மரம் தேடும் மழைத்துளி இறுதி பாகம்

Loading

மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 30 (இறுதிப் பாகம்)

​மாரியம்மாள், சேத்தூர் நகரத்தில் கொலுவிருக்கும் மாரியம்மனை வழிபடச் சென்றிருந்தார். அம்மனின் சூலத்திற்கு நேர் எதிரே நின்றபடி கைகூப்பி வேண்டிக்கொண்டிருந்தார்:

​“தாயே! உனக்கு ரொம்ப நன்றிம்மா. என்னோட ஒத்தப் பிள்ளையோட வாழ்க்கை உருப்படாம போயிருமோன்னு பயந்துபோயிருந்தேன். ஆனா, அவ வாழ்க்கையில ஒரு வெளிச்சத்தைக் காட்டியிருக்கே. அந்த வெளிச்சத்தை என்னைக்கும் நீ அணைச்சிடாதே. வயித்துல உண்டான கருவைக் கலைக்கச் சொல்லி அடம்பிடிச்சவளை, கூடாதுன்னு சொல்லி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா, என்னாலேயே எல்லா நேரமும் கூட இருந்து அவளைக் காப்பாத்திட முடியாது. நீ அவளோட மனசுக்குள்ள புகுந்து, அவளோட நினைப்பை நல்லபடியா மாத்திக்கொடும்மா. எனக்கு அது போதும்,” என்று அவர் வேண்டிக்கொண்டிருக்கும்போது, கோவில் மணி கணீரென்று ஒலித்தது.

​அதே சந்தோஷத்தோடு அவர் வீட்டிற்குள் நுழைய, சரவணன் மற்றும் ருக்மணியின் உரையாடல் அவரது செவிகளைத் தொட்டது. வாசலில் நின்றபடி மறுமுறை மாரியம்மனுக்கு நன்றி கூறினார்.

​சரவணன் கேட்டுக்கொண்டபடி, ஒரு மாத கால அவகாசத்தில் தனக்காக ஒரு வேலையை ராமநாதபுரத்தில் தேடிக்கொண்டான். அன்று இரவோடு இரவாக இருவரும் ஊரைக் காலி செய்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைசி நிமிடத்தில்…

​மாரியம்மாளைப் பார்த்த சரவணன், “அத்தை, நானும் ருக்குவும் ஊரை விட்டு வெளியேறிப் போறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்ககூட வரலாம். இந்த ஊர் சொந்தபந்தங்களை விட்டு வர மனசு இல்லாட்டி இங்கேயே இருந்துக்கலாம். ஆனா, நாங்க எந்த ஊருக்குப் போறோம், என்ன செய்யப்போறோம்னு எதையும் என்கிட்ட கேட்டுடாதீங்க. நாங்க எதற்கும் பதில் சொல்லத் தயாரா இல்லை,” என்றான்.

​மாரியம்மாள் கண்கலங்கியபடி, “எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என் மகள் மட்டும்தான். அவ எந்த இடத்துல இருக்காளோ, அதுதான் என்னோட சொந்த ஊரு. நீங்களும் ‘வாங்க அத்தை’னு கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்,” என்றார்.

​உடனே ருக்மணி, “அம்மா, நான் உன்னை என்னோட அழைச்சிட்டுப் போகணும்னுதான் நினைச்சேன். ஆனா, ‘அப்பாவோட இந்த வீட்டுலதான் என் கடைசி காலத்துல வாழணும்’னு என்கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கே? உன் ஆசையைக் கெடுத்த மாதிரி ஆயிடக் கூடாதுன்னுதான், உன்கிட்ட இந்தக் கேள்வியை அவரை விட்டுத் கேட்கச் சொன்னேன். என்னை மன்னிச்சிடும்மா… புறப்படு, நம்ம எல்லாருமே ஒண்ணாவே போகலாம்,” என்றாள்.

​மூவரும் ஒன்றாகத் தேவையான பொருட்களைக் கைச்சுமையாக எடுத்துக்கொண்டு, குழந்தையான தினேஷையும் தூக்கிக்கொண்டு நள்ளிரவில் பஸ் ஏறிப் புறப்பட்டார்கள். அதிகாலை விடிந்தவுடன் ராமநாதபுரத்தில் இறங்கினார்கள். சரவணன் அங்கிருந்து தனக்குத் தெரிந்த நண்பன் செல்வத்தைத் தொலைபேசியில் அழைத்தான். அவண் சொன்ன முகவரியின்படி, ஒரு ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு மூவரும் புறப்பட்டார்கள். திருவெற்றியூர் கிராமத்தில் உள்ள பாகம்பிரியாள் கோவில் தெருவில் இறங்கினார்கள்.

​செல்வத்திற்குச் சொந்தமாக நான்கு வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீட்டை வாடகைக்குக் கேட்டிருந்தான் சரவணன். அந்த வீட்டிற்கு வந்து பால் காய்ச்சித் தங்கி, குடியேறினார்கள்.

​பெருநகரத்தில் வீடு பிடித்தால் வாடகை அதிகமாக இருக்கும்; அதே நேரத்தில் தன்னைத் தேடி வருபவர்களும், ஊர்க்காரர்களும் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், சரவணன் திருவெற்றியூர் கிராமத்தைத் தேர்ந்தெடுத்துக் குடியேறினான். அவன் ராமநாதபுரத்தில் இருக்கும் ஒரு மில்லில் வேலை செய்யத் தொடங்கினான்.

​மாரியம்மாள் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலைக்குச் சேர்ந்தார். அதேபோல, ருக்மணி பக்கத்தில் இருக்கும் பாகம்பிரியாள் கோவிலில் பூஜைக்குத் தளிகை (பிரசாதம்) சமைக்கும் வேலையில் சேர்ந்தாள்.

​ராமநாதபுரம் வந்து சேர்ந்த எட்டாவது மாதத்தில் ருக்மணி, தர்ஷினி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மாரியம்மாள், ருக்மணி, சரவணன் ஆகிய மூவரின் அயராத உழைப்பில், திருவெற்றியூர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கி, வீடு கட்டிக் குடியேறுவதற்குள் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

​தற்போது…

​வளர்ந்த தர்ஷினியை, ராமநாதபுரத்தில் இருக்கும் சரவணனின் நண்பன் கந்தவேலனின் மகன் வருண்குமாருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

​மகன் தினேஷ், சென்னையில் ஐடி (IT) நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனுக்குத் திருவெற்றியூர் வந்தபோது அடைக்கலம் கொடுத்த செல்வத்தின் மகள் அமிர்தாவை நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கிறார்கள்.

​ஒருநாள் மாரியம்மாள் ருக்மணியிடம், “இந்த ஊருக்கு வந்து இத்தனை வருஷத்துல, நம்ம பிறந்த ஊரைப் பத்தி பேசவும் இல்லை, நினைக்கவும் இல்லை. ஒரே ஒரு ஊர் சொந்தம்னு இருக்கிற சரவணனும் நமக்காகக் கட்டுப்பட்டு எல்லாரையும் ஒதுக்கிட்டு இருக்காரு. நம்ம தினேஷோட கல்யாணத்துக்காவது சொந்தக்காரங்க எல்லாரையும் கூப்பிடலாமா ருக்கு?” என்று கேட்டார்.

​“சொந்தபந்தங்கள், உறவுகள் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு வந்ததே தினேஷ் ஒருத்தனுக்காகத்தான் அம்மா. அவனுக்கு மட்டும் அன்னைக்கு நடந்த சம்பவங்கள் என்னன்னு தெரிஞ்சுதுன்னா, ‘நம்ம அம்மா தப்பானவள்’னு என்னைப்பத்தி நினைப்பானே! நான் அவனோட அப்பாவுக்குத் துரோகம் பண்ணிட்டதா நினைப்பானே! எதிர்காலத்துல அவனோட தங்கச்சி மேல இருக்கிற பிரியத்தைத் தொலைச்சிடுவானே! அவனோட தங்கச்சியும் இவனோட சேர்ந்திருப்பாள்னு என்ன நிச்சயம்?” என்று ருக்மணி பேசிக்கொண்டிருந்ததைச் சரவணன் கேட்டுக்கொண்டிருந்தான்.

​அவன் குறுக்கிட்டு, “போனது போனதாவே இருக்கட்டும். இத்தனை காலமும் ஒதுங்கி வாழ்ந்தாச்சு. வாழும் காலத்துல கூடவே இருந்து உதவி செஞ்சு, நல்லது கெட்டதுல பங்கேற்காம ஒதுங்கி வந்துட்டு, காலம் முடியும்போது ஒண்ணு சேர நினைக்கிறது பெரிய தப்பு அத்தை. அவங்களும் நான் வேணும்னு நினைச்சிருந்தா, இந்நேரம் என்னைச் சல்லடை போட்டுத் தேடிக் கண்டுபிடிச்சிருப்பாள். போனா போகட்டும்னு இப்படி விட்டிருக்க மாட்டாங்க. எனக்கு எந்த வருத்தமும் இல்லை, என்னைப்பற்றி நீங்களும் கவலைப்பட வேண்டாம்,” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.

​தினேஷ் – அமிர்தா கல்யாணம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருப்பதால், அமிர்தாவின் வீட்டுக்கு உறவினர்கள் அனைவரும் வந்துகொண்டிருந்தார்கள். வந்திருந்தவர்கள், “மாப்பிள்ளை குடும்பத்தோட சொந்தக்காரங்க எந்த ஊர்? எப்போ வராங்க?” என்று விசாரித்தபடி இருந்தார்கள்.

​சரவணன் சொந்தங்கள் இல்லாமல் தனித்து நிற்பதற்குத் தானே காரணம் என்று ருக்மணிக்குக் குற்ற உணர்ச்சி மேலோங்கியது.

​விடிந்தால் திருமணம் என்ற நிலையில், தன்னுடைய நண்பர்களுக்குப் பேச்சிலர் பார்ட்டி (Bachelor Party) கொடுப்பதற்காகத் தினேஷ் ராமநாதபுரம் சென்றிருந்தான். வீட்டில் மாடி அறையில் வருணும் தர்ஷினியும் தங்கியிருந்தார்கள். பெண் வீட்டார், வெளியூர் சொந்தங்களை ராமநாதபுரம் லட்சுமி திருமண மண்டபத்தில் சில அறைகள் எடுத்துத் தங்க வைத்திருந்தார்கள்.

​சரவணனும் ருக்மணியும் தங்களது அறையில் தனித்திருந்த நேரத்தில்…

​ருக்மணி, “என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்துறேன். நான் மட்டும் எவ்வளவு சுயநலமா என் அம்மாவோடவே இப்பவரைக்கும் இருக்கேன். ஆனா, உங்களைப்பற்றி ஒரு துளிகூட வருத்தப்படாமலேயே இருந்துட்டேனே. உங்களுக்கும் அம்மா, அப்பா, தங்கச்சி பாசம் இருக்கும் என்பதை மறந்துட்டு இத்தனை வருஷமா இருந்துட்டேனே. ஒவ்வொரு சொந்தபந்தங்களும் உங்ககிட்ட வந்து ‘உங்க ஊர் எது?’னு விசாரிக்கும்போது, நீங்க பதில் சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பைப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்றாள்.

​சரவணன் அமைதியாக, “அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்கிற?” என்று கேட்டான்.

​“நம்ம தினேஷ் கல்யாணம் முடிஞ்சதும், நம்ம ஊருக்கு ஒருமுறை போயிட்டு வாங்க. உங்க அப்பா அம்மாவைப் பார்த்துட்டு, திரும்பி வரணும்னு தோணுச்சுன்னா வாங்க. இல்லாட்டி, கடைசி காலத்துல உங்க அப்பா அம்மாவுக்கு ஆறுதலா கூடவே இருந்து உங்க கடமையைச் செய்யுங்க.”

​“அப்போ நீ என்ன செய்யப்போற?”

​“எனக்கு என்னங்க குறைச்சல்? எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் எங்க அம்மா, அவள் என்னோடவே இருக்காங்க. இந்த ஊருக்கு வந்து எத்தனை சொந்தபந்தங்கள் என்னைச் சுத்தி இருக்காங்க! போதாக்குறைக்கு என் மருமகள் என் கூட இருப்பாள். அடுத்த வருஷம் என் மகளுக்குக் குழந்தை வந்திடும், மகனுக்கும் பிள்ளை பிறந்திடும். ஒரு ஊர் சொந்தமே எனக்கு இங்க இருக்கு. ஆனா உங்களுக்கு அப்படி இல்லையே! அம்புட்டு சொந்தத்தையும் தொலைச்சுட்டு, அனாதையா நான் இழுத்த இழுப்புக்கு என் கூடவே வந்துட்டீங்களே,” என்று கலங்கினாள்.

​“சரி, நாளைக்கு முதல்ல நல்லபடியா கல்யாணம் முடியட்டும். அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பேசிக்கலாம்,” என்றான் சரவணன்.

​மறுநாள் காலையில் லட்சுமி திருமண மண்டபத்தில் தினேஷிற்கும் அமிர்தாவிற்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது.

​தினேஷ் திருமணத்திற்காகப் பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான். அதனால் ஒரு வாரம் உள்ளூரில் மாமனார் வீட்டில் விருந்துகளை முடித்துக்கொண்டு, அமிர்தாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டான். சரவணன் குடும்பமும் செல்வத்தின் குடும்பமும் சென்னை வரை சென்று, தினேஷைக் குடியமர்த்தி வைத்துவிட்டு, இரண்டு நாட்கள் தங்கிவிட்டு ஊர் திரும்பினார்கள்.

​ஊர் திரும்பியதும் ருக்மணி மீண்டும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்துவிட்டாள்.

​சரவணன், “சரி ருக்கு, உன்னோட ஆசைக்காக நான் சேத்தூருக்குப் போயிட்டு வாரேன்,” என்று புறப்பட்டான். தனக்காக இரண்டு மாற்று உடைகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினான்.

​அப்போது வரை இயல்பாக இருந்த ருக்கு, அவன் சென்ற பிறகு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். படுக்கையில் குப்புற விழுந்து ஓவென அழத் தொடங்கினாள்.

​‘என்னை மன்னிச்சிருங்க. நான் உங்களைக் கட்டுப்படுத்த நினைக்கல. என் புள்ளை மனசு உடைஞ்சிடக் கூடாதுன்னு உங்க மனசைச் சுக்குநூறா உடைச்சிட்டேன். நான் பெத்த பிள்ளையைப் போலத்தானே உங்களையும் உங்க அம்மா வளர்த்திருப்பாங்க? அதை நான் ஏன் மறந்தேன்? எனக்காக நீங்க இத்தனை காலமும் பக்கபலமா, துணையா, உறுதியா இருந்தீங்க, அதுவே எனக்குப் போதும். எனக்கும் ஒரு ஆசை இருந்துச்சுங்க… நான் சாகும் காலம் வரைக்கும் உங்க நிழலிலேயே வாழணும்னு. இப்போ நீங்க உங்க பெத்தவங்களைப் பார்க்கப் போறதால, அந்த ஆசை நடக்காம போறதுக்கும் வாய்ப்பிருக்கு. ஆனாலும் எனக்கு நீங்க செஞ்சது எவ்வளவு பெரிய உபகாரம்! அதுக்கு என்னால எந்த நன்றிக்கடனையும் செய்ய முடியாமல் போயிடுச்சே… என்னை மன்னிச்சிடுங்க,’ என்று துடித்து அழுது புலம்பிக்கொண்டிருந்தாள்.

​அதே நேரத்தில், சரவணன் ராமநாதபுரத்தில் பஸ் ஏறி அமர்ந்து கண்ணை மூடினான். அப்போது, அவனது தந்தை கிருஷ்ணன் அன்று சொன்ன வார்த்தைகள் அவனது செவிகளில் தானாக ஒலித்தன:

​“நீ எடுத்திருக்கிற இந்த முடிவால எங்களை இழக்குறதுக்கும் வாய்ப்பிருக்குடா. எங்களை நீ இழந்தாலும், எக்காரணம் கொண்டும் ருக்மணியையும் உன்னோட பிள்ளைகளையும் கைவிட்டுடக் கூடாது. நாங்க வாழ்ந்து முடிஞ்சவங்க, ஆனா பிள்ளைகள் வாழ வேண்டிய பயிர்கள். அவர்களோட மனசுல எந்தக் காலத்துலயும் வன்மம் வளர்ந்திடக் கூடாது. தாத்தா பாட்டி யாருன்னு தெரியாம இருக்கிறதுல தப்பு இல்லை. எப்போ உன் பிள்ளைகள் ‘உங்க அப்பா அம்மா எங்க?’னு கேட்டாலும், பயப்படாம ‘அவங்க சின்ன வயசுலயே இறந்துட்டாங்க’னு சொல்லிடு. எங்களை அடையாளம் காட்டக் கூட்டிட்டு வந்து, அவங்களோட பழைய தொலைந்துபோன அடையாளத்தைத் தேடி ஆராய்ச்சி பண்ண விட்டுடாதே. நாங்க செத்தா நீதான் கொல்லி வைக்கணும்னு ஒரு காலத்துல நினைச்சோம். ஆனா, யாரு கொல்லி வச்சாலும் கட்டை எரிஞ்சு சாம்பலாய்ப் போகத்தானே போகுது…”

​அவர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தவன், சட்டென்று பஸ்ஸிலிருந்து இறங்கி, மீண்டும் திருவெற்றியூர் நோக்கிப் பயணமானான்.

​வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தினான். மாரியம்மாள் வயது முதிர்ச்சியின் அயர்ச்சியால் எழுந்து விரைவாக வர முடியாமல் இருக்க, ருக்மணி எழுந்து தன் முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்தாள்.

​வாசலில் சரவணனைக் கண்டவுடன், ‘சுற்றி நாலு பேர் பார்ப்பார்கள்’ என்ற எண்ணம் ஏதுமின்றி, ஓடிச் சென்று அவனைக் கட்டிக்கொண்டாள்.

​சரவணன் அவளது காது கேட்கும்படி மெதுவாக, “நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். என்னால எங்கேயும் போக முடியாது,” என்று ஆணித்தரமாகச் சொன்னான்.

​ருக்மணி, “என்னாலயும் உங்களை விட்டுட்டு இருக்க முடியாதுங்க. இன்னும் ஒரு நாள் நீங்க வராமத் தாமதிச்சிருந்தா நான் செத்தே போயிருப்பேன்,” என்று கூறி, அவனது நெஞ்சுக்குள் முகம் புதைத்து அழுதாள்.

​- சுபம் –

​வணக்கம், நான் ராஜேஷ் கருப்பையா. இந்த நாவல் தளத்தில் நான் எழுதும் முதல் கதை இது. எனக்கு வாய்ப்புக் கொடுத்து, எழுதுவதற்குப் பக்கம் ஒதுக்கிக் கொடுத்த ‘தூரிகை’ நாவல் தள நிர்வாகிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! விதவைகள் மறுமணம் பற்றிச் சொல்ல எண்ணி இந்தக் கதையை எழுதத் தொடங்கினேன். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள் கோடி!

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்