
.
மரம் தேடும் மழைத்துளி — 29
சுபத்ராவுக்குத் தன்னால் மனக்கஷ்டம் நேர்ந்துவிட்டதை எண்ணிய சரவணன், அவளைக் கோவிலில் சந்தித்துத் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தான்.
புரிந்து கொண்ட சுபத்ராவும், தன்னால் இனி எந்தப் பிரச்சினையும் சரவணனுக்கு ஏற்படாது என்று வாக்களித்துவிட்டுச் சென்றாள். அடுத்த ஆறு மாத காலத்தில் சுபத்ராவுக்குத் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.
லட்சுமியோ, சரவணனை எப்படியாவது ருக்மணியிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து, வேறொரு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தார்.
ருக்மணிக்கும் சரவணன் தேவையில்லை என்ற மனநிலைதான் இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டு காலம் அவன் உடன் இருந்துவிட்டான். குழந்தையைக் கவனித்துக் கொள்வது, தன்னுடைய தாய்க்குத் தலைமகன் போல இருந்து அனைத்து உதவிகளையும் செய்வதைப் பார்த்தவளுக்கு, அவனோடு காதல் கொள்ளும் அளவுக்கு ஆசை இல்லை என்றாலும், அவன் வேறொரு திருமணம் செய்துகொண்டால் என்னாவது என்ற பயம் இருந்தது. இப்போது போலவே எப்போதும் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
தினேஷ் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு முறை ‘அப்பா’ என்று அவனை அழைக்காமல் இருப்பதில்லை. அந்த ஒற்றைச் சொல்லுக்கு அடிபணிந்து அவனுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறான் சரவணன்.
சுப்புலட்சுமி தன்னுடைய மகன் ரவிக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். பெண்ணின் பிறந்த ஊர் திருச்செந்தூர் என்பதால், அங்கேயே திருமணத்தை நடத்திவிட்டு அழைத்து வந்துவிடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். அதன்படியே திருமணத்திற்கு நாள் குறித்து, பத்திரிகை அடித்து ஊர் முழுவதும் கொடுத்தாகிவிட்டது. நாளை நடக்க இருக்கும் திருமணத்திற்கு உள்ளூர்வாசிகள் அனைவரையும் அழைத்துச் செல்ல ஒரு பேருந்து (பஸ்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ருக்மணி கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டிருந்தாலும், தான் ஒரு விதவை என்ற வீம்பு எண்ணத்தைச் சுமந்து கொண்டிருப்பதால், அண்ணனின் திருமணத்திற்கு அழைப்பிருந்தும் வர மறுத்துவிட்டாள்.
சரவணனை உடன் அழைத்தான் ரவி. “ருக்மணி வீட்டில் இருக்கும்போது நான் மட்டும் அங்கே வருவது சரியாக இருக்காது. அவளுக்குத் துணையாக இருந்து கொள்கிறேன்” என்று சொல்லி நழுவிக்கொண்டான் சரவணன்.
மாலையில் புறப்படும் பேருந்தில் மாரியம்மாள் தினேஷைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்.
இரவில் வழக்கம் போலச் சரவணன் வாசலிலும், ருக்மணி வீட்டுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
விதி செய்த சதியால் பலத்த இடி மின்னலோடு மழை கொட்டத் தொடங்கியது. வாசலில் படுத்திருந்த சரவணன், உள்ளே இருக்கும் ருக்மணியை அழைப்பதா வேண்டாமா என்ற யோசனையிலேயே பாதி நனைந்துவிட்டான். கதவைத் தட்ட முற்பட்டபோது கதவு தானே திறந்துகொண்டது. அப்போதுதான் சரவணனுக்குப் புரிந்தது — கதவு தாளிடப்படாமல் சும்மா சாத்தப்பட்டிருக்கிறது என்று! உள்ளே வந்தவன் சுவரைத் தடவி மின்விளக்கின் (லைட்) சுவிட்சைப் போட்டான். படுத்திருந்த ருக்மணி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.
அவள் கேட்கும் முன்பே சரவணன், “வெளியே பலமா மழை பெய்யுது” என்று சொல்லி முடிக்கும்போது பேரிடி ஒன்று விழுந்தது. அடுத்த கணமே மின்சாரமும் தடைபட்டது (பவர் கட் ஆனது).
இருட்டில் ருக்மணிக்கு ஏதேனும் விபரீத சிந்தனை தோன்றிவிட வாய்ப்புள்ளது என்று எண்ணியவன், அடுப்படிக்கு எழுந்து சென்று தீப்பெட்டியைத் தேடி எடுத்தான். சரவணனுக்கும் அதே எண்ணம் தோன்றிட, அவனும் அடுப்படிக்கு மெல்ல நடந்து சென்றான்.
தீப்பெட்டியை எடுத்த ருக்மணி திரும்பி வரும்போது, பளீர் என்ற மின்னல் வெளிச்சத்தில் எதிரில் நின்ற சரவணனைக் கண்டுகொண்டாள். “யாரது?” என்று அவள் கேட்க, “நான் தான்” என்று பதில் கொடுத்தான் சரவணன்.
மீண்டும் ஒரு பேரிடி விழ, பதறிப்போய்ச் சரவணனைக் கட்டிக்கொண்டாள் ருக்மணி. அவர்களுக்குள் நடந்த வேதியியல் மாற்றம் சிறப்பாகவே வேலை செய்தது.
அதிகாலை நேரத்தில் ஊர் விழிக்கும் முன்பே விழித்துக் கொண்டாள் ருக்மணி. அப்போதே குளித்து முடித்து, புதிய ஆடை உடுத்திக்கொண்டு சரவணன் முன்பு வந்து நின்றாள்.
தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனைப் பாதத்தால் உதைத்து எழுப்பினாள் ருக்மணி. “வெளியே போய் படு முதல்ல!”
சரவணன் எழுந்து அமர்ந்து, தலையைச் சொரிந்தபடி, “என்ன நடந்துச்சு? எதற்காக இப்படிச் சத்தம் போடுறே?” என்றான்.
ருக்மணி கோபமாக, “என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியாதோ? தெரியாமலே நடந்துச்சோ? எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு கேள்வி வேற கேக்குறியா?” என்றாள்.
சரவணன், “உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? நீயும் சம்மதிச்சுத்தானே வந்தே…” என்றான்.
“ஆமா, நானும் சம்மதிச்சுதான் வந்தேன். இதுக்குத்தானே இத்தனை காலம் காத்திருந்தே? இப்போ உன் வேலை முடிஞ்சிடுச்சுல்ல… கிளம்பிப் போய் உங்க அம்மா கூடச் சேர்ந்துக்கோ. உங்க அம்மா பார்த்து வைக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டுச் சந்தோஷமா இரு. எழுந்திருச்சு கிளம்பு!” என்றாள் ருக்மணி.
சரவணன் ஆத்திரத்துடன், “உனக்கு அவ்வளவுதான்டி மரியாதை! நான் என்னமோ உன்னை வன்புணர்வு செய்யணும்கிறதுக்காகவே வந்த மாதிரி பேசுறே. என்ன உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கே? நீ பெரிய பேரழகின்னு நினைப்பா? உன் அழகைப் பார்த்து மயக்கத்துல உன்னை அணைச்சேன்னு நினைச்சியாடி? என்னை அதிகம் பேச வைக்காதே!” என்று சத்தமாகச் சொன்னான்.
ருக்மணி அழுதுகொண்டே ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள்.
சரவணன் எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு வந்து, “சரி அழாதே. ஏதோ தப்பு நடந்துருச்சு. இனிமே ரெண்டு பேரும் எச்சரிக்கையா இருந்துப்போம். நான் தான் தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சுக்கோ” என்று வலுக்கட்டாயமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.
ருக்மணிக்குச் சரவணன் இத்தனை நேரம் கோபமாகப் பேசியது எங்கே போனதென்றே தெரியவில்லை; அவன் மன்னிப்புக் கேட்டவுடன் அவன் மீது மனதில் ஒரு பாசம் வந்து ஒட்டிக்கொண்டது.
ரவி – ஜோதியின் திருமணம் திருச்செந்தூர் திருத்தலத்தில் சிறப்பாக நடைபெற்று, மாலையில் அவர்கள் சேத்தூர் வந்து சேர்ந்தார்கள்.
தாலியைச் சுமந்து கொண்டிருந்த ருக்மணி, தான் ஒரு விதவை என்பதையே அந்த நொடி மறந்து போனாள். அண்ணனுக்கும் அண்ணிக்கும் வரவேற்புக் கொடுப்பதற்காக முன்னே சென்று ஆரத்தி எடுத்தாள். மாரியம்மாள் மட்டுமல்ல, சுப்புலட்சுமியும் அவளது இந்த மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
அதன்பின் வந்த நாட்களில் எல்லாம் சரவணன் மீதான வெறுப்பைக் குறைத்துக் கொண்டாள்; ஆனாலும் அவனோடு பேசுவதைத் தவிர்த்து வந்தாள்.
ஒரு நாள் சுப்புலட்சுமி, மாரியம்மாளின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, “நம்ம ஜோதிப் பிள்ளைக்கு 40 நாள் தள்ளிப் போயிருக்கு மாரி. சத்துணவு மையத்துல இருந்து மாத்திரை கொடுக்கிற பொம்பளை வந்தால் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு, அவ பேரைப் பதிஞ்சு வைக்கணும்” என்றார்.
மாரியம்மாள், “அப்படியா அக்கா… சந்தோஷம்! நல்லா இருக்கட்டும் பிள்ளைங்க” என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
தாய்மார்கள் இருவரின் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்த ருக்மணி, தனக்கும் 40 நாட்கள் தள்ளிப் போயிருப்பதை உணர்ந்தாள்.
மாரியம்மாள் பெற்ற தாயாக இருந்தாலும், அவரிடத்திலும் இந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கி நடுங்கினாள். ‘எத்தனை நாள் மூடி மறைத்துவிட முடியும்? ஒரு நாள் விஷயம் வெளிப்பட்டுவிடுமே?’ என்ற சிந்தனையில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மாரியம்மாளின் அருகில் சென்றாள்.
“அம்மா, எனக்கு ஒரு உதவி.”
“என்னடி உதவி?”
ருக்மணி தயங்கியபடி, “அம்மா, நான் தலைக்கு ஊத்தி 40 நாள் ஆகுது. பப்பாளி இல்லன்னா அன்னாசிப்பழம் வாங்கித் கொடும்மா” என்றாள்.
“சும்மா இருக்கிறப்போ 40 நாள் இப்படி நிக்கக் கூடாதுடி. அது வேற ஏதாவது பிரச்சினையா இருக்கும். ஆஸ்பத்திரியில காட்டலாமா?” என்றார் மாரி.
“முதல்ல இதைச் சாப்பிட்டுப் பார்ப்போம். அப்படியும் வராட்டி ஆஸ்பத்திரிக்குப் போவோம்மா.”
“சரிடி, ஆஸ்பத்திரியில காட்டிட்டு வரும்போது பழத்தையும் சேர்த்து வாங்கிட்டு வருவோம்” என்றார் மாரியம்மாள்.
பயத்தோடு ‘சரி’ என்று தலையாட்டினாள் ருக்மணி. அதே நேரத்தில், ‘ஒரே நாளில் இப்படி ஆகி இருக்க வாய்ப்பில்லை’ என்ற தைரியமும் அவளுக்குள் இருந்தது.
மறுநாள் மருத்துவமனைக்குச் செல்லவிருப்பதால், காலையிலேயே குளித்துத் தயாராக நின்றாள். அன்று சரவணனுக்கு வார விடுமுறை.
மாரியம்மாளிடம் சரவணன், “எங்கே அத்தை கிளம்பிட்டீங்க?” என்று கேட்டான்.
“நம்ம ருக்குவுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வருவோம்னு கிளம்பிருக்கோம்.”
“என்ன செய்யுது அவளுக்கு?”
மருமகனிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கத்தோடு, “வேற ஒன்னும் இல்லைப்பா, இந்தப் பொம்பளைங்க சமாச்சாரம். லேடி டாக்டரைப் பார்த்துட்டு வருவோம்னு போறோம்” என்றார்.
விரைவாக ருக்மணியின் புறம் திரும்பிய சரவணன், “உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்றியா?” என்றான்.
தாயிடம் உண்மையை மறைத்து வைத்திருப்பது இவனால் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், அவன் காட்டிய அதீத ஆர்வத்தால் கோபமடைந்த ருக்மணி வெடுக்கென்று, “உன் பிள்ளையைக் கலைக்கப் போறேன், போதுமா?!” என்றாள். சரவணன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று போனான்.
மாரியம்மாளுக்கு இவர்களின் பேச்சு புதிதாக இருந்தாலும், உள்ளூர மகிழ்வாகவே தோன்றியது. மனதிற்குள் கணக்குப் போட்டார்; அவர் கணக்கு சரியாக இருந்தால் மகிழ்ச்சிதானே! “இனியும் தாமதிக்க வேண்டாம்” என்று ருக்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ருக்மணியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவள் கருவுற்றிருக்கும் விவரத்தை மாரியம்மாளிடம் தெரிவித்தார்கள். மாரியம்மாள் மகிழ்வோடு மருத்துவர்களுக்கு நன்றி கூறினார்.
ஆனால் ருக்மணியோ, மருத்துவர்களிடம் ரகசியமாகக் கருவைக் கலைக்க வழி கேட்டுக் கொண்டிருந்தாள்.
சரவணன், ருக்மணி செய்யவிருக்கும் காரியத்தை எண்ணி வருந்தியவனாக, நெஞ்சு பொறுக்காமல் சேத்தூர் நகரத்தையே பித்துப் பிடித்தவன் போல் சுற்றி வந்தான்.
மதியத்திற்கு மேல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாள் ருக்மணி. சரவணன் ஊரைச் சுற்றி முடித்து அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவளது முக வாட்டத்தையும், அருகில் தினேஷ் விளையாடிக் கொண்டிருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவள் சோர்ந்து உறங்கிக் கிடப்பதையும் பார்த்தவனுக்குக் கண் கலங்கிவிட்டது. தன்னுடைய குழந்தையைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற இயலாமையை எண்ணி அழுதான்.
ருக்மணிக்கு விலகியிருந்த சேலைக்கு நடுவே தெரிந்த அவளது வயிற்றை மெல்லத் தொட்டான். அந்தத் தீண்டலில் தன் உயிரே பிரிவது போல் உணர்ந்து விம்மி அழுதான்.
திடீரென அவன் கை மேல் தன்னுடைய கையை ஆதரவாக வைத்தாள் ருக்மணி. தினேஷும் ஓடி வந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
கண் திறந்த ருக்மணி சரவணனைப் பார்த்து, “உன் பிள்ளைக்கு ஒன்றும் ஆகவில்லை, பத்திரமாக இருக்கிறது” என்று சொன்னாள். போன உயிர் திரும்ப வந்தது போல் உணர்ந்தான் சரவணன்.
தன் கழுத்தைக் கட்டியிருந்த தினேஷை முன்னிழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான். “தினேசா… உனக்கு பாப்பா பிறக்கப் போகுதடா!” என்றான் பூரிப்புடன்.
தினேஷ் மழலையாக, “பாப்பா எங்கே இருக்குப்பா?” என்று கேட்க, “அம்மா வயித்துக்குள்ள பாப்பா இருக்கு, நீ தொட்டுப் பாரு” என்று தினேஷின் பிஞ்சுக் கரத்தைப் பிடித்து ருக்மணியின் வயிற்றில் வைத்தான்.
ருக்மணி அவனிடம், “இந்தச் சந்தோஷம் என்றைக்கும் நீடிக்கணும்னா, நான் சொல்றதை நீ செய்யணும்” என்றாள்.
“நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் ருக்மணி” என்றான் சரவணன்.
“இதே ஊருக்குள்ள நம்மளால நிம்மதியா வாழ முடியாது. நாம நம்ம பிள்ளைகளிடம் பாகுபாடு காட்ட மாட்டோம். ஆனால், இந்த ஊர் ஜனங்க நம்ம பிள்ளைகளைப் பிரிச்சு வச்சுப் பேசுவாங்க. தினேஷுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிய வந்தா, அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பானோ தெரியாது! சத்தியமா சொல்றேன், என் பிள்ளைகளே என்னை அவமதிச்சா, அந்த நிமிஷமே நான் செத்துப்போயிடுவேன். தினேஷுக்கு என்றைக்கும் அவன் உன்னோட அண்ணன் பையன்கிற உண்மை தெரியவே கூடாது. எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் நீ அவனோட பிறப்பைச் சொல்லிக் குத்திக் காட்டிப் பேசிடக் கூடாது. எனக்காக நீ உன் சொந்த பந்தம், இந்த ஊர் எல்லாத்தையும் விட்டுட்டு வருவியா? என்னை வேற எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடு. அங்கே என்ன கஷ்டம் வந்தாலும் நாம சந்தோஷமா வாழ்ந்துக்கலாம்” என்றாள்.
சரவணன் தன் கண்ணில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். “சரி, எனக்கு ஒரு மாசம் டைம் கொடு. அதுக்குள்ளே நான் வேற ஊருக்குப் போறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யறேன்” என்றான் உறுதியுடன்.

