Loading

சலனம்-25

அரசியல் கட்சியின் நிறைவேற்றப்படாத தீர்மானம் போல, என் மனதில் எடுத்த முடிவை, செயல்படுத்த முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன் நான்.

 

ஒவ்வொரு முறை சமுத்ராவையும் குழந்தையையும் பார்க்கையில், என்னை அறியாமலே, எனக்குள் ஒருவித குற்றவுணர்வு எழுந்து என்னைப் பாடாய்ப் படுத்தியது. நான் எடுத்திருக்கும் முடிவை அவளிடம் சொல்வதா? வேண்டாமா? என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அன்று நடந்தவைகளின் பின், சமுத்ரா என்னிடம் பேசுவதையே சுத்தமாய் நிறுத்தியிருந்தாள்.

 

நான் செய்ய நினைத்த எல்லாமே தவறாய்ப் போயிருக்க, அவளிடம் நேரடியாய் பேசுவதற்கே எனக்கு தயக்கமாய் இருந்தது. என் குழந்தை அவந்திகாவும் கூட, சமுத்ராவின் இடுப்பிலிருந்து தன்னால் சிரிப்பதோடு சரி, முன்பு போல், என்னிடம் தாவி வருவதெல்லாம் சுத்தமாய் நின்று போயிருந்தது.

 

எனக்கு நடுக்காட்டில் அநாதையாய் தனித்து விடப்பட்டதைப் போல் தவிப்பாக இருந்தது.

 

என்ன செய்வதெனப் புரியாமல், தலையைப் பிடித்துக் கொண்டு மெத்திருக்கையில் அமர்ந்திருந்தேன். பணிப்பெண் வந்து வைத்துவிட்டுப் போன காஃபி ஏடு படிந்து ஆறிப் போயிருந்தது.

 

இந்த ஒரு கோப்பை காஃபியால், என் தலைவலி தீருமென்று எனக்குத் தோன்றவில்லை. காஃபி அருந்தும் மனநிலையும் இல்லை. நான் என்ன செய்யப் போகிறேன்.? இந்த முடிவு சரியாக வருமா? அவந்தியின் எதிர்காலம் நன்றாக இருக்குமா? என யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்க, அழைப்புமணியின் ஓசை கேட்டது.

 

பணிப்பெண் துணிகளை உலர்த்த மாடிக்குச் சென்றிருப்பதால், நானே சென்று கதவைத் திறந்தேன்.

 

அன்று சமுத்ராவைப் பார்க்க வந்த அதே கார்த்திக், சிரித்த முகமாய் என் முன்னே நின்றிருந்தான். கதவைத் திறந்துவிட்டு, அமைதியாய் மெத்திருக்கையில் அமர்ந்துக் கொண்டேன்.

 

“ஹேய் ப்ளூ! எங்கே இருக்கே?”

 

கதவைத் திறந்த என்னைப் பார்க்காதது போல், சமுத்ராவை சத்தமாய் அழைத்தபடியே உள்ளே நுழைந்தான். இங்கே விக்ரம் என்ற ஒருவன் இல்லாதது போல் அவன் நடந்துக்கொண்டது, எனக்குள் சிரிப்பை வரவழைத்தது.

 

அன்று அவன் வந்த போது, நான் இருந்த மனநிலையில், நான் இப்போதும் இருந்திருந்தால், கண்டிப்பாக நான் கோபப்பட்டிருப்பேன். ஆனால் இன்று, அவன் மீது கோபமெல்லாம் வரவில்லை.

 

 

“டேய்! லூசு! நான் தான் வீட்டுக்கு வராதேன்னு சொன்னேனே டா? எதுக்கு வந்த?” எனக் கேட்டபடியே அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் சமுத்ரா.

 

 

“நீ குழந்தையையும் தூக்கிக்கிட்டு வரணும். எதுக்கு குட்டி மேடமை கஷ்டப்படுத்தணும்? அதனால் தான் நானே வந்துட்டேன். எல்லாம் பட்டுக்குட்டி அவந்திகாக மட்டும் தான். உனக்காகவெல்லாம் ஒண்ணும் இல்லை!” என கார்த்திக் சொல்ல,

 

 

“டேய்! நான் தான் உனக்கு ஃபர்ஸ்ட்! அப்பறம் தான் இந்த மேடம் வந்தாங்க! இப்போ மேடம் தான் முக்கியமா உனக்கு?” எனக் கேட்டபடியே குழந்தையின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள் சமுத்ரா. குழந்தை கிளுக்கி சிரித்தபடி, கார்த்திக்கிடம் தாவியது.

 

என்னிடம் வர யோசிக்கும் குழந்தை அவனிடம் கையை நீட்டி தாவுகிறதே? கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எனக்கு.

 

 

“ஹேய் பப்ளி குட்டி! வாங்க! வாங்க!” குழந்தையை வாங்கிக் கொண்டவன்,

 

 

“ஹேய் ப்ளூ! லேப்டாப் என் பேகில் இருக்கு பாரு! எடுத்துக்கோ! எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ!” எனச் சொன்னான் கார்த்திக்.

 

 

“ஹார்ட் டிஸ்க் எதுவும் போய்டுச்சா டா? முக்கியமான ஃபைல்ஸ் எல்லாமே இதில் தான் இருந்தது. எதாவது ஆகியிருந்தால் என் வேலை கோவிந்தா தான்.!”

 

 

“அதெல்லாம் கவலைப்படாதே! எல்லாமே ரெகவர் பண்ணியாச்சு. உன் ஃபைல் எல்லாமே ஸேஃப். முக்கியமான டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் செக்யூர் பண்ணிட்டு, இதை ரிட்டன் பண்ணிட்டு புதுசு வாங்கிடு டி!”

 

என அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து, பழுதான மடிக்கணிணியை சரி செய்து கொண்டு வந்திருக்கிறான் இந்த கார்த்திக் என்பது எனக்குப் புரிந்தது. நான் தான் தவறாக நினைத்துவிட்டேனோ? என்ன எண்ணம் கூட எனக்குள் முகிழ்த்தது.

 

 

“ரிட்டன் பண்ணணும் டா! பட் ஹெட் ஆஃபீஸ் போகணுமே! அவந்தியை வச்சுட்டு எப்படி போறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். இதை வச்சே இன்னும் கொஞ்ச நாளைக்கு சமாளிச்சுக்கிறேன். தேங்க்ஸ் டா பக்கி!”

 

 

“ஆமா! இவங்க தேங்க்ஸை எதிர்பார்த்து தான் நாங்க இதை செஞ்சோமாக்கும்.? லூசா நீ? உன் தேங்க்ஸ் எதுவும் வேணாம். ஒரு காஃபி போட்டு கொடு!” எனச் சொன்னவன், சமுத்ரா எழுந்து அடுக்களைக்குள் செல்லவும், அவனும் பின்னாலேயே சென்றான். அவள் அடுப்பைப் பற்ற வைத்து பாலை ஊற்ற, குழந்தையிடம் ஏதோ பேசிச் சிரித்தபடி, சமுத்ராவிடமும் பேசிக் கொண்டே இருந்தான். அவன் அடுக்களைக்குள் சென்று நிற்பதே எனக்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தது.

 

 

என் நண்பர்கள் தான் சமைத்ததாய் சொல்வதை சில முறைகள் கேட்டிருக்கிறேன். ஒரு ஆண் சமைக்கலாமா? என்ற எண்ணம் தான் எனக்குள் இருந்தது.

 

“ஆம்பளை பையனுக்கு அடுப்படியில் என்ன வேலை? போய் படி! இல்லைன்னா வெளியே போய் விளையாடு!”

 

எனச் சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டவன் நான். நிஜமாகவே எனக்கு கார்த்திக்கையும், சமுத்ராவையும் பார்க்க அதிசயமாகத்தான் இருந்தது. ஆனாலும் இயல்பாகத் தான் இருந்தது. இது இயல்பை மீறிய ஒன்று என எனக்குத் தோன்றவில்லை.

 

 

இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்றே தோன்றியது. இவர்கள் இருவரையும் கவனித்துப் பார்த்தவரை, இவர்களுக்குள், நட்பைத் தாண்டி எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி வேறெதுவும் இருந்தாலும் எனக்கு கவலையும் இல்லை.

 

 

சமுத்ரா பாலைக் காய்ச்சியதும், கார்த்திக் கோப்பைகளில், காஃபி கலந்து, தட்டில் அடுக்கி எடுத்து வந்தான். நெல்லுக்கு பாய்ச்சிய நீர், புல்லுக்கும் பாய்வதைப் போல, என் முன்னாலும் ஒரு கோப்பை வைக்கப்பட்டது.

 

 ஏற்கனவே பணிப்பெண் வைத்துவிட்டுப் போன காஃபியே நான் அருந்தவில்லை. இதையும் அருந்தாமல் வைக்க மனமில்லாமல், காஃபியை அருந்தத் துவங்கினேன்.

 

மனதிற்குள் யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த யோசனைகள் வேறு திசையில் பயணித்ததென்றால், இப்போது முற்றிலும் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது.

 

 

விஷயம் ஒன்று தான்.. சமுத்ராவிடமே குழந்தையைக் கொடுத்துவிடு என ஒரு மனம் சொல்லிக்கொண்டிருக்க, இன்னொரு மனமோ, குழந்தையைக் கொடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்? சம்யூ விட்டுப் போன ஒரே உறவையும் தொலைத்துவிட்டு தனி மரமாய் நிற்கப் போகிறாயா? இன்னொரு மனம் என்னைக் கேள்வி கேட்டது.

 

 

‘சமுத்ராவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டால், அவள் எதிர்காலம் நன்றாக இருக்கும்.!’

 

 

‘அப்போ நீ என்ன செய்யப் போற?’

 

‘குழந்தை அவளைத் தான் அம்மாவாக நினைச்சுட்டு இருக்கா. அவந்தியை சமுத்ராவிடமிருந்து பிரித்து, நான் குழந்தையைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.”

 

‘அவள் குழந்தைக்கு அம்மாவா இருக்கலாம். ஆனால் நீ தானே குழந்தைக்கு அப்பா!’

 

என் மனமே என்னிடம் மாறி, மாறி கேள்வி கேட்க, என்ன பதில் சொல்லவெனத் தெரியாமல், தள்ளாடி தவித்துக் கொண்டிருந்தேன் நான்.என் மூளைக்குள் பெரும் பிரளயமே நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

 

இருவிதமான முடிவுகள், ஒன்றுக்கொன்று முட்டி மோதி வெளியே வர முயற்சி செய்துக் கொண்டிருந்தது. நான் எடுத்த முடிவை செயலாற்றுவதிலேயே எனக்குக் குழப்பமாய் இருந்தது. ஆனால் இத்தனையும் மீறி,

 

‘தந்தையை விட தாய் உடனிருப்பது தான் குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லது. சம்யூவை விட, சமுத்ரா குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வாள்!’ என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் கிளை பரப்பி வளரும் மரம் போல், என் மனதிற்குள் யோசனைகள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.

 

ஆனாலும், எந்த முடிவை எடுப்பதென திணறி, தாடுமாறிக்கொண்டிருந்த நான், இறுதியாய், உறுதியாய் அந்த முடிவை எடுத்திருந்தேன். இந்த முறை நான் எனக்காக யோசிக்கவில்லை. என்னை முன் நிறுத்தவில்லை. அவந்தியின் எதிர்காலத்தை மட்டுமே முன்நிறுத்தி இந்த முடிவை எடுத்திருந்தேன்.

 

 

“சமுத்ரா! உன்கிட்டே கொஞ்சம் பேசணும்!”

 

 

அவள் முன்னால் சென்று நின்றேன். அவளோ, என்னை அலட்சியமாய் பார்த்தாள். அன்று படப்பிடிப்புத்தளத்தில், குழந்தை மீது அக்கறையே இல்லாத இராட்சசனாய் இருந்திருக்கிறேனே.. அதை நேரில் கண்டவள், அலட்சியம் செய்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவளின் கோபம் நியாயமானது தான். என் மீது தான் தவறென்பதும், எனக்குத் தெளிவாகவே புரிந்தது. நான் இப்போது எடுத்திருக்கும் முடிவும், என் மனநிலையும், அவசரப்பட்டு வந்தது அல்ல. அனுபவப்பட்டு வந்தது. பட்டுத் திருந்தியது அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது இல்லையா?

 

 

“ப்ளீஸ் சமுத்ரா!”

 

 

“நான் கிளம்பறேன் ப்ளூ! பப்ளி பேபியைப் பார்த்துக்கோ! தேங்க்ஸ் ஃபார் தி காஃபி!” எனச் சொல்லிவிட்டு, கார்த்திக் எழுந்து நிற்க,

 

 

“ஹேய் இருடா! உனக்குத் தெரியாத விஷயம் என்ன இருக்கப் போகுது? உட்காரு!” என அவனை அமர்த்திவிட்டு, என்னைப் பார்த்தாள். கார்த்திக்கோ சங்கடமாய் புன்னகைத்தான்.

 

 

“ஐ அம் ஸாரி சமுத்ரா! நான் உன்னை நிறைய கஷ்டப்படுத்திட்டேன். நிறைய, நிறைய ஹர்ட் பண்ணிட்டேன். ஐ அம் ரியலி ஸாரி.. சம்யூகிட்டே மன்னிப்பு கேட்கிற வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. கிடைச்சிருந்தாலும், மன்னிப்பு கேட்டிருப்பேனா தெரியாது. ஏன்னா என் மனநிலை அப்போ வேற மாதிரி இருந்துச்சு. ஆனால், இப்போ உன்கிட்டே மனசார மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஐ அம் ஸாரி.!”

 

 

“பைசாவுக்குப் பெறாத உன்னோட மன்னிப்பு, என் சம்யூவை உயிரோடக் கொண்டு வந்துடுமா என்ன? காலம் கடந்த நீதி மாதிரி தான், காலம் கடந்த புரிதலும்! நீ இப்போ புரிஞ்சுக்கிட்டு எதுவும் மாறப் போறதில்லை விக்ரம். அவந்திக்கு அம்மாவா நான் இருந்தாலும், சம்யூ திரும்ப வந்துடப் போறது இல்லையே? சம்யூ இல்லாமல், ஒருமாசம் குழந்தை பட்ட கஷ்டம் இல்லைன்னு ஆகிடாதே?! உன்னோட மன்னிப்பும், புரிதலும் எதையும் மாத்திடப் போறதில்லை. நீ இப்படியெல்லாம் பேசறதைப் பார்த்து, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிடுவேன்னு நினைக்கிறியா? அதுக்காக தானே இந்த ட்ராமா? உன்னோட மூணாந்தரமான ஐடியா எதுவும் என்கிட்டே பலிக்காது!”

 

கோபமும் விரக்தியுமாய் என்னைப் பார்த்துக் கேட்டாள் சமுத்ரா. அவள் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் என் மனதைச் சுட்டுப் பொசுக்க, குற்றவுணர்வில் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருந்தேன் நான்.

 

 

“நீ சொல்றது எல்லாமே சரி தான் சமுத்ரா! சம்யூ திரும்பி வரப் போறதில்லை. நான் உறவுகளின் மதிப்பைப் புரிஞ்சுக்கிட்டதே இல்லை. சம்யூ என்மேல் வைத்திருந்த காதல், விலைமதிப்பே இல்லாத பொக்கிஷம்ன்னு எனக்குப் புரியவே இல்லை. காலம் கடந்தப் புரிதலால் எதுவுமே மாறப் போறதில்லை. ஆனால், அவந்தியோட வாழ்க்கையை மாற்றலாம் தானே? நான் உன்கிட்டே பேசணும்ன்னு சொன்னது, எனக்காக இல்லை. அவந்திகாக மட்டும் தான்.!” எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சமுத்ரா.

 

 

“யாரு நீ..? நீ குழந்தைக்காக யோசிக்கிறியா? உன்னை மாதிரி ஒரு சுயநலவாதியை நான் பார்த்ததே இல்லை. எப்போவுமே நீ உன்னை மட்டும் தானே யோசிப்பே? உனக்கு நீ மட்டும் நல்லா இருக்கணும். நீ மட்டும் சொகுசா இருக்கணும். கட்டுன மனைவியோட, எதிர்பார்ப்பு என்ன? ஆசை என்ன? அவளுக்கு என்ன பிடிக்கும்? எதுவும் யோசிக்க மாட்டே! ஏன்னா உனக்கு நீ மட்டும் தான் முக்கியம். அப்படி இருக்கும்போது, நீ குழந்தையைப் பத்தி யோசிக்கிறியா? நம்ப முடியலையே? உலகம் எதுவும் அழியப் போகுதா என்ன?!” என நக்கலாய் கேட்டாள் சமுத்ரா.

 

 

“நான் குழந்தையோட கஸ்டடியை உனக்கே கொடுத்துடுறேன் சமுத்ரா! நானே நீ சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுடுறேன்.!”

 

அவள் சொன்னதெல்லாம் எனக்கு வலித்தாலும் கூட, எதையும் காட்டிக்கொள்ளாமல், நான் சொன்னதைக் கேட்டதும், அவள் முகத்தில் அதிர்வின் ரேகைகள் கிளைபரப்பதத் துவங்கியிருந்தது.

 

 

“இது விளையாட்டு விஷயம் இல்லை விக்ரம்?”

 

 

என அவள் கேள்வியாய் என்னைப் பார்த்ததிலிருந்தே, அவள் நான் சொன்னதை மட்டுமல்ல, என்னையும் நம்பவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

 

 

“நான் அவந்தியோட அப்பாவா, அவளோட வாழ்க்கைக்காக யோசிச்சுருக்கேன் சமுத்ரா!”

 

எனச் சொல்லும் போதே, எனக்குத் தொண்டை அடைத்தது. மகளின் எதிர்காலத்திற்காய் யோசித்து முடிவை எடுத்துவிட்டேன். ஆனாலும் வலித்தது. அவளைப் பிரியப் போகிறோம் என்ற உணர்வே பெரும் வலியாய் இருந்தது. ஏனென்றால், எனக்குத் தெரியாமலே, நான் சம்யூவின் மீது வைத்திருந்த காதலுக்கு, சம்யூ விட்டுவிட்டுப் போன ஒரே பரிசு அவந்திகா மட்டும் தான். அவளையும் பிரிந்த பின் எனக்கென வாழ்க்கையில் என்ன இருக்கிறது? யாருக்காக நான் வாழ வேண்டும்? விரக்தியும், வலியும், வேதனையும் என்னை முற்றிலுமாய் சூழ்ந்தது.

 

 

“நீ உண்மையாகவே குழந்தையோட அப்பாவாக யோசிச்சிருந்தால் நல்லது தான். ஆனால், இப்போவும் உன்னை என்னால் நம்ப முடியலை விக்ரம்!”

 

 

“உன்னால் நம்ப முடியாதுன்னு தெரியும். நான் தான் கஸ்டடி உனக்கே கொடுத்துறேன்னு சொன்னேனே? நீ நம்பணும்ன்னுனா நான் என்ன செய்யணும்? இப்போவே கூட, கையெழுத்துப் போட்டு கொடுத்துடுறேன். அப்போ நம்புவியா?”

 

 

“ஒருவேளை நான் யாரையாவது.. கல்யாணம் பண்ணிக்கிட்டால், என்ன பண்ணுவ?!”

 

 

“அது உன் பர்ஸ்னல். குழாந்தைக்காக நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேன். பட், இப்போ எனக்கு அந்த எண்ணமெல்லாம் சுத்தமா இல்லை. உன் வாழ்க்கையை காம்ப்ளிகேட் பண்ண நான் விரும்பலை. அதே மாதிரி, நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அவந்தியை நல்லா பார்த்துப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என் கூட இருக்கிறதை விட, அவந்தி உன்கூட இருக்கிறது தான் சரி. இது நான் அவசரத்தில் எடுத்த முடிவு இல்லை. நல்லா நிதானமாய் யோசிச்சு எடுத்த முடிவு தான். ஸோ, நான் மாற்றி பேசிடுவேன்ங்கிற பயம் உனக்கு வேணாம். எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் நீ செய்யணும். குழந்தையை அடிக்கடி பார்க்கிறதுக்கு மட்டும் அனுமதி கொடுக்கணும்!”

 

 

என் குழந்தையைப் பார்ப்பதற்காய் அவளிடம் கெஞ்சி நின்றேன். என்னைப் போன்ற பொறுப்பில்லாத தந்தைக்கு இதெல்லாம் தேவை தான். என் மனமே என்னைப் பார்த்துச் சிரித்தது.

 

 

“நீ டெல்லிக்கு வந்து உன் குழந்தையை எப்போ வேணும்ன்னாலும் பார்க்கலாம்.!” என அவள் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

 

 

“என்னது டெல்லியா?” அதிர்வாய் நான் கேட்க,

 

 

“ஏன் உனக்குத் தெரியாதா? சம்யூ சொல்லலையா? சம்யூ சினிமாவிற்காக இங்கே வந்தாள். நான் என்னோட வேலைக்காக வந்தேன். ஆனால், இப்போ என் ஃபேமிலியே எனக்காக இங்கே சென்னையில் வந்து இருக்காங்க! இனிமேலும் அவங்களைக் கஷ்டப்படுத்த நான் விரும்பலை. இப்போ சம்யூவும் இல்லை. நானாவது அவங்கக் கூட இருக்கணும். அதனால் டெல்லி போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.!” என அவள் சொன்னதும், என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாய் நின்றேன்.

 

“எப்போ டெல்லி போற?” எனக் கேட்கும் முன்னே குரல் தடுமாறியது எனக்கு.

 

 

“மே பீ இன் நெக்ஸ்ட் வீக்!” அவள் சாதாரணமாய் சொல்லிவிட்டாள். எனக்குத்தான் நிரம்பவும் கஷ்டமாக இருந்தது. இன்னும் ஒருவாரம். வெறும் ஏழே நாட்கள் மட்டுமே என் குழந்தை என்னோடு இருப்பாள் என நினைக்கையில், மனம் வலித்தது. இந்தத் திருப்பத்தை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. சமுத்ரா குழந்தையோடு சென்னையில் இருப்பாள். அடிக்கடி குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். ஆனால் என் மகளை நினைத்த நேரத்திற்குப் பார்க்க முடியாது என்பதே எனக்குப் பேரிடியாய் இருந்தது. உயிருக்குள் ஊசிக் குத்துவதைப் போல் வலித்தது.

 

 

“நாளைக்கு லாயரை வரச் சொல்றேன். பேசிக்கலாம்!”

 

என சமுத்ரா சொல்லிவிட, வெறும் உயிரில்லா பொம்மையைப் போல் தலையை ஆட்டிவிட்டு, அறைக்குள் சென்று அமர்ந்தேன். எடுத்த முடிவை செயல்படுத்த சம்மதம் சொல்லிவிட்டேன். ஆனால், குழந்தையைக் கொடுத்துவிட்டு, என்னை வெறுமை சூழ்ந்து நிற்கும் பொழுதுகளில் என்ன செய்யப் போகிறேன்? தனிமை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மென்று தின்று விழுங்கப்போகிறது.

 

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், அணுஅணுவாய் உயிரோடு சாகப் போகிறேன். என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

 

 

இனி இந்த வீடு வெறுமையைச் சுமந்து நிற்கும். என் மகளின் சிரிப்பு, அழுகை, எதுவுமே இந்தச் சுவர்களில் பட்டு எதிரொலிக்கப் போவாதில்லை.

 

அவள் விளையாட்டுப் பொருட்கள், அவளில்லாமல் மௌனமாய் அழப்போகிறது. அவள் விரல் தொட்டு வண்ணம் தீட்டப்படாத சுவர்கள், கறுப்பு வெள்ளையாய் மாறப் போகிறது.

 

வண்ணங்களையெல்லாம் வாரியெடுத்து என் மகள் கொண்டு போய்விடுவாளே? நானும் என்னைச் சுற்றியிருக்கும் அத்தனையும், வண்ணமிழந்து, வாழ்க்கையிழந்து நிற்கப் போகிறோம். என் மகளில்லாமல், என் சொந்த வீடே, எனக்கு சிறையாய் மாறப் போகிறது.

 

எல்லாம் தெரிந்திருந்தாலும் கூட, என் பிள்ளையின் எதிர்காலத்திற்காய் இப்படியொரு முடிவை எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் நான் இருந்தேன். முள் குத்தினாலும் வலிக்கும். எடுத்தாலும் வலிக்குமாம். அப்படித்தான் இருந்தது என் மனநிலையும். சம்யூவைத் தொலைத்துவிட்டு குழந்தைக்காக வாழவேண்டுமென்று நினைத்தேன் நான்.

 

 

இப்போது குழந்தையின் எதிர்காலத்திற்காய், குழந்தையையும் சமுத்ராவிடம் தந்துவிட்டு, யாருக்காக வாழ்கிறேன்? யாருக்காக வாழ வேண்டும்? எனத் தெரியாமல் வாழவேண்டும். இந்த பேரண்டப் பெருவெளியில் ஆகப் பெரும் கொடுமை, எதற்காக வாழ்கிறோம் எனத் தெரியாமலே வாழ்வது தான்

 

கண்கள் கலங்கி, என்னை அறியாமலே கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆண்பிள்ளை அழக்கூடாது எனச் சொல்லி வளர்க்கப்பட்டவன், என்னை அறியாமலே அழுதுக் கொண்டிருக்கிறேன்.

 

 

அழுகையும் கண்ணீரும், எல்லாருக்கும் பொதுவானது தானே? ஆண்களுக்கு மட்டும் உணர்ச்சி இல்லையா என்ன? ஆணின் இதயம் மட்டும் என்ன இரும்பிலா செய்திருக்கிறது.? ஒரு ஆணுக்கு வெளிப்படையாய் அழக் கூட உரிமையில்லை என நினைக்கையில் கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. இந்தச் சமூகம் இப்படித்தான். யார் என்ன செய்தாலும் பேசும். ஆண் அழுதாலும் பேசும். பெண் அழாவிட்டாலும் பேசும். ஆண் அழுதால் கோழை எனக் குத்திக்காட்டும். பெண் அழாவிட்டால், ஒருசொட்டு கண்ணீர் வரவில்லை. இவள் மனசாட்சி இல்லாதவள் எனச் சொல்லும். வாழ்க்கை முழுதும் குறை கண்டே பழக்கப்பட்ட மனம் அப்படித்தான் யோசிக்கும்.

 

இதில் நானும் விதிவிலக்கு அல்ல. அனைத்திலும் குறைகண்டே பழகிப் பழகி, சம்யூவை ஒட்டுமொத்தமாய் தொலைத்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாற முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் மாற்றம் ஒன்று தானே மாறாதது.

 

 

நான் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். என் மகள் இல்லாத வாழ்க்கையைப் நான் பழகிக்கொள்ள வேண்டும். மிக மிகச் சிரமம் தான். ஆனாலும் அவளின் எதிர்காலம் கருதி, நான் இதை செய்து தான் தீர வேண்டும். ஆனால் என்ன.. நான் பெற்ற மகவையே, மூன்றாம் நபரைப் போல், வீட்டுக்கு வந்த விருந்தாளியைப் போல், அவளுக்குப் பிடித்தப் பொருட்களை வாங்கிச் சென்று பார்த்து வர வேண்டும். கொஞ்சம் கடினம் தான்.

 

 

ஆனால் பழகிவிடும் என்று நம்புகிறேன். காலம் அனைத்தையும் மாற்றும் அருமருந்து. என் காயங்களையும் நிச்சயம் ஆற்றத்தான் செய்யும். காயங்கள் ஆறிவிடலாம். ஆனால் வடுக்கள்..?

 

 

காயங்கள் விட்டுப்போகும் வடுக்களும், அந்த வடுவிற்கு காரணமான காயமும் ஆயுள் முழுமைக்கும் மறக்காது தான். ஆனால் மரத்துப் போய்விட வாய்ப்பிருக்கிறது. மரத்துப் போய்விட்டால் நல்லது தான். நான் சம்யூவிற்கு தந்த காயங்களும் வடுக்களும் கூட, அவள் உயிர் பிரியும் வரை மறந்திருக்காது தானே? நான் காயம் பட்டு நிற்கையில் தான் அடுத்தவரின் வலி எனக்குப் புரிகிறது. சம்யூவின் வலியைப் புரிந்துக்கொள்ளாமல், அவளைத் திரும்பத் திரும்ப காயப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறேன்.

 

அவளைக் காயப்படுத்தியதன் தண்டனையாகத் தான், அவளை இழந்து தனிமரமாய் தன்னந்தனியாய் நிற்கிறேன். அவள் மட்டும் இப்போது என்னோடு இருந்திருந்தால், நாங்கள், ஒன்றாய் ஒரே குடும்பமாய் இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் இப்படித்தான் என்று என் தலையில் எழுதியிருக்கிறதோ? என்னவோ?

 

 

என் புலம்பல்கள் யாருக்குக் கேட்டதோ? என்னவோ? கதவு தட்டப்பட்டது. முகத்தைத் துடைத்துவிட்டு, தலையைக் கோதி சரிசெய்துவிட்டு அறையின் கதவைத் திறந்தேன். சமுத்ரா கையில் குழந்தையோடு நின்றிருந்தாள்.

 

 

“விக்ரம்! குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கோ!” என என் கையில் தந்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டு சென்றுவிட்டாள். என் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும், நான் எவ்வளவோ, கட்டுப்படுத்த முயன்றும், என்னை மீறி கண்ணீர் வந்தது. குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு அழுதுவிட்டேன். பெற்றக் குழந்தைக்கு நல்ல தகப்பனாய் இருக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வும் சேர்ந்துக்கொண்டது.

 

 

“அவிம்மா! ஸாரி டா! நான் உனக்கு நல்ல அப்பா இல்லை!”

“இந்த அப்பா உனக்கு வேணாம்!”

“நீ அம்மா கூட நல்லப் பொண்ணா இரு!”

“அப்பாவைத் தேடக் கூடாது!”

“நல்லா படிக்கணும்!”

“நிறைய சாதிக்கணும். அப்பாவால் உன் பெயரில் மட்டும் தான் இருக்க முடியும். உன் கூடவே இருக்க முடியாது டா! இந்த அப்பாவை மன்னிச்சுடுவியா? மன்னிச்சுடுவியா குட்டி?” என நான் குழந்தையைப் பார்த்துக் கேட்க, குழந்தை எதுவுமே புரியாமல் என்னைப் பார்த்தாள். பின் என்ன நினைத்தாளோ,

“ப்பா!” என என்னை கழுத்தைக் கட்டிக் கொண்டாள். என் குழந்தையின் செயலில் உடலும் மனமும் ஒருசேர நடுங்கியது.

 

கண்கள் கலங்கியது. இனி என் குழந்தையின் அணைப்பு, அவளின் மென்மையான ஸ்பரிசம், அவளின் பால் வாசம், பொக்கை வாய் சிரிப்பு, முகத்தை மறைத்துவிழும் கேசம், தங்கக் கொலுசு சிணுங்க சிணுங்க அவள் நடக்கும் நடை, அவளின் தூக்கம், அழுகை, அவளின் பிடிவாதம், குறும்பு சேட்டை, என எதுவும் இந்த வீட்டில் இல்லை. அனைத்தையும் இன்னும் சில நாட்களில் இழக்கப் போகிறேன். இந்த வீடு, இன்னும் சில நாட்களில் நிசப்தமாய் மாறப் போகிறது. இந்த வீட்டின் அமைதி, என்னைக் கொல்லாமல் கொல்லப் போகிறது. யோசிக்க, யோசிக்க மனம் பாரமாவதை உணர்ந்தேன். என் வாழ்க்கை நிரப்பவே முடியாத வெற்றிடமாய் மாறப் போகிறது, என்பதை நான் உணர்ந்த அந்த நொடி, எதாவது அதிசயம் நிகழ்ந்து எல்லாம் சரியாகிவிடாதா? சம்யூ திரும்ப வந்துவிட மாட்டாளா? சம்யூ வரமாட்டாள் எனக்குத் தெரியும். ஆனால் என் குழந்தையோடு வாழும் வாய்ப்பாவது கிடைத்துவிடாதா? என என் மனம் ஏங்கத் துவங்கியிருந்தது.

 

என்ன தான், என் மனம் இத்தனையும் எதிர்பார்த்தாலும், இது எதுவும் நடக்கப் போவதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து, என் குழந்தையை இறுகி அணைத்தபடி வெறுமையாய் நின்றிருந்தேன் நான்..!

“நீ திரும்பி வரவேண்டுமென்றுதான் உளவிருப்பம்,

மீண்டும் வந்துவிடுவாய் எனில்,

உனக்கென்ன பெருமை இருக்கப் போகிறது?

திரும்பவே கிடைக்காதவைகள் தான் அதிசயத்தைத் தக்க வைக்கும்,

போனவள் போனவளாகவே இரு,

நீயென் அதிசயம்..!”

(யாத்திரி)

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்