
“அக்கா… நீ பாட்டுக்கு இவர்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு சொல்லிட்ட. இவரு என்ன நம்மளை மொத்தமா அங்க கூப்புடுறாரு. எப்டிக்கா சரியா வரும்…” பவித்ராத்யா திலோத்தமாவிடம் புலம்பித் தீர்த்தாள்.
“எனக்கும் அதான் ஒன்னும் புரியல பவி!”
“நீயும் அத்தானும் அவர் வீட்டுக்குப் போங்க. நான் அங்க ஏற்கனவே தங்கி இருந்த ப்ரெண்ட் வீட்ல இருந்துக்குறேன்” மெலிதாய் உரைத்தவளை முறைத்தாள் திலோத்தமா.
“நீ இல்லாம எப்படி பேபி?”
“ப்ளீஸ்கா. இங்க வந்து செட் ஆகவே எனக்கு சங்கடமா இருந்துச்சு. உன் மாமியார் வீட்ல நான் எப்படி தங்குறது. சரியா வராதுக்கா. அவங்க உங்களை அக்செப்ட் பண்ணிட்டா கூட போதும்”
இந்த வாக்குவாதங்களுக்கு நடுவில், விக்ரமை வீல் சேரில் அமர வைத்து அறையில் இருந்து வந்தான் அக்னி வேந்தன்.
அவனைக் கண்டதும் இரு பெண்களும் வாயை மூடிக்கொள்ள, நேராய் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டான்.
விக்ரம் தான் இருண்ட முகத்துடனே இருந்தான்.
தம்பியையும் எதிர்க்க இயலவில்லை, மனதிலிருக்கும் பயத்தையும் சொல்ல இயலவில்லை. புழுங்கித் தவித்தான்.
“சித்தப்பா நம்ம பிளைட்ல போறோமா? வானத்துல பறக்குமா?” எனப் பல கேள்விகள் கேட்டுக்கொண்டு வந்தாள் அக்னிலா.
“ஆமா குட்டிமா வானத்துல தான் பறக்க போறோம்” எனப் புன்னகை மின்ன பதில் உரைத்துப் பேசிக்கொண்ட இருவரையும் ரசித்த விக்ரமின் மனது, பதற்றப்படவும் செய்தது.
விக்ரம் திலோத்தமா இருவரையும் தனியாக அமர வைத்து விட்டு, சற்றே பின்னால் உள்ள மூன்று பேர் அமரும் இருக்கையில், பவித்ராத்யா மற்றும் அக்னிலாவுடன் அமர்ந்து கொண்டான்.
ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொள்வதாக கேட்ட மகளை ஜன்னல் அருகில் அமர வைத்தவன், அடுத்த ஒரு மணி நேரமும் அவளுடன் வளவளத்துக் கொண்டே தான் வந்தான்.
“இதுக்கு தான் சொன்னேன். இவன்கிட்ட எந்த விஷயமும் தெரிய வேணாம்னு. பாரு… படபடன்னு முடிவு எடுத்து இப்படி ஒரு சிக்கல்ல மாட்டி விடுறான். இப்ப சந்தோசமா உனக்கு?” மனதில் இருந்த பயத்தின் வெளிப்பாடு கோபமாக வெளிப்பட்டது விக்ரமிடம்.
திலோத்தமாவிற்கு விக்ரமின் கோபம் புதிது. அதுவே அவளைக் கலங்க வைக்க, கீழுதட்டைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.
அதன்பிறகே நிலை உணர்ந்தவன், மெல்லத் தணிந்து “திலோ…” என்ற அழைக்க, “ம்ம்” என்றாள் கண்ணீரை மறைத்துக்கொண்டு.
“திலோ என்னைப் பாரு!”
சொன்னதற்காக ஒரு கணம் விழி நிமிர்த்தியவள், சட்டென தாழ்த்திக்கொள்ள, அவளது விழிநீரைக் கண்டு அவனுக்கும் பெருவலி.
“என் கையைப் பிடிச்சுக்கோ திலோ!” விக்ரமின் ஏக்கம் நிறைந்த குரலதில் அவசரமாக அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“இந்தக் கையை எப்பவும் விட மாட்ட தான” கணவனின் பரிதவிப்பில் கேவல் வர, அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “ஐ லவ் யூ விக்ரம்…” என்றாள் வலியுடன்.
அவளது செயலில் நிம்மதியுணர்ந்தவனும், அவனது தலையை அவள் தலை மீது சாய்த்து இளைப்பாறிக்கொண்டான், கையை விட மாட்டேனென அவள் வாய் வார்த்தையாய் கூறாத மடத்தனத்தை கவனியாமல்!
பவித்ராத்யாவிற்கு மலரும் நினைவுகள் தான் நெஞ்சை அழுத்தியது.
தானும் தனது குடும்பமுமென கழித்த அழகான நாள்கள் அவை! கீழ் நடுத்தர வர்க்கமென்றாலும், தாய் தந்தையரின் முகத்தில் புன்னகை இழந்து பார்த்ததே இல்லையே. நிறைவான தம்பதியினர். நிறைவான குழந்தைப் பருவத்தையும் கொடுத்தனரே!
சீட்டின் பின்னால் தலையைச் சாய்த்துக் கொண்டவளின் மனக்கண்ணில் அரும்பாகியது சில நிகழ்வுகள்.
“பவி, திலோ எந்திரிங்கமா. தண்ணி வந்துருச்சாம். போய் பிடிச்சுட்டு வரலாம்…” தாய் ஜானகியின் குரல் ஒலிக்க, ஹாலில் பாய் விரித்துப் படுத்திருந்த திலோத்தமா உடனடியாய் எழுந்து கொண்டாள்.
ஏற்கனவே கல்லூரியில் நிகழ்ந்த பிரச்சினை ஒன்றில் உறக்கமில்லை அவளுக்கு. உருண்டு படுத்த பவித்ராத்யாவை மீண்டும் எழுப்பிட, “ம்மா ஒரு அஞ்சு நிமிஷம்மா” என சிணுங்கினாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல. நீ தான் ரெண்டு கொடம் தண்ணில குளிக்கணும்னு அடம்பிடிப்ப. உன் முடிக்கே நான் தனியா தண்ணித் தொட்டி செய்யணும். எந்திரி பவிமா” கிண்டலுடன் ஆரம்பித்தது அவர்களின் பொழுது.
ஒரு கண்ணைச் சுருக்கித் திறந்து பார்த்தவள், “தண்ணி நிறைய செலவாகுதுனு தான் சொல்றேன் முடியை வெட்டிக்கிறேன்னு” என சிலுப்பிட,
“ஏ ஜானகி… தண்ணி நான் புடுச்சுட்டு வரேன். பவிம்மா முடியை எல்லாம் வெட்டாதடா” என்று கண்டித்தபடி மூச்சு வாங்க மாடியேறி வந்தார் சுந்தரம். கையில் மாளிகைப் பொருள்கள் இருந்தது.
அசோக் பில்லரில் அமைந்திருந்தது பவித்ராத்யாவின் ஒரு படுக்கையறை கொண்ட வீடு. நான்காவது மாடி.
தந்தையைக் கண்டதும் வாரி சுருட்டி எழுந்து அமர்ந்த பவித்ராத்யா, “அதெல்லாம் வேணாம்பா. நானே பிடிச்சுட்டு வரேன்” என்றதும், திலோத்தமா “ஏப்பா, கடைக்கு நாங்க போயிருக்க மாட்டோமா? நீங்க வேலைக்கு போறப்ப மட்டும் படி இறங்குனா போதும்னு எத்தனை தடவை சொல்றது” என அதட்டினாள்.
“பரவாயில்லமா. ஸ்கூலு காலேஜுக்கு அலைஞ்சுட்டு வந்து தூங்குறதே கொஞ்ச நேரம் தான் நீங்க…” என வாசற்படியில் அமர, இரு பெண்களும் தந்தையைச் செல்லமாக முறைத்து விட்டு குடத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
அன்றைய நாளுக்கான நீரைப் பிடித்து, குளித்து கிளம்பிய இரு பெண்களும் ஆளுக்கொரு சைக்கிளில் சென்றனர்.
பவித்ராத்யா பதினொன்றாம் வகுப்பும், திலோத்தமா பொறியியல் மூன்றாம் ஆண்டும் படித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஒன்றாக கிளம்பி விட்டு, மீண்டும் ஒன்றாக வருவது வழக்கம். கல்லூரி முடிந்ததும் திலோத்தமா நேராக பவித்ராத்யாவின் பள்ளிக்கு வந்து காத்திருப்பாள். பின் இருவரும் சைக்கிளில் வீட்டிற்கு வந்து விடுவர்.
சில நேரம் சைக்கிளை உருட்டிக்கொண்டு பேசியபடி செல்வது உண்டு. தற்போது இருக்கும் நிலையில் சைக்கிளை ஓட்ட மனமின்றி திலோத்தமா உருட்ட, அதில் பவித்ராத்யாவும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தபடி தமக்கையை ஓரக்கண்ணில் பார்த்தாள்.
“என்னக்கா நானும் பாக்குறேன் ரெண்டு நாளா ஒரு மாதிரியே இருக்க?”
“பவி… காலேஜ்ல ஒரு பிரச்சினை பேபி” என வருத்தமாக கூறியதில் அவளும் பதறினாள்.
“என்னக்கா ஆச்சு? அப்பாட்ட சொல்லலாமா?”
“ஐயோ வேணாம் பேபி. அப்பாக்கு தெரிஞ்சா சங்கடப்படுவாரு. என் காலேஜ்ல ஒரு அரசியல்வாதி பையன் இருக்கான். என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்” என்றதும் பவித்ராத்யா பொங்கி விட்டாள்.
“எவ்ளோ தைரியம் இருக்கணும் அந்த நாய்க்கு, அவனை சும்மாவா விட்ட. நாலு அறை அறைஞ்சியா?”
சீறிய தங்கையை அடக்கியவள், “எனக்கு அவ்ளோ தைரியம்லாம் இல்லல பவி. நானே யார் வம்புக்கும் போகாம நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்… ஆனா, என் க்ளாஸ்மேட் ஒருத்தன் என்னை டீஸ் பண்றதை பார்த்து அவன்கிட்ட சண்டை போட்டான்” என்றதும், “சூப்பர்” என்றாள் பவித்ராத்யா.
“அட நீ வேற பவி. பாவம் எனக்கு சப்போர்ட் பண்ண போய், என் க்ளாஸ்மேட்க்கு ரொம்ப அடி. அந்தப் பொறுக்கி காலேஜுக்கு ரௌடிஸ கூட்டிட்டு வந்துட்டான். நாங்க யாருமே எதிர்பார்க்கல… ப்ச்!”
“அச்சோ! அப்பறம் என்னாச்சு திலோ?”
“அந்தப் பசங்களை போலீஸ்ல பிடிச்சுட்டு போய்ட்டாங்க. என்னால என் க்ளாஸ்மேட்கு அடிபட்டது தான் கஷ்டமா இருக்கு பவிமா.”
“நீ ஒருக்கா போய் பார்த்துட்டு வந்துடுகா”
“ம்ம் அப்படி தான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனா எப்படி போறதுன்னு தான் தெரியல”
“ஏன் உன் க்ளாஸ்மேட் என்ன அமெரிக்காலயா இருக்காரு. சென்னை தான?”
“சென்னை தான். அதுவும் நம்ம வீட்டுல இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு”
“அட, அப்படியா! எந்த வீடுக்கா?” பவித்ராத்யா ஆர்வமாய் கேட்க,
திலோத்தமா ஒரு இடத்தில் நின்று விட்டு, பக்கவாட்டில் இருந்த பங்களாவைக் காட்டினாள்.
அவர்கள் ஏரியாவில் ஒரு பக்கம் முழுதும் பங்களாவும் அபார்ட்மெண்டுகளும் கம்பீரமாய் வீற்றிருக்க, ஒரு புறம் முழுதும் அடித்தட்ட மக்களின் அணிவகுப்பாக இருக்கும்.
இந்தப் பக்கம் வரும்பொழுது சாலை தரமாக இருக்குமென்பதால், அங்கிருக்கும் பங்களா போன்ற வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவது இருவருக்குமே வழக்கம்.
அதில் இந்த ஓட்டின் குடில் போன்ற வீடு இருவரையும் அதிகம் கவரும்.
“கேட்டே இவ்ளோ பெருசா போட்டுருக்காங்க பாரேன் திலோ…” பவி அதிசயிக்க,
“இங்க உள்ள போறதுக்கு வாட்ச்மேன் எல்லாம் இருப்பாங்களாம் பவி. இங்க இருந்து பாக்குறப்ப, வீடே அரை கிலோமீட்டர் உள்ள தள்ளி தான் இருக்கு. முன்னாடி முழுக்க செடி வச்சிருப்பாங்க போல…” என எட்டிப்பார்த்துக்கொண்டே நடப்பாள்.
“ஆமா திலோ… அங்க செம்பருத்திச் செடி கூட வச்சுருக்காங்க. நம்ம கேட்டா தருவாங்களா? முடிக்கு போட்டா செம்ம சாப்டா இருக்குமாம்.” கண்களை உருட்டிக் கேட்ட பவித்ராத்யா பின் அவளாகவே, “என் ப்ரண்ட்ஸ்லாம் இந்த மாதிரி பெரிய வீட்டுல இருக்குறவங்களுக்கு நிறைய கொம்பு இருக்கும்னு சொல்லுவாங்ககா. மூஞ்சியை பார்த்து கூட பேச மாட்டங்களாமே!” என்பாள்.
“ஹே அவங்களும் நம்மளை மாதிரி மனுஷங்க தான். டக்குனு யார்ட்டயும் ஒட்ட மாட்டாங்க அவ்ளோ தான்.”
“அதுசரி, நாம ஏன் இவங்ககிட்ட ஒட்ட போறோம். நம்ம வீடே நமக்கு பெருசா தான் இருக்கு. இங்கலாம் இருந்தா, யார் எங்க இருக்காங்கனு தேடி தேடியே மூச்சு வாங்கிடும்போல” என இரு பெண்களும் சிரித்துக் கொள்வார்கள்.
இன்று அதே வீட்டை தமக்கை காட்டியதில் திருதிருவென விழித்தாள் பவித்ராத்யா.
“யக்கா உனக்கு மூளை குழம்பிடுச்சா? இந்த வீட்டுக்கு நாம எப்படி போறது? கொம்பு வச்ச மனுஷங்க இருப்பாங்க” என்றதில்,
“அடியேய்… அப்படி எல்லாம் இல்ல. என் க்ளாஸ்மேட் சொன்னேனே. அவனுக்கு என்ன தலையெழுத்தா எனக்காக அடி வாங்கணும்னு. அவ்ளோ பெரிய பணக்காரன், கொஞ்ச கூட தலைக்கணம் இருக்காது. ஒரு தடவை பார்த்துட்டு வந்துடலாம் பவி” என்றவளை பரிதாபமாய் ஏறிட்டாள் பவித்ராத்யா.
“வேணாம்கா. காலேஜுக்கு வந்ததும் பார்த்துக்கோ. எதுக்கு வம்பு?”
“ஹே அவனுக்கு ரெண்டு கைலயும் அடி பவி. என்னால தூங்கவே முடியல. பார்த்துட்டு வந்துட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றதில், “சரி நான் வெளில நிக்கிறேன் நீ போயிட்டு வா” என்று மழுப்பினாள்.
“நீயும் வா” என அடம்பிடித்து தங்கையையும் உள்ளே இழுத்தாள்.
வாட்ச்மேன் “யாருமா வேணும்?” என வினவ,
திலோத்தமா திருதிருவென விழித்தாள்.
“க்கா சொல்லு…”
“அவன் பேரே மறந்துடுச்சுடி எனக்கு!”
“க்க்கா உன் பிரெண்டு பேரே தெரியாதா?” பல்லைக்கடித்தாள் பவித்ராத்யா.
“பிரெண்டு எல்லாம் இல்ல. ஜஸ்ட் க்ளாஸ்மேட் தான். இதுவரை பேசுனது கூட இல்ல பவி” என்றதில் அவள் முறைத்தாள்.
“இரு இரு… அவன் பேர் என்னமோ வருமே… ஹான் அக்னி… அக்னிய பார்க்கணும்” என வாட்ச்மேனிடம் வினவ, “நீ யாருமா?” என்றார் மேலிருந்து கீழ் வரை பார்த்து.
“நான்…” என திலோ ஆரம்பிக்கும் முன்னே, “வாட்ச்மேன் யாரு அங்க?” என முதல் மாடி பால்கனியில் இருந்து ஒரு குரல் ஒலித்தது.
விக்ரம வேந்தன் தான் ஸ்லீவ்லெஸ் பனியனும் ஷார்ட்ஸும் அணிந்து நின்றிருந்தான்.
“சின்னையாவை பார்க்கணுமாங்கையா” என்றதில், “உள்ள விடு” என்றான். அவனும் அவர்கள் வீட்டு வாசலில் நின்று வெகுநேரமாகப் பேசிக்கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
யாரோ பள்ளி செல்லும் சிறுமிகள் என நினைத்திருக்க, அவர்கள் வீட்டினுள் நுழைந்ததில் விசாரித்தான்.
பவித்ராத்யாவின் பள்ளி சீருடையைக் கண்டதால், அருகில் இருந்தவளை கவனிக்கவில்லை அவன். ஆனால், வீட்டினுள் நுழைந்ததும் அவன் கண்களில் முதன் முதலில் விழுந்தாள் திலோத்தமா.
அவர்கள் வாயிலை அடையும்போதே கீழிறங்கி வந்தவன், “அக்னியை எப்படி தெரியும் உங்களுக்கு?” கையைக் கட்டிக்கொண்டு விக்ரம் கம்பீரமாய் கேட்டதில், திலோத்தமாவிற்கு வாயில் இருந்து வார்த்தை வரவே இல்லை.
பவித்ராத்யாவோ சீலிங்கில் தொங்கி கொண்டிருந்த உயரமான விளக்குகளை விழி விரித்துப் பார்த்திருந்தாள்.
“அண்ணா இந்த லைட்டு தலைல விழுந்துடாதா?” என வெகு அக்கறையாய் கேள்வி எழுப்பிட, விக்ரம் தான் விழிக்க வேண்டியதாகப் போயிற்று.
“பவிஇஇஇ” தங்கையை அடக்கிய திலோத்தமா, “நானும் அக்னியும் ஒரே காலேஜ் தான். அவருக்கு அடிபட்டுருக்குனு கேள்விப்பட்டேன் அதான் பார்த்துட்டுப் போகலாம்னு” என மென்று விழுங்கினாள்.
“ஓ ப்ரெண்ட்ஸ்ஸா? முதல்லயே சொல்ல வேண்டியது தான?” விக்ரம் சற்றே அதட்டுவது போல கேட்க,
“ப்ரெண்ட்ஸ் இல்லையாம் க்ளாஸ்மேட்டாம்” எனத் திருத்தினாள் பவித்ராத்யா.
“இவ வேற… சும்மா இரு பேபி” என நொந்து கொண்ட திலோத்தமாவின் விழியசைவுகளை தன்னை மீறி அளவெடுத்துக் கொண்டிருந்த விக்ரம வேந்தன், “உள்ள வாங்க” என்று அக்னி வேந்தனின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
எப்போதடா கைக்கு விடுதலை கொடுப்பார்கள் என கடுப்பாகி காலை ஆட்டியபடி அமர்ந்திருந்த
அக்னி வேந்தன் திலோத்தமாவைக் கண்டதும் “ஹே நீ இங்க பண்ண பண்ற?” என்றான்.
“உங்களை பார்க்க தான் வந்தேன். சாரிங்க… என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்…” அவனது காயத்தைப் பார்த்ததும் அவளை மீறியும் கண்ணில் நீர் நிரம்பி விட்டது.
“இட்ஸ் ஓகே. உன் தப்பு என்ன இருக்கு? ஆமா என் வீடு உனக்கு எப்படி தெரியும்?” என வியப்பாக கேட்டான்.
“என் வீடு இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி தான். காலேஜ்ல கேட்டப்ப என் வீட்டுக்கு பக்கத்துல தான் உங்க அட்ரஸ் சொன்னாங்க. அதான் உங்களை பார்த்துட்டா மனசு கொஞ்சம் நிம்மதி ஆகிடும்னு வந்தேன். எப்போ கட்டு பிரிப்பாங்களாம்? அந்த ராஸ்கல்ஸ் இனி பிரச்சினை பண்ண மாட்டாங்க தான?” என வெகு கவலையுடன் கேள்விகளை அடுக்கினாள்.
“நோ ஒரிஸ்! இப்ப பெட்டர் தான்” எனும்போதே விக்ரமே இருவருக்கும் பழச்சாறு கொணர்ந்தான்.
“ஓ… இந்தப் பொண்ணுக்காக தான் நீ ஹீரோயிசம் பண்ணுனியா?” என்றபடி திலோத்தமாவை முறைக்க, அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“சாரிங்க!” வெகுவாய் மனம் காயப்பட்டுப் போனது அவளுக்கு.
கண்ணில் நீர்த்திவலைகள் வேறு நிறைந்திருக்க, அதில் திடுக்கிட்ட விக்ரம் “ஹே இப்ப எதுக்கு அழகுற. நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன்…” என்று அவள் அருகில் வந்தான்.
“என்னண்ணா இப்படி வீட்டுக்கு வந்த பொண்ணை அழுக வச்சுட்ட” அக்னி நக்கலாக மேலும் கொஞ்சம் கோர்த்து விட, “டேய் சும்மா இருடா. அந்தப் பொண்ணு என்னை வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சுக்கப் போகுது. யம்மா… நீ முதல்ல வாட்டர் ஃபால்ஸ க்ளோஸ் பண்ணு” என்றதில், திலோத்தமாவின் இதழ்கள் தானாய் புன்னகைத்தது.
இந்தக் கலவரங்களில் கலந்து கொள்ளாமல், ஆரஞ்சு பழச்சாறை விரும்பிக் குடித்த பவித்ராத்யா மேஜை மீது வீற்றிருந்த குட்டியான கரடி பொம்மை ஒன்றை ஆர்வமாய் பார்த்தாள்.
வெள்ளையில் சாம்பல் நிறம் கலந்த முடிகள், நிஜமான முடி போன்றே காட்சியளிக்க, அத்தனை ரசனையாய் இருந்தது.
அதனைக் கையில் தொட்டுப் பார்க்க ஆவல் எழ, மெல்ல எடுக்க முனைந்தவள் பொம்மைக்கு முன்னால் இருந்த ஏதோ ஒரு பொருளைத் தள்ளி விட, அதில் தான் மூவருமே அவள் புறம் திரும்பினர்.
“பவி என்ன பண்ற?” திலோ அதட்டலாக கேட்க, “தெரியாம விழுந்துடுச்சு” என முணுமுணுத்தவளோ கட்டிலில் அமர்ந்திருந்தவனின் பார்வையில் பொசுங்கி கொண்டிருந்தாள்.
‘தெரியாம தட்டி விட்டதுக்கு எதுக்கு இவன் இப்படி முறைக்கிறான்’ எனத் தன்மானம் சீண்டப்பட்டதில், அந்தப் பொம்மையை எடுக்கும் ஆர்வம் வடிந்திட, வேகமாய் வெளியில் ஓடிவிட்டாள்.
“என் தங்கச்சி அவ… என்ன தட்டி விட்டான்னு தெரியல” என திலோத்தமா தரையில் தேட, “விடு நான் எடுத்துக்குறேன்” என்ற விக்ரமிடம் தலையாட்டியவள், “உடம்பை பார்த்துக்கோங்க காலேஜ்ல பாக்கலாம்… பை” என்று விட்டு அவளும் தங்கையின் பின்னால் சென்றாள்.
அவள் சென்ற திசையையே பார்த்திருந்த விக்ரம வேந்தன், “அவ பேர் என்னடா?” எனத் தம்பியிடம் கேட்க,
“யாருக்கு தெரியும்” என்றவனின் கூற்றில் விழித்தான்.
“என் க்ளாஸ்ல நூறுக்கு மேல ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்கண்ணா. இவகிட்ட நான் பேசுனதே இல்ல.”
‘அடப்பாவி நானாச்சு பேர் கேட்டுருப்பேன்’ என முணுமுணுத்துக் கொண்ட விக்ரமின் நெஞ்சில் சிறு பொறி உருவாக்கிச் சென்றாள் திலோத்தமா.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
1
+1

