்பு இருக்கும்? கொஞ்சம் யோசிச்சு பாரு மது.”
“அவன் அன்பு புரியாம தான் இப்போ நான் பேசுறேனு நினைக்குறியா?”
“புரிஞ்சும் ஏன் மது ஒதுங்கிப் போற?”
“ஒதுங்கி போக நினைக்கலை. நான் அடுத்துப் பண்ண போற விசயத்தை பார்த்தா உனக்கே புரியும். இப்போ என்னை தனியா விடு சைத்து.” என்றவள் கூறியதும், சைத்ரா அங்கிருந்து செல்ல முயல, “சைத்து, இப்போ பேசுனது நமக்குள்ள மட்டும் இருக்கும்னு நம்புறேன்.” என்றவள் தீர்க்கமாக பார்க்க சைத்ராவோ வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
“நல்லா வருவடி மது. அவனும் சரியா தான் இருக்கான். நீயும் சரியா தான் இருக்க.” என்று கூறிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்றதும் இருவரது திருமண புகைப்படத்தையே வெறித்துப் பார்த்தவள், தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுத்திருந்தாள்.
***
“ரகுநந்தன்” என்ற பெயரை ரகுவரன் கூறும் போதே அவன் சினம் அதிகரித்திருந்தது.
“உன்னோட காலேஜ்மெட் தானே? அவனோட போட்டோ கூட உங்கிட்ட இருக்குமே?”
“அவனே தான். அவன் போட்டோவை வெச்சிருக்க காரணமே அவனைவிட நான் வாழ்க்கையில முன்னேறி காட்டணுங்குற வெறியில தான்.” என்றவனின் பார்வை அவனுக்கு எதிரே இருந்த புகைப்படத்தின் மீது பதிந்து மீண்டது.
“அவன் என்னடா பண்ணான்?”
“அவன் என்ன தான்டா பண்ணலை. அவன் எங்க இருந்தாலும் என் வாழ்க்கையில தான் வந்து மூக்கை நுழைக்கிறான். இந்த முறை நான் காதலிச்ச பொண்ணை இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அந்த கோபத்துல தான் திரும்பவும் கோயமுத்தூர் வந்தேன். அவனை பழி வாங்கணும் அதுக்கு வருணியை பறிக்கணும்னு நினைச்சேன். ஆனால் அவ என்னை அசிங்கமா பேசிட்டு போயிட்டடா. அது கூட ஒத்துப்பேன் ஆனால் அவ என் புருசன்னு அவனை என்கிட்டயே உசத்தி பேசுனா பாரு. சுள்ளுனு வருதுடா கோபம்.” என்றவன் அங்கிருந்த கண்ணாடி ஜாடியை தூக்கிப் போட்டு உடைக்க சந்துரு தான் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.
“டேய் ஏன்டா, எவனோ எப்படியோ போகட்டும். நீ ஏன்டா கோபப்படுற?”
“உனக்கு தெரியாதுடா. என் பேர் மாதிரியே வெச்சிருக்க ரகுநந்தனால நான் ரொம்ப பட்டுட்டேன். அவன் எப்படி சந்தோசமா இருக்கலாம்? எல்லாம் திமிரு. பணமிருக்க திமிரு.” என்றவனுக்கோ கோபம் தலைக்கேறியது.
“அப்படி என்ன தான்டா உனக்கு அவன் பண்ணான்?”
“அவன் என்ன தான் பண்ணலை.” என்றவனின் சிவந்த விழிகள் அன்றைய நாட்களை எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.
ரகுவரனும், ரகுநந்தனும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். பெயரில் ஒற்றுமை இருக்கும் அளவிற்கு இருவருக்குள்ளும் எவ்வித ஒற்றுமையும் இருந்தது இல்லை. ரகுநந்தன் தன் கலகலப்பான பேச்சில் அனைவரையும் ஈர்ப்பான் என்றால் இவனுக்கோ பணம் இருப்பதால் அவனோடு அனைவரும் பழகுகின்றனர் என்ற எண்ணமே நிரம்பியிருந்தது.
தந்தையை இழந்த ரகுவரன் அயராது படித்து ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் உதவியாலுமே, ஸ்பான்சர்ஷிப்பினால் மட்டுமே தன் கல்லூரி படிப்பினைத் தொடர்ந்தான். கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்தவன் ஒரு ஆட்டத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்த நாள் ஆட்டத்தில் கேப்டன் பொறுப்பு ரகுநந்தனுக்கு வழங்கப்பட்டது. அன்று தொடங்கிய பனிப்போர் மெல்ல அதிகரித்துக் கொண்டே சென்றது ரகுவரனது மனதில்.
அதை உணர்ந்துக்கொண்ட நந்தாவும் அவனுக்கே கேப்டன் பதவியைக் கொடுக்க, அவன் விட்டுக் கொடுத்து தான் வாழ வேண்டுமா? என்று யோசித்தவன் நிராகரித்தும் இருந்தான்.
இதற்கிடையில் நண்பர்களுடன் சேர்ந்து இன்டர்னல் பேப்பரை திருடியிருந்தான் ரகுவரன். அன்று கையும் களவுமாக அவன் மாட்ட வேண்டிய சூழலில் அவனை காப்பாற்றியது என்னவோ நந்தன் தான். முதல்முறையாக அவனைக் கண்டு புன்னகைத்தான் ரகுவரன்.
“தாங்க்ஸ்.” என்றவனை கண்டு பதில் புன்னகை புரிந்த நந்தாவோ, “இனிமே இப்படி பண்ணாத. எனக்கு உன்மேல நிறையவே கான்பிடென்ஸ் இருக்கு மச்சான்.” என்றவன் அவனை உரிமையாக அழைக்க, அவனோ அவனை முறைக்க,
“அப்படி கூப்பிடறது பிடிக்கலைனா சொல்லு. மாத்திக்கிறேன் மச்சி.” என்றவன் கூறிய விதத்தில் இணக்கமான புன்னகை ஒன்றை உதிர்த்து அவனது நட்பை ஏற்றுக் கொண்டான் ரகுவரன்.
அதன்பின் வந்த நாட்களில் இருவருக்கிடையில் நட்பு உருவாகியிருந்தது. மிக நெருக்கமான நட்பாக இல்லாமல் இருந்தாலும் முன்பு இருந்ததைக் காட்டிலும் நல்ல நட்பாக மாறியிருந்தது.
இந்நிலையில் தான் ரகுவரன் மற்றும் ரகுநந்தன் இருவரது பெயரும் அடுத்தடுத்து வருவதால் பிராஜெக்டில் இருவருமே சேர்ந்து செய்யும் நிலை உருவானது.
“ரகு…” என்று அழைக்கும் போது எல்லாம் இவன் திரும்ப, ஆனால் அழைப்பு என்னவோ ரகுநந்தனுக்காகிப் போனது. அனைவரும் ரகுநந்தனிடமே பேச, அவன் பணக்காரன் என்னும் தாழ்வு மனப்பான்மையை மனதளவில் உருவாக்கத் தொடங்கியிருந்தான் ரகுவரன்.
இந்நிலையில் அவனுடன் பயிலும் சுவாதி என்பவளது பார்வை தன் மீது பதிவதை உணர்ந்தான் ரகுவரன்.
இருவரும் பிராஜெக்டிற்காக லைப்ரரி என்று ஒவ்வொரு இடமும் சேர்ந்தே செல்ல, எங்கு போனாலும் சுவாதி அவனை பின் தொடர்ந்தாள்.
அவ்வயதில் அவனுக்கு அந்த உணர்வு மிகவும் பிடித்திருந்தது. தான் தேடிச் சென்று காதலிப்பதைக் காட்டிலும் தன்னை ஒருத்தி காதலிக்கிறாள் என்ற உணர்வு அவனை கர்வப்படுத்தியது.
அப்படி ஒரு நாள் நூலகத்தில் ரகுவரனும், நந்தாவும் தீவிரமாக பிராஜெக்ட்டிற்கு தேவையான தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தனர்.
“ரகுவரன், ரொம்ப தூக்கமா வருதுடா. மீதி நாளைக்கு பார்த்துக்கலாம்.”
“பட்டபகல்ல தூக்கமா? நீ பணக்கார வீட்டு பையன்டா உனக்கு இந்த பிராஜெக்ட் எல்லாம் பெருசா தெரியாது. ஆனால் எனக்கு இதுதான் எல்லாமே. இதுல நம்ம வின் பண்ணோம் நேரடியா என்னை ஹையர் பண்ணிப்பாங்க.”
“போதும் போதும்டா இந்த பணக்கார வீட்டு பையன் கதையை மட்டும் இழுக்காம இருக்க மாட்டியே. உனக்கென்ன இப்போ பார்க்கணும் அவ்வளவு தானே. வா பார்ப்போம்.” என்றவன் தீவிரமாக தேட, எதேச்சையாக திரும்பிய ரகுவரனது கண்களில் பட்டாள் சுவாதி.
அந்த நொடி அவனது வேகம் குறைய, அவளையே திரும்பி பார்க்கத் தொடங்கினான் ரகுவரன்.
“டேய், இது ஓகேவா பாரு.” என்று ரகுநந்தன் அவனிடம் கேட்க, அவன் கவனம் அங்கு இருந்தால் தானே.
“இவ்ளோ நேரம் நம்மளை சொல்லிட்டு இவன் எங்க வேடிக்கை பார்க்குறான்?” என்றவன் அவன் பார்வை செல்லும் இடத்தைக் கண்டு திகைத்துப் போய் பார்த்தான்.
“நீ நடத்து ராசா.” என்றவன் கேலி செய்ய, ரகுவரனது முகத்திலோ வெட்க புன்னகை உருவானது.
நாட்கள் நகர, சுவாதியிடம் பேச முயற்சி செய்த ரகுவரனுக்கு தயக்கமே தடையாகிப் போனது. அப்போது எல்லாம் பெண்களிடம் பேசுவது என்பது அவனுக்கு இயலாத ஒன்றாகத் தான் இருந்தது.
இந்நிலையில் அவளாகவே அவனிடம் பேச வந்தாள். “ஹாய்.” அவளது அழைப்பில் நிமிர்ந்தவன் தட்டுத்தடுமாறி “ஹாய்” என்று பதில் அளித்தான்.
“நீங்க பேசுவீங்கனு நினைச்சேன். ஆனால் பேசவே இல்லை.”
“இல்லை திடீருனு எப்படி வந்து பேச?”
“அது சரி. பொண்ணு நானே பேசுறேன்ல அப்புறம் என்ன?”
“அதுவும் சரி தான். இனி பேசுறேன்.” என்றவன் புன்னகைக்க,
“நீங்க செமையா விளையாடுறீங்க?” என்று அவனை பெருமையாக பேசினாள் சுவாதி. அதன்பின் இருவருக்குள்ளும் காதல் மலர, முதல் முறையாக அவளை அழைத்துக் கொண்டு தன் இல்லத்திற்கு வந்திருந்தான்.
அவனது ஓட்டு வீட்டைக் கண்டதும் அவள் முகம் நொடியில் மாறியது.
“உள்ள வா சுவாதி.” என்றவன் அவளிடம் வெகு இயல்பாக தன் கதைகளை கூற, அதைக் கேட்டவள் முகம் சுழித்தாள். அடுத்த நாளிலிருந்தே அவளது பேச்சுக்கள் குறைந்துப் போனது. அவனே அவளைத் தேடி சென்றான்.
“சுவாதி, இப்போ எல்லாம் ஏன் சரியா பேச மாட்டிங்குற? எதாவது பிரச்சனையா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. என் படிப்புல கவனம் குறையுது. கொஞ்ச நாள் என்ன தொந்தரவு பண்ணாதீங்க” என்றவள் நகர்ந்து செல்ல, அவளுக்காக தள்ளியே இருந்தான் ரகுவரன்.
இந்நிலையில் தான் சுவாதியும் அவளது தோழியும் பேசிக் கொண்டனர். “என்னடி, உன் ஆளோட பேசுறது இல்லை போல.”
“அத ஏன் கேட்கிற. அவன் நான் நினைச்ச மாதிரி இல்லை. பார்க்க ஸ்மார்ட்டா இருக்கானே. வசதியானவனா இருப்பான்னு நினைச்சேன். பார்த்தா பிச்சக்காரனால இருக்கான்.”
“இதுக்கு தான் அவன் பின்னாடி அவ்ளோ நாள் சுத்தினியா? அவன் பின்னாடி சுத்துனதுக்கு ரகுநந்தனை கரெக்ட் பண்ணியிருக்கலாம். நல்லா வசதியானவன் நீ எதிர்பார்க்குற மாதிரி சிறப்பா வாழ்ந்திருக்கலாம்.” என்று அவள் கூற,
“நான் ஃபர்ஸ்ட் ட்ரை பண்ணது ரகுநந்தன தான். அவன் என்னை கண்டுக்கவே இல்லடி. சரி கண்டுக்கிட்ட இவனும் அழகா இருக்கானே. வசதியா இருப்பான்னு நினைச்சா இவன் ரொம்ப மோசமான நிலைமையில இருக்கான். என்னால அந்த ஓட்டு வீட்ல எல்லாம் வாழ முடியுமா சொல்லு?” என்று சுவாதி கூற அவளது தோழியோ அவளை திரும்பி பார்க்குமாறு கண்ஜாடை புரிய, திரும்பி பார்த்தவள் முகமோ அதிர்ந்து போனது.
அவளைக் காண வந்த ரகுவரன் அனைத்தையும் கேட்டு உறைந்துப் போனான். ஏற்கனவே அன்னை செய்த செயலில் பெண்கள் சிலரின் மீது வெறுப்பு இருந்திருக்க, சுவாதியும் அவளது தோழியும் பேசிய பேச்சு பெண்களை முற்றும் முழுவதுமாக வெறுக்க வைத்தது.
பணத்திற்கு இருந்த மதிப்பு கூட தன் உண்மையான காதலுக்கு இல்லாமல் போயிருக்க, காதல் என்ற வார்த்தையே வேஷமாகிப் போனது அவனுக்கு. அந்நொடி அவளை அவன் எதிர்த்து கேள்வி கேட்க அவளும் பதிலுக்கு பதில் பேசினாள்.
“வாழ பணம் கூட இல்லை நீ எல்லாம் எப்படி என்ன வெச்சு பார்த்துப்ப? ஒரு வேளை சாப்பாடு கூட உன்னால போட முடியாதுடா. உனக்கு எல்லாம் லவ் ஒரு கேடு.” என்றவள் காரி உமிழ, அவனது கரம் அவளது கன்னத்தில் இடியாய் இறங்கியிருந்தது.
அவளை அடித்த செய்தி காட்டு தீ போல பரவ, இரண்டு வாரத்திற்கு அவனுக்கு காரணம் கேட்காமல் கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட, அந்நொடி தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டான். அவனது நண்பர்களும் அவனை ஏற்றி விட்டனர்.
ரகுநந்தன் நினைத்திருந்தால் சஸ்பென்ஷனை தடுத்திருக்கலாம் என்றெல்லாம் கூற மேலும் அவனுக்கு கோபம் உருவானது. அவன் விட்டு சென்ற பிராஜெக்டை முடிக்கும் கட்டத்தில் இருந்தான் ரகுநந்தன்.
இத்தனை நாள் உழைத்த உழைப்பினை பிராஜெக்ட் வடிவில் காட்டும் நாளும் வந்தது. சஸ்பென்ஷன் முடிந்து மிக வேகமாக கல்லூரியை நோக்கி வந்துக் கொண்டிருந்தான் ரகுவரன். மல்டி நேஷனல் கம்பெனிகளின் முக்கிய புள்ளிகள் என அனைவரும் வந்திருக்க, சிறப்பாக பிரசென்டேஷன் புரிபவர்கள் நேரடியாகவே தங்களது நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆதலால் தான் அத்தனை அவசரமாக வந்துக் கொண்டிருந்தான் ரகுவரன்.
வரும் வழியில் சிறு விபத்து அவனுக்கு உண்டாகியிருக்க, அவனுக்காக காத்திருந்த ரகுநந்தனோ பிராஜெக்டை விளக்கிக் கூறத் தொடங்கியிருந்தான். ரகுவரன் கல்லூரியை அடையும் போது, ரகுநந்தனை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்க, தான் அத்தனை உழைப்பு கொட்டியும் பாராட்டு மட்டும் அவனுக்கா? என்று சிந்தித்தவன் அவனை அந்நொடி வெறுத்தான்.
தனக்கு கிடைக்க வேண்டிய வேலை அவனுக்கு கிடைக்க, அந்நொடி அவ்விடம் நிற்க பிடிக்காது சென்றுவிட்டான் ரகுவரன்.
“துரோகி அந்த பாராட்டு எனக்கானது. நீ பணக்காரனா இருக்குறதுனால தான திமிர்ல ஆடுற. உன்னைவிட நான் வளர்ந்து காட்றேன்டா.” என்று அந்த நொடி உறுதி எடுத்துக் கொண்டவன் அவனது புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் உத்வேகம் கொண்டான்.
சுவாதியின் நிகழ்வுக்கு பின் பெண்கள் என்றாலே அறவே வெறுத்தவன் பெண்களின் உணர்வுகளோடு விளையாடத் தொடங்கியிருந்தான். அவனும் எதிர்பார்க்காத ஒன்று அவன் காதல் என்னும் பெயரில் ஏமாற்ற நினைத்த மதுவர்ணிகாவின் உண்மையான நேசம் அவனை வியப்புக்குள்ளாக்கியது. அந்நொடி அவன் உணரும் முன் தாரிகாவால் காவல் நிலையத்திற்கு சென்றவன், அதன் பின் மும்பைக்கு சென்று விட, இங்கு மதுவோ அவனது எதிரியும் நண்பனுமான ரகுநந்தனை மணந்திருந்தாள்.
தான் காதலித்தவளை பறித்துவிட்டானே என்ற கோபத்தில் தான் மீண்டும் இவ்விடம் வந்திருந்தான் ரகுவரன். அன்றைய நாட்களை நினைத்தவன் பற்களைக் கடிக்க, அவன் குடித்த போதை அனைத்தும் முற்றிலும் இறங்கிப் போனது.
“எனக்கு கோபமா வருதுடா. இந்த ரகுநந்தன் என் வாழ்க்கையில மீண்டும் மீண்டும் வந்துகிட்டே இருக்கான்.”
“டேய், இது எல்லாம் ஒரு விசயமா எடுத்து உன் வாழ்க்கையை தொலைச்சுக்காத மச்சான். மானசா நினைச்சிருந்தா உன் குழந்தையை அழிச்சிருக்கலாம். ஆனால் அவ அப்படி பண்ணலை. எந்த அளவுக்கு அவளுக்கு உன் மேல லவ் இருந்தா அவ அப்படி பண்ணாம இருந்திருப்பா யோசிடா?” சந்துரு கூறுவதும் சரியாகவே பட்டது.
“நீ என்னடா சொல்ல வர?”
“எல்லா பொண்ணுங்களும் கெட்டவங்க இல்லைடா. உன் வாழ்க்கையில நீ சந்திச்ச ஒரு சிலரை பார்த்து, இனி வரப் போற வாழ்க்கையை கெடுத்துக்காத மச்சான். இப்போ நீ இந்தளவு வளர்ந்திருக்க காரணம் ரகுநந்தன் தான். அது உனக்கு புரியுதா? அவனை விட பெரியாளாகணும்னு நீ போட்ட எஃபோர்ட்ல தான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க. போதும் இனி மானசாவோட வாழ்ற வழிய பாரு மச்சான். இல்லை உன்ன மாதிரி அந்த குழந்தையும் மாறிட போகுது.” என்றவனின் வார்த்தை அவனை யோசிக்க வைத்தது.
“கிளம்பு மச்சான்.” என்றவன் கூற,
“எங்கடா?”
“மும்பைக்கு.” அவன் கூறியதும் சந்துருவின் முகத்தில் புன்னகை உதிர்த்தது.
“இனி அந்த ரகுநந்தன் என் கண்ணுல மட்டும் படக்கூடாதுனு வேண்டிக்கோ.” என்று கூறவும் அவன் தவறவில்லை.
ஆனால் விதியின் சதி நந்தாவும், கேணியும் மும்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

