
மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 28
மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி இருந்துவிட்டு, வீடு திரும்பியிருந்தாள் ருக்மணி. இன்னும் மூன்று மாத காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள். அதனை முன்னிட்டுப் படுக்கையிலேயே ஓய்வெடுத்தபடி இருந்தாள். அண்டை வீட்டார்கள், சொந்த பந்தங்கள் என்று மாறி மாறி வந்து பார்த்துவிட்டு, ஆறுதல் சொல்வது போல்… அவள் படும் அவதியை ஆர்வமாய்க் கண்டு ரசித்துவிட்டுச் சென்றார்கள்.
சரவணனும் ஒரு வார காலம் மில்லுக்குச் செல்லாமல், ருக்மணியோடு மருத்துவமனையிலேயே இருந்துவிட்டுத் தற்போதுதான் வீடு திரும்பியிருக்கிறான். வந்த உடனே தன்னுடைய பணியைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். மில்லில் அவனோடு வேலை செய்துகொண்டிருக்கும் சக ஊழியர்கள் அனைவரும் சரவணனுக்கு நடந்த புதிய திருமணத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும், ருக்மணியின் உடல்நிலையைப் பற்றியும் ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். மாலையில் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினான் சரவணன்.
தற்போது புதிதாக உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறான். மாரியம்மாள் அத்தை உறவுமுறை உடையவர் மட்டுமல்ல, தற்போது மாமியாரும் கூட. அவரிடத்தில் ‘தனக்கு இது தேவை, இது தேவையில்லை’ என்று சொல்வதற்குத் தயங்கிக் கொண்டிருக்கும் சரவணனின் மனநிலையைப் புரிந்துகொண்டதில், மாரியம்மாள் தான் மாமியார் அல்ல, தாய் என்பதை நிரூபித்துவிட்டார்.
அவனுக்காக, வாய் திறந்து கேட்கும் முன்பே சாப்பாடு வைத்துக் கொடுத்துக் கவனிப்பது; மருத்துவமனையில் மகளோடு தங்கியிருந்தபோது மாற்று உடை இல்லாமல் வந்திருக்கிறான் என்பதை மனதில் கொண்டு, ரவியை விட்டுப் புதிய உடை வாங்கிக் கொடுத்தது; அவனுக்கென்று தனிப்பட்ட செலவுக்குக் கையில் பணம் வைத்திருக்கிறானோ இல்லையோ என்று பணத்தைக் கட்டாயப்படுத்திக் கொடுப்பது எனப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார். வீட்டுக்கு வந்ததும் மகளும் மருமகனும் வீட்டிற்குள் இரவில் தங்குவதற்கு இடைஞ்சல் செய்யாமல் வாசலில் படுத்துக் கொள்வது என்று முடிவெடுத்தவர், “சரவணா, நீங்க வீட்டுக்குள்ள படுங்க. உங்களுக்குப் படுக்கையை எடுத்துப் போட்டிருக்கேன். நானு வாசல்ல காத்தோட்டமா படுத்துக்கிறேன்” என்றார்.
அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்த ருக்மணிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. தான் இயல்பு நிலையில் இல்லை என்பதைத் தன் உடல்நிலை உணர்த்திய போதிலும், மெல்லிய குரலில், “இந்த இடைஞ்சல் வரும்னுதான் அவரை அவர் வீட்டுக்குப் போங்கன்னு சொல்றேன். ஏம்மா என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கறே?” என்றாள்.
மருமகனுக்கு முன்பு எப்படிப் பேசுவது என்று மலைத்துப் போய் அமைதியாய் நின்றார் மாரியம்மாள்.
மகள் தனியாக இருக்கும்போது தாய் உடன் இருப்பதில் தப்பில்லை. ஆனால், கணவனோடு இருக்கும் மகளோடு எப்படித் தாய் தங்கியிருக்க முடியும்? இதை விளக்கிச் சொல்வதற்கும் வழியில்லை; விளங்கினாலும் புரிந்துகொள்ளும் மனநிலையில் ருக்மணி இல்லை. மாரியம்மாள் கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்.
மாமியாரையும் உடன் இருக்கச் சொல்வது தவறு; அதற்காக ‘வீட்டை விட்டு வெளியே போய் இருங்கள்’ என்று சொல்வதும் முறையல்ல. வார்த்தைகளை எப்படிப் கையாள்வது என்பது சற்றுச் சிரமமாக இருந்தபோதிலும், சரவணன் அந்த நிலைமையை எளிதாகச் சமாளித்தான்.
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று சொன்னவன், போட்டிருந்த படுக்கையைச் சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டு, “நான் வாசல்ல படுத்துக்கிறேன். நீங்க உங்க மகளுக்குத் துணையா இருங்க” என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றான்.
மாரியம்மாள் அவன் பின்னாலேயே சென்று, வாசல் கதவைத் தாழிட்டு அடைக்காமல், சாத்தி வைத்துவிட்டு வந்தார். உள்ளே வரும்போதே ருக்மணியைப் பார்த்துப் பல்லைக் கடித்துக்கொண்டு அருகில் வந்து, “வீட்டுக்குள்ள இருக்கிற மனுஷனை வெளிய போய்ப் படுன்னு வெடுக்குனு சொல்லிட முடியுமா? ஏன்டி இப்படி வார்த்தையை விடுறே?” என்று அதட்டினார்.
“ஒன்றும் சொல்லாதே. நடுவுல குழந்தையைப் படுக்க வச்சுட்டு, நீ ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் தூங்குவோம்” என்று அழுங்காமல் குலுங்காமல் அமைதியாகச் சொன்னாள் ருக்மணி.
“நேத்து வரைக்கும் ஒரு கழுதைக்கு நேரா நிமிந்து உட்கார முடியாது; கிய்யா கிய்யானு ஊளையிட்டுக்கிட்டு இருந்துச்சு. இன்னைக்கு வால் முளைச்சது மட்டுமில்லாமல் அதை ஆட்டிக் காட்டுது” என்று சலித்துக்கொண்டே, ருக்மணிக்கு அருகில் தன் படுக்கையைப் போட்டுப் படுத்தார் மாரியம்மாள். குழந்தை தினேஷ் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான்.
ருக்மணி, “தினேஷைத் தூக்கி என் பக்கத்துல போடும்மா” என்றாள்.
“அடுத்த முறை அவனாக முழிக்கும்போது தூக்கி உன் பக்கத்துல போடுறேன். என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா படுக்க விடு. உங்களுக்குத் தொண்டூழியம் பார்த்தே நான் ஓஞ்சு போயிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே கொட்டாவி விட்டவர், அப்படியே கண் அயர்ந்துவிட்டார்.
அதன்பின் வந்த அத்தனை நாட்களும் இதேபோல இயல்பாகவே கடந்தன. ருக்மணி பூரண குணம் பெற்று வர ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ருக்மணியும் சரவணனும் கணவன் மனைவியான பிறகும், ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை; பேசிக்கொண்டதும் இல்லை.
அதேபோலச் சரவணன் தன்னுடைய தாய், தந்தை, தங்கை, பெரியம்மா என்று எவரிடத்திலும் ஒட்டுறவு இல்லாமல் முழுமையாக ஒதுங்கிவிட்டான்.
தினேஷுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா வந்தது. ருக்மணி மாரியம்மாளிடம், எந்தவொரு விழாவும் அவசியம் இல்லை என்று கறாராகச் சொல்லிவிட்டாள். ஆனால் சரவணன், தன் வீட்டில் முதன்முதலாக நடக்கும் வைபவம் என்பதால் சொந்த பந்தங்களை அழைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தான். எனினும், வந்தவர்கள் வாய்க்கு மெல்ல (மென்று தின்பதற்கு) அவல் கேட்பார்களோ… அதாவது தேவையில்லாமல் பேசுவார்களோ என்ற அச்சத்தில் நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று சிலரை மட்டும் அழைத்தான்.
ருக்மணியின் சம்மதமின்றி நடைபெறும் விழா என்பதால், அவளுக்கு இதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனாலும், தினேஷை அவனிடம் செல்லவிடாமல் தடுத்துத் தனக்குள் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளவும் இல்லை.
தினேஷ் கொஞ்சும் மழலையில் அழகாகப் பேசி, அனைவரையும் கவர்ந்து ஈர்த்துவிட்டான். சரவணனை மாரியம்மாளும் சரி, ருக்மணியும் சரி, ‘சித்தப்பா’ என்று குழந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அதனால் தினேஷ் அவனை ‘அப்பா’ என்றே அழைக்கத் தொடங்கியிருந்தான். சரவணன் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும், “ப்பா, நானும் வரேன்” என்று உடன் கிளம்பிவிடுவான். அதேபோலச் சரவணனும் தினேஷை அண்ணன் மகன் என்று அந்நியப்படுத்திப் பார்த்ததில்லை. தான் பெற்ற பிள்ளையைப் போலவே அவனிடம் அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தான்.
அன்றைய காலகட்டத்தில் பிறந்தநாள் விழாவை யாரும் பெரிதாகக் கொண்டாடியது கிடையாது; அதேபோலக் கேக் வெட்டும் வழக்கமும் இல்லை. சேத்தூர் கிராமத்தில் முதன்முதலாகத் தினேஷுக்குச் சரவணன் பிறந்தநாள் விழாவைக் கேக் வெட்டிக் கொண்டாட ஆயத்தமானான்.
சரவணன் குழந்தையைத் தன்னோடு வைத்து, இருவரும் ஒன்றாகக் கேக் வெட்டினார்கள். வந்திருந்த அனைவரும் ‘ஹேப்பி பர்த்டே’ வாழ்த்துப் பாடல் பாடிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அண்டை வீட்டாரில் சில விஷமிகள், குழந்தையைக் கொஞ்சுவது போல நடித்து, “அப்பா எங்க இருக்காரு?” என்று குழந்தையிடம் கேள்வி கேட்க… தினேஷ் சட்டென்று சரவணனைக் கை காட்டினான்.
சிலர் விளையாட்டாகப் பேசுவது போலக் குழந்தையிடம், “இது அப்பாவா, இல்ல சித்தப்பாவா?” என்று கேட்டுச் சரவணனின் மனதை நோகடித்தார்கள். அத்தனையையும் தூரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்மணி.
அதே வேளையில், அழையா விருந்தாளியாகச் சுந்தரியும் அவளது கணவன் லிங்கமும் பரிசுப் பொருளோட வீட்டிற்குள் வந்தார்கள்.
லிங்கம் வெளிநாட்டு மாப்பிள்ளை, தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறான். அவனையும் வரவேற்காமல் இருக்க முடியாது என்ற காரணத்திற்காகச் சரவணன், “வாங்க மாப்ள, வாங்க. உள்ளே வாங்க” என்று வரவேற்றான். ருக்மணி தன்னுடைய வீட்டிலேயே ஒரு விருந்தாளியைப் போல அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
லிங்கம், குழந்தையோடு நின்றிருந்த சரவணனைப் பார்த்து, “இதுதான் உங்க அண்ணன் பையனா?” என்று கேட்டபடி அமர்ந்தான்.
சரவணன், “இது என்னோட பையன்” என்று புன்னகை மாறாமல் பதில் கொடுத்தான்.
லிங்கம் அதற்கு மேல் பதில் சொல்லவில்லை என்றாலும், ஒரு சிறு புன்னகையை மட்டும் வெளிப்படுத்தினான்.
சுந்தரி தான் வந்ததற்கான காரணத்தை நேரடியாகச் சொல்லத் தொடங்கினாள். “சுபத்ராவுக்கு வேற வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்களாம். ஆனா சுபத்ரா கல்யாணமே வேண்டாம்னு அடம் பிடிக்கிறாளாம். நீ திரும்பி வந்தா உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறதுக்குச் சம்மதம் சொல்லியிருக்காளாம்” என்று சரவணனிடம் கூறினாள்.
சரவணன் கோபத்துடன், “நான் திரும்பி வர்றதா உன்கிட்ட எப்ப சொன்னேன்? நீங்க எல்லாம் யாரு எனக்குப் பொண்ணு பாக்குறதுக்கு? எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவ என்னை கட்டிக்கச் சம்மதிக்கிறான்னு என்கிட்ட எதுக்காக வந்து சொல்லிட்டு இருக்கீங்க? அவ சம்மதிக்கிறான்றதுக்காக நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று சுந்தரியிடம் கடுமையாகச் சொன்னான்.
தொடர்ந்து லிங்கத்தைப் பார்த்து, “நீங்க வெளிநாட்டிலிருந்து வந்திருக்கீங்க, உங்க மனசை நோகடிக்கக் கூடாதுன்னுதான் நான் இவ்வளவு பொறுமையா பேசுறேன். ஆனா, என்னை பார்க்குறதுக்கு இவ்வளவு தூரத்துல இருந்து வந்திருக்கீங்களே… என்னையும் நோகடிக்கக் கூடாதுன்னு ஏன் நீங்க யோசிக்கல?” என்றான்.
சரவணனின் பேச்சில் இருந்த வேகம் கண்டு லிங்கம் பதற்றத்துடன் எழுந்தான். “சரி மாப்ள, நாங்க கிளம்புறோம்” என்று சொல்லிக்கொண்டு லிங்கம் வீட்டை விட்டு வெளியேறினான். சுந்தரியும் சரவணன் முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவள், ஒன்றும் பேசாமல் வேகமாக வெளியேறிவிட்டாள்.
சரவணன் தன் கையில் வைத்திருந்த தினேஷை மாரியம்மாளிடம் கொடுத்து, “பாட்டி கூட கடைக்கு போயிட்டு வாரீங்களா?” என்று அனுப்பி வைத்தான். பின்பு, பிறந்தநாள் விழாவிற்காகச் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், குப்பைகள் மற்றும் பரிசுப் பொருட்களின் உறைகள் என வீடு முழுக்கச் சிதறிக்கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்திச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
அப்போது ருக்மணி, சரவணன் அருகில் வந்து, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்றாள்.
“பேசுங்க.”
“நீங்க எனக்காக இரக்கப்பட்டது, எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைச்சது, தினேஷ் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறது எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, எங்க மேல இருக்குற இரக்கத்தால உங்களோட வாழ்க்கையை நீங்க தொலைச்சிடக் கூடாது. நீங்க எனக்குத் தாலி கட்டியதை நான் தப்பா எடுத்துக்கல. உங்க ஆசைக்குத் தாலி கட்டிட்டீங்க, அவ்வளவுதானே? நீங்க இன்னொருத்திக்குத் தாலி கட்டினாக்கூட அதை பெருசா எடுத்துக்காத ஒரு பொண்ணு இந்தக்காலத்துல கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். நீங்க திரும்பி வந்தா கல்யாணம் பண்ணிக்கிறதா சுபத்ரா சொல்றாளே, அவளையே நீங்க கட்டிக்கோங்க. நாங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற உங்களுக்கு எங்களால செய்ய முடிஞ்ச நல்லது இதுதான்… நீங்கள் சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு உங்களை வற்புறுத்தாம வழிவிடுவதுதான். இந்தத் தாலியை ஒரு கோயில் உண்டியலில் நானே போட்டுடுறேன்” என்றவள், உதடுகளில் ஒரு ஏளனச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள்.
அவள் பேசி முடித்ததும் சரவணன் அவளை நிமிர்ந்து பார்த்தான். “நான் இந்த வீட்டுக்கு வந்த இத்தனை நாள்ல, நீங்க என்கிட்ட பேசலையேன்னு ஒரு நாளும் வருத்தப்பட்டதே இல்லை. இனிமேலும் நீங்க என்கிட்ட பேச வேண்டாம். தயவுசெஞ்சு எப்போதும் போலவே இருந்துடுங்களேன்” என்று முகத்தில் அறைந்தது போலப் பதில் கொடுத்துவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான்.

