
அத்தியாயம் 23
“என்னமா உன்னோட வீட்டுக்காரன் ஆஃபிஸ்ல இருந்து வந்துட்டானா?” என ராஜா வினவ, “இன்னும் இல்ல மாமா!” என்றபடியே துவைத்திருந்த துணிகளை மடித்து வைத்தாள் ஆசைக்கனி.
அருகே கைப்பேசி ஒலிபெருக்கியில் இருந்தது.
“மணி பத்தாகப் போகுதே?”
“இன்னைக்கு வர லேட்டாகும்னு, ஃபோன் போட்டுச் சொன்னாரு மாமா.”
“அதுசரி! காலையில ஒன்பது மணிக்கு முன்னாடியே கிளம்பிப் போயிடுறான். ராத்திரியும் இவ்வளவு லேட்டா வந்தா, எப்பதான் உன்கூட இருக்கிறதாம்.?”
இவள் பதில் உரைக்காமல் மெலிதான பெருமூச்சு விட, “என்னம்மா மருமகளே பேசாம இருக்க?”
“என்ன மாமா பேசுறது? நல்லபடியா வசதி வாய்ப்போட வாழணும்னா ராத்திரி பகல்னு பார்க்காம உழைச்சு தான் ஆகணும்?”
“ஆமா! இப்ப உழைச்சு பணம் காசை சேர்த்து வச்சிட்டு, காலம் போன கடைசியில உன்கூட இருக்கப் போறானா? அந்த வயசுல உட்கார்ந்து கதை வேணும்னா பேசலாம்! அனுபவிக்க வேற என்ன இருக்கும்.?”
சின்னதாய்ச் சிரித்தவள், “இதை அப்படியே உங்க மகன்கிட்ட செல்ல வேண்டியது தான மாமா.?”
“அட நீ வேறம்மா! அப்புறம் அவனுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு ஆகிப்போகும்! இப்ப ஏதோ பேருக்குனு பேசுறோம். அப்படி ஒன்னு நடந்தா, இந்த பேச்சு வார்த்தைக் கூட இல்லாம போயிடும்!”
“அப்புறம் என்ன, விடுங்க! அதுவும் இல்லாம உங்க மகன் சொல்லு பேச்சு கேக்கிற ஆள் எல்லாம் இல்ல!”
“உனக்கும் தெரிஞ்சிடுச்சா, அவனைப் பத்தி?”
“அதெல்லாம் கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே அவரைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டேன் மாமா.”
“ம்ம்.. என்னோட மருமகதான் புத்திசாலி ஆச்சே?”
“போதும் போதும், எனக்கு நீங்க ஐஸ் வச்சது!”
“கனிம்மா, மாமா நிஜமா தாண்டா சொல்லுறேன். உனக்கு ஐஸ் வச்சு, எனக்கு என்ன வேலை ஆகப்போகுது?”
“நானும், சும்மா தான் மாமா சொன்னேன்.”
“சரிம்மா, அம்மா அப்பாக்கிட்டப் பேசுனியா?”
“ம்ம்.. சாயங்காலம் பேசுனேன் மாமா.”
“என்ன சொன்னாங்க?”
“புதுசா ஒன்னும் இல்ல. என்ன குழம்பு, என்ன காய்? நல்லா சாப்பிடு, உடம்பைப் பார்த்துக்கோ. எதுக்கும் பயப்படாத. மாப்பிள்ளையையும் கவனிச்சிக்கோனு எப்பவும் போல தான்.”
“ம்ம்.. உன்னோட சித்தி நல்ல குணம். மூத்த தாரத்துப் பிள்ளனு விலக்கி வைக்காம, முடிஞ்ச மட்டும் உனக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்க.”
“உண்மை தான் மாமா. சரி, அத்தை எங்க.?”
“இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி. அதான் வீட்டுல விளக்குப் போட்டுட்டுக் கோயிலுக்குப் போயிருக்கா.”
“எந்த கோயில் மாமா? எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கே, அங்கேயா?”
“ஆமா..”
“குட்டி கிருஷ்ணன் ஊர் சுத்தி வருமே மாமா.?”
“ஆமாடா.. நம்ம வீட்டுப் பக்கமும் வரும். உன்னோட அத்தை அந்த கூட்டத்தோட சேர்ந்து அப்படியே வீட்டுக்கு வந்திடுவா.”
“நான் சித்தி வீட்டுல இருக்கும் போது, வருஷ வருஷம் கோயில்ல சீரியல் பல்ப் போட்டு, சின்ன பிள்ளைகளுக்கு கிருஷ்ணன் ராதை அலங்காரம் எல்லாம் செஞ்சு பாட்டுப் பாடி, கோலாட்டம் ஆட வைப்பாங்க மாமா. பார்க்கவே அவ்வளவு அழகா, ஆசையா இருக்கும்.”
“இப்ப என்ன? சீக்கிரமே நீ ஒரு சின்ன கண்ணனை பெத்துக்க. அவனுக்கு அலங்காரம் செஞ்சு நாமளும் அதுல கலந்துக்குவோம்!”
“அதுசரி! உங்க வீட்டுக்காரம்மா கோவிலுக்குப் போயிட்டதால, பேச ஆள் இல்லாம எனக்கு ஃபோன் போட்டு பொழுது போக்குறீங்களாக்கும் மாமா.?”
“நான்தான் முன்னாடியே சொல்லிட்டேனே, என் மருமக புத்திசாலினு!” என ராஜா உரைத்துச் சிரித்திட, அதன் எதிரொலியாய் கனியின் அதரங்களிலும் புன்னகை மலர்ந்தது.
சரியாய் அந்நேரம், “என்னங்க, சாமி நம்ம தெருவுக்கு வருது. வெளிய வந்து கும்பிடுங்க!” என்று வீட்டின் வாயிலில் நின்று செல்வாம்பிகை அழைக்க, எழுந்து சென்றார் குடும்பத்தலைவர்.
ஹார்மோனியம், புல்லாங்குழல், ஜால்ரா ஆகியவற்றை இசைத்தபடி..
“அவன் மோகநிலை கூட ஒரு
யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ?”
எனப் பாடியவாறே குழந்தைக் கண்ணனை அவங்கரித்து சிறியதொரு வண்டியில் வைத்து இழுத்துச் சென்றனர், சிறு கூட்டத்தார். அவர்களுடன் இணைந்து பாடலை முணுமுணுத்தபடி, ராதை மற்றும் கிருஷ்ணன் வேடமிட்ட சிறுவர் சிறுமியர் ஆடியவாறும், அவர்களின் பெற்றோர் தத்தமது பிள்ளைகளிற்குத் துணையாகவும் கிருஷ்ணனுடன் இணைந்து செல்ல, கண்கொள்ளா காட்சியாய் இருந்தது.
ராஜா குழந்தை தெய்வத்தை வணங்கிக் கொள்ள.. நீரில் ஊற வைத்து சர்க்கரை சேர்க்கப்பட்ட அவல், வெண்ணெய் மற்றும் நெய் சோறோடு நான்கைந்து துளசி இலைகளையும் பிரசாதமாய் கொடுத்துவிட்டுச் சென்றனர் இருவர்.
அருகே நின்றிருந்த மனைவியைப் பார்த்தவர், “நீ எதுவும் செஞ்சு தரலயாம்மா.?”
“நெய் சோறு, நம்ம செஞ்சு கொடுத்தது தான். என்னால கடைசி வரைக்கும் கூடப் போக முடியாதுல? அதான் கோயில்ல கொடுத்து, அவங்களையே எல்லாருக்கும் கொடுக்கச் சொல்லிட்டேன்!”
“சரிம்மா..” என்றவர் கைப்பேசியைப் பார்க்க, கனி தொடர்பிலேயே இருந்தாள்.
தென்காசியில் ஒலித்த பாடலானது சென்னையில் அவளின் செவியை அடைந்திட..
“கண்ணனவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ!
அவன் பொன்னழகை காண்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ!” என இங்கிருந்தவர்களோடு இணைந்து பாடினாள்.
திருமணத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியோடு கேட்ட கண்ணனின் பாடலானது, அவளைப் பழைய கனியாகவே மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
சுற்றமும் சூழலும் கருத்தில் இருந்து மறைந்து, கணவன் உட்பட கவலைகளையும் மறந்து குதூகலத்துடன் இசையில் லயித்து பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.
“அடடே! என்னோட மருமக அருமையா பாடுறாளே.?” என்ற ராஜாவின் குரலில் சட்டென்று நிகழ்வுக்கு மீண்டவள், “ஸாரி மாமா..”
“இதுக்கு எதுக்கும்மா ஸாரி? நீ பாடுறதைக் கேட்கும் சந்தோஷமா இருக்கு. ஊருக்கு வரும் போது, எனக்கு நேர்ல பாடிக் காட்டு என்ன.?”
அவள், “சரிங்க மாமா.” என்று மலர்ந்த முகத்துடன் பேச்சை முடித்துவிட்டுத் திரும்ப, கூடத்தின் சுவற்றில் சாய்ந்து நின்றபடி மனைவியைப் பார்த்திருந்தான் நவநீதன்.
அவனை அத்தருணத்தில் எதிர்பார்த்து இராதால் ஒரு நொடி திடுக்கிட்ட கனி, மார்பில் கரம் பதித்து தன்னை முதலில் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
“நீங்க எப்ப வந்தீங்க?” எனக் கேட்டவளின் குரலில் லேசான படபடப்பு.
மெலிதாய் சிரித்தவன், “என்ன பயந்துட்டியா?”
“பின்ன, சொல்லாம கொள்ளாம ஒரு சத்தமும் கொடுக்காம இப்படி திடீர்னு வந்து நின்னா.?”
“சத்தம் எல்லாம் கேட்டுச்சு. நீதான் உன்னோட மாமனார்கிட்ட பேசுறதுலயும் பாடுறதுலயும் சுத்தி நடக்கிறதைக் கவனிக்க மறந்துட்ட.”
“ஹோ.. ஸாரி.”
“எதுக்கு ஸாரி? விடு!” என்றவன், “கனி, நீ இவ்வளவு நல்லா பாடுவியா?”
கணவனைப் புரியாமல் பார்த்தவள், “ஏன்.?”
“நான் இதை எதிர்பார்க்கல. அதான் கொஞ்சம் ஷாக். பட் ஸ்வீட்.”
“முன்னாடியே உங்கக்கிட்ட சொல்லி இருந்தேன், எனக்குப் பாட வரும்னு. நீங்கதான் மறந்துட்டீங்க!”
“ஹேய், மறக்க எல்லாம் இல்ல. இந்த அளவுக்கு நான் எக்ஸ்பெட் பண்ணல.”
“ஹோ.. படிக்காதவ, பாட்டு மட்டும் பாடப் போறாளாக்கும்னு நினைச்சிட்டீங்க போல?”
“ஹேய்.. அப்படி எல்லாம் இல்ல.”
“சரி விடுங்க. டிஃபன் ரெடியா இருக்கு. எதுக்கு வைக்கவா?”
“ம்ம்.. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணீட்டு வந்திடுறேன்!” என்றுவிட்டு அவன் நகர, கனி சமையல் அறை நோக்கி நடந்தாள்.
உணவை முடித்தவன் கைப்பேசியோடு பால்கனிக்குச் செல்ல, கணவனைத் தள்ளி நின்று சில நொடிகள் பார்த்திருந்தாள் பாவை.
ஆடவனின் உடல் மொழியும் குரல் தொனியுமே சொன்னது, அவன் தோழி ரம்யாவிடம் உரையாடிக் கொண்டிருப்பதை. அதற்குமேல் கனிக்கு, அங்கு நிற்பதற்கு மனம் இல்லை. அமைதியாய் சென்று படுக்கையில் விழுந்தாள்.
பத்து நிமிடங்கள் கடந்து அறையை வந்தடைந்தான் நவநீதன். எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு படுத்தவன், மனைவியின் இடையில் கையைக் கோர்த்து அவளை முழுமையாய் இழுத்து தன்னோடு ஒட்டிக் கொண்டான்.
அதுவரையில் பெண்ணவளிடம் எந்த அசைவும் இல்லை.
அவளின் காது மடல்களில் இதழ்களை ஒற்றிய ஆடவன், “கனி..”
இரண்டு முறை அழைத்த பின்னரும், அவளிடம் இருந்து மறுவினை எதுவும் வரவில்லை.
ஒரு பெருமூச்சு விட்டு மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்த நவன், “எவ்வளவு நேரம் தூங்குற மாதிரி நடிப்ப கனி?”
தனது கள்ளத்தனத்தை கணவன் கண்டு கொண்டதை எண்ணி, லேசான குற்ற உணர்வுடன் இமைகளைத் திறந்து அவனை நோக்கினாள்.
“என்ன பழக்கம் இது?” என அதட்டலாய் கேட்டவனின் வினாவை புறம் தள்ளியவள், “நான் தூங்கலனு எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“நமக்குக் கல்யாணம் ஆகி மூனு மாசத்துக்கு மேல ஆகுது. தினமும் ஒரே பெட்ல, சேர்ந்து தான் படுக்குறோம். எனக்குத் தெரியாதா, நீ உண்மையாவே தூங்குறியா இல்லையானு.”
“ப்ச்ச்..” என அவள் மறுபக்கம் திரும்பிக் கொள்ள, “என்னடி ரொம்ப சலிச்சுக்கிற?”
“ஆமா சலிச்சுக்கிறேன். அதுக்கு என்ன இப்ப?”
“அடிப்பாவி! பட்டுனு இப்படிச் சொல்லிட்ட?”
“வேற என்ன சொல்லணுமாம்?”
“ம்ம்.. உன்னோட மாமனார்கிட்ட ரொம்ப நேரமா பேசுன இல்ல இன்னைக்கு? அதோட எஃபெக்ட் தான் இது. ஃபோன் வழியாவே மிஸ்டர் ராஜகணபதியோட வைரஸ் உனக்குத் தொத்திக்கிச்சுப் போல?”
“என்ன ரொம்ப ஓவரா போறீங்க? நீங்களும் உங்க ப்ரெண்டும் கூட தான் மணிக்கணக்கா பேசுறீங்க? நானும் சொல்லட்டுமா, ரமி காய்ச்சல் உங்களுக்கு தொத்திக்கிச்சுனு?” என அவள் சற்று காட்டத்துடன் வினவ, நவனோ புன்னகைத்தான்.

