
அக்னி வேந்தனின் கண்ணீரைக் கண்டதும் விக்ரமின் இதயம் அதிகமாய் காயப்பட்டுப் போனது.
“அகி…” தமையனின் பலவீனக்குரலில் நெஞ்சம் வெடிக்க, விருட்டென அறையை விட்டு வெளியில் வந்திருந்தான்.
இடுப்பில் கையூன்றி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றான் ஆடவன்.
இங்கோ சற்று நேரம் முன்பு, ஹாலில் அமர்ந்து அக்னிலாவுடன் அவளது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பவித்ராத்யாவிற்கு கண்ணெல்லாம் அறைக்கதவின் மீது தான் இருந்தது.
சத்தமிட்டு சண்டை போடுவது போலும் தெரியவில்லை.
அப்போது அக்னிலா, “சித்தி அந்த அங்கிள் யாரு?” என வினவ,
“உனக்கு சித்தப்பாடி தங்கம்” என்றாள்.
“சித்தப்பான்னா?” யோசிப்பது போல பாவனை செய்தாள்.
“சித்தப்பான்னா, உன் அப்பாவோட தம்பியைத் தான் சித்தப்பான்னு சொல்லணும்”
“ம்ம்ம்ம் உன்னைச் சித்தின்னு கூப்புட்ற மாதிரியா?” விழிகளை உருட்டினாள்.
“அப்படியே தான்டி என் பட்டுக்குட்டி…” என்று அவளின் கன்னம் கிள்ளும்போது தான், அக்னியும் வெளியில் வந்தது.
‘அழுதிருக்கிறானா?’ அவன் முகம் கண்டு பவித்ராத்யா திகைத்து விட்டாள்.
இன்னும் தன்னை அடக்க இயலாமல் கண்ணை இறுக்கி மூடி நின்றவனின் உடல்மொழியில் என்ன தோன்றியதோ, “நிலா… சித்தப்பாட்ட போ!” என்று ஹஸ்கி குரலில் அக்னிலாவைத் தூண்டி விட்டாள்.
அக்னிலாவிற்கு என்ன புரிந்ததோ, அவனருகில் வந்தவள், அவனது பேண்ட்டைப் பிடித்து இழுத்தாள்.
காலை யாரோ சுரண்டியதில் கண்ணைத் திறந்து பார்த்தவன், வட்ட விழிகளை கொட்ட கொட்ட விழித்தபடி நின்ற மகளைக் கண்டு உணர்வின் ஆழ்நிலையில் சிக்கிப் போனான்.
முகத்தை அழுந்தத் துடைத்து விட்டு, அக்னிலாவின் உயரத்திற்கு அமர்ந்தவன், “சொல்லுங்க குட்டிமா?” என்றான் வார்த்தைக்கும் வலிக்கும்படி.
‘இவருக்கு இவ்ளோ சாஃப்டா பேசத் தெரியுமா? என்கிட்ட மட்டும் சிடுசிடுன்னு பேசுறாரு’ என வாய்க்குள் முனகிக் கொண்டாள் பவித்ராத்யா.
“நீங்க தான் என் சித்தப்பாவா?” அக்னிலாவின் கூற்றில் புன்னகைத்தவன், “ம்ம்ம் நானே தான்” என்றபடி அவளது பிஞ்சு விரல்களை மெல்லமாய் பற்றிக்கொண்டவன், “உங்க பேர் என்ன?” என்றான் கொஞ்சலாய்.
“அக்னிலா! உங்க பேர் என்ன?”
அவளது பெயரைக் கேட்டு, அக்னி வேந்தனின் புன்னகை இன்னும் பெரிதாகியது.
‘குழந்தைக்குப் பேர் வைக்கிறதுல ஒன்னும் குறைச்சல் இல்ல…’ தமையனை மனதினுள் திட்டிக்கொண்டான்.
“என் பேரும் அக்னி தான்” தலைசாய்த்து உரைத்தான்.
“ஹை! அப்போ அப்பா உங்களை எப்படி கூப்பிடுவாங்க. என்னை அகின்னு கூப்பிடுவாங்க.”
“என்னையும் அகின்னு தான் கூப்பிடுவாங்க உன் அப்பா!”
“அப்ப டூ அகி’ஸ் சித்தப்பா” என்று விளையாட்டாய் குதித்த குழந்தையை புன்னகை மின்ன ரசித்தான் அக்னி வேந்தன்.
“சித்தப்பா… அப்பா என் கூட எப்போ விளையாடுவாங்க?” தினமும் தாயிடம் கேட்கும் கேள்வியை இன்று அவனிடம் கேட்டிருக்க, ஆடவனின் நெஞ்சில் குருதியே வழிந்தது.
தொண்டையில் சிக்கிய துக்கத்தை விழுங்கியவன், “சீக்கிரமே உன் விளையாடுவாரு. அதுவரை சித்தப்பா விளையாடுறேன் ஓகே வா?” என வாக்கு கொடுத்தவன் அக்னிலாவின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
இருவரையும் கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த பவித்ராத்யாவிற்கு அக்னி வேந்தனின் வலி நிறைந்த புன்னகை உள்ளுக்குள் ஊடுருவி ஒரு வித வலி கொடுத்தது.
‘இவரைப் போய் கொலைகாரன் ரேஞ்சுக்கு நினைச்சுட்டோமே. எல்லாம் அந்தத் தாய்க்கிழவியால வந்தது! அதான் அக்கா, தைரியமா இவர்கிட்ட பேச சொல்லிருக்கா போல’ என ஏதேதோ யோசனையில் புதைந்தாள்.
விக்ரமும் திலோத்தமாவும் இன்னும் அதிர்ச்சியில் இருந்தே வெளிவரவில்லை.
“அவனுக்கு எப்படி இந்த இடம் தெரிஞ்சுது திலோ?” எனக் கேட்டவன் மனையாளின் முழியைக் கண்டு, “பவி உண்மையாவே வேலைக்கு தான் போனாளா?” என்றான் கூர்மையாக.
தலையை தாழ்த்திக்கொண்டவள், “இல்ல… நான் அவளை அக்னிட்ட பேச தான் அனுப்புனேன்” என்று உண்மையை ஒத்துக்கொள்ள, விக்ரம் இறுகிய முகத்துடன் அவளை ஏறிட்டான்.
“ப்ளீஸ் விக்ரம்! எனக்கு வேற வழி தெரியல” கண்ணீருடன் உரைத்தவளிடம்,
“கையே இல்லாம என்னால வாழ முடியும். ஆனா, என் வீட்டாளுங்க நம்மளை இப்ப கூட பிரிக்கணும்னு நினைச்சா, பிரிச்சுடுவாங்க திலோ. என்னால உன்னை விட்டு சத்தியமா வாழ முடியாது” விக்ரமின் கண்களிலும் கண்ணீர் மிளிர்ந்தது.
“அதுனால தான், அவங்களுக்குத் தெரியாம அக்னிட்ட ஹெல்ப் கேட்க நினைச்சேன்” என்றவள், அவன் மடியில் அமர்ந்து நெற்றியோடு நெற்றி முட்டி,
“என்னால உங்களை இப்படி பார்க்க முடியல விக்ரம். வாய்ப்பே இல்லைன்னா பரவாயில்ல. இப்படியே உங்களை 24 மணி நேரமும் பார்த்திட்டே இருந்துப்பேன். ஆனா, வாய்ப்பிருந்தும் அதை டிலே பண்ண எனக்கு மனசு வரல. உங்க ஹெல்த் விட எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல விக்ரம்!” என்றவளின் வார்த்தைகள் உணர்த்திய வேதனை அவனுக்கும் புரிந்தது தான்.
“இப்போ இவன் என்ன செய்யப் போறான்னு தெரியலையே!” விக்ரமிற்கு கவலை பிறந்தது.
“நான் பேசுறேன் அவன்கிட்ட…” என எழுந்தவள் தயக்கத்துடன் கணவன் புறம் திரும்பி, “விக்ரம்… நீங்க என்னைத் தப்பா நினைக்கல தான?” எனக் கேட்டாள் குமுறல் தாளாமல்.
தன்னால் பார்த்துக் கொள்ள இயலாமல், அவனைக் குடும்பத்துடன் தள்ளி விட எண்ணியதாக ஒரு சதவீதமேனும் நினைத்து விடுவானோ என்ற வலி கொன்றது.
சடுதியில் அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், “என்னால முடியல. அக்னிட்ட சொல்லி உனக்கு குடுக்க வேண்டிய அடியை நேரா உனக்கே குடுக்க சொல்லிடுறேன். அகி…” என அழைக்க குரல் எடுக்கும் முன்னே, வேகமாய் அவனின் வாயைப் பொத்தினாள்.
“அவன்கிட்ட எதுக்கு என்னைக் கோர்த்து விடுறீங்க. மீ பாவம்” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“உன்னை எனக்குப் புரியாதா திலோ?” ஒற்றைக் கேள்வியில் பல ஜென்மத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்தியவனை நேசமாய் ஏறிட்டாள் திலோத்தமா.
அவளது பார்வையில் லேசாய் புன்னகைத்தவன், “என்னை சைட் அடிச்சது போதும். உன் க்ளாஸ்மேட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே. போ, போய் பேசு” என்று நக்கலாய் கூறினான்.
“நீங்க வேற அதை ஞாபகப்படுத்தாதீங்க. அடிச்சுட்டா கூட மனசு ஆறிடும். அவனை ஃபேஸ் பண்ணவே கஷ்டமா இருக்கு விக்ரம்” என்றாள் வருத்தமாக.
“புருஞ்சுப்பான் திலோ. விஷயம் தெரிஞ்சா, அவனுக்கு இப்ப இருக்குற கோபம் கூட இருக்காது. ஆனா தெரிய வேணாம்” என்றிட, அவளும் ஆமோதிப்பாய் தலையாட்டிக் கொண்டாள்.
“ஐயோ… உங்களுக்கு ஷர்ட்டை மாத்தாம பேசிட்டே இருக்கேன் பாருங்க. சளி பிடிச்சுக்கப் போகுது” என்றபடி கணவனின் உடையை மாற்றி விட்டவள், “உங்களுக்கு குடிக்க பால் எடுத்துட்டு வரவா?” எனக் கேட்டாள்.
“ம்ம்… அவனுக்கும் காபி குடு திலோ. ஸ்ட்ராங்கா, சுகர் அதிகமா”
“சரிங்க”
“அப்பறம், பால் ரொம்ப நேரம் காய விடு…” ஒரு காபிக்கே தம்பிக்கு பெர்ஃபெக்ட்டாக கிடைக்க வேண்டுமென எண்ணும் தமையன்.
சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டவள், வெளியில் வந்து மகளையும் அக்னியையும் கண்டு விழி விரித்தாள்.
பொதுவாக அக்னிலா, தங்கள் மூவரைத் தவிர அதிகம் யாரிடமும் பேசியதில்லை.
முக்கால்வாசி நேரம், பவித்ராத்யாவிடமே தான் இருந்தாள் பிறந்ததில் இருந்தே.
இப்போதோ பார்த்த உடனே, அக்னியிடம் ஒட்டிக்கொண்டதில் சிறு வியப்பு.
‘என்னதான் நம்ம ஊட்டி வளர்த்தாலும் இரத்தப் பாசம் வந்துடும் போல…’ முறுவலாய் சலித்துக் கொண்டாள்.
தன்னருகில் நிழலாடியதில் எழுந்தவன், திலோத்தமா பேசும் முன்னே, “ஆத்யா” என அழைத்தாள்.
பவித்ராத்யா உடனே எழுந்து நிற்க, “பாப்பா ஸ்கூல் போறாளா?” என வினவ,
“ஆமா” எனத் தலையசைத்தாள்.
“உடனே டிசி வாங்கணும். ஸ்கூல் எங்க இருக்கு? இப்போ போனா அங்க ஆள் இருப்பாங்க தான?” எனக் கடிகாரத்தைப் பார்த்தான்.
“டிசி எதுக்கு அக்னி?” திலோ கேட்ட கேள்விக்குப் பதில் உரைக்காமல் நிற்க, பவித்ராத்யாவோ “ஆனா பாதி அகாடெமிக் இயர்ல ரிலீவ் ஆனா, திரும்ப ஸ்கூல்ல சேர்க்க கஷ்டம்…” என்றதில்,
“அவள் என்ன ‘பி. எச். டி’யா படிக்கிறா?” என முறைத்தான்.
“சித்தப்பா பி. கெச். டி இல்ல ப்ரீ கேஜி” எனக் குலுங்கிச் சிரித்தாள்.
சித்தப்பாவிற்கு ப்ரீகேஜியே சொல்லத் தெரியவில்லை என்று நினைத்தால் போலும்.
“ஹே வாலு!” அவனுக்கும் சிரிப்பு எழுந்திட அவளைத் தூக்கிக் கொண்டவன், பவித்ராத்யாவைப் பார்த்தான்.
அதில், ஸ்கூல் பக்கத்து தெருல தான் இருக்கு… அவள் வேகமாய் கூறியதில்,
“ம்ம் வா… நம்ம அவள் ஸ்கூல்ல போய் பேசிட்டு வரலாம்” என அழைத்திட, திலோத்தமா தவிப்புடன் நின்றாள்.
“அக்னி… நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். ஆபிஸ்கு வீக்லி ஒன்ஸ் போய் ரிப்போர்ட் பண்ணனும்! என்னால ரிசைன் பண்ண முடியாது” இறுதி வரியை மட்டும் அழுத்தமாக உரைத்தாள்.
“வீக்லி ஒன்ஸ், பிளைட்ல வந்து ரிப்போர்ட் குடுத்துக்கோ. ஐ வில் அரேஞ்ச்!” எளிமையாக ஒரு தீர்வு கூறியவனை அதிருப்தியாய் ஏறிட்டாள்.
‘வாரம் வாரம் பிளைட்கு செலவு பண்றதுக்கு நான் வேலையையே விட்டுடலாமே’ என்ற எண்ணத்தை படித்தவனோ, பதிலேதும் கூறவில்லை.
“விக்ரமோட மெடிக்கல் ஃபைல்ஸ் எல்லாம் கம்ப்ளீட்டா எடுத்துக்கோ!”
“இப்ப எங்க தான் போறோம்…?”
“இதென்ன கேள்வி. கோயம்பத்தூர்க்கு!” தோளைக் குலுக்கினான் அக்னி வேந்தன்.
திலோத்தமாவோ அதிர்ச்சியை விழுங்க இயலாமல் நின்றாள்.
“அங்க எதுக்கு?” திணறலுடன் கேட்டவளை கூர்ந்து பார்த்தவன், “உனக்கு வரப்பிடிக்கலைன்னா வராத. நான் விக்ரமையும் நிலாவையும் கூட்டிட்டுப் போறேன்!” எனக் கடுகடுத்தான்.
அங்கே சென்றால், உண்மையிலேயே தான் விக்ரமைப் பிரிய வேண்டிய நிலை வந்து விடுமே! அதனை இவனுக்கு எப்படி புரிய வைப்பது. சில நாள்களுக்கு முன்பு, சிவக்குமார் மிரட்டிய தொனி இன்னும் நினைவிலாடுகிறது.
அவளது அதிர்ச்சியை கண்டுகொள்ளாது அக்னிலாவைத் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றவனின் பின்னால், அடக்கப்பட்ட கோபத்துடன் பவித்ராத்யாவும் சென்றாள்.
பக்கத்து தெருவில் இருந்த பள்ளிக்கு இருவரும் நடந்தே சென்று விவரத்தைக் கூறி, வேலையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், ஒரு சின்ன பார்க் இருக்க, “சித்தப்பா ஸ்லைடர்!” என்றாள் அதனைக் கை காட்டி.
“ஸ்லைடர் விளையாடணுமா குட்டிக்கு! போலாமே…” என பார்க்கிற்கு அழைத்துச் சென்றவன், “ஒன்லி பிஃப்ட்டின் மினிட்ஸ் பேபி. நம்ம ஊருக்கு கிளம்பனும். அங்க போனதும் நீங்க அன்லிமிட்டடா விளையாடலாம் ஓகேவா?” என்று கொஞ்சினான் அக்னி.
அதற்கு அருகில் இருந்த ஸ்டோன் பெஞ்சிலேயே பவித்ராத்யாவும் அமர்ந்து விட்டு, ஆடவனைக் காட்டத்துடன் பார்க்க, “சேஃபா விளையாடனும் குட்டிமா” என்று விட்டே பவித்ராத்யாவின் அருகில் வந்து அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் பொரிய தொடங்கி விட்டாள் அவள்.
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அத்தானுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுல இருந்து அவள் ஒரு மணி நேரம் கூட முழுசா தூங்கல தெரியுமா? அவளோட வருமானத்துல தான் வீட்டையும் பார்த்துக்கிட்டு, ஹாஸ்பிடல் செலவும் பண்ணிட்டு இருக்கா. பகல் முழுக்க அத்தானையும் பாப்பாவையும் பார்த்துக்கிட்டு, நைட்டு முழுக்க லாப்டாப்ல வேலை பார்ப்பா. நீங்க என்னனா, அத்தானை மட்டும் கூட்டிட்டுப் போறேன்னு அசால்ட்டா சொல்றீங்க…” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
“அவளுக்கு ஒர்க் இருக்குன்னு சொன்னா, அதுனால அப்படி சொன்னேன். விக்ரமை சரி பண்ண தான என்னை நீங்க ரெண்டு பேரும் இங்க வர வைக்க நினைச்சீங்க. இல்ல இதே வீட்லயே வச்சு சரி பண்ணிட முடியும்னா, என்னை ஏன் தேடி வந்த?” நிதானமாய் அவன் கேள்வி எழுப்ப, அவள் சில நொடிகள் அமைதி காத்தாள்.
“விக்ரம் அத்தானை இங்க வச்சே சரி பண்ணலாம் தான. எதுக்கு கோயம்பத்தூர்க்கு?” மெலிதாய் வினவினாள்.
“அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு ஆத்யா. அவன் குடும்பத்தைத் தாங்க நான் இருக்கேன். அப்படி இருக்கும் போது. அவன் இங்க தனியா ஏன் இருக்கணும்? என் அம்மா அவனைப் பார்க்க வேணாமா? தினம் தினம் அவனைப் பார்க்க முடியலைன்ற வேதனைல அழுகுறாங்களே. அவங்களை அப்படியே விட்டுடலாமா?” அடிக்குரலில் கடைந்தெடுக்கப்பட்ட கோபத்துடன் சீறினான்.
“எவ்ளோ நாளைக்கு அவளால அவனைத் தனியா பார்க்க முடியும் ஆத்யா? எனக்குத் தெரியும்… ரெண்டு கையும் வேலை செய்யாம ஒருத்தரோட உதவிய எதிர்பார்த்து வாழுறது எந்த அளவு வலியோ, நம்மளைக் கூட இருந்து பாக்குறவங்க அதை விட அதிகமா வேதனைப்படுவாங்க. அந்த வேதனையை ஷேர் பண்ணிக்கவாவது அவளுக்குன்னு ஒரு ஆள் வேணும். அங்க வந்தா, என் அம்மா நான் எல்லாரும் இருப்போம். சென்னைய விட, கோயம்பத்தூர்ல பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கிடைக்கும். அந்த அட்மாஸ்பியர் அவனுக்கு செட் ஆகும்” அக்னிலாவின் காதில் விழக்கூடாது என்று கோபத்தைக் கூட அடக்கிக்கொண்டு காட்டினான்.
அப்படியும் அந்த வெப்பத்தை உணர்ந்த பவித்ராத்யா, “எல்லாம் சரி தான். ஆனா உங்க பாட்டி, என்கிட்டயே என் அக்காவை சூனியக்காரின்னு சொன்னாங்க. அப்போ அவள் அங்க போனா, என்னலாம் பேசுவாங்க? இப்ப விக்ரம் அத்தானுக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கும் அவளைத் தான பேசுவாங்க.”
“பேசுவாங்கனு தெரிஞ்சு தான லவ் பண்ணுனா? வாயில விரல் வச்சா கூட கடிக்கத் தெரியாத அப்பாவி இல்லைல அவ. எதிர்க்க வேண்டிய சூழ்நிலைல எதிர்க்க தான் நமக்கு வாய் இருக்கு” பற்களைக் கடித்தான்.
பவித்ராத்யா மனம் ஆறாது, அமைதியாகி விட ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், “என் அண்ணன் அவன் வீட்ல, அவன் வைஃப், குழந்தையோட வாழனும். வாழுவான்! என்ன பிரச்சினை வந்தாலும் நான் ஃபேஸ் பண்ணிப்பேன். திலோ என் ப்ரெண்ட். அவளை ஒரு கட்டத்துக்கு மேல ஹர்ட் பண்ற வரை வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என்றான் தீர்க்கமாக.
“அப்போ என் முடியைப் பிடிச்சு இழுத்தப்ப நீங்க வேடிக்கை தான பார்த்தீங்க?” உதட்டைக் குவித்து சட்டென கேட்டு விட்டவள், திருதிருவென விழித்தான்.
தற்போது ஆடவனின் பார்வையே மாறி இருந்ததே. தன்னைத் துளைத்து உறைய வைக்கும் பார்வை அது!
“சரி வேடிக்கை பார்க்காம நான் என்ன செஞ்சுருக்கணும்?” கையைக் கட்டி சாய்ந்தமர்ந்து கேட்டவனின் கேள்வியில் குறும்பு இருந்ததோ என்ற சந்தேகமும் வந்தது.
அவளோ தலை கவிழ்ந்திருந்தாள். இதற்கு என்னவென பதில் உரைப்பது? அவளுக்கே ஒன்றும் புரியவில்லை. புரியாத புதிர் தந்தான்!
அவளது மௌனம் நீடித்ததில், “ஒருத்தர் உன் முடியைப் பிடிச்சு இழுத்தா, உனக்கு கை இல்லையா அதை தடுக்குறதுக்கு? அதுக்கு கூட உனக்குப் பறந்து பறந்து ஹீரோ வந்து காப்பாத்தணுமா? அதுவும் ஒரு வயசானவங்ககிட்ட இருந்து!” என சீண்டிட,
“அப்படி ஒன்னும் எந்த ஹீரோவும் என்னைக் காப்பாத்த தேவை இல்ல…” என நொடித்துக் கொண்டாள்.
“நான் எனக்காகன்னு எந்த ஒரு சூழ்நிலைலயும் உங்க குடும்பத்துப் பக்கம் வந்துருக்கவே மாட்டேன். நான் வந்தது திலோக்காகவும், அத்தானுக்காகவும் தான். நான் ஏதாச்சு பேசியோ எதிர்த்தோ நடந்துக்கிட்டா, அவங்களுக்கு அது பேக் ஃபயர் ஆகிடுமேன்ற பயத்துல தான், உங்ககிட்ட கூட யோசிச்சு யோசிச்சு பேசுனேன்! இல்லன்னா அந்த தாய்கெழவி வாய உடைச்சுருப்பேன். பல வருச ஆச வேற…” இறுதி வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டாலும் அவனுக்கும் நன்றாகவே கேட்டதில், சிறு சுவாரஸ்யம் எழுந்தது.
“எத்தனை வருஷமா உனக்கு என்னை…? ஐ மீன் என் பாட்டியைத் தெரியும்?”
‘அய்யயோ, ப்ளோல தாய் கிழவினு சொல்லிட்டோமே’ என மருண்டவள், அவன் அதனை ஒரு பொருட்டாகவே எண்ணாததை, விசித்திரமாய் பார்த்தாள்.
“உங்களை எனக்குத் தெரியாதே. ஒரே ஒரு தடவை உங்களை பாத்துருக்கேன். உங்களுக்கு கைல அடிப்பட்ட நானும் திலோவும் உங்க வீட்டுக்கு வந்தோமே!” என அவனுக்கு நினைவுபடுத்திட, அவளை அமைதியாய் ஊடுருவிக் கொண்டிருந்தான்.
மேலும் பேசும் முன்னே, அக்னிலா பவித்ராத்யாவிடம் ஓடி வந்து, “சித்தி… உச்சு வருது” என்றதில், “வா வீட்டுக்குப் போய்டலாம்…” என அவளைத் தூக்கினாள்.
திலோத்தமா காபியைக் கலந்தபடி கடும் சிந்தனையில் இருந்தாள். அடுத்து என்ன? என்பதே அவளுக்கு பெரிய கேள்விக்குறியாய் இருந்தது.
வாசலில் அரவம் கேட்க, மூவரும் வந்து விட்டதை உணர்ந்து காபியை எடுத்துக் கொண்டு சென்றாள்.
நல்லவேளையாக அந்த வீட்டில் படுக்கையறைக்கு வெளியிலேயே சிறிய குளியலறை ஒன்று இருப்பதால், அதை பவித்ராத்யா மட்டும் உபயோகப்படுத்திக்கொள்வாள்.
அதனால் குளிப்பதற்கு பிரச்சினை இல்லை. கழிவறைக்குச் செல்ல மட்டும் விக்ரமின் அறையில் இருக்கும் பாத்ரூமை தான் உபயோகப்படுத்த இயலும்.
வெளியில் இருக்கும் பாத்ரூமிலேயே அக்னிகாவின் அவசரத் தேவையை முடித்துக் கொண்டவள், அவளை சுத்தம் செய்திட, திலோத்தமா அக்னியின் முன் காபியை நீட்டினாள்.
நிமிர்ந்து பாராமல் எடுத்துக் கொண்டவன், “விக்ரம் குடிச்சானா?” என வினவ,
“இதோ பால் குடுக்கப் போறேன்…” என்றாள்.
“நீ திங்ஸ் எடுத்து வை. நான் குடுத்துக்குறேன்!” என விக்ரமிற்கும் ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டான்.
“எல்லா திங்ஸ்ஸும் எடுக்கணுமா?”
“ம்ம் முடிஞ்சா வீட்டைக் காலி பண்ணிடு! இப்போதைக்கு தேவையானது எடுத்துக்கோ. அப்பறம் ஆள் அனுப்பி எல்லா திங்ஸ்ஸயும் கோயம்பத்தூர்க்கு கொண்டு வர சொல்லிடலாம்” என்று விட்டு அவளது பதிலை எதிர்பாராது உள்ளே சென்றான்.
அக்னியைப் பார்த்ததும் படுத்திருந்த விக்ரம் எழுந்து அமர முற்பட, இரு க்ளாஸையும் அருகில் இருந்த டேபிள் மீது வைத்தவன், அவனைத் தூக்கி அமர வைத்தான்.
பாலை எடுத்து அவனுக்கு கொடுக்கப் போக, “திலோ எங்க” என்றான் வேகமாய்.
அதில் தமையனை அழுத்தம் திருத்தமாய் அதிகாரமாக ஒரு பார்வை பார்த்ததில் மிரண்டவன், மறுபேச்சு பேசாமல் குடித்துக் கொண்டான்.
மாலை ஏழு மணி அளவில் விமானச் சீட்டை புக் செய்திருந்தவன், வாசல்புறம் நின்றபடி நிவேதாவிற்கும் அழைத்தான்.
“ம்மா நைட்டு பத்து மணிக்குள்ள நான் வீட்டுக்கு வந்துடுவேன். தூங்கிடாதீங்க. முடிஞ்சா ஆரத்தி கரைச்சு வைங்க”
மகனின் கூற்றில் பீதி அடைந்த நிவேதா, “என்ன அக்னி… நீயும் விக்ரம் மாதிரி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டியா… போச்சு உன் பாட்டியும் சித்தப்பாவும் என்னைக் கொல்ல போறாங்க…” என்று அழும் நிலைக்குச் சென்றதில், “ம்மா!” என்று கடிந்தான் பல்லைக்கடித்து.
“அதெல்லாம் இல்ல. நான் சொல்றதை மட்டும் செய்ங்க” என்று அழைப்பைத் துண்டித்தவன், தாயின் கேள்வியில் ஆத்யா எண்ணத்தில் நிலைக்க, வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டான் ரசனையாய்.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
53
+1
+1
1

